தொலைந்தேன் 23 💜

eiZZFMS92742

“வெயிட் வெயிட்!” என்று கத்திய ரிஷி, “ஒரு முக்கியமான விஷயம்.” என்க, கேள்வியாய் புருவத்தை நெறித்த சனா, அமைதியாக அவன் அடுத்து சொல்லவிருப்பதைக் காது கொடுத்து கேட்க ஆரம்பித்தாள்.

“அது வந்து சாணி… இன்னைக்கு என்னோட பர்த்டே. ஈவினிங் வீட்டுல பார்ட்டீ அர்ரேன்ஜ் பண்ணியிருக்கேன். நீ கண்டிப்பா வரணும். இன்னைக்கு ஷார்ப்பா ஆறு மணிக்கு என் ட்ரைவர் உன் வீட்டுக்கு வருவாரு. கூடவே ஒரு பார்சல் கொடுப்பாரு. அதுலயிருக்குற ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு அவர் கூட வீட்டுக்கு வந்து சேரு! என்ட்…”

என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே கோபத்தின் உச்சத்திற்கு சென்றவள், பட்டென்று அழைப்பைத் துண்டித்திருக்க, திரையைப் பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது.

அவளைப் பற்றி அறியாதவனா அவன்!

‘எம்புட்டு தைரியம் இருந்தா அவன் பாட்டுக்கு என்னை கூப்பிடுவான், என்ன நினைச்சிட்டு இருக்கான் அவன் மனசுல? இது நல்லதுக்கில்லை. கூடிய சீக்கிரம் இந்த ஊரை விட்டு போயிடணும்.’ என்று அவனிடமிருந்து தப்பிக்க ஏதேதோ வழிகளை யோசித்தவாறு படுக்கையிலேயே அவள் புரண்டுக்கொண்டிருக்க, அழைத்தால் ஏற்க மாட்டாளென்று தெரிந்தே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் ரிஷி.

“என்கிட்டயிருந்து நீ தப்பிக்க முடியாது ஸ்வீட்ஹார்ட். யூ ஹேவ் நோ சாய்ஸ். ஆறு மணிக்கு ரெடியா இரு. வெயிட்டிங் ஃபோர் யூ டியர்!” என்றிருந்த அந்த குறுஞ்செய்தியை படித்தவளுக்கு தலையை சுவற்றில் நங்கு நங்கு என்று முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

அவனை எதுவும் செய்ய இயலாத கையாலாகாத தனத்தில் படுத்திருந்த தலையணை மெத்தையை அங்குமிங்கும் விட்டெறிந்தவள், தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்திருக்க, உடனே அவளுக்கொரு யோசனை தோன்றியது.

“ஊரை விட்டு போறதை பத்தி அப்றம் யோசிக்கலாம். மொதல்ல இந்த வீட்டு பக்கமே இன்னைக்கு வர கூடாது.” என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டவள், வேகமாகத் தயாராகி வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள்.

அன்று முழுக்க தன் ஏரியா பக்கமே தலை வைத்து படுக்கவில்லை சனா.

ஏற்கனவே எடுத்திருந்த படங்களை ஃப்ரேம் செய்யவென அங்குமிங்கும் அலைந்தவள், இறுதியில் இந்தர் வேலை செய்யும் கம்பனிக்குச் சென்று  அரட்டையடித்துக்கொண்டிருந்தாள்.

நேரம் சென்றது கூட தெரியாமல் சிரித்து பேசிக்கொண்டிருந்தவள், எதேர்ச்சையாக நேரத்தைப் பார்க்க, அந்தோ பரிதாபம் மணி ஆறைத் தொட்டிருந்தது. அதைப் பார்த்ததும் சனாவுக்கோ இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது.

இப்போது வரை ரிஷியிடமிருந்து அழைப்போ குறுஞ்செய்தியோ வரவில்லை. ‘ஒருவேள அவன் ட்ரைவர் வந்திருப்பானோ, இருக்கலாம் இருக்கலாம். அந்த பிடிவாதக்காரன் விடவா போறான்! இப்போ போனா மாட்டிக்குவோம். ஒரு அரை மணி நேரம் கழிச்சு போகலாம். அதுக்கள்ள அவன் போயிருப்பான்.’ என்று ஒரு திட்டத்தைத் தீட்டி மீண்டும் அவள் பேச்சில் மூழ்க, ஒன்றரை மணி நேரம் கழிந்துவிட்டது.

நேரத்தைப் பார்த்துவிட்டு இப்போது செல்லலாமென முடிவு செய்தவள், அங்கிருந்து வெளியேறி தன் குடியிருப்புக்கு வந்துச் சேர்ந்தாள்.

“லலலலலலலாலா…… லலலலலலலா………” என்று பாடியவாறு தன் வீட்டை நோக்கி துள்ளிக் குதித்து வந்துக்கொண்டிருந்தவளின் நடை சட்டென்று நிற்க, தன் வீட்டு வாசலில் நின்றிருந்தவரைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டவளாக அதிர்ந்துப்போய்விட்டாள் அவள்.

அங்கு கைக்கட்டி நின்றிருந்தது சாட்சாத் ரிஷியின் ஓட்டுனர்தான். எச்சிலை விழுங்கிக்கொண்டு அவரை பார்த்தவாறு அவரெதிரே சனா நிற்க, “ஹாய் மேடம், சார் உங்ககிட்ட இதை கொடுத்து நீங்க ரெடியானதும் உங்கள அழைச்சிட்டு வர சொன்னாரு.” என்று அவர் முடிக்கவில்லை, சரியாக அவளின் எண்ணிற்கு ரிஷியிடமிருந்து அழைப்பு வந்தது.

அதிர்ச்சியோடே அழைப்பையேற்று காதில் வைத்தவள், “என்கிட்டயிருந்து தப்பிக்க முடியாதுன்னு நான்தான் சொன்னேனே ஸ்வீட்ஹார்ட். என்னை விட்டு விலக நினைக்காத! இன்னும் டென் மினிட்ஸ்ல நீ இங்க இருக்கணும். இல்லைன்னு வை… நான் அங்க வந்து உன்னை ரெடி பண்ண வேண்டியிருக்கும்.” என்ற அழுத்தமான ரிஷியின் வார்த்தைகளில் மேலும் திகைத்து பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.

உள்ளே நுழைந்து அங்குமிங்கும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாது தடுமாறியவளுக்கு தலையை பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது. அவன் மட்டும் அவளருகில் இருந்திருந்தால் இந்நேரம் இருக்கும் கோபத்தையெல்லாம் சேர்த்து அவன் கன்னத்தில் தன் கை வண்ணத்தை பதித்திருப்பாள்.

ஆனால் இப்போது என்ன செய்வது?

கூடவே, வாசலில் நிற்கும் ரிஷியின் ஓட்டுனரை பார்க்கவும் அவளுக்கு பாவமாக இருந்தது. எத்தனை நேரம் அவளுக்காக இதே இடத்தில் நின்றிருக்கிறார்.

கீழுதட்டைக் கடித்து சிறிதுநேரம் தரையை வெறித்தவள், ‘என்ன நடக்க இருக்கோ அது நடக்கட்டும். எதுவா இருந்தாலும் ஒரு கை பார்த்துடலாம்’ என்று மனதில் தீவீரமாக யோசித்துவிட்டு கவரை பிரிக்க, அடுத்தகணம் அவள் முகம் அஷ்டகோணலாக மாறியது.

“என்னங்கடா இது பாதி ட்ரெஸ்தான் இருக்கு. மீதி எங்க?” என்று வாய்விட்டே அந்த உடையை திருப்பி திருப்பிப் பார்த்தவள், அதை தூக்கியெறிந்து தன்னிடமிருந்த நல்ல ஷர்ட் மற்றும் பேன்ட்டை அணிந்து தலைமுடியை கொண்டையிட்டு வீட்டிலிருந்து வெளியேறி, “போலாண்ணே…” என்றுக்கொண்டே முன்னே செல்ல, அவரும் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு எதுவும் பேசாது அவள் பின்னாலே சென்றார்.

காரில் ஏறியதுமே அவளிடம் விழிகள் மட்டும் தெரியக் கூடிய ஒரு மாஸ்க்கை நீட்டியவர், “காரை நிறுத்தினதும் இதை போட்டுக்கோங்க மேடம், இன்னைக்கு பார்ட்டீல சார் அர்ரேன்ஜ் பண்ணியிருக்க கோஸ்டியூம் இதுதான். யாரையும் யாருக்கும் தெரிய போறதில்லை.” என்றுவிட்டு வண்டியை செலுத்த, இத்தனைநேரம் அவளை குடைந்துக்கொண்டிருந்த பயத்தில் பாதி குறைந்தது போலிருந்தது அவளுக்கு.

எங்கு மீடியாகாரர்கள் அல்லது பத்திரிகையாளர்கள் தன்னை ரிஷியோடு சேர்த்து வலைத்தளங்களில் பேசிவிடுவார்களோ தன் சுதந்திர வாழ்க்கை கெட்டுவிடுமோ என்று யோசித்துக்கொண்டிருந்தவளின் பயத்தை புரிந்தது போல் ரிஷி நடந்துக்கொண்டதில் மனதால் அவனை மெச்சிக்கொண்டாள் சனா.

அடுத்த சில நிமிடங்களில் கார் ரிஷியின் பங்களாவின் முன் நிற்க, கண்ணாடி வழியாக வெளியே பார்த்து வாயைப் பிளந்தவள், அதே ஆச்சரியத்தோடு மாஸ்க்கை அணிந்துக்கொண்டு காரிலிருந்து இறங்கினாள்.

அவள் இறங்கியதுமே சுற்றியிருந்தவர்களின் பார்வை அவள்மேல்தான். அத்தனை பெரிய பிரபலங்கள் விலையுயர்ந்த ஆடைகளுடன் முகத்தில் மூன்று கோட் மேக்கப்போடு வருகை தந்திருக்க, சாதாரண உடையில் கைகளை பிசைந்துக்கொண்டு பயத்தோடு படிகளில் முகத்தை மறைத்தவாறு ஏறிச் செல்பவளைப் மேலிருந்து கீழ் ஒரு மாதிரியாகத்தான் பார்த்தனர்.

உள்ளே சென்றவளை யாரும் தடுக்கவில்லை. தான் யாரென்று பேச நேரிடுமோ என்ற பயத்திலிருந்தவளுக்கு அதுவும் சௌகரியமாக போயிற்று.

தொலைக்காட்சியில் திரைப்படங்களில் நாடகங்களிவ் பார்த்த பிரபலங்கள் இப்போது அவளருகே. நடுக்காட்டில் கண்ணைக் கட்டி விட்டது போல் நிமிடத்திற்கு நிமிடம் முகமூடியையும் சரிசெய்தவாறு, ‘என்னை கட்டாயப்படுத்தி வர வைச்சிட்டு எங்கடா போய் ஒழிஞ்சிட்டு இருக்க கிறுக்குப்பயலே!’ மனதால் அவனை அர்ச்சித்துக்கொண்டு சனா நின்றிருக்க, “நான் கொடுத்தனுப்பிய ட்ரெஸ் எங்க?” என்ற கடினக்குரல் அவள் பின்னே ஒலித்தது.

அது யாரென்று உணர்ந்தவளுக்கு பாலைவனத்தில் நீர் கிடைத்தது போலிருக்க, வேகமாகத் திரும்பியவளுக்கு விழிகளை மூட கூட தோன்றவில்லை.

சாம்பல்நிற கோட் சூட்டில் அளவாக வெட்டப்பட்ட தாடி மீசையுடன் ஒற்றை புருவத்தை தூக்கிய தோரணையில் அத்தனை பேரழகனாக ரிஷி நின்றிருக்க, ஒருநிமிடம் தன்னையே மறந்துவிட்டாள் சனா. உள்ளுக்குள் அவன் அவளை காதலிப்பதில் சற்று கர்வமாகக் கூட தோன்றியது.

அவள் சிலையாக நிற்க, இங்கு ரிஷிக்கு தான் வாங்கி கொடுத்த ஆடையை சனா அணியாததில் ஏகத்துக்கும் கோபம் எகிறியிருந்தது.

வேகமாக அவளை நெருங்கி நின்றவன், “நான் கொடுத்த ட்ரெஸ் எங்க சாணக்கியா?” என்று பற்களைக் கடித்தவாறுக் கேட்க, நூலிடைவெளியில் நின்றிருந்தவனின் இதழையும் அவன் விழிகளையும் மாறி மாறிப் பார்த்தவள், “அது… ஆங்… அது வந்து…” என்று தடுமாற, அவள் நிலை அந்த கள்வனுக்கு புரிந்தது போலும்.

ஏனோ கோபம் மறைய, அடக்கப்பட்டச் சிரிப்போடு தள்ளி நின்றவன், “சொல்லு!” என்றுவிட்டு அவளை குறுகுறுவென நோக்க, அப்போதுதான் உயிரே வந்தவளாக மூச்சை இழுத்துவிட்டு, “அது வந்து அந்த ட்ரெஸ் ரொம்ப குட்டியா இருந்துச்சு. அதுமட்டுமில்லாம எனக்கு அதெல்லாம் போட்டு பழக்கமில்லை.” என்றவள், பின் ஏதோ ஞாபகம் வந்தவளாக, “ஆமா… நீ என்ன என்னை மிரட்டிக்கிட்டு இருக்க? எவ்வளவு அதுப்பு உனக்கு! இதுவே எங்க ஏரியாவா இருந்தா உன்னை…” என்று தாறுமாறாக தன்னை மறந்து கத்திக்கொண்டே போனாள்.

சுற்றிமுற்றி நின்றிருந்தவர்கள் அவளை திடுக்கிட்டுப் பார்க்க, வேகமாக அவளை நெருங்கி, “ஷ்ஷ்…” என்றவன், “ஓவரா பேசின மாஸ்க்க கழட்டி விட்டுடுவேன் ஜாக்கிரதை!” என்று மிரட்டிவிட்டு நகர, ‘ஆத்தீ!’ என்று நெஞ்சிலேயே கை வைத்துவிட்டாள் அவள்.

அதேநேரம் தூரத்திலிருந்து சனாவை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார் ராகவன். அவரும் என்னதான் செய்வார்? எவ்வளவு முயற்சித்து பார்த்தும் கையாலாகாத தனமாகத்தான் நிற்க நேர்ந்தது.

அடுத்த சில நிமிடங்களில் கிட்டார் வடிவிலான கேக்கை ரிஷி தன் நண்பர்களுக்கு மத்தியில் வெட்ட, தேவையில்லாத கிசுகிசுக்களை தவிர்க்கவென சனா ஒதுங்கி நின்றால் என்றால், நிலைமை புரிந்து அவளை வற்புறுத்தவில்லை அவன்.

ஆனால், ரிஷியின் பார்வை அவளை விட்டு அகலவேயில்லை. திடீரென எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு மேக்னாவின் குரலில் பாடலோட ஒரு பெரிய திரையில் சில படங்களும் காணொளிகளும் ஓடின.

அதைப் பார்த்தவனது விழிகள் சாரசர் போல் விரிய, சுற்றியிருந்தவர்கள் திரையையும் ரிஷியையும் அதிர்ச்சியோடு மாறி மாறிப் பார்த்தனர். காரணம், சிறுவயதிலிருந்த மேக்னாவும் ரிஷியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் காணொளிகளும் வருடங்கள் குறிப்பிட்டு திரையில் ஓடிக்கொண்டிருந்தன.

என்னதான் மேக்னாவின் மேல் ரிஷிக்கு அளவு கடந்த கோபம் இருந்தாலும் கண்டிப்பாக அது வெறுப்பு கிடையாதென்று அவனும் அறிவான் அவளும் அறிவாள். காரணம், சிறுவயதிலிருந்து இருவருக்கிடையே இருந்த பாசம் மற்றும் காதலென்று குறிப்பிடலாம்.

தன் அம்மாவின் வார்த்தைகளில் விழுந்து ரிஷியை காயப்படுத்தினாலும் அவளால் அவனை விட்டு மொத்தமாக விலக முடியவில்லையென்றால், மேக்னா துரோகம் செய்தும் அவனால் அவள் மேல் வைத்திருந்த அளவு கடந்த நேசத்தால் மொத்தமாக அவளை வெறுத்து ஒதுக்க முடியவில்லை.

இப்போது திரையில் ஓடிக்கொண்டிருந்த புகைப்படங்களை பார்க்கும் போது அந்த இனிமையான நினைவுகள் அவன் மனக்கண் முன் வர, திரைக்கு நடுவே சிரிப்போடு வந்து நின்றாள் மேக்னா.

“ஹேப்பீ பர்த்டே ரிஷ், இதை விட ஷ்பெஷலான கிஃப்ட் எனக்கு எதுவுமே தோனல. நம்மளோட நினைவுகள் ரிஷ்.” விழிகள் கலங்க மேக்னா பேச, ஒருநிமிடம் அவனுக்குமே மனம் தத்தளித்தது.

ஏனோ கோபம் வரவில்லை. மாறாக ஏதோ ஒரு வலி அவன் மனதை குத்த, பேச முடியாது தொண்டை அடைத்தது.

திரையைப் பார்த்துக்கொண்டிருந்த சனாவுக்கோ ஆச்சரியம். ‘ஓஹோ இதுதான் சங்கதியோ! இவங்க இரண்டு பேரும் சின்னவயசு ஃப்ரென்ட்ஸ்ஸா? ஏதோ தகறாரு போல!’ என்று தனக்குள்ளேயே ஊர்க்கதை பேசிக்கொண்டிருந்தாள் அவள்.

இங்கு மேக்னா ரிஷியையே பார்த்தவாறு தன் மாஸ்க்கை முகத்தில் அணிந்துக்கொள்ள, “தேங்..தேங்க்ஸ்…” என்று கலங்கிய விழிகளை மறைக்க முயற்சித்தபடி திணறிக்கொண்டு சொன்னவன், தன் தடுமாற்றத்தை மறைக்க அங்கிருந்த டீஜேவிடம் பாடலை ஒலிக்க விடச் சொன்னான்.

பாடல் ஒலிக்கப்பட, ஜோடி ஜோடியாக சிலர் முன்னே வந்து ஆட, மேக்னாவோ ரிஷியை எப்படி நெருங்குவது என தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் என்றால், ரிஷியோ தன்னவளைதான் விழிகளால் அலசி தேடிக்கொண்டிருந்தான்.

சனாவோ வந்ததற்கு பயனாக அங்கு புஃபே முறையில் நீண்ட மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டெஸர்ட் உணவுகளையும் இனிப்பு வகைகளையும் விழிகள் விரிய பார்த்து, “இவன் கூப்பிட்டு வந்ததுக்கு இது ஒன்னுதான் பிரயோசனம்.” என்றுவிட்டு கையிலிருந்த தட்டில் குவிக்க, “அடியே அரக்கி!” என்ற குரல்.

‘ஆத்தீ வந்துட்டான்! எப்படிதான் நான் சாப்பிடுற நேரமா பார்த்து வர்றானோ…’ உள்ளுக்குள் பொறுமிக்கொண்டவாறு திரும்பியயவள், “என்ன?” என்று சலிப்பாகக் கேட்க, “ஷெல்வீ டான்ஸ்?” என்று கேட்டு அவள் கையிலிருந்ததை ஓரமாக வைத்து ரிஷி தரதரவென அவளை எல்லாருக்கும் நடுவில் இழுத்துச் செல்ல, பதறிவிட்டாள் சனா.

“அடிங்க! போனா போகுதுன்னு அமுல்பேபி உன்னை பாவம் பார்த்தா… உனக்கு என் கூட டான்ஸ்ஸூ ஆடணுமால்ல டான்ஸ்ஸு! என்னை பார்த்தா என்ன ஆட்டக்காரியாட்டம் தெரியுதா?” என்று கேட்டு அவனிடமிருந்து திமிற, அவ்வளவு இலகுவாக அவன் விட்டுவிடுவானா என்ன?

அவளிடையில் ஒரு கரத்தை அழுத்தமாகப் பதித்து தன் வலக்கரத்தால் அவளிடக்கரத்தை இறுகிப் பிடித்துக்கொண்டவன், இசைக்கேற்ப தானும் ஆடி அவளையும் ஆடை வைத்தவாறு, “இது முதல் தடவை இல்லை சனா, மறுபடியும் மறுபடியும் சொல்றேன். என்னை விட்டு போக நினைக்காத!” என்று அழுத்தமாக இறுகிய குரலில் சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.

அவள் விழிகளிலேயே அவளின் கோபத்தை புரிந்துக்கொண்டவன், அதற்கெல்லாம் அசருபவனும் இல்லை. குறும்பாகச் சிரித்தவாறு அவளை தன்னோடு மேலும் நெருக்கிக்கொள்ள, அவளோ உடல் சிலிர்க்க கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தாள்.

சுற்றியிருந்தவர்கள் தங்களுக்குள்ளே யாரென தெரியாது கிசுகிசுத்துக்கொள்ள, மற்றவர்களின் பார்வையை உணர்ந்து, “இதுக்கெல்லாம் அனுபவிப்படா கிறுக்கா!” என்று அவள் பற்களைக் கடிக்க, “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்.” என்று பதிலுக்கு சிரித்தவாறே சொன்னவன், “ஆமா… அந்த மேனாமினிக்கி உன் ஃப்ரென்டா? சொல்லவே இல்லை.” என்ற சனாவின் கேலியான கேள்வியில் உதட்டைச் சுழித்தான்.

“ஃப்ரென்ட் இல்லை என்னோட எக்ஸ் கேர்ள் ஃப்ரென்ட்.” என்றவன், அவள் அதிர்ந்து நோக்குவதை உணர்ந்து, “சோ வாட்? பாஸ்ட் லைஃப் எல்லாருக்கும் இருக்கும். அதுல உனக்கு ஏதாச்சும் பிரச்சினை இருக்கா?” என்று கேட்டான் குறும்பாக.

“எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை…” என்று நீட்டி முழக்கி ஆரம்பித்தவள், பின்னரே சுதாகரித்து, “டேய்! நீ எவள வேணா லவ் பண்ணிக்கோ, எனக்கென்ன வந்தது? எனக்கு இதெல்லாம் தேவையே இல்லாத விஷயம்.” என்றுவிட்டு முகத்தைத் திருப்ப, எதேர்ச்சையாக அவள் விழிகளில் சிக்கினாள் மேக்னா.

அவளைப் பார்த்ததும் அவள் பார்வையில் பக்கென்றானது சனாவுக்கு. அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் தான் காதலிப்பவனுடன் நெருங்கி நிற்கும் சனாவை சுட்டுப் பொசுக்குவது போல் பார்வையாலேயே எரித்துக்கொண்டிருந்தாள் மேக்னா.

சனா பார்த்ததுமே விறுவிறுவென அவள் அவர்களை நோக்கி வர, ‘ஆத்தீ! இவன் இப்போவே சக்காளத்தி சண்டை போட வச்சிடுவான் போலயே…’ உள்ளுக்குள் நினைத்து அலறியவாறு அவள் விலக முற்பட, “எங்க ஓடுற?” என்று சற்று கோபமாகக் கேட்டவாறு அவளை மேலும் தன்னோடு நெருக்கினான் ரிஷி.

“கொஞ்சம் அக்கட நோக்கு!” என்று சனா எரிச்சலாக சொல்ல, ரிஷி திரும்புவற்குள் அவனெதிரே வந்து நின்ற மேக்னா, “ஷெல் வீ டான்ஸ்?” என்று சற்று உரக்கவே கேட்க, ரிஷியின் முகமோ பாறை போல் இறுகியது.

ஆனால், சுற்றியிருந்தவர்களின் பார்வைக் கருதி, தன்னவளிடமிருந்து விலகி மேக்னாவுடன் இணைந்து அவன் நடனமாட, கூட்டத்திற்கு நடுவில் தன்னந்தனியாக நின்றிருந்த சனாவுக்கு முதல்தடவை ஏனென்றே தெரியாத பொறாமை கலந்த கோபம்.

மேக்னாவுக்கோ உலகமே மறந்துவிட்ட உணர்வு. ‘என் ரிஷ் எனக்கு சீக்கிரம் கிடைச்சிடுவான்’ என்று அவள் சந்தோஷத்தில் மிதக்க, இரு கரங்கள் மேக்னாவை தழுவியிருந்தாலும் ரிஷியின் பார்வையோ தன்னவளையே சுற்றி வந்தது.