தொலைந்தேன் 24 💜

ei702QE44634

‘ஆமா… எதுக்கு அங்கயிருந்து கோச்சிக்கிட்டு வந்த? ஒருவேள அவன் அவ கூட இருக்குறதை பார்த்து நமக்கு பொறாமைன்னு நினைச்சிருப்பானோ! இருக்கும் இருக்கும். எவன் எவ கூட இருந்தா உனக்கென்னடி சாணி? அய்யோ என்ன இது நம்மள நாமளே சாணின்னு கூப்பிட்டுக்குறோம்? ச்சீ…’

என்று விட்டத்தை வெறித்தவாறு தனக்குத்தானே பேசி தலையில் கொட்டிக்கொண்டாள் சாணக்கியா.

இரவு ரிஷி மேக்னாவுடன் ஆடுவதைப் பார்த்ததும் தன்னை மீறி எழுந்த பொறாமை கலந்த கோபத்தில் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறியவளுக்கு, தூக்கமே இல்லை.

எத்தனை நேரம் இப்படியே புலம்பிக்கொண்டிருந்தாளோ? ஒருகட்டத்தில் விழிகள் தானாக மூடி அப்போதுதான் சனா உறக்கத்திற்குச் சென்று சில நிமிடங்கள் கழிந்திருக்க, திடீரென, “போடா போடா புண்ணாக்கு… போடாத தப்புக்கணக்கு…” என்று ரிஷியின் எண்ணிற்கென அவள் வைத்திருந்த பாடல்  அழைப்போடு ஒலிக்கப்பட்டது.

அரைத்தூக்கத்தில், “ச்சே!” என்று சலித்தவாறு விழிகளைத் திறக்காது அழைப்பையேற்று காதில் வைத்தவள், “ஹெலோ…” என்று ஆரம்பித்ததும்தான் தாமதம், மறுமுனையில் சொன்ன செய்தியில், பற்களைக் கடித்தவாறு எழுந்தமர்ந்தாள்.

“திருந்தமாட்டல்ல!” என்று கடுப்பாகக் கேட்டவள், “இரு வரேன்.” என்றுவிட்டு வெளியேறப் போய், ஏதோ தோன்றவும் தன்னை மீறி சுவற்றிலிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்து கூந்தலை சரி செய்துவிட்டு போக, வழக்கமான இடத்தில் காரை நிறுத்தியிருந்த ரிஷி, சனா வருவதைப் பார்த்ததும் திருட்டு முழி முழித்தான்.

‘அச்சச்சோ வர்றாளே! இப்போ மட்டும் செய்ய போற காரியம் தெரிஞ்சா அவ்வளவுதான். அலெர்ட்டா இருடா கைப்புள்ள!’ என்று தன்னைத்தானே தேற்றி மெல்ல அவன் கார் கதவைத் திறந்துவிட, ஏறியவள் தாம்தூமென்று குதிக்கவில்லை. பழகிவிட்டாள் போலும்.

“என்ன?” நிதானமாக அவள் கேட்க, “அது… அது வந்து… ஒரு மூனு நாள் நாம வெளிய போக போறோம்… இது ரொம்ப அட்வென்ச்சரா வேற லெவல்ல…” என்று ரிஷி சொல்லிக்கொண்டிருக்கும் போதே சனாவின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்துவிட்டது.

“ஏதோ போனா போகுதுன்னு கோபப்படாம பொறுமையா பேசிக்கிட்டு போனா… என்னை கொலைகாரியாக்காம  விட மாட்ட போல!” என்று பற்களைக் கடித்துக்கொண்டு சனா சொல்ல, “நோ சாணி, இது உனக்கு ரொம்ப பிடிக்கும். டேம்ன் ஷுவர்!” என்றவன், “வர்றியா?” என்று மெதுவாகக் கேட்டான்.

‘இது திருந்தாத கேசு!’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு, “இதோப்பாரு, முன்ன மாதிரி நான் இருந்தா இப்படி  பேசிக்கிட்டு இருக்க மாட்டேன். என் பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன். நீ போய் என்ஜோய் பண்ணு கண்ணு, ஒரு நாலு நாளைக்கு உன் தொல்லை இல்லாம அப்போவாச்சும் நிம்மதியா இருக்கேன்.” என்றுவிட்டு ஏளனப் புன்னகையோடு சனா இறங்கப் போக, அவள் முழங்கையைப் பற்றியவன், “நானும் வழக்கமா நடந்துக்குற மாதிரி இருந்திருந்தா இப்படி கேட்டுட்டு இருக்க மாட்டேன். என் பாட்டுக்கு உன்னை கூட்டிட்டு போயிட்டே இருப்பேன்.” என்று சொல்லவும், “நினைப்புதான்…” என்று இழுத்தாள் அவள்.

ஆனால், முழுதாக சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் அவளிரு கைகளையும் தன் ஒரே கரத்தால் கெட்டியாகப் பிடித்து அவள் முகத்தில் ரிஷி ஒரு ஸ்ப்ரேயை அடிக்க, கொஞ்சமும் எதிர்ப்பாராதவளாக, சில கணங்களில் அப்படியே மயங்கி சரிந்திருந்தாள் சனா.

அவள் முகத்தை கூர்ந்துக் கவனித்தவன், ‘அப்பாடா!’ என்று பெருமூச்சுவிட்டு, “எப்படி இருந்த என்னை இப்படி மாத்திட்டியேடீ ஸ்வீட்ஹார்ட், என்னை என்னவெல்லாம் பண்ண வைக்குற!” என்று வாய்விட்டே சொல்லி அவளிதழில் அழுந்த முத்தம் பதித்துவிட்டு காரை செலுத்தினான்.

அடுத்த சில மணிநேரங்கள் கழித்து மயக்கம் தெளிய விழிகளைச் சுருக்கியவளின் காதில் ஒலித்தது, “சாணி… சாணி…” என்ற பழக்கப்பட்ட குரல். மெல்ல அரைக்கண்ணைத் திறந்த சனாவுக்கு கனவில் மிதப்பது போன்ற உணர்வு!

தன்னெதிரே, “ஸ்வீட்ஹார்ட்!” என்றழைத்து கையை அசைத்தவாறு  மங்கலாகத் தெரிந்த ரிஷியின் விம்பத்தில், “இங்கேயும் வந்துட்டியா? கர்த்தரே! இவன் தொல்லைக்கு ஒரு என்டே இல்லையா?” என்று முணுமுணுத்தவாறு மீண்டும் விழிகளை அவள் மூடிக்கொள்ள, இப்போது அழைப்போடுச் சேர்ந்து உடலும் அதிர்ந்தது.

மீண்டும் விழிகளைத் திறந்தவள், முன்னர் இருந்தது போலவே  ரிஷி தெரிந்ததில், “மீண்டும் மீண்டுமா?” என்று புலம்பிக்கொண்டு விழிகளை அழுந்த மூடித் திறந்தாள்.

“ஹேய் அரக்கி! கனவில்லைடீ. கண்ணை திற! ஃப்ளைட்டுக்கு லேட் ஆகுது.” ரிஷி கத்திக்கொண்டு அவளை வேகமாக உலுக்க, பட்டென்று முழுக் கண்களையும் திறந்தவளுக்கு அத்தனை அதிர்ச்சி!

ரிஷியின் காரிலிருப்பதைப் பார்த்து, “என்…என்னை எங்கடா கடத்திட்டு போற? ஃப்ராடுபயலே! என்கிட்டயே உன் வேலைய காட்டுறியா? விடுடா என்னை! விடு!” என்று கத்தி அவனை அவள் அடிக்க ஆரம்பிக்க, வெளியிலிருந்தவர்களோ கார் குலுங்கி அசைவதை மிரட்சியோடு பார்த்தனர்.

விபரீதம் புரிந்து அவளின் இரு கைகளையும் தன் வலிய கரத்தால் அடக்கி, தன் பக்கத்தில் வைத்திருந்த புகைப்படத்தை அவன் காட்ட, இத்தனைநேரம் திமிறிக்கொண்டிருந்தவள், சட்டென நின்று அந்தப் படத்தை உற்றுப் பார்த்தாள்.

அது ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள குளிர் நகரமான குலாபா மனாலியின் மலைப்பிரதேச புகைப்படம். அதைப் பார்த்ததுமே அவளுடைய விழிகளில் சிறு ஆசை எட்டிப் பார்த்து மறைவதை குறும்புச் சிரிப்போடு கண்டுக்கொண்டான் ரிஷி.

சனாவும் அமைதியாக படத்தைப் பார்த்துவிட்டு அவனை கேள்வியாக நோக்க, “ட்ரெக்கிங் போலாமா?” இரு புருவங்களை உயர்த்தி ரிஷி கேட்டதும், விழிகள் மின்ன அவன் இரு விழிகளை மாறி மாறிப் பார்த்தவளுக்கு நம்பவே முடியவில்லை.

மனாலிக்குச் செல்ல அவளும் பல தடவை முயற்சித்திருக்கிறாள். வாய்ப்புதான் கிடைக்கவில்லை.  ஒவ்வொரு தடவை போகலாமேன யோசிக்கும் பொழுதும் ஏனோ ஒவ்வொரு தடவைகள்.

ஆனால் இன்று? எதுவும் பேசாது மெல்ல அவனின் பிடியிலிருந்து கைகளை உறுவி, எங்கோ பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பது போல் அவள் பாவனை செய்ய, அவளின் செய்கைகள் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.

மாஸ்க்கை அவளிடம் தூக்கிப் போட்டவன், “இதை போட்டுக்க, நேரமாச்சு. டிக்கெட் ரெடியா இருக்கு. ஷெல் வீ?” என்றுவிட்டு கார்கதவை திறந்து கீழே இறங்க, காருக்கு வெளியே நின்றிருந்த இரு காவலர்கள் அவன் பக்கத்தில் நின்றுக்கொண்டனர்.

காருக்குள் அமர்ந்திருந்தவளுக்கு உள்ளுக்குள் உற்சாகத்துடன் கூடிய ஆர்வம். கைகள் பரபரக்க, தன்னைத்தானே கிள்ளிக்கொண்டவள், ‘அய்யோ! எத்தனைநாள் ஆசை இது, இப்போ போக போறோமே! வெற்றிக்குறி போட்டுக்க சனா!’ என்று உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவாறு அமைதியான முகத்தோடு காரிலிருந்து இறங்கி ரிஷியின் பக்கத்தில் நின்றுக்கொண்டாள்.

ரிஷியை அடையாளம் கண்டு யாரும் நெருங்காமலிருப்பதற்காக காவலர்கள் இருவர் பாதுகாப்பாக இருக்க, சனாவின் கையை இறுகப் பிடித்துக்கொண்டவன், விறுவிறுவென விமானநிலையத்திற்குள் நுழைந்து அவளை இழுத்துக்கொண்டுச் சென்றான்.

பல புகைப்படங்கள் இருவரையும் சேர்த்து வைத்து வளைத்து வளைத்து எடுக்கப்பட, அதையெல்லாம் கண்டுக்கொள்ளாதது போல் ரிஷி உள்ளே நுழைந்தானென்றால், சனாவுக்குதான் சற்று கடுப்பாக இருந்தது. முகத்தைக் குனிந்துக்கொண்டு அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றுக்கொண்டிருந்தாள்.

விமானத்திற்குள் நுழைந்தவளுக்கு கைகால்கள் நடுங்கிவிட்டன. முதல் தடவை விமானத்தில் செல்கிறாள். இருவரும் ஃபர்ஸ்ட் க்ளாஸில் அமர்ந்திருக்க, கைகளை பிசைந்தவாறு அவள் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும், “பயப்படுறியா அரக்கி?” என்று கேலியாகக் கேட்டான் ரிஷி.

பட்டென்று திரும்பி, முகத்திலிருந்த பதட்டத்தை மறைத்து, “அதெல்லாம் இல்லை.” என்றுவிட்டு திரும்பிக்கொண்டவள், “இதோப்பாரு, அவ்வளவு தூரம் என்னை கூட்டிட்டு இல்லை இல்லை தூக்கிட்டு வந்திருக்க. காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்க, காசு வேஸ்ட் ஆகக் கூடாதுங்குற ஒரே காரணத்துக்காகதான் உன் கூட வரேன். மத்தபடி உன்மேல  லவ்வுன்னோ நான் தனியா போக முடியாததால காசை சாக்கா வச்சு உன்னோட வரேன்னோ என்னை நீ தப்பா நினைச்சிற கூடாது. ஊருக்கு திரும்பி போனதும் நீ என்னை கடத்திட்டு வந்ததுக்கு உனக்கு இருக்கு. தப்பு பண்ணவங்கள மன்னிக்கவே மாட்டா இந்த சாணக்கியா!”

என்று மூச்சுபிடிக்க பேசிக்கொண்டே போனாள். அவளின் பேச்சில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்க ரிஷி அரும்பாடுபட்டான் என்றால், விமானம் செல்லத் தொடங்கியதும் பயத்தில் அவள் முகத்தில் தெரிந்த பாவனைகளில் கத்தியே சிரித்து விட்டான்.

அடுத்த சில நிமிடங்களில் ரிஷி நேற்றிலிருந்து தூங்காது இருந்த களைப்பில் தன்னை மீறி உறங்கியிருக்க, பயம் நீங்கி ஜன்னல் வழியே மேகக் கூட்டங்களுக்கு நடுவே தெரியும் தரைப் பகுதியை ஆர்வமாகப் பாத்திருந்தவள், அவன் உறங்கியதை உணர்ந்ததும் பக்கவாட்டாகத் திரும்பி அவனை கவனிக்கத் துவங்கினாள்.

எத்தனை பெரிய பாடகன். புகழுக்கும் பேருக்கும் சொந்தக்காரன். இவள் பின்னே தன்னிலை மறந்து திரிந்துக்கொண்டிருக்கிறான். ஆழ்ந்த ஒரு பெமூச்சுவிட்டு மீண்டும் ஜன்னல் புறம் அவள் திரும்ப, இப்போது அவள் முகத்தில் குழப்ப ரேகைகள்.

மூன்றுமணி நேரப் பயணம். சனா ஒரு சொட்டும் உறங்கவில்லை. விமானம் தரையிறங்கும் போதே தூக்கத்திலிருந்து விழித்த ரிஷி, சோம்பல் முறித்தவாறு மெல்ல அவள்புறம் முகத்தைத் திருப்பி அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, “அய்யோ சாணி, சோ சோரி… சோம்பல் முறிக்கு போது லைட்டா என் லிப்ஸ் உன் கன்னத்துல பட்டுட்டு, என்னை தப்பா எடுத்துக்காத!” என்றுவிட்டு பாவமாக முகத்தை வைக்க, ‘ஃப்ராடு!’ என்று பற்களைக் கடித்துக்கொண்டாள் அவள்.

டெல்லிக்கு இருவரும் வந்து சேர, விமானத்திலிருந்து இறங்கியதுமே ரிஷிக்காக விமான நிலையத்திற்கு வெளியே அவனுடைய கார் காத்திருக்க, விமானநிலையில் சிலபேருக்கு கைக்கொடுத்து சிலபேரோடு புகைப்படத்துக்கு நின்று தன் ரசிகர்களின் விருப்பத்தையும் மறுக்காது நாசூக்காக விலகி வெளியேறி காரில் ஏறியவன், தன் கை வளைவுக்குள்ளேயேதான் தன்னவளை வைத்திருந்தான்.

அங்கிருந்து காரில் சண்டிகாருக்கு பயணத்தை ஆரம்பிக்க, பின்சீட்டில் ரிஷியோடு அமர்ந்திருந்தவளோ ஆர்வமாக வீதிகளை பார்த்துக்கொண்டு வந்தாள். போகும் வழியில் தாபா வீதியோரக் கடைகளை பார்த்துக்கொண்டு வந்தவளுக்கு இல்லாத பசியும் எடுத்துவிட்டது.

இரண்டு மணிநேர பயணத்திற்கு பிறகு ஒரு கடை முன் வண்டியை நிறுத்தச் சொன்ன ரிஷி, ஓட்டுனரிடம் உணவை வாங்கி கொண்டு வருமாறுச் சொல்ல, சட்டென்று அவனை திரும்பிப் பார்த்தவளுக்கு, ‘அய்யோ!’ என்றிருந்தது.

“அங்க போய் உக்கார்ந்து சாப்பிடுற மாதிரி வருமா?” என்று கேட்டு அவள் முகத்தை உம்மென்று வைக்க, கார்கண்ணாடி வழியே அந்த கடையிலிருந்த நெருக்கத்தைப் பார்த்தவனுக்கு வேறு வழியும் தெரியவில்லை.

காருக்கே அவன் உணவை வரவழைக்க, “பிரபலமாக சுதந்திரத்தை இழந்து இப்படியொரு வாழ்க்கையா?” என்று ஏளனமாகக் கேட்டவள், அவன் முகம் கறுத்து சுருங்குவதை உணர்ந்து அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

அந்த ஓட்டுனரும் காருக்கு உணவை எடுத்து வர, சாப்பிட்ட மறுநொடி பயணத்தை ஆரம்பித்தவர்கள், சில மணித்தியாலங்கள் தொடர்ந்து பயணம் செய்து சண்டிகாரை அடைந்திருந்தனர்.

அன்றிரவு ஹோட்டலொன்றில் தங்குவதற்கென இரு அறைகளை எடுத்த ரிஷி, சனாவை ஹோட்டலில் விட்டு அங்கிருந்து ஓட்டுனரோடு வெளியேறியிருக்க, தனியாகச் செல்லும் அவனை பார்த்தவளுக்கு கூடச் செல்லும் ஆர்வம் இருந்தாலும் தொடர்ந்து பயணம் செய்ததில் அத்தனை களைப்பு.

உடையைக் கூட மாற்றாது அப்படியே அவள் கட்டிலில் விழுந்துவிட, அடுத்த அரைமணிநேரத்தில் கதவு தட்டும் சத்தத்தில் எழுந்துச் சென்றவள், வாசலிலிருந்த பையை புருவத்தைச் சுருக்கிப் பார்த்துவிட்டு யோசனையோடு எடுத்துப்பார்த்தாள்.

மனாலி குளிருக்கு  ஏற்ற ஆடைகளை அவளுக்காக பார்த்துப் பார்த்து அவன் வாங்கியிருக்க, அவனறையை எட்டிப் பார்த்தவள், அவன் அறைக் கதவை திறந்துச் செல்வவை கவனித்து, “வேது…” என்றழைத்தாள்.

அவன் பார்வை பட்டதும், “இதைல்லாம் கணக்குல சேர்த்துக்க, ஃப்ரேம்ம வித்து காசு வந்ததும் திருப்பி தந்துடுவேன்.” என்று சனா கோரலரை தூக்கிவிட்டுக்கொண்டுச் சொல்ல, “அதெல்லாம் தேவையில்ல ஸ்வீட்ஹார்ட், கல்யாணத்துக்கப்றம் இதையெல்லாம் வட்டியும் முதலுமா வேற விதமா வாங்கிடுவேன்.” என்று இதழுக்குள் சிரிப்பை அடக்கியவாறு சொல்லிவிட்டு அடுத்து அவளின் வசையைப் பற்றி தெரிந்து ரிஷி அறைக்குள் ஓடி கதவைச் சாத்திக்கொள்ள,

‘அவன்தான் எடக்கு மடக்கா பேசுவான்னு தெரியும்ல, வாய வச்சிக்கிட்டு சும்மாதான் இரேன்!’ என்று தன் வாயிலேயே இரண்டு போடு போட்டாள் அவள்.

அடுத்தநாள் விடியற்காலையிலேயே ஹோட்டலிலிருந்து வெளியேறி சில மணிநேரங்கள் பயணம் செய்து ஹடிம்பா கோயிலுக்கு சென்றிருந்தனர் இருவரும். அங்கு ஒருசிலர் புகைப்படமெடுக்கவும் சுற்றிப் பார்க்கவும் வந்திருக்க, ஒரு சில மக்கள் கூட்டமோ கோயிலுக்குள் சென்று முழுமனதோடு பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்தனர். 

சுற்றிமுற்றி அத்தனையையும் அசுவாரஸ்யமாக சனா பார்த்துக்கொண்டிருக்க, “யூ க்னோ வாட் சாணி, மகாபாரதத்துல வர்ற பீமரோட வைஃப் இங்கதான் இருந்தாங்களாம். ஆமா… உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டுக்கொண்டு அவளருகில் வந்து நின்றான் ரிஷி.

“அம்மா செத்ததும் கூடவே அந்த நம்பிக்கையும் செத்துட்டு.” என்று இறுகிய குரலில் அவள் சொன்னதும், முகம் வெளுத்து பாறை போல் கல்லாகிட்டான் அவன். சிறிதுநேரம் எதுவும் பேசவில்லை.

மனம் இத்தனைநாள் இல்லாத குற்றவுணர்ச்சியை மீண்டும் தாங்கிக்கொள்ள, சிலையாக சமைந்து தரையை வெறித்துக்கொண்டு நின்றிருந்தவனை உலுக்கியவள், “போலாமா?” என்று கேட்டு காரை நோக்கி நடக்க, கீழுதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கி, மனதில் ஒரு முடிவு எடுத்தவனாக அவள் பின்னாலே சென்றான் ரிஷி.

அங்கிருந்து நீண்டநேர பயணத்திற்கு பிறகே குலாபா மனாலிக்கு இருவரும் செல்ல, செல்லும் வழியில் கார் கண்ணாடி வழியாக தெரியும் காட்சிகளில் அசந்துப்போய்விட்டாள் நம் நாயகி.

பனியால் மூடப்பட்ட மலைக்குன்றுகள், குளிர் தாங்க முடியாது உறைந்துப்போய் ஆறுகள் நிற்க, அவற்றின் மேல் படிந்துள்ள பனித்தூரல்கள். பனித்துளிகளை தன் மேல் கொண்ட நீண்ட நெடிய மரங்கள். பாதி பச்சை பசேலென மீதி பனியாலும் கலந்து அந்த இடமே சுவர்க்கமாக காட்சியளிக்க விழிகளைக் கூட மூட தோன்றவில்லை அவளால்.

கார் கண்ணாடிகள் லேசான பனி மழையில் மூடி அவள் பார்வையை மறைக்க, அவளுக்கு ஏனோ தரையில் இறங்கி குத்தாட்டம் போட வேண்டும் போலிருந்தது.

இருவருமே தலை முதல் கால் வரை அந்தக் குளிரை தாங்கக் கூடியவாறான ஆடைகளை அணிந்திருந்திருக்க, தன்னை மீறிய குதூகலத்தில் ரிஷியின் கரத்தை இறுகப் பற்றி, “வேது! அதோ பாரேன். ரொம்ப அழகா இருக்குல்ல. ரொம்ப ரொம்ப குளிரா இருக்குல்ல!” என்றாள் மூச்சு வாங்கியவாறு.

ஆனால், அவனின் பார்வை மாற்த்தை கவனிக்கவில்லை அவள். அவளின் ஸ்பரிசத்தில் வேகமெடுத்த உணர்ச்சிகளை அடக்க பெரும்பாடுபட்டுப் போனான் ரிஷி என்றே சொல்ல வேண்டும்.

நீண்ட நேர பயணத்திற்கு பிறகே இருவரும் குலாபா மனாலிக்கு சென்றிருக்க, அங்கு சில பேர் விளையாடிக்கொண்டிருந்த பனிச்சரக்கு விளையாட்டுக்களை விழிகள் மின்ன பார்த்துக்கொண்டிருந்தாள் சனா.

சுற்றிலும் பனி. தரையே கண்ணுக்குத் தெரியவில்லை. அங்கிருந்த சிறிய மலைக் குன்றுகளுக்கு மேலிருந்து இரண்டு பேர் ஒன்றாக சரிக்குக்கொண்டு வர, இன்னும் சில பேர் ஐஸ் ஸ்கேட்டிங் செய்ய என்று ஒவ்வொரு விளையாட்டுக்களில் ஈடுபட, அவற்றையெல்லாம் நின்ற இடத்திலிருந்தே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால், திடுமென அவள்மேல் பட்டுத் தெறித்தது ஒரு பனிப் பந்து. திடுக்கிட்டு அவள் திரும்பிப் பார்க்க, அங்கு அடுத்த பனிப்பந்தை தயார் செய்தவாறு சிரிப்போடு புருவத்தை ஏற்றி இறக்கினான் ரிஷி.

அதில் அதிர்ந்தவள், “வேணாம் வேது!” என்று கத்தியவாறு ஓட, இதோ அடுத்த பந்து அவள் முதுகில் பட்டுத் தெறித்தது. அதில் பொய்யாக முறைத்தவள், தானும் ஒரு உருண்டையை உருட்டி அவன் மேல் விட்டெறிய, இப்போது இருவருக்குமான விளையாட்டு தீவிரம் அடைந்து மாறி மாறி பந்தை விட்டெறிந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர்.

ஒருகட்டத்தில் ரிஷி அடிக்க வருவதைப் பார்த்து ஓட முயன்ற சனா,  அப்படியே சரிக்கி பனியில் விழுந்திருக்க, இதை எதிர்ப்பார்த்தவன் போல் அவள் மேல் வேண்டுமெனறு விழுந்து பனியை அவள் ஆடைகள் போட்டு மேலும் வெறுப்பேற்றி அந்த நிலையிலும் ரிஷி விளையாட, இப்போது குழம்பிப் போய் இருந்தது சனாதான்.

அவனின் நெருக்கத்தில் அவளுடல் சிலிர்க்க, ஒருவித கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தாள். முதலில் அதை உணராதவன், பின்னரே அவளின் அமைதியில் முகத்தை கூர்ந்து கவனித்துவிட்டு இதழுக்குள் சிரித்தவாறு விலகியமர, மூச்சு வாங்கியவாறு எழுந்தமர்ந்தவளுக்கு வெட்கம் போட்டி போட்டுக்கொண்டு வர, அவன் புறம் திரும்பவேயில்லை.

‘அடி சண்டாளி! என்ன ஃபீலிங்ஸ்டீ இதெல்லாம்? அய்யோ எனக்கே என்னை நினைச்சா அசிங்கமா இருக்கே! அவன் உன் மூஞ்சதான்டீ உத்து உத்து பார்த்துட்டு இருக்கான். அப்படியே அங்கால போயிரு!’ என்று தனக்குத்தானே பேசி அவனிடமிருந்து ஓடி அங்கிருந்த விளையாட்டுக்களை விளையாட ஆரம்பித்தாள் அவள்.

விளையாடுவதும் சரிக்கி பனியிலேயே விழுவதுமென சனா விளையாட, தன்னவளையே மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு பார்த்துக்கொண்டிருந்த ரிஷிக்கு ஏனோ இத்தனை பெண்களில் அவளொருத்தியே அழகாக தெரிந்தாள்.

‘அரக்கிதான். பட், மை ஸ்வீட் அரக்கி!’ என்று தனக்குள்ளேயே சொல்லி பின்னந்தலையில் தட்டி வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டான்.

நீண்ட நேரம் அங்கு விளையாடிவிட்டு, சோலங் வேல்லி எனும் இடத்திற்கு ரோப் கார் விளையாட்டுக்காக இருவரும் செல்ல, தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதி வரைச் சென்று வரும் அந்த விளையாட்டில் சனாவுக்கு தலையே சுற்றிவிட்டது.

உயரம் செல்லச் செல்ல, மேலிருந்து கீழ் பார்த்தவளுக்கு  சரியாகச் சாப்பிடாதது பயணத்தின் உண்டான களைப்பெல்லாம் சேர்ந்து வாந்தி உணர்வை உண்டாக்க, பக்கத்திலிருந்த ரிஷியை இறுக அணைத்து மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

அவனும் அவள் தலையில் தன் நாடியைக் குற்றி அவளை இறுக அணைத்துக்கொள்ள, கீழே இறங்கியும் இருவருக்கும் விலக மனமில்லை. அதுவும், இத்தனைநேரம் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தவனுக்கு தன் கட்டுப்பாடுகளெல்லாம் சிதைவது போன்ற உணர்வு.

மெல்ல அவளின் நாடியை நிமிர்த்தி இரு கன்னத்திலும் அழுந்த முத்தம் பதித்துவிட்டு மனமில்லாது விலகி ரிஷி முன்னே நடக்க, சில கணங்கள் உறைந்துப்போய் நின்றவளுக்கு முகம் செவ்வானமாய் சிவந்துப் போயிருந்தது.

கடவுள் புண்ணியத்தில் அவளுள் மெல்ல மெல்ல காதல் துளிர்க்க ஆரம்பித்த அதேநேரம் இவனுக்குள் பல யோசனைகள்.