தொலைந்தேன் 25💜

ei6URZZ23600

அன்றைய நாள் இரவை ரிஷி தன் ஆட்கள் மூலமாக பனியும் மரங்களும் சூழ்ந்த பகுதியில்  கேம்ப்பிங் போட்டு சனாவுடன் கழிக்க, குளிர் தாங்க முடியாது அவனின் இடையை இறுக கட்டிக்கொண்டு உறங்கிவிட்டாள் சனா.

அவளின் குழந்தை முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு முதன் முதலில் அவளை சந்தித்த தருணங்கள் நினைவுக்கு வந்தன.

அதில் லேசாக சிரித்தவன், “கண்டிப்பா நம்ம காதல்ல எந்த ரகசியமும் மறைஞ்சிருக்காது ஸ்வீட்ஹார்ட். என்ட் உன்னையும் கண்டிப்பா இழக்க மாட்டேன்.” என்று எதையோ நினைத்து தூங்கும் அவளிடம் சொல்லிக்கொண்டு, அந்த இரவு முழுவதையும் சிந்தனையிலேயே கழித்தான்.

ஆனால், நினைத்ததெல்லாம் நடந்தால் கடவுள் எதற்கு?

அடுத்தநாள் சூரியன் உதிக்கும் முன்னே சனாவை எழுப்பிவிட்டான் ரிஷி.

“அய்யோ வேது, செம்ம குளிரா இருக்குடா, இன்னும் விடியவே இல்லை, செம்மயா தூக்கம் வருது. இப்போவே போகணுமா?” என்று அவள் தூக்கத்தை கெடுத்துவிட்ட கடுப்பில் எரிச்சலாக முணுமுணுக்க, “இந்த மாதிரி இடங்களுக்கு குறிப்பிட்ட நேரம் இருக்கு சாணி, அப்போ போனாதான் சேஃப். சீக்கிரம் ஆவோ ஆவோ!” என்று அவள் போலே கேலியாகச் சொல்லிக்காட்டினான் அவன்.

அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அங்கு உயரமான மலையின் உச்சத்திற்குச் செல்ல அவர்களின் பயணம் ஆரம்பித்தது.

இரு கரத்திலும் ஒவ்வொரு ட்ரெக்கிங் போல்ஸ்ஸுடன் மலையின் உச்சிற்கு இருவரும் ஏற, ஒருகட்டத்தில் அதிலும் இருவருக்கிடையில் போட்டி உண்டாகிற்று. யார் முதலில் மலை உச்சிற்கு ஏறுகிறார்களென போட்டி நடக்க, மாறி மாறி வெறுப்பேற்றி பல நிமிடங்கள் கடந்து முதலில் உச்சத்தைத் தொட்டது ரிஷிதான்.

அங்கு சென்றதுமே அங்கிருந்து தெரிந்த காட்சியில் பேச்சிழந்து போய்விட்டான் அவன். “இது போங்கு, நீ திருட்டுத்தனம் பண்ணியிருப்ப…” என்று குறை சொன்னவாறு மூச்சு வாங்கிக்கொண்டு அவனருகில் வந்து நின்றவளின் பேச்சும் அப்படியே நின்றது.

பச்சைப்பசேலென மேற்பரப்புடன் விரிந்திருந்த மலைகளில் அங்குமிங்கும் பனிகள் குவிந்திருந்தது. கூடவே, ரிஷி எதிர்ப்பார்த்த தருணமும் வந்தது. பதட்டமாக கேமராவை எடுத்து அவன் தயாராக இருக்க, இவர்கள் நின்றிருந்த உச்சியிலிருந்து எதிரே தெரிந்த இரு மலைகளுக்கிடையிலிருந்து சூரியன் மெல்ல எழும்ப சட்டென்று தன் கேமராவில் பதிவு செய்துக்கொண்டான் அவன்.

கண்ணை பறிக்கும் அந்தக் காட்சியில் மெய் மறந்து போய்விட்டனர் இருவரும்.

சனா பிரம்மித்துப்போய் அதையே பார்த்திருக்க, “ஏய் அரக்கி! அன்னைக்கு என்னாலதான் நீ சன்ரைஸ்ஸ எடுக்க முடியாம போச்சு. இனியும் என்னை காப்பாத்தினேன் காப்பாத்தினேன்னு ஊர கூட்டாம இரு சரியா?” கேலியாகச் சொல்லி ரிஷி சிரிக்க, பக்கவாட்டாகத் திரும்பி அவனை பார்த்திருந்தவளின் விழிகளில் இதுவரை அவன் பார்த்திராத உணர்வு.

ரிஷியோடு வெளியே இருக்கும் போதெல்லாம் பாதுகாப்புக் கருதி விழிகள் மட்டுமே தெரியும்படி முகத்தை மறைத்திருப்பாள் சனா. இப்போது ஆட்கள் இல்லாததால் அதை நாடிற்கு கீழே அவள் இறக்கி வைத்திருக்க, விழிகளோடு சேர்ந்து இதழ்களும் சிரிப்பதை காதலாகப் பார்த்தான் ரிஷி.

அதுவும் அவள் விழிகளில் எதையோ சொல்ல முற்படுவது போன்ற உணர்வு. மூச்சு வாங்கியவாறு அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த சனா, அளவு கடந்த சந்தோஷத்தில் மெல்ல எம்பி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

அவ்வளவுதான். முயன்று இழுத்துப்பிடித்து வைத்திருந்த கட்டுப்பாடுகள் மொத்தமாக நொறுங்கி உணர்வுகள் தறிகெட்டு ஓடின. இதற்குமேல் அவனாலும் அவனை கட்டுப்படுத்த இயலாது.

மெல்ல ஒரு விரலால் அவளிதழை வருடி அதில் ஆழ்ந்த முத்தத்தை அவன் பதிக்க, வழக்கம் போல் அதிர்ந்து நின்றவள், சுதாகரித்த மறுநொடி அவனைவிட்டு வழக்கம் போல் விலகவில்லை. மாறாக, அவன் புறம் திரும்பி ரிஷியின் கழுத்தைக் கட்டி பின்னந்தலையை இறுக பிடித்துக்கொண்டு அவளும் அவனுக்கேற்ப இசைந்தாள்.

ரிஷிக்கு ஆச்சரியம், சந்தோஷம் என பலவித உணர்வுகள் முட்டிமோதிக்கொண்டு உள்ளுக்குள் தோன்ற, மெல்ல அவளிடையை வளைத்து தன்னோடு மேலும் நெருக்கி குளிருக்கு இதமாக உஷ்ணத்தை கிளப்பிவிட்டான்.

நீண்ட நெடிய முத்தம். மெல்ல அவனிதழிலிருந்து விலகி சிவந்த முகத்தோடு அவனை நோக்கியவள், விழிகளைத் திறந்தவனின் விழிநீர் தேங்கி நிற்பதைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்.

அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, “ஏன்டீ என்னை வேணாம்னு சொல்ற, பிடிக்காமதான் என்னை கிஸ் பண்ணியா? உனக்கும் என்மேல ஃபீலிங்ஸ் இருக்கு. பட், நீ அதை ஏத்துக்க மாட்டேங்குற. ஆரம்பத்துல அம்மா அப்பாவ இழந்தேன். அப்றம் மேகா. அவள நான் காதலிச்ச மாதிரி யாராலேயும் காதலிக்க முடியாது. ஆனா, அந்த காதலோட விளைவு வெறும் துரோகம்தான்.” என்று நிறுத்தி,

“ரொம்ப நாளைக்கப்றம் உன்னை பார்த்தேன். எல்லாரையும் விட நீ வேற மாதிரி இருந்த சனா. அவ்வளவு பிடிச்சிருக்கு உன்னை. உன் கூட இருக்கணும்னு தோனிக்கிட்டே இருக்கு. என்னால என்னை கன்ட்ரோல் பண்ண முடியலடீ. ஏன்டீ என்னை விட்டு விலகி போற? ஐ லவ் யூ!” என்று தழுதழுத்த குரலில் காதலாகச் சொன்னான் ரிஷி.

அவனின் இந்த வார்த்தைகளை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விக்கித்துப்போய் நின்றவள், அவனின் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் தடுமாற்றத்தோடு பார்வையை பணிக்க, அவனோ விரக்தியாக புன்னகைத்தான்.

“பட் ஸ்வீட்ஹார்ட், வன்மோர் திங். யூ டோன்ட் ஹேவ் எனி ஆப்ஷன்ஸ். என்னை விட்டு விலக நினைக்காத!” என்ற ரிஷியின் வார்த்தைகளில் அத்தனை அழுத்தம்.

சனாவோ சிறிதுநேரம் எந்த சலனமுமின்றி அவனை வெறித்தவள், பின் அவனிடமிருந்து விலகி நடக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்து ஆழ்ந்த பெருமூச்சுவிட்டான் ரிஷி.

அதன்பிறகு இருவருக்குமிடையிலான பேச்சு வெகுவாக குறைந்துதான் இருந்தது. டெல்லியிலிருந்து சென்னைக்கு செல்லும் விமானத்தில் விழிகளை மூடி தூங்குவது போல்  பாவனை செய்பவளின் நடிப்பை அவன் அறியாமலில்லை.

இறுகிய முகத்தோடு அவளை வெறித்தவன், பயணக் களைப்பில் உறங்கிவிட, இப்போது விழிகளைத் திறந்துப் பார்த்தவளின் கண்கள் கலங்கிப் போயிருந்தன.

‘உன் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் கொஞ்சமும் பொருத்தமில்லாதது வேது. இந்த மூனுநாள நினைச்சு ஒருபக்கம் ரொம்ப சந்தோஷமா இருந்தாலும் இன்னொருபக்கம் முகத்தை மறைச்சிக்கிட்டு எவன் நம்மள பார்த்துடுவானோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன். மூச்சு முட்டுது எனக்கு. நா…நான் உனக்கு சரியானவ கிடையாது, எந்த வகையிலயும்’ என்று மனதிற்குள்ளேயே தன்னவனோடு பேசிக்கொண்டவளுக்கு உள்ளுக்குள் அத்தனை வலி.

இதுவரை உணராத அந்த வலியை அனுபவிப்பதில் எரிச்சலாக நெற்றியை நீவி விட்டுக்கொண்டவள், முகத்தைத் திருப்பி விழிகளை மூடிக்கொண்டாள்.

ஆனால், ஏற்கனவே அவள் மனதில் அவன் இடம்பிடித்துவிட்டதை உணராமல் போய்விட்டாள் சனா.

இன்றோடு இருவரும் டெல்லியிலிருந்து சென்னைக்கு தத்தமது வீட்டிற்கு வந்து இரண்டு நாட்களாகிவிட்டிருந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ரிஷிக்கு நடந்த உண்மையை சொல்லவென்று மனம் குற்றவுணர்ச்சியில் தவித்ததில் அவளைப் பார்க்க முடியாது அவளை விட்டு ஓடிக்கொண்டிருந்தானென்றால், தன் மனம் மற்றும் விழிகள் அவனை தேடுவதற்கான காரணம் புரியாது தன் உணர்வுகளை அடக்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள் அவனவள்.

அதேநேரம் சென்னை விமானநிலையம் தொடக்கம் மனாலி வரை ரிஷியினதும் சனாவினதும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மேக்னாவின் முன்னிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்தன.

கொஞ்சமும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. சில புகைப்படங்களில் இருவருக்குமிடையிலான நெருக்கம் அவள் இதயத்தை ஈட்டியால் குத்துவது போன்று இருக்க, அது தந்த வலியில் உண்டான கோபத்தில் தன் கையிலிருந்த அலைப்பேசியை சுவற்றில் விட்டெறிந்தவள், பத்ரகாளி போல் மூச்சு வாங்கியவாறு அமர்ந்திருந்தாள்.

“நீ என்னோட ரிஷி, என்னால உன்னை விட்டுக்கொடுக்க முடியாதுடா. தப்பு பண்ணேன்தான், அதுக்காக என்னை விட்டு போயிடுவியா? ஒருதடவை என்னை மன்னிச்சு ஏத்துக்கணும்னு தோனல்லையா உனக்கு, நம்ம காதல் அவ்வளவுதானா ரிஷ்?”

அவளையும் மீறி விழிகளிலிருந்து விழிநீர் தரையில் விழ, ஒருகட்டத்தில் ரிஷியை மொத்தமாக இழந்துவிட்ட வலியில் முகத்தை மூடி கதறியழ ஆரம்பித்துவிட்டாள் மேக்னா.

ஆரம்பத்தில் அவனை இலகுவாக சமாதானப்படுத்திவிடலாமென்று நினைத்திருந்தவளுக்கு இப்போது புரிந்தது, அந்த பிடிவாதக்காரனின் முன் எதுவும் செல்லுபடியாகாது என்று.

சட்டென அவளின் அழுகை நின்றது. தனக்கு வந்த யோசனையுடன் புருவத்தை நெறித்தாள் மேக்னா. அவள் நன்கு அறிவாள், சனா விடயத்தில் ரிஷிக்கு எதுவும் சாதகமாக அமையவில்லையென்று.

ரிஷியிடம்தான் கையாலாகாத தனமாக இருக்க வேண்டிய நிலை. ஆனால், சனாவை அவனை விட்டு முடிந்தவரை விலக வைக்கலாம். ஏற்கனவே சனாவை பற்றி அறிந்து வைத்திருந்தவளுக்கு அது ஒன்றும் அவ்வளவு கடினமாகத் தெரியவில்லை.

அடுத்தநாளே வலைத்தளங்களில் ரிஷியினதும் சனாவினதும் சுற்றுலா புகைப்படங்கள்தான். காலையில் எழுந்து  விடயத்தை தெரிந்துக்கொண்டதுமே வேகமாக அலைப்பேசியை எடுத்து ரிஷி பார்க்க, ஒருபக்கம் இதை பகிர்ந்தவர்களை நினைத்து கோபம் தாறுமாறாக எகிறினாலும் இன்னொருபுறம் சனாவின் முகம் மாஸ்க் போட்டிருந்ததால் அவ்வளவு தெளிவாக தெரியாததில் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டுக்கொண்டான்.

அவளை பற்றி அறியாதவனா அவன்! பத்ரகாளி ஆட்டமல்லவா ஆடிவிடுவாள்!

இருந்தும் அவன் நிம்மதி பெருமூச்சு விட்டு முடிக்கவில்லை, சனாவிடமிருந்து அழைப்பு.

அழைப்பையேற்று காதில் வைத்து, “ஹெலோ…” என்றதும்தான் தாமதம், தாறுமாறாக பொறிய ஆரம்பித்துவிட்டாள் அவள்.

“உன் கூட வந்ததுக்கு நல்லா பண்ணிட்ட போ! ஜஸ்ட்டு மிஸ்ஸு இல்லைன்னா, இந்த சாணக்கியாவோட முகம் அப்பட்டமா பேப்பர்ல வந்திருக்கும். அதுவும், உன் லவர்னு சொல்ல மாட்டாங்க. என்னை பத்தி தெரிஞ்சா பணத்துக்காக நான் உன் பின்னாடி வந்திருக்கேன். நீ என்னை வச்சிருக்கன்னு சொல்வாங்க…” என்று சனா கோபத்தில் தாறுமாறாக திட்டிக்கொண்டே போக, “ஷட் அப் சனா!” என்ற கத்தலோடு அவளை இடைவெட்டினான் ரிஷி.

“லுக், அதான் ஃபேஸ் தெரியலல்ல, அப்றம் எதுக்கு தாம்தூம்னு குதிக்குற? நான் யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும், இந்த துறையில இது சகஜமான ஒன்னுதான்.  இதுக்கெல்லாம் நீ பழகிதான் ஆகணும்.” என்ற அவனின் வார்த்தைகளில் தெரிந்த அழுத்தத்தில் அவளுக்கு பிபி எகிற, “நான் எதுக்குடா பழகணும், நான் எதுக்கு இதையெல்லாம் சகஜம்னு ஏத்துக்கணும்? என்னால இப்படியொரு வாழ்க்கைய கனவுல கூட வாழ முடியாது. ச்சே! உன்னை எப்போ பார்த்தேனோ அப்போ புடிச்சது சனி, நாம இரண்டு பேரும் சந்திச்சிக்காம இருந்திருக்கலாம். எவ்வளவு நல்லா இருந்திருக்…” என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு பட்டென்று துண்டிக்கப்பட்டிருந்தது.

முகத்திற்கு அடித்தாற் போல் அழைப்பு துண்டிக்கப்பட்டதும் சனாவுக்கோ உள்ளுக்குள் ஒருமாதிரியாகிவிட்டது. ‘ரொம்ப ஓவரா பேசிட்டேனோ?’ என்று தவறு செய்த குழந்தைப்போல் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டவளுக்கு, மீண்டும் அவனுக்கு அழைக்கவும் மனமில்லை.

தன்னவனை காயப்படுத்திவிட்டோமோ என்று அவள் தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டிருக்க, இங்கு அழைப்பைத் துண்டித்துவிட்டு தரையை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் ரிஷி. அவனின் முகமோ அவள் வார்த்தைகளில் இறுகிப் போயிருந்தது.

ஏற்கனவே வேலையில் உண்டான களைப்பு, வலைத்தளங்களில் பார்த்த புகைப்படங்களில் மனம் சோர்ந்துப்போய் அமர்ந்திருந்தவனுக்கு ஆறுதலாக தலையைக் கோதக் கூட ஒருவருமில்லை. இப்போது அதற்குமேல் சனாவும் இவ்வாறு பேசியதும் அதற்குமேல் பேச அவனின் சுயமரியாதை இடம் தரவில்லை.

இருகைகளால் நெற்றியை தாங்கியவாறு ஆத்திரத்தோடு அவனிருக்க, இதோ அடுத்த பிரச்சினை.

கதவு தட்டப்படும் சத்தத்தில் கதவைத் திறந்தவன், வெளியிலிருந்த வேலையாளை புரியாது நோக்க, “பெரியய்யா உங்கள கூப்பிடுறாங்க.” என்று அவர் சொன்னதும், நெற்றியை எரிச்சலாக நீவிவிட்டவாறு ஹோல் சோஃபாவில் அமர்ந்திருக்கும் ராகவனை நோக்கிச் சென்றான் ரிஷி.

அங்கு ராகவனோ அலைப்பேசியில் பரவிக்கொண்டிருக்கும் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தவர், “வாட்?” என்று கேட்டுக்கொண்டே ரிஷி வந்தமர்ந்த அடுத்தகணம், “வாட் த **** யூ திங் ஆஃப் யூவர் செல்ஃப்?” என்று கத்தி அலைப்பேசியை தரையில் விட்டெறிந்தார்.

ஆனால், ரிஷியிடமோ எந்த அசைவுமில்லை. விழிகள்  இடுங்க நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றவாறு, “என்னாச்சு?” என்று அவன் சாதாரணமாகக் கேட்க, அவனின் அலட்சியப் பாவனையில், “திஸ் இஸ் டூ மச் ரிஷ், நீ யாருன்னு உனக்கு கொஞ்சமாச்சும் நினைப்பிருக்கா, இல்லையா? சோஷியல் மீடியாவுல ட்ரெண்டிங்ல இருக்க, அதுவும் நெகடிவ்வா.” என்று கத்தினார் அவர் கோபமாக.

அதில் அவரை அழுத்தமாகப் பார்த்தவன், “நீங்கதானே சொல்லியிருக்கீங்க, இதெல்லாம் சகஜம்னு. இப்போ நீங்களே இதை பெருசா எடுத்தா எப்படி?” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டதும், அவருக்கோ கோபம் தாறுமாறாக எகிறியது.

“ச்சே! அந்த பொண்ண சொல்லணும். அறிவிருக்கா கொஞ்சமாச்சும் அவளுக்கு? நான் அன்னைக்கே சொன்னேன் ரிஷ், அந்த மாதிரி பொண்ணுங்க பணத்துக்காக என்ன வேணா பண்ணுவாங்கன்னு. அவ்வளவு யோகியமிருந்தா உன் பின்னாடி வந்திருப்பாளா? ஆப்ட்ரோல் காசுக்காக கூப்பிட்டா பெட் ஷெயார் பண்ண கூட…” என்று ராகவன் சொல்லி முடிக்கவில்லை, “வில் யூ ஜஸ்ட் ஸ்டாப் யூவர் ப்ளடி **** டோக்!” என்று ஆவேசத்தில் மேசை மீதிருந்த தேநீர் கோப்பைகள் வைக்கப்பட்ட ட்ரேயை சுவற்றில் தூக்கியெறிந்தான் ரிஷி.

ஒருநிமிடம் அவருக்கோ பக்கென்றானது. “இதுக்குமேல ஒரு வார்த்தை வந்திச்சுன்னா…” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டியவன், அதற்குமேல் பேசாமல் விறுவிறுவென மாடிப்படிகளை நோக்கி நடக்க, தரையில் சிதறியிருந்த நொறுங்கிய கண்ணாடித் துண்டுகளை கோபமாகப் பார்த்தவர், “மறுபடியும் மறுபடியும் அதே தப்பை பண்ற ரிஷ்!” என்றார் பற்களைக் கடித்துக்கொண்டு.

சட்டென்று நின்றவன், மீண்டும் அவரை நோக்கி வந்து இதழ்களில் ஏளனப்புன்னகை படர, “ஷீ இஸ் பெட்டர் தன் யூவர் டோட்டர்.” என்றுவிட்டு ஒரு அர்த்தப் புன்னகை புரிய, அதிர்ந்துவிட்டார் ராகவன்.

“ரிஷ்…!” என்று அதிர்ந்தவர், “உன..உனக்கு எப்..எப்படி?” என்று தட்டுத்தடுமாறிக் கேட்க, “மேகாவ நான் அளவுக்கதிகமா காதலிச்சிருக்கேன். அவள பத்தி தெரியாம இருக்குமா என்ன? உங்கள சந்திக்க முன்னாடியே தெரியும். ஆனா, உங்கள என் குருவா பார்த்தேனே தவிர அவ அப்பாவா பார்க்கல்ல. நீங்களும் உங்க லிமிட்ல இருக்குற வரைக்கும் நல்லது. கொட் இட்?” என்ற ரிஷியின் வார்த்தைகளிலிருந்த அடக்கப்பட்ட கோபத்தையும் அழுத்தத்தையும் திகைத்துப் பார்த்தார் அவர்.

இதை ரிஷியிடம் அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

ஆம். ராகவனின் மகள்தான் மேக்னா. அமுதாவுக்கும் ராகவனுக்கும் பிறந்த மகள். காதலித்து திருமணம் செய்திருந்தாலும் ஒரே வருடத்தில் தனிப்பட்ட பிரச்சினைகளாலும் கருத்து வேறுபாட்டாலும் இருவரும் சட்டரீதியாக பிரிந்து விட்டனர்.

அதன்பிறகே, மேக்னாவுக்கு இரண்டு வயது இருக்கும் போது மனைவியை ஒரு விபத்தில் இழந்த மனோகரை திருமணம் செய்துக்கொண்டார் அமுதா. இது பதினாறு வயது இருக்கும் போதே மேக்னா தாயின் மூலமாக அறிந்துக்கொண்டாள். ஆனால், எந்த வகையிலும் அதை அவள் காட்டிக்கொண்டதுமில்லை. வெளிப்படுத்தியதுமில்லை. ரிஷியிடம் கூட.

ஆனால், இதை ரிஷி அறிந்து வைத்திருப்பது ஆச்சரியத்திற்குரியது. மேக்னாவை இவன் காதலிக்கும் சமயத்தில் தன் நண்பனொருவனின் விழாவுக்கு ஒரு ஹோட்டலுக்கு சென்றிருந்தவன், அங்கு வைத்தே அமுதாவும் ராகவனும் சந்தித்து பேசியதை கண்டுக்கொண்டான். கூடவே, அடுத்தநாள், தன்னவளை தேடி பால்கனிக்கு வந்தவன், அங்கு அமுதா மேக்னாவிடம் பேசிக்கொண்டிருந்ததையும் கேட்டு உறுதி செய்துக்கொண்டான்.

ஆனால், ஒருதடவை கூட அதைத் தோண்டித் துருவி விசாரிக்கவுமில்லை. மேக்னாவிடம் கேட்டு அவளை சங்கடப்படுத்தவும் இல்லை.

இப்போது கூட ராகவன் மேக்னாவுக்கு சார்பாக இருக்கும் ஆத்திரத்தில் அவர் முன் உடைத்துவிட்டானே தவிர, அவனுக்கு இந்த விடயம் தேவையே இல்லாத ஒன்று.

ராகவன் அதிர்ந்துப்போய் நின்றுக்கொண்டிருக்கும் அதேசமயம், அப்போதுதான் ரிஷியை திட்டிவிட்டு புலம்பிக்கொண்டிருந்த சனா, கதவு தட்டும் சத்தத்தில் யோசனையை ஓரமாக வைத்து யாரென கதவைத் திறந்துப் பார்த்தாள்.

“உன் கூட மேடம் பேசணுமாம். கொஞ்சம் வர்றீயா?” என்று கேட்டவாறு நின்றிருந்தார் ஈஷ்வர்.

இடுப்பில் கைக்குற்றி அவரை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்தவள், “யாரு சார் உங்க மேடம்?” என்று கூர்மையான பார்வையில் கேட்க, “மேக்னா” என்றவர் முன்னே நடக்க, விழிகள் இடுங்க சிறிதுநேரம் அதே இடத்தில் நின்றவள், ஒரு பெருமூச்சுவிட்டு அவர் பின்னாலே சென்றாள்.

கார்கதவை ஈஷ்வர் திறந்து நிற்க, காருக்குள் ஏறியவள், ஓட்டுனர் இருக்கையில் குட்டை பாவாடை மற்றும் கூலிங் க்ளாஸ் அணிந்து ஸ்டைலாக மேக்னா அமர்ந்திருப்பதைப் பார்த்து, உதட்டைப் பிதுக்கி ‘ஃபோட்டோல பார்க்குறதை விட நேர்ல அழகா இருக்காளே! அதான் அந்த வேதுப்பயல் விழுந்து விழுந்து லவ் பண்ணியிருக்கான் போல. அப்போ நம்மள எதுக்கு? இவ அளவுக்கு இல்லைன்னாலும் நாமளும் சுமாரா அழகாதான் இருக்கோம்.’ என்று உள்ளுக்குள் சற்று பொறாமையாகவே நினைத்துக்கொண்டாள்.

மேக்னாவும் அவள்புறம் திரும்பவேயில்லை. பின்சீட்டில் ஈஷ்வர் ஏறியதும், “ஏம்மா பொண்ணு…” என்று சனா பேச்சை ஆரம்பிக்க, அதையெல்லாம் கண்டுக்கொள்ளாதது போல் காரை மின்னல் வேகத்தில் செலுத்திக்கொண்டுச் சென்றாள் அவள்.

சனாவுக்கோ பயம் மனதை கவ்வியது. ‘அய்யோ! அந்தப்பயலு நம்மள காதலிக்குறதுக்கு இவ நம்ம மேல காண்டுல இருக்காளோ? இருக்கு இருக்கும். போற வேகத்தைப் பார்த்தா எதுலயாச்சும் மோதி நம்ம கதைய முடிச்சிடுவா போலயே…’ மனதிற்குள்ளேயே அலறிக்கொண்டு இருந்தவள், ஒரு பெரிய பங்களாவின் முன் மேக்னா வண்டியை நிறுத்தியதும் கார் கண்ணாடி வழியாக மெல்ல எட்டிப் பார்த்தாள்.

அது மேக்னாவின் வீடு.

‘இங்க எதுக்கு நம்மள கூட்டிட்டு வந்திருக்கா? பீச்சு பக்கத்துல வீடு நல்லாதான் இருக்கு. இருந்தாலும் சுனாமி வந்தா வீட்டோட அடிச்சிட்டு போகாதா? அடிப்பாவி சனா! என்ன நடக்குது நீ எதைடீ யோசிச்சிக்கிட்டு இருக்க?’ மீண்டும் மனதிற்குள்ளேயே பேசி புலம்பித் தள்ளியவள், ஆழ்ந்த மூச்செடுத்து, “ஹ்ர்ம் ஹ்ர்ம்… எதுக்கு… இங்க… என்னை…?” என்று ஒவ்வொரு வார்த்தைகளாக கோர்த்து பேசிக்கொண்டிருக்க,

காரிலிருந்து இறங்கி சனாவின் பக்கம் வந்து கார்கதவை திறந்துவிட்டு, “வெல்கம் டூ மை…” என்று நிறுத்தி, “நோ நோ… மேக்னா ரிஷி பேளஸ.” என்றாள் மேக்னா சற்று கர்வத்தோடு.