தொலைந்தேன் 27 💜

ei39PWN33932

தொலைந்தேன் 27 💜

அடுத்தநாள்,

ஸ்டூடியோவில் ரிஷி மேக்னா இருவரும் வேலையில் மூழ்கியிருக்க, ஓரக்கண்ணால் ரிஷியை பார்ப்பது ஏதோ சொல்ல வருவதுமாக தடுமாறிக்கொண்டிருந்தாள் மேக்னா.

அதை உணர்ந்தவன் போல், “என்ன வேணும் இப்போ உனக்கு?” என்று அவள்புறம் திரும்பாது கடுப்பாக அவன் கேட்க, “அது… அது வந்து… உனக்கு எப்படி தெரியும் ரிஷ், நான் அவரோட பொண்ணுன்னு?” என்று ஒருவித தடுமாற்றத்தோடு அவள் கேட்டதும், பாடல் வரிகளை கீபோர்டில் தட்டச்சு செய்துக்கொண்டிருந்தவனின் விரல்கள் சட்டென்று நின்றன.

ஆழ்ந்த மூச்செடுத்தவன், “உன்னை காதலிக்கும் போதே.” என்றான் இறுகிய குரலில்.

அதில் அதிர்ந்த மேக்னா, “அப்போ ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்கல?” என்று விழி விரித்துக் கேட்க, “நீ என்கிட்ட சொல்லாம இருக்கும் போது நான் அதை கேட்டு உன்னை சங்கடப்படுத்த விரும்பல.” என்றவன், “நெக்ஸ்ட் சாங்கான மியூசிக்க கம்போஸ் பண்ணனும். லிரிக்ஸ் ரெடியா இருக்கு.” என்றான் வேலையில் கவனமாக.

ஆனால், இப்போது அவளுக்கு வேலையில் கவனம் செலுத்த மனம் விரும்பவில்லை.

அவள் அமர்ந்திருந்த இடத்திலேயே அசையாது சிந்தனையில் உழன்றிருக்க, “ஆமா… உன் வீட்டை என் ஆளுக்கு சுத்தி காமிச்சியாமே, என்ன சொன்னா என் ஸ்வீட்ஹார்ட்?” என்ற ரிஷியின் குரலில் நடப்புக்கு வந்து அவனின் கேள்வியின் அர்த்தம் புரிந்தவளோ கொதித்தெழுந்தாள்.

“ஸ்வீட்ஹார்ட்…” என்று பற்களைக் கடித்தவள், “அப்படி சொல்லாத ரிஷ், சகிக்க முடியல.” என்று முகத்தைச் சுழிக்க, “உனக்கு சகிக்கலன்னு என்னோட அரக்கிய நான் கொஞ்சாம இருக்க முடியுமா?” என்று பதிலுக்கு கேலியாகக் கேட்டான் ரிஷி.

சிறிதுநேரம் அவனை வெறித்தவள், “என்னை காயப்படுத்துறதா நினைச்சு நீ பண்றதெல்லாம் சில்லித்தனமா இருக்கு.” என்றுவிட்டு ஏளனமாகச் சிரிக்க,  “இதே வலிதான் அன்னைக்கு எனக்கும் உன்னை பார்க்கும் போது இருந்துச்சு. இப்போ அதை அனுபவிக்கும் போது மேடமுக்கு தாங்க முடியல்லையா?” என்றான் அவன் அடக்கப்பட்ட கோபத்தோடு.

“நான் தப்பு பண்ணேன்தான். இதுக்கு மன்னிப்பே இல்லையா ரிஷ்? என்னால தாங்க முடியல.” என்று கிட்டதட்ட மேக்னா அழும் நிலைக்கே சென்றுவிட, விரக்தியாகப் புன்னகைத்தவன், “மறக்க முடியாது மேகா கூடவே உன்னை ஏத்துக்கவும் முடியாது.” என்றுவிட்டு நகர்ந்திருக்க, அவளோ போகும் அவனையே வலி நிறைந்த பார்வைப் பார்த்திருந்தாள்.

அதேநேரம், தனிப்பட்ட வேலைக்காக  காலையிலேயே சென்று அப்போதுதான் இறுகிய முகமாக வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்த சனா, வாசலில் நின்றிருந்த ப்ரவினை பார்த்து சலிப்பாக விழிகளை உருட்ட, அவனோ இத்தனைநேரக் காத்திருப்பின் பின் அவளைப் கண்டதும் முகம் பிரகாசிக்க தன் சகோதரியைப் பார்த்தான்.

அவளோ அவனை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாதது போல் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே செல்ல, “அக்கா… அக்கா… அப்பா உன்னை பார்க்கணும்னு சொல்றாரு…” என்று தயக்கமாக அழைத்தபடி அவளை கண்டதிலிருந்து சொல்லிக்கொண்டிருந்தவன்,  உள்ளே சென்று அவள் பாட்டிற்கு வேலைகளை செய்ய ஆரம்பித்ததும், என்ன செய்வதென்று தெரியாது முகத்தை பாவமாக வைத்துக்கொண்டான்.

இதுவரை அவன் யாரையும் இப்படி சமாதானப்படுத்தியது கிடையாது. “அக்கா…” என்று அவன் பாவம் போல் அழைக்க, “அக்காவா! ஓஹோ… இதுக்கு முன்னாடி என்னை தப்பா பேசும் போது நான் உன் அக்கான்னு உனக்கு தோனல்லையா?” போலிச் சிரிப்போடுக் கேட்டு இறுதியில் ஆத்திரத்தோடு முறைக்க, தலைக் குனிந்துக்கொண்டவன், “அதான் மன்னிப்பு கேட்டேன்ல!” என்றான் சங்கடமாக.

‘ச்சே!’ என்று சலித்துக்கொண்டவள், மீண்டும் தொலைக்காட்சியை உயிர்ப்பித்துவிட்டு கையோடு கொண்டு வந்திருந்த உணவுப்பொட்டலத்தை தரையில் விரித்து உண்ண ஆரம்பிக்க, “யக்கோவ்! அந்த மனுஷனுக்கு உடம்பு சரியில்லை. அவர் உன்னை பார்க்கணும்னு சொல்றாரு. ஒருவாட்டி வந்து மூஞ்ச காமிச்சிட்டு போ! வேறெதுவும் வேணாம்.” என்றான் ப்ரவின் கெஞ்சலாக.

அப்போதும் அவள் மனம் இறங்கவில்லை. பக்கத்து வீட்டிலிருந்தவர்களோ ப்ரவினின் சத்தத்தில் செய்யும் வேலைகளையும் விட்டு வெளியே வந்து எட்டிப் பார்க்க, சுற்றியிருப்பவர்கள் பார்ப்பதை உணர்ந்து, “அப்பா நிஜமாவே தப்பை உணர்ந்துட்டாருக்கா, பல தடலை உன்கிட்ட பேச முயற்சி பண்ணும் போதும் நீதான் அவர கண்டுக்கல. நீ வீட்டுல இல்லாத நாலு நாளா அவரு உன் வீட்டு வாசல்லையேதான். எனக்கே பாவமா இருந்துச்சு. இதுக்குமேல சொல்றதுக்கு எதுவும் இல்லை. நீ எப்போ சமாதானமாகிறியோ, அப்போ வந்து பாரு!” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான் ப்ரவின்.

சனாவுக்கோ உணவு தொண்டையிலிருந்து இறங்க மறுத்தது. ஏதோ உள்ளுக்குள் அடைப்பது போலிருக்க, தண்ணீரை மடமடவென குடித்தவளுக்கு ரிஷியின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன.

சிறிதுநேரம் தரையை வெறித்து புருவத்தைச் சுருக்கி யோசித்தவள், சட்டென என்ன நினைத்தாளோ வேகமாக எழுந்து, “டேய் ப்ரவினு…” என்று கத்திக்கொண்டு அவன் பின்னே ஓட, சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.

அடுத்த சில நிமிடங்களில் ப்ரவினின் வீட்டிற்குள் தயக்கத்தோடே நுழைந்த சனா, “அம்…” என்று கத்தப்போனவனின் வாயைப் பொத்தி அடக்கி, “அறை எங்கன்னு சொல்லு, சும்மா கத்தி ஊர கூட்டாம!” என்று கேட்க, ப்ரவினும் ஓரக்கண்ணால் ராஜலிங்கம் இருக்கும் அறையைக் காட்டினான்.

ஆழ்ந்த மூச்செடூத்தவள், அறைக்குள் மெல்ல நுழைய, அங்கு மனைவி சகுந்தலா கொடுத்த கஞ்சியை அலைப்பேசியை நோண்டியவாறு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர், மன உந்துதலில் அறை வாசல்புறம் திரும்பிப் பார்த்தார்.

சனாவோ அவரை முறைத்துப் பார்த்துவிட்டு பின்னால் திருதிருவென விழித்துக்கொண்டிருந்த ப்ரவினை ஒரு பார்வைப் பார்த்தவள், “இந்த மனுஷனுக்கா உடம்பு சரியில்லை? நல்லா ஜம்முனு உக்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு ஃபோன நோண்டிக்கிட்டு இருக்காரு. பொய்யு பொய்யு! பூரா ஃப்ராடுபயலுங்க!” என்றுவிட்டு அங்கிருந்து நகரப் போக, சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த சகுந்தலாவுக்கு அதிர்ச்சி.

“சாணக்கியா!” அதிர்ந்து அழைத்தவர், ராஜலிங்கத்தை புரியாது பார்க்க, அவரோ “சனா, நில்லும்மா…” என்று அவள் பின்னாலே ஓடினார்.

சனா வீட்டிலிருந்து வெளியேறும் முன் அவள் முன் வழிமறைப்பது போல் வந்து நின்ற ப்ரவின், “அக்கா, போகாத! நாங்க சொல்றதை கொஞ்சம் கேட்டுட்டு போ! நான் அத்தனை தடவை கூப்பிட்டும் நீதான் வரல. அப்பா வேற புலம்பிட்டே இருந்தாரு. எனக்கு வேற வழி தெரியல, அதான் பொய் சொன்னேன். இப்போவும் அவரையே தப்பா நினைச்சிராத! தப்பு என்மேலதான்.” என்று பேசிக்கொண்டு போக, நின்று நிதானமாக தந்தையை திரும்பிப் பார்த்தாள் அவள்.

“நீங்க என்கிட்ட அப்பன்னு பாசம் காட்டியது கிடையாது. என்னோட பாசமா உக்கார்ந்து பேசினது கிடையாது. சோறு ஊட்டினது கிடையாது. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லயிருந்து ஆசையா ஒரு பொம்பை கூட எனக்கு வாங்கி கொடுத்தது கிடையாது. இப்போ வந்து பாசம் காட்டினதும் நானும் பதிலுக்கு வாலாட்டனும்னு நீங்க நினைக்கிறது எந்த விதத்துல நியாயம்? நீங்களே சொல்லுங்க!” நிதானமாக அதேசமயம் அழுத்தமாக வார்த்தைகளை கோர்த்துக் கேட்டாள் சனா.

தன் மகளின் கேள்வியில் உண்டான விழிநீரை விழிகளை சிமிட்டி உள்ளே இழுத்துக்கொண்டவர், “எப்போவாச்சும் உன் அம்மா என்னை திட்டியிருக்காளா, இல்லைன்னா தப்பா உங்ககிட்ட பேசியிருக்காளா?” என்று தழுதழுத்த குரலில் கேட்க, சில கணங்கள் ஆழ்ந்து யோசித்து இல்லையெனும் விதமாக தலையாட்டியவள், “அவங்களும் உங்கள எதுவும் சொல்ல மாட்டாங்க. எங்களையும் எதுவும் சொல்ல விடமாட்டாங்க.” என்றாள் அமைதியாக.

“அதுக்கு காரணம்…” என்று ஏதோ சொல்ல வந்த ராஜலிங்கம், “காரணம், அவங்க உங்கள ரொம்ப விரும்பியிருக்காங்க.” என்று சனா கத்தியதும், “அதுவும். கூடவே, நானும் விசாலத்தை ரொம்ப காதலிச்சேன்.” என்றார் தன் மனைவியின் நினைவில் மெல்ல புன்னகைத்தபடி.

அடுத்தகணம் ஆத்திரம் பெருக்க அவளின் பார்வை பதிந்தது என்னவோ சகுந்தலாவின் மீதுதான். அவள் பார்வை தன் மீது விழுந்ததுமே கூசிப் போனவராக அவர் தலைக்குனிய, அதை உணர்ந்த ராஜலிங்கம், “இந்த தப்புக்கு மன்னிப்பே இல்லைதான்டா, ஆனா உன் அம்மா ஏத்துக்கிட்டா.” என்றார் கரகரத்த குரலில்.

“தெரியாம பண்ணிட்டோம்னு சொல்ல மாட்டோம். சகுந்தலா என் வாழ்க்கைக்குள்ள இல்லாத போதும் இருக்கும் போதும் விசாலத்தை நான் விடல. அவள ஒதுக்கவும் விடல. அன்னைக்கு அப்படியொரு அசம்பாவிதம் நடக்கும்னு நான் சத்தியமா எதிர்ப்பார்க்கலடா. ஏற்கனவே விசாலத்துக்கும் எனக்கும் சில பிரச்சினை. அந்த கோபத்துல வர முடியாதுன்னு அனுப்பிவிட்டுட்டேன்.  ஒருவேள, முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவங்கள அப்படி தனியா விட்டிருக்க மாட்டேன்டா. என்னை நம்பும்மா!” என்றுவிட்டு அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு அழுதேவிட, சனாவுக்கு கூட விழிகள் கலங்கிவிட்டன.

அதை மறைக்க அவள் முகத்தை திருப்பிக்கொள்ள, “உன்னை கண்டிச்சது கூட பொட்ட புள்ளைய சரியா வளர்க்கலன்னு பேர வாங்கிற கூடாதுன்னுதான். உன்னை பிடிக்காம இல்லைடா. ஆனா, உன் விஷயத்துல நிறைய தப்பு பண்ணியிருக்கேன். கண்டிக்கிறதா நினைச்சு நான் பேசின வார்த்தையெல்லாம் இப்போ நினைக்கும் போது எனக்கே அசிங்கமா இருக்கு. என்னை மன்னிச்சிருடா தங்கமே!” என்று ராஜலிங்கம் கைக்கூப்பி மன்னிப்புக் கேட்டவாறு அழ, அவளுக்கோ அதிர்ச்சி.

என்னதான் இருந்தாலும் அப்பாவென்ற பாசம் அவளுக்குள் புதைந்துதான் இருந்தது. அவரின் அழுகை அந்தப் பாசத்தை தட்டியெழுப்பது போல் தோன்ற அதற்குமேல் அங்கு நிற்காமல் விழிநீரை மறைத்தபடி சனா அங்கிருந்து ஓடிவிட, “அக்கா…” என்று அவள் பின்னே செல்லவிருந்த ப்ரவினை தடுத்து நிறுத்தினார் ராஜலிங்கம்.

வீட்டிலிருக்கவும் முடியவில்லை. மூச்சடைப்பது போல் தோன்றவும், அங்கிருந்து வெளியேறி வீதியோரமாக எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டு நடந்து வந்துக்கொண்டிருந்தாள் சனா.

அவளுக்குள் பல குழப்பங்கள். ஒருபக்கம் இப்போது தன் தந்தை பேசிய வார்த்தைகள் சிந்தனையில் ஓட, இன்னொருபுறம் ரிஷியின் காதல். ஆம், அவனேதான்.

ஏனோ இப்போதெல்லாம் அவனை தவிர்க்க மனம் விரும்புவதில்லை. அவனின் பார்வையில் அனுபவித்திராத வெட்கத்தையும் சிலிர்ப்பையும் உணர்கிறாள். அன்று மேக்னாவிடம் விட்டுக்கொடுத்து பேசிவிட்டு வந்தபின் அவள் மனதின் போராட்டங்களை அவள் மட்டுமே அறிவாள்.

‘இறுதியில் தன்னையும் காதலிக்க வைத்துவிட்டான் அந்த பிடிவாதக்காரன். ஆனால், இது சாத்தியமா? அவனை காதலித்தால் அவளின் சுதந்திரம் என்னவாகும்? இந்த விஷயத்தில் ஒன்றை இழந்துதான் மற்றதை பெற வேண்டிய கட்டாயம். ஏன் தன்னவன் ஒரு சாதாரண வேலை செய்யும் சராசரி மனிதனாக இருந்திருக்க கூடாது’

என்று தனக்குள்ளேயே கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லி மேலும் மேலும் குழம்பிக்கொண்டவாறு வந்துக்கொண்டிருந்தவள், எதேர்ச்சையாக பார்த்த காட்சியில் அடுத்தகணம் அந்த நபரை நோக்கி ஓடினாள்.

அங்கு ஒரு பெரியவர் வீதியோரமாக நின்று வாந்தியெடுத்து நிற்க கூட திராணியின்றி பக்கத்திலிருந்த பெரிய மரத்தைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்திருக்க, வேகமாகச் சென்று, “அய்யோ உங்களுக்கு என்னாச்சு? சார் சார்!” என்று தரையில் விழுந்திருந்தவரின் கன்னத்தைத் தட்டி சனா எழுப்ப முற்பட, உடம்பில் கொஞ்சம் கூட தெம்பில்லாததில் பேச முடியாமல் அரைக்கண்ணுடன் முணங்கிக்கொண்டிருந்தார் அவர்.

என்ன செய்வதென்று தெரியாது திணறியவள், வேகமாக சுதாகரித்து கார்கதவு திறந்திருப்பதைப் பார்த்து கைத்தாங்கலாக அவரை தூக்கி கார்சீட்டில் அமர வைத்து, தண்ணீர் போத்தலை தேடினாள். சில கணங்கள் தேடலின் பின் இருக்கையின் அடியில் தண்ணீர் போத்தல் கிடைக்க, தானே அவருக்கு பருகக் கொடுத்து, “சாரு… சார் ஆஸ்பத்திரி போலாமா?” என்று கேட்டாள் சனா அக்கறையாக.

தண்ணீர் அருந்தவும் உணர்வு வந்தவராக, “இல்..இல்லைம்மா வேணாம். மூனு நாளா சரியா சாப்பிடல, நேரத்துக்கு எடுத்துக்க வேண்டிய டேப்ளட்ஸ்ஸும் எடுத்துக்கல. இன்னைக்கு வெளில சாப்பிடவும் அது ஒத்துக்கல. அதான் வோமிட் பண்ணிட்டேன். நீ எனக்கு ஒரேயொரு ஹெல்ப் பண்றியா? வீட்டுக்கு போகணும், என் காரை நீ ட்ரைவ் பண்றியா?” என்று கேட்க, சனாவுக்கும் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது போலும்!

“ம்ம்…” என்று தலையசைத்து ஓட்டுனர் பக்கத்தில் அவள் வந்தமர, “உனக்கு ஓட்ட தெரியுமாம்மா?” என்று அவர் கேட்டதும்தான் தாமதம், வாய்விட்டுச் சிரித்தவள், “என்ன சாரு இப்படி கேட்டுட்டீங்க, இப்போ பாருங்க என் திறமைய! ஆமா… எங்க போகணும்?” என்று கேட்டாள்.

“நீ போம்மா, நான் வழிய சொல்றேன்.” என்றுவிட்டு அவர் அவள் காரை செலுத்துவதை கவனிக்க ஆரம்பிக்க, அவளோ அவரே அசரும்படியாக அத்தனை வாகன நெரிசலில் லாவகமாக வண்டியை செலுத்தினாள்.

அவர் காட்டும் வழியில் வண்டியை செலுத்தி வீட்டு வாசற்கதவுக்கு முன் வந்து காரை நிறுத்தியவள், அந்த பெரிய வாசற்கதவைப் பார்த்து வாயைப் பிளக்க, கதவு திறந்து உள்ளே சென்றதும் வீட்டைப் பார்த்து அசந்தேவிட்டாள்.

“எம்புட்டு பெரிய வீடு!” என்று சனா  வாயைப் பிளந்துப் பார்க்க, அந்தப் பெரியவருக்கோ அவளின் பாவனையில் தன்னை மீறி சிரிப்பு வந்துவிட்டது.

போர்டிகாவில் காரை நிறுத்திவிட்டு, “பார்க்க கொஞ்சம் தெம்பாதான் இருக்கீங்க, வீட்டுக்குள்ள நடந்து போற அளவுக்கு உடம்புல சத்து இருக்குல்ல! அப்போ நான் கிளம்புறேன்.” என்றுவிட்டு அவள் இறங்கி நடக்கப் போக, மெல்ல காரிலிருந்து இறங்கி, “ஹேய் பொண்ணு!” என்றழைத்தார் அவர்.

அவளும் சத்தம் கேட்டு திரும்பியவள் மீண்டும் அவரருகே வந்து, “என்னாச்சு
சாரு? உடம்புக்கு ஏதாச்சும்…” என்று சந்தேகமாக இழுக்க, “அதெல்லாம் இல்லைம்மா, நீ மொதல்ல உள்ள வா! எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்க. வந்து ஏதாச்சும் குடிச்சிட்டு போ!” என்று அந்த பெரியவர் சொன்னதும், “அதெல்லாம் வேணாங்க, நான் போறேன். நீங்க ஜாக்கிரதையா இருங்க!” என்றுக்கொண்டே நகர முயன்றாள் அவள்.

ஆனால், அவரோ விட்டபாடில்லை.

அடுத்த சில நிமிடங்களில் அவர் வீட்டு சோஃபாவில் அமர்ந்திருந்தாள் சனா.

“உங்க வைஃப், பசங்க யாரும் இங்க இல்லையா?” சனா வேலையாட்கள் தவிர யாரும் இல்லாததை உணர்ந்துக் கேட்க, “வைஃப் வூமன்ஸ் க்ளப்புக்கு போயிருக்கா, ஒரு பொண்ணுதான். அவ எங்க கூட இல்லை. வேலை காரணமா தனியா இருக்கா.” என்று சொன்னவர், “அதோ பாரு அவதான் என் பொண்ணு. கண்டிப்பா உனக்கு தெரிஞ்சிருக்கும்.” என்றுவிட்டுச் சிரித்தார்.

அவர் காட்டிய திசைக்குத் திரும்பிப் பார்த்த சனாவுக்கு அதிர்ச்சி. அங்கு மேசையின் மீது வைக்கப்பட்டிருந்தது சாட்சாத் மேக்னாவின் புகைப்படம்.

“மேக்னா…” என்று அவளிதழ்கள் மெல்ல முணுமுணுக்க, “ஆமா, பெரிய சிங்கர். இங்க பணத்துக்கு பஞ்சமே இல்லை. ஆனா…” என்ற மனோகர் விரக்தியாகப் புன்னகைத்தார்.

இதுவே அவர் மேக்னாவின் தந்தையென்று தெரியாதிருந்தால் கண்டிப்பாக சனா அவர் விஷயத்தை காது கொடுத்துக் கேட்டிருக்க மாட்டாள். ஆனால், ஏனோ இப்போது அவருக்குள் இருக்கும் பிரச்சினையை கேட்கும் ஆர்வம் இவளுக்குள். அதற்கு காரணம் கூட ரிஷி அதில் சம்மதப்பட்டிருப்பான் என்ற ஒரே விடயம்தான்.

என்றும் இல்லாத பழக்கமாக, “என்னாச்சு சார், ஏதாச்சும் பிரச்சினையா? உங்களுக்கு விருப்பம்னா சொல்லுங்க. இல்லைன்னா வேணாம்.” என்று சனா தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தோடு சொல்ல, ஏனோ அவருக்கும் மனதிலுள்ளதை பகிர ஒருவர் கிடைத்த உணர்வு!

அதுவும் சனாவின் இயல்பான பேச்சு அவருக்கும் அவளோடு பல நாட்கள் பழகிய உணர்வைக் கொடுக்க, இத்தனைநாட்கள் பகிரக் கூட ஆளில்லாது உள்ளுக்குள் மருகிய எல்லாவற்றையும் மொத்தமாக சொல்லத் துவங்கினார் மனோகர்.

ஆனால், அதுவே ரிஷியின் மேல் இப்போது சனாவுக்கு முளைத்திருக்கும் காதல் உணர்வை வேரோடு பிடுங்கப் போகின்றது என்று இருவருமே அறியவில்லை.

error: Content is protected !!