தொலைந்தேன் 28💜

eiJUG8422599

மனோகரின் வீட்டிலிருந்து வெளியேறி நடந்து வந்துக்கொண்டிருந்த சனாவின் முகம் சிவந்து இறுகிப் போயிருந்தது.

சிறிதுநேரத்திற்கு முன் மனோகர் சொன்ன விடயத்தை கேட்டதிலிருந்து உலகமே சூனியமான உணர்வு. விழிகளிலிருந்து கண்ணீர் வரவில்லை. ஏனோ ஏமாந்த உணர்வு.

தலை கிறுகிறுக்க, கால்கள் ஒருகணம் தள்ளாடியதில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை பிடித்துக்கொண்டாள் அவள். உள்ளுக்குள் உணரும் வலியில் நடக்கக் கூட தெம்பில்லாதது போல் தோன்றியது.

“ஏம்மா என்னாச்சு, உன்னைதான்ம்மா கேக்குறேன்.” அவள் பக்கத்திலிருந்த ஆட்டோ ஓட்டுனர் அவளின் நிலையைப் பார்த்து பதறியபடிக் கேட்க, “என்…என்னை என் வீட்டுல விடுறீங்களா?” என்று வார்த்தைகளைக் கோர்த்து எப்படியோ கேட்டு முடித்தாள் சனா.

அவரும் அடுத்தநிமிடம் அவளிருக்கும் இடத்தைக் கேட்டு அங்கு கொண்டு சென்று விட, பாக்கெட்டிலிருந்த பணத்தாளை பார்க்கக் கூட இல்லாமல் அவர் கையில் திணித்தவள், ஏதோ மந்திரித்து விட்டது போல் தன் வீட்டை நோக்கி நடக்க, அவள் கொடுத்த பணத்தின் மிகுதிக்காசை கொடுக்க பணத்தை எண்ணிவிட்டு நிமிர்ந்துப் பார்த்த ஓட்டுனர், “ஏம்மா பொண்ணு… ஏய்…” என்று கத்திக் குரல் கொடுத்தார்.

எதுவுமே அவள் காதில் விழவில்லை. வீட்டிற்குள் நுழைந்து கதவையறைந்து சாத்தி தரையில் அப்படியே அமர்ந்தவளுக்கு தன் தாயினதும் தங்கையினதும் முகங்கள் மனக்கண் முன் வந்துச் சென்றதது.

அது மனதின் ரணத்தை மேலும் அதிகரிக்க, நரம்புகள் புடைத்து பற்களைக் கடித்துக்கொண்டாள் சனா. சரியாக, ஆடு தானாக சிங்கத்தின் வாயிற்குள் தலையை விடுவது போல் ரிஷியிடமிருந்து அவளுக்கொரு அழைப்பு.

திரையை சில கணங்கள் வெறித்துப் பார்த்தவள், அழைப்பையேற்று காதில் வைத்து எதுவும் பேசாது அமைதியாக இருக்க, “ஹாய் சாணி, அது… அது வந்து… நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்…” என்றுவிட்டு நிறுத்தி, “சாணி…” என்று அவளின் பதிலைக் காணாது மீண்டும் அழைக்க, “ம்ம்…” என்றாள் அவள் தானிருப்பதை உணர்த்தும் விதமாக.

அதில் பெருமூச்சுவிட்டு, “அதான் சொன்னேன்ல, ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு. இன்னைக்கு ஈவினிங் வழக்கமா வர்ற இடத்துக்கு வரேன். நீ ரெடியா இரு. வெளில போகலாம்.” என்றுவிட்டு மீண்டும் மறுமுனையில் அவள் எதுவும் பேசாததில், “சாணி இருக்கியா?” என்று  ரிஷி கேட்க, “ம்ம்…” என்று மட்டும் சொன்னவள், அழைப்பை பட்டென்றுத் துண்டித்திருந்தாள்.

ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிதுநேரம் அவளின் அமைதிக்கான காரணம் புரியாது அலைப்பேசியில் தெரிந்த முகத்தை வெறித்துவிட்டு, மீண்டும் தன் யோசனையில் அவன் மூழ்க, சனாவோ தன் தாய் தங்கையின் படத்தை வெறிக்கத் துவங்கினாள்.

அன்று மாலை, அவன் வருவதற்கு முன்னரே சனா தயாராகி அவனின் அழைப்புக்காகக் காத்திருக்க, ரிஷி அழைத்ததுமே, “வந்துட்டியா?” என்று கேட்டாள் இறுகிய குரலில்.

“ஆமா நீ…” என்று அவன் தான் பேச வேண்டியதை பேசி முடிக்கவில்லை, அவன் ஆமாவென்றதில் பட்டென்று அழைப்பைத் துண்டித்து, விறுவிறுவென அவனை நோக்கிச் சென்றாள் சனா.

வழக்கம்போல் அவனுடைய கார் அதே இடத்தில் நிற்க, தானிருந்த யோசனையில் அவள் வந்ததை கூட உணராது ஸ்டீயரிங்கை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் ரிஷி. அவனின் கவனத்தை தன்னை நோக்கித் திருப்புவதற்காக கார்கண்ணாடியை அவள் தட்டியதுமே உணர்வுக்கு வந்தவன், வேகமாக கதவைத் திறந்தான்.

உள்ளே அவனின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தவளின் முகம் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது. எப்போதும் ரிஷி அழைத்தால் சனாவிடத்திலிருக்கும் கோபமோ சிறு முறைப்போ எதுவும் அவளிடமில்லை.

அதை உற்று கவனித்தவன், “என்னாச்சும்மா?” என்று கேட்டு அவளை கூர்ந்து நோக்க, “ஒன்னுஇல்லை, நீ போ!” என்றவள், வெளியே வெறிக்கத் துவங்க, ரிஷியும் தானிருக்கும் யோசனையில் அதை கண்டுக்கொள்ளவில்லை.

அவனுக்குள் பல சிந்தனைகள். கூடவே தான் சொல்லப்போகும் விடயத்தை நினைத்து பயமும்.

‘இதுக்குமேல மறைக்க கூடாது. என்னோட காதல்ல என்னைக்கும் ஒழிவு மறைவு இருக்கக் கூடாது. ஆனா… இது தெரிஞ்சா அவ என்ன ரியேக்ட் பண்ணுவா. என்னை வெறுத்துட்டா…’ என்று ஏதேதோ யோசித்து காரை செலுத்திக்கொண்டிருந்தவன், அவளின் முகத்தில் தெரியும் பாவனையை கவனிக்காமல்தான் போனான்.

அடுத்த சில நிமிடங்களில் ரிஷியின் பீச் ஹவுஸிற்கு இருவரும் வந்து சேர, “இது என்னோட குட்டி பேளஸ். அப்பப்போ தனியா இருக்கணும்னு தோனிச்சின்னா இங்க வந்துடுவேன். உன்கிட்ட பேச பெஸ்ட் ப்ளேஸ் இதுதான் தோனிச்சு.” என்றுக்கொண்டே அவனிறங்கி அவள் பக்கமிருந்த கார்கதவை திறக்க, காரிலிருந்து இறங்கியவள் சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டே முன்னே நடந்தாள்.

அவனும் அவள் பின்னே தயக்கத்தோடே செல்ல, கடலலைகள் பாதத்தைத் தொட்டுச் செல்லும் தூரத்தில் நின்றுக்கொண்டவள், அலைகளை வெறிக்கத் துவங்க, அவளருகில் வந்து நின்றவன், “நான் உன்கிட்ட பேசணும் சனா, ஆனா அதை நான் சொன்னதுக்கு அப்றம் நீ எப்ப… எப்படி நடந்துக்குவன்னு பயமா இருக்கு.” என்று திக்கித்திணறிச் சொல்ல, அவளெதுவும் பேசவில்லை.

பக்கவாட்டாகத் திரும்பி கூர்மையான பார்வைக்கொண்டு அவனை நோக்க, ‘இதற்குமேல் சொல்லாமல் இருந்தாலும் என் குற்றவுணர்ச்சியே என்னை கொன்றுவிடும்’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவன், எச்சிலை விழுங்கி “சின்னவயசுலயிருந்து நான் மேகாவ லவ் பண்ணேன். அத்தனை பெரிய துரோகத்தை பண்ணியும் இப்போவும் என்னால அவள முழுசா வெறுக்க முடியல. அந்தளவுக்கு அவள நான் காதலிச்சிருக்கேன். ஆனா, அவளால அத்தனை பெரிய வலிய அனுபவிச்சேன். அன்னைக்கு அவார்ட் ஃபங்ஷன் நடக்கும் போதுதான் என் காதல எரிச்சா. அதேநாள் உன்னோட வாழ்க்கையிலயும் உன் அம்மாவ இழந்த. இரண்டு பேருக்கும் வெவ்வேறு இழப்பு. ஆனா, ஒரே வலி.” என்று பேசிக்கொண்டுச் சென்றான்.

ஆனால், சனாவிடத்தில் எந்த எதிர்வினையும் இல்லை. அமைதியாக அவனை அழுத்தமாக அவள் பார்த்திருக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்… அது அன்னைக்கு நான் இருந்த மனநிலைய யாராலேயும் புரிஞ்சிக்க முடியாது. ஆனா, கண்டிப்பா அதே வலிய அனுபவிச்ச உன்னால முடியும். மேகாவ சித்தார்த் கூட சேர்த்து பார்த்ததும் எல்லாமே சூனியமானது மாதிரி ஆகிடுச்சு. எதையும் யோசிக்க முடியல. வண்டிய எடுத்துட்டு அழுதுக்கிட்டே போயிட்டேன். எதிர்ல வந்த எதையுமே உணர முடியல. அப்போதான்…” என்றுவிட்டு அவன் நிறுத்த, “அப்போதான்…” என்று இறுகிய குரலில் கேட்டாள் அவள்.

தரையை வெறித்தவன் அவளின் விழிகளை பார்க்கும் திராணி இல்லாமால், “அப்போதான் ஒரு ஆக்சிடன்ட். கண்டிப்பா அதை நா..நான் வேணும்னு பண்ணல. அந்தநேரம் நான் சுயநினைவுலயே இல்லை. மொத்தமா உடைஞ்சு போயிருந்தேன். கண் விழிச்சு பார்க்கும் போது மாமா சொன்ன விஷயம், என்னால இரண்டு பேர் இறந்துட்டாங்க. அது… அது…” என்று உண்மையை சொல்ல முடியாமல் திணற, “அது என் அம்மாவும் குட்டிம்மாவும்.” என்றாள் சனா சட்டென்று.

ஒருநிமிடம் ஆடிப்போய்விட்டான் ரிஷி. சனாவின் முகம் உணர்ச்சி துடைக்கப்பட்டிருந்தது. எங்கு தன்னவளை இழந்துவிடுவோமென்ற பயத்தில் அவளை பாய்ந்து அணைத்துக்கொண்டவன், “என்னை மன்னிச்சிடு சனா, நான் யாரையும் கொல்லல்ல. ஒருத்தர கொல்ற அளவுக்கு நான் மோசமானவன் கிடையாது. என்னை மீறி நடந்து போச்சு. நான் அப்போ நானாவே இல்லை. எங்க உன்னை இழந்துடுவேனோன்னு பயத்துல ஆரம்பத்துல சொல்லல்ல. ஆனா, என்னால இந்த குற்றவுணர்ச்சிய தாங்க முடியலடீ. உன்னை லவ் பண்றேன் சனாம்மா, எனக்கு நீ வேணும். என்னை மன்னிச்சிருடீ!” என்று உடைந்துப்போய் அழ ஆரம்பித்துவிட, அவனின் அணைப்பிலிருந்தவளோ சிலைபோல் நின்றிருந்தாள்.

அதுவும் சில நிமிடங்கள்தான். அவளுடைய கரங்கள் மேலெழுந்து அவன் முதுகை வருட, “விதிப்படிதானே எல்லாம் நடக்கும். நாம எதையும் மாத்த முடியாது. அவங்களோட சாவு அப்படிதான்னு இருந்திருக்கு. நீ இருந்த மனநிலைக்கு உன்னையும் குத்த சொல்ல முடியாது.” என்று சொன்னவாறு அவனை விட்டு விலகி அவன் முகத்தைப் பார்த்தவள், மெல்ல அவனை நெருங்கி அவனின் இதழில் இதழ் பதிக்க, ஒருகணம் ரிஷி அதிர்ச்சியில் உறைந்தேவிட்டான்.

அவளிதழிலிருந்து இதழைப் பிரித்து, “சனா…” என்று அவன் அதிர்ந்து அழைக்க, அவனை பேச விடாது மீண்டும் அவனிதழில் முத்தமிட்டு, “நடந்தது நடந்து போச்சு. உன்மேல கோபப்பட்டாலும் அவங்க உயிரோட வர போறது கிடையாது. இதை விட்டுடலாம்.” என்றவள் அவனை அணைத்துக்கொள்ள, ரிஷிக்கோ வார்த்தைகளே வரவில்லை.

ஏதேதோ யோசித்து பயந்துக்கொண்டிருந்தவன், தன்னவளின் இந்த எதிர்வினையை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. “அப்போ உனக்கு என்மேல எந்த கோபமும் இல்லையா? என்னை அடிக்கணும் திட்டணும்னு தோனல்லையா?” என்று ஆச்சரியத்தோடு ரிஷி கேட்க, அவனின் விழிநீரை துடைத்து கால்பெருவிரலை ஊன்றி சற்று எம்பி அவனின் விழிகளில் முத்தமிட்டவள், “இல்லை.” என்றாள் ஒற்றை வார்த்தையாக.

ரிஷியின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அவள் கோபப்படாதது தாண்டி அவனை அவள் நெருங்கி முத்தமிடுவது அவனுக்கு சிறகில்லாது பறப்பது போல் உணர்வை ஏற்படுத்தியது.

விழிகளை அழுந்த மூடித் திறந்தவன்,  “தேங்க் யூ சோ மச் ஸ்வீட்ஹார்ட், ஐ லவ் யூ. உன்னோட பாஸ்ட் லைஃப்ல நீ பட்ட கஷ்டத்தை மறக்குற அளவுக்கு உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன். என்ட் நீ உன் லவ்வ ஃபீல் பண்ற ரைட்? ” என்று சிரிக்கும்  விழிகளோடு அவன் கேட்க, வரவழைக்கப்பட்ட புன்னகை புரிந்தவாறு அவனின் கன்னத்தோடு தன் கன்னத்தை உரசியவள், அவனை இறுக அணைத்து அவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

அவனை மேலும் யோசிக்கவிடவில்லை அவள்.

வேகமாக ஓடி வந்த கடலலைகளின் துளிகள் இருவர் மேலும் விழுந்து ஒருவித பரவசத்தை உண்டாக்க, கூடவே இருவரின் நெருக்கம் இருவரின் உணர்ச்சிகளை தாறுமாறாக பெருக்கியது. “லவ் யூ…” ஹஸ்கி குரலில் சொன்னவாறு அவளிதழில் அழுந்த முத்தமிட்டு அவளின் கழுத்து வளைவில் புதைந்துக்கொண்ட ரிஷி ஏனோ அவளின் விழிகளை இருந்த சந்தோஷத்தில் கவனிக்காமல்தான் போனான்.

அவளும் அவனுக்கு இசைந்துக்கொடுத்து மேலும் நெருங்க, மாலை மங்கும் நேரமும் குளிரும் அவனுக்கு மயக்கத்தைக் கொடுத்து கட்டுப்பாட்டை இழக்கச் செய்தது. அளவுகடந்த சந்தோஷம் வேறெதையும் அவனை யோசிக்கவிடவில்லை.

தன்னவளின் கழுத்தில் முத்தமிட்டவாறு அவளை கைகளில் ஏந்திக்கொண்டவன், அப்படியே அவளை தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கிச் செல்ல, விழிகளை மூடி அவனின் நெஞ்சுக்கூட்டில் புதைந்திருந்தாள் சனா.

ஒரு காலால் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டவன், மஞ்சத்தில் அவளை வீழ்த்தி அவள்மேல் படர, தன் கழுத்து வளைவில் அவனின் மீசை முடி உரசல் சிலிர்ப்பை ஏற்படுத்தினாலும் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கும் நெருப்பு அவளை அமைதியடையச் செய்யவில்லை. விழியிலிருந்து கண்ணீர் அவளின் காது நோக்கி வழிய, சனாவோ உணர்வுகளை அடக்கி விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள்.

ரிஷி எதையும் உணரும் நிலையிலில்லை. அளவுக்கதிகமான காதல் அவளை விட்டு விலக விடவில்லை. மீண்டும் மீண்டும் அவன் அவளை நாட, அவன்மேல் அவளுக்குள் இருக்கும் காதல் கோபத்தை பிடித்து வைக்க விடவில்லை. ஒருகட்டத்தில் கோபம் மறந்து சனாவும் அவனின் தேடலை நிவர்த்தி செய்ய, தவறுகள் கூட சரியென தோன்றியது இருவருக்கும்.

பல மணித்தியாலங்கள் கழித்து அவளை விட்டு விலகிப் படுத்த ரிஷி, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவாறு பக்கவாட்டாகத் திரும்பி அவளை காதலாகப் பார்க்க, அவளோ விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்.

மீண்டும் அவள்புறம் சென்றவன், “தப்பு பண்ணிட்டோமா சாணி?” என்று உதட்டைப் பிதுக்கிக் கேட்டு, “அதான் சீக்கிரம் கல்யாணம் பண்ண போறோமே, சோ நோ ப்ரோப்ளம். நாளைக்கே நம்ம கல்யாணத்துக்கான வேலைய ஆரம்பிச்சிடலாம். ஆனா ஒன்னு, நீ இப்போ வரைக்கும் வார்த்தையால உன் காதல சொல்லல்ல. ப்ளீஸ் ஒருதடவை சொல்லு சாணி!” என்று காதலாகச் சொல்லி அவளை ஆர்வமாகப் பார்த்தான்.

சிலகணங்கள் அமைதியாக இருந்தவள், விழிகளை மட்டும் அவன்புறம் திருப்பி “எதை சொல்லணும்?” எதுவும் தெரியாதது போல் கேட்க, “அதான் உன்னோட லவ்.” என்ற ரிஷி, “லவ்வா? யாருக்கு யார்மேல லவ், நான் உன்னை லவ் பண்றேன்னு எப்போ சொன்னேன்?” என்ற தன்னவளின் பதிலில் ஒருகணம் சிலையாக சமைந்தான்.

அதுவும் ஒருகணம்தான். கேலியாகச் சிரித்தவாறு, “என்னடீ இத்தனைநாள் உன்னை டோர்ச்சர் பண்ணதுக்கு என்னை டீஸ் பண்றியா? கொன்னுடுவேன் உன்னை!” என்று செல்லமாக மிரட்டிவிட்டு, “ப்ளீஸ்டீ ஸ்வீட்ஹார்ட், ஆசையா இருக்கு.” என்று கிட்டதட்ட கெஞ்சவே ஆரம்பிக்க, அவனை விட்டு விலகி தன் கலைந்திருந்த ஆடைகளை சரிசெய்தவாறு, “நான் உண்மையாதான் கேக்குறேன், ரிஷி வேதாந்த். நான் எப்போ சொன்னேன், உன்னை காதலிக்கிறேன்னு. என் அம்மாவ கொன்னவன நான் காதலிப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம்?” என்று வன்மமாக சனா கேட்க, ரிஷிக்கு தலையே சுற்றிவிட்டது.

“சனா… சனா நீ விளையாடுற ரைட்? ஏன் இப்..இப்படியெல்லாம் பேசுறம்மா?” நடப்பதை நம்ப முடியாது  அவளை நோக்கிச் சென்ற ரிஷி, அவளின் கன்னத்தைத் தாங்கி அழுகையை அடக்கிய குரலில் பதறியபடிக் கேட்க, அவனின் மார்பில் கை வைத்து கோபமாக தள்ளிவிட்டவள், “எத்தனை பெரிய ஏமாத்துக்காரன் நீ, கொலைகாரன். என் வாழ்க்கைய அழிச்சிட்டியேடா!” என்று ஆக்ரோஷமாகக் கத்த, திடுக்கிட்டான் அவன்.

‘நானா? நான் ஏமாத்துக்காரனா?’ தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டவாறு, “கண்டிப்பா இல்லை சனா, நான் உன்னை ஏமாத்தல. என் காதல்ல ரகசியம் இருக்கக் கூடாதுன்னுதான் இன்னைக்கு உண்மைய சொன்னேன். நான் நிறைய லவ் பண்றேன்டீ உன்னை. என்னை புரிஞ்சிக்க! என்னை விட்டு மட்டும் போயிடாத!” என்று அவளிடம் கிட்டதட்ட கெஞ்ச, அவளோ விரக்தியாகப் புன்னகைத்தாள்.

“நீ சொல்றதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும். அவ்வளவு யோகியமானவன்னா அப்போவே போய் போலிஸ்ல சரண்டர் ஆக வேண்டியதுதானே! எல்லாம் பணம் பணம்! ஈஸியா தப்பிச்சிட்ட. அதான் நான் தண்டனை கொடுக்க நினைச்சேன். அதான் உன் கூட இருந்தேன். நான் அனுபவிச்ச அந்த வலிய நீ அனுபவிக்கணும்.” என்று அத்தனை கோபத்தோடு வார்த்தைகளை விட்டவள், “இனி அனுபவிப்ப.” என்றுவிட்டு விஷமமாகச் சிரித்தாள்.

ரிஷிக்கு செத்தேவிடலாமா என்று தோன்றியது. “சனா…” என்று அதிர்ந்து அழைத்தவனுக்கு அப்போதுதான் தான் கவனிக்காத அவளின் உயிரில்லா பார்வை ஞாபகத்திற்கு வந்தது.

அவள் பல தடவை உதறிவிட்டும் அவளின் கரத்தை இறுகப் பற்றி, “என்னை மன்னிக்கவே மாட்டியா?” விழிகளிலிருந்து விழிநீர் தரையில் சொட்ட, கிட்டதட்ட அவன் கெஞ்ச, ஏனோ காதல் கொண்ட மனம் அவனின் வலி நிறைந்த பார்வையிலும் முகத்திலும் சற்று அசைந்தது.

ஆனால், அந்த வலியை உள்ளுக்குள் மூடி மறைத்தவள், “நீ பண்ண தப்புக்கு பிரயாச்சித்தம் பண்ணணும்னு நினைச்சா இனி என் முன்னாடி வராத!” என்று அவனை உதறித் தள்ளிவிட்டு முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கியவாறு விறுவிறுவென வெளியேற, போகும் அவளை பார்த்திருந்தவனுக்கு அன்று மேக்னாவின் காதலில் அனுபவித்த அதே வலி சனாவிடத்தில்.

இதயத்தை கசக்கிப் பிழியும் வலி அது. அந்த வலியை தாங்க முடியாது அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன், “நீயும் ஏன்டீ என்னை விட்டு போன? தப்பு பண்ணேன்தான். ஆனா, நான் வேணும்னு பண்ணலடீ. என்னை மீறி எல்லாம் நடந்து போச்சு. அன்னைக்கு அவ என்னை விட்டு போன மாதிரி நீயும் என்னை விட்டுட்டல்ல! தாங்க முடியலம்மா என்னால!” என்று ஏங்கி ஏங்கி அவன் அழ, வீட்டிற்கு வந்த சனாவும் தன்னை மீறி ஓவென்று அழத் துவங்கிவிட்டாள்.

அவளும் அவனை காதலிக்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால், தன் காதலை சொல்லும் முன் அது வேரோடு பிடுங்கி எறியப்படுமென்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.

“ஏன்டா இப்படி பண்ண, அது நீயா மட்டும் இல்லைன்னா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். என் சந்தோஷத்தை அழிச்சவன் நீயா போயிட்டியே! என்னை ஏமாத்திட்டியே! உன்னை நானே கஷ்டப்படுத்திட்டேனே!” என்று கதறியவளின் பார்வை தன் தாயின் படத்தின் மீது படிய, ரிஷி அனுபவிக்கும் அதே காதல் வலியை முதல்தடவை உணர  ஆரம்பித்தாள் சனா.