தோளொன்று தேளானது (நிறைவு) 27(ஆ)

WhatsApp Image 2021-11-03 at 10.27.30 PM-3d34c7f4

தோளொன்று தேளானது! 27B (நிறைவு)

       

          மாப்பிள்ளை, வீட்டிற்கு வந்த பிறகுதான் மற்றவர்களுக்கு குறிப்பாக ஷ்யாம் சுமித்ரா இருவருக்கும் மாப்பிள்ளை யாரென்பது பற்றிய விசயம் தெரிய வந்திருந்தது.

          ப்ருத்வி வீட்டிற்குள் வந்ததும் ஓடிச் சென்று கட்டிக் கொண்ட ஷ்யாம், “பித்துவீப்பா…” என்றபடியே முத்தமாரி பொழிந்திருந்தான். “எங்க போன என்னையும் மீயையும் வித்துத்து? இனி இப்தி சொல்லாமப் போனா அவ்ளோதான்.” பாசமாக மிரட்டியவனைக் கண்ட ப்ருத்விக்கு புதிர்கள் குவிந்திருந்தது.

          மேடிட்ட வயிரோடு வந்த சுமியைக் கண்டதும், மேலும் விழி பிதுங்கினான்.

          ஜேப்பி ப்ருத்வியை தனியாக அழைத்துச் சென்று அனைத்தையும், அதாவது அவனுக்கும் சுமிக்குமான திருமணச் செய்தி, அதன்பின் நடந்த அவன் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை மட்டும் உரைத்தான்.

          பூஜாவை அவன் கல்லூரியில் படிக்கும் காலந்தொட்டே தெரியும் என்பதால், சாதாரணப் பேச்சுகள் இயல்பாகத் தொடர்ந்தது.

          ப்ருத்வியின் குடும்பத்து உறுப்பினர்களாக ஜேப்பி குடும்பத்தாரும், பூஜாவின் குடும்ப உறுப்பினர்களாக கார்த்திக் குடும்பத்தாரும் இருந்து, வேதாவை அழைத்து அவரின் முன்னிலையில் ப்ருத்வி, பூஜாவின் திருமணத்தை நடத்தியிருந்தார் மீனாட்சி.

          தயக்கத்தோடும், பரிதவிப்போடும் அதுவரை இருந்த மயூரிக்கு பழைய மகிழ்ச்சி திரும்பியிருந்தது.

          சுமிக்கு, நண்பனைத் தனித்து விட்டுவிட்டு தனியே தான் குடும்பமாக வாழத் துவங்கியது சற்றே வேதனையைத் தந்திருந்தது.  அது ப்ருத்வி பூஜாவின் திருமணத்தால் மாறியிருந்தது.

          யாரும் கூறாமலேயே ப்ருத்வியை பித்துவீப்பா என்றழைத்த ஷ்யாம், ப்ருத்வியின் திருமணத்திற்குப் பிறகு பூஜாவை, “பூஜாமா” என்றழைக்கப் பழகிக் கொண்டான்.

          ப்ருத்வி, வேதாவிற்கு இடையே சொல்லப்படாத ஏதோ உணர்வுகள் தோன்றி மறைந்தாலும், இருவருக்கும் அது எதனால் என்பது தெரியாமலேயே இருந்தது.

          ப்ருத்வி, வேதாவின் அண்ணன் பேரன் என்பது தெரிய வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது.  ஏனெனில் ப்ருத்வி அவன் அம்மாவின் சாயலில் இருந்தான்.

          காலத்தின் கட்டாயம் எப்படியோ, அப்படி அவர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளவோ, அல்லது அறியாமலேயே வாழ்வினைக் கடக்கக் கூடிய நிலை உண்டாகலாம்.

          தன்னை அடைத்து வைத்திருந்த காலத்தில் கொடுக்கப்பட்டிருந்த பச்சிலை மருந்தின் உபாயத்தால் சில விசயங்கள் கனவுபோலவே தோன்றியது ப்ருத்விக்கு. அதனால் எதனையும் தோண்டித் துருவ எண்ணாமல் கடந்து சென்றான் ப்ருத்வி.

          திருமணத்திற்கு வந்திருந்த சாந்தனைக் கண்ட ஷ்யாம், சுமியிடம் ஆட்டோவில் அடிபட்டிருந்த சமயம் அவனைத் தான் சந்தித்தது, ஆட்டோ ஓட்டுநரான ஸ்ரீயிடம் சாந்தன் பணம் கொடுத்த செய்தி அனைத்தையும் ஒப்புவித்திருந்தான்.

          எதிர்பாரா விபத்து என்று எண்ணியிருந்தது அப்படியல்ல என்பது தெரிய வந்ததும், பத்திரகாளியாக மாறியிருந்தாள் சுமி.

          திருமண வேலைகளில் பிஸியாக இருந்த ஜேப்பி, இயல்புக்குத் திரும்பும்வரை காத்திருந்தாள் அவனின் பத்தினி சுமி.

          தனித்து மாட்டிய வேளையில், தாளித்து எடுத்திருந்தாள் ஜேப்பியை சுமி.

          “புள்ளைய வந்து கூட்டிட்டுப் போயிருந்திருக்கலாம். காசு குடுத்து வண்டிய ஆக்சிடெண்ட் பண்ணியிருக்கன்னா, நீ எப்டிப்பட்ட மோசமான ஆளா இருக்கணும்?

          கடவுளே…!

உன்னை அப்பானு சொல்லி போட்டோவைக்கூடக் காட்டாம வளத்ததுக்கு, இந்த ஷ்யாம் வளந்து நிக்கற விதத்தைப் பாத்தாலே பயமாருக்கு! 

இதுல நீ போட்ட விதையில உம் பக்கத்திலயே இருந்து வளர்ற…” தனது வயிற்றில் இருக்கும் குழந்தையைக் காட்டிப் பேசியவள், “இது! என்னல்லாம் பண்ணக் காத்திருக்கோ தெரியலையே!” புலம்பலோடு, “இவ்ளோதானா? இல்லே… இன்னும் என்ன அட்டகாசமெல்லாம் பண்ணிட்டு வந்து நல்லவன் வேசம் போட்டுட்டுத் தெரியற!  முதல்ல உன்னோட தொழில்முறைகள் என்னன்ன?

அதில் உன்னோட பங்கு என்ன அப்டிங்கற எல்லா டீட்டைலும் இன்னும் ரெண்டே நாள்ல எனக்கு வந்தாகணும்.  இல்லை… மவனே உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” கணவனை கேள்வியால் திணறச் செய்திருந்தாள் சுமித்ரா.

          மனைவியின் உக்கிர தாண்டவத்தைத் தணிக்க, அவளின் பேச்சைக் கேட்டு சினமாகாமல் அருகே சென்றவன், “என்னடீ ஆயிருச்சுன்னு இந்தக் கத்து கத்துற?  குழந்தை பயந்திராது?” என்றதுமே,

சட்டென வாயை மூடிக்கொண்டு ஒரு கனம் யோசித்தவளை, பின்னோடு சென்ற அணைத்துக் கொண்டவன், “உனக்காக நிறைய மாறிட்டேன்.  இன்னும் மாறினா, புலி வாலைப் புடிச்சிருக்கற என்னோட உசிரு அதாலயே போயிரும். பரவாயில்லையா?” என்று கேட்டான்.

அவளின் அமைதியை அவனுக்கு ஏற்றவகையில் பயன்படுத்திக் கொண்டான் ஜேப்பி.

அவள் கேட்ட இரண்டு தினங்கள் கழித்து அனைத்தையும் அவளின் பார்வைக்கு கொண்டு வந்தவன் இளநகையோடு, “இதுதான் என்னோட மொத்த சாம்ராஜ்யம்.  முன்ன மாதிரியில்லாம உன்னைக் கல்யாணம் பண்ணதுக்குப் பின்ன நிறைய மாத்தியிருக்கேன். மாறியும் இருக்கேன். சிலது மாத்த டைம் வேணும். புரிஞ்சிக்கோ!” என்றிருந்தான் ஜேப்பி.

          “நீ பண்ற அநியாயத்தைக்கூட ரொமான்ஸ் பண்ற மாதிரி முகத்தை வச்சிட்டு எங்கிட்ட வந்து சொல்ற பாரு.  அங்க ஏமாத்துறடா!” என்றவள் சளைக்காமல் அடுத்து ஜேப்பியை ஒவ்வொன்றாக விசாரிக்கத் துவங்க,

“உனக்குத் தெரியாம எதுவுமே என் லைஃப்ல இல்லை சுமி.  என்னோட லேப் பாஸ்வேர்டு குடுத்திட்டேன்.  அதையும் நீதான் கன்ட்ரோல்ல வச்சிருக்க! அதுல இல்லாத எதையும் நான் பண்ண மாட்டேன்.  நம்புடீ!” கொஞ்சிக் கெஞ்சி தாஜா செய்தான் மனைவியை.

          எஸ்ப்பி அளவிற்கு அடுத்தவர்களை வஞ்சிக்க எண்ணாதபோதும், சில விசயங்களில் அப்படி இருந்தால்தான் தொழில் செய்ய இயலும் என்கிற நிலையை மனைவியிடம் எடுத்துக் கூறினான் ஜேப்பி.

          புரிந்து கொண்டாலும் கணவனைக் கண்டிக்கவே செய்தாள் சுமித்ரா.

          “அந்த மனுசன் சிவபிரகாசம் என்னைப் பாத்துப் பயந்தா, இவளைப் பாத்து நான் பயப்படற நிலைக்கு என்னைக் கொண்டு வந்திட்டாளே!” என்றவனிடம்,

“இப்டியெல்லாம் டயலாக் விட்டா உன்னைக் கேக்க மாட்டேன்னு நினைச்சியா?” விடாமல் அனைத்து விசயங்களிலும் தனது ஆளுமையைத் திணித்தாள் சுமி.

***

எபிலாக்…

ஓராண்டு கழித்து…

ஜேப்பிக்கு மதன் பிரகாஷ் எனும் மகன் பிறந்து முதலமாண்டு பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடினர்.

அனைவருக்கும் அழைப்பு சென்றிருக்க, மல்லிபட்டினத்தில் இருந்த அரண்மனை போன்ற அந்தக் கட்டிடத்தில் திருச்சியில் இருந்தும், சென்னையில் இருந்தும் உறவினர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.

ஷ்யாம் தற்போது நன்றாக தெளிவாகப் பேசப் பழகியிருந்தான்.  சுமியுடன் இருப்பதைக் காட்டிலும் ஜேப்பியுடன் இருப்பதையே விரும்புபவனை, சுமி வலுக்கட்டாயமாக தன்னோடு இருத்திக் கொள்வதை வழக்கமாக்கியிருந்தாள்.

எஸ்ப்பி இன்னும் உயிருடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி திருச்சியில்தான் இருக்கிறார்.  அவ்வப்போது சென்று ஜேப்பி தனது குடும்பத்தோடு சென்று பார்த்து வருவதை வாடிக்கையாக்கியிருந்தான்.

மீனாட்சி பாட்டி மனம் இளகவே இல்லை.  மல்லிபட்டினத்தில் ஜேப்பியின் குடும்பத்துடன் தங்கிக் கொண்டார்.

கார்த்திக் குடும்பம் சென்னையில் வசித்தது. 

பூஜாவும் ப்ருத்வியும் பங்களூரில் வசித்து வந்தனர்.  அவ்வப்போது இருவரும் மல்லிபட்டினம் வந்து சென்றார்கள்.  பூஜா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்க, அடுத்து வரக்கூடிய நல்ல நாளில் வளைகாப்பு வைபவம் வைக்க ஏற்பாடு செய்தனர்.

வேதா மகதீரா பூஜாவின் திருமணத்திற்கு வந்ததோடு, “இந்த மாதிரியான ஃபங்சன்ஸ்கு வரக்கூடிய தகுதி எனக்கு இல்லை.  நீங்கள்லாம் ரொம்ப வற்புறுத்திக் கூப்டதால வந்தேன்.  யாருக்கும் கஷ்டம் என்னால வந்திரக்கூடாது” என்றவர், அதன்பின் பொதுவான இடங்களில் பூஜாவை சந்திக்கும்படியான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டார்.

வளைகாப்பிற்கு வரும்படி மிகவும் மீனாட்சி வற்புறுத்த, “நீங்களே பண்ணுங்க மீனா.  நான் எதுக்கு?” என்றவரை வலுக்கட்டாயமாக அழைத்ததை ஏற்று, அரைமனதாக வர ஒப்புக் கொண்டார்.

          பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்த ஜேப்பியின் பெற்றோர் மற்றும் அவனது பெரியப்பா குடும்பத்து உறுப்பினர்கள் பூஜாவைக் கண்டு சுதாமதியின் நினைவில், “இது யாரு?  நம்ம சுதா மாதிரியே இருக்கு!” மீனாட்சியிடம் வந்து விசாரித்தார்கள்.

          விசயத்தை மறைக்காமல், “சுதா மகதான்” என்றதும், வந்திருந்த அனைவரும் அவர்களுக்குள்ளாகவே, “மாமாவுக்கு முடியாமப் போனதும், அவரைப் பாக்காம விட்டுட்டு வந்ததும் இல்லாமல், யாரெல்லாம் அவரு கண்டிச்சு ஒதுக்கி வச்சாரோ, அவங்களோட உறவை வளத்துட்டு திரியறாங்க இந்த அத்தை.  நல்லாத்தானே இருந்தாங்க.  வயசானதுல எதுவும் ஆகிருச்சோ” தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

          அனைத்தும் அறிந்தாலும், யாருக்கும் அழைத்து விளக்கம் கூற அங்கிருந்தவர்கள் முயற்சிக்கவில்லை.

          ஜேப்பியின் வளர்ச்சியில், அவனது திட்டமிடலில் எஸ்ப்பியைக் கண்டாலும், அதனைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ள முடியாத நிலையில் இருந்தனர் வந்த உறவினர்கள்.

அனைத்தையும் புரிந்து வைத்திருந்த மீனாட்சி ஜேப்பியை அழைத்து, “இனி இவங்களையெல்லாம் நம்ம வீட்டு ஃபங்சன் எதுக்கும் கூப்பிடாதே.  எல்லாம் வயிறெரியற கூட்டமா இருக்கு.” பேரனிடம் மறைக்காமல் பகிர்ந்து கொண்டிருந்தார்.

யாருக்கும் அஞ்சாதவன், மனைவி சுமித்ராவின் கெடுபிடியான கேள்விகளுக்கு மட்டுமே தயக்கம் கொள்கிறான்.

அவன் தொழில்துறையில் சிறந்து விளங்க உறுதுணையாக சுமித்ரா இருப்பதுபோல, அவன் தவறான வழியில் செல்வதை கண்டித்து நல்வழிப்படுத்துவதிலும் அவளின் பங்கு மகத்தானது.

குழந்தைகளை கவனிப்பதிலும், வீட்டைப் பராமரிப்பதிலும் அவளுக்கு நிகர் அவளே.

சூம் நிறுவனத்தை மனைவியின் கட்டுப்பாட்டில் முழுமையாக ஒப்படைத்திருந்தான் ஜேப்பி. அப்போதும் அனைத்தையும் மறைக்காது அவளிடம் பகிர்ந்து கொண்டிருந்தான். 

அவளாக கண்டுபிடித்துக் கேட்பதற்குமுன் ஜேப்பியாக முந்திக்கொள்ள, “உன்னைப் போயி நல்லவன்னு நினைச்சி காதலிச்ச என்னைச் சொல்லணும்” அப்போதும் சலித்துக் கொண்டவளை தனது இதமான அணைப்பால் சரி கட்டினான் ஜேப்பி.

எஸ்ப்பியின் சாம்ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் அசாதாரணமாகக் கொண்டு வந்தவன், சுமித்ரா எனும் அன்புக்கடலின் கட்டுப்பாட்டிற்குள் வாழப் பழக்கிக் கொண்டான் தன்னை.

வீட்டிற்குள் அடங்கியிருப்பவன், தொழில் முறையில் வேறு பண்பேற்றத்தில் மிளிருவதை அறிந்தாலும், அறியாததுபோல சுமித்ரா வாழப் பழகிக் கொண்டாள்.

சுமியின் அன்பு செய்த மாயம்… அவனை ஆட்கொண்டதால் தன்னை மாற்றிக் கொண்டிருந்தான் ஜேப்பி.

வழி மாறினால் மனைவியே தேளாகும் வாய்ப்பிருப்பதால், வழிமாறிடாது வாழ தன்னைப் பழக்கிக் கொண்டான் ஜேப்பி.

உங்கள் ஷ்யாமின் ஓராண்டுக்கு முந்தைய குரலில், “தோளொந்து தேளானது கதை பதிச்ச உங்க எல்லாதுக்கும் அன்பின் நன்திகள்!”

*** தோளொன்று தேளானது நிறைவுற்றது ***