TT copy-bcabb9f4

தோளொன்று தேளானது முன்னோட்டம்

தோளொன்று தேளானது!

டீசர்

“சொல்லு ப்ருத்வி!” தன்னை சொல்லுமாறு கூறிக்கொண்டு எதிரில் பதற்றம் மறைத்து நின்றவனை யோசனையோடு, ஆராய்ந்தான் ப்ருத்வி என அழைக்கப்பட்டவன்.

வளமையும், இளமையும் கொட்டிக் கிடந்ததோடு, ஆஜானுபாகுவான தோற்றம், மேலும் ஜேப்பியை மெருகூட்டிக் காட்டிட, கந்தர்வனை மிஞ்சும் ஆகர்சனம், அவனது தோற்றத்தில் மிளிர்ந்தது.

அதற்காக ப்ருத்வி அம்மாஞ்சியாக இருந்தான் என்று அர்த்தமில்லை.  அவனும் ஜேப்பிக்கு நிகராக இருந்தான். அதுதான் ஜேப்பியின் நிம்மதியைக் குழி தோண்டிப் பறித்திருந்தது.

‘இவனுக்கு இப்ப என்ன வேணுமாம்.  எதுக்கு வந்ததும், வராததுமா கூப்பிட்டுவிட்டு, தேவையில்லாத கேள்வியெல்லாம் கேக்குறான்’ என்பதாக ப்ருத்வியின் எண்ணம் இருந்தது.

ஆகையினால், “என்ன சொல்லணும்னு எதிர்பாக்கற ஜேப்பி” நிதானமாய் வார்த்தைகளை வெளியிட்டான் ப்ருத்வி.

முதலாளி, தொழிலாளி பாகுபாடின்றி, வயது வித்தியாசமின்றி, அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கும், தற்கால நாகரிகம் அவ்வலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்டது.

“சுமீய்ய உனக்கு எப்டித் தெரியும்? எவ்வளவு நாள் பழக்கம் உங்களுக்குள்ள!” அதில் நீ பதில் கூறியே ஆகவேண்டும், என்கிற வற்புறுத்தல் ஒளிந்து கிடந்தது.

“அது எதுக்கு உனக்கு ஜேப்பி!” பதில் கூறும் விருப்பம் தனக்கில்லை என்பதை தனது வார்த்தைகளின் மூலம் மெய்ப்பித்தான் ப்ருத்வி.

“உங்களுக்குள்ள லவ்வா, க்ரஷ்ஷா, இல்லை வேற எதுவுமா?” விடாமல் தனது கேள்வியை மாற்றிக் கேட்டான் ஜேப்பி.

ப்ருத்வி, தானும் சுமித்ராவும் நண்பர்கள்தான் என்று கூறினாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஜேப்பி தற்போது இல்லை.

“எதுவா இருந்தாலும், அது எங்க பர்சனல். அதனால இதுபோல இனி எங்கிட்ட எதுவும் கேக்காத ஜேப்பி. இந்த ஆபீஸ் சம்பந்தமான எந்த கேள்வினாலும் இனி கூப்பிட்டுக் கேளு.  பதில் சொல்லுறேன். சீட்ல தலைக்குமேல வேலை கிடக்கு.  இப்ப நான் கிளம்பறேன்” தாமதிக்காது, எழுந்து சென்று அவனது இருப்பிடத்தில் அமர்ந்தவன், தனது வேலையில் கவனம் செலுத்தத் துவங்கியிருந்தான் ப்ருத்வி.

தட்டிக் கொடுத்து, தோழனைப்போல வேலை வாங்கிப் பழகிய காரணத்தைக் கொண்டே, இன்று இத்தனை உரிமையாக ப்ருத்வியிடம் கேட்க முனைந்திருந்தான் ஜேப்பி.

ப்ருத்வியின் செயலில் கோபமாக வந்தது.  ஆனால் சொல்ல மாட்டேன் என சாதிப்பவனை என்ன செய்ய முடியும்?  ஆரம்பத்தில் இருவரின் பரிபாசனைகளைக் கண்டு, மனம் சொல்லொணாத் துயருற்றிருந்தான் ஜேப்பி. நாள்கள் செல்லச் செல்ல அதனை காணச் சகிக்காதவன், இன்றுதான் அழைத்துக் கேட்டுவிட்டான்.

ப்ருத்வி இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து, ஒரு மாதம் கடந்திருந்தது.  சுமீ என்று ஜேப்பியால் அழைக்கப்பட்டவள், கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்குதான் பணியில் இருக்கிறாள்.

இதுவரை தனது கவனத்தில் சுமித்ரா வந்தாலும், அவளா? தானா? எனும் அகங்கார நிலையில், தான்தான் என தனக்குத்தானே நிரூபித்து வந்திருந்தான். ஆனால் ப்ருத்வி வந்தது முதலே, ஜேப்பியை உசுப்பேற்றி, அவனை ஒன்றிற்கும் உதவாதவனாக்கி, மன அழுத்தத்தையும், பரிதவிப்பையும், ஏதோ இனம் புரியாத உணர்வையும் அவனுக்குப் பரிசாகத் தந்து, அவளின் நினைவுகளில் ஜேப்பியை முழுகச் செய்திருந்தாள். 

இதைப்பற்றி எதுவும் தெரியாமலேயே, தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த சீட்டில், தனது பணியில் மூழ்கிப் போயிருக்கிறாள் சுமித்ரா.

சுமித்ராவிற்கு ஜேப்பியின் மனதைப் பற்றி, இன்றுவரை ஒன்றுமே தெரியாது.  சுமித்ரா அவளுண்டு, அவள் வேலையுண்டு என்றிருப்பவள். தன்னைப் பற்றி எண்ணியே ஒருவன் அவனுக்குள் புழுங்கிக் களைக்கிறான் என்று தெரியாமலேயே அங்கு பணிபுரிகிறாள்.

ஆனால் ஜேக்கேவைவிட, ஜேப்பியை சுமித்ராவிற்கு அதிகம் பிடிக்கும்.  உண்மையில் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள இதுவரை அவள் மெனக்கெடவில்லை. அதற்குமேல் அவள் அதைப்பற்றி யோசித்ததும் இல்லை.

***

ஜேப்பி, ஜேக்கே இருவரின் தலைமையில், ஜேஜே பில்டர்ஸின் அலுவலர்கள் சந்திப்பு, அறிவித்த நேரத்தில் துவங்கியிருந்தது.

மீட்டிங் ஹாலில், ஆண்கள், பெண்கள் என அனைவரும் குழுமியிருக்க, அனைவரையும் வரவேற்று, முகமன் கூறி, அனைத்து சந்திப்புகளின் முக்கியமான பொது நிகழ்ச்சிகளுக்குப்பின், ஜேப்பி பேசத் துவங்கினான்.

“இதுக்கு முன்ன நீங்க கொடுத்த சப்போர்ட்னால, ஈசிஆர்ல ஸ்டார்ட் பண்ண வர்க் முடியப்போற நிலையில இருக்கு.  இது உங்க எல்லாருடைய ஒத்துழைப்பாலதான் சாத்தியமானது. அந்த வர்க் முடிஞ்சு ஹேண்டோவர் பண்ணதும், அதுக்கான பெனிஃபிட்ஸ் அண்ட் எக்சட்ரா சீக்கிரத்துல உங்களுக்கு அனௌன்ஸ் பண்ணிருவோம் க்கைஸ்” என்றதுமே, அனைவரும் கரவோசையை எழுப்பிட, சற்றுநேரம் புன்முறுவல் மாறாது தானும் கைதட்டியவாறு அமைதி காத்து நின்றான் ஜேப்பி.

சுமித்ராவும் அதே அறையில்தான் அமர்ந்திருந்தாள்.  ஆனால் அவள் இருக்கும் பக்கம் பார்க்காமலேயே பேசினான் ஜேப்பி.  கண்டும் , காணாததுபோல காதல் வளர்த்து, அதனை ஆராதிக்கவும் முடியாமல், தனது மனதில் இருந்து அகற்றவும் முடியாமல் கண்ணாமூச்சி ஆட்டம் அவன் மட்டுமே ஆடிக் களைக்கிறான்.

கரவோசை நின்றபின், “அடுத்து நீலாங்கரை புராஜெக்ட்ல, ஆர்க்கிடெக்ட்ஸ் உங்க டிசைன்ஸ் எல்லாம் இன்னிக்கு ஈவினிங் பிஃபோர் செவனுக்குள்ள என்னோட மெயிலுக்கு அனுப்பிருங்க.  நானும் ஜேக்கேயும் அதைப் பாத்து ஃபைனலைஸ் பண்ண பின்ன, நெக்ஸ்ட் மீட் வச்சிக்கலாம்.  வேற எதுவும் அதுல டவுட் இருந்தா, எப்பக் கூப்பிட்டாலும், வந்து கிளாரிஃபை பண்ணணும் க்கைஸ். ரெடியா இருந்துக்கங்க” ஜேப்பி

“செங்கல்பட்டு பக்கமா வரயிருக்கற, வில்லா டைப் டிசைனுக்கு எலிவேசன் ரெடியாகிருச்சா” இடையில் குறுக்கிட்ட ஜேக்கே, பில்டிங் டிசைன் செய்பவர்களை நோக்கிக் கேட்டான்.

அதில் சீனியன் டிசைனர் எழுந்து, “ஒன் மோர் வீக் டைம் எக்டெண்ட் பண்ணா இன்னும் நல்லாயிருக்கும் ஜேக்கே” பணிவோடு வேண்டினான்.

இதற்கு இடையில் குறுக்கிட்டுப் பேசத் துவங்கிய ஜேப்பியை நோக்கி அனைவரது பார்வையும் நிலைத்தது. “அல்ரெடி ஒன் வீக் கம்ப்ளீட்டட் க்கைஸ். இன்னும் ஒரு வாரம் அதிகமாத் தோணலையா?”

“சாரி ஜேப்பி.  லாஸ்ட் வீக் ரெண்டு பேர் அன்எக்ஸ்பெக்டடா லாங்க் லீவு.  அதனாலதான்” தங்களின் பக்கம் தவறு இருப்பதால், தயங்கியவாறு கூறினான் சீனியர் டிசைனர்.

“யாரு ஒரே சமயத்துல லீவு போட்டது?” சாதாரணமாகத்தான் கேட்டான் ஜேக்கே.

“ப்ருத்வி அண்ட் சுமித்ரா” பதில் கூறினான் சீனியர் டிசைனர்.

பதிலைக் கேட்ட, ஜேப்பிக்கு நெஞ்சுக்குள் காந்தாரி மிளகாயை தேய்த்தாற்போல காந்தியது.

மேலும் சில தகவல்களை ஜேக்கே அவர்களுடன் பரிமாறிக் கொண்டபின், “நீ இன்னும் எதாவது சொல்ல வேண்டியிருக்கா ஜேப்பி” கவனம் அங்கிருந்து திசைமாறிப் போயிருக்க, முதலில் ஜேக்கே பேசியது கேட்கவில்லை.  பிறகு ஜேப்பியைத் தொட்டு நடப்பிற்கு கொண்டு வந்தவன், “ஆர் யு ஓகே” ஜேக்கே தன்னை நினைவிற்கு கொண்டுவந்ததை அறிந்து, தலையைச் சிலுப்பி, தன்னைச் சரி செய்து கொண்டவன், தன் சார்பாக கூற வேண்டிய விசயத்தை அதன்பின் பகிர்ந்துகொள்ள, அந்த சந்திப்பு அத்தோடு நிறைவடைந்தது.

அனைவரும் அறையிலிருந்து வெளியே வந்தனர்.  ஜேப்பி, ஜேக்கே இருவர் மட்டும் அந்த அறையில் தேங்கியிருந்தனர்.

“என்னாச்சுடா?” சகோதரனை நோக்கிக் கேட்டான் ஜேக்கே.

“நத்திங்” ஜேப்பி

“வர வர உன்னோட எதுவுமே புரிய மாட்டிங்குதுடா.  என்னவோ செய்யிற.  ஆனா அது என்னானு சொல்லவும் மாட்டிங்கற.  கத்திரிக்கா முத்தினா கடைத் தெருவிக்குதான் வந்தாகனும்டீ” சிரித்தபடியே ஜேக்கே கிண்டல் அடித்தான்.

“இது அந்த மாதிரி விசயமில்ல ப்ரோ” ஜேப்பி

“எந்த விசயமா இருந்தாலும், ஒரு நாளைக்கு வெளிய தெரியத்தான் செய்யும்” என்றவாறே ஜேக்கே அங்கிருந்து தனது தனியறையை நோக்கிக் கிளம்பினான்.

தனித்திருந்தவனுக்கு, ‘ரெண்டு பேரும் சேந்து லீவ் எடுத்துட்டு எங்க போயிருப்பாங்க?’ வினாக்கள் அவனுக்குள்ளாக எழுந்தவண்ணமிருந்தது.  மனதை உறுத்திய வினாக்களுக்கு, விடைதெரியாமல் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்தான்.

ப்ருத்வி வரும்வரை, சுமித்ராவை சாதாரணமாகப் பேசி, சிரித்துக் கடந்தவன்தான் ஜெயபிரகாஷ்.  அப்போதெல்லாம் மற்ற ஆண்களுடன் சுமித்ரா பேசுவதைக் கண்டிருக்கிறான்தான்.  ஆனால் காண்டானது இல்லை. 

தற்போதும் பிற ஆண்களோடு பேசத்தான் செய்கிறாள்.  ஆனால் அப்போது தோன்றாத ஏதோ ஒன்று ப்ருத்வியுடன், சுமித்ரா பேசினால் தோன்றுவது ஏன்?

ப்ருத்வி இந்த அலுவலகம் வந்த பிறகு சுமித்ராவே மாறியதுபோல ஜேப்பிக்கு தோன்றத் துவங்கியிருந்தது, சுமித்ரா தங்களது கம்பெனியில் பணிபுரிகிறாள் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான், தனக்குள் தோன்றிய காதலைக் கூற, செயல்படுத்த பிரியமின்றி, ரகசியமாகவே வைத்திருந்தான். 

ப்ருத்வியின் வருகைக்குப்பின், தன்னை மீறி, சுமித்ராவிடம் சென்று எதாவது கூறிவிடுவோமோ என்கிற தயக்கம் ஒருபுறம்.  சரி, ப்ருத்வியோடு எப்படியும் சுமித்ரா போகட்டும் என்று விட்டுவிடு என அந்தஸ்து பார்க்கும் அவனது ஒரு மனது கூறினாலும், அவளைக் கண்டதுமுதல் நினைவடுக்கில் அவளது நினைவுகளைப் பொக்கிஷமாகச் சேமித்த மனதோ, முரண்டுபிடித்து எதற்கும் ஒத்துழைக்காது தர்ணா செய்கிறது.

அவள் தனக்கே வேண்டும் என ஒரு மனதும், தங்களின் அந்தஸ்திற்கு அவள் ஈடானவள் கிடையாது, ஆகையினால் அவள் வேண்டாம் என மற்றொரு மனதும் வாதிடுவதைத் தவிர்க்க இயலாமல் தடுமாறி நிற்கிறான்.

நீண்ட நேர யோசனைக்குப்பின் உதித்த யோசனையை ‘ப்ருத்வியோட சாப்டரையே க்ளோஸ் பண்ணிட்டா’ குரூரமாகப் பரிசீலனை செய்தபடி அமர்ந்திருந்தான்.

தாமதிக்காது அடுத்த கட்ட பணியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நோக்கில், அங்கிருந்து புதுப்பொலிவோடு கிளம்பினான் ஜெயபிரகாஷ்.

ஜேப்பியின் எண்ணமறியாத இருவரும் கேண்டினில், ஒன் பை டூவாக காஃபியை ஷேர் செய்து கொண்டிருந்தனர்.  அதிகமாக அவள் காஃபி அருந்துவதைக் கண்டு, அவளின் மேல் ப்ருத்விக்கு கேரிங் எழ, அதனால்தான் இந்த ஷேரிங் என்பது ஜேப்பிக்கு தெரிய வந்தால்…

***

ஹலோ வாசக கண்மணிகளே!

டீசர்னு சொல்லிட்டு ஒரு யுடி போட்டுட்டீங்களேன்னு நீங்க பேசிக்கறது எனக்கு கேக்குது. 

யுடி சற்று தாமதமானாலும், படித்து, தங்களின் மேலான கருத்துகளை பகிர்ந்துகொண்டு, எமை ஊக்கப்படுத்துங்கள் தோழமைகளே!

என்றும் அன்புடன்… அனாமிகா 3


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!