தோளொன்று தேளானது 1

தோளொன்று தேளானது! 1

கோவை, மாலை வேளையின் குளுமையோடு, இதமாய் இருந்தது. மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, மூன்றரை வயதேயான ஷ்யாம் படுக்கையில் இருந்து தானாகவே எழுந்து, அடுக்களைப் பகுதிக்குச் சென்றான்.

குழந்தையாக வயதிலும், உருவத்தில் இருந்தாலும், எப்போதும் பெரிய மனித தோரணையோடு வலம் வருவான்.  பேச்சில் மழலை இன்னும் மிச்சமிருந்தாலும், பெரியவர்களைப்போல என்பதைவிட, அவர்களை மிஞ்சும் முதிர்ந்த வார்த்தைகளைப் பேசி, ஒரு கனம் புதியவர்களைத் திகைக்கச் செய்வான்.

அடுக்களைப் பகுதியில் வேலையாக இருந்த அவர்கள் வீட்டின் வேலைக்காரி சாந்தி பாலைக் காய்ச்சிக் கொண்டிருப்பதைக் கண்டவன், “எனக்கு இன்னிக்கு அதிகமா பசிக்குது ஷா. இன்னும் எவ்ளோ நேதமாகும் ரெதியாக(ரெடியாக)?” கைகளை பின்னால் கட்டியவாறு வாயில்வரை வந்தவன், கதவு நிலையில் சாய்ந்து நின்றபடியே சாந்தியிடம் கேட்டான்.

எந்தப் பெயரானாலும், அவன் விருப்பம்போல அவனாகவே சுருக்கி அழைக்கப் பழகிக் கொள்வான் ஷ்யாம்.   புதியவர்கள் அவனது அழைப்பில் நெற்றி சுருங்கினாலும், அதனைப்பற்றி கண்டுகொள்ளாமல் பெயர் சொல்லி அழைப்பதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். 

அதனால்தான் சாந்தியை ஷா என்று சுருக்கி அழைக்கின்றான். ஆரம்பத்தில் சிறுவனின் அழைப்பை ஏற்க முடியாது, சாந்திக்குமே சுருக்கென மனதில் வருத்தம் இருந்தாலும், நாள்கள் செல்லச் செல்ல, ஷ்யாமின் செயல்பாடுகளைக் கண்டு, அவளுமே ஆச்சர்யத்தோடு, அவன்மீது உண்டான அன்பில், அவளறியாமலேயே மாறிப் போயிருந்தாள்.

சுமித்ரா, ப்ருத்வி இருவரைக் காட்டிலும், ஷ்யாமின் பேச்சு, முடிவு, செயல்பாடுகள் அனைத்துமே, சாந்தியையும் அன்பால், அவன்பால் கட்டிப் போட்டது என்று கூறினால், அது மிகையல்ல.

“அவ்ளோதான், இன்னும் இரண்டே நிமிசத்துல எடுத்துட்டு வரேன்.  நீங்க ஹால்லயே இருங்க” சாந்தி இதமாகவே பதில் கூறினாள்.

சுமீ பேசுவதைப் பார்த்து, சாந்தியும் ஷ்யாம் சிறுவனாக இருந்தபோதிலும் மரியாதை கொடுத்துப் பேசத் துவங்கியிருந்தாள். அனைவரும் மரியாதையோடு பேசுவதைப் பார்த்தேனும், அவன் தன்னை மாற்றிக்கொள்வான் என நம்பி சுமித்ரா அவ்வாறு மகனை அழைக்கப் பழகியிருந்தாள்.

ஹாலுக்கு வந்தவன் அங்கு அமராமல், சுற்றிலும் பார்வையை செலுத்தியபடியே, திறந்திருந்த கதவைத் தாண்டி பால்கனியில் வந்து நின்று, கண்ணுக்கெட்டும் தூரம்வரை தெரிந்த காட்சிகளை வேடிக்கை பார்த்தபடி நின்றான் ஷ்யாம்.

ஏதேச்சையாக அருகே இருந்த வீட்டு முற்றத்தில் விளையாண்டு கொண்டிருந்த சிறுமி, தட்சணாவைப் பார்த்தபடியே ஷ்யாம் நின்றான். அவளை சற்றுநேரம் பார்வையால் உறுத்து விழித்தவன், பிறகு சாலையைப் பார்த்தான். அதில் ஏதோ எதிர்பார்ப்பு இருந்தது.

தட்சணா எதேச்சையாக நிமிர்ந்து மேலே பார்க்க, ஷ்யாம் நிற்பதைக் கண்டவள், “ஷ்யாம்” என்றழைத்தாள்.

அழைப்பில் திரும்பி அவளை நோக்கியவன், “ஹாய்” என்றபடியே பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பிவிட்டு கையசைத்தான். அவளும் பதிலுக்கு அதேபோல செய்துவிட்டு, கையசைத்தாள்.

இரண்டு நிமிடங்களுக்கு முன்னதாகவே ஹாலுக்கு வந்த சாந்தி, ஷ்யாமை அங்கு காணாததால், “குட்டிப் பையன் இப்ப எங்க இருக்கீங்க?” பாலை டீப்பாயின் மீது வைத்தபடி சத்தமாகவே கேட்டாள்.

“அங்கேயே வையி ஷா.  நான் வந்து குதி(குடி)க்கிறேன்” திரும்பாமல் பதில் கூறியவனுக்கு, மரியாதையெல்லாம் அவனின் தாய் எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும், வருவதேயில்லை.

சிறுகுழந்தையென்று, ஷ்யாம்மின் தாயும் மகனை அதிகம் வலியுறுத்தாமல் விட்டுவிடுவதும், அவனது மரியாதைக் குறைவான பேச்சிற்கு ஒரு காரணமாகிப் போனதோ!

பாலை ஹாலில் இருந்த டீப்பாயில் வைத்துவிட்டு, ஷ்யாம் இருந்த பகுதிக்கு வந்து அவனது செயலைக் கூர்ந்து நோக்கிவிட்டு, “அம்மா வராங்களானு பாக்குறியா?” சிறுவனின் அடர்த்தியான புதர்போல வளர்ந்து காணப்பட்ட தலைமுடியை லேசாகத் தடவிவிட்டவாறு சாந்தி வினவ, “இல்லை” சோகமாய் வந்தது ஷ்யாமின் பதில்.

ஆனால் அவனை சாந்தி தொட்டது பிடிக்காததால், அந்தக் கையை சட்டென தனது கையால் தட்டிவிட்டவன், தள்ளி நின்றபடியே, “மீம்மா (சுமித்ரா என்ற பெயரை ப்ருத்வி சுமீ என்று அழைக்க, ஷ்யாமோ அதைச் சுருக்கி மீ என்கிறான்) நாளைக்குத்தான வரேன்னு சொல்லித்துப் போனா. நான் பித்துவிபா வதாங்களானு பாத்தேன்” பதில் கூறியபடியே, ஹாலுக்கு வந்தான்.

உள்ளே வந்தவன், நேராகச் சென்று தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு பல்லைத் தேய்த்து, வாய் கொப்பளித்து முகத்தை கழுவிக் கொண்டு, தன்னைச் சீர் செய்து ஹாலுக்கு வந்தவன், சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டவாறு பாலை எடுத்து அருந்தலானான்.

ஹாலில் கிடந்த கடிகாரத்தை அடிக்கொருமுறை பார்த்துக் கொண்டிருந்த சாந்தியைக் கண்டு, “உனக்கு லேத்தாச்சா” சாந்தியிடம் வினவ, அவள் பதில் கூறுமுன்னேயே, “நீ போ.  நான் பத்திதமா வீத்தைப் பாத்துத்து இதுப்பேன்” அவள் நிலையை உணர்ந்து அவனாகவே கேட்டான்.

“உங்க அப்பா எத்தனை மணிக்கு வருவாரு” சாந்திக்கும் வீட்டிற்குச் செல்ல வேண்டிய அவசரம் காரணமாக சிறுவனிடம் கேட்க

“அது யாதுக்குமே தெய்யாது” சிரித்தவன், “நீ போ” என்றான் ஷ்யாம்.

“போன் பண்ணிச் சொல்லிட்டுப் போறேன்” சாந்தி, தனது அலைபேசியை எடுத்து, சுமித்ராவிற்கு அழைத்தாள்.

எதிர்முனையில் அழைப்பு எடுக்கப்பட, “ம்மா, எனக்கு வீட்டுல விருந்தாளி வராங்கன்னு போனு போட்டாங்க.  நேரமாகுது.  இன்னும் ஐயாவைக் காணோம். நான் இருக்கவா, இல்லை கிளம்பவா?” சாந்தி கேட்டாள்.

“நான் ப்ருத்விகிட்ட பேசிட்டுச் சொல்லவா?” வேலைப்பளுவில் இருந்த சுமித்ரா, நெற்றியைத் தேய்த்துவிட்டவாறு கேட்டாள். பிறகு அவளே, “கொஞ்சம் வயிட் பண்ணு சாந்தி. நான் கேட்டுட்டே சொல்றேன்” அழைப்பைத் துண்டித்தவள், ப்ருத்விக்கு அழைத்தாள்.

ஐந்து நிமிடத்தில் மீண்டும் சாந்திக்கு அழைக்க, சாந்தியிடம் இருந்த அலைபேசியை சட்டென கையிலிருந்ததைப் பிடுங்கி, அழைப்பை ஏற்ற சிறுவன், “மீ மா. அவ போகத்தும்.  நான் பாத்துவேன்” அடமாய் கூறினான்.

“ஹை ஷ்யாம் கண்ணா, எப்டி இருக்கீங்க?” என்றவள், அவனது “ஃபைன்” எனும் பதிலுக்குப்பின் “ப்ருத்வி இன்னும் ஹாஃப் அன் அவர்ல ரீச் ஆகிருவேன்னு சொன்னான்.  அதுவரை சாந்தி இருந்துட்டுப் போகட்டுமே” சிறுவனிடம் சமரச முயற்சியில் ஈடுபட,

“நோம்மா! அவளை ஃப்தீ(ஃப்ரீ) பண்ணு. ஐ வில் மேனேஜ், மீ” மகனது மீ எனும் அழைப்பிற்கு பின் வற்புறுத்தாது, “சாந்திகிட்ட குடு போன” என்றதும், அலைபேசி சாந்தியிடம் இடமாறியது.

“சொல்லுங்கம்மா” பவ்வியமாக சாந்தி கேட்க

“நீ கிளம்பு சாந்தி.  ப்ருத்வி வரவரை ஷ்யாம் தனியா இருந்துக்கறேங்கறான்.  நாளைக்கு எப்பவும்போல வந்திருவல்ல” சுமித்ராவும், அடுத்த நாளைக்கு வேறு சங்கடங்கள் வராமல் இருக்க வேண்டுமே என்கிற முன்னெச்சரிக்கையோடு சாந்தியிடம் வினவினாள்.

“வந்திருவேன் மேடம்” சாந்தி உறுதியாய் கூற,

“சரி.  அப்ப நைட் டின்னர் எல்லாம் ரெடி பண்ணிட்டல்ல” சுமியும் விடாமல் தொடர்ந்திட, பதிலுக்கு சாந்தியும் பேச்சைத் தொடரும்படி நேர, ப்ருத்வி வரும் நேரம் நெருங்கியது.

சுமித்ராவைப் பொறுத்தவரை, கஷ்டப்பட்டு உழைத்துப் பொருளீட்டி, இத்தனையையும் மகனுக்காக செய்கிறாள்.  அதில் சற்றும் விட்டுத்தராமல், தனக்கு வேண்டியதை வேண்டியவர்களின் மூலம் சாதித்துக் கொள்ள நினைப்பவள்.

வேலைக்காரி எப்போதும், ஏழரை மணிக்குதான் செல்ல வேண்டும் என உறுதிமொழியோடுதான் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறாள் எனும்போது, ஏழு மணிக்கு முன், அவளை அனுப்ப அத்தனை எளிதில் அனுமதிக்க மனம் வராது சுமித்ராவிற்கு.

ஆனால் சிறுவன் ஷ்யாம், தாயைப்போல அல்லாது, சிறுவயதிலேயே இரக்க குணம், தன்மானம், சுய முடிவு என பெரியவர்களை மிஞ்சும் தெளிவினனாய் இருந்தான்.

சுமித்ராவிற்கும், ப்ருத்விக்குமே, சிறுவனின் முடிவுகளை எண்ணி சில வேளைகளில் ஆச்சர்யமாக இருக்கும்.

ப்ருத்வி “விதை ஒன்னு போட்டா, சுரை ஒன்னா முளைக்கும்னு ஏதோ சொல்லுவாங்களே.  அதுபோல ஷ்யாம் இருக்கானா?” என சுமித்ராவிடம் வினவுவான்.

சுமித்ராவும், அதற்கு உரிய பதிலைக் கூற விரும்பாது, வேறு ஏதேனும் பேசி, மனநிலையை மாற்றிட முனைவாள்.

***

திருச்சியை பூர்விகமாகக் கொண்டு, பரம்பரை பரம்பரையாக, அந்தஸ்தில் உயரிய நிலையில் வாழ்ந்து வரும் குடும்பம் சிவபிரகாசம், மீனாட்சி அவர்களுடையது.

சிவபிரகாசம் தனது உழைப்பால் உருவாக்கிய நிறுவனங்களை, பெயருக்கு மூன்று மகன்களுக்கும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுத்திருந்தார்.  ஆனால் மூவருமே இன்றுவரை கூட்டுக் குடும்பமாகவே ஒரே இடத்தில் வசித்து வந்தனர்.

இன்றுவரை அனைத்து முக்கிய முடிவுகளையும் சிவபிரகாசம் மட்டுமே எடுத்து வந்தார்.

அவரின் இளைய மகன் சதானந்தன்.  சதானந்தன்-ரூபிணி அவர்களின் புதல்வர்கள், ஜெயகார்த்திக் மற்றும் ஜெயபிரகாஷ் இருவரும்.

சதானந்தன், தனது தந்தை தனக்களித்த, இரும்பு, சிமெண்ட் பொருள்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து, சில்லரையாக வணிகம் செய்து வந்த நிலையில், தனது கட்டிடவியல் பட்டயப் படிப்பினைக் கொண்டு, சில ஆண்டுகளாகவே ஜேஜே கன்ஸ்ட்ரக்சன் எனும் பெயரில், திருச்சியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் கட்டிடப் பணியினை கவனித்து வந்தார்.

மகன்கள் இருவருமே கட்டிடவியலில் பொறியியல் படிப்பை முடித்ததும், தங்களது ஜேஜே கன்ஸ்ட்ரக்சனை, அவர்களின் பொறுப்பில் விட சதானந்தன் நினைக்க, அவர்கள் மறுத்ததோடு, அங்கு சிலகாலம் தொழிலாளியாக அங்கு பணி புரிவதற்கு மட்டுமே முன்வந்தனர்.

இரண்டு ஆண்டுகள் தந்தையின் நிறுவனத்தில் தங்களது உழைப்பைத் தந்ததோடு, திறமையை வளர்த்துக் கொள்ள அதிகவனம் செலுத்தினர். திருச்சியில் தங்களது ஆரம்ப பணியினைத் தொடர்ந்து செய்தவர்கள், தங்களது கம்பெனியை பிரைவேட் லிமிட்டடாகத் தரம் உயர்த்திட முயன்று, அதிலும் வெற்றி பெற்றனர்.

இந்த முக்கிய முடிவுகள் அனைத்தையும், தந்தை மற்றும் தாத்தா இருவரது பேச்சையும் மீறி ஜெயபிரகாசத்தின் தூண்டுதலால், சகோதரர்கள் இருவரும் ஒருங்கிணைந்து எடுத்திருந்தனர். அதில் சிறுவருத்தம் ஜேப்பியின் தாத்தாவிற்கு இருந்தது.

அதன்பின் ஜேஜே கன்ஸ்ட்ரக்சனை, ஜேஜே பில்டர்ஸ் பிரைவேட் லிமிடட் எனும் நிறுவனமாக மாற்றி, சென்னையை மையமாகக் கொண்டு தொழிலைத் துவங்கியிருந்தனர்.

திருச்சியை மையமாகக் கொண்டு அவர்களின் தந்தை லகரங்களில் தொழிலைச் செய்து வந்திருக்க, பிரைவேட் லிமிட்டட் நிறுவனமான பின்பு மகன்கள் கோடிகளில் கட்டிடங்களை கட்ட ஒப்பந்தமானார்கள்.

இருவராகத் துவங்கிய நிறுவனம், அதன்பின் மூன்றே ஆண்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களோடு, தமிழகம் முழுவதும் வெற்றிநடை போடத் துவங்கியிருந்தது.

தமிழகத்திற்குள் மட்டுமே அதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள், அடுத்தடுத்து, பங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா என கிளைகள் பரப்பி இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்போது வளர்ச்சி கண்டிருந்தது.

சகோதரர்கள் இருவருமே, வேலையின் பின்னே அசுரத்தனமாக ஓடிக் கொண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் தன்முனைப்பு இல்லாமல் ஒத்துழைப்போடு இயங்குவதால்தான் இத்தகைய வளர்ச்சி குறுகிய காலத்தில் அவர்களுக்கு சாத்தியமாகியிருந்தது.

ஜெயகார்த்திக், ஜெயபிரகாஷ் இருவரும் ஒரு வருட வித்தியாசத்தில் பிறந்தவர்கள்.  மூத்தவன் அமைதி.  இளையவன் அதற்கு நேர்மாறு. இருவரும் ஜேஜே பில்டர்ஸ் துவங்கியபின் பணியாளர்களால், அன்பாக ஜேக்கே, ஜேப்பி என அழைக்கப்பட்டனர்.

(வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இனி வரும் அத்தியாயங்களில் ஜேக்கே கார்த்திக் என்றும், ஜெயபிரகாஷ் ஜேப்பி என்றும் அழைக்கப்படுவார்கள்.)

சதானந்தனைப்போல உடன்பிறந்தவர்களுக்கும் ஆண்குழந்தைகள் மட்டுமே. சதானந்தன்தான் அவ்வீட்டில் இளையவர்.  மற்றவர்களின் பிள்ளைகள் அனைவருக்குமே பெரியோர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, மிகவும் வசதியான இடங்களில், அவர்களுக்கு இணையான அந்தஸ்தில் உள்ள குடும்பங்களில் பெண் எடுத்து சிறப்பாக திருமணம் முடித்திருந்தனர்.

ஜெயகார்த்திக்கின் இருபத்து ஏழாவது வயதில், அந்தஸ்தில் அவர்களுக்கு இணையான குடும்பத்திலிருந்து பெண்ணெடுத்து திருமணத்தை முடித்த பிறகுதான், ஜெயபிரகாஷைப் பற்றி யோசிக்கத் துவங்கியிருந்தனர்.

துவங்கியது முதலே, “எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்” என ஜேப்பி மறுத்து வந்தான். இன்றுவரை குடும்பத்தின் முக்கிய முடிவுகளை சிவபிரகாசம் தம்பதியரே எடுத்து வந்தனர்.

சதானந்தனின் தந்தை சிவபிரகாசம், பேரன் கார்த்திக்கை அழைத்து, “என்னடா ஏன் அவன் பிடி குடுக்காமயே தெரியறான்.  என்ன விசயம்?” என மூத்த பேரனிடம் விசாரணையைத் துவங்கியிருந்தார்.

“தெரியலை தாத்தா!” கார்த்திக்

“அது எப்டிடா, இரண்டு பேரும், ஒரே காலேஜ்ல படிச்சு, ஒரே ஃபீல்டுல தொழிலைத் துவங்கி, இத்தனை வருசமா ஒன்னாவே தெரிஞ்சிட்டு, அவனைப் பத்தித் தெரியலைன்னு சொன்னா நல்லாவா இருக்கு” சிவபிரகாசம்.

“தாத்தா, தொழில் வேற, அவனோட பர்சனல் வேற.  வேண்ணா விசாரிச்சுப் பாக்கறேன்” சமாளித்துப் பதில் கூறினான் கார்த்திக்.

“போன்ல பேசிட்டு இருக்கும்போது பிடி குடுக்காம இருக்கான்னுதான், உங்கிட்ட நேருல கேட்டேன். இனிமேதான் விசாரிக்கறேங்கற?” சற்றே சிடுசிடுப்பாய் வினவினார் சிவபிரகாசம்.

“தெரிஞ்சா நானே சொல்லிருவேன்.  தெரியலைன்னா என்ன செய்யச் சொல்றீங்க தாத்தா?” வருத்தமாக வந்தது கார்த்திக்கின் பதில்.

“இந்த தடவை உங்ககூடவே நானும், உங்க பாட்டியும் சென்னை வரோம்.  பத்து நாளு அவங்கூட இருந்தா, அவனைப்பத்தி அவனே சொல்ல வேணாம். நானே சொல்லிருவேன்” திடமான முடிவோடு சிவபிரகாசம் முடித்திருந்தார்.

அதற்குமேல் அவர்களை எதிர்த்தோ, மறுத்தோ பேசிப் பழக்கமில்லாததால், கார்த்திக் எதுவும் இடைமறித்துக் கூறாமல் அமைதியாகக் கடந்துவிட்டான்.  ஆனால் சிவபிரகாசம் அடுத்த நாளே சென்னைக்கு கிளம்பி அவனோடு வந்திருந்தார்.

***

இரண்டு நாள்கள் ஜேப்பியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர், அவன் வீட்டிற்கு வராமல் இருக்கவே, இரவு வீடு திரும்பிய கார்த்திக்கிடம், “எங்கடா தொலைஞ்சு போனான்.  ரெண்டு நாளா வீட்டுப் பக்கம்கூட தலைவச்சிப் படுக்காம, அப்டி என்னடா பண்றான்?” மீண்டும் கார்த்திக்கிடம் வந்து சிவபிரகாசம் கத்த,

“தாத்தா, அவன் இப்போ நாக்பூருக்கு, புது புராஜெக்ட் விசயமா போயிருக்கான். ரெண்டு நாள்ல பங்களூர் வந்திட்டு, அங்க வேலையை முடிச்சிட்டுத்தான் சென்னை வருவான்” கார்த்திக்.

“என்னடா இதை இப்பத்தான் சொல்ற?  இத முன்னயே சொல்லியிருந்தா, நான் அங்கேயே போயிருப்பேன்ல” அசால்டாக உரைத்த தாத்தாவை, ஆச்சர்யமாகப் பார்த்திருந்தான் கார்த்திக்.

“என்ன அப்டிப் பாக்கற” என்றவர், “இப்போவே என்னை பங்களூருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு பண்ணு” பிடிவாதமாக கூறினார் சிவபிரகாசம்.

“தாத்தா, இப்போ அங்கே ரொம்ப மழை.  உங்க ஹெல்த்…” தயங்கி உரைத்த கார்த்திக்கிடம்

“நான் பாக்காத மழையாடா!  போடா!  போயி நான் சொன்னதை முதல்ல செய்யி…” சிவபிரகாசம் வார்த்தைகளால் பேரனை விரட்டினார்.

கார்த்திக், தனது தாத்தா சிவபிரகாசம் கூறியதைக் கேட்டு அதற்கான ஏற்பாடு செய்ய எண்ணி அகன்றவன், அதற்குமுன் ஜேப்பிக்கு அழைத்தான்.

இரவில் சகோதரன் அழைக்க, அங்கு தனது சகாக்களோடு வெளியே நின்றிருந்த ஜேப்பி அந்நேரத்திலும் கூலரோடு இருந்தவன், தன்னைக் கடந்து சென்ற நாக்பூரின் நவநாகரீக பெண்களை, கூலாக வேடிக்கை பார்த்தபடியே, தனக்குள் உற்சாகத்தை ஏறுமுகமாக்கிக் கொண்டு நின்றிருந்தவனுக்கு, ‘என்ன விசயம்?  எப்பவும் இந்நேரத்தில கூப்பிட மாட்டானே!’ என யோசித்தபடியே கார்த்திக்கின் அழைப்பை ஏற்றிருந்தான்.

“ஜேப்பி, எங்க இருக்க?” கார்த்திக்

“என்ன விசயம் கார்த்தி” பார்வை அதன் பணியினை திவ்யமாக செய்து கொண்டிருந்தாலும், இடைப்பட்டவனின் மீது உண்டான எரிச்சலோடு வினவினான்.

“நீ இப்போ எங்க இருக்க?” மீண்டும் கார்த்திக் வினவ,

“நாக்பூர்லதான்!  ஏன்டா தெரியாத மாதிரி கேக்கற என்ன விசயம்?” ஜேப்பி

“தாத்தா உன்னைப் பாக்க இப்பவே பங்களூர் கிளம்பியாச்சு!” கார்த்திக்கின் குரலில் ஜேப்பி என்ன கூறுவானோ என்கிற அபஸ்வர உணர்வு.

“யாரு நம்ம சிவாவா?” அதிர்ந்துபோய் கேட்டான் ஜேப்பி.

“ஆமாடா!” சோகமாக பதிலுரைத்தான் கார்த்திக்.

“என்னவாம்!  இந்த வயசில ஹெவி ரெய்னில வந்து பங்களூர்ல எதையும் சுத்தி பாக்க முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானடா!” எரிச்சலோடு மொழிந்தான் ஜேப்பி.

“நீ வேற!  அவரு உன்னைப் பாக்கத்தான் வராரு. அவரு பாக்காத இடமா இந்த உலகத்துல இருக்கு?” கார்த்திக் கிண்டலாகக் கூற,

“அப்ப நீயே பாங்களூரைப் பாத்துக்கோ.  நான் ஹைதராபாத், கொல்கத்தா ரெண்டையும் முடிச்சிட்டு ட்டூ வீக்சுக்கு அப்புறம் சென்னை வரேன்” ஜேப்பியும் தனது முடிவைக் கூறினான்.

அலறிப் போனவன், “டேய் மயூரிக்கு இது டெலிவரி டைம்டா.  அதான் உன்னை பங்களூர் பாத்துட்டு, ஹைதாராபாத், கொல்கத்தாவையும் பாக்கச் சொன்னேன்.  இப்ப நீ காலை வாரிவிட்டா என்ன செய்வேன்டா?”  அழும் குரலில் கார்த்திக் பேச,

“அப்ப அவரை நீதான் சமாளிக்கணும்.  தேவையில்லாம என்னை எதுக்கு என்கொயரி பண்ணிட்டு இருக்காரு.  கல்யாணம் வேணானு சொன்னது, அவ்ளோ பெரிய குத்தமா?” தமையனிடம் கேள்வி கேட்டான் ஜேப்பி.

“டேய். டேய்.  இதையெல்லாம் யாரு உங்கிட்ட சொன்னா?” கார்த்திக் ஆச்சர்யப்பட்டு வினவினான்.

“அதெல்லாம் தெரியாமயா இருக்கேன்.  அவரு ஏன் என் பின்னாடியே நூல் புடிச்சிட்டு தெரியறாருன்னு!” அசட்டையாகப் பதில் கூறியவன்,

“ரொம்பப் பண்ணாருன்னா, நாலு வருசம் கழிச்சு வர்ற தொண்ணூறாங் கல்யாணம், மீனாட்சிகூட இல்லைனு சொல்லிரு.  எனக்குப் பாக்குற பொண்ணை இவருதான் கட்டிக்கணும்.  ஆமா சொல்லிட்டேன்” ஜேப்பி

“அப்புறம் பாட்டி உன்னை கொன்னுறும்டா” கார்த்திக் பதற,

கெக்கபிக்கே எனச் சிரித்தவன், “இல்லைனா நீ கட்டிக்க! நான்னா மயூரிக்கிட்ட உனக்காகப் பேசறேன்!” குளுமையாக பதில் கூறிவிட்டு வைத்துவிட்டான் ஜேப்பி.

முந்தைய பதிலைக் காட்டிலும், இன்னும் அதிகமாகப் பதறிப் போனவன், அலைபேசியை வைத்துவிட்டு, மார்பைத் தடவிக் கொண்டவாறே, ‘சொன்னதுக்கே சுருக்குனு நெஞ்சுல குத்துதே.  நிஜமாப் பண்ணான், அவ்ளோதான் போலேயே’ சுற்றிலும் பார்த்தபடியே அங்கிருந்து அகன்றான் ஜெயகார்த்திக்.

யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட கார்த்திக், சிவபிரகாசம் தாத்தாவிடமே சென்றான்.

நாக்பூரிலிருந்த ஜேப்பி, விட்ட இடத்திலிருந்து கண்களால் வலைவீசி தனது பணியை செம்மையாகத் தொடர்ந்தான். எத்தனை பெண்களைப் பார்த்தாலும், அவனுக்குள் அவள் ஏற்படுத்திச் சென்ற தாக்கங்கள், குண்டூசி அளவும் மாறாமலேயே இருந்ததை எண்ணி, அந்நேரத்திலும் பெருமூச்சொன்றை வெளிவிட்டவன்,  சிகரெட்டைப் பற்ற வைத்து, மனதைப் புகைவிட்டு ஆற்றத் துவங்கினான்.

***