தோளொன்று தேளானது 10

தோளொன்று தேளானது! 10

சிவபிரகாசம், ஜேப்பியின் பெற்றோரோடு, மற்ற மகன்களின் குடும்பத்தையும் அழைத்து, ஜேப்பியின் திருமணச் செய்தியைக் கூறினார்.  அனைவருக்குமே அதிர்ச்சி. 

‘ஜேப்பியா, அவன் அப்படி பொறுப்பில்லாம தான் தோன்றித்தனமா செய்யறவன் கிடையாதே!’ என்பதாகவே அனைவரின் மனதிலும் ஓடியது.

அவனை அறிந்தவர்கள், யாருக்கும் கூறாமல் தானே செய்து கொண்டிருந்த திருமணத்திற்கான அவனின் நியாயம் தெரியாத நிலையிலும், ஜேப்பியை நம்பி வார்த்தைகளை விடாமல் அமைதி காத்தனர்.

கார்த்திக்கிற்கு சுமித்ராவைத் தெரியும்.  சுமித்ரா தங்களின் நிறுவனத்தைவிட்டுச் சென்றதும், இருவருக்கிடையே ஏதோ சரியில்லை என்று மட்டும் யூகித்திருந்தான்.

சுமி வேலையை விட்டுச் சென்றதும், “என்ன ஜேப்பி என் ஆளு, தேளுன்னு சுமியைச் சொல்லிட்டு இருந்த.  என்னாச்சு. திடீர்னு ரெசிக்னேசன் லட்டர் குடுத்துட்டா” வினவிய கார்த்தியை முறைத்தவன், “தேளு கொட்டிட்டுப் போயிருச்சு.  வேலையப் பாத்துட்டுப் போவீயா” என்றதோடு முடித்துக் கொண்டிருந்தான். 

வருத்தமோ, எந்த மாற்றமோ இன்றித் தெரிந்த ஜேப்பியை கண்ட கார்த்திக், பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டிருந்தான்.

ஆனால் திருமணப் புகைப்படங்களைப் பார்த்தபின்பு, சுமியுடனான திருமணத்திற்காக இதுநாள்வரை ஜேப்பி தாமதித்திருக்கிறான் என்பது அப்போதுதான் தெளிவாகியிருந்தது.

அதனைக் கண்டதும், ‘இவனுக்கு மட்டும் எங்கிருந்துதான் இவ்ளோ தில்லு வந்துச்சுன்னே தெரியலை.  அந்த ஓல்ட் மேன் என்ன பண்ணப் போறாரோ’ மனதிற்குள் புலம்பியதோடு, அடுத்த வேலையைக் கவனித்தான்.

 “கையில ஒரு பையனோட, இன்னொருத்தன்கூட ஒன்னா குடும்பம் நடத்திட்டு இருந்தவளைப் போயி கல்யாணம் பண்ணியிருக்கான்.  இவனுக்கு ஏன் புத்தி இப்டிக் கேவலமாப் போச்சுன்னு தெரியலை.” சிவபிரகாசம் குடும்பத்தினர் முன் உரைக்க, 

இந்தச் செய்தி கார்த்திக்கிற்கு புதிது.  சுமித்ராவை நன்கறிவான்.  அவனறிந்த வகையில் சுமித்ரா, தன் தாத்தா கூறுவதுபோலக் கிடையாது என்றாலும், தனது கருத்தைக் கூறாமல் மௌனமாக இருந்தான்.

ஜேப்பி, தன்னிடம்கூட சுமித்ராவுடனான திருமணத்தைப்பற்றிக் கூறவில்லை எனும் கோபம் இருந்தது கார்த்திக்கிற்கு. தாத்தாவின் பேச்சைக் கேட்டபின், ‘ஓஹ், ஏதோ பிரச்சனை உள்ள இருந்ததாலதான் பைய நம்மகிட்டச் சொல்லாம அதுவே வேலையப் பாத்துருக்கு’ என எண்ணிக் கொண்டான்.

“பெத்தவங்க யாருமில்லாத அனாதையா வளந்தவளைப் போயி கல்யாணம் பண்ணியிருக்கான்.  மூலம் என்னானு தெரியாம இப்படிப் போயி சாக்கடையில முழுகுவான்னு நான் நினைக்கவே இல்லை. 

இந்த மாதிரி குலம் கோத்திரம் தெரியாதவளை கல்யாணம் பண்ணிக்கறது, வாழ்க்கைக்குச் சரிப்பட்டு வருமான்னு கொஞ்சமாது இவன் யோசிக்க வேணாம். முட்டாப் பைய.” திட்டிய சிவபிரகாசம்,

“இவனைப் போல புத்திசாலி யாருமில்லைனு சொல்லிச் சொல்லியே, அவனைக் கொம்பு சீவி விட்டது, இவ்ளோ பெரிய சங்கடத்தைக் கொண்டு வந்து சேக்கும்னு அப்போதைக்குத் தெரியாமப் போச்சு.

இந்த விசயத்தை நானும் அவசரப்பட்டு அவங்கிட்டக் கொண்டு போயிருக்கக் கூடாது.  ஆனா, அந்த சின்ன விசயத்தை வச்சிக்கிட்டே, எல்லாத்தையும் அவனுக்கு சாதகமாக்கிட்டான்.” தனது தவறையும் உணர்ந்து வருந்தியவர், இறுதிவரை தான் பெண் பார்க்கச் சென்றபோது பார்த்த ஷ்யாமின் தாய்தான் அவள் என்பதை அனைவரிடமும் மறைத்துவிட்டார்.

கார்த்திக் உடன் செல்லாததால் அவனுக்கும் கோயம்புத்தூரில் நடந்தது எதுவும் தெரிந்திருக்கவில்லை.

“இப்ப எங்க இருக்கான்னே தெரியாதளவுக்கு ஒத்த ஆளாவே நின்னு எல்லாத்தையும் எடுத்துச் செஞ்சு, இவ்ளோ மெனக்கெடறதுக்கு நியாயம்னு ஒன்னு இருக்கணுமில்லை. 

போயும் போயும் ஒரு தே…யாவக் கல்யாணம் செய்துக்கறதுக்கு இவ்ளோதூரம் நம்மையெல்லாம் தூக்கியெறிஞ்சிட்டுப் போயிருக்கான்.

நமக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்குங்கறதையே மறந்துட்டு, இப்டிப் பண்ணி, நம்மையெல்லாம் தலைகுனிய வச்சிட்டான்.

என்னோட சம்பந்த வழி, அதுக்குப்பின்ன உங்க பிள்ளைகளோட சம்பந்த வழி ஆளுங்களுக்கெல்லாம் எப்டி, என்னானு பதில் சொல்லி சமாளிக்கறதுன்னே எனக்கு ஒன்னும் புரியலை!” உக்கிரதாண்டவமாக அனைத்தையும் கூறியும் ஓயவில்லை சிவபிரகாசம்.

“இப்டி ஒரு குலக் கேட்டை இவஞ் செய்வான்னு இன்னும் என்னால நம்ப முடியலை.  ஆனா, இப்ப இந்த போட்டோவை எல்லாம் பாத்தா, நம்பாமையும் இருக்க முடியலை.

இப்டி ஒரு இக்கட்டுல கொண்டு வந்து நம்மை நிறுத்தணும்னே, இத்தனை வருசம் கல்யாணத்தை தள்ளிப் போட்டுட்டு இருந்திருக்கான்.  பாவிப் பய!

இனி அவனுக்கும், இந்த குடும்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  மீறி, அவங்கூட உறவு வச்சிக்க நினைக்கிறவங்க யாரும் இந்தக் குடும்பத்துல நடக்கிற நல்லது, கெட்டதுல கலந்துக்காம, அவங்கூடவே போயிருங்க” தனது கருத்தை வெளியிட்டவர்,

“பூர்வீகச் சொத்து எதுலயும் அவனுக்கு பங்கு குடுக்காத சதா” இளைய மகனுக்கு கட்டளையிட்டவர், மகன் தலையை அசைத்து ஆமோதித்ததும், அடுத்தடுத்து இனி வரக்கூடிய தினங்களில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கூறிப் பேச்சை நிறுத்தினார்.  அனைவரும் ஒருமித்து பெரியவரின் பேச்சை ஆமோதித்துவிட்டு அகன்றதும், சிறியவர்களும் எழுந்து சென்றனர்.

அனைவரோடும் கார்த்தியும் அமைதியாகச் செல்வதைக் கண்டவர், “கார்த்தி, இங்க வா” அழைத்து தன்னோடு அவனை மட்டும் நிறுத்தி வைத்தவர், அனைவரும் அங்கிருந்து அகன்றதை முடிவு செய்துகொண்டு,

“இந்த கட்டிடக் கம்பெனியில அவனுக்கு குடுக்க வேண்டியதைக் குடுத்து, தனிச்சு விட்டுரு.  இல்லை, அவங்கூடதான் இருப்பேன்னா, எங்க முகத்துல நீயும் முழிக்காத” என்றிட,

அதுவரை அமைதியாக நின்றவன், “உங்களை மாதிரி, சட்டுன்னு எந்த முடிவுக்கும் அவசரப்பட்டு என்னால வரமுடியாது தாத்தா.  ஏன்னா, என் கல்யாணத்துக்கு அப்புறம் பெரும்பாலும் எல்லாத்தையும் ஜேப்பிதான் தனியொருத்தனா பாத்திட்டான். 

நிறைய பிராஞ்சஸ் பத்தின விசயங்கள் எனக்கு டீட்டைலாத் தெரியாது.  எல்லாத்தையும் என்ன ஏதுன்னு பாத்து, ஒரு முடிவுக்கு வர எனக்குக் கொஞ்சம் நாளாகும். 

அதுவரை, அவங்கூடதான் நான் தொழில் பண்ணியாகணும்.” தனது நிலையை தெளிவாக உரைத்தவன்,

“சூம் ஃபுல்லாவே அவனோட கண்ட்ரோல்லதான் இருக்கு.  அதை ஆரம்பிச்ச விசயம் மட்டுந்தான் எனக்குத் தெரியும்.  மத்ததெல்லாம் அவந்தான் பாத்துட்டுருந்தான்.  அதனால, இனி அதை அவன் பொறுப்பிலேயே முழுசா விட்ரலாம்னு இருக்கேன்” என்றவன்,

“எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வரும்போது, உங்களையும் கூப்பிட்டு வச்சி பேசிக்கறேன் தாத்தா” என்றதோடு, அவனது பகுதிக்குச் சென்றுவிட்டான்.

இடைப்பட்ட தலைமுறை, ஜேப்பியின் செயலை நம்பமுடியாமல், தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டும், சிவபிரகாசத்தை எதிர்த்து எதையும் தங்கள் விருப்பம்போல செய்ய முடியாத நிலையில், பெரியவர் முன் அமைதி காத்தும் அகன்றிருந்தனர்.

***

ப்ருத்வி, தனிமைச் சிறையில் இருந்தான்.  யார், எதற்காக தன்னை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பதே தெளிவாகத் தெரியாமல் இருந்தவனுக்கு, கணினி ஒன்றும் அவன் வசம் வழங்கப்பட்டிருந்தது.

கட்டிடத் தொழில் சார்ந்த பணிகள் அவனிடம் கொடுக்கப்பட்டது.  கொடுத்தவர்களிடம் வினவியபோது, “நீ பாக்கற வேலைக்கு மாச மாசம் சம்பளம் உன்னோட அக்கௌண்ட்ல ஏறிரும்.  ஏன், எதுக்குனு கேள்வி கேக்காமச் செஞ்சா, உனக்கு நல்லது.  இல்லைனா வரக்கூடிய கஷ்டத்துக்கு நான் பொறுப்பாக முடியாது” என்றிட

“என்னோட மொபைல் மட்டுமாது தாங்க” என ப்ருத்வி வினவ, “உங்கிட்ட குடுக்கச் சொன்னா குடுத்திறப் போறேன்.  அதுவரை குடுத்த வேலைய மட்டும் பாரு” எனச் சென்றுவிட்டான்.

ப்ருத்வியைப் பொருத்தவரையில், தான் ஆரம்பத்தில் எடுத்து நடத்திய நிறுவன பங்குதாரர்களை முன்னிட்டே, இதுவரை தனக்குப் பிரச்சனை எழுகிறது என்கிற ரீதியில் யோசித்துக் கொண்டிருந்தான்.

இதற்குமுன் பங்களூரில் தன்னைச் சந்தித்துப் பேசிய மேனனை நினைவு கூர்ந்தவன், ‘அவன் அப்போவே சொன்னான்.  பேசாம, வெளிநாட்டுலயே வேலை தேடிட்டு, அங்கேயே செட்டிலாகற மாதிரிப் பாத்துக்கோ சாரே.  எல்லா தடவையும் நானே உன்னைக் காப்பாத்த வரமுடியாதுனு.  நாந்தான் அவசரப்பட்டு இந்தியாவுக்கு வந்து இக்கட்டுல மாட்டிக்கிட்டு இருக்கேன்.’  தனது நிலையை எண்ணிப் பெருமூச்செரிந்தான்.

‘இவனுக சங்காத்தமே வேணானுதான ஒதுங்கி, நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருந்தேன்.  இப்ப திரும்பவும் என்ன வேணும்னு இப்படிச் செய்றானுங்க.’ யோசித்து ஒன்றும் புரியாமல்,

“பணங்காசு இருக்கறவனுகளோட பழகறதே என்னை மாதிரி இல்லாத ஆளுங்களுக்கு ஆபத்துதான் போல’ தனது ஆரம்பகால தொழில்முறை பங்குதாரர்களைப் பற்றி எண்ணியவனுக்கு சுமி மற்றும் ஷ்யாம் இருவரின் நினைவும் வந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷ்யாம், அவனது உடல்நலனை தேற்ற எண்ணி உடன் சென்ற தோழி சுமித்ரா இருவரும், தன்னைக் காணாது என்ன செய்கிறார்களோ என்றெண்ணி மாய்ந்து போனான்.

ப்ருத்விக்கு, சூம் நிறுவன பணியாளர்கள் வாயிலாக அப்படித்தான் செய்தி பகிரப்பட்டு, சென்னைக்கு வந்தவனை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தான் ஜேப்பி.

தன்னைக் காணாது, சுமித்ரா காவல்துறையை நாடினால் ஒருவேளை தான் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக எண்ணிக் கொண்டு, தன்னை விரைவில் தோழி மீட்பாள் என நம்பிக்கையோடு நாள்களைக் கடத்தினான் ப்ருத்வி.

***

சுமித்ராவோ, ஜேப்பியின் மீது இதுவரை இருந்த நேசம் அவனது செயலால் மாறியிருக்க, ‘இந்தப் ப்ருத்வி எங்களைத் தேடி எப்போ வருவான்னு தெரியலையே.  இன்னும் எத்தனை நாளாகுமோ எங்களைக் கண்டுபிடிக்க.  இந்த கஷ்டத்தைவிட்டு வெளிய வர, அவனைத் தவிர வேற யாராலயும் எங்களுக்கு உதவ முடியாது’ எனும்படியாக நினைத்துக் கொண்டிருந்தாள்.

புதுமணப் பெண்ணுக்கான பூரிப்பு எதுவுமின்றி, இரவு உணவைக் கொண்டு வந்து தந்த தேவியிடம், “சாப்பாடு எதுவும் வேணாம் தேவி” மறுத்திட,

“மதியமே ஒழுங்கா சாப்பிடலை.  இப்பவும் சாப்பிடலைன்னா என்னாகறது” அன்போடு கண்டித்து அவள் வைத்துவிட்டுச் சென்றிருந்தது, சீண்டுவாரின்றி அப்படியே இருந்தது.

சுமித்ராவின் நினைவுகள் முழுவதிலும் ஷ்யாமே வியாபித்திருந்தான்.

‘ஷ்யாம் தற்போது என்ன செய்து கொண்டிருப்பான்.  தன்னை நினைத்து அழுவானோ?  அல்லது ஏங்குவானோ?  உண்டிருப்பானா?  புதிய இடத்தில் உறக்கம் வராமல் தன்னை நினைத்துக் கொண்டிருப்பானோ? அவனுக்கு அந்த இடம் வசதியாக இருக்குமா?’ இப்படியாகச் சென்றது சுமியின் எண்ணம்.

எந்த அனாதரவான நிலை வரக்கூடாது என எண்ணி, அவன் பிறக்குமுன்னே தனது பொறுப்பாக்கிக் கொள்ள நினைத்தாளோ, அதேநிலை ஷ்யாமுக்கு வந்ததை எண்ணி மனம் கனத்தது சுமித்ராவிற்கு,

ஜேப்பி ஷ்யாம் தனது குழந்தை இல்லையென்று திடமாக மறுப்பதை எண்ணியவளுக்கு, ‘அப்படியெனில் ஷ்யாம் கார்த்திக்கின் குழந்தையா?’ ஒரு கனம் மனம் யோசித்தது.

ஆனால், கார்த்திக்கை சந்தேகிக்க மனம் இடம் கொடாததால், ‘ஜேப்பிதான் எப்பவும் பிருந்தாவனக் கண்ணன் மாதிரி, பெண்கள் புடைசூழ திரிவான்.  அதனால இது இவங் குழந்தையாத்தான் இருக்கும்.  அந்த பூஜா, இந்த விசயத்தை இவங்கிட்ட சொல்லாம இருந்ததால வந்த வினை இது’ என எண்ணிக் கொண்டாள் சுமி.

சுமியின் எண்ணம் முழுவதிலும், தான் இங்கிருந்து செல்வதிலும், ஷ்யாம் மற்றும் ப்ருத்வியைப் பற்றியுமே இருந்ததால், அன்றைய தினத்தில் தனது நிலையை மறந்து போயிருந்தாள். 

அதனை நினைவுறுத்தும் விதமாக, பின்னிரவில் தன்னைத் தேடி வந்த ஜேப்பியைக் கண்டவளுக்குள் உள்ளமெங்கும் திகில் பரவியது.

***

உணவை உட்கொள்ளாது, உள்ளமெங்கும் ரணத்தோடு படுத்தபடியே உறங்காமல் கிடந்தாள் சுமி.  உடல்நிலையும் முன்புபோலல்லாமல் தொய்வடைந்திருக்க, மனமும் சுணக்கமாக இருந்தது.

நீண்ட நேரம் அவ்வாறு இருந்தவளுக்கு, அவளறியாமலேயே நடுநிசியில் உறக்கம் ஆட்கொண்ட நேரம், படுக்கையில் தன்னை ஒட்டினாற்போல படுத்தவனை தான் காணாவிட்டாலும், உள்ளுணர்வாய் அது ஜேப்பிதான் என திடமாய் உணர்ந்தவள், விழி திறக்க முயன்று தோற்றாள்.

அதேநேரம் தன்னை நெருங்கியவனை, மனம் கண்டு கொண்டாலும், மனம் முழுவதும் இருந்த விரக்தியில் அவனை தவிர்க்க நினைத்திட, அதற்குள் சுமித்ராவின் ஒத்துழைப்பை வேண்டாமல், காது மடல்களில் இதழால் முற்றுகையிட்டு முன்னேறியவனைக் கண்டு, உறக்கம் கலைந்திட, அவனிடமிருந்து திமிறினாள் சுமி.

தனது மார்போடு இறுக தன்னவளை அணைத்திருந்தவன், சுமியின் திமிறலைக் கண்டு, சினமெழ,“ச்சு” என சலிப்பொன்றை உதிர்த்தவன், “சுமீ…” எனும் அதட்டலோடு அதற்குமேல் தாமதிக்காமல், சுமியின் ஒத்துழைப்பை கருதாமல், தனது கட்டுப்பாட்டிற்குள் சுமியைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினான் ஜேப்பி.

தனது தேடலுக்கு இடைஞ்சலாக எண்ணிய சுமியின் ஆடைகளை, அவள் அனுமதியின்றிக் களைந்தவன், எதிர்பாரா நிகழ்வால் உண்டான சுமியின் நடுக்கத்தையும் பொருட்படுத்தாது, அவளின் மெல்லிய தேகத்தை ஆக்ரமித்திருந்தான். 

வில்லாய் வளைந்து தனது எதிர்ப்பைக் காட்டியவளை தனது வலுவான கரங்களின் துணையோடு, தனக்கு ஏதுவாக மாற்றிக் கொண்டவன், ஆவலோடும் ஆர்வத்தோடும் ஆனந்தமாகச் சுகிக்கத் துவங்கினான்.

உடலெங்கும் அலைந்து திரிந்தவனின் விரல்களையும், உதட்டையும் அருவெறுப்பாய் உணர்ந்தவள், ஜேப்பியின் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டு  அவமானத்தால் தன்னைக் குறுக்கிக்கொள்ள விழைந்தாள்.

சுமித்ராவின் மறுப்பையோ, அவளின் தடுமாற்றத்தையோ, கணக்கில் கொள்ளாமல், தடையைத் தகர்த்து, தனது நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டான் ஜேப்பி.

ஜேப்பியின் செயலில் மனம் முரண்டாலும், தன்னால் தவிர்க்க இயலாத செயலை எண்ணி, சுமியின் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிந்தது.

“இப்ப நீ என்ன பண்ணிட்டுருக்க ஜேப்பி” அழுகையோடு சுமி வினவ,

“ஏன்?  உனக்கு இதுகூடத் தெரியாமலா இருக்க!” என்றவன், தனது செயலில் கருத்தாக இருந்தான்.

எதையும் பொருட்படுத்தாது, தனது உந்துதலுக்கான கழிவறை இருக்கைபோல சுமியைப் பயன்படுத்திக் கொண்டவனின் உக்கிரமான செயலால் உண்டான வேதனை ஒரு புறம், அவளை எண்ணிய கழிவிரக்கம் மறுபுறம், இரண்டும் சுமியை மிகவும் மனம் நோகச் செய்திருந்தது.

சுமித்ராவிடமிருந்து விலகியவன், அவளின் கண்ணீரைக் கண்டு, “எதுக்கு இந்தக் கண்ணீரு.  யூஸ் அன் த்ரோ மாதிரி உன்னை யூஸ் பண்ணிட்டு விட்டமாதிரி எதுக்குடீ ரொம்பப் பண்ற.” என்றிட, ஜேப்பியின் வார்த்தையைக் கேட்டு, சுமியின் மனம் முழுவதிலும் வேதனை அப்பிக் கொண்டது.

இத்தனை மோசமாக ஜேப்பியை சுமித்ரா யோசித்திருக்கவில்லை.  தனது தேவை மட்டுமே பிரதானம் என எண்ணி, அவன் செய்த செயலை அவளால் மன்னிக்கவே இயலவில்லை.

அடுத்தடுத்து, ஜேப்பியின் ஒவ்வொரு செயலும் அவனைவிட்டு வெகுதூரம் சுமித்ராவை விலகிச் செல்லத் தூண்டியது.

 ஒரு பெண் ஆணை காமத்திற்காக வெளிப்படையாக நெருங்கமாட்டாள் என்று, நம் சமூகம் அனுமானித்து இலக்கணம் வகுத்திருக்கிறது.

அதனாலேயே, ஒரு ஆண் நெருங்கும்போது, மறுக்கும் பெண்ணை, அந்த ஆண் அத்தனை சுலபத்தில் விட்டுவிடுவதில்லை.

அப்படி தானாகவே தனது கணவனிடம் அணுகினாலும், அந்தப் பெண்ணை, ‘அந்த மாதிரி’ என வரையறுப்பதால், வேஷம் தரிக்கும் தரித்திரமிக்க செயல் சமூகத்தில் மலிந்திருக்கிறது.

          தனது எண்ணத்தையோ, செயலையோ, பேச்சையோ கண்டு கொள்ளாமல், கலவியில் மட்டுமே கருத்தாக இருந்தவனைக் கண்டவளுக்கு, கண்ட துண்டமாக வெட்டி எறியும் ஆத்திரம் மிகுந்தது.

          அதனைக் காட்டிலும், உடலின் வேதனை மேலும் அவளைச் சிந்திக்கவிடாமல் தடுத்தது.  வேதனையோடு, குளியலறைக்குள் புகுந்து கொண்டவள் நீண்ட நேரமாகியும் வெளிவரும் எண்ணமின்றி குளிர் நீரின் ஷவரைத் திறந்துவிட்டு அதனடியில் நின்றிருந்தாள்.

          உள்ளத்து வெப்பம் குறையாமல் அப்படியே இருக்க, நீண்ட நேரம் நீரின் கீழ் நின்றதால் உடல் சில்லிட்டுப் போனது. குளிரில் பற்கள் தந்தியடிக்கத் துவங்கியிருந்தது.

          தனது வாழ்வு ஜேப்பியுடன் துவங்குவதாக இருந்தாலும், இப்படித் துவங்க வேண்டுமென்கிற அவளின் கற்பனைக் குழந்தை கலைந்து, அவளின் கண்ணீரில் அது கரைந்து நீரோடு மறைந்திருந்தது.

          அன்பு என்பது இருவருக்குள் ஏற்படும் ஒரு வேதியியல் இணைப்பு.  அதுவே காமம் எனில் அங்கு உயிரியல் இணைப்பு ஏற்படும்.

          ஆனால், சுமித்ரா, ஜேப்பி இருவருக்கிடையே நடந்த உற்சாகமும், உல்லாசமும் இல்லாத உயிரியல் இணைப்பால், முன்பே உண்டாகியிருந்த வேதியியல் இணைப்பின் பிணைப்பில் நலிவு தோன்றிப் பிரிந்திடத் துவங்கியிருந்தது.

          ஜேப்பியைப் பொருத்தவரையில் தம்பதியரிடையே ஏற்பட்ட உறவானது, சுய இன்பத்தின் ஒரு திருப்திகரமான மாற்று வழியாக மட்டுமே அமைந்தது என்று கூறினால் அது மிகையல்ல.

          இதேநிலை நீடித்தால், அமைதியை தத்தெடுத்துக் கொண்ட சுமித்ராவும் தனது எதிர்ப்பை வார்த்தைகளின் மூலமோ, செயல்களின் வழியிலோ காட்டி, தன்னைக் காத்திட முனைவாளோ!

          எதையும் சிந்திக்க முடியாமல், நடு இரவில் நீண்ட நேரம் நீருக்கடியில் நின்றதால் உண்டான அதீத குளிரின் காரணமாக உடல் விரைத்திட, உறைந்து போனநிலையில் குளியலறையில் கிடந்தவளின் நிலை என்ன?

***