தோளொன்று தேளானது 11

தோளொன்று தேளானது! 11

          நீண்ட நேரமாகியும் வெளிவராத சுமித்ரவைத் தேடி குளியலறை அருகே சென்றவன், “சுமீஈ…” என இரண்டு முறை அழைத்தான். முனகல் சத்தம் மட்டுமே வந்தது. 

பதில் பேச விரும்பாமல் இருக்கிறாளா? இல்லை வேறு ஏதேனும் பிரச்சனையா என ஒரு நிமிடம் தாமதித்தவன், அடுத்து கதவை உடைத்துக் கொண்டு குளியலறையைத் திறக்க, குளிர் நீர் வரும் ஷவருக்கடியில் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தவளைக் கண்டு, “ஏய், இந்த நேரத்தில இங்க என்னடீ பண்ணிட்டுருக்க?” ஓடிச்சென்று ஷவரை மூடினான்.

ஹீட்டர் இருந்தும், அதைத் தவிர்த்தவளின் மனம் ஜேப்பிக்கு தெளிவாகப் புரிந்தே இருந்தது.

சாதாரணமாக அவள் அமர்ந்திருப்பதாக எண்ணிக் கையை நீட்டி, எழு என செய்கையில் காட்டியவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் சுமி.

“என்னடீ! ஏன் யோசிக்கிற?” என்றதோடு அவளின் நிலை உணர்ந்து, “நான் முகத்தைத் திருப்பிக்கறேன்.  எழுந்து வா” என முகத்தைத் திருப்பியவாறு கை நீட்டினான் சுமியை நோக்கி.

ஆடைகளின்றி இருந்ததால், தனது முன் எழ யோசிக்கிறாள் என நினைத்து ஜேப்பி அவ்வாறு கூறினான்.

அப்போதும் எழாமல், எதுவும் பேசாமல் அதே நிலையில் இருந்தவளைத் திரும்பிப் பார்த்தவன், “என்னடீ.  ஏன்? வரமாட்டிங்கற?” எனத் தடுமாற்றத்தோடு தாமதிக்க,

அப்போதும் அசையாமல் அப்படியே இருந்தவளைப் பார்த்து, “என்ன செய்யுதுடீ?” பதறி அவளின் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்தபடி, தனது கரங்களால், அவளின் கன்னங்களைத் தாங்கியபடி கேட்டான் ஜேப்பி.

அப்போதும் அவளின் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது.  தலையிலிருந்தும் நீர் வழிந்திட, ஜேப்பியின் கைகளைத் தீண்டிய நீரின் வெப்பம் அது அவளின் கண்ணீர் என்பதை ஜேப்பிக்கு உணர்த்திட,  அதற்குமேல் யோசிக்காமல் சுமித்ராவைக் கைகளால் தாங்கிக் கொண்டான்.

          மிக நெருங்கிய நிலையில் அவளின் தேகம் பார்த்தவனுக்கு சுமியின் நிலை அவள் கூறாமலேயே புரியத் துவங்கியது.  நீண்ட நேரம் நீரில் இருந்தமையால் தேகத்தின் தோல் நிறம் மாறியிருக்க, அதனைக் கண்டவன், வேகமாக சுமித்ராவைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தான்.

          புத்தி நினைப்பதைச் செய்ய, பேச முடியாமல், புத்தரைப் போலவே அமைதியாக இருந்தாள் சுமி.

          ஜேப்பியைச் சுற்றி வரும் பெண்களைப் பற்றி, பிறர் பேசக் கேட்டிருக்கிறாள்.  அவனாகவே எந்தப் பெண்ணையும், தொட்டுப் பேசக் கண்டதில்லை.

          சற்று இடைவெளிவிட்டு பெண்களிடம் பேசுபவனைச் சுற்றி, தேனடையில் மொய்க்கும் தேனீக்களைப்போல, அவனைச் சுற்றி பெண்கள் இருப்பதைக் கேட்டிருக்கிறாள், நேரிலும் கண்டிருக்கிறாள் சுமி. 

ஆனால், ஜேப்பி அத்தகையவன் எனத் தெரிந்தும், அவன் பின்னோடு சென்ற மனதைக் கடிவாளமிட முயன்று தோற்றவள், இன்றும் அவனை மறுத்திட முடியாமல், அவனைத் தேடிய தனது நிலையை எண்ணித் துவண்ட உள்ளத்தை அவள் பார்வை தெளிவாகச் சொன்னது.

காட்டன் டவலைக் கொண்டு சிறு குழந்தைக்கு நீரை ஒற்றி எடுப்பதுபோல, சுமியின் உடலெங்கும் நின்றிருந்த நீர்த் துளிகளைப் பரபரவென ஒற்றி எடுத்தான்.

அவளால் இம்மியளவும் நகர முடியவில்லை.  பற்கள் இன்னும் தந்தியடிக்க, உதடுகளின் நடுக்கமே அவளின் நிலையைச் சொன்னது.

சுமியின் மறுப்பான பார்வையை உணர்ந்தவன், “அறிவிருக்கா உனக்கு?  இப்பவும் நான் தொட்டது உனக்கு அவ்ளோ வெறுப்பா இருக்கு!” என்றவன்,

“நீ என்ன சின்னப் புள்ளையா?  இந்த நேரத்தில யாராவது போயி குளிப்பாங்களா?  அப்டியென்னடீ அவசரம்!” என்றபடியே, அவளின் கூந்தலில் இருந்து வழிந்த நீரைக் கையால் பிழிந்துவிட்டான்.

பல்லைக் கடித்தவாறு, “அவ்ளோ அருவெறுப்பா இருக்கனா நான்?” கேட்டபடியே, வார்ட்ரோபைத் திறந்து, பாத்ரோபைத் தேடினான். பாத்ரோப் கண்ணில் படவில்லை.

“ச்சே…” என ஒவ்வொன்றையும் சத்தத்தோடு அடைத்தவன், “எது எங்க இருக்குன்னு தெரியலை” அவசரத்தோடு தேடினான்.

அடுத்தடுத்து, ஒவ்வொரு கதவையும் திறந்தவன், இறுதியாக வெண்மை நிற காட்டன் பாத்ரோபை எடுத்துக் கொண்டு சுமியிடம் வந்து அதனை குழந்தைக்கு அணிவிப்பதுபோல அணிவித்திருந்தான்.

          எதையெல்லாம் அசூசையாக எண்ணினாளோ, அதையெல்லாம் அவன் எந்த தயக்கமோ, வேறு உணர்ச்சிக்கோ இடம் கொடாது, கருத்தோடு கவனமாகச் செய்ததையும் பார்த்திருந்தாள்.

          ஹீட்டர் கொண்டு தலை முடியைக் காயவைக்கும் முயற்சியில் இறங்கியவன், “எப்டி இருந்தவனை , என்னல்லாம் செய்ய வைக்குற!” கேட்டவாறு முடியை உணர்த்தியவனை, நேருக்கு நேராகக் காண முடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் சுமி.

ஓரளவிற்கு முதலுதவிகளை திறம்படச் செய்திட்ட திருப்தியில்,  அவளை அப்படியே விட்டுவிட்டு கீழிறங்கிச் சென்றான்.

          தன்னால் தனது எண்ணத்திற்கு ஏற்றாற்போல குளியலறையில் செயல்பட முடியவில்லை என்றதுமே, ஜேப்பியை அழைக்கத்தான் எண்ணினாள் சுமி. 

ஆனால் சுமி குரலெழுப்பிய நிலையில், வெறும் காற்றுதான் வந்தது.

          வாயிலிருந்து வார்த்தைகள் வராமல் இருந்ததும், முயன்று முயன்று தோற்ற நொடியில், தான் இதிலிருந்து மீள முடியாமல், அப்படியே உறைந்து மரணித்துவிடுவோம் என்றே சுமிக்குத் தோன்றியது.

          பயம் வந்து ஆட்கொண்டபோது, அவளையறியாமலேயே மனதோடு, ‘ஜேப்பி, எந்திரிச்சு வந்து என்னைக் காப்பாத்து’ கூக்குரல் எழுப்பினாள். 

ஆனால், சாதாரண அவளின் குரலே வெளிவராத நிலையில், மனதோடு எழுப்பிய குரல், யாருக்கு எப்படிக் கேட்கும்.  அவளால் தான் கனவு கண்டிருந்த எதிர்காலத்தை வாழ முடியும் என்கிற நம்பிக்கை பொய்த்த நிலைக்கு அப்போது சென்றிருந்தாள்.

          தனது தேவையை முடித்துக் கொண்டு முதுகுகாட்டிப் படுத்திருந்தவன், தான் குளியலறைக்குள் சென்றதையோ, இவ்வளவு நேரம் தான் உள்ளே இருப்பதையோ கவனித்தானோ என்னவோ என நினைத்தவள், மூடிய குளியலறைக்குள் தான் ஜல சமாதியாவது உறுதி என நினைத்திருந்தாள்.

ஜேப்பியின் இந்தளவிற்கான பொறுப்பான செயலை நிச்சயமாக சுமி அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. நடந்த அனைத்துமே கனவுபோல இருந்தது சுமிக்கு.

சற்று நேரத்தில், சூடான பாலோடு மேலேறி வந்தவன் சுமியிடம் நீட்டி, “இந்தப் பாலைக் கொஞ்சம் சூடா குடி” என நீட்ட, அதனை வாங்க முடியாமல் தவிப்பாய் அவன் முகத்தையும், தனது கையையும் மாறி மாறிப் பார்த்தவளின் பார்வையில்,  அவளின் கைகளைக் கவனித்தவன், தானாகவே சிறுகச் சிறுக சுமிக்குப் பாலைப் புகட்டினான்.

அதன்பின் உள்ளங்கை, உள்ளங்கால்களை சூடுபறக்கத் தேய்த்து விட்டான். நீண்ட நெடிய பல முதலுதவி செய்தும்,  இன்னும் பழைய நிலைக்கு திரும்பாத சுமியைக் கண்டவன், தன்னையே மெத்தையாக்கி தனது மார்பில் சுமியைக் கிடத்தி, இயல்புக்கு திரும்பாமல் அணத்தியவளை, தன்னோடு பிளாங்கெட்டிற்குள் கொண்டு வந்து அணைத்துக் கொண்டான்.

பிளாங்கெட்டின் வெளிக்காற்றுப் புகாத தன்மையோடு, ஜேப்பியின் உடல் வெப்பமும் இணைந்து, சுமியை படிப்படியாக பழைய நிலைக்கு கொணர்ந்தது. 

சுமிக்கு, ஜேப்பி தனது உடல்நிலை கருதி, அவனது உணர்வுகளை மிகவும் முயன்று கட்டுப்படுத்தியவாறு, தன்னை அணைத்திருப்பது அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அது புரிய வந்ததும், அவனுக்கு தன்னால் சங்கடம் வேண்டாம் என எண்ணி படுக்கையில் படுக்க நினைத்து அசைந்தாள்.

உடல்நிலை  மீளும் வரை எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்தவள், உடல்நிலை சற்றுத் தேறியதும் அசைவதைக் கண்ட ஜேப்பி, “இப்போ ஓகேவா?  இல்லை ஹாஸ்பிடல் போயிட்டு வருவோமா?” வினவ,

தலையசைத்து வேண்டாமென மறுத்தவளிடம், “இன்னும் வாயத் திறக்கவே முடியலைன்னா, லேட் பண்றதுல அர்த்தமே இல்லை” என்று ஜேப்பி கூறியதும்,

பதறிப் போனவள், “இல்லை, எனக்கு இப்போ ஓகே” தடுமாற்றத்தோடு பதிலளித்தாள் சுமி.

“கொஞ்ச நேரத்தில, மனுசனை கிறுக்காட்டிட்ட” என்றவன், “இனி எந்த ரூமையும் அடைக்காத நீ.” என்றவாறு அவளை தனித்து படுக்கையில் விட்டவன், படுக்கையிலிருந்து இறங்கிப் படுத்தவளுக்கு பிளாங்கெட்டை அக்கறையோடு போர்த்திவிட்டு, அறையைவிட்டு உடனே வெளியே சென்றுவிட்டான்.

பதில் கூற வாயைத் திறக்குமுன் வெளியே சென்றுவிட்ட ஜேப்பியைக் கண்டு, வாயை மூடிக்கொண்டு படுக்கையில் சரிந்தாள் சுமி.

“கோழி கூவறதுக்கு முன்னே எங்கே போகுது?” என தனக்குத்தானே ஜேப்பி செல்வதைப் பற்றிச் சத்தமாகக் கேட்டுக் கொண்டவள், எப்போதும் விழிப்போடு செயல்படும் தனக்கு இங்கு வந்தது முதலே அனைத்திலும் தடுமாற்றம் உண்டாவதை எண்ணி யோசித்தாலும், ஓய்வுக்கு கெஞ்சிய உடல் அவளையும் மீறி உறக்கத்தை தழுவத் துவங்கியது.

கூடலின்போது உண்டான வெறுப்பு, இடையில் நிகழ்ந்த நிகழ்வால் மாயமாய் மறைந்து போனதை உணரும் முன்னே உறங்கிப் போயிருந்தாள் சுமி.

இடையில் அறைக்குள் வந்து, ஒரு மணித் தியாலத்திற்கு ஒரு முறை அவளின் நெற்றியைத் தொட்டு, உடல் வெப்பத்தை ஆராய்ந்த ஜேப்பி அங்கு வந்து சென்றதே தெரியாமல் உறங்கினாள் சுமித்ரா.

ஆன்மா தேடிய தேடலுக்கான அன்பும், கருணையும் தனக்கானவன் என நம்பியவனிடத்தில் தனக்காக மறைந்து இருந்ததைக் காணும் சந்தர்ப்பத்தைக் கடந்து போனதால் உண்டான நிறைவோ!

***

விடியலில் சுமியின் அறைக்கு வந்த தேவி, சுமி உறங்குவதைப் பார்த்துவிட்டுச் சென்றிருந்தாள்.  பதினோரு மணிவரை, அவ்வப்போது வந்து பார்த்தவள், இன்னும் சுமி விழிக்காததை எண்ணி, அவளுக்குள்ளாகவே முந்தைய இரவில் நடந்ததை எண்ணிக் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டவாறு முறுவலிப்போடு சுமியைப்  பார்த்துவிட்டுச் சென்றாள்.

அதன்பின் உறக்கம் கலைந்து எழுந்த சுமியைக் காண வந்தவள், அவளின் ஓய்ந்த தோற்றத்தைப் பார்த்து, “ரொம்ப அசதியா அக்கா” எனக் கேட்டுச் சிரிக்க,

“ம்.  ஆமா” என ஆமோதித்த சுமிக்கு ஆரம்பத்தில், தேவி எதைப் பற்றிக் கேட்கிறாள் எனப் புரியாமல் பதிலளித்தாள்.  அதன்பின் பல் துலக்கி வந்ததோடு, “எதாவது லைட் ஃபுட்டா சீக்கிரம் தா” என தேவியிடம் கேட்டாள்.

“குளிச்சிட்டு வாங்கக்கா  அதுக்குள்ள நான் எடுத்துட்டு வரேன்” எனக் கூறிய தேவியிடம் பதறியவாறு, “அதுலாம் நைட்டே குளிச்சிட்டேன்.  குளிக்கறதுன்னால இப்போ எனக்குப் பயந்து வருது.  மொதல்ல சாப்பாடு.  அப்புறமா எதுனாலும் யோசிக்கலாம்” எனக் கூறியவளைப் பார்த்து, தேவி நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தாள். 

தேவியின் தெலுங்கு வார்த்தைகளைக் கொண்டும், முன்பே அம்மொழியின் பரிச்சயத்திலும், சுமி தற்போது சிறு துண்டு, துண்டு தெலுங்கு வார்த்தைகளை பயன்படுத்தி அவளிடம் பேசினாள்.

தேவியைப் பொறுத்தவரையில், முந்தைய தின முதலிரவிற்குப்பின் நடந்த விசயங்களை சுமி உரைப்பதாக எண்ணிக் கொண்டு, “இதையெல்லாம்போயி எங்கிட்டச் சொல்லிக்கிட்டு.  போங்கக்கா” என வெட்கத்தோடு சிரிக்க,

முதலில், தேவியின் பேச்சு புரியாமல் இருந்தவளுக்கு, அவளையே அழைத்து என்னவென விசாரிக்க, அவளும் வெட்கத்தோடு, விசயத்தை சுமியிடம் முந்தைய நாளின் இரவைப் பற்றிக்கூற, சுமிக்கு திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை. 

என்னவென்று தேவியிடம் உரைப்பது. “நீயா எதாவது யோசிக்காத.  இப்ப என் கண்ணு முன்ன நிக்காம, சீக்கிரமாப் போயி சாப்பிட எதாவது எடுத்துட்டு வா” என்று கூறி தேவியை தனது அறையிலிருந்து விரட்டினாள் சுமி.

‘மோசமான எக்ஸ்பீரியன்ஸ் எனக்குக் கிடைச்சதே தெரியாம, இவளா எதையாவது கற்பனை பண்றதோட, அதை வெக்கமே இல்லாமக் கேட்டு என்னைக் கடுப்பேத்திட்டு இருக்கா’ என தனக்குத்தானே நொந்துகொண்டாள் சுமி.

இடையிலேயே அவளின் அறைக்குள் இருந்த குளியலறைக் கதவு சரி செய்யப்பட்டது. சரிசெய்ய வந்தவர்கள், வேலையைச் செய்துவிட்டு நகர்ந்தபோது, சுமிக்கு ஏதோ உறுத்தல். ‘வந்ததுக்கு, ரெண்டு கதவை உடைச்சாச்சு’ என்பதாக.

***

அன்றைய தினம் முழுமைக்கும் ஜேப்பியைக் காணவே இல்லை.

மாலையில் அறைக்குள் நுழைந்தவன், சுமியைக் காணாது தேட, குளியலறையோடு இருந்த கழிவறையைப் பயன்படுத்திவிட்டு வெளியே வந்த சுமியைக் கண்டவன், “உங்கிட்ட  ஒரு தடவை சொன்னா கேக்க மாட்டியா?” வினவ

“என்ன சொன்ன?” கடுப்போடு கேட்டாள் சுமி.

“கதவை அடைக்காதன்னு சொன்னேன்ல” ஜேப்பியும் உக்கிரமாகக் கேட்டான்.

“அடைக்கத்தான் செய்வேன்” அடமாகக் கூறியவளை, நிதானமாகப் பார்த்தவன், “உனக்கென்னம்மா நீ பாட்டுக்கு அடைச்சிப் போட்டுட்டு, படுத்துக்கிட்டே கனவு காணுவ.  குளிக்கப் போயி ஃப்ரீஷ் ஆகிக் கிடப்ப.  ஆனா, எல்லாக் கதவையும் ஒடைச்சுப் போட்டுட்டு நான் என்ன செய்யறது?” என்றான் சிரிக்காமல் சீரியசாக.

“அப்ப எனக்காகச் சொல்லலை.  இப்ப உங்கதவு போனதுதான் வருத்தம்!  அப்படித்தானே!” குதர்க்கமாகக் கேட்டாள் சுமி.

சுமியின் இந்த புதிய அவதாரத்தை எவ்வாறு எதிர்கொண்டான் ஜேப்பி?

***