தோளொன்று தேளானது 13

TT copy-726daaee

தோளொன்று தேளானது! 13

வீட்டிற்கு வந்தபின், சுமித்ராவிற்கு ஷ்யாமுடன் செலவளிப்பதிலேயே நேரம் கடந்தது. ஜேப்பியின் அறைக்கு இதுவரை சுமித்ரா சென்றதில்லை.  அவனாக, சுமியைத் தேடி வருவதுதான் இயல்பாக இதுவரை நடந்திருந்தது. 

ஆகையினால், அவனது தேவைக்காக, மனமிருந்தால் நேரம் கிடைக்கும்போது வருவான் என சுமியும் ஜேப்பியின் வருகையைப் பற்றி அதிகம் சிந்தித்தாளில்லை.

ஒரு நாள், இரண்டு நாளானதும் ஷ்யாம் பள்ளிக்குச் சென்றபிறகு தனித்திருந்தவளுக்கு, ஜேப்பி சிந்தையில் வந்திருந்தான். ‘என்னாச்சு.  ஆளையே கண்ணுல காணோம்’ என எண்ணியவாறு இருந்தவள், தேவியைக் கண்டதும், “எங்க உங்க அய்யா?” என்றாள்.

“எங்கிட்டக் கேக்கறீங்கக்கா?” தேவி ஆச்சர்யமாகக் கேட்டாள்.

திருமணத்திற்கு பிறகான நாள்களில் பெரும்பாலும், ஜேப்பி சுமித்ராவைத் தேடி அவளின் அறைக்கு வந்து போவதை அறிந்திருந்தவள், சுமி திடீரென இவ்வாறு கேட்டதும், கிண்டலுக்கு கேட்பதாக எண்ணிப் பேசினாள் தேவி.

ஏதோ மனதில் வெறுமையும், வேலைக்காரியிடம் தான் இப்படிக் கேட்டிருக்கக்கூடாதோ என்கிற விழிப்பில், “ஜேப்பி இருந்தா எப்பவும் எதாவது ஏவிக்கிட்டு, எல்லாத்தையும் அரட்டிட்டு அங்கங்கே எல்லாம் ஜரூரா நடக்குமே.  இப்ப அந்த சத்தமே இல்லாம வீடு என்னமோபோல இருக்கேன்னுதான் கேட்டேன்” சமாளித்தாள் சுமி.

“இனி அவரு வரவரை இப்டிதான் அமைதியா இருக்கும்” எனச் சிரித்தவளிடம், ஜேப்பி எங்கு சென்றான் எனக் கேட்கும் தைரியம் சுமிக்கு எழவில்லை.

தன்னிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டானா? எனும் கேள்வியோடு, வேலை விசயமா போனாலும், ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாம் என எதிர்பார்த்திருந்த உள்ளம், அப்படியெதுவும் நடக்காது போனதால், அவளறியாமலேயே எங்கோ தோற்றாற்போல உணர்ந்தாள் சுமி.

சுமியின் கூம்பிப் போன வதனத்தைக் கண்ட தேவி, “அய்யா இருக்கற வரை நல்லா பிரைட்டா இருந்தது உங்க முகம்.  இப்ப வாடிப் போயிட்டீங்களே.  ரெண்டு நாளைக்கே இப்டினா, இன்னும் அவரு வரதுக்குள்ள என்ன ஆவீங்களோ” நேரடியாகவே கிண்டல் செய்தாள் தேவி.

“அப்டிலாம் ஒன்னுமில்லை.  நீயா எதாவது வாயில வரதைப் பேசாத” என்றவள், பள்ளிக்குச் சென்றிருந்த ஷ்யாமின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

காத்திருத்தல்கூட பெயரளவில்தான் இருந்தது.  அவளால், ஜேப்பி தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்றதைச் சீரணிக்கவே முடியவில்லை.

பணிகளுக்கிடையே இருக்கும்போது மனக் குழப்பமோ, அசட்டையான நிராகரிப்போ பெரியளவில் யாரையும் பாதிப்பதில்லை.  எந்த வேலையும் இன்றி இருந்தவளுக்கு, அவனது அதீத அக்கறையான செயல்பாடுகளுக்குப் பின்பான கவனிப்பு மனதைவிட்டு அகலாமல் சட்டென விட்டுச் சென்றதில், பொம்மையைத் தொலைத்த குழந்தையாக மனம் அலைக்கழித்தது.

‘ஏன் எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போகணும்னு உனக்குத் தோணலை ஜேப்பி’ உள்ளுக்குள் கதறினாள். வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல் வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தாள்.

எத்தனையோ கோபங்கள் ஜேப்பியின் மீது முன்பு இருந்தாலும், தற்போது அவன் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்றதே பிரதான துன்பமாக வந்து முன்னின்றது.

***

சூம் நிறுவன தலைமையிடத்திற்கு வந்த ஜேப்பி, சாந்தனை அழைத்து, “அந்தப் ப்ருத்வி என்ன பண்றான்” எனக்கேட்டு அறிந்து கொண்டவன், “அவனுக்கு டோசேஜ் ஸ்கிப் பண்ணாம ஒழுங்கா கொடுக்கறாங்களானு அப்பப்போ கன்பார்ம் பண்ணிக்கோ” என்றவன்,

“அவன் வாழறதுக்கு, தேவையான அளவு உழைக்கிறதுக்கு வேண்டிய விசயங்கள் மட்டும் இருந்தா போதும்.  அதுனால, அந்தப் பச்சிலை மருந்தை சொன்ன அளவுக்கு மேல ஒரு ட்ராப்கூட கூட்டிறக் கூடாது.  ரொம்ப கவனமா இருக்கணும்” என்றவன், சுமி மற்றும் ப்ருத்வி இருவரின் அலைபேசி எண்களைக் குறிப்பிட்டு,

“இன்னும் சிக்ஸ் மன்த்ஸ்கு இந்த ரெண்டு நம்பர்கும் வரக்கூடிய எல்லா கால்ஸ்ஸையும் கவனமா அட்டெண்ட் பண்ணணும்.  ப்ளஸ் ரெக்கார்ட் பண்றதையும் மறந்துறக் கூடாது” எனக் கட்டளையிட்டவன்,

சில எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு எப்படி பதில் கூற வேண்டும் என்பதையும், சில அழைப்புகளை நிராகரிக்கவும் கூறி அவனை வழிநடத்தினான். 

அதன்பின் கட்டிட நிறுவன அலுவலகத்திற்குச் சென்று, தனது மெயிலுக்கு வந்த தகவல்களைப் பார்க்கத் துவங்கினான் ஜேப்பி.

கார்த்திக்கிடமிருந்த வந்த தகவல்களை நிதானமாக வாசித்தவன், “இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான் கார்த்தி.  அதனால, உன்னோட ஷேர் எதுவும் தனியா பிரிச்சிக்கிற ஐடியா இருந்தா சொல்லு. ரெண்டு பேருமா, எங்க வச்சிப் பேசலாம்னு சொன்னா, அதுக்கு ஏத்த மாதிரி பண்ணிக்கலாம். 

ஆனா, நம்ம எஸ்ப்பி(சிவபிரகாசம்) முன்ன வச்சி, எந்தப் பேச்சு வார்த்தைக்கும் நான் தயாரா இல்லை. என்னோட போன் மிஸ்ஸாகிருச்சு.  பழைய நம்பர் இன்னும் வாங்கலை.” என பொய்யான தகவலை பகிர்ந்து கொண்டான். 

“அதனால, அர்ஜெண்ட் விசயம் எல்லாம் என்னோட மெயில்லயே கன்வே பண்ணு.  நம்பர் வாங்கிட்டு நானே லைன்ல வரேன்” என தனது எண்ணத்தை மறைக்காமல் பதில் செய்தியாக தமையனுக்கு அனுப்பிவிட்டான் ஜேப்பி.

கார்த்திக், ஜேப்பி அளவிற்கு தாமதிக்காமல், “நான் அவருகிட்ட டைம் கேட்டுருக்கேன்.  அதனால அவசரமில்லை. இப்டியே இருக்கறதில எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை.  உனக்கு எப்டித் தோணுதோ அப்டி பண்ணிக்கலாம்.

மயூரிக்கு பேபி பிறந்ததுக்குப் பின்ன நீ வீட்டுக்கு வரவே இல்லைனு ஃபீல் பண்ணா.  முடிஞ்சா சென்னை வந்திட்டுப் போ.  அவ, உன் வயிஃபை மீட் பண்ணணும்னு சொன்னா.  நேருல வர முடியலைன்னாலும், அவகிட்ட போன்ல பேச ட்ரை பண்ணு” என பதில் அனுப்பியிருந்தான் கார்த்திக்.

மச்சிலிபட்டினத்தை சுற்றியுள்ள ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திற்குப் பிறகான பயணத்தில் மட்டுமே, ஜேப்பி அவனது பழைய பேசி எண்ணை உபயோகப்படுத்தினான்.

சில அசௌகரியங்களை தவிர்க்கவே, சுமித்ராவின் பேசியை அவளிடம் கொடுக்கவில்லை.  ஆனாலும், வீட்டில் தரைவழி தொலைத்தொடர்புச் சேவைக்கான பணிகளைச் செய்துவிட்டே கிளம்பியிருந்தான்.

பழைய எண்ணை பெரும்பாலும் உபயோகப்படுத்துவதைத் தவிர்த்திருந்தவன், புதிய எண்ணிலிருந்து கார்த்திக்கிற்கும், பிறகு மயூரிக்கும் அழைத்துப் பேசினான்.

கார்த்திக்கோ, “என்னடா, தாத்தா என்னவெல்லாமோ சொல்றாரு.  சுமிக்கு குழந்தை அது இதுன்னு” பேச்சோடு கேட்க,

“நான் என்னடா ஸ்கூல்ல படிச்சிட்டிருக்கும்போதா , குழந்தை பெத்துட்டேன்.  அவரு சொல்றாருன்னு, எங்கிட்ட நீயும் சில்லியா வந்து கேக்கற” சிரித்து மழுப்பினான் ஜேப்பி.

“அப்ப, குழந்தையிருக்கறது உண்மைதானாடா?” நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் கேட்டான் கார்த்திக்.

“இதையெல்லாம் எதுக்கு தேவையில்லாமக் கணக்கெடுக்கறாராம் அந்த எஸ்ப்பி(சிவபிரகாசம்).  அந்தஸ்தைக் காரணங்காட்டி, அப்பாவி சுதா அத்தையைப் போட்டுத் தள்ளுன மாதிரி, எங்களையும் போட்டுத் தள்ளப் பிளானா?” சிரித்தபடியே கார்த்திக்கிடம் வினவினான் ஜேப்பி.

அந்தக் குரலில் நிச்சயமாகப் பயமில்லை.  எது வந்தாலும் சமாளிக்கும் திடமிருந்தது.  ஆனால் அதனைக் கண்டு கொள்ளும் வல்லமை எதிர் முனையில் பேசுபவனிடம் இருக்கவில்லை.

“சேச்சே.  அவருதான் அப்டி செஞ்சார்னு நீ எதை வச்சி சொல்ற.  அவங்க போன வண்டி ஆக்சிடெண்ட் ஆனதை, நீயா தப்பா இட்டுக்கட்டிச் சொல்லாதடா” கண்டித்தான் கார்த்திக்.

“நீ வேணா எஸ்ப்பிய நம்பு.  நான் வேணாங்கலை.  ஆனா, நான் எக்காலத்திலயும் நம்பமாட்டேன்.” என்றவன்,

“எனக்கு அப்போ நடந்தது எல்லாம் நினப்பிருக்கு. அவரு யாருகிட்ட பேசுனார்னு தெரியாது.  ஆனா என்ன பேசுறாங்கனு என்னால அண்டர்ஸ்டான்ட் பண்ண முடியும். 

அப்போ என்னைய எங்க போனாலும் கூட்டிட்டே சுத்துவார்.  நானும் உங்களோடல்லாம் விளையாட வராம, அவரு கூப்டதும் கிளம்பிருவேன்.

நான் சின்னப் பையனா இருந்ததால எனக்கு எதுவும் விளங்காதுன்னு, என்னை வச்சிட்டேதான் அப்ப எல்லாம் ப்ளான் பண்ணாரு இந்த எஸ்ப்பி. 

அதனால, அவரைப் பத்தி உங்களுக்கெல்லாம் தெரிஞ்சதைவிட, எனக்கு கூடுதலாவே தெரியும்” உரைத்தவன், அடுத்து தொழில்முறை பேச்சிற்கு மாறி நீண்ட நேரம் கார்த்திக்கோடு  விவாதித்தான்.

அதன்பின், மயூரிக்கு அழைத்தான்.

“எங்ககிட்டக்கூட ஒரு வார்த்தை சொல்லாம கல்யாணம் பண்ணிட்டுருக்கீங்க.  இதெல்லாம் நல்லாவா இருக்கு” மயூரி வருத்தத்தோடு ஜேப்பியிடம் கேட்டாள்.

“அதுக்கு சாரிலாம் என்னால கேக்க முடியாது. இப்டிதான் நடக்கணும்னு இருந்தது. நடந்திருச்சு” என்றவன் பேச்சை மாற்றிட எண்ணி, “ஜூனியர் கார்த்தி எப்டி இருக்காரு?” என்றிட

“அவருக்கென்ன.  பால் குடிக்க, தூங்கன்னு நல்லாப் பொழுது போகுது” என்றவள்,  “எதுக்கு இப்டி அவசர அவசரமா யாருக்கும் தெரியாமப் போயி கல்யாணம் பண்ணிட்டீங்க. அவங்களை இன்னும் எங்க கண்ணுலயும் காட்டாம இருக்கீங்க” மயூரி வினவ

“இல்லைனா எங்க எஸ்ப்பி, வேற யாரையாவது என் தலையில இன்னேரம் கட்டியிருப்பாரு.  அதான் யாருக்கும் சொல்லல” என்றவன், அவளின் வேண்டுதலுக்கு இணங்க,

“சுமிய பங்களூர் கூட்டிட்டு வரும்போது, நீங்களும் இங்க வாங்க.  ரெண்டு பேரும் மீட் பண்ணி பேசிக்கங்க” தனது எண்ணத்தைக் கூறிவிட்டு வைத்திருந்தான் ஜேப்பி.

***

சிவபிரகாசம், தன்னால் இயன்றளவில் ஜேப்பியைப் பற்றிய தகவல்களை சேகரித்தவண்ணமிருந்தார்.  அவரின் மனைவி மீனாட்சிக்குத்தான் ஜேப்பியைப் பற்றிய கவலை அதிகரித்திருந்தது.

‘இந்தப் பைய, இப்டியொரு காரியத்தைப் பண்ணி என் நிம்மதியைப் பறிச்சிட்டானே.  இன்னும் இந்த மனுசனோட அந்தஸ்து வெறிக்கு யாரெல்லாம பலிகடாவாகப் போறாங்களோ!” எனும்படியாக மீனாட்சியின நிலை இருந்தது.

சிவபிரகாசம், வெளியிடங்களில் ஒரு ஞானவான்போலவும், தொண்டுகள் பல செய்து புகழோடு வலம் வந்தாலும், அவரின் இன்னொரு முகம் அறிந்த நபர்கள் மிகச் சிலரே.  அதில், அவரது மனைவியும், ஜேப்பியும் அடக்கம்.

அவருடன் தனது இளம்பிராயத்து நாள்களை அதிகம் கழித்ததாலோ என்னவோ, ஜேப்பியும் சில நேரங்களில் எஸ்ப்பியைப்போல மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதாக, தனக்குள்ளாகவே சுயபரிசோதனையின் வாயிலாக சில ஆண்டுகளுக்கு முன்பே கண்டு கொண்டிருந்தான்.

வைரத்தை வைரத்தால் அறுக்க மட்டுமே முடியும் என்கிற உண்மையினை அறிந்தவர்கள், அறநீதியோடு வாழ நினைக்க மாட்டார்கள் அல்லவா.

அதுபோன்ற நபர்கள், வஞ்சனைக்கு வஞ்சனை, பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம் எனும் ரீதியிலான வாழ்க்கை முறையை மட்டுமே தேர்ந்தெடுக்க நினைப்பார்கள்.

தனது திருமணம் சுமித்ராவுடன்தான் என ஜேப்பி தீர்மானித்ததுமே, அவனது நினைவில் வந்து நின்றது, அந்தஸ்து வெறிக்குப் பலியான சுதா அத்தையின் நிலைதான்.

சுதாவிற்கும், அவரது குடும்பத்திற்கும் உண்டான நிலை தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் வரக்கூடாது எனில் என்ன செய்ய வேண்டும் என்பதே ஜேப்பியின் ஆரம்ப கட்ட சிந்தனையாக இருந்தது.

அதற்கான ஆயத்தப் பணிகளில் யாருக்கும் சந்தேகம் உண்டாகாத வகையில் தன்னிச்சையான முடிவோடு, தீவிரமாக ஈடுபட்டிருந்தான் ஜேப்பி. 

தனக்கு எண்ணம்போல வாழ்க்கை அமைய, இடையூறாக யார் வந்தாலும், இயன்றவரை போராடி எதிராளியை மாய்த்தேனும், தான் உயிர் வாழ வேண்டும் எனும் கொள்கையோடு இருந்தவனை, பெற்றோரும் உடன் பிறந்தோரும் கண்டு கொள்ளாதது அவர்களின் அறிவீனமே.

தெளிவோடு இருந்தமையால்தான், எஸ்ப்பி தன்னிடம் பகிர்ந்த சுமியைப் பற்றிய விசயம் கேட்டதும் சுதாரித்துக் கொள்ள ஜேப்பியால் முடிந்தது.  இல்லையெனில் எஸ்ப்பியின் ஆணவ வெறிக்கு இன்னேரம் பலிகடாவாகியிருப்பான் ஜேப்பி.

ஆனால் எஸ்ப்பி எனும் சிங்கத்திற்கு, தன்னைப்போல தனது குடும்பத்தில் மற்றுமொரு சிங்கம் உருவானதை சற்று தாமதமாகவே கண்டு கொண்டது.

சரியாகக் கணிக்காமல், தான் செய்த அறிவீனத்தை எண்ணி, கிழட்டுச் சிங்கம் தவித்துக் கொண்டிருக்க, தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டாலும், எதிராளியின் பழிவெறிக்கு தன்னையோ, தன்னைச் சார்ந்தவர்களையோ காவு கொடுத்துவிடக் கூடாது எனும் முயற்சியில் தீவிரமாக இளஞ் சிங்கம் ஒன்று தனிமையில் போராடி வருகிறது.

காலதாமதமானாலும், தனது கொள்கையில் விடாப்பிடியாக நின்று, தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள ஏதுவான நேரத்திற்காக கிழட்டுச் சிங்கம் வெறியோடு நித்தமும் காத்துக் கொண்டிருக்கிறது.

***

சுமித்ரா, ஷ்யாம் இருவரின் பேச்சு மற்றும் செயல்பாடுகளை, நேரங்கிடைக்கும்போது எடுத்து பார்த்துக் கொண்டான் ஜேப்பி.

சுமித்ரா தனது விளக்கமில்லா கட்டுப்பாடுகளை எதிர்க்காமல் இந்தளவிற்கு அமைதியாக இருப்பாள் என எதிர்பார்த்திராதபோதும், வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டே வந்திருந்தான்.

இருபது நாள்களுக்குமேல் பணிகளைக் கவனிக்காமல் பொறுப்பில் விட்டிருந்தவன், அனைத்து கிளைகளுக்கும் சென்று நேரில் இதுவரை நடந்த வேலைகளின் நிலையைப் பார்வையிட்டான். 

ஒவ்வொரு கிளையிலும், இரண்டல்லது மூன்று நாள்கள் என தங்கி வேலைகளை முடித்துக் கொண்டு பழையபடி பங்களூர் அலுவலகத்திற்கு வர, ஏறத்தாழ மேலும் இருபது நாள்கள் முடிந்திருந்தது.

இடையில் சுமியுடன் பேசவோ, காணவோ நினைக்காமல் கடிவாளமிட்ட குதிரையைப்போல பணியில் மட்டும் கவனத்தைச் செலுத்தினான் ஜேப்பி.

தன்னையே நினைத்து உருகிக் கரைபவளைக் காண நேரமின்மையால், அவளுடன் கலந்து கரைந்த நிமிடங்களை போஷாக்காகக் கொண்டு வெறுமையை விட்டு விலகினான்.

***

ஷ்யாம் இருக்கும்போது சுமியின் பொழுதுகள் அவனோடு சென்றது.  மாலை நேரத்தில், அவனோடு விளையாடுவதை வாடிக்கையாக்கியிருந்தாள் சுமி.

பள்ளியிலிருந்து வந்து சிற்றுண்டி முடித்தபின் தாயும் மகனுமாக விளையாடத் துவங்கியிருந்தனர்.  ஒரு மணித் தியாலத்திற்குமேல் ஆகியிருந்தது.

“மீ, நான் பால் போதுதேன்.  நீ அதி” சுமியிடம் தனது கையில் இருந்த கிரிக்கெட் மட்டையை நீட்ட, ஏதோ அசௌகர்யமான உணர்வோடு,

“இன்னைக்கு இது போதும் ஷ்யாம்.  அடுத்து குட்டிக் குளியல் ஒன்னு போட்டுட்டு, ஹோம் ஒர்க் பாக்கலாம்” ஷ்யாமை வீட்டினுள் அழைத்து வரவும்,

“அக்கையா, அய்யா பேசுறாங்க” என தேவி அழைக்கவும் சரியாக இருந்தது.

ஷ்யாமை, தேவியிடம் ஒப்படைத்தவள், அவனுக்கு குளிக்க உதவுமாறு கூறிவிட்டு, போனை அட்டெண்ட் செய்தாள் சுமித்ரா.

நீண்ட நாளாகிப் போனதால், தரைவழியில் தொடர்பு கொண்டு சுமியிடம் ஜேப்பி பேச அழைக்க,  “யாரு நீங்க? அந்தப் பேருல எனக்கு யாரையும் தெரியாதே!” வேண்டுமென கத்தறித்துப் பேசி அழைப்பைத் துண்டித்தவளுக்கு, மீண்டும் அழைத்தான் ஜேப்பி.

“போயி இத்தனை நாள்ல இன்னைக்குத்தான் எங்க ஞாபகம் வந்துச்சா உனக்கு!” குற்றம் சாட்டும் தொனியில் பேசியவளிடம்,

“டெய்லி பேசணும்னு நினைப்பேன்.  அடுத்தடுத்து வேலை வந்து அப்டியே போயிருச்சு!” ஜேப்பி மறுமுனையில், சுமியின் கோபத்தைக்கூட ரசித்தபடியே பேசினான்.

“என்ன மனுசன் நீ. அத்துவானக் காட்டுக்குள்ள பாசை புரியாத இடத்துல கொண்டு வந்து பகுமானமாக் குடிவச்சிட்டு, இருக்கமா செத்தமான்னுகூடப் பாக்காம! இருவது நாளுக்குப்பின்ன நல்லவன் மாதிரிக் கூப்பிடற!” நிறுத்தியவள்,

“எதுக்கு நீ கல்யாணம் பண்ண?  நான் உங்கிட்ட வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கோனு கேட்டனா?  இல்லை தெரியாமத்தான் கேக்கறேன்” மூச்சுவிடாமல் கத்தினாள்.

அதுவரை இருந்த தொனி சட்டென மாறி, “என்னால முடியலைடா!” ஈனஸ்வரத்தில் மிழற்றினாள் சுமி. சுமியின் தனக்கான தேடலைக் கேட்டவனுக்கு அத்தனை இனிமையாக இருந்தது.

ஆரம்பத்தில் தன்னைத் தவிர்த்தவள், தனக்காக தவிப்பதை அவள் வாயால் கேட்பதுகூடச் சுகமான அனுபவமாக இருந்தது ஜேப்பிக்கு.

“கூல்டீ!  கேப் விட்டுப் பேசு. இப்டி இறைக்க இறைக்கப் பேசாத!  தேவிக்கிட்ட சொல்லி, எதாவது வாங்கிக் குடிச்சிட்டே பேசு.  நான் லைன்ல வயிட் பண்றேன்” என்றான் ஜேப்பி.

“ஏன் சொல்ல மாட்ட?  என்னைப் பாத்தா உனக்கு நக்கலாத் தெரியுதா?  மேடையில பேசுறவங்களுக்கு, சோடா வாங்கிக் குடுத்துப் பேசச் சொல்ற மாதிரி,  என்னைக் கிண்டல் பண்ற?” மேலும் சுமி எகிற,

“உன்னையெல்லாம் அவ்ளோ சாதாரணமா யாராலயும் கிண்டல் பண்ண முடியுமா சுமி.” என்றவன்,

“இப்பத்தான் பக்கா பொண்டாட்டியா மாறியிருக்க நீ” எனச் சிரித்தான்.

“பக்காப் பொண்டாட்டியா? இல்லை மக்குப் பொண்டாட்டினு மறைமுகமாச் சொல்ல வர்றியா?” சுமி

“ம்ஹ்ம்” என்றவன், “நான் எதுவுமே சொல்லலை. நீயாத்தான் உன்னை டேமேஜ் பண்ணிக்கற.  அதுக்கு நான் பொறுப்பெடுத்துக்க முடியாது சுமீ” சிரித்தவன்,

“சரி, இப்ப எப்டிப் போகுது அங்க” மெதுவாக ஜேப்பி வினவ,

“நீ போகும்போது அப்டியே எங்களையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம்.  செம போரு இங்க” என்றதோடு,  “வேலை எதனா பாக்கலாம்னா, வீட்டுல எல்லாத்தையும் வேலைக்காரங்களே பாத்துக்கறாங்க.

சரி, காலாற நடப்போம்னா ஒரு பக்கம் கடல், அங்க போயி தனியா நடக்க பயமா இருக்கு.  மத்த பக்கம் எல்லாம் மரமா வளந்து, காடாத் தெரியுது. அந்தப் பக்கமும் போக முடியலை” என்றாள் சுமி.

“இன்னும் கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கோடீ.  எனக்கு நேரங்கிடைச்சா, பங்களூர் ட்ரிப் போகலாம்” என்றவன், பிறகு பேசுவதாகக் கூற,

அதேநேரம், “மீ நான் ரெதியாயித்தேன்.  நீ போயி குளி” அருகில் வந்த ஷ்யாமைப் பார்த்ததும், “ஒரு நிமிசம் லைன்ல இரு ஜேப்பி” என்றவள்,

“நீ போயி ஹோம்வர்க் ஸ்டார்ட் பண்ணு கண்ணா.  மீ உடனே வந்திறேன்” ஷ்யாமின் தலையைக் கோதி அங்கிருந்து அனுப்பிவிட்டாள்.

அதன்பின் லைனில் இருந்தவனிடம் தயங்கியவாறு, “நான் ஷ்யாமை எங்கூட கூட்டிட்டு வந்ததால உனக்கு எம்மேல கோபமா ஜேப்பி?” எனக் கேட்டாள் சுமி.

சுமிக்கு, ஜேப்பி கூறியது நினைவில் வந்திட நேராகவே கேட்டுவிட்டாள்.  ஜேப்பி என்ன கூறினான்?

***