தோளொன்று தேளானது! 18A
மருத்துவரைச் சந்திக்கச் சென்ற சிவபிரகாசத்தின் மூத்த மகனான சச்சிதானந்தனை நோக்கி, “நீங்க பெரியவருக்கு என்ன உறவு?” எனக்கேட்டதும், தான் சிவபிரகாசத்தின் மூத்த மகன் என்பதை மருத்துவரிடம் கூறினார் சச்சிதானந்தன்.
“அவரைப் பத்தி ஒரே கம்ப்ளைண்ட்டா இருக்கு!” நிதானித்த மருத்துவர் எதிரில் இருந்த அச்சுதானந்தனைப் பார்க்க, அவரோ சாதாரணமாக அமர்ந்திருந்தார்.
வினோதமான உணர்வோடு, “பெரியவருக்கு காதுல டெஸ்ட் எல்லாம் போயிட்டு இருக்கு. வாயத் திறந்து என்ன நடந்ததுன்னு இதுவரை சொல்லலை. சரி அதை நாங்க பாத்துக்கலாம்னா, அவரு எப்பப் பாத்தாலும் போனும் கையுமா இருக்காரு. வூண்ட் சரியாகறவரை போனைக் கையில குடுக்காதீங்க.
அதிகம் போன் யூஸ் பண்ணக்கூடாதுன்னு சொன்னாலும் கேக்கலை. அதனாலதான் ஸ்லீப்பிங் டோஸ் போட வேண்டியதாப் போச்சு.
நீங்கள்லாம் எடுத்துச் சொல்லுங்க. இல்லைனா, இந்த வயசுக்கு இன்னும் பிரச்சனை அதிகமாகிரும். காயம் அதிகப்படியாதான் தெரியுது. அதை சீக்கிரம் கியூர் பண்ணலைன்னா, வூண்ட் இன்னும் பெரிசாகறதுக்கு வாய்ப்பு அதிகம்.
அப்புறம் பிராப்ளம் பெரிசாச்சுன்னா, எங்களால ஒன்னும் செய்ய முடியாது. இன்னொன்னு இத்தனை பேரு இங்க தேவையில்லை. ஒரு ஆள் அவருகூட ஹெல்ப்புக்கு இருந்தாப் போதும்.
மத்தவங்க எல்லாம் விசிட்டிங் டைம்ல வந்து பாத்துட்டுப் போகச் சொல்லுங்க. உறவுக்காரவங்களை நீங்களே செட்யூல் பண்ணி, ஒரு நாளைக்கு ரெண்டு ரெண்டு பேரா வந்து பாக்கச் சொல்லுங்க!” அடுக்கடுக்காய் எஸ்ப்பியின் மீது குற்றங்களைச் சுமத்தியதோடு, அதனை சரிசெய்யும் வழிமுறைகளையும் கூறிவிட்டு சச்சிதானந்தின் பதிலுக்காகக் காத்திருந்தார் மருத்துவர்.
பெரும்பாலும் குடும்பத்தின் அனைத்து முக்கிய முடிவுகளையும் இதுவரை எஸ்ப்பியே எடுத்து, அனைவரும் அதன்படி நடந்திருக்க சச்சிதானந்தனால் தானாகவே தனித்து சட்டென எந்த முடிவிற்கும் வரமுடியாமல்,
“நான் அப்பாகிட்ட பேசிட்டு வந்து சொல்றேன் சார்” என்றிட, மருத்துவருக்கு தான் இத்தனை நேரம் அவரிடம் பேசியது அத்தனையும் வீண் என்பது புரிந்துபோனது.
ஆனாலும் மருத்துவர் அப்படியே விடமுடியாத நிலையில், “உங்க வயசுக்கு உங்க அப்பாகிட்டப்போயி என்னத்தைப் பேசப் போறீங்க சார். நான் சொன்னது எல்லாம் உங்கப்பாமேல கம்ப்ளைண்ட்.
அவரை, இப்டி இருக்கக்கூடாது, இப்டித்தான் இருக்கணும்னு சொல்ல வேண்டியதுக்காகத்தானே இவ்ளோ நேரம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன்.
எல்லாத்தையும் யாரு மேனேஜ் பண்ணக்கூடிய நிலையில உங்க குடும்பத்தில இருக்காங்களோ அவங்களையே நீங்க என்னைப் பாக்க அனுப்பியிருக்கலாம்” மனம் நொந்தபடி பேசினார் மருத்துவர்.
“சாரி சார். இதுவரை எல்லா முடிவையும் எங்க அப்பா எடுத்து, அதை நாங்க ஃபாலோ பண்ணித்தான் பழக்கம். அதனால, நீங்க சொன்னதை அப்பாகிட்ட பேசறேன்” மீண்டும் அதே நிலையில் நிற்க,
“இப்போ நானே உங்ககிட்ட சொல்றேன் சார். உங்கள்ல யாராவது ஒருத்தவங்க மட்டும் பேசண்ட்கூட இருங்க. மத்தவங்க கிளம்புங்க. மற்றதையெல்லாம் இங்க ஜென்ட்ஸ் நர்ஸ் வச்சிப் பாத்துக்கலாம்” தீர்மானமாக உரைத்த மருத்துவமனையின் செயலாளர்,
“அப்பத்தான் ஃபர்தர் ட்ரீட்மெண்ட் கண்ட்டினியூ பண்ண முடியும். கோவாப்ரேட் பண்ணலைன்னா நீங்க வேற எங்கனாலும் உங்க ட்ரீட்மெண்ட்டைக் கண்டினியூ பண்ணிக்கங்க” முடித்துவிட்டு, நீங்கள் செல்லலாம் என்பதுபோல சமிஞ்ஞை செய்தார் மருத்துவர்.
அதற்குமேல் எதுவும் பேச இயலாமல் சச்சிதானந்தன் வெளிவர, அதுவரை அவருக்காக வெளியில் காத்திருந்த மற்றவர்கள் என்ன விசயம் என சூழ்ந்தபடி கேட்டனர்.
விசயத்தைப் பகிர்ந்ததோடு, தந்தை இருந்த அறைக்கு வந்தவர், எஸ்ப்பியின் உறக்கம் கலையும்வரைக் காத்திருக்கத் துவங்கினார்.
***
எஸ்ப்பி, தனது மொபைல் போனிலிருந்து எதிர்பாரா சந்தர்ப்பத்தில் எழுந்த படாரெனும் சத்தத்தை மட்டுமே சம்பவம் நடந்தபோது உள்வாங்கியிருந்தார். முதலில் உட்செவியில் வலியை மட்டுமே உணர்ந்தார்.
பேசியில் அவர் பார்த்தபோது, சாதாரணமாகவே அது காட்சியளித்தது. சத்தம் எப்படி எங்கிருந்து வந்திருக்கும் என்பதைப் பார்த்தவருக்கு ஒன்றுமே பிடிபடவில்லை.
சிறிது நேரத்திற்குப்பிறகுதான் செவியிலிருந்து வெளிவந்த ரத்தம் கன்னத்தின் வழியே வழிந்து வெண்ணிற வேஷ்டியில் விழுந்ததைக் கண்டபின்புதான் விசயம் மிகவும் தீவிரமானது என்பதையே உணர்ந்தார் எஸ்ப்பி.
திறன்பேசியில் எந்த பழுதும் உண்டாகாமல், எப்படி இந்த சத்தம் தனது காதை பதம் பார்த்திருக்கும் என நடந்ததை யோசித்தபடியே இருந்தவருக்கு, காதிலிருந்து ரத்தம் வழிந்ததை எப்படி இது சாத்தியம் என்பது புரியாமல் நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தார் எஸ்ப்பி.
தான் இதைப்பற்றி கூறினாலும் யாரும் நம்பமாட்டார்கள் என்பதும் அவருக்குப் புரிந்தது.
தன்னை சமாளித்துக் கொண்டவர் தனது அலைபேசியிலிருந்த ஒரு எண்ணுக்கு அழைத்தார். பேசிகளை ஒட்டுமொத்தமாக வாங்கி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் மிகப் பெரிய நிறுவனத்தைத் தொடர்பு கொண்டவர், “உங்க ஆளுங்களை வீட்டுக்கு அனுப்பி வைங்க” கட்டளையாகக் கூறிய அரைமணித் தியாலத்தில் அங்கிருந்து இருவர் வந்திருந்தனர்.
அவர்களிடம் தனது பேசியைக் கொடுத்து, சில விசயங்களைக் கூறிவிட்டே, அதன்பின் மருத்துவமனைக்கு விரைந்தார் மனிதர்.
அவர்கள், எஸ்ப்பியின் பேசியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் பார்த்துவிட்டு, பேட்டரியைச் செக் செய்து பார்த்தனர். அதன்பின் அதிலிருந்த அனைத்து ஆப்களையும் பார்வையிட்டனர். அந்த திறன்பேசியில் புதியதாக ஒரு ஆப்(App) அன்று அவர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் டவுன்லோட் செய்யப்பட்டிருப்பதை மட்டுமே கண்டுபிடித்து அவரிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
எஸ்ப்பிக்கு அன்று எந்த ஆப்பையும் அவர் பதிவிறக்கம் செய்யவில்லை என்பது நன்கு தெரியும். அப்படி இருக்க இது ஜேப்பியின் வேலையாக இருக்குமோ என பெரிய சந்தேக வித்து மனதில் உதித்திருந்தது.
“நான் பேசிக்கிட்டு இருக்கும்போதே என்னோட போனை வேற ஒரு நபர் யூஸ் பண்ண முடியுமா? அதிலிருந்து எதாவது செய்ய முடியுமா?” எஸ்ப்பி வந்திருந்தவர்களிடம் வினவ,
“அதெல்லாம் பண்ணலாம் சார். மொபைல் ஆன்ல இருந்தா, மொபைலை ஹேக் பண்ணி, யாரும் என்ன வேணா பண்ண முடியும். நீங்க பேசிட்டு இருந்தப்போ டேட்டா ஆன்லதான் இருந்திருக்கு.
அப்போ அதை யூஸ் பண்ணி இந்த நியூ ஆப்பை டவுன்லோட் பண்ணிருக்காங்க. இந்த நியூ ஆப்போட ஃபீச்சர்ஸ் என்னானு தெரிஞ்சாதான் எப்டி அதை யூஸ் பண்ணாங்க, என்ன பண்ணிருக்காங்கன்னு சரியாச் சொல்ல முடியும்” என்றிட
“அதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு எவ்ளோ நேரமாகும்” மும்முரமாகக் கேட்டவரை திகைப்போடு பார்த்தனர் வந்தவர்கள்.
ஆனால், அதனை நிரூபிக்கும் அளவிற்கு பேசி நிறுவன நபர் திடமாக எதையும் கூறாமல், அப்டி இருக்கலாம், இப்டியும் இருக்கலாம் என உறுதியற்ற நிலையில் இழுவையாகப் பேசப் பேச, எஸ்ப்பிக்கு வேறு யாரை நாடி, நடந்ததைத் தெரிந்து கொள்ளலாம் எனும் போரட்டத்தோடு மருத்துவமனைக்கு சென்றும் அதைப்பற்றியே சிந்தித்தபடி, சிலருக்கு திறன்பேசி வழியே பேசியவாறு இருந்தார்.
அதனால்தான் அவரால் மருத்துவர்களோடு ஒத்துழைப்பு நல்க இயலாமல், தீவிர சிந்தனை வயப்பட்டவாறு தனக்கு நம்பகமான இடங்களைத் தொடர்பு கொண்டு இதுசார்ந்த விசயத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார் எஸ்ப்பி.
முதலுதவி மட்டுமே செய்திருந்தனர். அடுத்த கட்ட சிகிச்சைக்கு மருத்துவர்களோடு இணங்காமல், அவருக்குத் தோன்றியதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார் சிவபிரகாசம்.
மருத்துவர்கள் எஸ்ப்பியின் செயலைக் கண்டு முகம் சுளித்ததோடு, மருத்துவமனை செயலாளரை அணுகி, குறிப்பிட்ட நோயாளி இதுபோல ஒத்துழைக்காமல் இருக்கும் நிலையில் உட்செவியில் உண்டான காயம் மேலும் பரவிட வாய்ப்புள்ளதாகவும், அது நரம்பு நாளங்களைப் பாதித்தால் மூளை பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாகவும், அப்படி நேர்ந்தால் வயோதிகம் காரணமாக நோயாளியின் உயிரைக் காப்பது மிகவும் கடினம் என்பதையும் தெரிவித்திருக்க, உடனே அவர் எஸ்ப்பியின் குடும்ப உறுப்பினர்களில் முக்கியமானவர்களை வரச் சொல்லி எஸ்ப்பியின் தற்போதைய நிலையை உள்ளவாறு எடுத்துக் கூற விழைந்திருந்தார்.
ஜேப்பிதான் தன்னை இந்நிலைக்கு கொண்டு வந்திருக்கிறான் என முழுமையாக நம்பிய எஸ்ப்பி, இனி ஜேப்பியை விட்டுவைக்கும் எண்ணம் துளியும் இல்லாமல், கனவிலும் பழிவெறியோடு மருந்தின் உபயத்தால் பாதி உறக்கத்தில் இருந்தார் எஸ்ப்பி.
எஸ்ப்பி எழும்வரை மற்றவர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
இதுவரை எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக வலம் வந்திருந்த எஸ்ப்பி, முதன் முறையாக எதிர்பாரா நிகழ்வால் உண்டான உட்செவியின் காயத்தினை சரிசெய்ய முக்கியத்துவம் தராமலிருப்பது அவருக்கே பிரச்சனையாக முடியும் என்பது புரியாமல் மன உளைச்சலில் இருந்தார்.
ஜேப்பி பெரும்பாலும், எஸ்ப்பியை எடுத்துக்காட்டாகக் கொண்டே வளர்ந்திருந்தான். ஆகையால் அவரை நேரடியாக எதிர்க்கும் மனவலிமை இன்றி, அவரைத் திசை திருப்பிவிட எண்ணியே இத்தகைய செயலைச் செய்திருந்தான்.
உடல்நலக் குறைபாடு உண்டானால் அதில் மட்டுமே மனம் செல்லும். வேறு எந்த சிந்தனையும் வராது என எண்ணியே தனது முதல் திட்டத்தை எஸ்ப்பியிடம் செயலாக்கியிருந்தான் ஜேப்பி.
ஜேப்பியின் திட்டம் ஓரளவிற்கு செயல்படத் துவங்கியிருக்க, இனியும் தாமதித்தால் பெருநஷ்டங்களையும், சரிவுகளை தான் தொடர்ச்சியாகச் சந்திக்க நேரிடும் என மின்னல் வேகத்தில் அனைத்தையும் செயல்படுத்தத் துவங்கினான் ஜேப்பி.
ஆனால் தான் என்கிற அதிகாரப் பற்றினால், தனது உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாது பின்னடைவை நோக்கிச் செல்வது புரியாமல் ஜேப்பிக்கு எதிராக நடந்து கொண்டிருந்தார் எஸ்ப்பி.
***
வீரா ஜேப்பியை அழைத்து, “சார், இங்க பனிஷ்மெண்ட்ல இருந்தவனை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருந்தோம்ல. இப்ப ஓரளவு தேறியிருக்கறதா, ஹாஸ்பிடல்ல இருந்து கால் வந்தது. அவனை திரும்பவும் இங்க கூட்டிட்டு வந்திரலாமா?” எனக் கேட்டதும்,
“நல்லா கியூராகி மெதுவா வரட்டும் வீரா. அவசரப்படாத! அவங்களையெல்லாம் வச்சித்தான் அடுத்த கட்ட வேலைகளைப் பாக்கப் போறோம்” என்றவன், அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதையும் அவனிடம் விளக்கிவிட்டு, மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த இருவரைப் பற்றி விசாரிக்கத் துவங்கினான்.
“அந்தப் பொண்ணுக்கு ஆர்த்தோ டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க?” ஜேப்பி.
“ஆபரேசனுக்குப் பின்ன அவங்களுக்கு ஸ்டிக் வச்சி நடக்க ட்ரைன் பண்றாங்க. நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்குனு கேர்டேக்கர் சொன்னாங்க. இந்த வீக்கெண்ட்ல நேருல போயி ரெண்டு பேரையும் பாத்துட்டு வரேன் சார்.” என்றதும்,
“எஸ்ப்பியப் பாத்துக்கற கேர்டேக்கர் என்ன சொன்னாங்க?” எனக் கேட்டான் ஜேப்பி.
“உங்களைப் பாக்கணும்னு அடம்பிடிக்கறதா சொன்னாங்க. அவங்க மதரை இப்போ கேக்கலையாம். உங்களைத்தான் இப்போ அதிகமாத் தேடறதாச் சொன்னாங்க” என்றதுமே,
இருமுறை மருத்துவமனைக்கு நேரில் சென்று வந்தபோது நடந்த நிகழ்வு மனதில் எழ, ஜேப்பி எனும் கல்லுக்குள் ஈரம் இருப்பதை அவனே உணர்ந்த தருணம் நினைவிலாடியது.
குழந்தைகளோடு அதிக ஒட்டுதல் இதுவரை ஜேப்பிக்கு இல்லை. ஆனால் கடமைபோல மருத்துவமனைக்கு விபத்தில் சிக்கியவர்களைக் காணச் சென்றவனுக்கு, அங்கு நடந்த விசயங்களை நேரடியாகக் கண்டபோது, சுமித்ராவின் நிலை அவள் கூறாமலேயே ஜேப்பிக்குப் புரிந்தது.
அதை நேரம் கருதி ஒதுக்கிவிட்டு, “நீ நேருல போனா உன் போனுல இருந்து எனக்கு கால் பண்ணச் சொல்லு. ட்ரீட்மெண்ட் முடியட்டும். உடனே கூப்பிட்டுக்கலாம். இந்த வீக் போகும்போது நீயும் டாக்டரை நேருல பாத்துப் பேசிட்டுச் சொல்லு” என்றுவிட்டு வைத்தான் ஜேப்பி.
***
நாக்பூர் அலுவலகத்தில் அவரவர் வேலைகளை கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். வந்தது முதல் வேலையாக இருந்துவிட்டு நன்பகல் நேரத்தைக் கண்டதும் எழுந்து சுமியின் மேசைக்கருகே சென்ற ஷிவானி, “சுமி, நம்ம ஜேப்பி பத்தி என்ன நினைக்கறீங்க?” வேலையில் மூழ்கி இருந்தவளைப் பார்த்து வினவ,
‘இப்ப என்ன திடீர்னு’ என நினைத்தவாறே, “அவரைப் பத்தி நினைக்கிறதுக்கு என்ன இருக்கு. நாம வேலை பாக்க வந்திருக்கோம். பாத்தா சம்பளம் தருவாறு. இல்லைனா, உனக்கு இங்க வேலை இல்லைனு அடிச்சுப் பத்தி விடுவாறு” கூலாக சுமி கூற,
ஜேப்பியைப் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தவள் நீண்ட நேரம் கழித்து, “உங்களுக்கும் ஜேப்பிக்கும் இடையில என்ன மாதிரி ரிலேசன்” கொக்கி போட்டு நிறுத்தினாள் ஷிவானி.
“ஏன் திடீர்னு இப்டியொரு கேள்வி கேக்கற?” சுமிக்கு உண்மையில் புரியாமல்தான் கேட்டாள்.
“இல்லை. ஜேப்பி மற்றவங்களைப் பாக்கறதுக்கும், உங்களைப் பாத்துப் பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது. அதான் கேட்டேன்” என்றவள், “நீங்க அவரோட வயிஃப்பை பாத்திருக்கீங்களா?” என சுமியைத் துருவ,
“எனக்கு அப்டியொன்னும் தெரியலை. அவரோட வயிஃபைத் தெரியாதும்மா” என்றதோடு, “உனக்கு இப்ப ஃப்ரீயா. வேலை எதுவும் இல்லையா?” வேலை நேரத்தில் இது என்ன வெட்டிப் பேச்சு என நேரடியாகக் கேளாமல், மறைமுகமாக ஷிவானிக்கு நினைவுபடுத்தியதோடு,
“நீ இனி என் பிளாட்டுக்கு துணைக்கு வரவேணாம் ஷிவானி. நானே மேனேஜ் பண்ணிக்குவேன்” என்றதும், ஷிவானி ஏன், எதற்கு என்னை வர வேண்டாம் என்கிறாய் என நமுத்து, சுமி எந்த பதிலும் கூறாமல் மௌனம் சாதிக்க, அதன்பின் அங்கிருந்து சென்றவள் அடுத்த நாள் முழுவதும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சுற்றினாள்.
மறுநாள் ஜேப்பி அங்கு வருவதாகக் சொன்னதைக் கேட்டதும் சுமி, ஷிவானியிடம் அவ்வாறு கூறியிருந்தாள்.
***