தோளொன்று தேளானது! 19B
“கத்தாத! கத்துன.. அவ்ளோதான்!” என அவனைவிட சத்தமாகப் பேசி கணவனை மிரட்டியவள்,
“என் பொண்டாட்டியோட உயிருக்கு, எங்க தாத்தாவால பிரச்சனை இருக்குனு நீ போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ண வேண்டியதுதான!
எங்களைக் காப்பாத்துங்கனு ஒரு பெட்டிசன் போட்டா போலீஸ் வந்து நேருல விசாரிக்கும்ல! அப்ப அந்த மனுசனும், நம்ம மேல கை வைக்க தயங்குவாருல்ல! அப்போ எல்லாம் சரியாகிரும்ல!” ஜேப்பியைப் பார்த்து இலகுவான தோரணையில் கேட்டவள்,
“ஏன் அதச் செய்ய மாட்டிங்கற? முதல்ல அதுக்கு ரீசன் சொல்லு. எதக் கேட்டாலும் மூடு மந்திரம் மாதிரியே, எதையாவது பேசி என் வாயை அடைக்கிற?
இப்டி நீ பண்றது, உம்மேலதான் சந்தேகப்படற மாதிரி இருக்கு. நீ சரியானவனா இருந்தா, கண்டிப்பா போலீஸ்கிட்ட ஹெல்ப் கேக்கலாந்தான?” சுமியும் ஜேப்பியைப் பார்த்து அடுத்தடுத்த தனது முடிவுகளுக்கான விடையை எதிர்நோக்கி கணவனையே பார்த்திருந்தாள்.
அப்போதும் மௌனத்தையே பதிலாக்கி அமர்ந்திருந்தவனிடம், “நான் இங்க இருந்து இனி எங்கேயும் உங்கூட வரமாட்டேன்” எனப் பிடிவாதமாக தனது முடிவைக் கணவனிடம் கூறிவிட்டு எழுந்தவள், கழிப்பறையை நோக்கிச் சென்றாள் சுமி.
அவள் வரும்வரைக் காத்திருந்தவன் வந்ததும், “உன்னோட நல்லதுக்குச் சொன்னா கேளு சுமி” மீண்டும் அதையே கூறியவனைக் கண்டவள்,
“எனக்கு நீ நல்லது பண்ணறதா இருந்தா, உடனே போலீஸ்கிட்டப் போ. அவங்க அடுத்து எதுனாலும் பாத்துப்பாங்க” அசட்டையாகக் கூறியவளைக் கண்டு, ஜேப்பியும் நக்கலாகச் சிரித்தான்.
“எதுக்கு இப்ப சிரிக்கற?” கோபமாகக் கேட்டவளிடம்,
“படம் மாதிரி நினைச்சிப் பேசிட்டுருக்க சுமி. உனக்காகச் சொன்னா புரிஞ்சிக்கோ” என்றதோடு தலை முடியை தனது இருகைகளாலும் கோதிக் கொண்டான் ஜேப்பி.
“அப்படித் தெரியலை எனக்கு” என்றவள், “இத்தனை வருசம் என்னைப் பாத்துக்கிட்டவளுக்கு இனியும் பாத்துக்கத் தெரியாதா? நீ என்னை எதாவது சொல்லி ஃப்ரீயா இயங்க விடாமத் தடுக்கற.
உன்னைக் கல்யாணம் பண்ணறதுக்கு முன்னவரை என்னோட எல்லா விசயங்களையும் நாந்தான் பாத்துக்கிட்டேன். ஆனா இப்போ நீதான் நான் எப்டி இருக்கணுங்கறதை டிசைட் பண்ற. இதுலதான் எனக்குப் பிரச்சனை.
எதையும் சொல்றதும் இல்லை. ஒரு இடத்தில போயி வாழப் பழகி அப்போதான் செட்டாகற நிலைக்கு வரும்போது, அங்க இருந்து கிளப்பி வேற இடத்துக்கு போகணுங்கற. இப்டியே போயிட்டு இருக்கறது எனக்குப் பிடிக்கலை.
நீதான் ஏதோ தப்பா இருக்க! உன் தாத்தாவைப் பத்தி பெரிய டான் ரேஞ்சுக்குப் பேசறதை மொதல்ல விடு. எல்லாத்தையும் நீயே படத்துல வர ஹீரோ கணக்கா போராடி ஜெயிக்கற மாதிரி, இதுல பில்டப் எதுக்கு?” இளக்காரமாக கேள்வியோடு பேசி முடித்தவளைக் கண்ட ஜேப்பி அமைதியாகவே அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஆனாலும் சுமி லேசில் விடுவதாக இல்லை. “ஷ்யாம்கு அப்டி ஆனதுமே நீ ஏன் உங்க தாத்தாமேல கம்ப்ளைண்ட் குடுக்கலை. ஏன்னா, உங்க தாத்தா உனக்கு முக்கியம். அதாவது இப்பவும் அவரை நீ எதுத்து நிக்காம, மறைமுகமா அவரோடு எதிர்ப்புகளை முறியடிக்க நினைக்கிறன்னு எம்மனசுல தோணுது.
ஆனா, நேருக்குநேரா இந்தப் பிரச்சனைக்கு முடிவு காண நீ நினைக்க மாட்டிங்கற. எனக்கு இப்பல்லாம் நிறைய உம்மேலதான் வருத்தம்.
ஏன்னா, எங்களையும் அடவாடியாத் தூக்கிட்டு வந்தது நீதான். வந்ததும் எனக்கோ, ஷ்யாமுக்கோ டைமே தராம, உன்னோட தேவைக்காக எல்லாத்தையும் எங்க மேல திணிச்ச. இதையெல்லாம் வச்சிப் பாக்கும்போது..” தாமதித்தவள், அனைத்திற்கும் ஜேப்பிதான் காரணம் என்பதை பார்வையில் கூறிவிட்டு, வேறு பேச்சிற்கு மாறியிருந்தாள் சுமி.
“உனக்கு வேண்டிய எங்கிட்டயே எவ்ளோ ரூடா பிகேவ் பண்ண நீ? அப்ப, நமக்கு எதிரானவங்ககிட்ட இப்ப நீ எப்டி நடந்திட்டு இருந்திருக்கணும்?
சொல்லு… எங்கட்ட நடந்ததைக் காட்டிலும் அதிக மடங்கு உங்க தாத்தா ஏவின ஆள்களை சமாளிக்க மெனக்கெட்டிருக்கணுமா இல்லையா?
ஆனா நீ அமைதியாதான் அவங்களை ஹேண்டில் பண்ற. அதாவது, நீ அவங்கட்ட ரொம்ப பம்முற? ஏன்?” நிறுத்தியவள்,
கணவனையே பார்த்தபடி தலையை மறுத்தசைத்துவிட்டு, “பங்களூர் ஆபிஸ்ல வேலை பாத்திட்டுருந்த ப்ருத்வி ஆக்சிடெண்ட்ல செத்துப் போயிட்டான்னு, அப்போ ஜேஜேல வேலைப் பாத்திட்டுருந்தப்போ கன்ஃபார்ம் பண்ணி, அழுது, எல்லாம் முறையாச் செஞ்சு, இனி அவனுக்கும் இந்த பூமிக்குமான உறவே இல்லைன்னு வாழப் பழகின பின்னாடி, ரெண்டு வருசம் முடிஞ்சு அவன் உயிரோடு வந்து நிக்கிறான்.
இப்பவும், அவனைக் காணலையேன்னு பேசினா அதுக்கும் சப்பைக்கட்டா ஒரு பதில். இதுல அவனுக்கும் நம்ம குடும்பத்துல இருக்கற பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?” தொடர்ச்சியாக பேசிவிட்டு ஜேப்பியை முறைத்தவள்,
“நான் கேள்வி கேட்டுட்டே இருக்கேன். நீ வாயவே திறக்காத!” கோபத்தோடு பேசிவிட்டு எழுந்தவள், நீரை எடுத்துப் பருகிவிட்டு படுக்கையில் சென்று படுத்துவிட்டாள் சுமி.
படுத்தும் விடாமல், “இப்டித்தான் ஒருநாள் ஹாஸ்பிடல்ல ஷ்யாமோடு பெட்ல தலை வச்சிப் படுத்திருந்தேன். எழுந்தா வேற இடத்தில இருக்கேன்.” என்றவள்,
“இப்டி முறைகெட்ட தனமா நடந்திட்டதுக்கெல்லாம் சரியான காரணம் சொல்ல முடியுமா ஒன்னால. இருந்தாத்தான சொல்றதுக்கு!” கேள்வியைக் கேட்டு அவளே பதிலையும் கூறிவிட்டு, மொத்தத்தில் ஜேப்பிதான் தவறான ஆள் எனக் கூறாமல் தனது செயலில் காட்டிவிட்டுத் திரும்பிப் படுத்துவிட்டாள் சுமி.
சுமி படுக்கைக்குச் சென்று நீண்ட நேரமாகியும், அவன் படுக்கையில் படுக்காமல் எழுந்தமர்ந்த நிலையிலேயே கண்களை மூடிய வண்ணம் சாய்ந்த நிலையில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தான் ஜேப்பி.
“வாயே.. திறந்திறாத! இப்டியே ஊமைக் கொட்டானாட்டம் எப்பவும் இருந்தா பேசத் தெரியாவதன்னு விடலாம். காரியம் ஆகணும்னா மட்டும் காலைப் பிடிப்பான். பேசுவான். ஆனா நான் எதைக் கேட்டாலும் ஊமையா மாறிருவான்”
சற்று நேரங்கழித்து, “இங்க படுக்கறது மட்டுந்தான் நான். நாளைக்கு நான் இங்கேயே எழுவேன்னு நிச்சயமே இல்லை” தனக்குத்தானே கூறியவள்,
“ஆண்டவந்தான் இவங்கிட்ட இருந்து என்னையும், இந்தப் புள்ளையையும் காப்பத்தணும்” வயிற்றுப் பிள்ளையைக் காட்டிக் கூறியவள் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, அதன்பின் அப்படியே உறங்கிப் போனாள் சுமி.
மனைவியின் தேளான வார்த்தைகளுக்குப் பதில் கூற விழையாமல் அமர்ந்திருந்தவனோ, பழைய நினைவுகளோடு மூழ்கியிருந்தான்.
***
சச்சிதானந்தனின் இளைய மகன் ஜெயதேவ் அவனது நண்பர்களான ப்ருத்வி மற்றும் ரஞ்சித்துடன் இணைந்தே ஆரம்பத்தில் ஆர்க்கிடெக்ட் சார்ந்த நிறுவனத்தைத் துவங்கியிருந்தனர்.
ஜெயதேவ் தொழில் துவங்க தந்தையிடம் பணம் கேட்டபோது, அவனது தந்தை சச்சிதானந்தன் தனது தகப்பனாரான சிவபிரகாசத்தைக் கைகாட்டி மகனை அவரிடம் அனுப்பியிருந்தார்.
ஆரம்பத்தில் திருச்சி மாநகரிலேயே சிறிய அளவில் நிறுவனத்தைத் துவங்கும்படி கூறிய சிவபிரகாசம், பேரனின் பிடிவாதத்தை அறியாமல் அவன் கூறிய நம்பிக்கை வார்த்தை மற்றும் மகனின் வேண்டுதலுக்கிணங்க ஒருவழியாக சென்னையில் தொழில் துவங்க அனுமதித்திருந்தார்.
ஜெயதேவ், ரஞ்சித் இருவரும் மட்டுமே தொழிலுக்கென பணம் முதலீடு செய்திருக்க, ப்ருத்வி வொர்க்கிங் பார்ட்னராக அவர்களோடு இணைந்திருந்தான்.
ஆரம்பத்திலேயே ப்ருத்வியின் பின்புலம் அறிந்து சிவபிரகாசம் அவனை வேண்டாமென மறுத்திருக்க, அவனை மட்டுமே நம்பித் தொழில் துவங்குவதை மறைத்த ஜெயதேவ், அவரறியாமலேயே அவனைப் பங்குதாரராக இணைத்துக் கொண்டிருந்தான்.
வாய் வார்த்தையாக நண்பனது சொல்லைக் கேட்டு அவர்களுடன் இணைந்து ப்ருத்வியும் பங்குதாரராகப் பணிபுரிய ஒப்புக் கொண்டிருந்தான்.
கல்வியில் மட்டுமல்லாது, அதன் கல்வி சார்ந்த பணிகளிலும் மிகவும் நேர்த்தியாக நுண்மான் நுழைபுலனோடு திறமையானவனாக இருந்தான் ப்ருத்வி.
அத்தனை ஈடுபாடும், திறமையும் இல்லாது, பணவசதியோடு வளர்ந்திருந்த ஜெயதேவ், ரஞ்சித் இருவரும் தொழிலில் நாட்டமில்லாது ப்ருத்வியை மட்டுமே முழுமையாக நம்பியிருந்தனர்.
இதனை அறியாத சிவபிரகாசம் மாதந்தோறும் புதிய நிறுவனத்திலிருந்து பெரியளவு இலாபத்தை எதிர்நோக்கிக் காத்திருந்ததை ஜெயதேவ் அறிந்திருக்கவில்லை.
முதல் மூன்று மாதங்கள் பேரன் கூறுவதை நம்பியிருந்தவர், அதே சமயத்தில் தனித்துத் கட்டிடவியல் பணியைத் துவங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த ஜேப்பி மற்றும் கார்த்திக் இருவரது முயற்சியைக் கண்டு அவர்களை அழைத்துப் பேச முடிவெடுத்தார்.
சிவபிரகாசத்திற்கு, மூன்று பேரன்களுமாக இணைந்து தொழில் துவங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணி மூவரையும் அழைத்துப் பேச, ஜெயதேவுடன் இணைந்து தொழில் துவங்க மறுத்துவிட்டனர் ஜேப்பி மற்றும் ஜேகே இருவரும்.
ஜேப்பி, ஜேகே இருவரும் கட்டிடவியல் சார்ந்து பொறியியல் படிப்பாதலால், அதனைச் சார்ந்து தனது தந்தை நடத்தி வந்த ஜேஜே கன்ஸ்ட்ரக்சனில் இரண்டாண்டுகள் பணி செய்தபின் ஜேஜே பில்டர்ஸ் பிரைவேட் லிமிடட் என தரம் உயர்த்த முழுமூச்சாக பணிபுரிந்து கொண்டிருந்த தருணமது.
இடையில் அதனை வேறொரு திசையில் மாற்ற விரும்பாத சகோதரர்கள் இருவரும், தாத்தாவின் பேச்சினை ஏற்க முன்வரவில்லை.
அதிலிருந்து மனக்கசப்பு துவங்கியிருந்தது. அப்போது தொழில் துவங்கியது முதலே பல பொய்கள் கூறி சமாளித்த தேவ், இறுதியில் நட்டத்திற்கான காரணமாகப் ப்ருத்வியின் மீது பழி போட்டிருந்தான்.
அதனை சிவபிரகாசத்திடம் கூற, அவர் ப்ருத்வியை நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். நீண்ட நாளாக வற்புறுத்தியதன் பேரில் இறுதியாக தேவ் ப்ருத்வியிடம், “தாத்தா உன்னைப் பாக்கணும்னு சொல்லிக்கிட்டே இருக்கார்டா. நானும் சொல்லணும்னு நினைச்சு மறந்து போயிறேன். இந்த முறையாவது மறக்காமச் சொன்னேன். கண்டிப்பா வந்து தாத்தாவைப் பாரு” என்றிட, பெரியவர் எனும் ரீதியில் வந்து தன்னைச் சந்தித்த ப்ருத்வியை அவன் எதிர்பாரா நிலையில் அவமரியாதை செய்திருந்தார் சிவபிரகாசம்.
அவனது பிறப்பை, அனாதை எனும் நிலையை, இன்ன குலமென்று தெரியாதவன் இப்படியிலான விசயங்களைக் குறிப்பிட்டு, அத்தகையவன் அந்தஸ்தில் உயர்ந்த இடத்தில் தொழில் செய்ய வந்துவிட்டு, காணாத விசயங்களைக் கண்டதும், வந்த இலாபங்களையெல்லாம் மறைமுகமாக அபகரித்ததாக பழிச்சொல்லும் ப்ருத்விக்கு வந்திருந்தது.
எஸ்ப்பியின் கேள்விகளுக்குப் ப்ருத்வி என்ன பதில் கூறினான்?
***