தோளொன்று தேளானது 2
தோளொன்று தேளானது 2
தோளொன்று தேளானது! 2
சாந்தி வீட்டிற்கு கிளம்பியிருந்தாள். ஷ்யாம் அவள் சென்றதும், கதவை அடைத்துவிட்டு, ஒவ்வொரு சாளரத்தையும் சரிபார்த்து அடைத்தான்.
பிறகு பால்கனிப் பகுதியில் இருந்த நாற்காலியில் சென்றமர்ந்தவன், தெருவிளக்குகள் எரியத் துவங்கியிருந்த சாலையை வெறித்தபடியே அமர்ந்திருந்தான்.
திருமணத்திற்குக் காத்திருந்த தனது அத்தையோடு, வெளியில் சென்றுவிட்டு வந்த சிறுமி தட்சணா, தந்தைக்காக காத்திருந்த ஷ்யாமைப் பார்த்துவிட்டு, கீழே வா என அழைக்க, “சாதி, நாளைக்கு பாக்கலாம் தச்சு” என்றுவிட்டு, பார்வையை மீண்டும் கண்ணுக்கெட்டும் தூரம்வரை செலுத்தினான் ஷ்யாம்.
சிறு பிள்ளைபோல இருவரும் சேர்ந்திருக்கும் நேரங்களில் பிடித்த விளையாட்டு என்றில்லாமல், “என்ன தச்சு, எப்பிதிப் போகுது ஸ்ததீஸ்(ஸ்டடீஸ்)” என்று ஷ்யாம் தட்சணாவிடம் கேட்டாலும், அவளிற்கு ஷ்யாமைத்தான் அதிகம் பிடித்திருந்தது.
பத்து நிமிடத்திற்குபின், தூரத்தில் ப்ருத்வி வருவது தெரிந்ததும், அவனையறியாமலேயே இதழ்களில் புன்முறுவல் வந்தது. வீட்டை நெருங்கும்வரை அதேநிலையில் அமர்ந்து பார்த்திருந்தவன், படிகளில் அவன் ஏறும் சத்தம் கேட்டபின், நிதானமாக எழுந்து சென்று கதவைத் திறந்தான் ஷ்யாம்.
கதவைத் திறக்கவும், ஆவலோடு ப்ருத்வியிடம் தாவினான் ஷ்யாம். ப்ருத்வியும் அதே ஆவலோடு ஷ்யாமைத் தூக்கிக் கொண்டான். முகமெங்கும் ப்ருத்வியைத் தொட்டு வருடி பார்த்த ஷ்யாம் அவனை நோக்கி, “தொம்ப தயத்தா(டயர்டா) இதுக்க பித்துவீப்பா. போயி பெஷ்அப் ஆகித்து வா” என்றபடியே வலுக்கட்டாயமாக ப்ருத்வியின் கைகளில் இருந்து இறங்கினான்.
“கொஞ்ச நேரம் உக்காறேனே! அப்புறம் போயி ஃப்ரெஷ்ஷப் ஆகிக்கலாம்” இறங்கியவனை விடாமல் தூக்கிக் கொண்டு, ஷோபாவில் சென்றமர்ந்தான் ப்ருத்வி.
ஷ்யாமிற்காக வாங்கி வந்ததை எல்லாம் அவனது அலுவலக பேகில் இருந்து எடுத்து வெளியில் வைத்தான் ப்ருத்வி.
ஆவலின்றி பார்வையை அதில் செலுத்திய ஷ்யாம், “எனக்கு இதுப்போல லேப்தாப்தான் வேணும்” என ப்ருத்வியின் லேப்டாப் இருந்த பேகைத் தொட்டுக் காட்டியவன், “இதெல்லாம் வேணாம்” மறுத்துவிட்டு, எதிரே இருந்த சோபாவில் சென்றமர்ந்து கொண்டான்.
“டேய். இது உனக்கே ரொம்ப ஓவராத் தெரியலையாடா. இந்த வருசந்தான் எல்கேஜி போற. நோட்டுல எழுதறதுக்கு பென்சில் வேணாங்கற. நோட்ஸ் எடுக்க லேப்டாப் கேக்கற. இதுலாம் ரொம்ப அநியாயம்டா!” ப்ருத்வி கூற,
“நீ வாங்கித் ததலைனா போ. நா மீம்மாகித்த கேத்து வாங்கிகுவேன்” தெனாவட்டாக பதில் கூறிவிட்டு, கைகளைக் கட்டியபடி, கால்மேல் கால் போட்டபடிப் பேசிய ஷ்யாமைக் கண்ட ப்ருத்விக்கு, அவனது கோபம்கூட ரசிக்கும்படியாக இருந்ததை எண்ணி, புன்முறுவல் கொண்டான்.
“நல்லா சிதி. என்னைப் பாத்து கிந்தல் பண்றியா?” ஷ்யாம் வினவ,
“உன்னை யாராவது அவ்வளவு லேசுல கிண்டல் பண்ண முடியுமா ஷ்யாம். எப்டிடா இந்த வயசிலேயே இப்டி இருக்க?” ஆச்சர்யத்தோடு அவனது அருகே சென்றவன், சோபாவில் இருந்தவனைத் தூக்கியபடி, ஷ்யாமை மடியில் வைத்துக் கொண்டு அதே சோபாவில் சென்றமர, ப்ருத்வியிடமிருந்து இறங்கி அருகே அமர்ந்தான் ஷ்யாம்.
“இன்னைக்கு சாட்டர்டே லீவுதான உங்களுக்கு. என்ன செஞ்ச?” ஷ்யாமிடம் ப்ருத்வி வினவ, “ஒதே போது. ஷாகூத என்ன பேச? என்னால முதியல! இனி நீ சாத்தர்டே லீவு போத்துரு பித்துவீப்பா” கட்டளையாகப் ப்ருத்வியிடம் கூறினான் ஷ்யாம்.
“சரி இனி போட்றலாம்” என்றவன், “ஆனா உங்க அம்மா இதுக்கு ஒத்துக்க மாட்டாளே!” ப்ருத்வி
“நா மீக்கித்த பேசுதேன்” உறுதி கூறினான் ஷ்யாம்.
இருவருமாக இரவு உணவை சூடு செய்து உண்டுவிட்டு, ப்ருத்வியின் அறையில் சென்று படுத்துக்கொண்டு, நீண்ட நேரம் தொலைக்காட்சியைப் பார்த்தார்கள்.
கதையெல்லாம் ஷ்யாம் கேட்க மாட்டான். ப்ருத்வியோடு சேர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்துவிட்டு, அவனுக்கு இணையாக ஷ்யாமும் ரசித்து அவனுக்கு தோன்றும் கருத்துகளை ப்ருத்வியிடம் பகிர்ந்து கொள்வான்.
ப்ருத்விக்கு, ஷ்யாமின் ஒவ்வொரு செயலையும், பேச்சையும் கண்டு மிகவும் ஆச்சர்யமாக உணர்வான். அதையே சுமித்ராவிடம் பகிர்ந்து கொள்ளும்போது, “கண்ணு வைக்காதடா புள்ளைய. பெத்தவங்களே இப்டிக் கண்ணு வச்சா, வெளி ஆளுங்களை எப்டிச் சமாளிக்க?” என அதட்டுவாள் சுமித்ரா.
ப்ருத்வி மற்றும் சுமித்ரா இருவருமே தற்போது, வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்தனர். இருவருமே ஆர்க்கிடெக்ட் ஆகையினால் ஒரே இடத்தில் பணிக்குச் சென்றால், பணிநேரம் ஒரேமாதிரியாக இருக்கும் நிலையில் மகனை கவனித்துக் கொள்ள முடியாது என வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு ஊர்களில் பணியினைத் தொடர்ந்திருந்தனர்.
சில இடங்களில் ஒரே ஊருக்குள் பணி கிடைத்தாலும், சிலரைக் கட்டாயமாகத் தவிர்க்க எண்ணியே கோவையைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
***
ஷிவானி, நாக்பூர் அலுவலகத்தின் புதிய ஜேஜே பில்டர்ஸ் கிளை அலுவலகத்தின் மேலாளராக நியமிக்கப்பட்டிருந்தாள். அவளுக்கு ஜேப்பியை கண்டது முதலே ஈர்ப்பு.
ஆங்கிலத்தில் ஜேப்பியின் உரையாடல் தொடர, அந்நிறுவனத்தை ஏறுமுகத்தில் கொண்டு செல்ல, பணியாளர்களுக்கான தகவல்கள் பரிமாறப்பட்ட, அங்கு குழுமியிருந்தவர்கள் குறித்துக் கொண்டிருந்தனர்.
ஜேப்பி பேசி முடித்து அமர்ந்ததும், கீழ்மட்டப் பணியாளர்களுக்கு ஆங்கிலம் புரியாததால், ஜேப்பி பேசியதை அப்படியே இந்தியில் மொழிபெயர்த்து பணியாளர்களுக்கு புரியுமாறு எடுத்துரைத்தாள் ஷிவானி.
எஸ்டிமேட், அப்ஸ்ராக்ட், எலிவேசன், இன்னர், அவுட்டர் டெகரேசன் என அனைத்துமே, சென்னையில் உள்ள தலைமை அலுவலகப் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டு, அங்கு வேலைகள் துவங்கப்பட்டிருந்தது.
தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் கட்டிட வேலை பணியாளர்களான, மேஸ்திரி, சித்தாள், நிமிந்தாள் போன்றவர்களின் பணிகளையாற்ற, பெரும்பாலும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களைக் கொண்டே செய்வதால், அவர்களின் உறவினர்களில் நாக்பூர் அருகே வசிப்பவர்களை, பணிபுரியும் ஆர்வமிக்கவர்களைக் கருத்தில் கொண்டே இங்கு வேலைகளை ஆரம்பித்திருந்தார்கள்.
ஆரம்பத்தில் ஒரு கட்டிடம் மட்டுமே துவங்கியிருப்பதால், கட்டிட வேலைப் பணியாளர்கள் சிலரையும், கட்டிட மேற்பார்வைக்கு இரண்டு சூப்பர்வைசர்கள், அலுவலகப் பணிக்கு இரண்டு நபரையும் அங்கு புதியதாக நியமித்திருந்தார்கள்.
வேலைகளைப் பற்றிய தினசரி அறிக்கை, எந்த மெயில் முகவரிக்கு, எத்தனை மணிக்குள் யாருக்கு அனுப்ப வேண்டும், கட்டிடப் பணிகளை வீடியோ எடுத்து யாருக்கு அந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது போன்ற விசயங்களை பகிர்ந்து கொள்ள அனைத்தும் அங்கு குழுமியிருந்தவர்களால் குறிப்பெடுத்துக் கொள்ளப்பட்டது.
காலை முதல் மதியம் வரை நடந்த சந்திப்புக் கூட்டம் இரண்டரை மணிக்கு முடிந்து, அனைவரும் கிளம்ப, மதிய உணவிற்காக ஜேப்பி தன்னுடன் ஷிவானியையும் வெளியே அழைத்துச் சென்றான்.
“நீங்க பழகுறதுக்கு ரொம்ப ஸ்வீட்டா இருக்கீங்க ஜேப்பி. உங்களை இன்னைக்கு இங்க இருந்து ஊருக்கு அனுப்பவே மனசு வரமாட்டிங்குது” ஆங்கிலத்தில் ஜேப்பியிடம் தனது மனதில் உள்ளதை ஷிவானி பகிர,
“எனக்குமே இந்த ஊரு, இந்த மக்கள், நம்ம அலுவலக நண்பர்கள், எல்லாத்துக்கும் மேல குறிப்பா நீ!” எனத் தாமதித்தவன், “உன்னை விட்டுட்டு ஊருக்குப் போகணும்னு யோசிச்சாலே, ரொம்பக் கசப்பாத் தோணுது ஷிவான்” ஜேப்பியும் ஷிவானியிடம் தனது மனநிலையை உரைத்தான்.
இதுதான் ஜேப்பி. ‘உன்னால மட்டுந்தான் இதை ரொம்ப ஃபெர்ஃபெக்டா செய்ய முடியும். நீ இல்லைனா எப்டி இந்த வேலை சாத்தியமாகும்’ என்பதுபோலவே அனைத்து தரப்பு பணியாளர்களிடமும் இனிக்கப் பேசி, தனது பணியாளர்கள் முகம்சுழிக்காமல் எத்தனை அதிகமான வேலையையும் சுணங்காது வாங்குவதில் வல்லவன்.
இத்தனை அழகன். கோடீஸ்வரன். தன்னை விட்டுச் செல்வதை எண்ணி வருந்துவதாய் கூறுகிறானே என நினைத்த ஷிவானி, ஜேப்பியோடு முன்பைக் காட்டிலும் இன்னும் அதிக நெருக்கமாக உணர்ந்தாள்.
அதனைத் தொடர்ந்து சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தபோது, “உங்களுக்கு கல்யாணமாகலைன்னா, என்னைக் கருத்தில் கொள்ளுங்கள்” என இதுதான் தக்க சமயமென ஜேப்பியிடம் கேட்டிருந்தாள் ஷிவானி.
சிரிப்பு மாறாமலேயே, “வயிஃப்கிட்ட உன்னைப்பத்திச் சொல்லி, ஒரு சான்ஸ் கேட்டுப் பாக்கறேன். அவ சரினு சொன்னா, கண்டிப்பா நீ சொன்னதைக் கன்சிடர் பண்ணலாம்” கண் சிமிட்டியவாறு கூறினான் ஜேப்பி.
“உங்களுக்கு இன்னும் கல்யாணமாகலைன்னு சொன்னாங்களே?” என அதிர்ச்சியோடு, தானறிந்த உண்மையை தன்னை மீறிக் கேட்டாள் ஷிவானி.
“மேரேஜ் ஆகாததால வயிஃப் இல்லைனாலும், ஃபிக்ஸ் ஆனா ஃபியான்சி இருக்க சான்ஸ் இருக்குல்ல ஷிவானி. அதைத்தான் அப்டிச் சொன்னேன்” எனக் கூறி அவளைச் சமாளித்துக் கிளம்பியிருந்தான் ஜேப்பி. அதற்குமேல் பேச இயலாமல், வாயடைத்துப் போயிருந்தாள் ஷிவானி.
ஜேப்பி, பலரிடம் பலவாறு கூறியிருந்தாலும், உண்மை என்னவென்று அறியாமல் குழப்பமடைந்து திரிந்த, திரியும் பெண்கள் ஏராளம்.
வந்த ஒரு வாரத்திலேயே ஆண், பெண் என பாகுபாடின்றி அங்கு தனது கிளை அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் அனைவரையும், வசியம் செய்திருந்தான் ஜேப்பி.
பணியாளர்கள் யோசித்து, தங்களை வேலை வாங்க எப்படியெல்லாம் தங்கள் முதலாளி பேசுகிறார் என தங்களுக்குள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவே நேரம் கிடைக்காதவாறு, வேலைகளை வாங்குவான் ஜேப்பி.
உண்ணும் நேரம் தவிர, வேறு எந்த சிந்தனையும் அவர்களுக்கு ஏற்படாதவாறு திட்டமிட்ட பணிகள், அடுத்தடுத்து நடக்குமாறு, மேற்பார்வையாளர்கள் மூலம் தனது திட்டத்தை அரங்கேற்றுவான்.
முகத்தைச் சுழித்தோ, தங்களுக்கெதிராகவோ பணியாளர்கள் பேசினால், அப்படிப்பட்ட பணியாளர்களை இயன்றவரை, வேறு பணிகளுக்கு மாற்றி உடனே அதுபோன்ற நெருக்கடிச் சூழலை சரி செய்துவிடுவான் ஜேப்பி.
ஜேப்பி என்பவனது தொழில் முனைப்பு சார்ந்த முகம் இப்படி இருந்தாலும், அவனுக்குரிய இன்னொரு முகம் அவனது தாத்தா எஸ்ப்பியைத் தவிர வேறு யாருக்குமே இதுவரைத் தெரியாது.
அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு தனது பயணத்தை பங்களூரு நோக்கித் துவங்கியிருந்த ஜேப்பிக்கு, பயணம் முழுமைக்கும் தன் நினைவுகளோடு பயணிக்க தன்னவளின் நினைவுகளில் மூழ்கத் துவங்கினான்.
தனது இல்வாழ்க்கைக்கான அர்த்தமாக எண்ணி, அவள் தன்னையன்றி வேறு யாரையும் என்றுமே கருத்தில் கொள்ளாள் எனும் இறுமாப்போடு இருக்கிறான் என்றால், அவளின் காதலை, தனக்கான தேடலைக் கணிந்திருத்ததே காரணம்.
ஆனால் அவனது எண்ணம் தவிடுபொடியாகும் நாள் விரைவில் வரவிருக்கிறது என்பதை அறியாமலேயே பயணத்தைத் துவங்கியிருந்தான் ஜேப்பி.
ஜேப்பியின் தனிமையும், ஓய்வும் எப்போதும் அவளின் நினைவுகளோடு! இன்றும் அப்படியே!
***
கண்ணுக்கு மாயமாய் மறைந்தவளை, ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு முன் தன்மீது அபாண்டமாகப் பழியைப் போட்டதோடு, கானல் நீராய் சட்டென மறைந்து, தன்னிடமிருந்து வெகுதூரம் காணாமல் போனவளை, அகமும் புறமுமாய் தேடிக் களைக்கிறான்.
தன்னவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்திருந்தாலும், அவளின் பிடிவாதம் கருதி ‘அவளா உண்மை என்னானு தெரிஞ்சிட்டு, வரும்போது வரட்டும்! என்னை விட்டுட்டு வேற எங்க போயிறப் போறா…” என அஜாக்கிரதையாக விட்டிருந்தான்.
அகந்தை ஆழியளவு ஜேப்பியிடம் இருந்தது. அது அவனது பிறப்போடு வந்தது. இரங்க இடம் கொடாத இரும்பு மனம்.
உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு, தன்னிடம் எதையும் கேளாமல் சந்தேகத்தோடு தன்னை உளியின் தன்மையிலான வார்த்தைகொண்டு காயம் ஏற்படுத்தியவளை நம்ப வைக்கும் முயற்சியில் அவன் துளியும் இறங்கவே இல்லை.
ஒத்தி வைத்திருந்தான் தனது ஆர்வத்தை!
வறுமையில் வளர்ந்தவள் என்று கூறினால், யாருமே நம்ப மாட்டார்கள். அத்தனை வளத்தோடு ஐந்தடி, நான்கங்குல உயர தேவதை. நிறமும் சரி, வனப்பும் சரி, பணியில் ஈடுபாடும் சரி. எதிலும் அவளைக் குறை கூற இயலாது.
“ஜேப்பி, நீங்க சொன்ன வர்க்கை உங்க டெட்லைன்கு ட்டூ டேஸ் முன்னாடியே முடிச்சிட்டேன். அதனால, அடுத்த வேலையக் கொண்டு வந்து, நீ ஆகா ஓகோன்னு சொல்லி, இதையும் நீதான் செய்யணும்னு ஐஸ் வச்சி ஏமாத்தி நான் அசந்த நேரமாப் பாத்து எங்கிட்ட நீட்டக் கூடாது” சிரிப்போடு, கண்டிப்பாய் ஜேப்பியிடம் கூறுவாள் சுமி.
“எப்டி சுமீ, நீ மட்டும் இவ்ளோ தெளிவா இருக்க?” ஜேப்பி
சில நேரங்களில் மரியாதையோடும், சில நேரங்களில் அதை விடுத்தும் இருவரின் மனநிலைக்கேற்ப பேசிக் கொள்வர். அது அன்பு பீறிட்ட நிலையில் ஒருமையிலும், முதலாளி தொழிலாளி எனும் அறிவின் விழிப்பு நிலையில் மரியாதையோடும் சுமியின் வாயில் வரும்.
“எங்க உடனே தெளிவானேன் பாஸ்! உன்னை, உன்னோட இந்த மாடுலேசன் பேச்சுக்கு என்ன அர்த்தம்னு தெளிவாப் புரிய, ஒன்னு இரண்டு நாளு இல்ல, ஏறத்தாழ பதினெட்டு மாசமாயிருச்சு.” என்றவள்,
“எங்களையெல்லாம் தட்டிக் குடுத்து, நீ லோடு குடுக்கறதே தெரியாம வேலை வாங்கற பாரு! நீதான் ரொம்ப ஸ்மார்ட்!” என சுமியும் சிரித்தபடியே உரைப்பாள்.
“வெளியே வேற யாருக்கிட்டயும், நம்ப கம்பெனியோட இந்த ரகசியத்தை மூச்சு விட்றாத சுமீ” கூறிவிட்டுச் சிரிப்பான் ஜேப்பி.
“சொல்லாம இருக்கணும்னா ஒரு கண்டிசன் பாஸ்”
“கண்டிசன்லாம் கண்டாமினேட்டட் வாட்டர் மாதிரி எனக்கு அலர்ஜி. அதெல்லாம் நமக்கு ஒத்து வராது சுமீ” என சமாளித்து விலகிப் போவான் ஜேப்பி.
“ஜேப்பி, நமக்குன்னு சொல்றீங்க?” என நினைவுறுத்துபவளை, சிரித்துச் சமாளிப்பானே அன்றி, பேச்சினூடே அவளையும் சேர்த்துக் கொண்டது, அவனுக்குள் ஒரு இதத்தை உருவாக்கும்.
ஆனாலும், அவள் எதிர்படும் நேரங்களில் மட்டும் பேசுவதோடு சரி. மற்ற நேரங்களில் அவளிடமிருந்து விலகி இருக்கவே பெரும்பாலும் நினைப்பான் ஜேப்பி. ஆனால் மற்றவர்களிடம் அப்படியல்ல.
அதற்குக் காரணம் இருந்தது. மிகவும் தெளிவானவள் சுமீ. தன்னை, தனது எண்ணத்தை, தனது பார்வை மூலமோ, பேச்சின் வழியாகவோ, நடவடிக்கை மூலமோ சட்டெனத் தெரிந்து கொண்டுவிடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கைதான்.
தேவையில்லாமல் அவளின் மனதில் ஆசையை வளர்த்து, தாத்தா பிடிவாதமாக தங்களின் திருமணத்திற்கு மறுத்துவிட்டால் என யோசித்து ஜேப்பி ஆரம்பத்தில் தனது ஆசைகளை தனக்குள் வைத்துக் கொண்டதோடு சரி.
சுமித்ராவிற்குமே, ஜேப்பியை தனது நிறுவனத்தின் முதலாளி எனும் நிலையில் பிடித்தாலும், காணும் நேரங்களில் கனிவோடு பேசுவதோடு சரி. அவனை வால்பிடித்து பின்னோடு திரிவதோ, அவன் தனக்குத் தரும் சந்தர்ப்பத்தை தவறாகப் பயன்படுத்தவோ அவள் என்றுமே எண்ணியது இல்லை. இதனை ஜேப்பியும் அறிந்தேயிருந்தான்.
சுமித்ராவைப் பொறுத்தவரை, விரலுக்கு ஏற்ற வீக்கமே சிறந்தது எனும் ரகம் அவள். ஆகையினால், தேவையில்லாத ஆசைகளை எப்போதுமே வளர்த்துக் கொள்ள எண்ணாதவள்.
சுமித்ராவின் அவளறியாத ஆர்வமான பார்வைகளை, அவளின் தனக்கான தேடலைக் கண்டாலும், அதனைத் தான் கண்ணுற்றதைக் காட்டாமலேயே கடப்பான் ஜேப்பி.
சுமித்ராவைக் கண்ட நாள் முதலே, மனம் ஆனந்தக் கூப்பாடு போடுவதை உணர்ந்தேயிருந்தான் ஜேப்பி. ஆரம்பத்தில், அதனை இனக்கவர்ச்சியாகவே எண்ணியிருந்தான்.
ஆனால் அது அப்படியல்ல, அதற்கும் மேல் என்பதையும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு, அவள் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே ஜேப்பிக்கு கிடைத்தது.
சுமியிடம் தனது மனம் புரியாமல், அவளின் வழியில் இடைப்பட்ட தனது சகோதரன் கார்த்திக்கை கண்டவனுக்கு சட்டென கோபம் வந்திருக்க, நேரடியாக கார்த்திக்கிடம் பேசி, ஆரம்பத்திலேயே அவனது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியிருந்தான் ஜேப்பி.
தன்னோடு பிறந்தது முதலே வளர்ந்தவனை, யாரோ ஒரு பெண்ணிற்காக எதிர்ப்பது எதனால் என ஜேப்பிக்குள் அப்போது எழுந்த வினாவிற்கான பதில், தான் அவளை நேசிப்பதுதான் என்பதே.
உண்மை நிலை உணரப் பெற்றவன் கார்த்திக்கிடம், “கார்த்தி, நான் ஒரு விசயம் சொல்லவா?” ஜேப்பி.
“என்னடா எங்கிட்ட இவ்ளோ பீடிகை. அப்டி என்ன பெரிய விசயம்னு சொல்லு” கார்த்தி
“அது…” என நீண்ட நேரம் தயங்கியவன், “ஏன்னு தெரியலை. சுமீய மனசு ஒரேடியாத் தொறத்துது. நான் எவ்ளோ கன்ட்ரோல் பண்ணிப் பாத்தாலும், நோ யூஸ்” என்றவனை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் எழுந்து, ஜேப்பியின் முதுகில் தட்டிக் குடுத்தான்.
பிறகு, “நம்ம வீட்டைப்பத்தித் தெரிஞ்சும் ரிஸ்க் எதுக்குடா?” என்றதோடு, “வேணுனா..” எனத் துவங்கியவனை, அவன் என்ன கூற வருகிறான் என்பது புரிந்திட, அவன் கூறுமுன் முறைத்தே அடக்கினான் ஜேப்பி.
கார்த்திக் என்ன கூற வருகிறான் என்பது ஜேப்பிக்கு நன்கு புரிய, “நீ நினைக்கற மாதிரியெல்லாம் என் மைண்ட்ல எதுவும் இல்லை” என சட்டெனப் பேசி கார்த்திக் மேற்கொண்டு பேசிவிடாமல் தடுத்தவன்,
“வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கனுதான் நானும் அவகிட்டயிருந்து தள்ளியே இருக்கேன். நீயும்..” என்றவனின் வார்த்தையின் அத்தனை கடுமை.
அதற்குமேல் அங்கிருந்தால், கார்த்தி இதைப்பற்றி இன்னும் கிளறுவான், தானும் அதிகம் பேசுவோம் என்பதைக்காட்டிலும், தமையனிடம் கடுமை காட்டிடக்கூடும் என்றெண்ணியவன், பேச்சை வளர்க்காமல், அவ்விடத்தை சட்டெனக் கடந்து போயிருந்தான் ஜேப்பி.
கார்த்தியைப் பொறுத்தவரை, சந்தர்ப்பம் கிடைக்கும் நிலையில், எந்த எல்லைக்கும் போகக்கூடியவன். யாரையும் வற்புறுத்துவதோ, துன்புறுத்துவதோ, வன்புணர்வு எனும் நிலைக்கோ செல்ல மாட்டான் அவ்வளவே.
அதாவது, கார்த்தி தன்னவளிடம் வேறு மாதிரி நடக்க முயற்சிப்பதை விரும்பாததால், முன்னெச்சரிக்கை உணர்வோடு தமையனிடம் கூறிவிட்டான் ஜேப்பி.
இது அலுவலகம் துவங்கி ஆறு மாதங்களில் நடந்த விசயம். கார்த்திக்கும் தனது சகோதரனின் விருப்பம் அறிந்தது முதல், மற்றவர்களிடம் நடந்துகொள்வதைவிட, மிகவும் மரியாதையோடு, இடைவெளியோடு சுமித்ராவிடம் நடந்து கொள்ளத் துவங்கியிருந்தான்.
தனது சகோதரனின் பிடிவாதம் வெல்லுமா, அல்லது தனது தாத்தாவின் அந்தஸ்து பேதமை வெல்லுமா எனும் விடைதெரியா வினாக்களுக்கு இடையே வில்லங்கமாக தானிருக்க வேண்டாம் என முடிவு செய்து ஆரம்பத்திலேயே ஒதுங்கியிருந்தான் கார்த்திக்.
ஆனால் அதுவே சுமித்ராவிற்கு, கார்த்திக்கின் பரிமாணம் கண்டு, மிகவும் நல்லவன் எனுமாறு ஆழப்பதிவாகியிருந்தது. இதுவே ஜேப்பி, எப்போதும் பெண்களோடு இருப்பதால், அவனைப் பிடித்தாலும், அவனிடமிருந்து இடைவெளியோடு விலகி இருக்கவே எண்ணினாள்.
அடுத்து வந்த ஒன்றரை ஆண்டுகள் எந்தப் பிரச்சனையும் இன்றி நன்றாகவே சென்றிருந்தது. அதாவது ப்ருத்வி, பூஜா மகதீரா என்ற இருவரும் அங்கு வேலையில் சேரும்வரை.
சில இடையூறுகளால் ஜேப்பியின் நினைவுகள் தடைபட, அதிலிருந்து நடப்பிற்கு வந்தவன், பங்களூர் வந்து சேரும்வரை, மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினான்.
பங்களூரில் வந்து இறங்கியவனை, சிவபிரகாசம் வரவேற்க, அவரை அங்கு எதிர்பார்த்திருந்தவன், அதிர்வைக் காட்டாது, “ஹாய் அயன் மேன்” தாத்தாவை ஆரத்தழுவிக் கொண்டவனுக்குள் தாத்தாவின் வருகைக்கான காரணம் தெரிந்திருக்க, ‘இப்ப என்ன சொல்லித் தட்டிக் கழிக்கலாம்’ மனம் பந்தயக் குதிரையாய் விரைந்தது.
சிவபிரகாசத்தின் பெரும்பான்மையான தொழில்களின் நிழலாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜெயபிரகாஷை அத்தனை எளிதில் எப்படி விடுவார்?
மச்சிலிபட்டினத்தில் தனக்காக ஏற்படுத்தியிருக்கும் வீட்டிற்கு அடுத்த நாளே சென்றுவிடும் நோக்கோடு, தாத்தாவிடம் பிடிகொடுக்காமல் பேசினான் ஜேப்பி.
தொடர் ஓட்டங்களின்போது உண்டாகும் மனஅழுத்தத்திலிருந்து மீள, அங்கு சென்று பத்து நாள்கள் தங்கிவருவது ஜேப்பியின் வழக்கம்.
தாத்தாவிடமிருந்து தப்பினானா?
***