தோளொன்று தேளானது 21(ஆ)

தோளொன்று தேளானது! 21B

ப்ருத்வி உயிரோடு இருப்பதைக் கண்ட ஜேப்பி, மேனனிடம் விசாரித்ததில் ப்ருத்வி தப்பிக்க தான் உதவிய விதத்தைப் பற்றிக் கூற அனைத்தையும் அறிந்து கொண்டிருந்தான் ஜேப்பி.

ப்ருத்வியின் உயிருக்கு இனி ஆபத்து எனில் தன்னுடன் தங்கியிருந்தவன் என்கிற வகையில் சுமித்ரா அவனைத் தேட எண்ணினால், அது தனக்கே பிரச்சனையாக முடியும் என்றெண்ணியே இதுவரை ப்ருத்வியை உயிரோடு விட்டு வைத்திருக்கிறான் ஜேப்பி.

சுமி தேடி ப்ருத்வி கிடைக்கும் நிலையில், தங்களைப் பற்றி ப்ருத்வி தடயங்கள் வாயிலாக அறிந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த விசயங்களையும் அவளிடம் ப்ருத்வி பகிர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அவனுக்கு மறதி உண்டாகும்படியான சில பச்சிலை மருந்துகளைக் குடுக்கப் பணித்திருந்தான் ஜேப்பி.

***

சிவபிரகாசம் தாத்தாவின் செயல்பாடுகளை ஓரளவிற்கு கணித்த ஜேப்பி, மேனனை அழைத்து, “ப்ருத்வி மேட்டர்ல பண்ண மாதிரி உனக்கு இன்னொரு புராஜெக்ட்.  அதுல ஃபெர்பெக்டா ரெண்டு பேரைக் காப்பாத்திட்டா, அந்த ஒரு விசயத்துக்காவே உன்னை உயிரோட விட்டறேன்” பேரம் பேசிட, மேனனும் அதற்கு வேண்டிய ஆயத்தப் பணிகளில் இறங்கியிருந்த வேளை.

வீரா ஜேப்பிக்கு அழைத்து, “சந்தேகப்படற மாதிரி நாளு பேரு மாட்டியிருக்காங்க” கூறியதும், தாமதிக்காமல் நேரடியாக அவர்களைச் சந்தித்து, அவர்கள் ஆதிகேசவனின் ஆள்கள் என்பதையும், அவர்களின் திட்டத்தையும் அறிந்து கொண்டவன், அன்றே மல்லிபட்டினம் விரைந்திருந்தான் ஜேப்பி.

சில விசயங்களை அங்கிருந்தவர்களிடம் பேசிவிட்டு, வீராவிடம் பாதுகாப்பு விசயங்களில் எப்டி இருக்க வேண்டும் என்பதை முன்பே அறிவுறுத்தியிருந்தபோதிலும், அன்றும் அதனை நினைவுறுத்தியிருந்தான்.

மறுநாள் காலையில், தனது தேவையின் காரணமாக மனைவியைத் தன்னோடு இருத்திக் கொண்டவன், தேவியை ஷ்யாமின் துணைக்குப் பள்ளிக்குச் செல்லுமாறு கூறியிருந்தான்.

இன்னோவா காரில் ஷ்யாம், தேவி மற்றும் ஓட்டுனர் மூவருமாகக் சென்றதாகத்தான் அனைவருமே நம்பிக் கொண்டிருந்தனர். 

கிளம்பியபோது மூவருமாகவே பயணத்தைத் துவங்கியிருக்க, இடையில் வண்டியை மறித்து, “பையனுக்கு உடம்புக்கு முடியலை.  ரொம்ப தூரம் அவனைத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போகணும்.  அதனால, பக்கத்துல இருக்கற பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விட்டுட்டா, அப்புறம் பஸ்ல போயிக்குவோம்” கையில் குழந்தையோடு கண்ணீரைத் தேக்கியவாறு கேட்டதும், தேவியும் ஓட்டுநரும் மறுத்தனர்.

டிரைவருக்கு யாரையும் வண்டியை நிறுத்தி ஏற்ற அனுமதி வழங்கப்பட்டிருக்காத நிலையில் அவன் மறுத்தும் ஷ்யாமின் பிடிவாதத்தால்தான் வண்டியையே நிறுத்தியிருந்தான் ஓட்டுநர்.

ஷ்யாமிற்கு வழிப்போக்கர்கள் பேசியது பாதி புரிந்தபோது, மற்ற இருவரும் மறுத்ததை சட்டை செய்யாமல் பிடிவாதமாக அவர்களை ஏற்றிக் கொள்ளும்படி ஷ்யாம் கூறியதும், இருவருமே முதலில் மறுத்தனர்.

“சொல்லு தேவி.  மீகித்த நான் பேசுதேன்.  போனைப் போது” அவன் விவாதம் செய்து, அவனது பிடிவாதத்திற்கு செவி சாய்க்கச் செய்தது மற்றவர்களுக்குத் தெரியாமல் போயிருந்தது.

அப்போதும் ஷ்யாம், “அவங்களை பின்னாதி உக்காத வைங்க திதைவர். ஹாஸ்பிதல்லயே கொண்துபோயி வித்துதுங்க” ஓட்டுநரிடம் கூறியதோடு, பின்பக்கத்தில் இருந்த சீட்டில் இருவரையும் அமரச் செய்து, நடுவில் தேவியும் ஷ்யாமும் அமர்ந்து கொண்டிருந்தனர்.

ஷ்யாம் சென்ற வண்டியின் பின்னே சில நாள்களாக சந்தேகம் வராத வகையில் பின்தொடர்ந்த வீரா, ஷ்யாம் செல்லும் வண்டி நின்றதைக் கவனித்து விரட்டி வந்தாலும், அருகே வருமுன் இன்னோவா புறப்பட்டதைக் கண்டாலும் என்ன நடந்தது என்பது தெளிவாகப் புரியவில்லை அவனுக்கு. ஆனாலும் பழையபடி இடைவெளி விட்டுப் பின்தொடர்ந்தான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தனக்கு முன்பாக நடந்த அசம்பாவிதத்தைக் கண்ட வீரா, அவனது வண்டியை விரட்டி வந்தான். எரிந்தவாறு வண்டி ஓடியதைக் கண்டு வண்டியை நிறுத்திவிட்டு வண்டியின் பின்னோடு ஓடி வந்தான்.

வண்டி தீப்பற்றிய சில நொடிகளில் வண்டியின் வலப்புற கதவு திறந்து இமைக்கும் நேரத்தில் வெளியே வந்து விழுந்த அடுத்தடுத்த இருவரையும் தனது வண்டியில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்திருந்தான் வீரா.

கதவைத் திறக்க உதவிய டிரைவர் நடுவில் இருந்தவர்களை வெளியே குதிக்குமாறு செய்ததோடு, கடைசி சீட்டில் இருந்த இருவரையும் பார்த்து சீட்டை மடக்க உதவிசெய்தும் அவனால் அதைச் செவ்வனே செய்ய முடியாமல் போயிருந்தது. 

தாமதித்த காரணத்தினால் டிரைவரோடு, மற்ற இருவரும் வெளிவர முடியாமல் வண்டியோடு எரிந்து போயிருந்தனர்.

வண்டி ஒடிக்கொண்டே எரிந்த நிலையில் சென்றதால் வீராவால் வண்டியை நெருங்க முடியவில்லை.  கீழே ஆளுக்கொரு புறம் விழுந்து பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவர்களையாவது காப்பாற்ற எண்ணி அவர்களை தனது வண்டியில் தூக்கிப் போட்டவன் மருத்துவமனைக்கு விரைந்திருந்தான்.

மருத்துவமனையில் சேர்த்தபோது, ஓடிய வண்டியிலிருந்து குதித்ததில் உண்டான பெருங்காயங்களினால் இருவரும் கவலைக்கிடமாகவே இருக்க, எதையும் உறுதியாகக் கூற முடியாத நிலையில் இருந்தனர்.

சம்பவ இடத்திற்கு ஜேப்பி விரைந்தபோது, வண்டியில் ஐவர் இருந்ததை வீரா மூலம் அறிந்து கொண்டவன், நடந்த சம்பவங்களை தங்களுக்குத் சாதகமாக்கிக்கொள்ள எண்ணி, காவல்துறையிடம் பணிந்து காரியம் சாதித்துக் கொண்டிருந்தான்.

நடந்த நிகழ்வின் தாக்கத்தால் பயந்துபோன மனநிலையில் பதறிப் பதறி விழித்த ஷ்யாமின் மனநிலையை ஒழுங்குபடுத்தவும், காயங்களை ஆற்றவும் அதிக நாட்கள் எடுக்கும் என்பது தெரியவர, ஷ்யாமிற்கு இதுவே பாதுகாப்பான இடம் என எண்ணி சுமியிடம் ஷ்யாமைப் பற்றிய உண்மைச் செய்தியை மறைத்திருந்தான் ஜேப்பி.

தேவி உயிருடன் இருந்தாலும், கால் எலும்புகள் முறிந்துபோன நிலையில் அதிகமான காயத்தோடு இருந்தவளுக்கு தேவையான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருந்தான்.

இடையில் இரண்டொரு முறை சென்று நேரில் சந்தித்து வந்திருந்தான் ஜேப்பி.

அப்போது குழந்தை ஷ்யாம் ஜேப்பியைக் கண்டு, “தாதி, மீம்மா பாப்பா எப்தி இதுக்கு.  மீய பாத்துக்க சீக்கிதமே நான் வதுவேன்னு சொல்லு” என்றவன்

விபத்து நடந்த தினத்தில் ஏற்பட்ட எதிர்பாரா நிகழ்வுகளைப் பற்றி அப்படியே ஜேப்பியிடம் பகிர்ந்து கொண்டிருந்தான்.

அத்தனை ஆங்காரத்தோடும், கோபத்தோடும் பேசிய ஷ்யாமைக் கண்டதும் ஜேப்பிக்கு மனதில் நெருடல் உருவானது.

‘குழந்தை, அதனோட இயல்பையே மறந்து பெரிய மனுசன்போல பழிவெறியத் தூண்டியிருக்கு நடந்த சம்பவம்.  இதுக்கு நானும் ஒரு காரணமாகிட்டேனே’ தனக்குள் நொந்து கொண்டான் ஜேப்பி.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட ஜேப்பி, “ரெஸ்ட் எடு ஷ்யாம்.  டாடி உனக்கு ஹெல்த் இஸ்யூஸ் சரியானதும் சுமிக்கிட்ட கூட்டிட்டுப் போறேன்.  அதுவரை சமத்தா இருப்பியாம்” என்றதும்,

எந்த பிடிவாதமுமின்றி, “சதி தாதி” சம்மதத்தைத் தெரிவித்திருந்தான் குட்டி எஸ்ப்பி.

***

ப்ருத்வியை ஆதிகேசவனின் ஆள்கள் தூக்குவதற்கு முன்பாகவே அவனை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள, ஏதுவான ட்ரேக்கிங் டிவைஸை ப்ருத்வியின் உடம்போடு இணைத்திருந்தனர்.

அதன்பின் தங்களின் நிறுவனத்தில் பணியாற்றியவனைக் காணவில்லை என காவல்துறையில் புகார் செய்திருந்தான்.

அவன் உடம்பிலிருந்த ட்ரேக்கிங் டிவைஸ் துணையோடு, ப்ருத்வியை கொண்டு சென்று வைத்த இடத்தினையும், ஆதிகேசவன் மற்றும் அவனது சகாக்களையும் தனது சூம் நிறுவனம் மற்றும் காவல்துறையின் உதவியோடு கண்டுபிடித்ததாக வெளியில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ப்ருத்வியிடம் விசாரித்தபோது, “யாருனு தெரியலை.  என்னைக் கடத்தினது எதுக்குன்னே தெரியலை” என்று உரைத்திருந்தான்.

காவல்துறையின் கேள்விகளின் வழியே, “ஜெயதேவ்னு எனக்கு ஒரு பிரண்ட்” எனத் துவங்கி தனது சந்தேகத்திற்கு காரணமான நிகழ்வுகளைக் கூறிவிட்டு, “அவனோட தாத்தாவுக்குத்தான் எம்மேல கோபம்.  அவரைத்தவிர வேற யாரு மேலயும் எனக்குச் சந்தேகமில்லை” தனது பக்க பதிலாகக் கூறியிருந்தான் ப்ருத்வி.

ப்ருத்வியின் பதிலைக் கேட்ட காவல்துறை, ஆதிகேசவன் மற்றும் அவனது சகாக்களின் பதிலுக்காக காத்திருந்தது. அடுத்து சந்தேகத்திற்கு இடமளித்த சிவபிரகாசத்தை கொண்டு வந்து நேரில் விசாரிக்க வேண்டிய பணிகளைச் செய்து கொண்டிருந்தது.

ஆதிகேசவனோ நீண்ட நெடிய நாளாக தனது வாயைத் திறக்காமல் மௌனம் சாதித்தான்.

***

பழைய நினைவுகளிலிருந்து மீண்ட ஜேப்பி, ‘மொள்ளமாரிக் கூட்டத்துல ஒரு ஆளா இருக்கும்போது அவகிட்ட எதைச் சொல்ல.  எதை மறைக்க.  அதுக்குப் பேசாம இருக்கறது மேல்’ என அமைதி காத்திருந்தான்.

அந்நேரத்தில் எழுந்து  தன்னைத் தயார் செய்து கொண்டு வந்தான்.  பிறகு இன்னும் விடியலுக்கு மூன்று மணித் தியாலம் இருக்கும் நிலையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை மெதுவாக தனது இருகைகளிலும் தூக்கிக் கொண்டு தனது காரை நோக்கி விரைந்தான்.

உறக்கம் கலைந்து கணவனை நோக்கியவள், “இப்பவும் நான் வரமாட்டேன்னு சொன்னதுக்காக, தூங்கிக்கிட்டு இருந்தவளைத் தூக்கிட்டு எங்க போற?” என தூக்கக் கலக்கத்தோடு கேட்டாள்.

அமைதி.

“உங்கிட்டப் போயிக் கேட்டேன் பாரு” என தனக்குத்தானே தலையில் அடித்துக் கொண்டவள், காரின் அருகே சென்றதும் அவளாகவே இறங்கி பின்பக்கக் கதவைத் திறந்து இருக்கையில் அமராது அதில் படுத்துவிட்டாள் சுமித்ரா.

இளநகையோடு உள்ளே சென்று, சில பொருட்களை எடுத்துக் கொண்டு கதவை அடைத்துவிட்டு வந்தவன், காரை எடுத்துக் கொண்டு விரைந்தான் ஜேப்பி.

மறுநாள் சுமியுடன் நீண்ட  பயணத்திற்குப்பின் ஜேப்பி வந்து சேர்ந்த இடம் வில்லா வகை வீடு.

வீட்டைப் பார்த்ததுமே சுமிக்குப் புரிந்தது.  இது தற்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருந்தது என்று.  தங்கிக் கொள்ள ஏதுவாக அனைத்து அவசியமான தேவைகளுக்கான வசதிகள் இருந்தது.

“இந்த வீட்டுக்கு என்ன கதை சொல்லப் போற?” ஜேப்பியை நோக்கினாள்.

சுமியின் அருகே வந்து அவளை தோளோடு ஒரு பக்கம் அணைத்தவாறு, அவனது மறுப்பக்கக் கையை சுமியின் அடிவயிற்றில் வைத்தபடி, “இந்தக் குழந்தை பூமிக்கு வரதுக்குள்ள எல்லாத்தையும் சரி பண்ணிருவேன் சுமி.  நம்பு” என்றவன்,

“இன்னும் கொஞ்ச நாள் தனியாதான் இருக்கணும் நீ.  வேற வழியில்ல.  அதுவரை ரொம்ப கேர்புல்லா இரு” ஜேப்பி கூற,

“நாக்பூர் அவ்ளோதானா.  இது எந்த இடம்?” வினவினாள் சுமி.

“இது கர்நாடகா”  என்றவனது பேச்சைக் கேட்டுத் தலையிலடித்துக் கொண்டவள் அதன்பின் என்ன செய்தாள்?

***