தோளொன்று தேளானது! 22
“மொத்தக் குடும்பமும் அமராவதி வந்திருவாங்க. உனக்கும் அங்கே போக விருப்பம்னா ஒன்வீக் கழிச்சிப் போகலாம். இல்லை இங்கேயே இருக்கறதா இருந்தாலும் இருக்கலாம்” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,
“ரொம்ப முத்திருச்சு உனக்கு. கல்யாணம் பண்ணி ஹனிமூன் கூட்டிட்டுப் போற ஐடியாவே இல்லாம, ஒரு ஓல்ட் மேனுக்குப் பயந்து ஸ்டேட் விட்டு ஸ்டேட் நீ ஒளியறன்னா அதுல ஒரு நியாமிருக்கு.
என்னையும் உன்னோட விளையாட்டுல கூட்டு சேத்துட்டு திரியறதுமில்லாம, குடும்பத்தையே இந்த விளையாட்டை விளையாட டாஸ்க்கா குடுத்திருக்க பாரு. உன்னையெல்லாம்…” தலையிலடித்தபடியே அலுத்துக் கொண்டாள் சுமி.
இருவரின் சீண்டலும், கிண்டலும் உணர்வுகளை உல்லாசமாக இருக்கச் செய்திட்டாலும், சுமித்ரா ஓய்வுக்காக ஒதுக்கும் நேரங்களில் ஜேப்பி மிகவும் தீவிரமாக அடுத்தடுத்த பணிகளை தனது அலைபேசி வாயிலாகவே செய்து கொண்டிருந்தான்.
***
கார்த்திக்கிடம் நேரடியாக எதுவும் எஸ்ப்பி அதன்பின் கேட்கவில்லை. ஆனால் அவனது தெளிந்த முகம் அவரை இயல்பாக இருக்கவிடவில்லை.
‘நாம சொன்ன விசயத்தை பெருசா எடுத்துக்கலையா? இல்லை விசயம் எதுவுமே நடக்கலையா? இவ்ளோ தெளிவா முகத்தை வச்சிருக்கு பயபுள்ள!’ தனக்குள்ளேயே அதை வைத்துக்கொண்டு விடியல்வரை காத்திருக்க முடியாமல் விடிந்ததும் முதல் வேலையாக ஆதிகேசவனுக்கு அழைத்துவிட்டார் எஸ்ப்பி.
ஆதிகேசவன் பற்றிய விசயங்கள் எதுவும் தெரியாமல் எஸ்ப்பி அவனை அழைக்க, காவல்துறையின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டு, அதுவரை வாயைத் திறவாமல் சாமர்த்தியமாக இருப்பதாக எண்ணி இருந்தவனிடம், அவனது அலைபேசி அழைப்பை ஏற்றுப் பேசுமாறு சைகையில் கூறி காவல்துறையால் திணிக்கப்பட்டிருந்தது.
மறுத்தவனுக்கு வாயிலேயே இரண்டு குத்து. குபுக்கென இரத்தம் வெளியே எட்டிப் பார்க்க, அதன் நிறத்தைக் கண்டும் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தவனை மேலும் இரண்டு குத்து மூக்கில் குத்தியிருந்தனர்.
மூக்கிலிருந்து வலியோடு குபுகுபுவென வந்த இரத்தத்தைக் கண்டு அரண்டு போனவன், அதன்பின்பும் விடாமல் அடிக்க வந்த காவல்துறையின் செயலைக் கண்டு தாமதிக்காமல் அழைப்பை ஏற்றிருந்தான் ஆதி.
ம், ம்ஹ்ம். ம்ஹூம் இப்படியே சிறிது நேரம் சமாளிக்க, ஆதிகேசவனின் ஒற்றைப் பதிலில் சந்தேகம் வந்ததும் அழைப்பைத் துண்டித்திருந்தார் எஸ்ப்பி.
“என்னாச்சுனு தெரியலையே. பய வசமா எங்கேயாவது மாட்டிக்கிட்டானா? இல்லை வேற எதாவது புது புராஜெக்ட்ல பிஸியானு சரியாத் தெரியலையே” தனக்குத்தானே புலம்பியவாறு, அடுத்து தனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள எண்ணி, அடுத்து வேறொரு எண்ணுக்கு அழைத்தார்.
“ம். இருக்கேன். அப்புறம்… இந்த ஜேஜே பில்டர்ஸ்ஸோட எல்லா பிரான்ஞ்லயும் என்ன நிலவரம்னு விசாரிச்சு, இன்னைக்கு மதியத்துக்குள்ள எனக்குச் சொல்லணும். டிலே பண்ணித் தொலைச்சிராத. உன்னைத் தொலைச்சுப்புருவேன்” என்றதோடு,
“இன்னொன்னு… அவனுகளோட சூம் நிலவரத்தையும் அப்டியே அனுப்பி வச்சிரணும்” கட்டளையாகக் கூறிவிட்டு வைத்திருந்தார் எஸ்ப்பி.
“நான் எஸ்ப்பி பேசறேன். அங்க நிலவரம் எப்டி இருக்கு?”
“ஏன்பா, அந்தப் பய ப்ருத்வியை தூக்கியாச்சில்ல! போனே போடாம இருக்கியே ஏன்?”
“ஜெயபிரகாசோட குடும்பத்தில அவனைத் தவிர இப்ப யாருமில்லைதான?” இதுபோன்ற கேள்விகளோடுதான் ஆதிகேசவனோடு உரையாடத் துவங்கியிருந்தார் எஸ்ப்பி.
ஆதிகேசவனுக்கு காவல்துறையின் முன்பு இயல்பாகப் பேச வராமல், தர்மசங்கட நிலையில் ஒற்றை வரியில் பதில் கூறி சமாளிக்க முயன்றிருந்தான்.
தெலுங்கானா மாநில காவல்துறை, ப்ருத்வியின் பேச்சைக் கொண்டு எஸ்ப்பியை அணுகும் வழிமுறைகளைச் செய்து, தமிழக காவல்துறையின் உதவியோடு எஸ்ப்பியை விசாரிக்க முடிவு செய்து கொண்டிருக்கும் வேளையில், அவராகவே ஆதிகேசவனுக்கு அழைத்து, ‘இந்தக் குதிருக்குள் நான் இல்லை’ பகீரங்கமாக தன்னை ஒப்புக் கொடுத்திருந்ததை அவரறியவில்லை.
இரண்டு மாநில காவல்துறையின் சீரிய முயற்சியில் அவராகவே வந்து சிக்கியிருந்தார்.
அதுவரை, ‘இவ்ளோ பெரிய தொழிலதிபர். நிறைய அரசியல் முக்கிய புள்ளிகளோட பினாமி. நிறைய இடங்களில் செல்வாக்கோட இருக்கக்கூடிய பெரிய மனிதர். அவரைப்போயி ப்ருத்வியோட ஒரே ஒரு தெளிவில்லாத வாக்குமூலத்தை மட்டும் வைத்து என்னவென்று போயி விசாரிக்க?’ தயங்கிக் கொண்டு, மாற்று வழியை காவல்துறை யோசித்துக் கொண்டிருந்த சமயமது.
அவராகவே ஆதிகேசவனுக்கு அழைத்து, அதிலும் குறிப்பாக ப்ருத்வியை விசாரித்தது வேறு ப்ளஸ்ஸாகி இருக்க தாமதிக்காமல் அடுத்த கட்ட பணியில் இறங்கத் தீர்மானித்திருந்தது காவல்துறை.
எஸ்ப்பியாகவே வந்து வலையில் சிக்கியது மிகுந்த உத்வேகத்தையும், உடனே இந்த கேசை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் எனும் நோக்கில் ஆவலாக அதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கியிருந்தது காவல்துறை.
அடுத்த அரைநாளில், அவரது வீட்டிற்கு சென்று அவர் அங்கு இல்லையென்பதை உறுதி செய்துகொண்டபின் அவரது அலுவலகத்திற்கும் சென்றது காவல்துறை.
இறுதியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தங்கியிருப்பதை அறிந்து மருத்துவமனைக்கே எஸ்ப்பியை நேரில் சென்று விசாரிக்க அன்று மாலையில் வந்திருந்தனர்.
மருத்துவமனை நிர்வாகம், “சார், அவரு இப்ப இங்க பேஷண்ட். அவரால பேச முடியாது”
“கவலைக்கிடமா இருக்காருங்கறீங்களா?” காவல்.
“அப்டியில்ல சார்” என்றவர், அதன்பின் எஸ்ப்பியின் உடல்நிலையைப் பற்றி எடுத்துக்கூற, “காலையில அவருதான் இந்த நம்பர்ல வெளி மாநிலத்துல இருக்கக் கூடிய ஒருத்தவருக்குப் போனுல பேசியிருக்காரு. நீங்க என்னன்னா, அவரை நேருல தொந்திரவு செய்யக்கூடாதுன்னு சொல்றீங்க!” என வினவியது.
காவல்துறை, கேஸ் பற்றிய விவரங்களை விரைவில் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் தங்களுக்கு ஒத்துழைக்குமாறு நிர்வாகத்தை வேண்ட, நிர்வாகம் தயங்கியது.
இதுபோல காவல்துறை அதிகம் வந்து செல்வதைக் கண்டால் அங்கு சிகிச்சைக்கு வந்திருக்கும் நோயாளிகள் இங்கு வந்து செல்வதை குறைக்கும் வாய்ப்புள்ளதை உணர்ந்து, உடனே நோயாளியை டிஸ்சார்ஜ் செய்து அனுப்ப முடிவு செய்து, அதனடிப்படையில் மேற்படி விசயங்களைச் செய்யத் துவங்கியது.
எஸ்ப்பியின் சார்பில் அவரது குடும்பத்தில் இருந்து வந்து, “எதுக்கு இப்போ எங்கட்ட எதுவும் சொல்லாம டிஸ்சார்ஜ் பண்றீங்க. இன்னும் பாதி ட்ரீட்மெண்ட்கூட போகலை” என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் வந்து கேட்டபோது,
“முக்கியமான என்கொயரிக்காக உங்க தாத்தாவைப் பாக்க கவர்மெண்ட்ல இருந்து ஆஃபீசர்ஸ் வந்திருக்காங்களாம். அவங்க கேட்டுக்கிட்டதால, வேற வழியில்லாமல் டிஸ்சார்ஜ் பண்ண வேண்டியதாப் போச்சு” கேட்டவர்களிடம் விளக்கம் கூறி அனுப்பியிருந்தது.
மருத்துவமனை சார்ந்த வேலைகளை கார்த்திக்கிடம் ஒப்படைக்கும்படி எஸ்ப்பி கூற, அவ்வாறே செய்துவிட்டு அனைவரும் வீட்டை நோக்கிக் கிளம்பியிருந்தனர்.
கார்த்திக்கும் மருத்துவமனை சார்ந்த பணிகளை முடித்துவிட்டு வந்துவிடுவதாகக் கூறி, அந்த வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்புமுன் தாத்தாவை விசாரணைக்காக அழைத்துச் சென்றதை அவன் அறிந்திருக்கவில்லை.
வீட்டிற்குள் எஸ்ப்பி நுழையும் முன்பே அங்கு காத்திருந்த காவல்துறை, உடனே அவர்களின் வீட்டை முற்றுகையிட்டிருந்தனர்.
காவல்துறையின் முக்கிய செயல்பாடுகள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு, விசாரணை துவங்கியது. எஸ்ப்பியின் அலைபேசி எண்ணைக் கொண்டும், ப்ருத்வியின் வாக்குமூலத்தைக் கொண்டும் துவங்கிய விசாரணை, ஆதிகேசவனுக்கு அன்று காலையில் எஸ்ப்பி அழைத்ததைப் பற்றி திசைமாறியிருந்தது.
எஸ்ப்பிக்கு தான் எதிர்பாரா வகையில் மாட்டிக் கொண்டதை உணர்ந்ததும், “என்னோட லாயர்கிட்ட நான் பேசணும்” என்றார்.
“அதுக்கு இப்போ அலௌவ் பண்ண முடியாது சார். நீங்க ஸ்டேசனுக்கு வாங்க. விசாரணை முடிஞ்சதும் வந்திரலாம்” என்றதும்,
மகன்கள் பேரன்கள் அனைவரும் அதனை மறுத்து, “அவரு ஹெல்த், வயசு இரண்டையும் யோசிச்சுப் பாருங்க சார். எதுனாலும் எங்க லாயர் வரட்டும். இந்த நேரத்துல இப்டியெல்லாம் பண்ண கையில ஆர்டரா கொண்டு வந்தீங்க” என்றதும் தக்க ஆவணங்களை அவர்களிடம் காட்டியது காவல்துறை.
பிறகு, “விசாரணைக்கு ஒத்துழைக்கலைன்னா உங்க பேருல புகார் கொடுக்கற மாதிரி இருக்கும். சின்ன ஒரு என்கொயரி. அதை முடிச்சதும் நாங்களே உங்களைக் கொண்டு வந்து விட்டுருவோம்.” எஸ்ப்பியிடம் உரைத்ததோடு,
வீட்டு நபர்களிடம், “இப்டி இடைஞ்சல் செய்தா, உங்க எல்லாரு பேருலயும் கம்ளைண்ட் பண்ற மாதிரி வரும்” கூறியதைக் கேட்டு அனைவரும் அமைதியானதும் எஸ்ப்பியை அங்கிருந்து அழைத்துக்கொண்டு காவல்துறை கிளம்பியிருந்தது.
வீட்டில் இருந்தவர்களிடமிருந்த அலைபேசி அனைத்தும் முதலில் பறிமுதல் செய்யப்பட்டே விசாரணை ஆரம்பித்திருந்தது. பின்பு அவரை காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கிளம்பும்போது, அனைத்தையும் வீட்டினரிடம் ஒப்படைத்துவிட்டு எஸ்ப்பியை மட்டும் விசாரணைக்காக அழைத்துக்கொண்டு சென்றிருந்தது.
கார்த்திக் வந்தபோது அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் லாயருக்கு அழைக்கும் முயற்சியில் இருக்க, அவர்களின் அழைப்பை ஏற்று விசயத்தை அறிந்து கொண்டவரோ, “என்னப்பா, இந்த நேரத்தில சொன்னா என்ன செய்ய முடியும். சரி வைங்க. என்னால எதாவது செய்ய முடியுதானு பாக்கறேன்” வைத்திருந்தார் அவர்களின் வழக்கறிஞர்.
***
கார்த்திக் உடனே ஜேப்பிக்கு அழைத்து விசயத்தைப் பகிர, அதுவரை நடந்த அனைத்து விசயங்களையும் திருச்சியிலுள்ள அவனது நிறுவன நபரின் மூலமாகத் தெரிந்து கொண்டிருந்தவன் தமையனிடம் புதியதாகக் கேட்பதுபோல அனைத்தையும் கேட்டுவிட்டு, “நீ அம்மா, அப்பாவைக் கூட்டிட்டு முதல்ல சென்னைக்கு கிளம்பு” கட்டளையாகவே கூறினான்.
“டேய், உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு. பெரிய மனுசனைக் கைது பண்ணிட்டாங்கன்னு சொன்னா, அம்மா அப்பாவை எதுக்கு சென்னைக்கு கூட்டிட்டுப் போகச் சொல்ற?” என கார்த்திக் விசயம் புரிபடாமால் தம்பியைத் திட்டினான்.
“நான் சொல்ற மாதிரிச் சொல்லி அப்பா, அம்மாவைக் கூப்பிடு. அவங்க கிளம்பி உங்கூட வரச் சம்மதிச்சா விழுப்புரம் வந்துட்டுச் சொல்லு” என வைத்துவிட்டான் ஜேப்பி.
வீட்டிலுள்ளவர்கள் அனைவருமே கார்த்திக்கின் செயல் புரியாமல், “எதுக்குடா இப்ப அப்பா அம்மாவைக் கூட்டிட்டுப் போற?” சந்தேகமாகவே வினவ,
“எனக்கு வெளியூறு போக வேண்டியிருக்கு. குட்டிப் பையனை வச்சிட்டு அவளாலே தனியா சமாளிக்க முடியாதுன்னு, வரும்போதே மயூரி எங்கம்மாவைக் கூட்டிட்டு வரச் சொல்லி விட்டா. ரெண்டு பேரும் லேடீஸ்ஸா இருக்கும்போது அப்பா இருந்தா அவங்களோட துணைக்கு நல்லா இருக்கும்னு அவரையும்…” சமாளித்து அழைத்துக்கொண்டு, அடுத்த அரைமணித் தியாலத்தில் பெற்றோருடன் திருச்சியிலிருந்து கார்த்திக் கிளம்பியிருந்தான்.
விழுப்புரம் தாண்டியதும் கார்த்திக் ஜேப்பியிடம் விசயத்தைக் கூற, “அப்டியே மயூரியக் கிளம்பி இருக்கச் சொல்லு. அவளையும் பிக்கப் பண்ணிட்டு, என்னோட மெசேஜ் பாத்து நான் சொல்ற இடத்துக்கு வந்திரு” என்றவன் உடனே வைத்துவிட்டான் ஜேப்பி.
கார்த்திக்கிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் தம்பியின் பேச்சுக்கு செவி சாய்த்தான். கார்த்திக்கைப் பொறுத்தவரையில் இன்று வரையிலான தொழில்துறை முன்னேற்றத்திற்கு முழு முதற் காரணமாக இருப்பதாக ஜேப்பியை நம்புவதால், அவன் கூறுவதற்கு நல்ல காரணம் இருக்க வாய்ப்பிருப்பதாக எண்ணி, மனதில் குழப்பத்தோடு ஒத்துழைக்க முடிவு செய்தான்.
சாந்தன் இடையில் வேறொரு வாகனத்தோடு வந்து காத்திருந்தவன், தான் வந்த வண்டியை கார்த்திக்கின் வசம் ஒப்படைத்துவிட்டு, கார்த்திக் வந்த வண்டியை அவன் எடுத்துச் சென்றான்.
“என்னடா இது. உன்னோட பெரிய அக்கப்போரா இருக்கு. எதுக்கு இப்டியெல்லாம் பண்ற?” ஜேப்பிக்கு அழைத்து கார்த்திக் கேட்க,
“அமராவதி போயிட்டுக் கூப்பிடு” வைத்துவிட்டான் ஜேப்பி.
‘எதுக்கு இவ்ளோதூரம் போகணும். ஒன்னும் சொல்ல மாட்டீங்கறான்.’ புலம்பியவாறே வந்தான்.
பெற்றோரின், “சென்னைக்கு வந்து இன்னும் வேற எங்கடா கூட்டிட்டுப் போற” கார்த்திக்கைக் கேட்க,
“உங்க அருமை மவங்கிட்ட போனைப் போட்டுக் கேளுங்க. அப்பவும் பய வாயத் திறக்க மாட்டான்” தனக்குத்தானே பதிலைக் கூறியவாறு வந்தான் கார்த்திக்.
வண்டி மாறியது முதலே ஓட்டுநரை வண்டியைச் செலுத்த வண்டி புயல் வேகத்தில் பறந்தது.
கார்த்திக் அவனிடம் பேச்சுக் கொடுக்க, பதிலே பேசவில்லை ஓட்டுநர்.
இடையில் இளைப்பாறக்கூட நேரம் ஒதுக்காமல், அடுத்த நாள் காலை பத்து மணியளவில் ஜேப்பி கூறிய இடத்தை வந்தடைந்தனர்.
***
முந்தைய தினம் மாலையில் மருத்துவமனையிலிருந்து வீராவால் அழைக்கப்பட்டு வந்திருந்த தேவியும், ஷ்யாமும் அங்கிருக்க புதியதாக வந்தவர்களை இன்முகமாக வாயிலுக்கு வந்து வரவேற்றவனைக் கண்ட ஜேப்பியின் பெற்றோர் இருவரும், “இந்தப் பையனை எங்கேயோ பாத்த மாதிரி இருக்குல்ல” என யோசித்தபடியே தங்களுக்குள் ஷ்யாமைப் பற்றிப் பேசினர்.
விபத்தில் உண்டான நிறைய காய வடுக்கள் ஷ்யாமின் உடலிலும், முகத்திலும் பெரிய மாற்றங்களை உண்டாக்கியிருந்தது.
பெரியவர்களின் பேச்சைக் கேட்ட ஷ்யாம், “தச்சு(தட்சணா) வீத்துல அவங்க ஆந்தியோத ஃபங்சன்லதான் பாத்திதுக்கோம்” என்றபடியே வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.
அப்போதுதான் இருவருக்கும் நினைப்பு வந்தது.
‘அப்ப நல்லா இருந்தானே. இப்ப என்னாச்சு? ஏன் இப்டி இருக்கான்? இவன் இங்க எப்டி வந்தான்? உண்மையில இவன் யாரு?’ என இருவரும் தங்களுக்குள் விவாதித்தவாறே அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றார்கள்.
ஏனெனில் ஜேப்பிக்கு குழந்தை இருப்பதைக் கூறியிருந்தாலும், அந்தக் குழந்தை ஷ்யாம்தான் என்பது அவர்களுக்குத் தெரியாது.
ஜேப்பியும் இங்கிருப்பான் என்றே நம்பி வந்திருந்தனர், அவனது பெற்றோர். ஆனால் அங்கு ஜேப்பி இல்லையென்பதை உறுதி செய்து கொண்டதும் கார்த்திக்கிடம், “எங்கடா இருக்கான்? எப்ப வருவான்?” வினவ, எதுவும் தனக்குத் தெரியாது என்றதோடு ஜேப்பிக்கு அழைத்துப் பேசினான்.
“யாரெல்லாம் போன் கைல வச்சிருக்கீங்களோ, எல்லாருமே நம்ம வீட்டுல இருந்து வரக்கூடிய எல்லா கால்ஸ்ஸையும் எனக்கு ஃபார்வாட் ஆகற மாதிரி போடுங்க. நான் அப்புறம் கூப்பிடறேன்” என்றதோடு வைத்துவிட்டான் ஜேப்பி.
“என்னானு சொல்லுவேண்டா. எதுக்கு இப்டியெல்லாம் செய்யச் சொல்ற? தாத்தா இப்ப எப்டியிருக்காரு?” ஜேப்பியிடமே மறுபடி அழைத்துக் கேட்க,
“அவருக்கென்ன? ராஜமரியாதையோட இருக்க வேண்டிய இடத்தில இருக்காரு. இன்னைக்கோ இல்லை நாளைக்கோ, அவரால பெரிய பொறுப்புல இருக்கக்கூடிய முக்கிய அமைச்சர்களோட உதவினால, வீட்டுக்குப் போயிருவார்.” மிகவும் இயல்பாக உரைத்துவிட்டு வைத்திருந்தான் ஜேப்பி.
***
சிலர் ஜேப்பிக்கே அழைத்துப் பேசியிருந்தனர். “என்ன ஜேப்பி என்ன பிரச்சனை. இத்தனை தூரம் அவருக்கு ஒன்னு வரவரை நீ விட்டுட்டு இருக்க மாட்டீயே. தாத்தா விசயத்துல என்னாச்சு?” என்று.
“எனக்கு கொஞ்சம் பிஸினஸ் வேலைகள்ல ஊருப் பக்கம் வரமுடியாம இருந்ததும், அவரே போயி வகை தொகை தெரியாத புது இடத்தில வேலையச் குடுத்து, தெரியாம மாட்டிகிட்டாருபோல சார். அதனால, பாத்துத்தான் அடுத்த மூவ் பண்ணணும்” என்று ஜேப்பியின் கருத்தைக் கேட்டபின்பு எஸ்ப்பியின் உதவிக்கு யாரும் முன்வராமல் ஒதுங்கியிருந்தனர்.
இதுவரை ஜேப்பிதான் எஸ்ப்பியின் நிழலாக பெரிய வேலைகளை எடுத்துச் செய்தான் என்பது அனைத்து எஸ்ப்பியின் தொழில் சார்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் தெரியும். அதனால்தான் அவனுக்கு அழைத்துக் கேட்டிருந்தனர்.
அனைத்துத் தொலைக்காட்சிகள் மற்றும் தினசரிகளில் தலைப்புச் செய்தியாக வந்திருந்தது.
பிரபல தொழிலதிபரின் குற்றங்களை களையெடுக்கும் இரு மாநில காவல்துறை!, என்று
அடுத்த நாள் காலையில் வீட்டிலுள்ள ஆண்கள் அவரை காவல் நிலையத்திற்குக் காணச் செல்ல, கத்தித் தீர்த்திருந்தார் எஸ்ப்பி.
“உங்களையெல்லாம் கட்டி கரை சேத்ததுக்கு, நல்லா மரியாதை பண்ணீட்டீங்கடா. ஒரு பெரிய மனுசனை போலீசோட அனுப்பிட்டு, உங்களுக்கெல்லாம் எப்டிடா சாப்பிட, தூங்க மனசு வந்திச்சு?
உங்களையெல்லாம் இந்த நிலைக்குக் கொண்டு வந்த என்னைச் சொல்லணும்” என்றபடியே படார் படாரென தலையில் அடித்துக் கொண்டார் எஸ்ப்பி.
அதேநேரத்தில் இளைய மகனைக் காணாது கேட்கவும் செய்தார்.
கார்த்திக் அழைத்துக் கொண்டு சென்றதை அறிந்தவர், தனது திட்டத்தை முறியடிக்க எண்ணியே ஜேப்பி இப்படிச் செய்திருக்கிறான் என்பதையும் உணர்ந்து கொண்டவருக்கு, தலைக்குள் விண்விண்ணென்று தெரித்தது வலி.
தோல்வியே இதுவரை காணாதவருக்கு, அடுத்தடுத்த நிகழ்வுகள் தோல்வியை நினைவுறுத்த, இயன்றவரையில் அதிலிருந்து மீள திட்டங்களைத் தீட்ட எண்ணினார்.
உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாதது, அவரை மொத்தமாக முடக்கிவிடக்கூடும் எனும் நிதர்சனத்தை உணராமலேயே சில முக்கிய நபர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்.
பணத்தைக் கொடுத்ததும், சில காவல்துறை அதிகாரிகள் அவருக்கு உறுதுணையாகவே செயல்பட, நினைத்த காரியங்களை சில நாள்கள் தள்ளிச் சாதித்துக் கொண்டார்.
ஆனாலும் உடல்நிலையில் இருந்த பின்னடைவு முன்புபோல அவரைச் செயல்பட விடாமல் தடுக்க, மருத்துமனைக்குச் செல்லத் தீர்மானித்தார் எஸ்ப்பி. ஆனால் அதற்குமுன்பே மயங்கிக் கீழே விழுந்தவரை மருத்துவமனையில் சேர்ந்திருந்தனர்.
***
கார்த்திக் தற்போதுதான் ஷ்யாமைப் பார்க்கிறான். அவனுக்கு சந்தேகம். ‘இவந்தான் தாத்தா சொன்ன பையனா? இன்னும் ஜேப்பிய என்னால நம்ப முடியலை. ஆனா இவனைப் பாக்கும்போது நம்பாம இருக்கவும் முடியலை’ யோசித்தவாறே உள்ளே சென்றான்.
மயூரியின் குழந்தையை ஆசையாகச் சென்று அருகில் இருந்து பார்த்தான் ஷ்யாம்.
“ஆன்ந்தி, உங்க பேபிக்கு என்ன நேம் வச்சிதுக்கீங்க?” இவ்வாறு அவனாகவே சென்று பேசத் துவங்கினான்.
“எங்க மீக்கும் பேபி சீக்கிதமா வந்திதும். இப்ப தாதிதான் மீய பாத்துக்கதாங்க. எனக்கு ஹெல்த் சதியானதும் நானும் மீய பாத்துப்பேன்.
மீ தொம்ப ஸ்வீத்.” இப்டி ஓயாமல் பேசிக் கொண்டிருந்தான். மயூரிக்கு ஷ்யாமின் முதிர்ச்சியான மழலைப் பேச்சு, செயல் அனைத்துமே ஆச்சர்யத்தைத் தந்தது.
குழந்தைக்கு வெந்நீரில் குளிப்பாட்ட தேவி உதவி செய்தாள் மயூரிக்கு. அப்போது அவள் குழந்தையின் பிட்டத்தில் இருந்த பெரிய அளவிலான கரு மச்சத்தைக் கண்டு, “இது போல, இதே இடத்தில நம்ம ஷ்யாமுக்கும் இருக்கும்” என்று சிரித்தபடியே அவர்களுக்கு உதவ நின்ற ஷ்யாமைப் பார்த்தபடியே உரைக்க, அவளின் பேச்சு புரியாமல் தேவியிடமே மீண்டும் வினவினாள்.
ஆனாலும் தெளிவாக மயூரிக்குப் புரியவில்லை. மொழிபெயர்ப்பிற்காக கணவனிடம் சென்று மயூரி கேட்க, அவன் தனக்கு தெலுங்கு தெரியாது என்றுரைக்க, அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாம், தமிழில் மயூரிக்கு தேவியின் பேச்சை விளக்கினான்.
இதற்கிடையே, அவனது காயங்களின் வடுக்களைப் பற்றி கார்த்திக் கேட்க, நடந்ததை அப்படியே தனது மழலைப் பேச்சில் கார்த்திக்கிடம் விளக்கியிருந்தான் ஷ்யாம்.
ஷ்யாமின் வெவ்வேறு விதமான பேச்சைக் கேட்ட கார்த்திக், மயூரி இருவரும் என்ன செய்தார்கள்?
***