தோளொன்று தேளானது 23

தோளொன்று தேளானது! 23

மயூரி கார்த்திக்கிடம், “அது எப்படிங்க நம்ம ரோஹித்கு, ஷ்யாமுக்கு இருக்கற மாதிரியே மச்சம் இருக்கு?” என்று கேட்டதும், மயூரியின் கேள்வியில் சற்றே திகைத்தவன்,

“அது… இந்த குடும்பத்துல பிறக்கற எல்லாத்துக்குமே இருக்கற மச்சந்தான்.  அதைப்போட்டு நீயேன் குழப்பிக்கற!” எனத் தடுமாற்றத்தோடு மனைவியைச் சமாளித்திருந்தான்.

ஆனாலும் மயூரியின் பார்வையில், ‘நம்பற மாதிரி இல்லையே!’ எனும் தொனி, கார்த்திக்கின் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது என்னவோ உண்மை.

ஆனால் கார்த்திக்கிற்கு, ‘அவ கேக்குறதுலயும் நியாயமிருக்கு!  அப்ப இவன் நான் நினைச்ச மாதிரி ஜேப்பி புள்ளை இல்லையா! ஆனா இவன் எப்டி சுமித்ராகிட்ட? அந்தப் பொண்ணை நான் நிமிந்து பாத்ததுகூட இல்லையே!

அவன் வேற யாரோடைய குழந்தையாவும் இருக்க வாய்ப்பு இருந்தாலும், எப்டி ஒரு தடவையிலேயேவா நடந்திருக்கும்? 

என் வாழ்க்கையையே புரட்டிப் போடற சக்திய, வரமா நான் யாருக்குக் குடுத்தேன்னு தெரியலையே!

அப்பா முருகப் பெருமானே! எப்டியாவது இந்தப் பிரச்சனையில இருந்து என்னைக் காப்பாத்திருப்பா!  உனக்கு இன்னொரு பொண்ணைப் பாத்து கட்டி வச்சிறேன்!’ இப்படி மனதிற்குள் தீவிர புலம்பலோடு இருந்தான் கார்த்திக்.

பயண அலைச்சல் காரணமாக ஓய்வெடுத்து வெளியே வந்த கார்த்திக்கின் பெற்றோர் ஷ்யாம் மற்றும் கார்த்திக்கின் கையில் இருந்த அவனது மகன் ரோஹித்தின் பாசப் பிணைப்பைக் கண்டு கார்த்திக்கிடம், “யாரு கார்த்திக் இந்தப் பையன்?” ஷ்யாமைக் காட்டி சைகை மொழியில் கேட்க,

“தாத்தா சொன்ன நம்ம ஜேப்பியோட பையன் இவந்தான்மா” என்று கூறினான். ஆனால், உள்ளுக்குள் எங்கோ அபஸ்வரமாக உணர்ந்தான்.

ரூபிணி, “அப்ப அவங்க கல்யாணத்துக்கு முன்னாடியே பிறந்த பையனாடா இவன்?” ஜேப்பியின் மீது நம்பிக்கை வராமல் அவ்வாறு கேட்டார்.

“அதுலாம் என்ன விசயம்னு ஜேப்பி வந்ததும் டீட்டைல் கேட்டுக்கோமா.  என்னை இப்ப ஆளை விடு” என்று மகனைத் தாயின் கையில் கொடுத்துவிட்டுக் கிளம்ப,

அங்கு வந்த மயூரி, “ஒரு விசயம் கேட்டா, அதுக்கு பதில் சொல்ல முடியாம இப்டித்தான் ஓடி ஒளியறாரு அத்தை” என்றபடியே வந்தாள்.

அதேநேரம் ரோஹித்தின் கீழாடை நனைய மயூரியிடம், “தம்பி ச்சூ போயிட்டான் மயூரி.  வேற நிக்கர் தா” என்றதும், அதனையெடுக்க அறைக்குள் நுழைந்தவள், சற்று நேரத்தில் கையில் நிக்கரோடு மாமியாரிடம் வந்து நின்றாள்.

பேரனது கீழாடையைக் கழற்றிய ரூபிணி, “அடிக்கடி குழந்தை யூரின் போயிட்டேதான் இருக்கும். இப்படி கழட்டி மாட்டற மாதிரி இல்லாம, காட்டன் துணியில ட்ரையாங்கல் சேஃப்ல கட் பண்ணி நாட் போடற மாதிரி வச்சிட்டா, ஈஸியா கட்டி விடலாம்ல” என்றபடியே,

தனது சேலைத் தலைப்பில் குழந்தையின் பின்பகுதியைத் துடைத்துவிட்டவர் குழந்தையின் பிட்டத்தில் செல்லமாகத் தட்டியவாறு பார்த்தவரின் கண்ணில் ஏதோ வித்தியாசம் தோன்ற கூர்ந்து கவனித்தார்.

பிறகு, “இங்க பாரேன்.  அவங்கப்பனுக்கு மாதிரியே இவனுக்கும் இந்த இடத்தில மச்சத்தை” என்றபடி சிலாகிக்க,

மயூரிக்கு மனமெங்கும் பாரமேறியிருந்தது.  ஆனாலும் தன்னை சமாளித்தவள், “இந்த வீட்ல பிறக்கற குழந்தைங்க எல்லாத்துக்கும் இப்டி இருக்கும்னு சொன்னாங்களே அத்தை!” என்று இயல்பாக வினவினாள்.

“யாரு அப்டி உங்கிட்டச் சொன்னது?” முகத்தைச் சுழித்தபடியே கேட்டவர்,

மருமகள் பதிலேதும் கூறாமல் பரிதவிப்பாக நிற்பதைக் கண்டு, “உங்க மாமனாருக்கு அப்புறம், இந்த மச்சம் இவங்கப்பனுக்கு இருக்கறதா எங்க மாமியார், கார்த்தி சின்னப் புள்ளையா இருக்கும்போது அடிக்கடி சொல்லுவாங்க.  இப்ப இவனுக்கு இருக்கு!” என்றுவிட்டு,

“வேற யாருக்கு இப்டி இருக்கு?” மாமியாரின் கேள்விக்கு பதில் கூறலாமா வேண்டாமா என்னும் குழப்பத்தில், உள்ளுக்குள் அத்தனையும் பொடிப்பொடியாக நொறுங்கிய நிலையில் நின்றிருந்தாள் மயூரி.

***

மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்த பெரிய கட்டிடத்திற்குள் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் தளத்திற்கு இருபத்து நான்கு நபர்கள் வீதம் இரண்டு தளங்களில் அறைக்கு நான்கு பேர் வீதம் தங்கியிருந்தனர்.

மாத்தா வேதா மகதீராவின் ஒருங்கிணைப்பில், பலதரப்பட்ட கை வேலைகள் செய்து கொண்டிருந்தனர் அங்கு தங்கியிருந்த பெண்கள். அலங்கார விளக்குகள், வாயிலில் போடக்கூடிய அலங்கார தோரணங்கள் இப்படி அவர்களின் கற்பனைக்கு பொறுமையாக வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

“ஏய், பீனா எங்கடீ?” மராத்தியில் கேட்ட பெண்ணது கணீர் குரலில் அதுவரை இருந்த சத்தம் அனைத்தும் சட்டென நின்று, அப்பகுதியே மயான அமைதியாகிருந்தது.

“சீக்கிரமா கிளம்பி கீழ வரச் சொல்லு.  அவதான் நல்லாப் பேசுவா.  அவளும் கூட வந்தா, எல்லாத்தையும் ஓரளவு நல்ல விலைக்கு வித்திட்டு வரலாம்” என்றவாறே கீழே இறங்கிச் சென்றவரது உடை அலங்காரம் மற்றும் தோற்றம் எழுபத்தைந்து வயதிலும் அத்தனை நேர்த்தியாக இருந்தது.

இருபதுக்கு நாற்பது அடியளவு ஹாலில் மாட்டியிருந்த நூறடி அளவு தொலைக்காட்சியில் மராத்தி மொழிப்படம் ஓடிக்கொண்டிருந்தது.  அதைப் பார்த்தவாறு பதினைந்து பெண்கள் கைவேலையில் கவனமாக இருக்க, சேனலை மாற்றினார் வேதா.

தமிழ் செய்திச் சேனலை மாற்றிப் பார்த்தவர் பத்து நிமிடம் அதில் வந்த செய்திகளை சாதாரணமாக பார்வையிட்டவண்ணமிருந்தார்.

சட்டென அவரின் பார்வையும், புத்தியும் கூர்மையானது.  அப்போது அதில் ஃபிளாஷ் செய்தியாக வந்து கொண்டிருந்த செய்தியைக் கண்டதும், வெளியே கிளம்பும் எண்ணத்திலிருந்தவர் அங்கிருந்த நாற்காலியில் தேங்கியிருந்தார் வேதா.

சிவபிரகாசத்தை விசாரணைக்கு அழைத்துச் சென்றது, மேலும் அவரைப்பற்றி சில திடுக்கிடும் செய்திகள் வெளியிடப்பட்டது.

மற்றவர்களுக்கு மட்டுமல்ல, வேதாவிற்குமே அந்தச் செய்தியை நம்ப முடியாமல் பார்த்தார்.

‘அந்தாளோட நிழலா இருந்த ஜேப்பி என்ன ஆனான்.  அவன் இருக்கும்போது இந்தாளுக்கு இப்டி ஒரு நிலமையா? தாத்தாவுக்கு இவன் கூஜா தூக்கறவரை அந்த கேடுகெட்டவனை எவனாலயும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு நல்லா வாழ்ந்தான் கிழட்டுக் க..தி.  இப்ப  ரெண்டு பேருக்கும் இடையில என்ன நடந்திருக்கும்?’ இப்டி சிந்தனை விரைய, ஜேப்பியை தான் சந்தித்த நிமிடங்கள் மனதில் வந்து போனது.

மனதால் பின்னோக்கிச் சென்றிருந்தார் வேதா.

***

வேதா மகதீராவின் உண்மையான பெயர் வேதவல்லி.  பூர்வீகம் தமிழ்நாட்டின் திருச்சி அருகே உள்ள உறையூர். நம்பக் கூடாதவர்களை நம்பி தனது எதிர்காலத்தை விரயமாக்கிக் கொண்டதோடு, விரக்தியடையாமல் அதிலிருந்து மீண்டு, தன்னைப்போல நம்பிக் கழுத்தறுக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்விற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன்வழியே தன்னை அண்டி வந்தவர்களை ரட்சிக்கும் நாயகி.

பருவத்தின் கிளர்ச்சியால் காதலனை நம்பி சென்னைக்கு கிளம்பியவருக்கு எந்தச் சந்தேகமும் வராதபடி, “தாலி கட்டிட்டா, நம்மை இனி யாராலையும் பிரிக்க முடியாது” எனும் காதலனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, காதலியாக அதுவரை இருந்தவர் மனைவியாக மாறிய தருணங்கள் அவரால் என்றுமே மறக்க இயலாது.

ஐந்து சவரனின் தாலியைக் கட்டி மனைவியாக்கிக் கொண்டவனுக்கு, பதிபக்தியோடு சவரட்டனைகள் செய்து அகமகிழ்ந்த நாள்களது.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் கணக்கெல்லாம் முடியுமுன்னே, கற்பைக் களவாடியதோடு காசுக்காக கை மாற்றிய கணவனை அதன்பின் காண்பதற்கான சந்தர்ப்பமே வேதாவிற்கு வாய்க்கவில்லை.

அவரும் அந்த நயவஞ்சகனைக் காண எண்ணவில்லை.

அவரறியாமல் தஞ்சமடைந்த இடம் உலகரங்கின் அனுபவமே தேவைப்படாத பொதுத் தொழிலின் முக்கிய இடம். 

காமப் பசியோடு நிதானமின்றி வருபவர்களின் இலையில் அவரை வலுக்கட்டாயமாக பரிமாறிய நிமிடங்கள் பிரபஞ்சமே பதற்றம் கொண்ட நேரமது.

 கோட்டைக்குள் சிக்கிக் கொண்ட வேதா புலியின் பசிக்கு இரையான மானின் நிலையை அடைந்த தருணங்கள், சித்தரவதையிலிருந்து மீள வழியின்றி மாய்த்துக் கொள்ள எண்ணும் உயிரின் இறுதி நிமிட உச்சகட்ட ஓலங்கள்!

தாங்கவொண்ணாமல் அந்தத் துயரத்திலிருந்து மீள, அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் ஆரம்பத்தில் வீணானது. அதனால் கொடுக்கப்பட்ட தண்டனைகளைக் கண்டும் துவளாது மீண்டும் முயன்று முயன்று முடிவில் வென்றிருந்தார் வேதா.

அதற்குள் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தது.

உடலும், மனதும் நொந்து போயிருந்த நிலையில் வெளி வந்தவரை ஆதரிக்கவோ, அனுசரனையாக நடத்தவோ யாரும் முன்வரவில்லை. 

பழிவாங்கலின் வெறியை நேரடியாகச் சந்தித்த நொடிகள்!

வெறிகொண்ட நாய்களின் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட தருணங்கள் அவரை மேலும் அதலபாதளத்தில் தள்ளியிருந்தது.

எத்தனை தூரம் சென்றாலும், அவரை இலகுவாக அடையாளங் கண்டு கொண்ட வெறியர்களிடமிருந்து ஓடிக்கொண்டேயிருந்தார் வேதா. நாட்டியத்தைத் தவிர சமைக்க மட்டுமே தெரிந்திருந்தது அவருக்கு.

விரும்பி ஏற்காவிட்டாலும் சமூகம் திணித்த விலைமாது எனும் பட்டத்தைத் தவிர வேறு எதையும் அவர் வேண்டினாலும் அளிக்க முன்வராத சமூகம்.

சமூகத்தை பழிபோட்டு வாழ விரும்பாதவர், நீண்ட பயணத்திற்குப்பின் நாட்டியத்தைக் கொண்டு வேலை தேடினார்.  கிடைத்த வேலை அவரின் பசி போக்கியது.

யாருமே அவருக்கு அடைக்கலம் குடுக்கத் தயங்கியபோது, நானி மகதீரா எனும் வயோதிகமான பெண் ஒருவர் வேதாவை அரவணைத்துக் கொண்டார்.

அரவாணியின் ஆதரவு, வேதவல்லிக்கு நிறைய நிதர்சனங்களைக் கற்றுக் கொடுத்தது. அவரோடு தங்கிக் கொண்டவர், அவரது வீட்டிலிருந்தவாறே நாட்டிய வகுப்புகளை எடுக்கத் துவங்கினார். நாட்டியத்திலிருந்து வந்த தொகையைக் கொண்டு கை வேலைகள் மூலம் அலங்காரப் பொருள்களை உற்பத்தி செய்யக் கற்றுக்கொண்டு அதனையும் செய்யத் துவங்கினார்.

ஆனாலும் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களின் பாலுணர்வுத் தேவைகளைத் தீர்க்க, அவ்வப்போது அவர்களின் கட்டிலுக்குச் சென்றே ஆகவேண்டிய நிர்பந்தத்தில்தான் இருந்தார் வேதா.

தவிர்க்க எண்ணிய வேளைகளில் தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வந்து வேதாவின் மீது திணித்து துன்புறுத்தியது உயர் சமூகம்.

அதனால் மேல்தட்டு வர்க்கத்தின் உணர்வுப் பசியைத் தீர்க்க வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார். தன்னை இச்சமூகம் இனி நல்ல கண்ணோட்டத்தில் பார்ப்பது அரிது என்பதும் தெளிவாகப் புரிந்தது.

உற்பத்தி செய்ததை உள்ளூரில் விற்பனை செய்ய முடியாத நிலையில் அவற்றை வெவ்வேறு மாநிலங்களில் சென்று விற்பனை செய்து பொருளீட்டினார்.  நடனத்தையும் விடாமல் தொடர்ந்தார். நாட்டிய வகுப்புகள் எடுத்தார்.

தன்னைப்போல ஏமாந்த பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.  அவர்களுக்கும் வேலைகளைக் கற்றுக் கொடுத்தார்.  இப்படியே ஐம்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்திருந்தார்.

கணவனாலோ, காதலனாலோ, பெற்றோர்களாலோ, தங்களின் குறுகிய மனநிலையினாலோ பாதை மாறிய மாதர்கள், தங்களின் நிலையிலிருந்து மீள எண்ணும்போது கைகொடுக்கும் கடவுளாகவே காட்சி தந்தார் வேதா.

மாத்தா வேதா மகதீராவை அறியாதவர்கள் எவருமில்லர்.  தவறிய பெண்களைக் கொண்டே அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவினார்.

உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய எண்ணி பல மாநிலங்களுக்கும் செல்லக் கூடிய நிலையில், விபத்தொன்றில் சிக்கி கணவன் இறந்திருக்க உயிருக்குப் போராடிய நிலையில் கண்ட பெண்ணுக்கு உதவ எண்ணிச் சென்றபோது, “எம்பொண்ணை மட்டும் எப்டியாவது ஆளாக்கி விட்டுருங்க.  உங்களுக்குப் புண்ணியமாப் போகும்” எனக்கூறி தனது கையைப் பிடித்தவாறு உயிரை விட்ட சுதாமதியின் மகளுக்கு பூஜா மகதீரா எனப் பெயரிட்டு, தங்களைத் தழுவிடும் காற்று அப்பெண் குழந்தையைத் தழுவா வண்ணம் கண்ணியமாக வளர்த்திருந்தார் வேதா.

பூஜா வந்தது முதலே பொருளாதார நிலையில் ஏற்றம் பெற்றாலும், அவளை தன்னுடன் வைத்துக் கொண்டதே இல்லை வேதா. அதற்கும் முக்கிய காரணம் இருந்தது.

அவ்வப்போது தங்களை நாடிவரும் ஆண் கழுகுகளின் பார்வையில் பட்டு, அவளின் வாழ்வும் தங்களைப்போல மாறிவிடக்கூடாது என்கிற விழிப்புணர்வுதான் வேதாவை அவ்வாறு யோசித்துச் செயல்பட வைத்திருந்தது.

குழந்தை பூஜாவை ஒப்படைத்ததோடு, கழுத்தில் கிடந்த தாலியைத் தவிர்த்து அனைத்து நகைகளையும் கழற்றி வேதாவின் கையில் ஒப்படைத்திருந்தார் சுதா.

சுதா ஒப்படைத்திருந்த நகைகளில் இருந்த குறியீட்டைக் கண்டதுமே, தன்னோடு உறவாடி, களவாடி, பாலுணர்வு அங்காடியில் பகடிக்கு விற்றுச் சென்றவனுக்கும் பூஜாவின் தாய் சுதாவிற்கும் ஏதோ உறவுள்ளதை அறிந்து கொண்டிருந்தார் வேதா.

சிலரின் ஒத்துழைப்போடு சில ஆண்டுகளில் சுதாவைப் பற்றியும், அவளின் நிலையைப் பற்றியும் வேதா அறிந்து கொள்ள நேர்ந்திருந்தது. அதாவது, சிவபிரகாசத்தின் அந்தஸ்து வெறிக்கு அவரின் ஒரே மகளான சுதாமதியின் குடும்பத்தில் பூஜாவைத் தவிர வேறு யாரும் உயிரோடு இல்லை என்பதுதான் அது.

தன்னை சாக்கடையில் தள்ளியவனின் வம்சாவழியில் வந்தவளை தானே வளர்க்கும் சந்தர்ப்பம் வாய்த்ததை எண்ணி வேதாவிற்கு வருத்தமே எழுந்தது.

‘யாரோ பண்ணதுக்கு, எதுவுமே அறியாத பச்சைப் புள்ளைய எங்கைல தந்து என்னைச் சோதிக்கிறியே ஆண்டவா! எதுவுமே தெரியாத இந்தப் பச்சை மண்ணு என்ன பாவம் பண்ணிச்சுனு இப்டி ஒரு பெரிய தண்டனையக் குடுத்திருக்க’ என நொந்து போயிருந்தார் வேதா.

பூஜாவின் வளர்ப்பிற்கு என எத்தனையோ மெனக்கெட்ட போதிலும், வேதாவின் நிழலில் வளர்ந்த ஒரே காரணத்திற்காக மனம் விரும்பிய வாழ்க்கையை வாழ அவளுக்கு வழியின்றிப் போயிருந்தது.

அதனையும் பூஜா கூறாமலேயே அறிந்து கொண்ட வேதா, முதலில் சந்தித்தது ஜேப்பியைத்தான்.  அப்போது பூஜாவை அடிக்காத குறையாக ஜேப்பி அலுவலகத்தைவிட்டு விரட்டியிருந்த தருணமது.

பொருள்களை விற்கும் சாக்கில் மகளை பார்க்க வந்தபோது, “என்ன பிரச்சனைனு சொன்னாதானே தெரியும் பூஜா பேட்டி”

நீண்ட நெடிய மன்றாடலுக்குப்பின், உள்ளதை உறைத்தவளின் பேச்சைக் கேட்டபின் வேதா சென்ற இடம், சென்னையில் வசித்த ஜேப்பியின் பிளாட்.

தன்னை பூஜாவின் பாட்டி என அறிமுகம் செய்துகொண்டவர் ஜேப்பியிடம் தளைந்து பேசி, பூஜாவின் விருப்பத்தின்படி கார்த்தியுடனான திருமணத்தைப் பற்றி பேசத் துவங்கினார்.

காரணத்தைக் கூறி மறுத்தவனிடம், “தம்பி, என்னோட காசுல வளந்ததைத் தவிர அவ எந்தத் தப்புமே பண்ணலை.  அவளை ஏன் உன்னோட அண்ணங்கிட்ட பேசக்கூடாது, பழகக்கூடாதுனு தடை செய்யற” ஜேப்பியிடம் கேட்டிருந்தார் வேதா.

“நான் கேக்கற கேள்விக்கு மட்டும் உண்மையா பதில் சொல்லுங்க” என்றான் ஜேப்பி.

நீ கேள் எனும்படியான வேதாவின் உடல்மொழியில், “இந்த விசயத்தை எங்க குடும்பத்துல பெரியவரான எங்க தாத்தாகிட்டப் பேசாம, சம்பந்தப்பட்ட கார்த்திக்கிட்ட பேசாம, எங்கிட்ட எதுக்கு எடுத்துட்டு வந்திருக்கீங்க?”

“உங்க தாத்தாவையும், அந்தக் கார்த்திக்கையும் எனக்கு நல்லாத் தெரிஞ்சாலும் இந்த விசயத்துல உன்னைத் தவிர வேற யாரையும் நம்பி என்னால பேச முடியாது” அழுத்தமான வார்த்தைகளை உரைத்துவிட்டு ஜேப்பியைப் பார்த்தார் வேதா.

 “அதான் ஏன்னு கேக்கறேன்?” ஜேப்பி.

“உங்க தாத்தாவை, உன்னைத் தவிர வேற யாராலையும் நேக்கா சமாளிக்க முடியாதுன்னு புரிஞ்சதாலதான், உங்கிட்ட நேரடியா வந்தேன்” என்றுரைத்தவர்,

“நீ மனசு வச்சா எல்லாம் முடியும்.  அவ யாரோ கிடையாது.  உன்னோட அத்தை பொண்ணுதான்” என்றார் வேதா.

அறிந்தபோதிலும், “எனக்கு அத்தையெல்லாம் கிடையாது” ஜேப்பி.

“உனக்கு எல்லாமே தெரியுங்கறதும் எனக்குத் தெரியும் ஜேப்பி” என்றவர், “என்னோட பின்புலத்தையும், பூஜாவோட அம்மாவோட பின்புலத்தையும் மாத்தினது உங்க தாத்தாதான்.  அதுக்குப் பிராயச்சித்தமா அவளுக்கு வாழ்க்கை குடுத்து உங்க பாவத்தை கழுவிக்க ஒரு வாய்ப்புதான் இது. இனி இந்த விசயத்துல நீங்கதான் முடிவு சொல்லணும்” என்றார் தீர்மானமாக.

மௌனமாக அமர்ந்திருந்த வேதாவிடம், “பூஜா வளர்ந்த இடம் அனாதை ஆசிரமம்னே மத்தவங்ககிட்டச் சொன்னாலும், எவ்ளோ நாளைக்கு அவங்களோட பின்புலம் என்னானு தெரியாம மத்தவங்கட்ட இருந்து மறைக்க முடியும்? 

அப்டித் தெரிய வரும்போது அந்தக் குடும்பத்துல வந்திருக்கற பெண்கள் அவங்களை எப்டி மதிப்பாங்கனு யோசிங்க.  அந்தக் கஷ்டமே யாருக்கும் வேணானுதான் ரிஸ்க் எடுக்க வேணாம்னுதான் பூஜாகிட்ட சொன்னேன். 

அது அந்தச் சின்னப் பொண்ணுக்குத்தான் புரியலைனா, உங்களுக்கும் ஏன் புரியலை” வேதாவிடம் நேரடியாகவே வினாவினான் ஜேப்பி.

“உனக்குன்னு வரும்போது எல்லாம் பண்றதானே?” என்று வேதா வினவியதும் ஜேப்பி என்ன பதில் கூறினான்?

***