தோளொன்று தேளானது 3

தோளொன்று தேளானது! 3

மிகச் சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து, அறக்கட்டளை ஒன்றின் கீழ் இயங்கிய அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள், சுமித்ரா.

ப்ருத்வியின் பெற்றோர்களை சொத்துக்காக அவனது பெரியப்பா, உடன் பிறந்த சகோதரனது குடும்பத்தையே, கூலியாட்களைக் கொண்டு கொன்றிருக்க, விபத்து நடந்த பகுதியில் எந்த ஆதரவும் இன்றி தனித்து விடப்பட்டு, இடையில் அனாதை ஆனவன் ப்ருத்வி.

இருவரும் ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள் என்கிற நிலையில், சிறு வயது முதலே பழக்கம்.  ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, படிப்பை விடாமல் தொடர்ந்திருந்தனர்.

சுமித்ராவைக் காட்டிலும் ப்ருத்வி மூத்தவனாக இருந்தாலும், சிறு வயது முதலே ஒருமையில் அழைத்துப் பழகியது இன்று வரை தொடர்கிறது.

ப்ருத்வி படித்த அதே கல்லூரியில், அறக்கட்டளையின் ஆதரவோடு சுமித்ராவும் படித்து வெளியில் வந்து, ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஜேஜே பில்டர்ஸில் பணியில் சேர்ந்திருந்தாள்.

அத்தோடு நல்ல வருமானம் வரத் துவங்கியது முதலே பிஜியில் தங்கியிருந்தவாறு பணிபுரிந்து வந்தாள் சுமித்ரா.

படிக்கும் வரை ஆசிரமத்தில் தங்கியிருந்த ப்ருத்வி, சுமித்ரா இருவருமே சம்பாத்தியம் கூடி வந்ததும், ஆசிரம விதியின்படி வெளியில் தங்கிக் கொண்டிருந்தார்கள்.

மூத்தவனான ப்ருத்வி, ஆரம்பத்தில் பில்ட் டிசைன்  எனும் நண்பர்கள் கூடித் துவங்கிய நிறுவனத்தில், முதலீடு செய்ய போதிய வசதியின்மையால் அவன் மட்டும் வொர்க்கிங் பார்ட்னராகச் செயல்பட்டான். 

இரண்டு ஆண்டுகளில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு காரணமாக, ஒத்திசைந்து செயல்படாததால் உண்டான மோசடி, நம்பிக்கை இழப்பு, வீட்டுப் பெரியவர்களின் அவமதிப்பு இவற்றால் அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

அதன்பின் ப்ருத்வி, வெளிநாடு செல்லும் எண்ணத்தில் இருந்தாலும், ஜேஜே பில்டர்ஸில் பணிக்கு வந்ததற்கு மிகவும் முக்கிய காரணம் ஒன்று இருந்தது.  அது அழகுப் புயல் பூஜா மகதீரா, சமீபத்தில் அங்கு பணியில் சேர்ந்திருந்ததுதான்.

மகதீரா, ப்ருத்வியைக் காட்டிலும் வயதில் சிறியவள், சுமித்ராவைக் காட்டிலும் பெரியவள்.  கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி ஒன்றின்போது அவளைக் கண்டது முதலே, சுமியிடம் அவளைப்பற்றி ஓயாமல் பேசி காதை தீய்த்திருந்தான்.

‘வெண்ணெயக் குழைச்சு செஞ்ச உடம்பு. தந்தம் மாதிரிக் காலு, தெத்துப்பல் தெரிய அவ சிரிச்சா, அதை பாத்துட்டே என்னோட மொத்தக் காலத்தையும் ஓட்டிருவேன். அப்டி ஒரு ஸ்மைலு’ என கனவில் இருப்பதுபோல சுமியிடம் ஒரு முறை பூஜா மகதீராவைப் பற்றிப் பேசியதோடு, அவளது படத்தையும் சுமியிடம் காட்டியிருந்தான் ப்ருத்வி.

அதிகப்படியாக ப்ருத்வி கூறுகிறானோ என்றிருந்தது சுமிக்கு. 

மகதீராவைக் கண்டது, ப்ருத்வி கூறியவள் இவள்தானா என அறிந்து கொள்ள எண்ணி, உடனே ப்ருத்விக்கு அவளின் புகைப்படத்தை அனுப்பியிருந்தாள் சுமித்ரா.

சுமித்திராவிற்கு மட்டுமே மகதீராவை, ப்ருத்வி காதலிக்கும் விசயம் தெரியும்.  எதிர்பாரா தருணத்தில் ஜேஜே பில்டர்ஸில் பணிக்கு சேர்ந்த பூஜாவைக் கண்டதுமே, “ஏய் ப்ருத்வி, உன்னோட ஆளானு தெரியலை, ஆனா அதே பேருல இப்ப ஜேஜேல, பாலிவுட்டுக்கே டஃப் தர ரேஞ்சில ஒருத்தி மையம் கொண்டிருக்கா. பிக் அனுப்பிருக்கேன்.  பாத்துட்டு நாலு நல்ல வார்த்தையச் சொல்லு மேன்” அழைத்துக் கூறியிருந்தாள்.

அதன்பின் மீண்டும் ஆரம்பித்த ப்ருத்வியின் புலம்பலில், தான் மகதீராவை நேரில் கண்டபோது உணர்ந்ததை அப்படியே ப்ருத்வியிடம் மறைக்காமல் கூறினாள்.

“உண்மையிலேயே நீ ஏதோ அரைமெண்டல் கணக்கா, மகதீரா பத்தி உளர்றன்னுதான் நினைச்சேன் ப்ருத்வி.  நேருல பாத்ததும்தான் நீ சொன்னது எவ்ளோ உண்மைன்னு புரிஞ்சது” மனதில் தோன்றியதைப் பகிர்ந்து கொண்டிருந்தாள் சுமித்ரா.

உடனே அவனது அனைத்து திட்டங்களையும், அப்படியே நிறுத்தி வைத்தவன், ஜேஜே பில்டர்ஸில் சேர்ந்திருந்தான்.  சூப்பர்வைசர் பணியில் மட்டுமே காலியிடம் இருக்க, எந்தவிதத் தயக்கமும் இன்றி பில்டிங் சூப்பர்வைசராக வந்தவனைக் கண்ட சுமித்ராவிற்கே, ‘இவ்ளோ லூசாடா நீ’ என்பதுபோலத்தான் தோன்றியது.

அதன்பின்புதான் அவனது கட்டிடம் சார்ந்த அறிவாட்சித் தரத்தைக் கண்ட கார்த்திக், அட்மினிஸ்டேரசன் பணியில் ப்ருத்வியை மாற்றியிருந்தான்.

***

சிவபிரகாசம், தனது பேரனிடம் கட்டாயப்படுத்தி, தான் பார்த்துவிட்டுக் கூறும் பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கட்டளையாகக் கூற, “அந்தப் பொண்ணு நல்லாயிருக்கணும்னா என்னை வச்சி ரிஸ்க் எடுக்காதீங்க தாத்தா” நேரிடையாகவே உண்மையைக் கூறிவிட்டான் ஜேப்பி.

“அப்போ உனக்கு பிடிச்சது யாருன்னாவது சொல்லு!” என விசயத்துக்கு வந்திருந்தார் தாத்தா.

“உண்மையாவா கேக்கறீங்க!” ஜேப்பி ஆராய்ச்சிப் பார்வையை ‘போட்டு வாங்குற மாதிரியில்ல தெரியுது’ என்றவாறே தாத்தாவிடம் வீச,

“டேய்!  இதுல யாராவது விளையாடுவாங்களா?” சீரியசாக சிவா பேசினார்.

“அந்தஸ்து, ஆமணக்கு, இப்டியெல்லாம் சொல்லுவீங்க?” இன்னும் தாத்தாவின் வார்த்தையில் நம்பிக்கை இல்லாது கேட்டான் ஜேப்பி.

“உன்னைப் பாத்தா, ஏதோ உள்ளுக்குள்ள வச்சிட்டுத் திரியற மாதிரித் தோணிச்சு. ஒருவேளை அப்படித்தான்னா…” ஜேப்பியை ஆராய்ந்தபடியே, “சரி! பண்ணித் தொலைப்போம்னுதான் கேக்கறேன்!” சூடாக அசட்டைத் தொனியில் வந்தது வார்த்தைகள்.

ஆனால் ஜேப்பிதான் இக்கட்டான நிலையில் இருந்தான்.  ஆகையினால் தனது மனதில் உள்ளவளைப் பற்றி வாய் திறக்கவில்லை.

சுமித்ரா பணி செய்யுமிடத்தை அறிந்திருப்பதால் அவளைக் காண்பது ஒன்றும் கஷ்டமில்லைதான் ஜேப்பிக்கு. இங்கிருந்து சென்றபோது எப்படி இருந்தாளோ, அதில் சின்ன மாற்றமும் இன்றி இருப்பவளை நம்ப முடியாத நிலைக்கு வந்திருந்தான். 

பேசலாம்,  ஆனால், தன்னோடுடனான திருமணத்திற்கு அவள் ஒத்துக்கொள்ள வேண்டுமே. எதையாவது கூறி தட்டிக் கழித்தால்…

“என்னை நீ லவ் பண்ணவே இல்லைனு உன்னோட வாய்தான் சொல்லுது சுமீ.  என்னை நீ நாலு நாள் மொத்தமா பாக்கலைன்னா, நீ என்ன பண்ணுவ? எப்டி ரியாக்ட் ஆவன்னு, எனக்கு நல்லாவே தெரியும்!  உன்னோட கண்ணுல எனக்கான நேசத்தை இதுக்கு முன்னயும் பாத்திருக்கேன்.  இப்பவும் பாக்கறேன்!” ஜேப்பி கூறியபோது,

“நீ சொன்னது எல்லாம் உண்மையா இருந்தாலும், பரஸ்பர நம்பிக்கை ரெண்டு பேருக்கும் இருக்கணும்ல ஜேப்பி.  இப்போ அந்த நம்பிக்கை எனக்கு உம்மேல இல்லை.  அதனால, சாரி டூ சே திஸ்” என்று தயங்கினாள்.

அவளுக்கும் வலித்தது.  மரண வலி அறியாதபோதும், அவளின் இதய சிம்மாசனத்தில் இருந்தவனை, மறுக்க முடியாத மனம், அவளின் அறிவோடும், மனசாட்சியோடும் மல்லுக்கட்டியது.

மனசாட்சி வென்றிட,  அவளை அவளாகவே தனக்குள் சமாளித்தபடி, “நீ இதுக்கு முன்ன யாருக்கு ஹோப் குடுத்தியோ அவளை ஏமாத்தாம மேரேஜ் பண்ணிக்கோ!  

உன்மேல இருக்கற நம்பிக்கையில அந்தப் பொண்ணு எதையும் யோசிக்காம, தன்னோட எல்லாத்தையும் உனக்காக உங்கிட்ட இழந்தாளோ, அதுக்காக அவளை ஏமாத்திறாம ஏத்துக்கோ!  ஆனா என்னை விட்டுரு!” என்றவள், அதற்குமேல் ஜேப்பியிடம் நின்று பேச, அவனது கேள்விகளுக்கு பதில் கூற அங்கு நிற்கவில்லை.

அவளுக்குத் தெரியும்.  தனது நேசம், ஜேப்பியின் பேச்சில் அனைத்தையும் மறந்து அவனுடைய எதிர்பார்ப்பிற்கு செவிசாய்க்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதென.

‘ஏதோ உளறுகிறாள்’ என்றே தோன்றியது ஜேப்பிக்கு. அவனறிந்தவரையில், பெண்களை ஆசையாய் பார்ப்பான்.  ஜொல்லுவான்.

ஆனால், யாரையும் நம்பிக்கை கூறி ஏமாற்றியதாக அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.  ஆனால், தன்னை நம்பாமல், அவளாகவே இப்படி திரித்துக் கூறியது, சுமித்ராவின் மீது அதிக கோபத்தை உண்டு செய்திருந்தது.

பெண்ணின் பின்னே சென்று, ஒருத்திக்காக காத்திருந்து, கெஞ்சி, உயிரைத் தந்து காதல் செய்யும் எண்ணமெல்லாம் எப்போதும் ஜேப்பிக்கு இருந்திருக்கவில்லை.

பணியின் நிமித்தம் ஆயிரம் பேசுவான்.  ஆனால் அது அனைத்தும் அந்த காரியத்தைச் சாதித்துக் கொள்ளும்வரைதான்.  அதன்பின் தேவையில்லாத பேச்சினை வளர்க்கமாட்டான். சேர்ந்து சுற்றினாலும், அவனுக்கென வரைமுறை வைத்திருந்தான்.

சுமித்ராவின் தொலைதூரத்தில் இருந்தபடியிலான அவனுக்கான தேடல் அவனுக்குள் இதத்தைத் தந்திருந்தது.  அவளை வேறு யாருடனும், குறிப்பாக பிற ஆண்களுடன் உரையாடுவதைக்கூட தன்னால் பொறுத்துக் கொள்ள இயலாத தன்மையை அவன் மிகவும் ரசித்தான்.

அதனால்தான் அவளோடு அதிகம் இழைந்த ப்ருத்வியை அப்புறப்படுத்த, அத்தனை பிரயாசப்பட்டிருந்தான் ஜேப்பி. தனக்காக மட்டுமல்லாது தனது தாத்தாவிற்காகவும் அந்த விசயத்தில் மெனக்கெட்டிருந்தான்.

ஆனால், இன்றோ நடந்த அனைத்துமே ஜேப்பி எதிர்பாராதது.  தனது காதலைக் கூறியதும், சட்டென அதனை ஆமோதித்து, தன்னோடு கைகோர்ப்பாள் சுமித்ரா என நினைத்திருக்க, நடந்ததென்னவோ அதற்கு மாறாகத்தான்.

ஜேப்பிக்கு தனது காதலின் மீதிருந்த நம்பிக்கையில், தங்களுக்கிடையே உண்டான மோதலின்போது, சுமித்ராவை அவள் போக்கில் விட்டிருந்தான். 

‘போடீ!  ரொம்பத்தான் பேசுற.  நான் யாருக்கு என்ன ஹோப்பு குடுத்து சோப்பு போட்டேன்,  புடலங்காயைக் குடுத்தேன்னு! சொல்றவ தெளிவா சொல்லணும்.  நின்னு பேசணும்.  அதவிட்டுட்டு, நீ பாட்டுக்கு வாயில வந்ததைப் பேசிட்டு போற!

நான் ஒருத்தன் பேசிட்டுருக்கேங்கறதையே யோசிக்காம எனக்கென்னானு போற!  போ!  எங்கே போனாலும், நீ எங்கிட்டத்தான் வந்தாகணும்!’ எனும் இறுமாப்போடு நின்றிருந்தான் அன்று.

இதற்கு முன்பும் இருவரின் எதிர்காலம் பற்றிப் பேச்சு எழுந்தபோது, ஜேப்பியிடம் மனதில் இருந்ததை மறைத்து, அவனை எடுத்தெறிந்து பேசினாலும், பணி விசயத்தில் பொறுமையோடு இருந்தவள், இந்த விசயத்திற்குபின் அங்கிருந்து சென்றிருந்தாள் சுமித்ரா.

ஆனால் கடந்துபோன ஆண்டுகளில், பலமுறை அவளின் அலுவலகத்திற்கு வேறு வேலை இருப்பதுபோலச் சென்று அவளறியாமல் பார்த்து வந்திருக்கிறான்தான். 

அவளின் தோற்றமும், நடவடிக்கையும் அவனுக்குள் சந்தேகத்தை உண்டு செய்யாதபோதும், அவள் தன்னை இனிமேல் தேடி வருவாள் என்கிற நம்பிக்கையை, அவன் இழக்கத் துவங்கிய நேரம்.

தாத்தா, கார்த்திக்கின் திருமணம் முடிந்ததும், தன்னிடம் இதே வார்த்தையைக் கேட்டிருந்தால், சுமித்ரா இன்று தனது மனைவியாக இருந்திருப்பாள் என ஜேப்பியால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

மீண்டும் மீண்டும் தொந்திரவு செய்த தாத்தாவிடம், “எனக்கு கல்யாணம் அதுலலாம் இண்ட்ரெஸ்ட் இல்லைன்னா விட்ருங்களேன் தாத்தா” என்று ஜேப்பி கெஞ்சத் துவங்கிவிட்டான்.

“உனக்குன்னு எதாவது ஆசைன்னா ஒழுங்கா இப்பவே சொல்லிரு!” என்றவர்,

“இது..” என இழுத்தவர், “நல்ல இடம்.  நம்ம அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி இப்ப ஒரு இடம் வந்திருக்கு.  பொண்ணு கோயம்புத்தூர்.  வர்ற ஞாயித்துக்கிழமை அவங்க வீட்டுக்கு வர்றதா சொல்லியாச்சு.

 இதை மட்டும் நாங்க முதல்ல போயி பாத்துட்டு வந்திறோம்.  அப்புறம் பொண்ணு போட்டோ அனுப்பி வைக்கிறேன்.  இதுக்குமேல நீ பேசறதை நான் கேக்கிறதா இல்லை. 

எனக்கு வாட்சப்புல வந்த பொண்ணு போட்டோ பாத்துட்டு, நல்ல திருப்திதான்.  ஆனா வீடு எப்படி, என்னானு பாக்கணுமில்லை.  அதான் ஒரு எட்டு போயி குடும்பத்தோட பாத்துட்டு வர்றோம்.

கல்யாணப் பத்திரிக்கை அனுப்பி வைக்கிறேன்.  தாலிகட்ட ஒழுங்கா வந்து சேரு.  இல்லை… ஆளுங்களை விட்டுத் தூக்கிட்டு வரச்சொல்லி கல்யாணம் செய்யற மாதிரி பண்ணிறாத” கடுமையான குரலில் பேசிய தாத்தா, அன்றே திருச்சிக்கு கிளம்பியிருந்தார்.

ஜேப்பியின் மனதிற்குள், ‘எனக்கேவா!  நான் எங்கே இருக்கேன்னே தெரியலைன்னா என்ன செய்வீங்க?’ எனும் பிடிவாதம் மேலெழ, அன்றே தனிமை வேண்டி மச்சிலிபட்டினம் செல்ல தீர்மானித்துவிட்டான்.

கார்த்திக்குகூட அவன் அங்கு சென்று தங்குவது தெரியாது. இன்னும் சில இடங்களில் அவனது தங்கல் உண்டு என்பதை யாருமறியார்.

அந்த வார இறுதியில், கோயம்புத்தூருக்கு குடும்பமாகவே சென்றிருந்தனர்.

***

திருமண மகால் போலக் காணப்பட்ட, அந்த வீட்டின் ஹாலில் அனைவரும் கூடியிருந்தனர். பெண்ணது வீட்டுப் பெரியவர்கள் ஒருபுறமும், மாப்பிள்ளை வீட்டார் எதிர்புறமுமாக அமர்ந்திருந்தார்கள்.

வந்தவர்களை வரவேற்று, சற்று நேர இளைப்பாறலுக்குப்பின், “நல்ல நேரம் ஆரம்பிச்சிருச்சு.  பொண்ணு ரெடி பண்ணியாச்சா.  ரெடி பண்ணிட்டா, சபைக்கு அழைச்சிட்டு வாங்க” சிவபிரகாசம் கூற,

சற்று நேரத்தில் பெண் அழைத்து வரப்பட்டு, அனைவருக்கும் வணக்கம் கூறி, வந்தவர்களை வரவேற்றதோடு, சிலரின் பேச்சுக்களுக்கு பதிலளித்தாள்.

சிவபிரகாசத்தின் மனைவி மீனாட்சி பெண்ணை தனதருகே வரும்படி செய்கையில் அழைத்திட, ஒரு புறம் தட்சணாவும், மறுபுறம் ஷ்யாமும் வர, நடுவில் நின்றிருந்த மணப்பெண், குழுமியிருந்த புதியவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு, அதைக் கவனிக்காமல் இருக்க,

“ஆன்ந்தி(ஆண்ட்டி), உங்களை அந்த தாத்தா கூப்பிததாங்க” என்றான் ஷ்யாம்.

ஷ்யாமின் பேச்சைக் கேட்டு, மீனாட்சி பாட்டி இருந்த புறம் நகர்ந்த பெண்ணை, “மெதுவா அவங்கத்த போங்க ஆன்ந்தி(ஆண்ட்டி).  நாங்க இதுக்கோம்” என தைரியமூட்டினான் ஷ்யாம்.

மீனாட்சி, பேரனுக்கு மனைவியாக வரப்போகிறவளிடம் சில கேள்விகளைக் கேட்க, எதிர்பாரா கேள்விகளில் திகைத்தவளுக்கு, உறுதுணையாக நின்று பதில் கூறிய ஷ்யாமை மீனாட்சியும், அவரின் அருகே இருந்த சிவபிரகாசமும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர்.

ஜேப்பியின் வீட்டுப் பெரியவர்களுக்கு பெண்ணைப் பிடித்திருந்தது.  எல்லாம் சரியாக இருந்தது.  அந்தஸ்து மட்டுமல்லாது, அனைத்திலும் திருப்தி.  ஜேப்பியின் குடும்பம் திருமணத் தேதியை முடிவு செய்யும் நிலைக்கு வந்திருந்தார்கள்.

அந்நேரம் சிவபிரகாசம் அந்தப் பேச்சைத் துவங்க எண்ணிட, பெண்ணது வீட்டார் சற்று தயங்கினாலும், பெரியவர் பேசட்டும், அதன்பின் பேசிக்கொள்ளலாம் எனக் காத்திருந்தனர்.

ஆனால் இடையுற்ற ஷ்யாம், “எங்க ஆன்ந்தியை மத்தும் நீங்க வந்து பாத்தீங்க.  எப்ப நாங்க எங்க ஆன்ந்தியோத அங்கிளைப் பாக்கதது” என்று வினவ, குடும்பத்து உறுப்பினர்கள் அனைவருமே அதனைக் கேட்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, அதனை பெரியவர்போல வந்து கேட்ட ஷ்யாமைப் பார்த்த சிவபிராகாசம், அதற்குமேல் தாமதிக்காது சிறுவனை அருகே இழுத்து விசாரித்தார்.

‘இந்தப் பய நம்ம வீட்டு வாண்டுகளோட சாயல்ல இருக்கானே’ என நினைத்தபடியே “உன்னோட பேரென்ன?” என்றிட

“ஷ்யாமள பிதகாஷ்” மிடுக்காக கூறினான் ஷ்யாம். பிரகாஷ் என்ற பின் பெயரைக் கேட்டவருக்கு, ஏற்கனவே அவனது சாயலில் மனம் தடுமாறி நின்றிருக்க, பெயரும் தனது குடும்பத்துப் பெயரோடு ஒத்துப்போக ஏதோ உள்ளுணர்வு தோன்றிட, மேலும் சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

தனது பேத்தியின் தோழன்தான் ஷ்யாம் என ஷ்யாமை அவ்வீட்டுப் பெரியவர் சிவபிரகாசத்திடம் அறிமுகம் செய்திட, “இங்க நம்மளோட வீட்டுலதான் அவங்க குடி இருக்காங்க” எனக் கூற,

சிறுவன் இடைபுகுந்து, “ரெந்துக்கு(ரெண்ட்) இதுக்கோம்” என்றவனை மேலும் ஆச்சர்யமாக நோக்கினார் சிவபிரகாசம்.

சிவபிரகாசத்திற்கு, ஷ்யாமைப் பார்க்கும்போது தன்னையே பார்ப்பதுபோல இருந்தது.  ஆகையினால், ஷ்யாமை அருகே அழைத்து மடியில் அமர வைக்கும் முயற்சியில் இறங்க,

“சாதி(சாரி)” என்றவன், ஷோபாவில் அமர்ந்திருந்தவரின் அருகே சென்று அமர்ந்துகொண்டு சிவபிரகாசத்தின் கேள்விகளுக்கு பதில் கூறத் துவங்கினான்.

பேசிக்கொண்டிருந்தவனையே சிறிது நேரம் கவனித்த சிவபிரகாசத்திற்கு சந்தேகம் வந்திருந்தது. மனதில் குறித்துக் கொண்டவர், அங்கு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டாலும், அடுத்த இரண்டு தினங்களில் சிறுவனைப் பற்றியும், அவனது பெற்றோரைப் பற்றியும் செய்திகளை தனக்கு நெருக்கமான தங்களது நிறுவனத்தின் அங்கமான சூம் டிடெக்டிவ் ஏஜென்சியின் வாயிலாக தெரிந்து கொண்டிருந்தார்.

சுமித்ராவைப் பற்றிய செய்திகளையும், ப்ருத்வியைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொண்டவர், இருவரும் வளர்ந்த இடம், தற்போது இருவரும் இணைந்து இருந்தாலும்,  தாய் சுமித்ரா, தந்தை ஜெயப்பிரகாஷ் என்றிருந்த சிறுவனது பள்ளிக் கோப்புகள், சுமித்ராவின் புகைப்படம், ப்ருத்வியின் படம் அனைத்தையும் ஆதாரத்தோடு எடுத்துக் கொண்டு, சென்னைக்கு வந்திருந்தார்.

ப்ருத்வியின் படத்தைப் பார்த்தவருக்கு, ‘இவன் எப்டி இன்னும் உயிரோட?’ எனும் கேள்வி தொக்கி நின்றிருந்தது.

ஜேப்பியைப் பற்றி கார்த்திக்கிடம் விசாரிக்க, அவனோ, ஜேப்பிக்கு அழைத்துச் சலித்தவன், “எதுனா முக்கியமான விசயம்னா, இந்த நம்பர், இல்லனா, இந்த மெயில் ஐடில மெசேஜ் போட்டு வைங்க தாத்தா.  அவன் எப்ப நினைக்கிறானோ அப்ப பாத்துப்பான்” என தனது டேபியின் டிராயரில் இருந்து ஒன்றை எடுத்து தாத்தாவிடம் குடுத்தான்.

கார்த்திக்கிற்கும் தெரியும்.  சிவபிரகாசம், சில விசயங்களை சம்பந்தப்பட்டவரைத் தவிர, மற்றவரிடம் அதிகம் பகிர மாட்டார் என்று.

சொல்லக்கூடிய விசயமானால், வந்ததுமே தன்னிடம் இதுதான் விசயம் எனப் பகிர்ந்து கொண்டிருப்பார்.  ஆனால் சொல்லாது சுற்றி வளைக்கிறார் என்றால், விசயம் மிகவும் தீவிரம் என்று.

ஆகையினால், தனது வேலை முடிந்ததென அதற்குமேல் எதையும் அறிந்து கொள்ள முற்படாமல், வேறு வேலைகளில் கவனம் செலுத்தியிருந்தான் கார்த்திக்.

தன்னவளைப் பற்றிய தீவிர சிந்தனையில் இருந்தவன், தனக்கு வந்திருந்த நோட்டிபிகேசன் தாத்தாவிடமிருந்து என்றதும், அதைக் காண ஆர்வம் காட்டாமல் அப்படியே விட்டிருந்தான் ஜேப்பி.

மாலையில் வேண்டா வெறுப்பாக அதனைப் பார்ப்பவனுக்கு, தனது இயல்பைத் தொலைப்பதோடு, தனது வாழும் முறைமையே முற்றிலும் மாற நேரும் என முன்பே தெரிந்திருந்தால்…

***