தோளொன்று தேளானது 4

தோளொன்று தேளானது! 4

மாலை நேரத்தில் கடற்கரையை ஒட்டியிருந்த வீட்டின் முதல் தளத்தில் இருந்த ஷோஃபாவில் அமர்ந்தபடியே, தனது லேப்டாப்பைத் திறந்து, தொழில்முறை மெயில்களை பார்வையிட்டு, அதற்கான பதிலை அனுப்பிய ஜேப்பி, இறுதியாக அவனது தாத்தா அனுப்பிய மெயில் செய்தியை பார்வையிடத் துவங்கியிருந்தான்.

 ‘இவளை உனக்குத் தெரியுமா? சில விசயங்களை நேரில் பேசுவது நல்லது என்பதால், இதனைக் கண்டதும் லைனில் வா’ எனும் செய்தியோடு, சில புகைப்படங்களை மட்டும் அனுப்பியிருந்தார் ஜேப்பியின் தாத்தா.

அப்போதும் அவர் பார்க்கச் சென்ற பெண்ணைத்தான் அனுப்பியிருக்கிறார் என்றெண்ணி, முதலில் இருந்த பிக்கை டவுன்லோட் செய்தான்.

சுமித்ராவின் புகைப்படத்தைக் கண்டதுமே, ‘இவளை… இவரு போயி எங்க பாத்தாரு?’ எனத் தோன்றியபோது, ‘கோயம்புத்தூருக்குப் போறேன்னு சொல்லிட்டு, ஈரோடுல இருக்கறவளைப் போயி பாத்திருக்காரு!’ என ஆச்சர்யமும், கேள்வியுமாக அடுத்தடுத்து அதில் அட்டாச் செய்யப்பட்டிருந்த படங்களை டவுன்லோடு செய்யும் முயற்சியில் இருந்தான்.

இரண்டாவது படத்தில், ஷ்யாமள பிரகாஷ் அட்டகாசமாக இருந்தான்.  ‘யாரு இந்தப் பையன்’ என யோசித்தபடியே உருவத்தை கூர்ந்து நோக்க, எங்கோ பார்த்த நினைவு.  ஆனால் சட்டெனத் தோன்றவில்லை.

நிதானமாகச் செயல்பட்டிருந்தால் நிச்சயம் அவனுக்குப் புலனாகியிருக்கக் கூடிய ஒன்றுதான்.  அவனது நிதானம் தவறியிருந்தது.  தானறியாமல், தன்னவளுக்கு குழந்தையா?  அதெப்படி? தனது மேல் பட்ட காற்றுகூட, அவள்மேல் படாமல் இருந்திருக்க, இதெப்படி சாத்தியம்? என்கிற கோபம் ஜேப்பிக்குள் மூண்டிருந்தது.

இதயம் படபடக்க, அந்தப் படத்தின் கீழ் இருந்த, ‘ஷ்யாமள பிரகாஷ், சுமித்ராவின் மகன்’ எனும் செய்தியைப் படித்ததுமே, அச்செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவனுக்குள் உண்டான அதீத கோபத்தால், லேப்டாப்பைத் தூக்கி சுவற்றில் வீசி அடித்திருந்தான் ஜேப்பி.

சில லட்சம் மதிப்பிலான, ஆப்பிள் மேக் லேப்டாப் சில பல சத்தங்களோடு, அடி பலமானதால் இறுதியாக அணைந்திருந்தது. 

கைகளைக் கொண்டு சுவற்றில் அடித்தவனுக்கு, கையில் வலி உண்டானதைக் காட்டிலும், மனதின் வலி அதிகமாயிருந்ததால், ஜேப்பியால் அதை உணர இயலவில்லை.

சுமித்ரா மட்டும் தற்போது அருகே இருந்திருந்தால், என்ன செய்திருப்பானோ?  அது அவனுக்கே புரியாதது.

வேறு யாரையும் திருமணம் செய்திருப்பாளோ?  அடுத்து ஒரு படம் இருந்ததே என்பதை நினைத்ததுமே, சட்டென சிதறிக்கிடந்த லேப்பை எடுத்து, மடியில் வைத்து அதனை ஆன் செய்ய முயன்று தோற்றான்.

பொறுமையில்லை.  தனது பேசியை எடுத்து, அதே மெயிலில் இன்னும் பார்க்கப்படாத படத்தை டவுன்லோடு செய்ய முயன்றான்.

இரண்டு முறை முயன்று பார்த்தவனுக்குள், அவளுக்கு வேறு யாருடனும் திருமணம் ஆகியிருந்தால்… என யோசிக்கவே முடியாத விசயத்தை முயன்று தவிர்க்க நினைத்தான்.

யாருக்கோ அழைத்தான்.  சிக்னல் நன்றாக இருந்தது.  நொடிக்கு, வினாடிக்கு தனது பேசிக்கு வரும் தகவல்களின் செய்தியைப் பார்த்தவனுக்கு, ‘எல்லாம் நல்லா இருந்தும், இந்தப் பிக் மட்டும் ஏன் டவுன்லோட் ஆகலை’ என மீண்டும் மீண்டும் முயன்றான்.

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில், அந்தப் படம் டவுன்லோடு ஆக, அந்தப் படத்தைப் பார்த்தவனுக்கு இதயமே ஒரு கனம் நின்றாற் போலிருந்தது.

ப்ருத்வி, சுமித்ராவிற்கு இடையில், ஷ்யாம்.  மூவருமாக இருந்த படம்.

விழிகள் அந்தப் படத்திலிருந்த முகங்களில் அலைப்புறுதலோடு அங்குமிங்கும் பார்த்து, ‘இது எப்படி சாத்தியம்?’ என அவனையே கேள்வியால் கூறு போட்டது.

கையை ஓங்கி, கையில் இருந்த பேசியை வீசச் சென்றவன், இருக்குமிடம் உணர்ந்து சற்றே தாமதித்தான். இதுவும் போனால், இந்த இடத்திலிருந்து பிறரைத் தொடர்பு கொள்வது கடினம் என்பதால் தன்னை நிதானப்படுத்த முயன்று தோற்றான்.

தலையை பிடித்துக் கொண்டு சற்று நேரம் அமர்ந்திருந்தவன், தனது தாத்தாவிற்கு அழைத்தான்.

ஜேப்பியின் அழைப்பிற்காகவே காத்திருந்தவர், “அவளைத் தெரியுமா ஏற்கனவே?” எடுத்ததுமே அந்தக் கேள்வியை முன்வைத்திருந்தார் சிவபிரகாசம்.

 “ம்” என ஒற்றைச் சொல்லில் பதிலளித்தவனிடம், “அவளை நினைச்சிகிட்டு, இன்னும் இப்டியே தெரிய போறீயா?  அவளுக்கு ஒரு மகன் இருக்கான்.  அதுவும் உன்னோட ஞாபகர்த்தமா, ஷ்யாமள பிரகாசுன்னு பேரு வேற வச்சிருக்கான்னா பாரேன்” என அசட்டை சிரிப்போடு பேரனைச் சீண்ட, அமைதி காத்தான் ஜேப்பி.

 “அவளோட புருசனைப் பாத்தியா?” என அடுத்த கேள்வியை முன்வைத்தார் தாத்தா. ஆனால் மறந்தும் இறந்ததாக நீ கூறியவன் எப்படி உயிரோடு வந்தான் என்கிற கேள்வியை அப்போது அவர் முன்வைக்கவில்லை.

 “இனியாச்சும் நான் சொல்ற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கற வழியப் பாரு!  போனவளையே நினைச்சிக்கிட்டு, போறவரை வாழறதுல்லாம் படத்துக்குத்தான் சரி.  நிஜத்துல அது சரிவராது.  என்ன நான் சொல்றது?” என்றவர், தனக்குத் தெரிந்த விசயங்களான, ஷ்யாமின் தந்தை பெயரில் ஜெயபிரகாஷ் என்றிருந்ததையும், ப்ருத்வி குழந்தைக்கு காப்பாளர் என்றிருப்பதையும், பேரனிடம் வேண்டுமென்றே மறைத்து விட்டார்.

அவரைப் பொறுத்தவரையில் இது தனது பேரனுக்கு தற்போது அவசியமற்ற செய்தி.  இதைக் கூறினால், அவளை நாடிச் செல்லுவதற்கான வாய்ப்பிருப்பதாகவே அவருக்குத் தோன்றியது.  ஆகையினால், வேண்டுமென்றே தவிர்த்தார்.

 “வேணாம்.  எனக்கு நீங்க எதுவுமே செய்ய வேணாம்.  இனி எனக்கு வேணுங்கறதை நானே பாத்துக்குவேன்” என உறுதியோடு கூறிவிட்டு, தாத்தா பதில் பேசுமுன் பேசியை அணைத்திருந்தான் ஜேப்பி.

அடுத்தடுத்து சிவபிரகாசம், ஜேப்பிக்கு அடித்து ஓய்ந்தார்.

 ‘முட்டாப் பயலா இவன்!  நம்ம எதுக்குச் சொல்றோமுன்னு காது குடுத்துக் கேக்கறானா?’ என புலம்பித் தவித்தவரை, தனது இதமான கவனிப்பால் மலையிறக்கினார் மீனாட்சி.

***

ஜேப்பி அடுத்து அழைத்தது, தங்கள் நிறுவனத்தின் பிரிவான சூம் துப்பறியும் அலுவலக நிர்வாக மேலாளர், சாந்தனுக்கு.

 “சாந்தன், ஃபோர் இயர்ஸ் முன்ன ஒரு பிராஜெக்ட்.  ப்ருத்வி அப்டிங்கற ஆர்க்கி..” என ஜேப்பி துவங்கியதுமே,

“அது மேனன் அப்டிங்கறவனை வச்சி, நீங்க சொன்ன மாதிரியே எந்தச் சந்தேகமும் வராம, அப்பவே வேலைய முடிச்சாச்சே சார்!” சாந்தன்.

“அப்டினா, அவன் எப்டி இப்போ கோயம்புத்தூர்ல இருக்கான்?” என ஜேப்பியின் கர்ஜனைக் குரலைக் கேட்டதுமே ஆடிப் போனவன், “டைம் குடுங்க ஜீ, என்னான்னு நானே பாக்கறேன்” என்றான் சாந்தன்.

“நம்பிக்கையில்லாதவனை விட்டு வைக்காதே.  இனி மேனன் வேணாம்” என்ற ஜேப்பியின் வார்த்தையில், மறுப்பேதும் கூறாமல், “ஸ்யூர் சார்” என்றவன் அவனது பணியைக் காணச் சென்றான்.

அரசு மற்றும் அரசாங்க டெண்டர்கள் தங்களின் கையை விட்டுப் போனபோது, அதனை துல்லியமாக விசாரிக்கத் துவங்கிய நிறுவனம் ஜூம். ஒரு கால கட்டத்தில், சில சொந்தத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருந்தது ஜேப்பியால்.

தங்களின் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டே, போட்டி நிறுவனங்களுக்கு உளவு சொல்வது, தங்களின் எஸ்டிமேட் தொகையைக் கூறி, அதனைவிட குறைந்த தொகைக்கு அவர்களின் எஸ்டிமேட்டை தந்து, தங்களுக்கு வரும் வாய்ப்பை அபகரிப்பது என்பது போன்ற விசயங்களை, யார் எனக் கண்டுணர்ந்து, பணத்திற்காக தங்களை ஏமாற்றியவர்களை, நம்பிக்கை துரோகம் செய்தவர்களை அதன்பின் வாழவே இயலாத நிலைக்குத் தள்ளி, சாகும்வரை தனது தவறை எண்ணிச் சாகச் செய்வதில் ஜேப்பி இளகா மனம் படைத்தவன்.

கார்த்திக்கிற்கு அலுவலகம் சார்ந்த இதுபோன்ற நிகழ்வுகளைத் தம்பி செய்வதை அறிந்தாலும், தங்களது நிறுவனத்திற்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தங்களின் வளர்ச்சிக்கும் இது போன்ற முன்னெச்சரிக்கை தரும் தேடலும், அதற்கான பதிலடியும் அவசியமே என எண்ணி அனைத்தையும் ஜேப்பியின் பொறுப்பில் ஆரம்பத்திலேயே விட்டிருந்தான்.

ஆனால் அதற்கு முன்பிருந்தே இதுபோன்ற நிகழ்வுகளில் மிகுந்த பரிச்சயம் ஜேப்பிக்கு இருந்ததை, கார்த்திக் அறிந்திருக்கவில்லை. ஜேப்பி, தாத்தா சிவபிரகாசத்தோடு இணைந்து செய்த நிழல் சம்பவங்கள் எதுவும் பிறருக்கு தெரியாவண்ணம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“பாத்துச் செய்யி ஜேப்பி.  எவனாவது பெரிய இடமா இருந்து, நம்மை எதுலயாவது இழுத்து விட்றாம.  ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சிச்  செய்யி” என கார்த்திக் ஜேப்பியிடம் முன்ஜாக்கிரதை வார்த்தைகள் கூறியதோடு, உள்நுழைந்து, என்ன நடக்கிறது? எப்படி இயங்குகிறது நிறுவனம்? என்றோ இதுவரை அறிந்துகொள்ள அதிகம் மெனக்கெடாதவன்.

தொண்ணூறு சதவீதம், தனது எதிர்கால வளர்ச்சிப் பணிக்கு என துவங்கிய நிறுவனம், முதன் முறையாக, தனது வாழ்வின் விடிவெள்ளியாக வரப்போகின்ற சுமித்ராவிடம், தான் எவ்வளவு கூறியும் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளாது வீம்பாகச் செயல்பட்ட ப்ருத்வியை, சென்னை அலுவலகப் பிரிவில் இருந்து, முதலில் இயல்பாக இடமாற்றம் எனும் பெயரில் பங்களூருக்கு அனுப்பியிருந்தான் ஜேப்பி.

யாருக்குமே இதில் எந்த சந்தேகமும் வந்திராத நிலையில், அங்கு ப்ருத்வி சென்று இரண்டரை மாதங்களில் தான் எதிர்பார்த்த நிகழ்வை சாந்தன் வாயிலாகச் செய்யப் பணித்திருந்தான்.

அனைத்தும் ஜேப்பியின் எண்ணம்போலவே நடந்திருந்தது.  ஆனால் தனக்கு அனுப்பப்பட்டிருந்த போட்டோவைக் கண்டு, அனைத்தும் திட்டமிட்டவாறு நடந்ததாகவே இதுவரை நம்பியிருந்தான்.

ஆனால் அவனே இன்று தன்னவளோடு, ஒரு குழந்தையோடு இருக்கிறான் என்றால், இதற்குமேல் பொறுமை காப்பது வீண்.  விசயம் என்னவென அறிய, தானே இனி நேரில் செல்லும் முடிவிற்கு வந்துவிட்டான் ஜேப்பி.

இதுவரை அச்சுரம் பிசகாமல் அனைத்தையும் செவ்வனே செய்திருக்கிறான் சாந்தன்.  ஆனால் இந்த விசயம் மட்டும் எப்படி மாறியது என்கிற குழப்பம் ஜேப்பிக்கு.

சுமித்ராவை தான் விரும்பிய நேரங்களில் அவளது அலுவலகத்தில் சென்று மறைமுகமாகப் பார்த்து வந்ததோடு, அவளைப்பற்றி அதற்குமேல் விசாரிக்கத் தோன்றாத அளவிற்கு அவளின் மேல் தான் கொண்டிருந்த கண்மூடித்தனமான நேசத்தை எண்ணி, ஜேப்பிக்கு அவன்மீதே கோபம் உள்ளுக்குள் கனன்ற வண்ணமிருந்தது.

கைகளைச் சுவற்றில் அடித்து வேதனை உண்டான போதும் நடந்த நிகழ்வை அவனால் ஜீரணிக்க இயலாமல் இருந்தான்.

***

நிறுவனத்திற்கு வந்தவனை வரவேற்ற சாந்தன், சிவபிரகாசம் மெனக்கெட்டு தெரிந்து கொண்ட விசயங்களை அப்படியே ஜேப்பியிடம் தெரிவித்தவன், “அந்த ப்ருத்விதான் இவன்னு எனக்கே தெரியலை சார்” என தனது தவறையும் ஒப்புக் கொண்டவன்,

“மேனனை முடிக்குமுன்ன சில விசயம் கேட்டு தெரிஞ்சிக்கணும்னு அவனை நம்ம இடத்தில அடைச்சு வைக்கச் சொல்லியிருக்கேன் சார்” பணிவோடு பகிர,

“அவனை பொறுமையா வந்து பாக்கறேன் சாந்தன்.  இப்போ, நீ கோயம்புத்தூர் போயி என்ன செய்யணும்னு சொல்றேன்.  சுமீ என்னைக்கு எல்லாம் கோயம்புத்தூர்ல இருக்கா, ப்ருத்வி எப்போ அங்க இருக்கான். 

ரெண்டுபேரும் சேந்து எப்போ அங்கே வராங்க.  இதெல்லாம் எனக்குச் சொல்லு.  இந்த விசயத்துல இனி யாரையும் நான் நம்பறதா இல்லை.  அதனால, நானே இதுல இறங்கிப் பாக்கப் போறேன்.  எனக்கு வேணுங்கற ஹெல்ப் மட்டும் நம்ம ஆளுங்களை வச்சிப் பண்ணிக்குடு” என்றவன்,

தான் திட்டமிட்டபடி அனைத்தையும் காய் நகர்த்தத் துவங்கிட, அவனது நிறுவனத் தொழிலாளர்கள் யாரிட்ட பணியைத் தான் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்யப் பணிக்கப்பட்டனர்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு எனும் நிலையில் இருந்த ஜேப்பிக்கு, தான் எடுத்துச் செய்யவிருக்கும் நிகழ்வுகளினால் ஏற்படும் பாதகங்களை உணர்ந்தாலும், தன்னை வேண்டாமென்று சென்றுவிட்டு, தனக்குப் பிடிக்காதவனோடு, தனது பெயரினை தந்தையெனக் குறிப்பிட்டு ஒரு குழந்தையையும் கையில் வைத்துக்கொண்டு, அவனோடு இருக்கிறாள் என்கிற அதீதக் கோபம் இருந்தது.

ஆனால், ஷ்யாம் எங்கு பிறந்தான் என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ந்தபோது, அவன் சென்னையில் இருந்த பிரபல மருத்துவமனையில் பிறந்தது தெரிய வந்திருந்தது.

சென்னை மாநகராட்சி வழங்கிய பிறப்பு சான்றிதழிலேயே, தாய் சுமித்ரா என்றும், தந்தை ஜெயபிரகாஷ் என்றும் இருந்ததைக் கண்டவன், சுமித்ரா தங்களின் அலுவலகத்திலிருந்து சென்ற இரண்டொரு மாதங்களில் ஷ்யாம் பிறந்திருக்கிறான் என்பதும் தெளிவாகியிருந்தது.

நிச்சயம், ஷ்யாம் தனக்கும், சுமித்ராவிற்கும் பிறந்தவனல்ல என்பது ஜேப்பிக்கு தெளிவாகவே தெரிந்திருந்தது.  ப்ருத்வியைப் பற்றி விசாரித்ததில், இரண்டு ஆண்டுகளாகத்தான் கோயம்புத்தூரில் இருக்கிறான் என்பதும் தெரிய வந்தது.

இடையில் அவன் எங்கு இருந்தான் என்பதும் தெரிய வரும் நிலையில், தனது சில குழப்பமான விசயங்களுக்கு விடை கிடைக்கும் என எண்ணியவன், திட்டங்களை வகுத்தான்.

ஆனால், தன்மீது பழிபோட்டுவிட்டு, தனக்குத் துரோகம் விழைவித்தவளை எக்காரணம் கொண்டும் அப்படியே விடும் எண்ணம் இல்லாததால், தனது மனம்போல முடிவெடுத்து, அடுத்தடுத்த நிகழ்வுகளைச் செயல்படுத்தத் துவங்கினான் ஜேப்பி.

தான் கேட்டிருந்த அனைத்தும் கைக்குக் கிட்டியதும், களத்தில் நேரடியாக இறங்கியவன், முதலில் செய்தது, ஷ்யாம் பள்ளிக்குச் சென்று திரும்பிய வாகனத்தை குறி வைத்ததுதான்.

***

பெரியவர்கள் இருவரும் பணிக்குச் சென்றுவிடுவதால், அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் நம்பிக்கையான பெண்ணிடம், பொறுப்பைத் தந்திருந்தாள் சுமித்ரா.

ஷ்யாமை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு திரும்பியபோது, எதிர்பாரா விதமாக வண்டியின் பின்னே வந்து உரசிய பொலிரோ வாகனத்தின் வேகத்தில், ஆட்டோ சாலையிலிருந்து நழுவி, அருகே இருந்த மரத்தில் மோதி நின்றிருந்தது.

 “பாத்து ஓத்து(ஓட்டு) சீ(ஸ்ரீ)” என்ற ஷ்யாம் கூறிக்கொண்டிருந்தபோதே, தடுமாறிச் சென்ற ஆட்டோவில் இருந்து, அங்குமிங்கும் இடித்து, கீழே விழுந்தபோது அவனறியாமலேயே உண்டான காயங்களிலிருந்து இளரத்தம் பீறிட்டு வந்தது.

பள்ளிச் சீருடையின் நிறமே மாறியிருக்க, இன்னும் தனது நிலை உணரப் பெறாதவன், எழுந்து வர முயன்றான்.

சுதாரித்து எழுந்த ஸ்ரீதேவி ஷ்யாமைக் கண்டு, “அய்யோ ஷ்யாம்.  உங்கம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்” என தனது காயங்களைப் பொருட்படுத்தாது, ஷ்யாமை தன்னால் இயன்றவ வேகமாகச் சென்று தூக்க,

 “எனக்கு ஒன்னுல்ல சீ.  நெத்தில லத்தம் உனக்கு.  தொதைச்சு விதவா” என்று கேட்ட சிறுவனை அணைத்துக் கொண்டு, அதிலிருந்து வெளிவர முயன்றார் ஸ்ரீதேவி.

சற்று தொலைவில் சென்று நின்ற பொலிரோவில் இருந்து இறங்கிய ஓட்டுநர், தனது வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால், சிறு விபத்து நடந்ததாகக் கூறி, சிறு காயங்களோடு இருந்த ஷ்யாமையும், பெண் ஆட்டோ ஓட்டுநரையும் பாதுகாப்பாக வண்டியில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்த உதவினான்.

பிறகு, “சாரி.  என்னோட வண்டியில உண்டான கோளாறுனால இப்டி ஆகியிருச்சு.  இது கம்ப்ளைண்ட் ஆனா, ரெண்டு பேருமே ஸ்டேசன், கோர்ட்டு, கேசுன்னு அலையணும்.  இந்தாங்க, உங்க ஆட்டோ டேமேஜ் ஆனதுக்கான பணம்” என ஸ்ரீதேவியிடம் பணத்தைத் திணிக்க, அவர் மறுக்க மறுக்க திணித்திருந்தான்.

பிறகு, அவ்வழியே வந்த வாகனத்தை மறித்து உதவி கேட்பதுபோலப் பேசி அங்கிருந்து, இருவரையும் அந்த வாகனத்தில் அனுப்பி வைத்துவிட்டு, அழைத்தவன் விசயத்தை ஜேப்பிக்குப் பகிர்ந்தான் சாந்தன்.

ஷ்யாமை ஏற்றிக்கொண்டு பிரபல மருத்துவமனைக்கு விரைந்தது வாகனம். “உங்க பையனா?” வழியில் உதவிய ஓட்டுநர்.

“இல்லை.  நான் ஆட்டோ ட்ரைவர்.” என்ற பெண்ணிடம்,

“அப்ப பையன் வீட்டுல இன்ஃபார்ம் பண்ணிருங்க” என்றதும், நடக்கும் விசயங்களை முரணாக யோசிக்காத பெண் ஆட்டோ ஓட்டுநர், சுமித்ராவிற்கு அழைத்துவிட்டாள்.

“ஹலோ ஸ்ரீக்கா.  ஏன் இவ்ளோ லேட்டு இன்னைக்கு.  என்னாச்சு?” என பதறி சுமித்ரா வினவ, விசயத்தைக் கூறி, மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தாள் ஸ்ரீதேவி.

சுமித்ரா மருத்துவமனைக்கு விரைய, பெண் ஆட்டோ ஓட்டுநர் ஷ்யாமை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, ஆட்டோவிற்கான சேதத்திற்கு வழங்கியிருந்த அதிகப் பணத்தோடு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, சத்தமில்லாமல் வீட்டிற்குக் கிளம்பியிருந்தாள்.

கையில் திணித்திருந்த இரண்டாயிரம் ரூபாய் கட்டு அவரை அவ்வாறு நடக்கச் செய்திருந்தது.

சிறு காயத்திற்கு இவ்வளவு நேரம் அவசர சிகிச்சைப் பிரிவில் ஷ்யாமை வைத்திருந்தது, சுமித்ராவிற்கு பதற்றம் காரணமாக யோசிக்கத் தோன்றவில்லை.

இரவு துவங்கிய வேளையில் ப்ருத்வி அழைக்க, அழுகையோடு பேசிய சுமித்ரா, மருத்துவமனையில் ஷ்யாம் இருப்பதைக் கூற, “நான் கிளம்பி வரேன் சுமி.” என்றதும்,

 “இல்லைபா.  நான் பாத்துக்கறேன்.  நீ உனக்கு முடியும்போது கிளம்பி வா” என்றாள் சுமித்ரா.

இரவு பதினோரு மணியளவில், ஐசியுவில் இருந்த சிறுவனை அறைக்கு மாற்ற, ஊசியின் தயவால் உறங்கிக் கொண்டிருந்த மகனின் சிகை தடவிக் கொடுத்தவாறு அமர்ந்திருந்தாள் சுமி.

நடந்தவை அனைத்தும் விதியென்றிருந்தாள் சுமி.  ஆனால் அனைத்தும் சதியெனத் தெரியவரும் வேளையில்!

ஷ்யாம் எழுந்து அவன் தன்னிடம் பேசினால்தான் தனது இயல்பு மீளும் என்பது புரிந்தாலும், சுமித்ராவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஷ்யாமின் அருகிலேயே அமர்ந்திருந்த நிலையில், அசதியிலும், அதிர்ச்சியிலும், தன்னையறியாமல் உறங்கிய சுமித்ரா, யாரோ தன்னை அழைப்பது உணர்ந்து விழித்தபோது, சுற்றம் புரியாமல் திகைத்தாள்.

***