தோளொன்று தேளானது 5

தோளொன்று தேளானது! 5

விழித்தவளின் முன் நின்றிருந்த பெண்ணை மலங்க, மலங்கப் பார்த்தாள் சுமித்ரா.

‘இவ யாரு? இது எந்த இடம்?  நான் இப்ப எங்க இருக்கேன்?’ இப்படியாக சுமித்ராவின் எண்ணம் அடுத்தடுத்துச் செல்ல, அப்போதுதான் ஷ்யாமுடன் தான் இதற்குமுன் மருத்துவமனையில் இருந்தது சுமித்ராவின் நினைவில் வந்தது.

தானிருக்கும் இடம் மருத்துவமனை போன்றும் தோன்றாததால், ‘எனக்கு என்னாச்சு?  நான் ஏன் இந்தப் படுக்கையில் படுத்திருக்கேன்?’ எனத் தோன்றிட,

தான் படுத்திருந்த படுக்கையில் இருந்து சட்டென எழுந்து அமர்ந்தவள், ‘இது ஹாஸ்பிடல் மாதிரியும் தெரியலையே?’ என சுற்றிலும் பார்வையினைச் செலுத்த, உண்மை உணர்ந்ததும் மனம் பதறியது சுமித்ராவிற்கு.

“இது எந்த இடம்? ஷ்யாம் எங்க?” என எதிரில் நின்றளிடம் தயங்கிக் கேட்க,

 “ஷ்யாம்?  அதி எவரு?” (ஷ்யாமா அது யாரு?) சுமியிடம் தெலுங்கில் கேட்டாள் அப்பெண். சுமித்ரா சென்னையில் வளர்ந்ததால், அவளுடன் கல்லூரியில் பயின்ற ஆந்திர, தெலுங்கானா மாணவிகளின் பேச்சைக் கவனித்திருந்தமையால், ஓரளவிற்கு தெலுங்கில் பேசுவது புரியும்.  ஆனால் பேசத்தான் தெரியாது.

“ம்” ஒரு கனம் யோசித்த சுமித்ரா, “என்னோட பையன்” என்பதைக் கூறியபடியே செய்கையிலும் பகிர்ந்திட, மறுத்துத் தலையசைத்தவாறு, “அப்டி யாரையும் தெரியலை எனக்கு?” என்றாள் புதியவள்.

தலையை வலிப்பது போலிருந்தது சுமிக்கு.  தான் எப்படி, இங்கு வந்தோம்? என எதுவும் புரியாமல் நின்றிருந்தவளிடம் கேட்க, சுமியின் பேச்சும் செயலும் அத்தனை பிடிபடாததால் சிரிப்பு மேலிட அதனை அடக்கியவாறு, பதில் பேசாமல் குறுகுறுவென சுமித்ராவைவே பார்த்தாள் அப்பெண்.

 ‘இவகிட்ட பேசி, கொஞ்ச ஜீவனையும் போக்குறதுக்கு பேசாமயே இருந்திறலாம்’ என சுமிக்குத் தோன்றிட, படுக்கையை விட்டு இறங்க முற்பட்டவள் அவளையறியாமலேயே தடுமாறி விழச் சென்றிருந்தாள்.

சுமித்ராவை அருகே வந்து தாங்கிக் கொண்டவள், “பாத்துக்கா.  நானே கூட்டிட்டுப் போகவா?” கேட்டபடி சுமித்ராவின் கையைப் பிடிகக்க வந்தாள். 

அவளை விலக்கியதும், “பிரஸ் பண்ணிட்டா, குடிக்க எதாவது கொண்டு வரேன் அக்கா” என்றாள் சுமித்ராவிடம்.

உண்மையில், ஷ்யாம் தற்போது எங்கிருக்கிறான்?  தான் மட்டும் எப்படி இங்கு வந்தோம்?  இது எந்த இடம் என்பது எதுவும் தெரியாமல் சுமித்ராவால் பச்சைத் தண்ணீர்கூட குடிக்கப் பிடிக்கவில்லை.

ஆனால், உடலின் அசதியும் சோர்வும் அவளை எதாவது சிறிய அளவேனும் உண்டாலே அன்றி, தன்னால் சுயமாக நிற்கக்கூட இயலாது என்று உணர்த்திட, அமைதியாக பல் துலக்கச் சென்றாள்.     

செல்லும்போது பார்வையில் பட்டதை கண்ணுற்றவளுக்கு, அதன் செழிப்பில், பளபளப்பில், பயமும் அவளையறியாமல் ஆட்கொண்டது.

தனிமையில் சிலகாலம் வாழப் பழகியிருந்தாலும், தனக்கென ஒரு வேலை, அதிலிருந்து வருமானம், அதனைக்கொண்டு சுயமாய் தனித்திருப்பது என்பது இத்தனை சங்கடத்தைக் கொடுத்திருக்கவில்லை சுமிக்கு. அதன்பின் அவளோடு முதலில் ஷ்யாம், பிறகு சில காலம் கழித்து ப்ருத்வி என அனைவருமாக ஒரு கூட்டுக்குள் வசிக்கத் துவங்கியபோதும் அத்தனை சங்கடங்கள் இல்லை.

ஆனால், தான் எங்கிருக்கிறோம் என்பதே தெரியாமல், இத்தனை வசதிகளும், ஆடம்பரமுமான வீட்டில், தான் எப்படி வந்தோம் என்று தெரியாமல் இருப்பது திகிலை உண்டு செய்தது சுமிக்கு.

          முகத்தில் தண்ணீர் பட்டதும் சற்று ஆசுவாசம் உண்டாக, பல்துலக்கி, காலைக்கடன்களைக் கழிக்கச் சென்றவளுக்கு, ஏதோ அசௌகர்ய உணர்வு.

சட்டெனப் பதறி தன்னைத்தானே சோதித்தவளுக்கு, நெஞ்செங்கும் பதற்றம் இருளைப்போலப் பரவிச் சூழ்ந்தது.  தன்னை யாரோ தவறாகப் பயன்படுத்தியதாகத் தோன்றிட, மேலும் தன்னை ஆராய்ந்தாள் சுமித்ரா.

ஏதோ சரியில்லை என்பது புரிந்தது.  ஆனால் தனக்கு நேர்ந்தது என்னவென அவளால் நூறு சதவீதம் எந்த முடிவிற்கும் வர இயலவில்லை.  தனது கன்னித்தன்மை பறிக்கப்படவில்லை என்பதை அவளாகவே அவளுக்குள் கூறி, நம்ப வைக்க முயன்றாள்.

ஆனால், அங்கு இருப்பதே அவளுக்கு பாதுகாப்பின்மையைத் தோற்றுவித்திட,  அங்கிருந்து எப்படியேனும் விரைவில் தங்களின் வீட்டிற்குச் செல்லவேண்டும் என எண்ணிக் கொண்டே வெளியில் வந்தாள் சுமித்ரா.

மருத்துவமனையில் தூங்கிய தன்னை, யார் இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்க முடியும்? இடையில் தனக்கு என்ன நேர்ந்தது? தற்போது ஷ்யாம் எங்கு, எப்படி இருக்கிறான்? இந்த விசயம் ப்ருத்விக்கு தெரியப்படுத்தாமல், அவன் தங்களை எங்கெல்லாம், வலைவீசித் தேடுகிறானோ என யோசித்தபடியே, வெளியில் வந்தவளிடம் காஃபியை நீட்டினாள் அப்பெண். 

எழுந்ததும் உண்டான தள்ளாட்டத்தினை நினைவு கூர்ந்தவளுக்கு, அதை வாங்கிக் குடிக்க அத்தனை தயக்கம். மறுத்தவளிடம், ‘ஏன் வேணானு சொல்றீங்க அக்கா.  பயப்படாமக் குடிங்க.  இன்னும் கொஞ்ச நேரத்தில காலை ஆகாரத்தை கொண்டு வந்து தரேன்” என்றிட,

‘இனி புதுசா என்ன என்னோட வாழ்க்கையில நடக்கப் போகுது?’ யோசிக்கவும், இங்கிருந்து செல்ல தன்னை தயார்படுத்தும் விதமாக, தனக்கு நிச்சயம் மனஉறுதியோடு உடலுறுதியும் வேண்டுமே என அப்பெண் நீட்டிய தம்ளரை வாங்கியிருந்தாள் சுமித்ரா.

அத்தனை தூரம் ரசிக்காத சுவை. ஆனாலும் மடமடவெனக் குடித்துவிட்டு, சுற்றிலும் அறையை நோட்டம் விட்டவள், தனது மொபைல் மற்றும் இதர பொருள்கள் ஏதேனும் அந்த அறையில் இருக்கிறதா என்று அங்கிருந்த வார்ட்ரோப்களைத் திறந்து பார்த்தாள். 

அனைத்தும், புத்தம் புதியதாக உபயோகப்படுத்தாமலேயே இருந்தது.  பொருள்கள் எதுவும் கண்ணுக்குப் புலனாகவில்லை.  அதன்பின் அறையைவிட்டு வெளியே செல்ல முயன்றாள் சுமித்ரா.

யாரும் தடுக்காததால், ஒவ்வொரு இடமாகப் பார்த்தபடியே வந்தவளுக்கு, ‘யாரு என்னை இங்க கூட்டிட்டு வந்ததுன்னு தெரியலையே?  என்னைக் கடத்தின ஆளு, மேல்மாடி கழண்ட கேசா இருக்குமோ! பத்துப் பைசா பிரயோசனமில்லாத என்னை இங்க கொண்டு வந்து அடைச்சு வச்சு என்ன பண்ணப் போறானாம்? இல்லை போறாளாம்?’ இப்படிச் சென்றது சுமித்ராவின் எண்ணம்.

‘ஷ்யாம் பயப்படலாம் மாட்டான்.  ஆனா புள்ளைக்கு வேணுங்கறதைக் குடுத்துட்டா சமத்தா இருந்துப்பான்.  ஆனாலும், அவனை நினைச்சா மனசெல்லாம் பதட்டமா இருக்கே!  மனம் வருந்தியது ஷ்யாமை எண்ணி.

‘புள்ளைய எதாவது பண்ணிட்டா! இன்னைக்கு காலத்துல பச்சைப் புள்ளையவே கடத்தி என்னென்னமோ காசுக்காக பண்றானுங்களே!  கடவுளே, எம்புள்ளைக்கு எந்தக் கெடுதலும் வராம, எங்கிட்டயே கொண்டு வந்து பத்திரமாச் சேத்திரு!’ என தனக்குள் பாசப் போராட்டம் நிகழ்த்தியவளுக்கு, இந்த தன்னுடைய நிலைக்கு எது காரணமாக இருக்கும், யார் காரணமாக இருக்கக் கூடும்? என யோசித்து, யோசித்து ஓய்ந்து போனாள் சுமித்ரா.

இதே மற்ற நேரமாக இருந்திருந்தால், கட்டிடத்தையும் அதன் நேர்த்தியையும், வடிவமைப்பையும், அதில் மேற்கொண்டிருக்கும் நுணுக்கமான வேலைகளையும் கண்டு, இது இப்படிச் செய்திருக்கிறார்கள். 

இதனை அப்படிச் செய்திருந்தால் மேலும் அழகு சேர்ந்திருக்கும் என தனது பணி சார்ந்த நினைவோட்டத்தில் இருக்கக் கூடியவள், இன்று எதிலும் மனம் லயிக்காமல், இயந்திரத்தனமாக ஒவ்வொரு இடத்தையும் பார்த்து, எப்படி? என்று இங்கிருந்து வெளியில் செல்லலாம்? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என யோசித்தவாறு வந்தாள்.

          பார்த்தபடியே வந்தவள், இறுதியாக நுழைந்தது அடுக்களைப் பகுதி.  அடுக்களையே அவள் குடியிருந்த வீட்டின் அளவில் இருந்தது.  அத்தனை பளபளப்பு ஒவ்வொன்றிலும். 

மாடுலர் கிச்சன்.  சுமித்ராவின் வருகையைக் கண்டு அடுக்களையில் நின்றிருந்த அந்தப் பெண் சுமித்ராவைப் பார்த்து புன்னகைத்து, “வாங்க அக்கா” என்றிட,

பதிலுக்குப் புன்னகைத்தவள் வாயிலில் நின்றபடியே அடுக்களையைப் பார்வையிட, அப்பெண்ணோ,  “பசி வந்திருச்சா அக்கா,  இதோ எம்எல்ஏ பெசரட்டு ரெடியாகிருச்சு.  ரெண்டே நிமிசம்.  போயி டைனிங்ல உக்காருங்க” என்றவளின் பாதி பேச்சு புரியாமல் நோக்கினாள்.

மீண்டும் டைனிங்கில் சென்று அமருங்கள் எனும் அப்பெண்ணின் வார்த்தையில், டைனிங் எனும் வார்த்தையில் தான் பார்த்து வந்த நினைவின் உதவியோடு அப்பகுதி நோக்கி நகர்ந்தாள் சுமித்ரா.

இருபது நபர்கள் அமர்ந்து உண்ணக்கூடிய அளவில், தேக்கு மரத்தால் ஆன நீளவடிவ டைனிங் டேபிள்.  அதில் சென்று அமர்ந்தவள், சுற்றிலும் பார்வையை விட்டாள்.  பெரும்பாலும், தேக்கு போன்ற உயர்வகை மரத்தாலான வார்ட்ரோப், மற்றும் இதர மர சாமான்களை நினைவுக்கு கொண்டு வந்தவள், ‘தேக்காலேயே இழைச்சிருக்கானுங்க.  பெரிய இடமாத்தான் இருக்கும்போல’ என நினைத்தபடியே, மேல்தளத்திற்கு செல்லும் படியினை அமர்ந்திருந்த இடத்திலிருந்தபடியே பார்த்தாள்.

அதற்குள் அங்கு வந்த அப்பெண், “அக்கா, நீங்க சாப்பிடுங்க” என கொண்டு வந்து வைத்ததைப் பார்வையிட்டாள் சுமித்ரா.

ஃபிளாரல் டிசைனில் இருந்த வெண்ணிற பீங்கான் தட்டுகள், கோப்பைகள்.  பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.  அவளின் நிலையை, இக்கட்டை மீறி  அதன் அழகின் ஈர்ப்பில் ரசித்தாள் சுமித்ரா.

சூடான எம்எல்ஏ பெசரட்டுடன், கார சட்டினி, கொத்துமல்லி சட்டினி என இரண்டு பீங்கான் கோப்பைகளில் வைக்க, தனது தட்டில் வேண்டுமென்பதை எடுத்து வைத்து உண்ணத் துவங்கினாள் சுமித்ரா.

உணவை ரசிக்கும் எண்ணம் இல்லாதபோதும், நினைவுகளோடு உருண்டோடிய மனதைக் கட்டுப்படுத்தாமல் அதன்போக்கில் யோசித்தபடியே, ஒன்றிற்கு மேல் சுமித்ராவிற்கு உண்ண முடியாமல் போதுமென்று எழுந்துவிட்டாள்.

“நீ சாப்பிடலையா?” என்று கேட்ட சுமித்ராவிடம், “எல்லாரும் வந்து சாப்பிட்டுப் போனபின்ன நான் சாப்பிட்டுக்குவேன் அக்கா” என்றாள்.

“வேற யாரெல்லாம் இங்க இருக்காங்க” அப்பெண்ணிடம் விசாரித்தாள் சுமித்ரா.

“வீட்டுல வேலை செய்யறவங்க மட்டுந்தான் இப்ப இங்க இருக்காங்க” என்றவளிடம், “எவ்ளோ நாளா இங்க வர்க் பண்ற” எனும் சுமித்ராவின் கேள்வியை, அந்தப் பெண் புரிந்துகொள்ளுவதற்குள், உண்ட உணவு சீரணமாகியது போலிருந்தது சுமித்ராவிற்கு.

ஆங்கிலமும் அத்தனை புரியவில்லை அந்தப் பெண்ணிற்கு.  சுமித்ராவிற்கு தெரிந்த தெலுங்கில் சில வார்த்தைகள் பேசி, அவளுக்குப் புரியும்படி கேட்டாள்.

“இங்கே நான் ஒரு வருசமா வேலைக்கு வரேன்.  இந்த வீட்டுல காவலுக்கு இருக்கறவங்களுக்கும்,  அய்யா வந்தா அவங்களுக்கும் கவனமெடுத்து சமைக்கிறது. மற்ற நாள்கள்ல வீட்டை சுத்தமா வச்சிக்கிறது.  பெரும்பாலும் இங்கதான் தங்குவேன்.  சில நாளு வீட்டுக்கு கிளம்பிப் போயிருவேன்” என்றவள்,

சுமித்ரா கேளாமலேயே, “இந்தத் தடவைதான் முதல்முறையா ஒரு பெண்ணை இந்த வீட்டுல வச்சிப் பாக்கறேன்.” என கொசுறுத் தகவலாகச் சிரித்தபடியே சுமித்ராவிடம் கூறினாள் தேவி.

பாதிப் புரிந்து, மீதியை சுமித்ராவாகவே யூகித்துக் கொண்டாள்.

அவளின் பெயரைக் கேட்ட சுமியிடம், “சண்டிகா தேவி” என்றாள்.

“தேவி, இது எந்த ஊரு.  எதாவது சொல்லேன்” எனக் கேட்டதற்கு, “இது மச்சிலிபட்டினம்” என்றிருந்தாள் தேவி.

“மச்சிலிப்பட்டினமா?” என அதிர்ந்து நின்றவள், அது எங்கிருக்கிறது என யோசித்தாள். அந்தப் பெயரே இதுவரை அவளுக்குக் கேட்டாற் போலில்லை.

“இந்த வீடு யாருடையது” என்று கேட்டதற்கு, “இது அய்யாவுடைய வீடு” என்று மரியாதையாகச் சொன்னாளே அன்றி, அந்த அய்யாவின் பெயர் தேவிக்குத் தெரிந்திருக்கவில்லை.

சுமித்ராவிற்கு அதனையே நம்ப முடியவில்லை.  அது எப்படி தான் பணிபுரியக்கூடிய இடத்தின் முதலாளியின் பெயரைத் தெரிந்து கொள்ளாமல் இப்பெண் ஒரு வருடமாக வேலைக்கு இருக்கிறாள் என்று.

எத்தனை கேட்டும், தேவிக்கு தெரியாது எனச் சாதித்தாள்.

வாயிலை விட்டு இறங்கினவளை, அங்கு வெவ்வேறு வேலைகளில் கவனம் பதிந்திருந்தாலும், இவளிடமும் கவனத்தை வைத்தபடியே பணியினைத் திறம்படச் செய்தனர்.

சுற்றுச் சுவருக்குள் இருந்த பகுதியில் நடந்தபோது கண்டும் காணாமல் இருந்தவர்கள், சுமித்ரா முக்கிய வாயிலின் அருகே சென்றதும், மொத்தமாக அவளைச் சூழ, அவர்களின் மாமிச மலை போன்ற உடலிலும் முக இறுக்கத்திலும், மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட்டாள் சுமித்ரா.

‘இத்தனை பாதுகாப்பா?  எதுக்கு? நானே டம்மி பீசு.  எனக்கு எதுக்கு இவ்ளோ மெனக்கெடல்? யாருக்கு என்னோட உதவி தேவைப்படுது?’ இப்படி பலவாறு சுமித்ராவின் சிந்தனை சென்றது.

தனது அலுவலகத்தில் உள்ளவர்களை, தான் சில மாதங்களுக்கு முன் சந்தித்த இடர்பாடுகளை, இப்படித்தான் எண்ணிப் பார்த்து, அசதியோடு அமர்ந்திருந்தாள். அதுவரை தன்னுடைய பேசி இல்லையே என வருந்தியவாறே அங்குமிங்கும் திரிந்தவள், ‘நம்மகிட்ட இல்லைனா என்ன?  அந்தத் தேவிக்கிட்டப் போயி கேட்டுப் பாப்போம்.  இவ்ளோ நேரம் அதுகூடத் தோணலையே’ என எண்ணியதோடு,

சமையலறைப் பக்கம் வந்த சுமித்ரா, “போன் வச்சிருக்கியா?” என்று கேட்டாள் தேவியிடம். தேவியோ, “இல்லை அக்கா” என்று முடித்துக் கொண்டாள்.

இடைவிடாமல் சிந்தித்ததில், சுமிக்கு தலை வலித்தது.

தேவியிடமே, “நான் இங்க வந்தப்போ எப்டி வந்தேன்” என்று கேட்டாள்.  அதற்கு அவளோ, வெட்கச் சிரிப்பாய் சிரித்தாளே அன்றி, பதில் கூற மறுத்தாள்.

“எதுக்கு இவ இந்த மாதிரி வெக்கப்படுறா? அப்டி என்ன நடந்திருக்கும்”  என யோசித்தவளுக்கு, எதுவுமே புரியவில்லை.

ஆனால் சுமித்ரா படுக்கையில் விழித்தது முதல், அடுத்து வந்த அவளின் அனைத்து செயல்களையும் ஆசையோடு பார்த்தபடியே தனது பணிகளில் ஈடுபட்டிருந்த ஜேப்பிக்கு, அவளின் கடந்து போன தானறியாத சுமித்ராவின் வாழ்க்கை முறை மீது கோபமும், அதனைக் காட்டிலும், தனது அதிமுக்கிய வேலைகளை முடித்துக் கொண்டு, சுமித்ரா இருக்குமிடம் திரும்ப முனைப்போடும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தான்.

சுமித்ரா தானாகவே தன்னைத் தேடி வராதபோதும், அவளை உத்தேசித்தே, யாருமறியாமல் தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக, தனது குடும்பத்தாற் யாரும் ஏற்றுக்கொள்ளாவிடினும், சுமியுடன் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ எண்ணி, மச்சிலிபட்டினத்தில் அரண்மனை போன்ற வீட்டைத் திட்டமிட்டு உருவாக்கியிருந்தான்.

இது தவிர இன்னும் இரு இடங்களிலும் வீடு கட்டியிருந்தாலும், மச்சிலிபட்டின வீடு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருந்தது.

அவளாக வராவிட்டால் என்ன?  அவளின் காதலை அறிந்திருந்த நிலையில், அப்படியொரு நம்பிக்கை சுமியின் மீது.  தான் வற்புறுத்தி அழைத்தால் தன்னோடு வந்துவிடுவாள் என்று.

ஆனால், நடந்ததென்னவோ அவனது நினைவிற்கு மாறாக.  அதனால் எழுந்த கோபத்தீ இன்னும் அணையாமல்தான் இருந்தது.  அது அணையும்வரை தன்னவளிடம் இருந்து எட்டியிருப்பதுதான் சுமிக்கு நல்லது என தள்ளி நிற்கிறான்.

‘எந்த அந்தஸ்தும் இனி நம்மைப் பிரிக்க முடியாது.  இனி யாருடைய குழந்தையையோ, நீ ஆசையோட வளர்க்க வேண்டிய அவசியமில்லை.  இனி, உனக்கும் எனக்குமான வாழ்க்கையில வேற யாரும், குறுக்க வர விடமாட்டேன்.  நீ, நான், இனி நமக்குன்னு வரப் போகிற குழந்தைகள்.  அவங்க மட்டுமே நம்மளோட எதிர்காலம்னு வாழப் போறோம்’ என்பதாய் ஜேப்பியின் எண்ணம் வலுத்திருந்தது.

தனது அலுவலக கிளைகளில் பணிபுரிவோரின் பேச்சுத் தொணியை அவர்கள் அறியாமலேயே பதிவு செய்து, பாதுகாப்பது அவர்களின் அலுவலக வழக்கம்.

அப்படி, சுமித்ராவின் பேச்சுத் தொணியில் அவளது அலுவலகத்திற்கு பேசி மூலமாக, ‘சார், என் பையனுக்கு உடம்புக்கு முடியலை.  அதனால, அவனை சென்னைக்கு அழைச்சிட்டுப் போறேன். 

அவனுக்கு குணமாகி வரவரை என்னால ஆஃபீஸ் வரமுடியாது.  நான் லீவுக்கு அப்ளை பண்றேன். சாங்சன் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க சார்’ என அதற்கான கணினி அப்ளிகேசன் மூலமாக, வேறு நபரைக் கொண்டு பேசி, விடுப்பிற்கு சுமித்ரா விண்ணப்பிப்பதுபோல தனது டிடெக்டிவ் அலுவலக நபர்களைக் கொண்டு விண்ணப்பித்திருந்தான் ஜேப்பி.

யாருக்கும் சந்தேகம் வந்திருக்கவில்லை.  அத்தனை இயல்பாக ஸ்பீச் ரெககனிசன் வாயிலாக புதியதாக உருவாக்கியிருந்த அப்ளிகேசன் அவர்களுக்கு உதவியிருந்தது.

அதனைக் கொண்டே, ப்ருத்வியை வரவழைத்து அவனையும் ஷ்யாமையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.

கோயம்புத்தூர் வீட்டிற்குச் சென்ற ப்ருத்வியை, தட்சணா வீட்டினர் விசாரிக்க, அவர்களிடம் ஷ்யாமிற்கு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக மேற்கொள்ளவிருக்கும், உயர்சிகிச்சைக்காக சென்னைக்கு சென்றிருக்கும் ஷ்யாமைக் காண, தானும் அங்கே செல்வதாகவும் கூறிவிட்டு சென்னை நோக்கிக் கிளம்பியிருந்தான் ப்ருத்வி.

ஒவ்வொன்றையும் துல்லியமாக தனது டிடெக்டிவ் நிறுவன நபர்களின் வாயிலாகச் செய்தவன், மருத்துவமனைக்கு விரைந்த ப்ருத்வியை சிறு இடர்பாடும் இன்றி, தங்களின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.

சாந்தன், “சார், அந்தக் குட்டிப் பையனை சமாளிக்கறது ரொம்பக் கஷ்டமா இருக்கு” என ஜேப்பியிடம் புகார் கூற,

“ஏன் ரொம்ப அழறானா?”ஜேப்பி அலட்சியமாக வினவினான்.

“இல்லை சார்.  கேள்வி கேட்டே கொல்லுறான் சார்” சாந்தன் பயந்தபடியே கூற,

“சின்னப் பையனோட கேள்வியையே உன்னால சமாளிக்க முடியலன்னா, நீ எப்படி மேன் எல்லாரையும் ஒழுங்கா வேலை வாங்குவ?” எனச் சிரித்தான்.

“சார்.  அவன் பாக்கத்தான் சின்னப் பையனாட்டம் இருக்கான்.  அவன் கேக்குற கேள்வியெல்லாம் பெரியாளு மாதிரி இருக்கு சார்” சாந்தன் கூறியதைக் கேட்ட ஜேப்பி, “தம்மாத்தூண்டு இருக்கறவனையே சமாளிக்க முடியலைன்னா, உன்னையெல்லாம் மேனன் மாதிரி ஆளுங்க ஏமாத்தாம வேற என்ன செய்வாங்க” என்றான் கோபமாக.

“இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணுவோம் சாந்தன்.  ரிப்போர்ட்ஸ் எல்லாம் வரட்டும். உண்மையிலேயே இந்தப் பையனுக்கு இவங்க ரெண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சிக்கணும்.  அப்புறம் அந்த ப்ருத்விய சென்னையில இருந்து பிக்கப் பண்ணி, நான் சொன்ன இடத்துக்கு கொண்டு போன பின்ன, அந்த வாண்டை அவங்கிட்ட ஒப்படைச்சிருவோம்.

பெரிய ஆளுக்கு சில ட்ரீட்மெண்ட் குடுத்து, அவனோட எல்லா பழைய நினைவையும் அகற்றிட்டு, அவனோட அந்தப் பையனையும் எதாவது சைட்ல, வேலைக்கு வச்சிரலாம்” என வழிமுறை கூறியவனை ஆமோதித்தவன்,

‘இவனோட ஆட்டத்துக்கு, இந்தத் தடவை அந்தப் பச்சப் புள்ளையும் பலிகடாவா?’ என மனதிற்குள் கசந்தவாறு தலையாட்டியவன், அவன் கூறியதைக் கேட்டுவிட்டுக் கடந்தான் சாந்தன்.

திசைகள் மாறிப் போனாலும், நினைவுகளில் சங்கமித்திருந்தவர்களை ஒருங்கிணைக்க, இயற்கை ஏதேனும் வழி உய்யுமா?

ஜேப்பி எனும் அதிகாரப் பசியில் உழல்பவனின், ஆதிக்க வெறிக்கு ஆட்பட்டு, இறக்கைகள் வெட்டப்பட்டு, அவர்களின் எதிர்கால வாழ்வை இழப்பார்களா?

***