தோளொன்று தேளானது 8

தோளொன்று தேளானது! 8

       

ஜேப்பி சென்று அரைமணித் தியாலத்திற்குப்பின் ஷ்யாம் குரல் கேட்டு அறையினருகே சென்றவள், சுற்றிலும் பார்வையைச் செலுத்தியவாறு, கதவுத் தாழைத் திறக்க முயன்றாள் சுமித்ரா.

          யாரும் அவளது கண்ணிற்குத் தென்படவில்லை என்பதால், தைரியமாக அறைக் கதவைத் திறந்துகொண்டு அறைக்குள் சென்று, ஷ்யாமோடு மெல்லிய குரலில் பேசி, அவனது பதற்றத்தைத் தணித்தவள், “எதாவது சாப்பிடுறியா?” ஷ்யாமிடம் கேட்டாள் சுமித்ரா.

          “பசிக்கவே இல்லை மீ.  உனக்கு எதாவது எதுத்துத்து வதவா?” தாயிடம் கேட்டான் ஷ்யாம்.

          இருவருமாக ஒருவரது நலனில் மற்றவர் அக்கறையோடு விசாரித்தபடியே இருக்க, அந்த அறைக்குள் நுழைந்த தேவி, “சாப்பாடு இதுல இருக்கு.  உங்க ரெண்டு பேருக்கும் வேணுங்கறதைச் சாப்பிட்டு வைங்க.  கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” எனக் கிளம்பியிருந்தாள்.

          ஷ்யாமிற்கு வற்புறுத்தி உண்ணக் கொடுத்த சுமித்ரா, சற்று நேரம் அவனது கேள்விகளுக்கு இயன்றவரை பதில் கூறினாள்.

          பிறகு, “மீக்கு ரொம்ப டயர்டா இருக்கு.  ரெண்டு பேரும் இந்த பெட்ல படுத்துட்டு பேசுவோம்” என அழைத்துச் சென்று, அந்த அறையில் இருந்த படுக்கையில் தன்னோடு ஷ்யாமையும் படுக்க வைத்தாள்.

          சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவன், பயண அசதியிலும், சுமியைப் பார்த்த நிம்மதியிலும், உண்ட மயக்கத்திலும் அவனை அறியாமலேயே உறங்கத் துவங்கியிருந்தான் ஷ்யாம்.

          பாத்திரங்களை வந்து தேவி எடுத்துச் சென்ற பிறகு, “இப்பல்லாம் நீ வீட்டுக்கே போறதில்லையா?” தேவியிடம் கேட்க,

“உங்களுக்கு முடியாமப் போனதால, இங்கையே அய்யா தங்கச் சொல்லிட்டாங்க” என்றுரைத்தாள் தேவி.

          சற்றுநேரம் சுமியின் கேள்விகளுக்குப் பதிலளித்தவள், “கல்யாண வேலையெல்லாம் நிறைய இருக்கு.  நான் போறேன்” விடைபெற்றுச் சென்றாள் தேவி.

          தேவி சென்றபின், அறைக் கதவைத் தாளிட்டாள் சுமித்ரா.  அன்றைய ஜேப்பியின் நடவடிக்கையிலும், பேச்சிலும் மனம் செல்ல, துயருற்ற மனதோடு படுத்தவாறு யோசித்திருந்தாள் சுமித்ரா.

ஷ்யாம், ஜேப்பியின் குழந்தை என்கிற ஒரே ஒரு காரணத்திற்காகத்தானே, இத்தனை தூரம் குழந்தையை தான் பெற்றதைப்போல பாவித்து அன்போடு கவனிக்கிறாள்.

தான் கண்டதையும், கேட்டதையும்தானே சொல்கிறோம்.  ஆனால் சம்பந்தப்பட்டவன் இல்லையென சாதிக்கிறானே! தான் கண்டதை, அவனறியாததால் ஒரு வேளை மறைக்கிறானோ! இப்படியாக சுமித்ராவின் மனம் சென்றது.

ஜேப்பியின் உக்கிரமான கோபத்தைக் காணும்போது, தான் தவறாகப் புரிந்து கொண்டோமா?  இல்லை, தான் கண்டது கனவோ? ஆனால், பெற்றவள் அப்படித்தானே கூறினாள்! என்றெல்லாம் சுமித்ராவின் மனம் அவளையே கேள்வி கேட்டது.

உண்மையில் தான் நேரில் பார்த்தது எப்படிப் பொய்யானது? தன் கண்ணே தனக்கு பொய்யாகிப் போனது எப்படி? சம்பந்தப்பட்டவளே கூறியது எப்படி பொய்யாகும்? என சிந்தித்தபடியே அந்த நாள்களை நினைவு கூர்ந்தாள் சுமித்ரா.

***

ப்ருத்வி, பூஜா மகதீராவின் மேல் அளப்பரிய காதலோடு இருந்ததை சுமித்ரா நன்கறிந்திருந்தாள்.  ஆனால், வந்த ஒரு சில நாள்களிலேயே, பூஜாவின் தேடல் ஜேப்பி என்பதை அலுவலகத்தில் உள்ள அனைவருமே கண்கூடாகக் காண நேர்ந்திருந்தது. ஒட்டுப்புல் போல எப்போதும் ஜேப்பியோடு இருந்தவளைக் கண்ட சுமித்ராவிற்குமே தனது கூடாத காதலை எண்ணி அலைப்புறுதல் கூடிப்போனது.

தனது காதலை சம்பந்தப்பட்டவனிடம் மறைத்திருந்தாலும், ஏனோ அதுவரை ஜேப்பிக்கும் அதுபோல எண்ணம் இருப்பதாகவே சுமித்ராவின் மனம் நம்பியது.  ஆனால், தானாகச் சென்று காதலைக் கூற, சுமித்ராவிற்கு தயக்கம்.  ஆனால், அந்தத் தயக்கத்தினால் இடையில் வந்தவள், உரிமை கொண்டாடிவிட்டாளோ எனும் நினைப்பே சுமித்ராவிற்கு வேதனையைத் தந்தது.

          ஜேப்பியோடு அட்டைபோல ஒட்டிக்கொண்டு திரிந்தவளைக் கண்டபோது, தனது மனதிற்குள் யாருமறியாமல் வளர்த்த காதல், கானல் நீராகிப் போனதை எண்ணி மருகினாள் சுமித்ரா.

          ஜேப்பி, சுமித்ராவிடம் வழமைபோலவே நடந்து கொண்டான்.  ஆனால், பூஜாவின், “என்னோட டிசைன் பாத்திட்டு, எப்போ ஒப்பீனியன் சொல்லுவ?” எனும் கொஞ்சலோடுடனான, பண்பேற்றத்தினாலான பேச்சைக் கேட்டு, சுமித்ராவின் உள்ளம் கொதித்தாலும், அவளால் ஜேப்பியிடம் பகிரப்படாத காதல், உள்ளத்தோடு கதறிக் களைத்தது.

          பூஜாவின் கண்டு கொள்ளப்படாத காதலில் வெம்பிப் போன ப்ருத்விக்கு, சுமித்ரா தனது காதலை மறைத்துக் கொண்டு, தோழனுக்கு ஆறுதல் கூறினாள்.

          அலுவலகத்தில் அனைவருமே, “வந்த ஒரே மாசத்துலேயே நம்ம ஜேப்பிய இந்த பூஜா வளைச்சிட்டா.  சரியான ஆளாத்தான் இருந்திருக்கா”  பூஜாவைப் பற்றிப் பேசுவதை தோழமைகள் இருவரும் கேட்டாலும், அதற்கு எந்தப் பதிலையும் கூறாமல்,

தங்களுக்குள், ‘ரெண்டு பேருக்குமிடையில சாதாரணப் பேச்சாக்கூட இருக்கலாம்.  எதுக்கு அப்டி நாம தப்பா நினைக்கணும்.’ ஆறுதல் கூறி தேற்றியவாறு கடந்தனர். தங்களுக்குத் தானே கூறிக்கொள்ளும் சப்பைக்கட்டுதான் அது என்று இருவருக்குமே புரிந்தாலும், வேறு வழியின்றி தவித்தனர்.

          பங்களூர் கிளைக்கு சில மாதங்களிலேயே ஜேப்பியால், ப்ருத்வி இடமாற்றம் செய்யப்பட்டிருந்தான். வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்காமல், “உன்னைவிட திறமையான ஆளு இங்க இப்ப யாரும் இல்லை ப்ருத்வி.  அதனால நீ நம்ம பங்களூர் பிரான்ஞ்ல சார்ஜ் எடுத்துக்கோ.  உன்னைவிட்டா வேற யாரையும் நம்பி, அந்த வேலையக் குடுக்க முடியாது” என்றுகூறி ப்ருத்வியை அனுப்பி வைத்திருந்தான் ஜேப்பி.

          ப்ருத்வி சென்றது முதல் தனியாளாக மிகவும் சிரமப்பட்டாள் சுமித்ரா.  தனது தோழனின் இடமாற்றம், இன்னும் அதிக மன அழுத்தத்தைத் தந்திருக்க, அதிகமான தனிமையை நாடினாள் சுமித்ரா.

          மேலும், பூஜாவிடம் தனது காதலைத் தெரிவிக்க சிரமம் எடுத்துக் கொண்டவனுக்கு, அவளின் கண்டுகொள்ளாத தன்மையோடு, ஜேப்பியோடு பூஜாவின் அதிக நெருக்கத்தைக் கண்டு, ப்ருத்வியே நாளடைவில் ஒதுங்கத் துவங்கியிருந்தான்.

          அதனால் பங்களூருக்கு மாற்றலானது, சிறிய மனமாற்றத்தை ப்ருத்விக்குத் தந்திருந்தது. அதேநேரம், யாருக்காக இந்நிறுவனத்தைத் தான் தேர்ந்தெடுத்தோமோ, அது கைகூடவில்லை எனும்போது, வெளிநாடு செல்ல தீர்மானித்திருந்தான் ப்ருத்வி.

          அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தவன், சரியான தருணம் வரும்போது, ஜேஜே பில்டர்ஸிலிருந்து விலகிக் கொள்ள எண்ணி அதற்கான முயற்சியில் முனைப்போடு செயல்பட்டான்.

ப்ருத்வியோடுடனான சுமித்ராவின் உறவு காதலில்லை என்பது ஜேப்பிக்குப் புரிந்தாலும், அவனோடு சுமி சாதாரணமாகப் பேசுவதையும், ப்ருத்வியிடம் எத்தனை மறைமுகமாகக் கூறியும் சுமியோடுடனான நெருக்கத்தை அவன் குறைத்துக் கொள்ளாதைதையும் கண்டு சினந்து போனதோடு, அவனை முழுவதுமாக சுமியிடமிருந்து விலக்க எண்ணியே பங்களூர் கிளைக்கு ஜேப்பி மாற்றியதை, சுமியோ, ப்ருத்வியோ இருவரும் அறிந்திருக்கவில்லை.

சென்ற சில மாதத்திலேயே ப்ருத்வி விபத்தில் இறந்ததாக அறிந்த சுமித்ரா, லாரியின் டீசல் டேங்கரில் மோதி தீப்பிடித்து கருகிய நிலையில் காணப்பெற்ற தோழனைக் கண்டு கதறி அழுதாள்.  தோழனின் இழப்பால், மேலும் மனமுடைந்து போயிருந்தாள் சுமித்ரா.  ஒற்றை உற்ற தோழனின் மறைவு ஒரு புறம், ஒரு தலைக் காதலில் உண்டான வேதனை மறுபுறம் என திண்டாடிய தருணமது.

இதையெதையும் அறியாத ஜேப்பி, சுமித்ரா ப்ருத்வியின் பிரிவிற்காகவும், அதன்பின் அவனது மறைவிற்காகவும் இத்தனை வாட்டத்தோடு வலம் வருவதாக எண்ணிக் கொண்டிருந்தான்.

சில மாதங்களாகவே சுமித்ராவின் அதிகப்படியான ஒதுக்கத்தைக் கண்டு கொண்ட ஜேப்பி, ப்ருத்வியின் மறைவுக்குப்பின் அவளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு பங்களூர் கிளைக்கு முக்கிய பணியின் காரணமாகச் செல்ல இருப்பதாக சுமித்ராவிடம் அழைத்துக் கூறியிருந்தான்.

பணியைக் காரணம் காட்டியதும், மறுக்க இயலாமல் சுமித்ராவும் உடன் செல்வதற்குச் சம்மதித்திருந்தாள்.  அதே சமயம், பயணம் துவங்கியபோது பூஜாவும் தங்களுடன் இணைந்து கொண்டதைக் கண்ட சுமித்ரா, ஜேப்பியிடம் தனிமையில், “பூஜா வரும்போது, நானும் அங்க எதுக்கு ஜேப்பி.  இங்க வர வர்க்கை நான் பாத்துக்கறேன்.  நீ வேணா, பூஜாவைக் கூட்டிட்டுப் போ” என்றதும்,

“இங்க நான் சொல்றதைக் கேக்கத்தான் உனக்குச் சம்பளம் தரேன் சுமித்ரா.  உன்னோட சஜஜனை இங்க யாரும் கேக்கலை” என முகத்திலடித்தாற்போல கூறியிருந்தான் ஜேப்பி.

அதற்குமேல் மறுக்க இயலாமல் சுமித்ராவும், அவர்களுடன் பங்களூர் நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்தாள்.

***

          புயல் வேகத்தில் பங்களூரில் பணி நடந்து கொண்டிருந்தது.  அலுவலகத்திற்கான கட்டிடப் பணி சென்று கொண்டிருந்தமையால், வெளியில் அறையெடுத்துத் தங்கியிருந்தனர்.

          மூன்றாவது தளத்தில், இரண்டு அறைகள் தங்கள் தேவைக்காக புக் செய்திருந்த ஜேப்பி, “நீங்க ரெண்டு பேரும் ஒரு ரூம் ஷேர் பண்ணிக்கங்க,  நான் ஒரு ரூம் எடுத்துக்கறேன்” என்றதும்,

          “சாரி.  எனக்கு பிரைவஸி வேணும்.  அதனால, எனக்கு தனி ரூம் தந்திரு.  வேணா, நானே பே பண்ணிக்கறேன்” பூஜா கூறியதும்,

எதுவும் பதில் கூறாமல் ஜேப்பியைப் பார்த்தவாறு நின்றிருந்த சுமித்ராவைக் கண்ணுற்றவன், “நீன்னா இந்த ரூம் எடுத்துக்கோ சுமித்ரா” தனது அறையை சுமித்ராவிற்கு ஒதுக்கியவன், 

“நான் வேற எதாவது ரூம் கிடைக்குதான்னு பாக்கறேன்” என்றவாறு, அதனைக் காண கீழே சென்றான் ஜேப்பி.

அவனோடு உடன் சென்ற பூஜா, “சுமித்ராவுக்கு வேற எதாவது நல்ல ரூம் போட்டுக் குடுத்துக்கலாம்.  எனக்கு எதாவது டவுட்னா, அங்கயும், இங்கயும் அலைய முடியாது.  அதனால, நீ இந்த ரூமையே எடுத்துக்க.  அந்த நியூ ரூமை சுமித்ராவுக்கு கொடுத்திரலாம்” என்றவளின் பேச்சே, ஜேப்பியிடம் இறுதியாக வென்றிருந்தது.

ஜேப்பி தனக்குக் குடுத்த அறையில் சென்று தன்னை ரெஃரெஷ் செய்து கொண்டவளிடம் வந்த பூஜா, “உனக்கு ஃபோர்த் ஃப்ளோர்ல ரூம் அரேஞ் பண்ணியிருக்கு சுமி” என்றதும், இருவருக்கிடையே தர்க்கம் எதுவும் செய்ய விரும்பாது, பூஜாவின் விருப்பத்திற்கு இணங்கி, அந்த அறைக்குச் செல்ல சம்மதித்திருந்தாள் சுமி.

அப்படிக் கிடைத்த, நான்காவது தளத்தில் தனி நபர் தங்கியிருக்கக் கூடிய வகையிலான அறையில் சுமித்ரா தங்கிக் கொண்டிருந்தாள்.  அப்போதும் ஜேப்பிக்கும், பூஜாவிற்குமான உறவை நட்பாகவே கருத முனைந்தாள் சுமித்ரா. 

பணிகள் அதன்போக்கில் சென்று கொண்டிருக்க, அன்று மாலையில் ஓரளவு பணிகளை முடித்துக்கொண்டு அவரவர் அறைக்குத் திரும்பியிருந்தனர்.

மறுநாள் சென்னை திரும்புவதாக திட்டமிட்டிருக்க, சுமித்ரா அவளின் ஆடைகள் அனைத்தையும் தனது டிராவல் ட்ராலியில் எடுத்து வைத்துவிட்டு, இரவு உணவிற்காக லிஃடை நாடாமல் படியில் இறங்க எண்ணிக் கிளம்பியபோது, கீழ் தளத்தில் உள்ள ஜேப்பியின் அறைக்கதவு திறப்பதைக் கண்டு எதேச்சையாக திரும்பிப் பார்த்தாள்.

ஜேப்பி, அவனது அறையிலிருந்து வெளிவந்தவன், கலைந்த தலையோடு, நேர்த்தியற்ற உடையை சரி செய்தபடியே சுற்றுமுற்றும் பார்த்தபடியே லிப்ஃடை நோக்கிச் செல்ல, அதேநேரம் மேலிருந்தவண்ணம் அவனைக் கண்ட சுமித்ரா, ‘இத்தனை பதட்டமா ரூமைக்கூட க்ளோஸ் பண்ணாம அப்டி எங்க போறான்’ என எண்ணியவாறு, அங்கு நின்றபடியே ஜேப்பியின் அறையையே பார்த்தபடி இறங்க முனைந்தாள்.  ஆனால் சுமித்ரா நின்றிருந்ததை ஜேப்பி கவனிக்கவில்லை.

திறந்திருந்த ஜேப்பியின் அறைக் கதவு மேலும் திறக்க, பதறிப்போன சுமித்ரா அப்படியே அதிர்ந்து நின்றவாறு பார்த்தாள்.  திறந்தபடியே வெளியே எட்டிப் பார்த்த பூஜாவை, ஜேப்பியின் அறையில் பார்த்ததும் மயக்கம் வரும்போல இருந்தது சுமித்ராவிற்கு. படபடவென மனம் உணர, பதற்றம் சூழ்ந்திட, அதற்குமேல் நிற்க முடியாத நிலையிலும், நெஞ்சைப் பிடித்தவாறு நடப்பதைக் கவனித்தாள் சுமித்ரா.

‘இவளுக்குத்தான் தனி ரூம் இருக்கே.  ஜேப்பி ரூம்ல என்ன பண்றா?’ என எண்ணிக் கொண்டு பார்த்த சுமிக்கு, அவளின் நிலையே அந்த அறைக்குள் நடந்ததை உணரச் செய்திருந்தது.

அறையில் உள்ள பிளாங்கெட்டை உடலைச் சுற்றியபடி, ஜேப்பி சென்ற திசையை எட்டிப் பார்த்துச் சிரித்துவிட்டு, உள்ளே சென்ற பூஜா, கதவைச் உள்புறமாகத் தாழிட, அதன் சத்தம் கேட்டதும் நடப்பிற்கு வந்தாள் சுமித்ரா.

அதற்குமேல், இரவு உணவிற்கு கீழே இறங்காமல், தனது அறையிலேயே சென்று படுத்துவிட்டாள் சுமித்ரா.

இருவருக்கிடையே இந்தளவிற்கான உறவு இருந்திருக்கும் என்பதை கற்பனையில்கூட நினைத்திராதவளுக்கு, அத்தனை ஏமாற்றம்.  சுமித்ராவால் அன்று அதைத் தாங்கிக் கொள்ளவே இயலாமல், அறைக்குள் அடைந்திருந்தாள்.

ஆனால், அன்று அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து அழைத்த ஜேப்பி, “சுமி! சாப்பிட்டியா?  கீழ உன்னைப் பாக்கவே இல்லையே!” என்று சாதாரணமாகக் கேட்டபோது, “ம்ஹ்ம்” என்று மட்டுமே அவனிடம் அவளால் பதில் கூற முடிந்தது.

அதற்குமேல் ஜேப்பியிடம் பேசினால், தன்னையறியாமல் அழுதுவிடுவோமோ அல்லது கண்டதைப்பற்றி ஏதேனும் பேசிவிடக்கூடுமோ என்று உடனே அழைப்பை இவளாகவே துண்டித்திருந்தாள் சுமித்ரா.

அதனை இன்று நினைத்தாலும் அவளுக்கு அத்தனை துயரம் நெஞ்சை அழுத்தியது.

அடுத்து வந்த ஆறாவது மாதத்தில், வேலையை விட்டு நின்றிருந்தாள் பூஜா.  ஆனால் ஏன் என்று காரணம் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.  ஏனெனில், அவள் அலுவலகத்தில் உள்ள யாருடனும் அத்தனை நெருக்கமில்லை.  ஆகையினால், அவளைப் பற்றி அங்கு பணிபுரியக்கூடிய யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

அதன்பின் எதேச்சையாக பூஜாவைச் சந்திக்க நேர்ந்தபோது, நிறைமாத கர்ப்பிணியாக, அவளுக்கு வேண்டிய உடைகளை பிரபல மாலில் தேர்வு செய்து கொண்டிருந்தபோதுதான் சுமித்ரா பார்த்தாள்.

சுமித்ரா பூஜாவோடு பேசத் தயங்க, பூஜாவாகவே சுமித்ராவிடம், “எப்டி இருக்க சுமித்ரா?  அங்க ஜேஜேல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?” என்றதும்தான் சுமி அவளிடம் பேசத் துவங்கினாள்.

அப்போதும் பூஜா பேசியதும் அடுத்து இயல்பாக பேச முடியாமல் நின்றிருந்த சுமி எதாவது பேச வேண்டுமே என யோசித்து, “மேரேஜ்கு எங்ககிட்ட யாருகிட்டயும் சொல்லலையே பூஜா” பூஜாவின் நிறைமாத கர்ப்பினி போன்ற நிலை கண்டு கேட்டாள்.

          அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவள், “அப்டிலாம் ஒன்னு  பண்ணியிருந்தா உங்கட்டல்லாம் சொல்லாமலா!” சிரித்த பூஜாவை, அதிர்ச்சியாகப் பார்ப்பது சுமித்ராவின் முறையாகி இருந்தது.

          “கேர்லெஸ்னால வந்த கேரியிங்!” மீண்டும் சிரித்தவளிடம், “உங்க வீட்ல தெரிஞ்சா…” என சுமி இழுக்க,

“டெலிவரி வரை சென்னையிலதான் இருப்பேன்” பூஜா எந்த தயக்கமோ, வருத்தமோ இன்றிப் பேசினாள்.

          “அப்ப பேபி பிறந்ததும் தெரிஞ்சிரும்ல!” அம்மாஞ்சியாக சுமித்ரா வினவ, “பொண்ணு பிறந்தா தூக்கிட்டுப் போயிருவேன்.  பையன்னா எதாவது ஆர்பனேஜ்ல விட்டுருவேன்” என்று கூறிய பூஜாவை அதிர்ந்து பார்த்தாள் சுமி.

          “உல்டாவா சொல்ற பூஜா!” சுமித்ரா வினவ, “அப்டித்தான்!” என்றவள், “இன்னொரு நல்ல சந்தர்ப்பத்துல பாக்கலாம்” என விடைபெற எண்ண, “உனக்கு வேணான்னா, குழந்தைய ஆர்பனேஜ்ல விடாத!  எங்கிட்டக் குடுத்திறியா?” சுமித்ரா கெஞ்சலாகக் கேட்க,

“இந்தக் குழந்தை எதுக்கு உனக்கு.  நீ கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாகி பெத்துக்க வேண்டியதுதான?” சுமித்ராவிடம் கேட்டுச் சிரித்தாள் பூஜா.

          மலுப்பலாகச் சிரித்தவளுக்குள் தான் பார்த்த காட்சி மனதில் ஓட, ஆனாலும் தெரிந்து கொள்ள வேண்டி, “இது யாரு பேபினு தெரிஞ்சிக்கலாமா?” சுமி பூஜாவிடம் வினவ,

          “உங்கிட்ட சொல்றதுக்கென்ன,  ஜெய்யோடதுதான்!” தயக்கமின்றிப் பதிலளித்தாள் பூஜா.

          “இது ஜெய்கு தெரியுமா?” சுமி வினவ,

          “இல்லை” என்ற பூஜா, “தெரிஞ்சாலும், நோ யூஸ்” என்றாள் தோள் குலுக்கி.

சுமிக்கு மிகவும் வருத்தமாகிப் போனது.  அதற்குமேல் பூஜாவிடம் அவளின் தொடர்பு எண்ணை வாங்கிக் கொண்டு மனபாரத்தோடு அகன்றிருந்தாள் சுமித்ரா.

          அப்படித் தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தனக்குக் கிடைத்த குழந்தைதான் இந்த ஷ்யாம்.  அதனால்தான், குழந்தைக்கு ஷ்யாமள பிரகாஷ் எனும் பெயரைத் தேர்வு செய்து சூட்டியிருந்தாள் சுமித்ரா.

          ஆனால் ஜேப்பி இல்லை என்கிறானே!  விசயம் அவனுக்குத் தெரியாததால் அப்படிக் கூறுகிறானோ? என்று தோன்றிட, அப்படித்தான் இருக்க வாய்ப்புள்ளது என்பதைத் தீர்மானமாக்கிக் கொண்டு, இன்னும் பல நினைவுகளோடு, மனம் கனக்க சுணக்கமாகப் படுத்திருந்தாள் சுமி.

          நடப்பிற்கு வந்திருந்தாள் சுமி.

          அறைக்கு வெளியே பகல்போல அனைவரும் பணி செய்து கொண்டிருந்தது அங்கிருந்து எழுந்த சத்தம் மூலம் கேட்க, இத்திருமணத்தை தவிர்க்க எண்ணி, ஜேப்பியிடம் தான் கூறிய புனைவான நிகழ்விற்கு, அவனளித்த பதிலை நினைத்து சுமித்ராவின் மனம் சோர்ந்தது.

          ‘இன்னும் நீ வர்ஜின்னு எங்கிட்ட சர்ட்டிபிகேட்டே இருக்கு சுமி.  தேவையில்லாம எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு.  இல்லை, அந்த ப்ருத்விக்கு காயடிச்சு ஒன்னும் செய்ய முடியலையா!’ சிரித்தபடியே கேட்டவன்,

“எதுனாலும் இனி நானே மேனேஜ் பண்ணிக்கிறேன்.  நீ வொர்ரி ஆகாத!” என்றவனை தற்போது எண்ணிப் பார்த்தவளுக்கு, ‘இப்படிப்பட்டவனைத்தான் உருகி உருகி காதலிச்சேனா’ என அவளையே வெறுத்தது மனம்.

          காலை நான்கு மணிக்கு வந்து அறைக்கதவைத் தட்ட, விழித்திருந்தாலும், எழுந்து சென்று திறக்காமல், அசையாமல் அப்படியே படுத்திருந்தாள் சுமித்ரா.

          ஜேப்பியின், “சுமீ…  ஒழுங்கா வந்து கதவைத் திற” எனும் குரல் கேட்டும் எழாது இருந்தாள் சுமி.

***