தோளொன்று தேளானது 9
தோளொன்று தேளானது 9
தோளொன்று தேளானது! 9
நீண்ட நேரம் வாயிலில் நின்று தட்டியும், கதவு திறக்காமல் இருந்ததைக் கண்ட ஜேப்பி, இது சுமித்ராவின் பிடிவாதத்தோடு கூடிய மறுப்பு என்பதை தெளிவாக புரிந்து கொண்டான்.
சுமித்ராவிற்கு, இன்னும் பழைய நினைவுகளின் பின்னேதான் மனம் ஓடியது.
ஜேப்பி, கார்த்தி இருவரில், கார்த்தி சுமித்ராவின் பார்வையில் மிகவும் நல்லவன். பண்போடும், பொறுப்போடும் நடப்பதாகவே அவளின் ஆழ்மனதில் பதிந்து போயிருந்தான் கார்த்தி. அதற்கும் காரணம் இருந்ததை சுமித்ரா அறிந்து கொள்ளவே இல்லை.
ஆனால், ஜேப்பியின் பெண்களுடனான நட்பு, பேச்சு, கலகலப்பு, அதற்குமேலும் யாரையேனும் தன்னோடு அழைத்துக் கொண்டு திரிவது என அவனை ஓரளவிற்கு சுமித்ரா அறிந்திருந்தாலும், புத்தி விலகச் சொல்லி அவளை வழிநடத்தினாலும், மனம் அவனது பின்னே போய், நாளடைவில் காதலில் விழச் செய்திருந்தது.
என்று தனது சந்தேகத்திற்கு சில காட்சிகள் வழியே தீனி கிட்டியதோ, அன்றே சமாதானப்படுத்தி தனிமையில் வாழ தன்னைப் பழக்க முனைந்திருந்தாள் சுமித்ரா.
தனக்கானவன், தன்னைப்போல தன்னை மட்டுமே கவனத்தில் கொண்டு, தனக்காகவே ஊன், உயிர் அனைத்தையும் ஒப்புவிப்பவனாக இருக்க வேண்டும் என்கிற அவளின் ஆசையில், ஜேப்பியின் நடவடிக்கையின் வாயிலாக என்று இடிவிழுந்ததோ, அன்றே தீர்மானித்துவிட்டாள்.
‘தனக்கு இப்படிப்பட்டவன் வாழ்க்கைத் துணையாக வேண்டாம்’ என்று.
மேலும், ஜேப்பிதான் பூஜா கூறிய ஜெய் என்பதற்காக மட்டும் ஷ்யாமை தனது பொறுப்பாக்கிக் கொள்ள அப்போது அவள் நினைத்திருக்கவில்லை.
பெற்றோர் இல்லாமல் அனாதரவாக வளர்ந்த நிலை அவளறிந்ததுதானே. அப்படி ஒரு கஷ்டம் வேறு எந்த உயிருக்கும் வர வேண்டாம் என்கிற நிலையில்தான், ஷ்யாமை தனது பொறுப்பாக்கிக் கொண்டிருந்தாள் சுமி.
கூடுதல் செய்தியாக பூஜா கூறியதும் நினைவில் இருந்தமையால், தன் காதலன் ஜேப்பியின் நினைவுச் சின்னமாக குழந்தையை வளர்ப்பதில் மேலும் ஆத்மார்த்தமாக உணர்ந்திருந்தாள்.
‘அவங்கப்பாவைப்போல இல்லாம, இவனை நல்ல ஆண்மகனா, ஒழுக்க பழக்கத்தில் சிறந்தவனா, சமூகத்தில நல்லவன்னு பெயர் வாங்கற மாதிரி வளர்க்கணும்’ என்பது மட்டுமே, அப்போதைய முடிவாக இருந்தது சுமிக்கு.
காதல் கைகூடாதபோதும், ஜேப்பியின் உயிர்துளியில் உதித்தவனை, அவனது நினைவோடு தன் மகனாக வளர்ப்பதே சுகமாக இருந்ததையும் ஷ்யாம் வளர்ந்தபோது உணர்ந்தாள் சுமி.
ஆனால், ஜேப்பி தற்போது ஷ்யாமை ஏற்க மறுப்பதையும், அவன் ஷ்யாமை சிறுகுழந்தையென்றும் நினையாது, தன்னிடமிருந்து தள்ளி நிறுத்த எண்ணுவதையும் பார்த்தால், சுமித்ராவால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடினாள்.
ஜேப்பியின் குழந்தையாக இருந்தாலும் சரி, அவனது குழந்தையாக ஷ்யாம் இல்லாவிட்டாலும் சரி, இனி ஷ்யாமை எந்த நிலையிலும் தன்னால் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க இயலாது எனும் திடத்தோடும், மனத்தோடும் இருந்தாள் சுமி.
நீண்ட நேரம் வெளியில் நின்றவாறே சுமியை அழைத்த ஜேப்பி, அதன்பின் அங்கு நின்று கெஞ்சுவதை விடுத்தவன், அவனாகவே மூடியிருந்த கதவை நான்கு முறை ஓடி வந்து நேர்த்தியாக மோதிட, ‘ப்ளக்’ எனும் சத்தத்தோடு அது திறந்து கொண்டது.
ஜேப்பியின் அழைப்பு, அதன்பின் அவன் கதவில் வந்து மோதியது அனைத்தையும் சுமி கேட்டாலும், அதனைப் பொருட்படுத்தாது அமைதியாக தனது எண்ணவோட்டத்தில் எழுந்த நினைவுகளோடு படுக்கையில் கிடந்தாள் சுமித்ரா.
இடையில் ஜேப்பி வந்து கதவில் மோதியதால் உண்டான அதீத சத்தத்தில் உறக்கத்தில் விழித்த ஷ்யாமை, காதுகளில் சத்தம் விழாத வண்ணம் தனது கைகளைக் கொண்டு பொத்திய, தன்னோடு அணைத்தபடியே தட்டிக் குடுத்தவாறு படுத்திருந்தாள் சுமித்ரா.
ஜேப்பியின் மனம் முழுவதும், சுமித்ராவின் ஒட்டாத செயலால் உண்டான சினம் இருந்தாலும், கதவைத் தன் முயற்சியால் திறந்தபின், சத்தமெழுப்பாது சுமித்ராவின் அருகே வந்தான்.
ஷ்யாமைத் தன்னோடு அணைத்தவாறு படுத்திருந்தவளை, வாகாக அவனிடமிருந்து விலக்கி, படுக்கையில் விழித்த நிலையில் எந்த எதிர்ப்பையும் காட்டாமால் படுத்திருந்த சுமித்ராவை குழந்தையைப்போல தனது கைகளில் தூக்கிக் கொண்டிருந்தான் ஜேப்பி.
மறுக்கவோ, தனது எதிர்ப்பைக் காட்டவோ மனதோடு, உடலிலும் திராணியின்றி இருந்த சுமித்ரா, ஜேப்பி தூக்கிக் கொண்டபோதும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.
“ம்ஹ்ம்” என பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன், “காலையிலேயே ரொம்ப டென்சன் பண்றடீ!” என்ற ஜேப்பி, கீழ்தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவனை அழைத்து, “இந்த ரூம் டோரை மாத்திரு” சாதாரணமாகக் கூறிவிட்டு அங்கிருந்து நடந்தான்.
ஷ்யாம் சுமியின் அரவணைப்பில் அதுவரை இருந்து, அவளின் விலகலை உணர்ந்து, “மீ” என உறக்கத்தில் கண்ணைத் திறவாமலேயே கைகளைக் கொண்டு துளாவி அருகே தாயைத் தேடிவிட்டு, அவளில்லை என்பதை உணர்ந்தவன், அலுவலகத்தில் சுமி தங்கிக் கொள்ளும் நாள்களின் நினைவில், மீண்டும் பழையபடி உறக்கத்தினைத் தொடர்ந்திருந்தான் ஷ்யாம்.
அவளின் அறை நோக்கி சுமித்ராவைப் பஞ்சுப் பொதிபோல இலகுவாகத் தூக்கிக் கொண்டு சென்றவனை கண்ட பணியாளர்கள், ஜேப்பியைக் கண்டும் காணாமல் உதட்டில் தோன்றிய புன்னகையை உள்ளத்திற்குக் கடத்திவிட்டு, அவர்களின் பணியினைத் தொடர்ந்திருந்தனர்.
அறைக்குள் சென்றவன், “என்னதான்டீ உனக்குப் பிரச்சனை!” படுக்கையில் அவளை விட்டபடியே வினவ, மௌனத்தை மட்டுமே பதிலாக்கிவிட்டு, நடந்த எதுவும் தன்னைப் பாதிக்காததுபோல இருந்தாள் சுமித்ரா.
“கெஞ்சறது யாருக்காகவும் வயிட் பண்றது எதுவும் எனக்குப் புடிக்காதுனு தெரியும்ல சுமி. ஆனா இதெல்லாம் உங்கிட்ட மட்டும் நான் ஏன் செய்யிறேன்னு எனக்கே இன்னும் என்னைப் புரியலை” நிறுத்தி, சுமியின் முகம் பார்த்து நிதானிதான்.
சுமியின் அமைதியில் ஒருவேளை அவளின் உடல்நலக்குறைபாடு அவ்வாறு இருக்கச் செய்ததோ என எண்ணி, “ஹெல்த் இப்போ நல்லாயிருக்குல்ல!” கேட்டவாறு சுமியிடம் குனிய, “எவ்ளோ பேசுவ முன்னல்லாம்? இப்ப ஏன்டி பேச மாட்டிங்கற!” என்றவனது கேள்விக்கு பதில் கூறாமல் அப்படியே படுத்திருந்தாள்.
“நீ ரொம்ப சோதிச்சா, உனக்குத்தான் வேதனை பாத்துக்கோ!” என்றவன் படுக்கையில் இருந்தவாறு, தனது பேச்சைக் கேட்டதுபோலக் காட்டிக் கொள்ளாமல், சலனமே இன்றி இருந்த சுமியின் வாடிய வதனத்தைக் கண்டு,
“புடிச்சாலும், புடிக்கலைனாலும் இனி என்னை ஏத்துக்கிட்டு வாழப் பழகிக்கோ சுமி. உனக்காக, உன் ஒருத்திக்காக எங்க வீட்ல இருக்கற பழக்கத்தை எல்லாம் முதல் முதலா மாத்தியிருக்கேன்.
இன்னும் நம்மைப் பத்திப் பேச, யோசிக்கனு நேரமும், காலமும் இருக்கு. மொதல்ல இந்தக் கல்யாணத்தை முடிச்சிட்டு, நிதானமா மத்ததைப் பேசலாம்” என்றான்.
அப்போதும் அமைதியாக இருந்தாள் சுமித்ரா.
“என்னடா, யாருமில்லாமக் கல்யாணமான்னு யோசிக்கிறியா!” அவனாகவே கேள்வியைக் கேட்டவன், “அந்தஸ்துனு சொல்லியே நம்மை வாழ விடாமாட்டாங்கங்கற ஒரே காரணத்துக்காக, யாருக்குமே தெரியாம இப்படியொரு முடிவை உனக்காக துணிஞ்சு எடுத்திருக்கேன்.” என்றான்.
அப்போதும் சலனமின்றி இருந்தவளிடம், மேலும் என்ன பேசுவது என்று புரியாமல் நேரடியாக விசயத்தைக் கூற முனைந்தான்.
“இன்னும் சரியா ஒன் அவர்ல கிளம்பி ரெடியா இரு. உனக்கு கல்யாணத்துக்கு வேணுங்கற ட்ரெஸ், ஆர்னமெண்ட்ஸ் எல்லாமே தேவி கொண்டு வந்து தருவா. மேக்கப்கு பார்லர்ல இருந்து வந்தவங்களையும் கூட்டிட்டு வருவா. கோவாப்ரேட் பண்ணு” என்றிட, அப்போதும் சுமித்ரா மௌனத்தோடு இருக்கவே,
“இல்லை நானே உன்னை குளிக்க வச்சி, ட்ரெஸ் எல்லாம் பண்ணி, அலங்காரம் பண்ணணும்னாலும் எனக்கு ஓகேதான்” என்று சிரித்தவாறு, சுமியின் அருகே வந்தவன், “அதுனாலதான் எம்மேல கோவத்துல பேசாம இருக்கியா?” சுமியின் தோள்பற்றி வினவ,
இல்லை என தலையை மறுத்து அசைத்தவள், “நானே எல்லாம் பாத்துக்கறேன் ஜேப்பி” எனும் சுமியின் ஒற்றை வார்த்தையில், ஜீவன் பெற்றவனாக, அவளின் சிகையை வருடிவிட்டவன் விறுவிறுவென அவனது வேலையைப் பார்க்க இன்முகமாகச் சென்றுவிட்டான் ஜேப்பி.
அவன் சென்ற பதினைந்தாவது நிமிடத்தில், தேவி இரண்டு பெண்களோடு உள்ளே நுழைய, அப்போதும் ஜேப்பி விட்டுச் சென்றபடியே கிடந்தாள் சுமித்ரா.
தேவி, “இன்னும் குளிச்சு ரெடியாகலையா?” கேட்டதையும் கண்டு கொள்ளாமல் படுத்திருந்தவளை அணுகி, நெற்றி, கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள் தேவி.
“நேத்து மாதிரி உடம்பு சூடா இல்லையே. இப்போ சரியாகிருச்சு. ஹீட்டர் போட்டுருக்கு. அதனால வெந்நீர்ல குளிச்சிட்டு வாங்கக்கா” என்று சுமித்ராவிடம் தேவி கூற, அப்போதும் எழாமல் அப்படியே இருந்தவளிடம்,
“அக்கா, இன்னும் கொஞ்ச நேரத்தில உங்களை அழைச்சிட்டு வரச் சொல்லுவாங்க. இப்படியே இருந்தா அய்யாவுக்கு கோவந்தான் வரும். அப்புறம் எங்களையும் சத்தம் போடுவாரு” என்றவளைப் பார்த்து,
“நீங்க எல்லாம் வெளியே போங்க. நானே என்னால முடிஞ்சவரை என்ன செய்ய முடியுமோ செய்துக்கறேன்” என சுமி விளம்ப,
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, நின்றவர்களிடம் மீண்டும் தனது எண்ணத்தை சுமித்ரா பகிர, வந்திருந்தவர்களிடம் தேவி தனக்குப் புரிந்ததைக் கூறி, சமாதானம் செய்தவாறு அவர்களை அழைத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள்.
அரைகுறைக் குளியலோடு வெளி வந்தவள், பல இலட்சம் மதிப்புள்ள, தங்க, வெள்ளி சரிகையில் நெய்த பட்டுப் புடவை, அதில் பதிக்கப்பட்ட நவரத்தினங்கள் ஜொலித்ததை கவனத்தில் கொள்ளாமலேயே எடுத்து உடுத்தினாள். அதன்பின், தலையை சாதாரணமாகப் பின்னலிட்டாள் சுமித்ரா.
சற்று நேரத்தில் வெண்மைநிற பட்டு வேஷ்டியில் அங்கு வந்தவன், மிகவும் சாதாரணமாகக் காணப்பட்டவளைக் கண்டு, “பின்னாடி நீ வருத்தப்பட்டுறக் கூடாதேங்கிறதுக்காகத்தான், இத்தனை ஏற்பாடும் பண்ணேன். ஆனா, எல்லாத்தையும் வீம்பா மறுத்துட்டு வர்றவளை நான் ஒன்னுமே செய்ய முடியாது” கூறியபடியே சுமித்ராவின் அருகே வந்தவன்,
“சிம்பிளா இருந்தாலும், எனக்கு நீ பேரழகியாத்தான் திரியற!” என பின்னோடு அவளை அணைத்துக் கொண்டான். எத்தனையோ முறை அவளின் தேகம் தேடிய ஜேப்பியின் தேறுதலான அணைப்பு. ஆனால் இன்று ரசிக்கவில்லை அவளுக்கு. உடல் இளகாமல், விரைத்து தனது மனதின் வெறுப்பை உடல்மொழியில் காட்டினாள் சுமி.
அதை ஜேப்பி உணர்ந்தாலும், சிறிது நேரம் சுமியை அணைத்தபடியே நின்றவன், “இது கனவு மாதிரியிருக்கு எனக்கு. ஆனா உண்மைன்னு என்னை நம்ப வைக்கத்தான் இந்த ஹக்” என்றான்.
அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் தெரிந்தவளைக் கண்டபடியே, “ஸ்மைல் பண்ணா இன்னும் அழகா இருப்ப சுமீ. கொஞ்சம் சிரிக்க ட்ரை பண்ணு. இப்டியே இருந்தா, போட்டோஸ் எல்லாம் பின்னாடி பாக்கும்போது சகிக்காது” என்றவன், சுமியைத் தன்புறமாகத் திருப்பிவிட்டு, “கொஞ்ச ஆர்னமெண்ட்ஸ் போட்டுக்க” என்றான்.
அவனது பேச்சிற்கு பதில் பேசாமல் இருந்தவளைக் கண்டவனுக்கு வருத்தம் இருந்தாலும், அதற்காக அதனையே எண்ணிக் கொண்டு இருக்காமல், அடுத்து நடக்க இருக்கும் தங்களின் திருமண நிகழ்விற்கான ஆயத்தங்களில் சுமித்ராவை ஈடுபடுத்திடும் நோக்கில் கவனமாக இருந்தான் ஜேப்பி.
அவளாக எதையும் செய்யவில்லை என்பதைக் கண்டவன், அவனுக்குத் தோன்றிய சில ஆபரணங்களை சுமியின் கழுத்தில் அணிவித்தான். அவனுக்குத் திருப்தி தந்ததை அப்படியே விட்டவன், திருப்தியில்லாததை மாற்றிவிட்டு, சுமித்ராவை அழைத்துக் கொண்டு கீழிறங்கினான்.
ஐயர் வைத்து, திருமணத்திற்கான அனைத்து முறைமைகளையும் செய்து கொண்டிருக்க, உறக்கம் கலைந்து விழித்த ஷ்யாம் படியில் இருந்து முதலில் கீழே பார்த்தான்.
அவனது பார்வையில் தனது தாய் பட, “மீ… மீ…” என அழைத்துக் கொண்டே படியில் வேகமாகக் கீழிறங்க, அங்கிருந்த பணியாளர்கள் ஷ்யாமைத் தூக்கிக் கொண்டு அமைதியாக இருக்கும்படி செய்கையில் கூறினார்கள்.
ஷ்யாமோ, “நான் மீக்கித்த போகணும். என்னை விதுங்கதா!” என விடாப்பிடியாகக் கத்தினான்.
அதுவரை அமைதியாக இருந்த சுமித்ரா ஷ்யாமின் செயல் கண்டு பதற, அதனைக் கண்ட ஜேப்பி, “தாலி கட்டினதுக்குப்பின்ன அவனைப் பாக்கலாம் சுமி” கடினமான குரலில் கூறினான்.
அதையும் மீறி எழுந்தவளை எழ முடியாமல் கைபிடித்துத் தன்னோடு இழுத்து இருத்தியிருந்தான். ஜேப்பியின் செயலில் சுமியின் கண்ணில் நீர் திரையிட, அவளால் அங்கிருந்து எழ முடியாத சூழ்நிலையை வெறுத்தவள், “ப்ளீஸ்! அவன் ரொம்ப அழறான். இங்க எம்பக்கத்துல வந்து உக்காந்துக்கட்டும்” நீண்ட நேரத்திற்குப்பின் வாய் திறந்தாள்.
“இவ்ளோ நேரம் எப்டி இருந்தியோ. அப்டியே இப்பவும் இரு!” என்றவன், ஐயரின் குறிப்புக்கு இணங்கி, அவர் தந்த தாலியை சுமித்ராவின் கழுத்தில் கட்டி, அவனது நீண்ட நாள் ஆசையை திருப்தியோடு ஈடேற்றியிருந்தான்.
***
விடியலுக்கு முன்பாகவே தாலி கட்டி, சுமித்ராவை மனைவியாக்கிக் கொண்டவன், அதன்பின் சுமித்ராவை விட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டான் ஜேப்பி.
பதினோரு மணியளவில் அங்கு திரும்பி வந்தவன், சில தாள்களில் சுமித்ராவிடம் கையொப்பம் இடுமாறு கூற, கண்டுகொள்ளாமல் இருந்தவளிடம், “இது நீ போடலைன்னாலும், என்னால ரெஜிஸ்டர் பண்ண முடியும் சுமி. ஆனா அது நான் உனக்குச் செய்யற அவமரியாதை. அப்படி ஒன்னை உனக்குச் செய்ய வேணானுதான் உங்கிட்ட இந்த பேப்பர்ஸ்ல சைன் கேட்டேன். ஆனா, இனி எனக்கு வேற வழியில்லை” தோளைக் குலுக்கிக் கொண்டவன், அதற்குமேல் அவளிடம் கெஞ்சாமல் வெளியில் மீண்டும் கிளம்பிவிட்டான்.
அதுவரை ஷ்யாமுடன் நேரத்தைச் செலவிட்டவள், அவனது கேள்விகளுக்கு பொறுமையாகவே பதலளித்துக் கொண்டிருந்தாள் சுமித்ரா.
“என்ன மீ இது புதுசா போத்துதுக்க” என அவளின் கழுத்தில் கிடந்த தாலியைக் காட்டி ஷ்யாம் கேட்டதும், “அது தாலி. மேரேஜ் பண்ணா, கழுத்துல கட்டுவாங்க” சுமித்ராவின் கூற்றைக் கவனித்தவன், “அப்ப தாச்சா ஆந்திக்கும் இது மாதிதி கத்துவாங்களா.” என்றவன், நினைவு வந்தவனாய், “எப்போ மீ நாம அங்க தாச்சா இதுக்கத எதத்துக்கு போவோம்” எனக் கேட்டான்.
அவளறியாத விசயங்களுக்கு எப்படி அவளால் பதில் கூற முடியும். ஆகையினால், “தெரியலை கண்ணா.” என்றிட
“பித்துவீப்பா இங்க எப்போ வதுவான்” ஷ்யாமின் கேள்வியில் திகைத்தவள், “அவனுக்கு வேலை முடிஞ்சதும் வருவான்” என சமாளித்தாள் சுமித்ரா.
இப்படியாக இருவரும் பேசிக் கொண்டிருக்க, மதியத்திற்குமேல் வீட்டிற்கு வந்த ஜேப்பி, சுமித்ராவோடு இருந்த ஷ்யாமை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று வெளியில் நின்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்கு மட்டும் கேட்கும்வண்ணம் செய்தி கூறி அனுப்பிவிட்டு, ஷ்யாம் கத்தியதைப் பொருட்படுத்தாமல் திரும்பினான்.
ஜேப்பி ஷ்யாமைத் தூக்கிக் கொண்டு செல்லும்போது பின்னோடு ஓடி வந்த சுமித்ரா அந்த இடத்தை அடைவதற்குள் வண்டி கிளம்பிச் சென்றிருந்தது. வண்டியின் பின்னே ஓடியவளை கைபிடித்து தடுத்து நிறுத்தியவன்,
“உனக்காக அவனை போர்டிங்கோட இருக்கற ஸ்கூல்ல விடச் சொல்லியிருக்கேன் சுமி. நல்லா பாத்துப்பாங்க” என்றிட, அதனையும் மீறி அவள் வெளியே செல்ல முனைய,
“எல்லாரும் பாக்கறாங்க சுமி. சீன் கிரியேட் பண்ணாத! சத்தம் போடாம உள்ள வா!” பல்லைக் கடித்துக் கொண்டு அவளுக்கு கேட்கும்படி கூறியவன், ஏறத்தாழ அவளை இழுத்துக் கொண்டு வந்திருந்தான்.
சுமித்ராவிற்கு எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யாருக்காக இத்தனை காலமும் ஏங்கித் தவித்து தன்னை திடப்படுத்திக் கொண்டு தனது நாள்களைக் கடத்தினாளோ, அவனையே வெறுத்த நிலையில் அன்று அழுது கரைந்தாள்.
***
சிவபிரகாசம், ஜேப்பிக்கு அழைத்து ஓய்ந்துபோய், தாங்கள் வீட்டில் பார்த்த பெண்ணது வீட்டின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல், கார்த்திக்கிடம் தனது மொத்த கோபத்தையும் காட்டினார்.
திருச்சியில் இருந்து சென்னை வந்து தங்கியிருந்தவர், கார்த்திக்கை விடாமல் கேள்விகளால் துளைத்தார்.
“அவன் என்ன செய்யறான். எங்க இருக்கறான்னுகூடத் தெரியாம, ரெண்டு பேரும் என்னங்கடா தொழில் பண்றீங்க. பெரிய இம்சையா இருக்கான்” எனத் துவங்கியவர்,
“அந்தக் காலத்தில நானும் மூனு பயலுகளை வளர்த்து, ஆளாக்கி, தொழில்ல விட்டிருந்தாலும், இப்டி பொறுப்பில்லாம யாரும் இல்லைடா. பெரியவங்க என்ன சொல்றாங்கன்னுகூடக் கேக்காம பேசிட்டு இருக்கும்போதே போனை வைக்கிறான். என்னடா உங்க மரியாதை?” எனத் துவங்கி மனதில் இருந்த அத்தனையையும் வெளிக்கொட்டி, தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றார்.
தங்களின் சூம் டிடெக்டிவ்விடம் கோரியிருந்த தகவல்கள் எதுவும் அவரின் கைக்கு கிடைக்கப்பெறாமல் இழுத்தடிப்பதைப் பார்த்து, கார்த்திக்கிடம் சிவபிரகாசம் குறை கூற, அனைத்திற்கும் காரணமானவனை எப்படி தொடர்பு கொள்ளுவது எனப் புரியாமல் கார்த்திக்கும் திண்டாடிப் போனான்.
திருமணம் செய்ததோடு, அதன் பதிவையும் அன்றே செய்துவிட்டு, மதியத்திற்குமேல் திருமணச் சான்றிதழ் மற்றும் திருமண புகைப்படங்களை கார்த்திக்கிற்கு அனுப்பி வைத்தான் ஜேப்பி.
விசயம் அறிந்ததும், தாத்தாவிடம் கூறியதோடு, அந்தப் படங்களையும் உடனே அவருக்கு அனுப்பி வைத்துவிட்டு தலையில் கைவைத்தபடி இருந்தவனைக் கண்ட மயூரி, “என்னாச்சுங்க. ஏன் தலைவலிக்குதா?” கணவனிடம் வினவ,
“இல்லை, அதுலாம் இனிமேதான் வரும்” பதில் கூறியவனைப் புரியாமல் பார்த்தாள் மயூரி.
***
மாலையில் ஜேப்பியை தனித்துப் பார்க்க நேர்ந்தபோது, அழுதழுது ஓய்ந்து காணப்பட்டவளைக் கண்டவன், “சுமீ. இப்ப என்ன நடந்திருச்சுனு இப்டியே இருக்க?” என்று கேட்டவனிடம்,
“எதுவுமே தெரியாத மாதிரி எப்டி ஜேப்பி உன்னால எங்கிட்ட பேச முடியுது” அழுகையோடு கேட்டாள் சுமி.
“யாரோட குழந்தையவோ என்னோட குழந்தைன்னு ஏத்துக்கற அளவு எனக்கு பெரிய மனசெல்லாம் கிடையாது சுமி. எனக்கு எந்த உறுத்தலும் இல்லாம உங்கூட நான் வாழணும். அதுக்குத்தான் அவனை அனுப்பிட்டேன்” அவனது எண்ணத்தை உரைக்க,
“உன்னோட அதிகார வெறிக்கு, பச்சைப் புள்ளைய பலிகடா ஆக்காத ஜேப்பி.” சுமி ஜேப்பியை குற்றம் சாட்டினாள்.
எத்தனை குற்றங்களைச் சுமத்தி அவன் சுமந்தாலும், அவனது முடிவில் மாறாமல் இருந்தவனைக் கண்டவளுக்கு சினம் மேலிட, “பணங்காசு இன்னைக்கு இருக்கும். நாளைக்கு இல்லாமப் போகும். ஆனா அந்த திமிருல, மனுச உணர்வுகளை மதிக்கத் தெரியாம நீ பண்றது எல்லாம் உனக்குப் புரியாதுதான்.” என்றவள்,
தனக்குள், “மனுசன்னு நினைச்சு உங்கிட்டப்போயி இதெல்லாம் சொல்லிக்கிட்டுருக்கேன் பாரு. மிருகத்துக்கிட்ட போயிப் பேசறதே வேஸ்ட்” துடுக்காக சுமித்ரா கூறியதும்,
சட்டென உண்டான கோபத்தில் சுமித்ராவின் கழுத்தைப் பிடித்தவன், “வாயிக்கு வந்ததைப் பேசாத சுமி. தேவையில்லாம என்னைச் சீண்டி விட்டுட்டு, அப்புறம் ரொம்பக் கஷ்டப்படாத. இத்தோட இந்தப் பேச்சை விட்டுரு. உன் ஒருத்தி விசயத்தில இப்டி இருக்கேங்கறதுக்காக துணிஞ்சு எதையாது பேசாத இனி” எனக் கூறியவன்,
“ச்சே” என அவளின் கழுத்தில் இருந்த கையை எடுத்தவன், அதற்குமேல் அங்கிருந்தால் மேலும் பேச்சு வளரும் என எண்ணி சட்டென அங்கிருந்து அகன்று, கீழே சென்றுவிட்டான் ஜேப்பி.
எதிரும் புதிருமான இருவரின் வாழ்க்கையில் வெளிச்சம் வருமா?
***