நனவாய்… கனவுகள்!

WhatsApp Image 2022-03-19 at 10.18.58 PM-f0c745ce

நனவாய்… கனவுகள்!

கோவிலில் திருமணம்!

திருமணங்கள் ஒரே முகூர்த்தத்தில் நிறைய நடைபெறுவதால் அதீத மக்கள் நெரிசல்.

அதில் குழுமியிருந்த ஒரு கூட்டத்தில் நின்றிருந்த மாப்பிள்ளையை அவளுக்கு மிகவும் பரிச்சயமாகத் தெரிந்திருந்தது.  மணமகளை சட்டென யாரென்று அடையாளம் தெரியவில்லை.

ஆனால், மணமகளை எங்கோ மிக நெருக்கமாகப் பார்த்து பழகிய உணர்வு.  ஆனால் எங்கென்று தெரியவில்லை. திருமணம் முடிவதில் அவளுக்கு உடன்பாடில்லையோ என யோசிக்கும் வகையில் லயிப்பின்றி சுரத்தையில்லாமல் இருந்தாள். 

அந்த முகத்தில் அத்தனை துயரமும், விரக்தியும் ஒட்டிக்கொண்டிருக்க, மாப்பிள்ளை அவளை ஏதோ எதிர்பார்ப்போடு அடிக்கடி முகம் நோக்குவதும், நிமிராமல் இருப்பவளை விழுங்கி விடுவதுபோல பார்ப்பதுமாய், இதழில் பரவச இளநகையோடு மாப்பிள்ளை மிடுக்கோடும் இருந்தார்.

தாலியை மாப்பிள்ளையிடம் கொடுக்க, முதல் முடிச்சு போடும் வரை அதே நிலையில் மணமகள்!

இரண்டாவது முடிச்சிற்குமுன் சலசலப்பு!

சலசலப்பு அடங்குமுன் மணப்பெண் ஆச்சர்யமாய் மாப்பிள்ளையை நிமிர்ந்து நோக்கி இன்ப அதிர்ச்சியடைவதும், பிறகு ஆசுவாசம் கொள்வதும், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலாத நிலையில் சங்கடத்தோடு நிற்பதுமாய் சிறிது நேரம் சென்றது.

அதன் தொடர்ச்சியாக மாப்பிள்ளை அவளை நோக்கிப் புன்னகையோடு, அவனின் புருவம் உயர்த்தி என்னவென அவளிடம் கண்ணால் கேட்ட கேள்வியில், அவள் தடுமாறுவதும் பிறகு தலையை மறுத்து ஆட்டி ஒன்றுமில்லை என்று அடக்கப்பட்ட வெட்கப் புன்னகையோடு கூறுவதும் தெரிந்தது.

மணமக்கள் திருமணக் கோலத்திலேயே கோயில் பிரகாரத்தைச் சுற்றி வருவதுபோல கனவு நீள, பதற்றம் தொற்றிக் கொண்டது சாருமதிக்கு.

கனவில் வந்தவர்களைவிட, துவக்கத்தில் வந்த காட்சிகளைவிட கனவின் பலிதம் பற்றி அவ்வப்போது அவளின் வீட்டில் பேசிக்கொண்ட பலாபலன் உறக்கத்திலேயே அவளின் நினைவில் எழ, மனம் பதறிட எழுந்தமர்ந்திருந்தாள்.

கண்ணைக் கசக்கிக்கொண்டு விடிவிளக்கின் வெளிச்சத்தில் சுவர் கடிகாரம் காட்டிய துல்லிய நேரத்தை இரண்டொரு முறை இமை சிமிட்டி பார்த்தவள், அது காட்டிய மணியில் குழப்பமானாள். 

மணி மூன்று!

‘கடவுளே! இந்நேரத்தில கனவு கண்டா அது அப்டியே பலிக்கும்னு அப்பத்தா சொல்லுமே!’ அவளின் இதயப் படபடப்புச் சத்தம் அவளுக்கே கேட்டது.

‘இந்த அப்பத்தா அப்பப்போ கனவு பலன் சொல்றது எல்லாம் உண்மையிலேயே பலிக்குமா?’ எனும் கேள்வியெழ,

‘தூக்கத்தில கல்யாணமாகற மாதிரிக் கனவு கண்டா, யாராவது நம்ம சொந்தத்துல செத்து போயிருவாங்க’ என அவளின் அப்பத்தா உறுதியாகச் சொன்ன விசயமே மனதில் எதிரொலிக்க பீதியானாள் சாருமதி.

‘வந்த கனவோட பலாபலனுக்கு யாரு உயிருக்கு என்னாகும்னு தெரியலையே!’ பதறிய உள்ளத்தை நெஞ்சை வலது கையால் நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினாள்.

செங்கல்பட்டு அருகே உள்ள கிராமம் பூர்வீகம் என்றாலும், சென்னைக்கு இடம்பெயர்ந்து இருபது ஆண்டுகள் கடந்தும், பழமை மாறாத குடும்பமது.

எழுந்து சென்று தனியறையில் உறங்கிக்கொண்டிருந்த அவளின் அப்பத்தாவையும் தாத்தாவையும் சற்று நேரம் ஊன்றிக் கவனித்தவாறு நின்றாள்.

இருவரின் மூச்சினைக் கவனித்து ஊர்ஜிதம் செய்துவிட்டு, அதன்பின் தாயையும் தந்தையையும் சென்று அவர்களின் அறைவாசலில் நின்று கவனித்தாள்.

‘ஹப்பாடா! யாருக்கும் ஒன்னுமில்லை!’ மனம் அப்போது நிம்மதியுற்றாலும், குழப்பமும், பயமும் தீர்ந்தபாடில்லை அவளுக்கு.

‘இந்த மாதிரிக் கனவு வந்தா, எந்த வயசுல உள்ளவங்க சாவாங்கனு அப்பத்தா எதுவும் சொல்லலையே!’ தனக்குள் புலம்பிக் கொண்டவள்,

‘அடுத்த முறை கனவுபத்தி அப்பத்தாகிட்ட தெளிவா கேட்டு வச்சிக்கணும்’ தனக்குத்தானே தீர்மானம் செய்துகொண்டாள்.

‘இன்னைக்கு பலிக்கலைனாலும் கனவு கொஞ்ச நாள் கழிச்சு பலிச்சா, யாரு இதுக்கு பலிகடானு தெரியலையே?’ மனதிற்குள் உண்டான குழப்பத்தோடு, அவளின் அறைக்குத் திரும்பினாள்.

மீண்டும் தனதறையில் வந்து படுக்கையில் படுத்தவளுக்கு உற்றார், உறவினரில் வயோதிகத்தில் இருப்பவர்களையெல்லாம் நினைவில் கொணர்ந்தாள்.

‘என்னோட கனவால யாரும் செத்துட்டாங்கனு வந்திரக்கூடாது ஆண்டவா!’ அந்நேரத்திலும் உள்ளமுருக பிராத்தனை செய்தாள்.

அடுத்தடுத்த நாள்கள் ஒருவித உள்ளப் பதற்றத்தோடும், ஆராய்ச்சியோடும், வேண்டுதலோடும் சாருமதிக்குச் சென்றது.

இருபது நாள்கள் கடந்த நிலையில், ‘இனி யாருக்கும் எதுவும் ஆனா… அது என்னோட கனவால இருக்காது!’ அவளே அவளுக்கு ஆறுதல் கூறி, ஒருவாறாகத் தன்னைத்தானே தேற்றி, மனதளவில் மாறியிருந்தாள்.

அன்று காலையில் வந்த தொலைபேசி அழைப்பில், கனவுக்கு முந்தைய தினம் அவள் சென்று வந்த நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், மறுநாளே பணியில் சேரும்படியும் கூற, அதனை வீட்டிலுள்ள அனைவரிடமும் சந்தோசமாகப் பகிர்ந்து கொண்டாள் சாரு.

நேர்காணல் நடந்தபோது, நேர்காணல் குழுவில் இருந்த நால்வரில் ஒருவருக்குத்தான் திருமணம் நடந்தாற்போல தன் கனவில் கண்டிருந்தாள் சாரு.

அதன்பின் வந்த கனவுக் காட்சியில் நேர்காணல் நடந்த அலுவலகத்திற்கு அவள் செல்வதுபோல இருந்தது. 

அவ்வாறு அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்து அவளின் தளத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது அவளிடம் தானாகவே முன்வந்து, “நான் செழியன்!” அறிமுகம் செய்துகொண்டதோடு அவளோடு உடன் நடந்து வந்தான்.

கனவில் வந்தவரது உண்மையான பெயர் சாருவிற்கு தெரியாத நிலையில், ‘என்னோட கனவுல அந்த ஆளு பேரு செழியன்னு சொன்னாரு.  நாளைக்குப் போனதும் முதல் வேலையா அவரு பேரு என்னானு கேட்டுத் தெரிஞ்சிக்கணும்’ எனும் தீர்மானத்தோடு மறுநாள் வேலைக்குக் கிளம்ப அப்போதிருந்தே ஆயத்தமானாள் சாருமதி.

அவ்வப்போது அவளின் கனவின் துவக்கத்தில் வந்த காட்சிகள் நினைவுக்கு வந்தது.

கனவில் கண்ட மணப்பெண் அவளுக்கு மிகவும் பரிச்சயமாகத் தோன்றினாள்.  ஆனால் யாரென்று சரியாக அவளால் கணிக்க இயலவில்லை.

‘ஒரு வேளை நாளைக்கு ஆஃபீஸ்ல அந்தப் பொண்ணு இருக்குமோ!’ இவ்வாறு நினைத்துக் கொண்டே, அலுவலகத்திற்கு உடுத்திச் செல்ல வேண்டிய, ஆடை, அணிமணிகளில் கவனம் செலுத்தினாள்.

அலுவலகத்திற்கு சென்றவளுக்கு அடுத்தடுத்த அவளின் பணி பற்றிய அறிமுகம், அவளோடு பணி புரிபவர்கள் பற்றிய அறிமுகம், அவளுக்கென தனியாக கேபின் ஒதுக்கீடு இன்னும் பணி சார்ந்த நிகழ்வுகள் என அன்றைய தினம் முழுமையும் அவசரகதியில் வேறு எதையும் அவள் சிந்திக்காத வகையில் சென்றிருந்தது.

வீட்டிற்கு வந்தவளை வரவேற்ற அவளின் தாய் மற்றும் அனைவரும் பணி பற்றி விசாரிக்க, அதுபற்றிப் பேசிவிட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

‘இண்டர்வியூ பண்ண அந்த ஆளையே ஆஃபீஸ்ல காணோம்.  இதுல அவரு பேரு செழியன் மொழியன்னு அவரே வந்து செல்ஃப் இன்ட்ரோ பண்ண மாதிரி கனவு எதுக்கு வந்துது?’ அவளுக்குள் கேள்வியெழுப்பியவாறு,

‘அந்தப் பொண்ணும் இந்த ஆஃபீஸ்ல ஆளையே காணோம்.  ஒருவேளை அந்தாளோட வயிஃபா இருக்குமோ?’ இப்படியாக சாருவிற்கு எண்ணம் போனது.

‘கனவுக்கும் நடக்கிற விசயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைபோல.  இந்த அப்பத்தா சும்மா நம்மகிட்ட கதைகட்டி விட்டுட்டு, தண்டட்டிய ஆட்டிட்டு ஏமாத்திக்கிட்டுத் தெரியுது.  நாளைக்கு வச்சிக்கிறேன் அதை!’ சலித்தவாறு அசதியில் படுத்துவிட்டாள்.

மறுநாள் எழுந்து அவளின் அப்பத்தாவை உண்டு இல்லை என்றாக்கிவிட்டே அலுவலகம் சென்றாள் சாருமதி.

முதல்நாள் முழுவதும் வேலைக்கு இடையில் செழியனைத்தேடி களைத்திருந்தாள் சாரு. செழியனைக் காணாதது அப்பத்தாவின்மீது கோபம் வந்திருந்தது. ஆனால் அது ஏனென்று தெரியவில்லை அவளுக்கு.

நேர்காணலில் அவளிடம் அதிகம் கேள்விகளைக் கேட்டது, அவளை கணினியில் கோடிங் செய்யக்கூறி அதுசார்ந்த குறுக்குக் கேள்விகளைக் கேட்டது அனைத்துமே அவன்தான்.

அப்போது அதற்கான பதிலை சரியாகக் கூறிவிட்டாலும், நேர்காணல் முடிந்து வெளிவந்தவளுக்கு அவனது கேள்விகளில் மனம் நிலைத்தது என்னவோ உண்மைதான்.

ஒவ்வொரு வகையான அப்ளிகேசனிலும் எப்படி அதனை நிறுவ இயலும் என்பதை அவன் சாருவிடம் கேள்வியாகக் கேட்க, கேட்க மனம் அப்போது ‘இன்னும் அடுத்த கேள்வியா?’ சலித்தாலும் வெளியில் அவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உற்சாகமாக பதிலளித்துவிட்டு வந்திருந்தாள் சாரு.

‘இண்டர்வியூல இப்டித்தான் கேள்வியாக் கேட்டு வந்தவங்களை திணறடிப்பாங்களா?  நாலு கேளு நறுக்குனு கேட்டோமோ, அடுத்த ஆளைக் கூப்பிட்டமான்னு இல்லாம, நொய்யு நொய்யுனு நூறு கேள்விய ஒரே ஆளுகிட்ட மொத்தமாக் கேட்டா, அத்தோட பயத்துல ஜன்னி வந்து சாவே வந்திரும்போல! ஆளையும் முகரையும் பாரு’ மனதிற்குள் அவனை வறுத்தெடுத்துவிட்டாள்.

நடந்த நிகழ்வுகளின் கணத்தால் மற்றவர்களைவிட அவன் மட்டும் அவளின் மனதில் சற்றே ஆழமாகப் பதிந்து போயிருக்கிறான் என்றே அந்த கனவின் முடிவாக நினைத்திருந்தாள்.

ஆனால் அலுவலகத்திலிருந்து வெளிவந்தது முதலே, “அப்போ இனி அவரு இங்க வர மாட்டாரா?” எனும் கேள்வி அவளையறியாமலேயே எழ, அந்தக் கேள்வியே அவளுக்கு பிடிக்கவில்லை.

ஒரு மாதம் கடந்திருந்தது.

வேலை பழகி, அலுவலகத்தில் உள்ள அனைவரையும் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டிருந்தாள் சாருமதி. 

முதல் பத்து நாள்கள் அந்த செழியனைத் தேடி அலுத்துப் போனவள் அதன்பின் அவனை சற்று மறந்து போயிருந்தாள்.

அன்று அலுப்பில் படுத்தவளுக்கு உடனே உறக்கம் தழுவியிருந்தது.

“ஹாய் மதி! ஒரு அன்னஃப்சியல் வர்க். அது விசயமா உங்கிட்ட பேசணும்.  ஆஃபீஸ் விட்டதும் பவர் கேஃபிடோரியாக்கு வர முடியுமா?” என்று கேட்டான் செழியன்.

மரியாதை நிமித்தமாகச் சென்றவளிடம், காதலைச் சொல்லி திக்குமுக்காடச் செய்தான்.

விடைபெறும்போது, “ஒன்னும் அவசரமில்லை.  ஒன் வீக் டைம் எடுத்துக்க.  ஆனா, பாசிட்டிவ்வா இருக்கணும் ரிப்ளை” என்றான்.

கனவில் கேட்டவனை, நனவில் காண முடியாத வருத்தத்தில், ‘கனவுல மட்டும் வராரு.  ஒருவேளை… நேருல வர பயப்படறாரோ!’ என தனக்குத்தானே கேட்டு புலம்பிக் கொண்டாள்.

கனவில் காதல் சொன்னவனைப் பற்றிய ஏக்கம் அவளை அரித்தது. மெலிந்தாள்.

அடுத்தடுத்த நாள்கள் அவனோடுடனான கனவுகள் தொடர்ந்தது. வந்த கனவு மீண்டும் வரவேயில்லை.  நேரிலும் அவனைப் பார்க்கவில்லை.

ஒரு நாள் கனவில் அவளின் முதுகை தன் மார்போடு அணைத்தபடியே, “சாரிடா செல்லம்.  ஃபிஃப்டீன் டேஸ்ல வந்திருவேன்.  டெய்லி வீடியோ கால் பண்ணிப் பேசலாம். இப்டி உம்முணு இருக்காம, ஒரு உம்மா குடுத்து பை சொல்லுவியாம்.  அந்த எனர்ஜில வேலய க்வீக்கா முடிச்சிட்டு ஓடி உங்கிட்டேயே வந்திருவேனாம்!” என்றான்.

காற்றுப்புக முடியாத இடைவெளியில் அவனது முதுகோடு ஒட்டிக் கொண்டிருந்தவளை ஈசிஆர் சாலையில் அவனது பைக்கில் அழைத்துச் செல்வதுபோல ஒரு நாள் கனவு கண்டாள்.

அதில் ஒரே ஐஸ்க்ரீமை இருவரும் மாறி மாறி சுவைத்தது, கனவிலும் இனித்தது அவளுக்கு.

செல்லமாக அவளின் தலையில் கொட்டி, அலுவலக கணினியைப் பார்த்து திருத்தங்கள் கூறுவதுபோல ஒரு முறை கனவு கண்டாள்.

கைகளைக் கோர்த்துக் கொண்டு பீச்சில் இருவருமாக கால் நனைத்தபடி விளையாடியதுபோல கனவு வந்தது.

மற்றொரு நாள் கனவில்,

“ரொம்ப என்னை மிஸ் பண்ணியா? சாரி செல்லம்.  போன  வேளை சொன்ன டைம்குள்ள முடியலை. அதான் ஒன்டே கூட ஆகிருச்சு” எனும் அவனது பேச்சில், மிகவும் பழக்கமான நபரிடம் என்பதைவிட, உரிமையானவரிடம் பேசுவதுபோல,

“எல்லாம் பண்ணிட்டு எதுக்கு ஒப்புக்கு சாரி கேக்குறீங்க?” சண்டைகோழியாய் அவனிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசிட,

“செல்லம்ல… அப்டியே பேசிட்டே கேண்டீன் போயிட்டு வரலாம் வா!” என்றான்.

அத்தனை நேரம் கோபத்தோடு இருந்தாலும், அவன் அழைத்ததும் உடன் கிளம்பிவிட்டாள். ‘மானங்கெட்ட மனசே… இத்தனை நாளு அவன் இல்லாம அவனை அப்டி செஞ்சு ஏங்க வைப்பேன்னு கங்கணம் கட்டிட்டு, இன்னைக்கு அவங்கூப்பிட்டதும் ஈனு… வெக்கமேயில்லாம போற’ எனத் திட்டிய மனதை அடக்கினாள்.

“இப்டி முகத்தை தூக்கி வச்சிட்டு இருந்தா எப்டி செல்லம்.  இந்த உம்மணா மூஞ்சிய தூக்கி தூர எறிஞ்சிட்டு, எங்கூட ஜாலியா நாலு வார்த்தை பேசுவியாம்” கண்ணடித்துக் கூறியவனை முறைத்தாள்.

இளநகையோடு அவளைப் பார்த்துக் கொண்டே அவளிடம் உருகி உருகிப் பேசிக் கொண்டிருந்தான் செழியன்.

சில நாள்கள் அவளிடம் கெஞ்சி, முதல் முத்தத்தை அவளிடம் அவன் பெற்றுக்கொண்டதும், அதனைக் கொண்டாட அவளை அலேக்காகத் தூக்கி சுற்றி ஆரவாரம் செய்ததும் கனவில் வந்தது.

இப்படி பலநாள் கனவெங்கும் செழியனது காதலும், அவனது அன்பான வார்த்தைகளும் அவளைத் தாலாட்டியதில் விடிந்தது தெரியாமல் உறக்கத்தை தொடர்வதை வழக்கமாக்கி இருந்தாள் சாருமதி.

தாய் கற்பகம் வந்து எழுப்ப, எழுந்ததும் சூழல் புரிய, ‘ச்சேய்… எல்லாம் கனவா!’ அதீத சலிப்போடு கனவு வந்த தினங்களில் எழுவதும், ஏக்கமும் கழிவிரக்கமுமாய் அலுவலகம் செல்வதுமாக இருந்தாள் சாருமதி.

அன்றும் கனவுகளில் தன்னை வீழ்த்தி, ஆதிக்கம் செய்தவனைக் காணாது பரிதவித்த உள்ளத்தை தனக்குத்தானே ஆறுதல் கூறி, அலுவலகம் கிளம்பி வந்தவளின் முன்னே செழியன்!

ஆச்சர்யம்! ஆனால் தன் முன்னே நிற்பவன்? அவனது பெயர் என்னவாக இருக்கும் என அறிந்து கொள்ள மனம் பரிதவித்தது.

உடலெங்கும் மின்சாரம் பாய, அவனைக் கண்டதும் தலையைக் குனிந்து கொண்டாள்.  அவனாகவே அவளின் அருகே வந்து அறிமுகம் செய்து கொண்டான் முதல் நாள் கனவின் வந்ததைப் போலவே!

விழி விரிய ஆச்சர்யத்தில் நின்றவளை, “என்ன மேடம்.  நான் உங்க டீம்தான். வாங்க பேசிட்டே நடக்கலாம்” வலக்கையை வழியின் மீது காட்டி அவளுடன் நடந்தவனைக் கண்டதும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது சாருவிற்கு.

அவளின் கனவுகளை அதன்பின் மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்தான் செழியன்.

அவன் அலுவலகம் வரத் துவங்கியது முதலே அவளின் கனவுகளை சிறிது சிறிதாக நனவாக்கத் துவங்கியிருந்தான்.

காதலைக் கூறிவிட்டு சாதகமான பதிலை எதிர்நோக்கிக் காத்திருந்தவனைக் காட்டிலும், நிம்மதியைத் தொலைத்திருந்தாள் சாருமதி.

கனவில் வந்த பெண்ணை இதுவரை அவள் காணும் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை.

ஆனால் தன்னிடம் காதலைச் சொல்லிவிட்டு, காதலை சீராட்டி, வேருன்ற வளர்த்துவிட்டு, தன் கனவில் வந்ததுபோல அவன் வேறு பெண்ணைத் திருமணம் செய்துவிட்டால்… தன் நிலைமை!

புலம்பல்கள், தயக்கம் இதனைக் காட்டிலும், அப்பத்தா சொன்னதுபோல பலிக்காத கனவின் தைரியத்தில் துணிந்தாள்.

செழியனைத் தவிர்க்க இயலாத மனதின் நெருக்கடியால் இறுதியாக அவனின் காதலை மன உறுதியோடு ஏற்றுக்கொண்டிருந்தாள்.

கனவைப் பற்றியோ, கனவுகள் சில பலித்து அது நனவானது பற்றியோ யாரிடமும் மூச்சு விடவில்லை சாருமதி.

கனவுகளை அசைபோட்டவாறு இருப்பவளுக்கு, அது நனவாகும் தருணங்கள் அனைத்துமே சொர்க்கமாய்!

மூச்சு முட்ட காதலித்தனர்.  முத்தத்தில் முத்துக் குளித்தனர். அதனால் உண்டான பித்தம் தெளிய கட்டிப் பிடி வைத்தியத்தை தொடர்ந்தனர்.

அலுவலகமே இருவரின் அன்னியோன்யத்தில் புகைந்தது.

‘நமக்குந்தான் வந்து வாச்சிருக்கு.  எதுக்கெடுத்தாலும் நோ…’ இப்படியாக…

எட்டு மாதங்கள் இனிமையாய், காதல் மழையில் நனைந்திருந்த சமயத்தில், எதிர்பாரா நிகழ்வால் கண்ணாடி போன்ற காதல் உள்ளங்களின் மனங்கள் உடையும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஓவர்டைம் முடிந்து கிளம்பியவளை வீடுவரை வந்து நான்தான் விடுவேன் என்று அடம்பிடித்தவனை தவிர்க்க இயலாமல் உடன் கிளம்பி வந்தவளுக்குள் கிலி.

தெரு முக்கில் விட்டவன் என்றுமில்லாமல், “ஒண்ணே ஒன்னு ஸ்ட்ராங்கா தந்துட்டுப் போவியாம்” அவனிடம் விடைபெற்ற சாருவின் கரம் பிடித்திழுத்து தன்னருகே நிறுத்த,

“என்ன பண்ற?  இங்க வச்சா?” என சுற்றிலும் பரிதவிப்போடும், தயக்கத்தோடும் பார்வையைச் செலுத்தினாள் சாருமதி.

தயக்கத்தில் கால்கள் மட்டுமே கட்டைக்கால் குதிரைபோல மாறி மாறி நின்றாள்.

இறுதியில் செழியனின் பிடிவாதம் வென்றது. இதழின் தேன் சுவையை இதமாய் ரசித்து உண்டவர்கள் இது தங்களின் காதல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் என்பது உணராமலேயே தேனுண்ட மயக்கத்தில் விடைபெற்றிருந்தனர்.

செழியன் வென்றிட, சாரு அவளின் செயலால் தோல்வியைத் தழுவ அன்று நடந்த நிகழ்வே மூலகாரணமாக அமைந்து போயிருந்தது.

கனவில் இதேபோன்ற நிகழ்வின் முடிவில், தனது தம்பி தன்னோடு செழியனைப் பார்த்ததை வீட்டில் கூறிவிட, அதன்பின் அவளுக்கு திருமணப் பேச்சு எடுப்பதுபோன்று காட்சிகள் வந்திருந்தது.

சாருமதி மறுக்க அவளின் தந்தை, “நான் உயிரோட இருக்கறவரை நீ நினைக்கிறது நடக்கவே நடக்காது” என்று கனவில் கூறியது அவளை மேலும் பயமுறுத்தியதால்தான் ஆரம்பத்தில் செழியனை தன்னோடு வரவேண்டாம் என மறுத்தாள்.

தயக்கம் உண்டான நிலையில், அவனோடுடனான பயணத் துவக்கம் முதலே வீடு வரை தங்களை யாரும் பார்க்கவில்லை என சுற்றிலும் ஆராய்ச்சிக் கண்ணோடு வந்தவளுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

சாரு பயந்ததுபோலவே அதன்பின் அனைத்தும் நடந்தது! அவளின் தம்பி தந்தையிடம் சென்று தான் கண்ட விசயத்தைக்கூற, உடனடியாக அவள் கனவில் வந்ததுபோன்ற திருப்பங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன்பின் அவளின் கனவுகளில் செழியனோ, அவனது காதல் சொட்டும் பேச்சுகளோ, உரசல்களோ, தீண்டல்களோ எதுவுமே வரவில்லை.

பணிக்கு செல்லவிடாமல் வீட்டில் சிறை வைக்கப்பட்டாள் சாருமதி.

திருமணம் பற்றிய வேலைகள் மும்முரமாக நடைபெற்றது.  சாருவின் பேச்சு எடுபடவில்லை.  அவளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

தான் முதன் முதலில் கண்ட திருமணக் கனவு பலித்ததாகவே எண்ணி, செழியன் இல்லா வாழ்வு தனக்கு வேண்டாமென முடிவுக்கு வந்தவள் தற்கொலைக்கு முயன்றாள்.

அப்படி முயன்றவளை வீட்டில் உள்ளவர்கள் எதேச்சையாகப் பார்த்துக் காப்பாற்றியிருந்தனர்.

அதன்பின் மிகுந்த பாதுகாப்போடு அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தது.

எளிமையான திருமண ஏற்பாட்டினை மறுத்து முரண்டியவளை வலுக்கட்டாயமாக ஏற்பாடு செய்யப்பட்ட அவளின் திருமணத்திற்காக கோவிலுக்கு அழைத்துச் சென்றனர் பெற்றோர்.

“யாரு என்னானு தெரியாமையே எப்டிம்மா?” தனது தாயிடம் கண்ணீரோடு போராடியவவளிடம்,

“அப்பா உன் நல்லதுக்காகத்தான் சொல்றாருடீ.  பேசாம தர்க்கம் பண்ணாம கிளம்பி வா.  இல்லையோ எலி மருந்து வீட்டுல இருக்கு. அதைச் சாப்பிட்டுட்டு ரெண்டு பேருமாச் சாவோம்” என தாய் கூறியதும், பேசாமல் உள்ளுக்குள் விரக்தியோடு கிளம்பி வந்திருந்தாள்.

“மாப்பிள்ளை பேரையாது சொல்லும்மா” மகளின் கேள்விக்கு,

“உங்கப்பா பாத்த மாப்பிள்ளைனு மட்டுந்தான் தெரியும் எனக்கு.  அவரு பேரையெல்லாம் கேக்கணும்னு நீ பண்ண அட்டகாசத்துல தோணலை” என்றிருந்தார் கற்பகம்.

சாருமதிக்கு தனது கனவு பலிக்கப்போவதை எண்ணி உயிர் போவது போன்ற உணர்வு.

‘அப்ப, நான் கனவுல கண்ட எல்லாமே நடந்ததுபோல, செழியனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் கல்யாணம் நடக்குமா?’ என்பதை நினைக்கும்போதே ஒவ்வொரு செல்லும் வலித்தது.

வேதனை வாட்ட, முகவாட்டத்தோடு மணமகள் கோலம் தரித்து மணமேடைக்கு வந்தாள்.

கோவிலில் அதிகமான கூட்டம்.

நிறைய திருமணங்கள் நடந்த வண்ணமிருந்தது.

மாப்பிள்ளை, பெண் இருவருமாக அழைக்கப்பட, சாருமதி நிமிர்ந்து பாராமலேயே சென்றாள். 

ஒவ்வொருவராக அங்கு இருந்த ரெஜிஸ்டரில் கையொப்பமிட்டனர். சாருமதி மறந்தும் அருகில் நின்றவனை பார்க்க விரும்பவில்லை.

சாருமதிக்கு இருந்த விரக்தியில் அப்படித்தான் நடக்கத் தூண்டியது மனம்.  அத்தனை வெறுப்பு. தன்னை மணம் முடிக்க விரும்பிய தனக்குத் தெரியாத மாப்பிள்ளை மீது.

‘பொண்ணு பாக்க வரலை.  எந்த காட்டனோ! பொண்ணு தரேனு சொன்னதும் மண்டையாட்டிருக்கான். அறிவு கெட்டவன்!’ இப்படி மனதிற்குள் திட்டித் தீர்த்து ஆறுதல் அடைந்திருந்தாள்.

தாலி கட்ட கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

தாலி கட்டும்போது முதல் முடிச்சின்போது முடிச்சிட்டவனைக் கவனிக்காதவள், அடுத்த முடிச்சின்போது பெண்ணது குரலொன்று இடைபுக, “நான் அடுத்த முடிச்சப் போடுறேன்” என்று கேட்டதும்,

“இல்லை நானே எம்பொண்டாட்டிக்கு மூணு முடிச்சும் போட்டுக்கறேன்கா” எனும் கம்பீரமான பரிச்சயக் குரலில் அருகில் அமர்ந்திருந்தவனை அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாய் நிமிர்ந்து பார்த்தாள் சாருமதி.

சிரிக்கவா, அழவா என்று தெரியவில்லை அவளுக்கு.

சிரித்தபடியே மகிழ்ச்சியினால் எழுந்த அழுகையை அடக்கினாள். அவனது புருவம் உயர்த்திக் கேட்ட கேள்வி அவளை எங்கோ அழைத்துச் செல்ல முயன்றது.

நனவிற்கும், கனவிற்கும் இடையே அல்லாடினாள்.

அதன்பின் சில வழக்கமுறைகள் பின்பற்றப்பட்டு மணமக்கள் மணமொத்துச் செய்தார்கள்.  பிறகு கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி வருமாறு பெரியவர்கள் கூறினார்கள்.

செழியனது கைக்குள் சாருமதியின் கை!

நனவாய்… செழியனை மணக்கோலத்தில் தான் கண்ட முதல் கனவு பலித்ததில் இன்முகமாக தன்னவனது கையைப் பிடித்தவாறு, தந்தையைத் தேடினாள் சாருமதி.

‘இவர்தான்னு அப்பாக்கு எப்டித் தெரிஞ்சது?’ எனும் கேள்வியோடு…

செழியனைப் பற்றி எதையும் அவளின் தந்தை அவள் வாயிலாக அறிந்து கொள்ள முயலாததை அவள் அறிந்திருந்தமையால், சாருவிற்கு இப்படியொரு சந்தேகம் எழுந்தது.

கனவில் தோன்றிய அவளின் முகம் அவளுக்கே தெரியாமல் போனதற்கான காரணத்தை, ‘அழுது வடிஞ்சு அம்சமே இல்லாம அறுக்காணி மாதிரி வந்து நின்னதுல, நம்ம மூஞ்சியே நமக்கு ஆட்டம் காட்டி ஏமாத்தியிருக்கு.  அது தெரியாம… சாகத் துணிஞ்சேனே! ’ என யூகித்தபடியே, தந்தையைக் கண்கள் தேட செழியனோடு நடந்தாள் சாருமதி.

அவளின் தற்கொலை முயற்சிக்குப்பின், அவளது தந்தையை தங்களின் வீட்டுப் பெரியோரால் சம்மதிக்கச் செய்த செழியனது இடைவிடா முயற்சியை அவள் அறியும்போது நடந்தவற்றைத் தெரிந்து கொள்வாள் சாருமதி.

அதுவரை ஆச்சர்யமும், அதிசயமுமாக நடந்த நிகழ்வுகளை அவள் அசை போடட்டும்.

தனக்கான காதல் சாரல், மழை இனி தனக்கே எனும் இறுமாப்பில் உடலோடும், உணர்வோடும் இருந்த இருக்கங்கள் களைந்து, இனிமையாய் கணவனோடு கைகோர்த்து வருபவளின் நிறைவைக் கண்டு மணமக்களை நீடூடி வாழ வாழ்த்தி விடைபெறுவோம்!

***