wqSDT8-85ff1927

நளவெண்பா 02

நளவெண்பா 02

அதுவொரு பொன் மாலை பொழுது, இதம் தரும் குளிர்காற்று ஜன்னல் வழியே பரவ, பச்சைபசேலென வயலும், அந்தி மந்தாரை பூத்துக் குலுங்கும் பொன்சேய் கிராமத்தின் இயற்கை காட்சி, அது இறைவனின் ஆட்சி. 

வண்டி வீட்டை அடைந்திட,  வெண்பாவை போல அடக்கமான பெண் உண்டோ? என வியக்குமளவில் புத்தகத்தை மார்போடு அணைத்து குனிந்த தலை நிமிராது வீட்டிற்குள் சென்றாள். 

நளன், வெண்பாவின் தந்தையிடம், “ஐயா, சின்னம்மாவ வீட்ல விட்டுடேங்க.” என்று கூற, அதிகார தோரனையில் தலையை மட்டும் அசைத்தார், வெண்பாவின் தந்தை நல்லசிவம். 

அதிகார தோரனையெல்லாம் நளனுக்கு பிடிக்காது, இருப்பினும் தாய் சொல்லை தட்டாமல் கிராமத்து பஞ்சாயத்தாரை மதித்தான். 

பஞ்சாயத்தில் சபையோரின் முன்னிலையில் எடக்கு மடக்காக நல்லசிவத்திடம் கேள்விகளை கேட்டு சிக்கவைப்பதும் உண்டு.

வெண்பா நேராக சமையலறைக்குள் செல்ல, “கை கால் அலம்பாம எங்கடீ போற?” வெண்பாவின் தாய் வளர்மதி கேட்க, 

“அச்சுமாவ பார்த்துட்டு வாரேன்மா” 

என்றவள், வீட்டில் வேலை பார்க்கும் அச்சுதத்தை பாசப்பிணைப்போடு கட்டிக்கொண்டாள். 

“அச்சுமா!” 

“தங்காச்சோ, கைய எடுங்க.  ஐயா பார்த்தாக திட்டுவாங்க.” அச்சுதம் கவலையாய் தெரிவிக்க, 

“அப்பா வாசல்லதான் இருக்காரு அச்சுமா. நீங்க பயப்படாதீங்க.” 

மீண்டும் வெண்பா மகிழ்ச்சியோடு அணைக்க அச்சுதத்திற்கு ஆனந்தமே!

“என்ன தங்காச்சோ இம்புட்டு சந்தோசமா இருக்கீங்க. என்னானு சொன்னாக்கா நானும் சேர்ந்து உங்ககூட சந்தோசப் பட்டுக்குவேன்.” 

“இன்னைக்கு காலேஜ்ல என்னாச்சு தெரியுமா, நளன் என்ன பண்ணாணு தெரியுமா?” விசித்திரமுட்டும் வகையில் விழிகள் அகல விரித்தாள். 

“தங்காச்சோ! நளன் உன்னைய திட்டுபுட்டானா?” என பயத்தோட கேட்டார் அச்சுதம், நல்லசிவத்தின் வீட்டில் வேலை பார்ப்பதால்.

“இல்ல அச்சுமா, நளன் இன்னைக்கு ஒருத்தன புரட்டி எடுத்துட்டான்.” நடந்தவற்றை விவரித்தாள். 

“என்ன தங்காச்சோ சொல்றீங்க! அம்புட்டு விசயம் நடந்துச்சா?” 

“ஆமா அச்சுமா, நளன் மாதிரி ஒரு நல்ல பையன பெத்ததுக்குதான் ஓடியாந்து கட்டிக்கிட்டேன்.” மீண்டும் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். 

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே! 

நளமகாராசனை ஈன்ற புண்ணியவதி அச்சுதம். மற்றவர்களுக்காக எல்லாவற்றை துறக்கும் தியாகி, அவரை போலவே அவருடைய குடும்பமும்.

நல்லசிவம் வெளியாட்களோடு பேசிக்கொண்டிருக்க, நளன் அவரை நோட்டம் விட்டவாறே வீட்டிற்குள் வந்தான். அவனது தாயை பார்ப்பதற்கு நேராக அடுக்களைக்குள் நுழைந்தான். 

“என்ன? என்னையப் பத்தி வத்தி வக்கிற மாதிரி தெரியுதே!” நளனின் குதர்க்கமான குரல் கேட்க, இருவரும் அவன் புறம் திரும்பினர். 

“ஆமா குண்டா, நிறையவே வத்தி வச்சேன், கிஷ்ணாயில் ஊத்தி.”  கட்டை விரலை கவிழ்த்தி காட்டினாள். 

“அம்மோவ் என்னைய பத்தி என்ன சொன்னா இவ?” 

“தங்காச்ச கிண்டல் பண்ணவன புரட்டி எடுத்துடியாமே, யே ராசா!”  தன் மகனை பத்து விரல்களால் நெட்டை முறித்தார்.

“அச்சுமா, நளனுக்கு நல்லா சுத்தி போடுங்க, எல்லா பொண்ணுங்க கண்ணும் இவன் மேலதான் இருக்கு.” 

‘மகி, நிகிதாவின் கண்ணு பட்டிருக்கும் கொள்ளி கண்ணு கொள்ளி கண்ணு!’ வெண்பாவின் மனக்குமுறல். 

“ஏய், உண்மையாவா? உன் ஃப்ரெண்டு நிகிதா பார்த்தாளா?” நளனை முறைத்துப் பார்த்தாள் வெண்பா.

மெதுவான குரலில் நளன், “நளன் நிகிதா, சூப்பரா இருக்குல?” வெண்பாவிடம் டிங்கு டிங்கென கண்ணிமைத்தான். 

“கொஞ்சம் குனியேன் குண்டா, அச்சுமா இருக்காங்க. சத்தமா சொல்ல முடியாது.” அவனும் குனிந்தான். 

குனிந்தவனுக்கு முதுகில் நான்கு அடி போட்டாள். “உனக்கு நிகிதா கேக்குதா குண்டா?” 

“பிசாசு, அடிக்கத்தான் குனிய சொன்னியா?” 

உடனே அச்சுதம், “சும்மாருயா, ஐயா காதுல விழுந்துர போகுது.” 

“பாருங்க அச்சுமா, எம்முன்னாடி பொண்ணுங்களா சைட் அடிச்சிருக்கான்.” அதற்கு நளனை அச்சுதம் எதுவுமே கூறவில்லை. அவருடைய வேலையை பார்க்க ஆரம்பித்தார். இருவரின் அலப்பறைகளை பார்த்து பழகிப்போனது.

“இனி பொண்ணுங்கள பார்த்த, நோண்டிருவேன்!” என நளனை எச்சரித்துவிட்டு மார்புக்கு குறுக்கே கையைக் கட்டிக்கொண்டாள்.

“என்னத்த?” 

“ஓ…ரெண்டு கண்ண!” 

“எனக்கே ரிப்பீட்டா?” 

“ஆமா, குண்டா தடியா” என முணுமுணுத்தவாறு கிண்டல் செய்தாள்.

இருவரும் பஸ்ஸில் காலேஜ் சென்றதை ஒருவர் நல்லசிவத்திடம் கூற, கார் இருந்தும் பஸ்ஸில் சென்றதை கௌரவ குறைச்சலாக எண்ணியவர் விசாரணைக்காக, “கண்ணு.. நிலா கண்ணு!” என்று அழைத்தார். 

எதுக்காக நல்லசிவம் அழைத்தார்? நளன் அறிந்த விடயமே!

“பஸ்ல போனத யாராவது சொல்லிருப்பாங்க. அதுக்குதான் கூப்பிடுறாரு போ, அடுத்து என்னைய கூப்பிடுவாரு, அப்பறம் நான் பார்த்துக்கிறேன்.” 

வெண்பா பாவமாக முகத்தை வைத்துக்கொள்ள, “போ, பார்த்துகிலாம்.” இமைகளை அழுத்தமாக இமைத்தான்.  

தயங்கி தயங்கி தந்தையின் முன் வந்தாள். “என்ன கண்ணு, இன்னைக்கு கார்ல போகாம பஸ்ல போனீயாமே!” 

வெண்பாவின் முழுப்பெயர் நிலவெண்பா.

“அப்பா அது வந்து…” 

“அவன கூப்பிடு” என நல்லசிவம்.

நளனை கண்களாலேயே அழைக்க, அவனும் சரியாக வந்து நின்றான். 

“ஐயா நிலாமா…” பேசி முடிக்கவில்லை நளன். 

நல்லசிவத்தின் குரல் எகிறியது.  “நிலாவ சின்னம்மான்னு கூப்பிடுன்னு எத்தன முறை சொல்லிருக்கேன்!” முறைத்துப் பார்த்தார். 

நல்லசிவத்தின் சத்தம் கேட்டு, வளர்மதி, அச்சதம், சர்வேஷ்வரன் வந்துவிட்டனர். 

நளன், வெண்பாவை சின்னம்மா என்றழைப்பது வெண்பாவுக்கு கடுகளவும் கசப்புதான்!

வெண்பாவுக்கு தோள்தட்டிக்கொடுப்பவன், சிறு சிறு ஆசைகளை பூர்த்தி செய்பவன், அவளை கையில் வைத்து தாங்குபவன் நளன்.

நல்லசிவத்தின் சத்தம் கேட்டு கடுப்பான சர்வேஷ். “அப்பா, ஏன் பா இந்தமாதிரியெல்லாம்? நளன் வெண்பாவ விட வயசுல மூத்தவன்.”

வெண்பாவின் இரட்டை சகோதரர்களில் இளையவன். 

“இங்கபாரு, உன்னைய பஞ்சாயத்துக்கு யாரும் கூப்பிடல. உன் வேலை ஏதோ அதை பாரு. வந்துட்டான் பேசுறதுக்கு.” விட்டேத்தியாக பதிலளித்தார். 

மூத்தவன் ஞானேஷ்வரன் அங்கில்லை. இருந்தால், தந்தைக்கு சாதகமாக பேசிருப்பான். 

மூத்தவனுக்கு முரட்டு குணமும், இளையவனுக்கு இளகிய குணமும் படைத்தது பிரம்மனே!

எதை பேசவேண்டுமோ அதைவிடுத்து வெண்பாவை இப்படித்தான் கூப்பிடவேண்டும் என்று வந்து நின்றது பிரச்சனை, 

“உங்க அடிமை முறை வாழ்க்கையெல்லாம் ரொம்ப நாளைக்கு செல்லாது.” என்றை தந்தையை கடிந்துவிட்டு, நளனின் புறம் திரும்பிய சர்வேஷ், 

“இங்க பாரு நளன், வெண்பாவ எப்படியோ கூப்பிட்டு, என்னைய சர்ஷேன்னுதான் கூப்பிடணும்.

சொல்லிட்டேன். அந்த ஐயா சொன்னாரு இந்த ஐயா சொன்னாருன்னு என்னைய சின்னையான்னு கூப்பிட்ட அவ்ளோதான்!” 

நளனுக்கும் சர்வேஷிற்கும் ஒரே வயது.

நல்லசிவம் உக்கிரமாக, “டேய் இங்கபாரு” நளனை சுட்டிக்காட்டி, “நீ கிழ்ஜாதிகாரனோட மகன்.” என்று கூறும்போதே, அவனுடைய முகத்தில் சாயம் வெளுத்தது. நளன் அச்சுதத்தை பார்க்க, ‘பொறுத்துக்கொள்’ என அழுத்தமாக கண்ணிமைத்தார். அவரின் கண் நிறைய கண்ணீர்.  அம்மாவை பார்த்தவனுக்கு மேலும் கவலைதான்.

“உன்னையெல்லாம் வீட்டுக்குள்ள விடுறதே பெரிய விஷயம். என்னைய, என் குடும்பத்து ஆளுங்கள நீ ஐயா, அம்மான்னுதான் கூப்பிடணும். புரிஞ்சிதா?” என கேட்டார் நல்லசிவம்.

நளன் தலையை ஆட்டினான், ஆனால் யாருடைய கேள்விக்கு பதிலாய் தலையை ஆட்டினானென்பது தெரியவில்லை? 

“மாணிக்கோ…!” என்ற அடுத்த நொடியே கார் டிரைவர் அருகில் வந்தார், நல்லசிவத்திடம் பணிந்தார். 

“ஐயா…” கையை கட்டி சற்று குனிந்திருந்தார். அதை பார்த்த சர்வேஷ், 

அவர் அருகில் சென்று, “மாமா இவ்ளோ மாரியாதை எல்லாம் வேணாம். நிமிர்ந்து இருங்க.” அவரின் கையை தளர்த்தி விட்டு நிமிர்த்தினான். 

தோளில் இருந்த துண்டை கோபமாக உதறிய நல்லசிவம்,

“இவங்க ஏன் காலேஜுக்கு  பஸ்ல போனாங்க. வந்ததும் எங்கிட்ட நீ சொல்லிருக்கணும்தானே!” 

நளனிற்கும் வெண்பாவிற்கும் மாட்டிக்கொள்வோமோ என்கிற பீதி.

“கார் பஞ்சர் ஆகிருச்சிங்கையா, அதனாலதான் சின்னம்மா பஸ்ல போனாங்க.” 

‘உப்…. ஷப்பாஆஆ…’ பெருமூச்சாய் நிம்மதி வெண்பாவுக்கும் நளனுக்கும். 

“வண்டி எடுக்கும் முன்னாடி இதெல்லாம் பார்த்துக்க தெரியாத உனக்கு” என அதட்ட,  இளசுகளுக்காக தலை குனிந்து நின்றார் மாணிக்கம். 

“ஐயா, சின்னம்மாக்கு காலைல பிராக்டிகல் கிளாஸ். அதான் பஸ்ல போகவேண்டியதாச்சுங்க” இதுதான் உண்மையென கற்பூரத்தை அணைத்தான் நளன். 

“நீ போ” என்று மாணிக்கத்தை பார்த்து நல்லசிவம் கூற, 

“ஆமா மாமா இப்போ போங்க. எங்கப்பாவோட சந்தேகம் தீர்ந்துருச்சு.” கடுகடுத்தவாரு சர்வேஷ் கூற, 

“அனாவசியமா பொலம்பாம இருக்கியா, உனக்கொரு பொண்ணு பொறந்தா தெரியும் எப்படி பார்த்துக்கணும்னு” ஏதோ உலகில் இல்லாத பெண் குழந்தையை பெற்று, பொத்தி பொத்தி வளர்கிறார் நல்லசிவம். 

“எனக்கு பொண்ணு பொறந்தா உங்கள மாதிரி சந்தேகப்பட மாட்டேன்.” என்று கூறியதோடு, சர்வேஷ் அறை கதவை தடாரென சாத்தினான். 

வெண்பாவை தவிர அங்கிருந்த அனைவருக்கும் சர்வேஷ் கூறியதன் அர்த்தம் புரிந்தது. 

நளனுக்குதான் அதிக மனஉளைச்சல், வெண்பாவுக்கு பாடிகார்டா நளனை அனுப்பிவிட்டு, ஏன் பெற்ற பிள்ளை மீது சந்தேகப்பட வேண்டும், 

கீழ்ஜாதி என்றால் இத்தனை இளக்காரமா? 

அப்படி இருக்க, நளனை ஏன் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்? 

அச்சுதத்தை வருடகாலமாக ஏன் அவரது வீட்டில் வேலைக்கு அமர்த்த வேண்டும்?

பெயரில் மட்டும் நல்லதை வைத்து என்ன பயன், நல்லசிவத்தின் குணம் முழுவது விசமம். 

நல்லசிவம் எப்போது வசமாக சிக்குவாரென்று காத்திருந்தான். இன்னும் சில கேள்விகளும் உண்டு. 

***

 

ஒனக்கா முந்திரி பறக்க பறக்க

மதுகுவோலம் தீனோக்கிய தீனோக்கிய

தேங்கா கொத்தோனு கோரிக்ய கோரிக்ய

வெட்டிலேம் பாக்கும் செவாக்கிய செவாக்கிய

பந்தலு முழுவன் தேரக்கா தேரக்கா

பெண்ணும் செக்கனும் வேர்க்க வேர்க்க

பெண்ணின்டே மோஞ்சு கண்டோக்கிய கண்டோக்கிய

செக்கண்டே பத்ரசு கண்டோக்ய கண்டோக்ய

பெண்ணும் செக்கனும் கேட்கும் கழிஞ்சு

நடனு வரும்போ சிரிக்க சிரிக்க

பெண்ணும் செக்கனும் கேட்கும் கழிஞ்சு

நடனு வரும்போ சிரிக்கிய சிரிக்கிய…’

 

மலையாள மொழியில் வெளியாகிய ஹ்ரிதயம் படத்தின் பாடல் கிராமசங்க மண்டபத்தில் ஒலித்துக்கொண்டிக்க, 

அன்று அந்த ஊரில் திருமணம் வைபவமொன்று, திருமணம் முடிந்த இரவே வரவேற்புக்காக தயாராகியிருந்த மண்டபம் திருமண ஜோடியை வரவேற்க காத்திருந்தது. 

மண்டப வாசலில் பல வண்ணங்களில் கோலமிட்டவளுக்கு அதை இரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை.  

லைனர் இழுத்த கண்ணுக்கு மஸ்காரா நீட்டிய இமையோடு அவள் குறுக்கி குறுக்கி பார்க்கும் அழகில் சர்வேஷின் உள்ளம் குட்டியாகி போனது. 

பந்தலு முழுவன் தெறக்கா தெறக்கா

பெண்ணும் செக்கனும் வேர்க்க வேர்க்க

பெண்ணின்டே மோஞ்சு கண்டோக்கிய கண்டோக்கிய

செக்கண்டே பத்ரசு கண்டோக்ய கண்டோக்ய

பெண்ணும் செக்கனும் கேட்கும் கழிஞ்சு

நடனு வரும்போ சிரிக்க சிரிக்க

பெண்ணும் செக்கனும் கேட்கும் கழிஞ்சு

நடனு வரும்போ சிரிக்கியா சிரிக்கியா…

பாடல் வரிகளில் கிரங்கிய சர்வேஷ்,

 

காதலில் முதல் அடியை எடுத்து வைக்க ஆர்வமாக இருந்தான். 

 

“இஸ்இஸ்… ஸ்ஸ்ஸ்…” என அவளை அழைக்க, 

அவளும், ‘யாராவது நம்மலயா கூப்பிடுறாங்க’ சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தவள்  யாருமில்லையென்று, கோலத்தின் நடுவில் ஓர் அகல் விளக்கை ஏற்றினாள். 

“ஏய் உன்னதான், ப…பல்லி!” என அஸ்கி வாய்சில் பேச, 

‘நானே அவள பல்லினு சொல்லலாமா? நல்ல நேரம் மெதுவா கூப்பிட்டேன்.’ என எச்சில் விழுங்கினான். 

மனதை தட்டி தைரியமாகி, “பல்லவி…” நிதானமாக கூப்பிட்டான். 

சர்வேஷ் குரல் அறிந்தவள், ‘சின்னையா சத்தம் மாதிரி தெரியுதே’ 

அவன் பின்னாடி இருப்பது தெரியாமல் டக்கென்று அவள் திரும்ப, அவன் முகத்தை அருகில் பார்த்தவுடன் ஓர் அடி பின்னெடுக்க, 

“ஏய் ஏய்… பின்னாடி கோலம்” சரி அவ்வளவுதான் பல்லவி கோலத்தில் விழுந்தாள். 

அவள் கையை பிடித்து எழுப்பியவன், “பின்னாடி கோலம் இருக்குன்னு உனக்கு தெரியாதா?” 

இடுப்பு வலியை வெளிக்காட்டாத பல்லவி, ‘ஒரு பொண்ணு பின்னாடி எப்படி வந்து நிக்கணும்ன்னு தெரியாது, இவன் என்னைய கேக்குறான்.’ மனதில் கருகிவிட்டு, 

“கவனிக்கல சின்னையா!” சொன்னாள், அப்பாவி முகத்துடன்.

“எங்கயாவது அடி பட்டுருச்சா, வலிக்குதா?” 

“இல்லைங்க சின்னையா” 

“ஏய்… இப்போ எதுக்கு சின்னையா சின்னையான்னு கூப்பிடுற, உன் அண்ணனும் இப்படிதான்?” நளனின் தங்கை பல்லவி.

“பெரியையா திட்டுவாங்க. எனக்கும் பழகிருச்சு” என பல்லவி வார்த்தைகளை மென்று விழுங்க, 

“இதுக்கு அப்பறம் என்னைய நீ சின்னையான்னு கூப்பிடக்கூடாது.” கண்டிப்புடன் அவன் கூற, அவள் மறுத்து தலையை அசைத்தாள்.

“கோலத்த சரிப்படுத்தணும்.” தலை குனிந்தவாறு மெல்லிய குரலில் கூறினாள். 

“சரி ரெண்டு பேரும் சேர்ந்து சரிபடுத்தலாம்.” 

“நீங்க இதெல்லாம் பார்க்க வேணாம். நான் பார்த்துக்கிறேன். ஐயா ஆளுங்க பார்த்த அவ்ளோதான்.” 

“உப்ப்ப்….” பெரும் மூச்சோடு, கீழே முழுமண்டியில் அமர்ந்து கோலத்தில் பூக்களை அடுக்க ஆரம்பித்தான். நல்லவேளை பூ கோலமாக இருந்தது. மா கோலமாக இருந்தால், கோலத்தின் நிலை!?

அதன் பிறகு பல்லவியும் ஒன்றும் கூறவில்லை. கூறினாள் கேட்பதாகவும் சர்வேஷ் இல்லை. 

நளனை தேடி வந்த வெண்பாவின் கண்களில் அகப்பட்டது என்னவோ சர்வேஷ்தான், அதுவும் பல்லவியின் பக்கத்தில், ‘பல்லவிகூட அண்ணாக்கு என்ன வேலை’

நோட்டம் விட்டவள் அருகிலே வந்தாள். “அண்ணா…என்ன ணா பண்ற?” எப்போதுமே சர்வேஷுடன் செல்லம் கொஞ்சியே பேசுவாள்.

“கோலத்துக்கு பூ போடுறேன், வெண்பா.” என்றவன் முழிக்கும் முழியே சரியில்லை என்றது. 

“கோலத்துக்கு பூ போடுற மாதிரி தெரியலையே! பல்லவிக்கு ரூட்டுவுடுற மாதிரியே என் கண்ணுக்கு தெரியுதுண்ணா” பல்லவி முன்னாடியே கூற, 

பல்லவி டக்கென்று சர்வேஷை அண்ணார்ந்து பார்த்தாள்.

“அப்பாகிட்ட இருந்து பாவமேன்னு உன்னைய காப்பாத்தினே பாரு என்னைய சொல்லணும்” 

“பார்த்து பார்த்து பூவ கோலத்த பார்த்து வை, மாறி என் காதுல வச்சிற போற ணா” வெண்பா நமுட்டு சிரிப்பை உதிர்த்த, 

“ஐ ஏம் பாவம்!” என வார்த்தையின் சத்தம் வெளியே வராதவாறு கூறி தங்கையிடம் இறைஞ்சினான். 

“நீ கடல போடு, நான் இடத்த காலி பண்றேன்” அதற்கு மேல் வெண்பா வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். 

“பல்லவி… வெண்பா சொன்னத…” அவன் முடிக்கும் முன்னாடி,

“நான் பெருசா எடுத்துக்கல அண்ணா!” என தலையில் குண்டை தூக்கிப்போட்டாள். 

“என்னது…? அண்ணாவா!” ஹார்ட் அட்டாக் வரும் நிலையில் சர்வேஷ்.  

“சின்னையான்னு கூப்பிட வேணாம் சொன்னீங்க. அதான் அண்ணான்னு கூப்பிடேன். அதுக்கு ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறிங்க?” 

“பின்ன! அண்ணான்னு கூப்பிட்டா ஷாக் ஆகாம…” நெஞ்சை பிடித்துக்கொண்டான்.  

“ஏன் ஷாக் ஆகணும்?” பவ்யாமாய் கேட்க, 

“யாரவது கட்டிக்கப்போற புருஷன அண்ணான்னு கூப்பிடுவாங்களா?” படபடவென அவன் கூற, 

பல்லவிக்கு உள்ளர்த்தம் புரிந்தாலும், சிறு அச்சத்தோடு, “என்ன சொல்றீங்க, எனக்கு புரியல?” 

“எனக்கு உன்னைய புடிச்சிருக்கு பல்லவி, அப்போ நீதான் எனக்கு பொண்டாட்டி!” அவன் கூறிய வார்த்தைகளின் வேகத்தைவிட, பல்லவியின் இதய துடிப்பின் வேகம் அதிகமானது.  

‘அப்பாடி ஒரு வழியா ப்ரொப்போஸ் பண்ணிட்டேன்.’

பல்லவியிடம் பதில் காணாமல், “உனக்கு புடிச்சிருக்கா என்னைய?” சட்டென்று அவன் கேட்க, பதில் அளிக்காமல் பூக்களை கீழே போட்டபடி எழுந்து சென்றாள். 

அவள் மனதுக்கு சரியாக தோன்றவில்லை. பெரிய வீட்டு காதல் வெறும் மோகத்துக்கு மட்டும்தான் என்பது அவள் மனதில் வேர் ஊன்றிய திண்ணம். 

அதுமட்டுமின்றி பஞ்சயத்தார் ஜாதி விட்டு ஜாதி காதல் திருமணம் செய்தால் அவர்களை நிம்மதியாக வாழ விடுவதில்லை. 

ஆனால், சர்வேஷ் அப்படிப் பட்டவன் இல்லை. நல்லசிவம் குணத்தில் கடுகளவும் அவனில் கலக்கவில்லை. தாய் வளர்மதியை போல தெளிந்த பால். 

நளனை தேடி வந்தவள் திருமண மண்டபம் முழுவதும் அலசிவிட்டாள். அவன் அங்கில்லை. 

வழக்கம் போல அரசமரத்தடி பிள்ளையாரின் அருகில் அமர்ந்திருப்பானென்று அங்கு சென்றாள். 

பிள்ளையார் அரசமரத்தடியில் அமர்ந்திருக்க, அவருக்கு கீழ் தரையில் அமர்ந்திருந்தான் நளன். 

கீழ் ஜாதியென்று சுட்டிக்காட்டும் பொழுது முழுவதுமாய் கலைந்திருந்த அவனது முகம் இன்னும் மாறவில்லை. 

“ஏய்… குண்டா! கல்யாணத்துக்கு வரமா இங்க என்ன பண்ற?” துடுக்குதனமாக கேட்டாலும் அவன் முகம் பார்த்தவளுக்கு பரிதாபமானது. 

“சும்மாத்தான்” வெறும் வாய் வார்த்தையாக, 

“ஸாரி டா, இதுக்கு அப்பறம் இப்படிலாம் நடக்காம பார்த்துக்கிறேன். என் அப்பா கோபவப்படுற மாதிரி நடந்துக்க மாட்டேன். உன்னையும் திட்டு வாங்க விடமாட்டேன்.” சத்தியம் செய்வது போல கூறினாள். 

“சரி நீ கல்யாணத்துக்கு கெளம்பு, நான் அப்பறமா வாரேன்.” 

“எங்கப்பா பேசுனதெல்லாம் தப்புடா ஸாரி, ரியலி வெரி ஸாரி” 

“இதை உங்க அப்பா முன்னாடி பேசுனா, ரொம்ப சந்தோஷப் பட்டுருப்பேன் வெண்பா. நாங்கூட பொறுத்துப்பேன். எங்க அம்மா எவ்ளோ அழுவாங்கன்னு எனக்குதான் தெரியும்…” அதுக்கு மேல் பேசினால் வார்த்தைகள் சங்கடமே! 

“சர்வேஷ் அண்ணா இடையில பேசினான். அதான் நான் பேசல, இல்ல நான் கண்டிப்பா பேசியிருப்பேன். எனக்கும் செம்ம கோபமாகிருச்சு.” 

“சரி வெண்பா. எங்கூட நின்னு பேசுறாத பார்த்தா அதுக்கும் எதாவது சொல்லுவார் உங்கப்பா.” 

“குண்டா உன்னைய விட்டுட்டு நான் என்னைக்கு தனியா என்ஜாய் பண்ணிருக்கேன்.”

அவள் வளைந்து நெளிந்து பேசுவதை வைத்து, “ஏய் கள்ளி, நாளைக்கு ட்ரொர்னமண்ட்டா?” 

“ஆமா டா, எப்படி கண்டுபுடிச்ச?” 

“ஆடி ஆடி பேசுற, நாளைக்கு ஓடப்போறேன்னு கண்ணுல ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுதே!” 

“நீ வேற நானே பயந்து போய் இருக்கேன். நாளைக்கு என்ன பொய் சொல்றதுன்னு தெரியல.

நாளைக்கு சர்வேஷ் அண்ணா வருவான். நீ சீக்கிரமே காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்துட்டா நான் மாட்டிப்பேன். நான் எங்கன்னு அப்பா உன்னைய கேப்பாரு, அதான் பயமா இருக்கு.” 

“நானும் உங்கூட வரணுமா, காலேஜ் கட் பண்ணணுமா?” என அக்கரையாகத்தான் வினவினான். 

“இல்ல, இல்ல… அண்ணா வருவான் எங்கூட, நீ காலேஜ் போ. ஃபைனலியர் வேற எந்த கிளாஸும் நீ கட் பண்ணாத. 

நாங்க வரும்போது உன்னைய பிக்அப் பண்ணிப்போம். நீ வெய்ட் பண்ணு அதுபோதும்.” 

“ஓகேடீ வெய்ட் பண்ணணும், அவ்ளோதானே… பண்ணிட்டா போச்ச.” 

“தேங்க்ஸ் குண்டா” 

“நாளைக்கு விண் பண்ணிட்டுதான் ஊர் பக்கம் வரணும். விண் பண்ணாம வந்த… நானே உங்கப்பா கிட்ட போட்டுக்குடுத்துருவேன்.” 

“ஐய்யையோ… விண் பண்ணலன்னா இந்த பக்கமே வரமாட்டேன் நளமாகாராசா!” 

வெண்பா முன்னே செல்ல, நளன் பின்னே திருமண மண்டபத்துக்கு சென்றான். 

மனிதன் திட்டமிட்டது எல்லாம் சரிவர நடைபெற்றால், பிரம்மனுக்கு ஏது மதிப்பு! அவர் அவர் நெற்றியில் எழுதியது எதுவோ, அதுவே நடக்கும். அதுவே காலத்தின் கட்டாயம். 

****

 

 

வெண்பா ஓட்டபோட்டிக்கு போறா அதுக்கு அப்பறம் என்ன ஆகும்ன்னு அடுத்த எபில பார்க்கலாம். 

 

தொடரும்…


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!