நளவெண்பா 03

eiZ7X2J5395-e74ce52d

காலை எழுந்த வேகத்தில் சர்வேஷ், ஞானேஷ்வரன் வீட்டுக்கு வந்திருப்பதை கூட கவனிக்காமல் வெளியே கிளம்ப, “டேய் சர்வேஷ், அஞ்சு நாளைக்கு அப்பறம் வந்துருக்கேன். போன வேலை என்னாச்சுன்னு கேட்டீயா?” 

தரிசு நிலத்தை பதப்படுத்தி விவசாய நிலமாக மாற்றுவதன் வேலைத்திட்டமாக ஐந்து நாட்கள் அலைந்து திரிந்தான். 

விவசாயத்தில் மிகவும் சவால் மிகுந்த செயல் எதுவென்றால், மிக மிக வறண்டத் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றுவதுதான். நல்ல வளம் மிகுந்த நிலத்திலேயே பயிர் சாகுபடி நாம் நினைக்கும் வகையில் இருக்காது.

ஏனெனில் புழுக்கள் மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதே மிகக் கடினம். இதில் தரிசு நிலமாக இருந்தால், விவசாயம் செய்வது மிக மிகக் கடினம்தான்.

வேலையில் இவ்வளவு பொறுப்பாக இருப்பவன், மனிதாபிமானம் என்று பார்த்தால் நல்லசிவத்தின் ஜெராக்ஸ்.

ஞானேஷ்வரனின் பொறுப்புணர்வை கண்டு சர்வேஷின் மனதில் கொந்தளிப்பு, “இங்க பாரு ஞானேஷ் நீ என்ன என் வேலை விஷயமாவ போயிட்டு வந்துருக்க? விவசாயம் பண்றது எனக்கு ரொம்பவே புடிக்கும். ஆனா ஊர் மக்களை அதட்டி உருட்டி வேலை வாங்குறது. அப்பறம் சம்பளம் கொறவா குடுக்குறது. 

இதெல்லாம் எனக்கு சரிவராது. அதுவும் இந்த மனுஷன் காசுல நான் சோறு திங்குறதுக்கு சாகலாம். அதான் பிடிக்கலனாலும் ஐடில வேலை பார்க்குறேன்.” 

“எதிர்காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வரும். அந்த நேரம் கரண்ட் இல்லாம எப்படி ஐடி வேலை பார்க்கிறேன்னு, நானும் பார்க்கிறேன்.” என ஞானேஷ் விதண்டாவாதமாக பேசினான்.

“எந்த காலத்துல நீ இருக்க, கிரமத்துக்குள்ளயே இருந்த இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்? சோலர் பவர் கண்டுப்புடிச்சாச்சு, இனிவரும் காலம் உப்பு தண்ணீல ஆட்டோ ஓடும். 

அப்படியே நான் விவசாயம் பார்த்துதான் என் பொழப்பு ஓடும்ன்னா, என் அப்பன் காசு ஒருவா கூட இல்லாம வேற ஊருக்கு போய் விவசாயம் பார்ப்பேன்.” இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்பதுபோல பார்க்க, 

வேகமாக அறைக்குள் சென்று அறை கதவை தடாரென்று சாத்தினான் ஞானேஷ்.

வம்பு வளர்ப்பதை பார்த்த வளர்மதியின் மனம் நொந்தது. ஞானேஷ்வரனுடன் அவ்வளவு பேசமட்டார். இருந்தாலும் பெற்ற பிள்ளை மேல் பாசமில்லாமல் இல்லை. சர்வேஷுடன்தான் அதிக பேச்சுவார்த்தை உண்டு.

ஓரமாக வேடிக்கை பார்த்தவர், அவன் அருகில் வந்து, “ஏன்பா, அவன பத்திதான் தெரியுமே, அவன் பேசினாலும் நீ உன் பாட்டுக்கு போயிருக்கலாம்ல, ஏன்யா வீண் வம்பு?” 

“எப்படி மா, உன்ன மாதிரியா?  அப்பா என்ன பேசினாலும், சரியோ தப்போ அதெல்லாம் கேட்டுட்டு கம்முன்னு இருக்கணுமா? என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாதும்மா” என பிடிவாதம் பிடித்தான். 

இதே இடத்தில் ஞானேஷ் இருந்தால், “நம்ம வீட்டு பொண்ணுங்க பேசுற சத்தமே வெளியப்போகக் கூடாதும்மா. சமையல் கட்டுல என்ன வேலை இருக்குன்னு பார்த்து செய், அதை விட்டுட்டு ஆம்பளங்க விஷயத்துல மூக்க நெழக்காதம்மா”  என்று கூறும்போதே வளர்மதி மனம் சோர்ந்துவிடும். பெற்ற அன்னைகூட சாதாரண பெண்தான் அவனுக்கு.

இவ்வளவு நேரம் நடந்த இரண்டு கலந்துரையாடலை ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த நல்லசிவம். “தேவையில்லாம பேசற சர்வேஷ்” என்று அவனிடம் கூறிவிட்டு, வளர்மதியிடம், “மூத்தவனு கொஞ்சமாவது மரியாதை குடுக்க தெரியுதா? சொல்லி வை உன் புள்ளைக்கு!” அதட்டல் அதிகாரத்துடன் கூற, 

“சர்வேஷும் உங்க புள்ளதான் மறந்துறாதீங்க.” என மெல்லிய குரலில் வளர்மதியும் கூறினார். 

அதற்கு சர்வேஷோ, “அம்மா அப்படி சொல்லக்கூடாது” தந்தையின் புறம் திரும்பி, “சர்வேஷும் உங்க புள்ளதான். மறந்துறாதீங்க” என அவரின் காதில் உரைக்க சத்தமாக சொன்னான். 

அவனுடைய சத்தம் நல்லசிவத்தின் காதை கிழிக்க, “டேய்! டேய்…” 

“பை ப்பா…!” என டிமிக்கியை கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான். 

குஷியா புல்லட்டை ஸ்டார்ட் செய்தவன் கண்களுக்கு குளிர்ச்சியாக பல்லவியின் தரிசனம். 

நீலநிற காட்டன் சடிதாரை அணிந்து இடை தாண்டி நீண்ட கூந்தலை முன்னாடி இட்டு ஓரிரண்டு புத்தகத்தை மார்போடு இறுக்க அணைத்து காலேஜுக்கு செல்பவளை வழிமறித்தான். 

“பல்லவி… பஸ் ஸ்டான்டுக்குதானே போற, வா நான் விடுறேன்.” 

அவள் பைக்கை கடந்து செல்ல முயற்சிக்க, “ஏய்… நான் கேக்குறேன்ல” 

“நான் போகணும், வழிவிடுங்க.” தலைகுனிந்தவாறே.

“முடியாது, பைக்ல ஏறு”

“நீங்க நெனைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்ல. உங்க இஷ்டத்துக்கெல்லாம் வர முடியாது.” 

“நீ சொன்னா கேக்கமாட்ட” அவளது கையை பிடித்து, “ஏறு பைக்ல” 

“கைய விடுங்க. யாரும் பார்த்தா தப்பா நெனைப்பாங்க.” குரல் லேசாக பிசிர் தட்டியது. 

“நீ நெனைக்கிற மாதிரி பையன் நான் இல்ல. என் கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் நான் உன்ன பார்த்துப்பேன். நீ என்னைய நம்பலாம்.” அவன் கண்களில் நேர்மை தெரிந்தது. 

“அம்மாகிட்ட சொல்லுவேன்.” அவள் அழ ஆரபிக்க, சர்வேஷ் பல்லவியின் கைவிடுத்து சிரிக்க ஆரம்பித்தான். 

“காலேஜ் படிக்கிறியா இல்ல யூகேஜி படிக்கிறியா. அம்மா கிட்ட சொல்லுவேன்னு சொல்ற, சரி சீக்கிரம் சொல்லிரு” என்று கேட்டு முடிக்கும் முன்னதாக வீட்டிற்கு ஓட ஆரம்பித்தாள். 

சர்வேஷ் மீண்டும் சத்தமாக கூறினான். “அம்மாகிட்ட சீக்கிரம் சொல்லிரு” 

அதன்பின் இவன் வருகை பார்த்துக்கொண்டிருந்த வெண்பா கைபேசியில் குறுஞ்செய்தி விடுத்தாள்.குறுஞ்செய்தியை பார்த்தவன் தாமதிக்காமல் அங்கு விரைந்தான். 

“ஏன் ணா இவளோ லேட்டு, நளன வண்டில காலேஜுக்கு அனுப்பி வச்சிட்டேன். என்னைய யாரும் பார்த்துருவாங்கன்னு முக்காடு போட்டுட்டு நிக்கிறேன்.” 

“ஸாரி வெண்பா ரொம்ப முக்கியமான வேலை முடிச்சிட்டு வர கொஞ்சம் லேட்டு ஆகிட்டு” 

“பல்லவிய சைட் அடிகிறதுதான் ரொம்ப முக்கியமான வேலையா?” இடுப்பில் கைக்குற்றி முறைக்க, 

“சரி சரி லேட் ஆகாது வா கெளம்பலாம்.” அவளுடன் வழியாக கிளம்பினான். 

போட்டி ஆரம்பிக்க இன்னும் நான்கு மணிநேரம் உண்டு.  நாகப்பட்டினத்திலிருந்து திருச்சியை அடைய சாதாரணமாக மூன்று மணி நேரமாகும். சரியாக ஒருமணி நேரத்திற்குள் வெண்பா அங்கு நின்றே ஆகவேண்டும்.  இல்லையென்றால் வெய்ட்டிங்க் லிஸ்டில் உள்ள நபரை எடுப்பார்கள். 

“அண்ணா கொஞ்சம் ஸ்பீடா போ” 

“சீக்கிரம் போயிரலாம் டா நீ டென்ஷன் ஆகாம இரு. அப்போதான் விண் பண்ணலாம்.” அண்ணனின் முதுகில் மெதுவாக சாய்ந்து கொண்டாள். 

அவளின் துக்கத்தை உணர்ந்தவன், “ஏன் வெண்பா சோகமா இருக்க?” 

“எங்க டீம் எல்லாரும் நேத்தே திருச்சிக்கு போயிட்டாங்க. நான் எப்பவும் லேட்டு ணா” 

“ஃபீல் பண்ணாத டா…” 

“ஏன் ணா அப்பா இப்படி இருக்காரு. நம்ம கிராமத்துல பொண்ணா பொறந்தது தப்பா ணா…” 

“அந்த மனுசன் பேச்ச கண்டுக்காத… இந்த அண்ணா இருக்குற வரைக்கும் உனக்கு புடிச்சதெல்லாம் செய்ய விடுவேன் டா” 

“தேங்க்ஸ் ணா” என்றவள் கூறும்போது வெண்பாவின் விழிநீர் சர்வேஷின் முதுகை நனைக்க, உடனே வண்டியை ஓரமாக நிறுத்தினான். 

“ஏய் நீ ஹேப்பியா இருக்கணும்னுதானே நானே அழச்சிட்டு போறேன். நீ அழும்போது எனக்கு மனசே கஷ்டமா இருக்கு ப்ளீஸ் அழாத வெண்பாம்மா” என லேசா தலையை வருடினான். 

“அண்ணா போலாம். லேட் ஆகுது.” அதன் பிறகு வேகமாக வண்டியை செலுத்த ஆரம்பித்தான். 

ரன்னிங்க் ஈவன்டிட்டிற்கு வீட்டுக்கு தெரியாமல்தான் அழைத்து செல்கிறான். வீட்டுக்கு தெரிந்து அழைத்து சென்றால், வெண்பாவை காலேஜுக்கு கூட நல்லசிவம் அனுமதிக்கமாட்டார் என்கிற ஓரே காரணத்திற்கு மட்டும்தான் யாருக்கும் தெரியாமல் அழைத்து செல்கிறான். 

இங்கு நளனோ, வெண்பா போட்டிக்கு சென்றுவிட்டாளா, ஓடினாளா, வென்றாளா? என பல யோசனைகளுடன் ஒரு கவலையும் இருந்தது. 

வீட்டில் எவ்வளவு வசதி இருந்தும் பிடித்தவையெல்லாம் அவளது காலடியில் கிடந்தும் திறமைக்கான அங்கீகாரத்திற்கு வெண்பாவின் தந்தை நல்லசிவம் குறுக்கே நிற்பதுதான் அவனது கவலை. 

வெண்பாவை மனமுடிப்பவனாவது அவளது மனநிறைவான மகிழ்விற்கும் திறமைக்கும் துணை நிற்க வேண்டுமென மனதில் மனமுருக முருகனை வேண்டிக்கொண்டான்.

கல்லூரி முடிவடைந்து நளன் காத்துக்கொண்டிருந்தான். மாணிக்கமும் வண்டியோடு காத்திருந்தார். வெண்பாவின் தோழி நிகிதாவும் வண்டிக்காக காத்திருந்தாள். 

நளனை கவனித்தவள், “அண்ணா, ஏன் இன்னும் வீட்டுக்கு போகாம நிக்குறீங்க?” 

“வெண்பாக்கு வெய்டிங், நீ ஏன் மா நிக்கிற?” 

“அடுத்த மாசம் அண்ணாக்கு கல்யாணம், வீட்ல எல்லாம் ஷோப்பிங் போயிருக்காங்க. வரும்போது பிக்அப் பண்றேன்னு சொன்னாங்க. அதான் அண்ணா.” 

“ம்…” தலையை மட்டும் ஆட்டினான். 

அதன் பிறகு குனிந்த தலை நிமிரவில்லை. புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தான் நளன்.  நிகிதாவும் தரையையே பார்த்த வண்ணம் இருந்தாள். 

நிகிதாவின் வீட்டாட்கள் வர, “அண்ணா போயிட்டு வாரேன்.” 

“சரி மா” என கூறியதோடு, சர்வேஷ் புல்லட்டில் வேகமாக நுழைந்தான். 

பைக்கில் இருந்து இறங்கிய வெண்பா, நிகிதா காரில் ஏறுவதை கண்டு கையை காண்பித்துவிட்டு நளனை உரிமையோடு அவளது கண்கள் முறைத்தது. 

அதனை உணரந்தவன் வேண்டுமென்று, “பை நிகி” என சத்தமாக கூறினான். அதற்கு நிகியும் கையை காட்டினாள். 

சர்வேஷ், “ஏய் என்ன பார்த்துட்டு இருக்க, சீக்கிரம் நளன கூட்டிட்டு வீட்டுக்கு கெளம்பு. நான் வழக்கமா வர டைமுக்கே வாரேன்.” 

காருக்குள் வேகமாக சென்று பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள். நளனுக்கோ அளவில்லா ஆர்வம், “ஏய் ட்ரொர்னமண்ட் என்னாச்சு?” 

“விண் பண்ணிட்டல” 

“ம்ம்ம்” முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டாள். 

“ஏய் என்னடீ ஆச்சு, சந்தோஷமே இல்ல உன் முகத்துல” 

“டேய் குண்டா! நிகிதாகூட உனக்கென்ன பேச்சு.”  உரிமையான முறைப்பும் கூட.

“ஐய்யோ… நீ என்னடீ, நான் சும்மா உன்னைய குழப்புறதுக்கு அவளுக்கு பை காட்டினேன். அவ்ளோதான்!” 

“அதோட நிறுத்திக்கணும். புரிஞ்சிதா?” முறைப்பு மட்டும் குறையவேயில்லை.

“ஓகே மேடம். ட்ரொர்னமண்ட் என்னாச்சுன்னு இப்பயாவது சொல்லுவீங்களா?” 

“செகண்ட் ப்ளேஸ்” என்றவள் முகம் லேசாக வாடியது. 

“என்னது? செகண்ட் ப்ளேஸா! அடிங்கொய்யால, நேந்து என்னைய ஓட விட்டுட்டு, நீ இன்னைக்கு செகண்ட் ப்ளேஸ் வாங்கிருக்கியா?” வெண்பா இதுவரை முதல் இடத்தை தவறுவிட்டதே இல்லை. நளனுக்கு கவலை குறைவாகவும், ஆத்திரம் அதிகமாகவும் வந்தது. 

தலை கவிழ்ந்து, “ம்…” 

“உனக்கு கொழுப்போறிப் போச்சு. அதான் ஃபஸ்ட் ப்ளேஸ்ல இருந்து செகண்டுக்கு போயிட்ட.” 

“நானே கவலைல இருக்கேன் நீவேற குண்டா” 

அவள் கவலையை புரிந்து கொண்டவன் அதற்கு மேல் அவளை திட்டுவதாக இல்லை. “செகண்ட் ப்ளேஸ்னாலும் ஃபைனலுக்கு செலக்ட்தானே. அப்பறம் என்ன விடு?” 

“நல்லாதான் ஓடினேன். அப்பா முகம் திடீர்னு ஞாபயம் வந்துச்சா… அவ்ளோதான் போச்சு! 

கஷ்டப்பட்டு அப்பாக்கு தெரியாம ப்ராக்டிஸ் பண்ணி, எவ்ளோ ரிஸ்கெடுத்துருப்பேன்.” 

“சரி விடு, பைனல் எப்போ?” 

“நெக்ஸ்ட் மந்த் சென்னைல” 

“அதுல ஃபஸ்ட் ப்ளேஸ் எடுக்க எப்படியெல்லாம் ப்ராக்டிஸ் பண்ணலாம்ன்னு மட்டும் யோசி” 

சிறிது நேரம் அமைதியாக கழிந்தது. 

நிகிதாவுடன் நளன் பேசுவதை வெண்பா பார்த்தால்தானே, மனதுக்குள் ஏதோ தவிப்பு, “குண்டா உன்னோட ஃபியூசர் வைஃப் எப்படி இருக்கணும்னு நெனைக்கிற?” 

அவள் ஏன் இப்படி கேட்கிறாள் என்று அவனுக்கு புரியவில்லை. இருந்தாலும் அவன் மனதில் பட்டதை கூறலானான்.

“என் பொண்டாட்டி அழகா இருக்கணும்ன்னு எந்த கனவும் இல்ல. பட் என் குடும்பத்தோட ஒத்து போகணும். அப்பறம் என்னோட சம்பாத்யத்துக்கு ஏத்த மாதிரி குடும்பம் நடத்தணும். அவ்ளோதான்!” 

உண்மையாகவே அவன் மனதில் வருங்கால மனைவி பளபளக்கும் பால் நிறத்தில் கயல்விழியாய் செவ்விதழோடு இருக்குவேண்டுமென்ற ஆசையே இல்லை. ஆனால் வெண்பாவோ இவ்வர்ணனைக்கு ஒப்பானா பாலில் செய்த பளிங்கு சிலை. 

சர்வேஷ் எப்பொழுதும் போல வெண்பா வெற்றியீட்டிய கேடயத்தை நளனின் வீட்டிற்கு எடுத்து சென்றான். 

வீட்டுக்குள்ளே பல்லவி கல்லூரி முடிந்து உடை மாற்றுவதற்கு அப்போதுதான் கதவை சாற்றினாள். சர்வேஷ் கதவை தட்ட, “யாரு?” என்றாள், எரிச்சலோடு.  

“நான்தான் சர்வேஷ்” 

‘இவருக்கு ஒரு தடவை சொன்ன புரியாதா, ச்சே!’ 

உடையை சரிபடுத்தி கதவை திறந்தவள், “ஏன் இங்க வந்தீங்க.” 

கலைந்த கேசமும் சோர்ந்த முகத்தையும் அவன் இரசிக்க மறக்கவில்லை. தன்னவளை கண்களாலே மேலிருந்து கீழ் அவளை அளப்பது இவ்வேளை தவறென்றது அவனகம். பார்வையை திசை மாற்றினான். 

அவனுடைய பார்வையை தப்பாக உணர்ந்தவள், “இங்க பாருங்க, அம்மா அப்பா வீட்ல இல்லாத நேரத்துல வீட்டுக்கு வார பழக்கம் வச்சுக்காதீங்க. எனக்கு கெட்ட கோபம் வரும், எல்லா நேரமும் நான் பொறுமையா இருப்பேன்னு நெனைக்காதீங்க.” என குரலை உயர்த்தியே கூறினாள். 

அவள் குரலின் பொருள் உணர்ந்த சர்வேஷ் சங்கடமாக கருதினான். அவனை இவ்வளவு கீழ்தரமாக நினைப்பாளென்று துளியளவும் அவன் நினைக்கவில்லை.

சற்றுகோபமாகவே, “ஏய்! வாயமூடு, நான் ஒண்ணும் தெருப்பொறுக்கி கெடையாது. எங்க அம்மா என்னைய நல்லாதான் வளர்த்து இருக்காங்க. தப்பான நோக்கத்தோட நான் இங்க வரல.

முதல்ல அதை புரிஞ்சுக்கோ.” கூறிவிட்டு விறுவிறுவென சென்று பைக்கில் இருக்கும் கேடயத்தை எடுத்து பல்லவியிடம் கொடுத்தான். 

பல்லவிக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது. வெண்பா ஓட்டபந்தயத்தில்  வெற்றி பெற்ற சான்றிதழில்களும், கேடயங்களும் வெற்றிக்கிண்ணங்கள் அனைத்தும் அவர்களது வீட்டில் இருப்பது  

“இதை கொடுக்கதான் வந்தேன். இதை எடுத்துட்டு எங்க வீட்டுக்கு போகமுடியாது. அச்சுமாவும் மாமாவும் வீட்ல இல்லேன்னு தெரிஞ்சுருந்தா, கண்டிப்பா வீட்டு பக்கம் வந்துருக்கமாட்டேன்.” 

மனதளவில் பல்லவி நொந்தாள். இப்பேர்பட்டவனையா இவ்வாறு பேசினோம் என்று. “நான்தான்…” 

அவளை பேச விடுவதாக இல்லை சர்வேஷ், “காலைல கைய புடிச்சேங்குறதுக்காக தப்பா நெனைச்சுட்டல்ல, நான் பெரியடத்து பையனவே இருந்துட்டு போறேன். ஆனா ஒரு பொண்ணு தனியா இருக்கும்போது என் வீரத்த காட்டுற அளவுக்கு நான் ஒண்ணும் தப்பானவன் இல்ல.

காதலிக்கிற பொண்ண தப்பா பார்க்கமாட்டேன். கல்யாணத்துக்கு அப்பறம்கூட உன்னைய காதலியாதான்டீ பார்ப்பேன்.” சர்வேஷின் கண்களின் இரத்த நாளங்கள் சிவந்திருந்தது. 

பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு அணைத்தான். அவள் அருகில் வந்து, “என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு காலைல உன் கைய புடிச்சது தப்பு, மன்னிச்சிரு!

எத்தன நாள் ஆனாலும் உனக்காக வெய்ட் பண்ணுவேன். முடிவு நல்லதா இருக்கும்ன்னு நம்புறேன்.” என கமறிய குரலில் கூறிவிட்டு விறுக்கென்று சென்றான். 

கதவை சாற்றி தரையில் அமர்ந்தவள் மனம் நெருடியது. சர்வேஷை ஏன் அப்படி நினைத்தேன்று நொந்தது. 

சர்வேஷ் ப்ரபோஸ் செய்த நாளிலிருந்து உறக்கம் தொலைத்தவள் இனியும் உறங்குவாளா? 

காருக்குள், “டேய் குண்டா ரொம்ப லேட் ஆகிருச்சுல இன்னைக்கு என்ன நடக்குமோ தெரியல?” 

“நம்ம மாணிக்கம் மாமா இருக்குற வரைக்கும் நாம எதுக்கு பயப்படணும்” என கார் ஓட்டும் மாணிக்கத்தை பார்த்து அசடு வழிய, 

“ஐய்யோ தம்பி! என்னைய விட்டாபோதும். அரைமணி நேரத்துக்கே அக்குவேரு ஆணிவேரு ஆக்குவாரு. இன்னைக்கு ரெண்டு மணிநேர லேட்டு, என்ன நடக்குமோ தெரியல!” கூறி முடிக்க, வண்டி சரியாக வீட்டு வாசலில் நின்றது

ஞானேஷ் கையை முறுக்க, நல்லசிவம் சாய்வுநாட்காலியில் அமர்ந்திருந்தார். 

முகத்தில் படபடப்பு கொட்டிக்கிட்ட அச்சுதமும் வளர்மதியும் பரிதவிப்போடு நல்லசிவத்தை எட்டிப் பார்த்த வண்ணம்.

****