நளவெண்பா 04

IMG-20220731-WA0000-4bcec761

 

வண்டியை விட்டு இருவரும் இறங்கிக்கொண்டனர். வெண்பா சற்று படபடப்பாக இருந்தாலும் நல்லசிவத்தின் அருகில் சென்றாள். 

“அப்பா… இன்னைக்கு காலேஜ்ல ஸ்பெஷல் கிளாஸ். அதான் லேட் ஆகிட்டு.” 

“ஹான்… எந்த பாடத்துல கிளாஸ் வச்சாங்க?” எகிரும் தொனியில் ஞானேஷ். 

“ஹெர்பல் அஸ்த்தெடிக்” 

“ஓ… யார் காதுல பூ சுத்தலாம்ன்னு பார்க்குற, நீ காலேஜுக்கு போகவே இல்ல! நான் வந்தேன் காலேஜுக்கு நீயும் இல்ல, இவனும் இல்ல” என ஞானேஷ் கூறியது, வெண்பாவின் வயிற்றில் புளியை கரைத்தது. 

ஞானேஷ் வந்த வேளை நளன் ப்ராக்டிகல் செய்ய சித்த மருத்தகம் வரை சென்றிருந்தான். 

“க்கும்…” தொண்டையை செருமிய நல்லசிவம், “அவனோட அப்படியே வெளிய போயிரு” உரக்க கூறினார். 

தலையும் வாலும் புரியாத வெண்பாவுக்கு குபீர் என்றானது. மெய் அறியாது விழித்தாள். நளன் அதற்குமேல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தான். 

“அப்பாஆஆஆ….” தணிந்த குரலில் வெண்பா. 

“என்னடீ அப்பா! குடும்ப மானத்தையே சந்தி சிரிக்க வச்சிட்டு. எவ்வளவு தைரியமா வந்து நிக்கிற. இவனோட ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிற அளவு நீ போயிட்டல!” நல்லசிவத்தின் ஜெராக்ஸ் ஞானேஷின் வழியே நன்கு வேலை செய்ய ஆரம்பித்தது. 

“அண்ணா… என்ன சொல்ற?” மேலும் வியப்புதான் வெண்பாவுக்கு.

“நான் உண்மையதான் சொல்றேன்.” 

“நான் திருச்சி ட்ரொர்னமண்டடுக்கு போயிட்டு வாரேன். கண்ட மாதிரி பேசாத ணா. அப்பாக்கு புடிக்காது. அதான் அண்ணாகூட யாருக்கும் தெரியாம போயிட்டு வாரேன்.” வெண்பா குரலை உயர்த்தி பேச, 

“இந்த ஊரே உன்னையும் அவனையும் ஒரு மாதிரியாதான் பேசுது. காலேஜ்ல என்ன கூத்து அடிக்கிறேன்னு எனகொன்னும் தெரியாம இல்ல. உன்னைய அவன் வெண்பான்னு கூப்பிடுவான்னு நல்லாவே தெரியும்.” நல்லசிவத்தின் சத்தமும் அதிகரிக்க, அக்கம் பக்கம் இருக்கும் அங்காளி பங்காளிகளெல்லாம் பெரிய வீட்டு வாசலில் ஒன்று கூடினர். 

அத்தோடு வெண்பா, சர்வேஷுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தாள். அவனோ ஆற்றங்கரை மணலில் சாய்ந்தவாறு, பல்லவி அவனை தப்பாக எண்ணியதை நினைத்து நொந்துகொண்டு போனை சைலன்ட் மோடில் போட்டிருந்தான். 

இவ்வளவு நேரம் கோபத்துடன் பொறுமையாக இருந்த நளன் அதற்கு பொறுமையை கடைபிடிக்க முடியவில்லை. “சின்னையா நீங்க நெனைக்கிற மாதிரி ஒண்ணும் நடக்கல…” அதற்கு மேல் நளனை பேசவிட்டால்தானே நல்லசிவம்,

“டேய் டேய்… வாய மூடு வெண்பாவ வளைச்சு போட்டு உங்க அப்பன் விட்ட சொத்தெல்லாம் நீ சுருட்டலாம்ன்னு பார்க்குறியா? 

அப்பனுக்கு தப்பாம பொறந்துருக்க டா. அவன மாதிரியே கல்யாணம் பண்ணிட்டு வந்துருக்கல.” என நல்லசிவம் கூறும் வார்த்தைகள் வளர்மதி, அச்சுதத்தை தவிர ஏனைய மூவருக்கும் புரியவில்லை. 

சற்று கோபமாகவே, “ஐயா! நீங்க சொல்றது எனக்கு புரியல. என்னையும் வெண்பாவையும் நீங்க தப்பா நெனைக்கிறிங்க. எனக்கும் வெண்பாக்கும் கல்யாணம் ஆகல. இதுதான் உண்மை.” என ஏற்றிய கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வதை போல கூறினான் நளன். 

அவ்வேளை நல்லசிவம் ஞானேஷின் முகத்தை அண்ணார்ந்து பார்க்க, “என் அப்பாவயே எதிர்த்து பேசுவியா டா!” என நளனை அடிக்க ஞானேஷ் கையை ஓங்கினான். 

அச்சுதம் பதறிப்போனார். “டேய் தம்பி…” என வளர்மதி சத்தமிட, 

இலகுவாக கையை பற்றினான் நளன். “நான் எதிர்த்து பேசல, பேசாம இருந்தா, நாங்க தப்பு செஞ்சதாகிரும். அதனாலதான் பேசுறேன்.” வேகமாக ஞானேஷின் கையை உதறினான். 

“கீழ்ஜாதி பயலே, என் புள்ள கையவே புடிக்கிற அளவுக்கு தைரியமா?” கடுங்கோபமாக நல்லசிவம் பேச, 

“எதுயா கீழ்ஜாதி, அடிக்க வந்தது தப்பில்லல, கைய புடிச்சது தப்பா?” நளன் கூறியதுபோல் கேட்கும் கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. 

அச்சுதம் மறுத்து தலையை அசைத்தார் அதுக்குமேல் பேசதே என்று.

“ஸாரி நளன், நீ வீட்டுக்கு போ  நான் பார்த்துகிறேன். சர்வேஷ் அண்ணா வந்ததும் நான் விளக்கமா சொல்றேன்.” என வெண்பா இப்பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தாள். ஆனால் நளன் வீட்டுக்கு போகவில்லை.

“அவன் என்ன பெரிய புடுங்கியா, அவன் வந்ததும் பேசுறதுக்கு என்ன இருக்கு?” ஞானேஷின் பேச்சை கண்டுகொள்ளாமல் வெண்பா வீட்டுக்குள் நுழைய முற்பட, 

நல்லசிவம் சினத்தோடு, “அவள கழுத்த புடிச்சு வெளிய தள்ளுடா” என கட்டளையிட, எதிர்பாராவிதமாக ஞானேஷ் வெண்பா வேகமாக தள்ளிவிட்டான். 

காலையில் இருந்து பைகில் சென்ற களைப்பு ஒருபுறம் ஓடிய களைப்பு மறுபுறமென இருக்க வேகமாக தள்ளியதில் நன்றாகவே கீழே விழுந்தாள். 

பதறிப்போய் வளர்மதி, அச்சுதம், நளன், வெண்பாவின் அருகில்.  நளனும் வளர்மதியும் மெதுவாக தூக்கிவிட்டனர். அச்சுதம் கைகாலில் மண்ணை தட்டிவிட்டார். 

“நம்ம பொண்ண நம்ப மாட்டீங்களா? அவ எந்த தப்பும் பண்ணிருக்கமாட்டா, அப்பறமா பேசிக்கிலாம். இப்ப உள்ளபோக விடுங்க.” என்று நல்லசிவத்திடம் வளர்மதி இறைஞ்சினார். 

“இப்படிதான் உன் அண்ணனுக்கும் வக்காலத்து வாங்கின, கடைசில என்னாச்சு?  கடைசிவரைக்கும் எனக்கு பொண்டாட்டியா இருக்கணும்னு ஆச பட்டா அப்படியே வாயமூடிக்கிட்டு உள்ள போயிரு” என்று நல்லசிவம் மிரட்ட, வேறு வழியின்றி வளர்மதி கண்ணை கசக்கியபடி வீட்டுக்குள் சென்றார். 

“அப்பா உங்கமேல சத்தியமா திருச்சி ட்ரொர்னமண்டுக்குதான் போனேன். எனக்கு செகண்ட் ப்ளேஸ் பா. என்னை நம்புங்க பா.” அழ ஆரம்பித்தாள். 

“இதுக்கு மேலயும் உன்ன நம்புறதுக்கு என்கென்ன பைத்தியமா?” என வெண்பாவிடம் உக்கிரமாக கூறி, “ஞானேஷ் அந்த ஃபோட்டோவ காட்டு” என்க, அவன் கைபேசியில் உள்ள புகைப்படத்தை காட்டினான். 

அதில் வெண்பா தலையில் முக்காடு இட்டிருக்க, அருகில் சர்வேஷ் கறுப்பு நிற டீ சர்ட் உடன் தலையில் ஹெல்மட் இட்டு பின்புறமாக நின்றுகொண்டிருந்தான். 

நின்றிருந்த இடமோ திருச்சி பதிவு திருமணம் நடத்தி வைக்கும் அலுவலக வாசல். சர்வேஷ் ஹெல்மட் அணிந்து பின்புறமாக நின்றிருந்ததும், அதே போல கறுப்பு நிற டீ சர்டை நளன் அணிந்திருந்ததுமே இவ்வளவு பிரச்சனைக்கு காரணமாக இருந்தது. 

உடனே வெண்பா, “அண்ணா, இது சர்வேஷ் அண்ணா, திருச்சிக்கு போகும்போது மழை பெஞ்சுது அதான் ரெஜிஸ்டர் மேரேஜ் ஆஃபிஸ் வாசல்ல ஒதுங்கி இருந்தோம். அதுக்குபோய் ஏன் அப்படி எல்லாம் பேசுற.” கண்ணீர் வழிந்த வண்ணம். 

அண்ணன் தங்கை அருகில் இருந்தால்கூட சேர்த்து வைத்து பேசும் உலகமடா இது!

“என் ஃப்ரெண்டு ஆகாஷ்தான் ஃபோட்டோ எடுத்து அனுப்புனான். நீ கைய புடிச்சு பேசுறத பார்த்துட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டுதான் எனக்கு போன் பண்ணான்.” 

புகைப்படம் அருகிலிருந்து எடுத்திருந்தால் கூட பரவாயில்லை. தூரமாக இருந்தல்லவா ஃபோடோ எடுத்திருந்தான் அந்த படுபாவி!

“இவ்ளோ சந்தேகப்படுறீங்க! அப்பறம் எதுக்கு என்னை போய் அவளுக்கு துணையா அனுப்புறீங்க. என்னையும் கேவலப்படுத்தி பெத்த பொண்ணையும் கேவலப்படுத்தி!ப்ச்…”  நளன் வெண்பாவை பற்றிய கவலையில்.

“என்ன ராசா ஐயாவ எதிர்த்து பேசுற. நமக்கு இதெல்லாம் தேவையா மன்னிப்பு கேட்டு வந்துரு” என அச்சுதம் மகனிடம் கெஞ்ச, தற்பெருமை நல்லசிவம் மீசையை முறுக்கினார். 

‘இதுக்கு மேல நான் பொறுமையா இருக்கமாட்டேன்.’ நளன் மனதின் எண்ண ஓட்டம். 

“அம்மோவ் நான் எதுக்கு மன்னிப்பு கேக்கணும். அதுவும் என் மாமனார்கிட்ட” நளன் நல்லசிவத்திற்கு ஹார்ட் அட்டாக்கை வரவழைக்க, 

அவரின் முறுக்கிய மீசை மானம் கப்பல் ஏறி கவிழ்ந்தது. 

நல்லசிவத்திற்கு மட்டுமா ஹார்ட் அட்டாக் அங்குள்ள அனைவருக்குமே, வெண்பாவுக்கு தலையே சுற்றுவதுபோல இருந்தது. 

ஞானேஷும் நல்லசிவமும் ஒரே நேரத்தில், “டேய் டேய்… யாரு யாருக்கு மாமா!” 

“இப்போதானே நீங்க சொன்னீங்க எனக்கும் வெண்பாக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு மறந்துடீங்களா மச்சான்.” கடுங்குரவில் கிண்டல் செய்தான். 

“டேய்” என பெரிய மச்சான் ஞானேஷ். 

“நளன் நீ என்ன பேசுற?” அதிர்ச்சியில் வெண்பா. 

“நான் சரியாதான் பேசுறேன் நீ கொஞ்சம் பொறு” நளன் கையை காட்ட, 

ஞானேஷ் வெண்பாவை பார்த்து, “பார்த்தியா…  அவன் வாயாலேயே ஒத்துகிட்டான்.” 

தன்னால் நளனுக்கு அவமானம், அவமானம் தாங்காத நளன் கோபத்தில் பேசும் வார்த்தைகள்   வெண்பாவுக்கும் கோபம் பொய்யை உண்மை ஆகுகிறானென்று. 

வெண்பா சர்வேஷுக்கு காத்திருக்க அவனை காணாத வருத்தம். ஓரே நேரத்தில் ஒருத்தி எத்தனை உணர்வுகளை தாங்கிக்கொள்வது!

“அவன் கோவத்துல பேசுறான் அண்ணா.”  அழுது அழுது கண்ணீர் ஓய்ந்து போய்ந்திருந்தது. 

“என்னைய நடிச்சே ஏமாத்திட்டா, என் முன்னாடி நல்லா இருந்துட்டு நான் இல்லாத நேரம் அவன் தோல்ல கை போட்டு பேசுறதென்ன, மேல்ல கை போட்டு பேசுறதென்ன! 

இப்போ ஊரே என்னைய பார்த்து சிரிக்கிற அளவுக்கு வச்சிட்டா. இதுக்கு மேல இந்த வீட்ல அவளுக்கு இடமில்ல. அவள வெளிய போ சொல்லு” முகத்தை மறுபுறம் திருப்பியவாறு நல்லசிவம். 

“காது கேக்கலயா, இல்ல தமிழ் தெரியலயா?” ஞானேஷ் குத்தலாக சொன்னான். 

“அப்பா, நீங்க பெத்த புள்ளமேல நம்பிக்கை இல்லயா?” 

“இல்ல… இருந்ததெல்லாம் குழி தொண்டி பொதச்சுட்ட!” அதற்கு மேல் என்ன கூறுவதென்ன தெரியவில்லை அவளுக்கு. 

வெண்பாவை நளன் வீட்டுக்கு கூட்டிச்செல்ல தயார்நிலையில். 

ஒரு மணிநேரத்துக்கு மேல் ஆற்றங்கரை மணல் முதுகை அறிக்க எழுந்து போனை பார்த்தான். 

வெண்பா குறுஞ்செய்தியில், ‘அண்ணா சீக்கிரம் வீட்டுக்கு வா’ என பத்துக்கு மேல் குறுஞ்செய்தி. 

சற்று பதற்றம்தான் அவனுக்கு, ஓட்டபோட்டிக்கு சென்றது தந்தைக்கு தெரிந்து வசை மழையில் நனைகிறாளென்று பயத்தில் புல்லட்டை வேகமாக எடுத்து சென்றான். 

வந்து பார்த்தால், மழை பெய்து முடிந்து தலைக்கு மேல் வெள்ளம்! 

வீட்டு வாசலில் கூட்டம், அரசல் புரசலாக பேசுவதை கேட்டவனுக்கு மேலும் பதற்றம். என்ன நடந்ததென்று ஒழுங்காக புரியவில்லை. 

கூட்டத்தில் இருப்பவர்களிடம் எப்படி கேட்பது. சுற்றியும் தெரிந்தவர்கள்தான். யாரிடம் கேட்பது? 

நல்ல வேளை அவன் நண்பனின் தந்தை ஒதுங்கி இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் என்னவென்று வினவ, நடந்ததை கூறினார். 

சர்வேஷின் தலையில் இடியே வந்து விழுந்தது. கூட்டத்தை களைத்து உள்ளே சென்றான். 

“வெண்பா…! வா நான் உன்ன வீட்டுக்கு கூட்டிப்போறேன்.” என அவனது கையை நீட்டி, அவளது கையை பிடிக்கக் காத்திருந்தான்.  இதனை எப்படி ஏற்றுக்கொள்வது? அவன் கையை பிடிக்கவும் வேண்டும் ஆனால் வேண்டாம்! அவளோ திக்பிரமை பிடித்ததது போல உறைந்து நின்றாள். 

வீட்டார் சர்வேஷை கண்டது. “வாடா… தங்கச்சிய கூட்டிக் குடுத்தவனே!” என ஞானேஷ் வேண்டா வார்த்தைகளை கூற, 

கொந்தளித்த சர்வேஷ் வேகமாக சென்று ஞானேஷின் சட்டை காலரை பற்றினான். “யாரா பார்த்து என்ன டா சொல்ற?” பற்களை நறநறத்தன.

“எடுடா கைய, அவனுக்கு பைக்க குடுத்து வெண்பாவையும் கூட அனுப்பி வச்சிருக்க. நீயெல்லாம் ஒரு அண்ணனா? கூடபொறந்தவளுக்கு பண்ற காரியமா இது.” கூறியது ஞானேஷ்.

“கூட்டிக்குடுத்துட்டு ஏன் இங்க அனுப்பி வச்சிருக்கான்னு கேளு, நேரா அவன் வீட்டுக்கு அனுப்ப வேண்டியதானே!” என நல்லசிவத்தின் குரல் உறுமியது.

“இங்க பாருங்க… முதல்ல பெண்ணுங்கள மதிக்க கத்துக்கங்க. நீங்க சுதந்திரம் குடுத்திருந்தா இவ்ளோ தூரம் பிரச்சனை வந்திருக்காது.” என சர்வேஷ் எடுத்துரைக்க, வெண்பா அண்ணனை கட்டிக்கொண்டாள். 

“ஓ… அதான் நாங்க குடுக்காத சுதந்திரத்த நீ குடுத்துட்டியோ! 

எந்தளவு சுதந்திரம் நீ குடுத்துருக்கன்னும் தெரியுது.” 

“மத்தவங்க சொல்றத கேக்குறீங்க.  ஆனா வீட்ல இருக்க பொண்ணுங்களுக்கு பேச்சு சதந்திரம் குடுத்துறாதீங்க.” பேசி புரிய வைக்க முடியாத ஜென்மங்களிடமிருந்து வெண்பாவை தள்ளி இருப்பதே நல்லது என தோன்றியது. 

ஞானேஷ், சர்வேஷ் சட்டைப்பிடித்து, “எதுக்கு டா பேச்சு சுதந்திரம் குடுக்கணும் என்னைக்கும் தலை குனிஞ்சு பேசுற வெண்பா இன்னைக்கு தலை நிமிந்து பேசுறா. அதுக்கெல்லாம் நீதான் காரணம்.” 

யாரோ ஒருவன் பேச்சை கேட்டு தங்கையை சந்தேகப்படுவது சர்வேஷால் பொறுக்க முடியவில்லை.

 

ஏன், பெண் என்றால் பேதையா?  சுயகருத்தை வெளியிட முடியாதா? இந்த காலத்திலும் இப்படியும் சில கிராமங்கள் உண்டு. 

வேறும் பேச்சு வார்த்தை கைகலப்பானது. ஆளுக்கு ஆள் சட்டை காலரை பற்ற வேடிக்கையாக பார்த்துக்கொண்டிருந்தார் நல்லசிவம்.

நல்லசிவம், அச்சுதத்தையும் வளர்மதியையும் கண் பார்வையில் கண்ட்ரோல் செய்திருந்தார். பயத்தில் வெண்பா சர்வேஷை பிரிக்க முயன்றாள். 

ஒருவழியாக பிரித்து எடுத்தாள். “அவங்கதான் புரியாம பேசுறாங்கன்னா நீயும் ஏன் ணா?” 

“அந்த ஃபோட்டல இருக்கது நான்தான்னு நீ சொல்லியும். புரிஞ்சிக்கலனா என்னதான் பண்றது. ச்சே இப்படியும் மனுசங்களா?

வெண்பா மா, இவ்ளோ பெரிய வீட்ல கூண்டுக்கிளியா இருக்கதவிட, நளனோட வீடு சின்னதுதான் நீ அங்க நிம்மதியா சந்தோஷமா இரு.” அண்ணனிடமிருந்து வெண்பா எதிர்பாராத வார்த்தைகள்! 

ஓர் அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்குள் அடுத்தொன்றா!

“அதான் சின்ன மச்சானே சொல்றாரே, வா நம்ம வீட்டுக்கு போகலாம்.” கை நீட்டினான் நளன்.

வெண்பா சர்வேஷின் முகத்தை பார்க்க, “போ பார்த்துக்கிலாம்.” கூறியதோடு அழுத்தமாக இமைத்தான். அதில், அண்ணன் துணை நிற்பேனென்ற உறுதி. 

வளர்மதி, அச்சுதம் முகங்களை பார்க்கும்போது எந்தவித மறுப்பும் தெரியவில்லை. என்ன காரணமோ, ஒரு வேளை வெண்பா நளன் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இருக்குமோ? 

வெண்பாவும் தயக்கத்தோடு கையை நீட்ட, நளன் பிடித்தான் காதல் உணர்வு இருக்கோ இல்லையே அவளை விளையாட்டு வீராங்கனை ஆக்குவேன் என்ற உறுதி முழுதாக இருந்தது. 

ஏன் இப்படியொரு தந்தைக்கு மகளா பிறந்தேனென்று வெண்பாவின் மனம் குமுறியது.

“இந்த கண்றாவிய எல்லாம் பார்க்கணும்ன்னு என் தலையெழுத்து!” என நல்லசிவம் தலையில் அடித்துகொள்ள, 

“தயவு செஞ்சு உள்ள போங்கப்பா. இதுக்குமேல நீங்க பேசுனா நிலாவோட புருஷனுக்கு புடிக்காது.” என இரட்டை அர்த்தத்தில் சர்வேஷ் கூறினான். 

“டேய்…!” என ஞானேஷ், நல்லசிவத்தின் ஒரே நேரத்தில், 

“நான் வானத்துல இருக்க நிலாவ சொன்னேன்.” என அந்த ரணகளத்திலும் புன்னகைத்தான். 

நல்லசிவம் தோளில் இருக்கும் துண்டை உதறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். அவருடை ஞானேஷ் என்கிற வாழும் அவர் பின்னே நுழைந்தது. 

“கை புடிச்சிட்டு என்ன யோசன மச்சான். வீட்டுக்கு கூட்டிட்டு போ.” சர்வேஷ் கூற, வெண்பாவின் முகத்தை பார்த்தான் நளன் எந்தவித உணர்ச்சியும் இல்லை. 

“அச்சுமா… அவங்க கெளம்பிட்டாங்க. அவங்களுக்கு முன்னாடி போய் ஆர்த்தி எடுங்க.” மெதுவாக கூறினான். 

மூன்று முடிச்சு போடாமல் எதுக்குடா ஆரத்தி என பார்த்தார் அச்சுதம். 

வெண்பா தளர்வாக கையை பிடித்திருந்தாலும், நளன் இறுக்கமாக வெண்பாவின் கையை பற்றியிருந்தான். இது நிரந்தர பந்தமா, நிர்பந்தமா? 

 

****

தொடரும்…