நளவெண்பா 6🕊

Screenshot_20220828-150602_Samsung Internet-cccca8ed

 

ஒவ்வொரு நாளாக வேலைகள் தலைமேல் இருந்தன. ஊரே கூட்டி கல்யாணம் செய்ய அச்சுதத்திற்கும் சதானந்ததிற்கும் ஆசைதான். ஆனால் நாட்கள் குறைவு. 

நல்லசிவத்தை எதிர்த்து செய்யபோகும் முதல் காரியம். ஊர் மக்கள் அரசல்புரசலாக பேசுவதால் நல்லசிவத்தின் ஏரியாவை தவிர்த்து அவர்கள் ஏரியாவை சுற்றி நான்கு தெருமக்களுக்கும், நெருங்கிய சொந்தங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

வெண்பா நளனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏனோ அன்னையை காணாத ஏக்கம், தவிப்பு, சோகமென அவளை தாக்கியிருந்தது.

அன்னை அருகில் இல்லாமல் அவள் திருமணம் நடந்துவிடுமோ என்ற தவிப்புதான் அவளை பாடாய் படுத்தியது. 

சர்வேஷின் கைபேசி வழியே அன்னையிடம் பேசலாமென்றால்,  ஞானேஷ் நோட்டம் பார்த்த வண்ணமிருக்க, அதற்கும் வாய்ப்பில்லாமல் போனது. 

திருமணத்திற்கு பட்டு புடவை நகைகள் என ஆடம்பரமாக இல்லாவிட்டாலும், சதானந்தத்தின் தகுதிக்கு ஏத்தாற்போல் வாங்கி கொடுத்திருந்தார். வெண்பாவுக்கு திருப்தியாகத்தான் இருந்தது. 

சதானந்தம் போல தனக்கும் ஒரு தந்தை கிடைத்திருந்தால் வாழ்க்கை வரமே என நினைக்கும்போது வெண்பாவின் கண்களில் இருந்த கண்ணீர் துளிகள் இமையை தாண்டியது. 

நளன் வெண்பாவிடம் மனம் விட்டு பேசியே ஆகவேண்டும். அதற்கொரு சிறு வழியேன்னு உண்டோயென காத்துக்கொண்டிருந்தான்ந.

விடிந்தால் திருமணம், தூக்கமின்றி வெண்பா பல்லவின் அறையில் புரண்டு கொண்டிருந்தாள். சர்வேஷ் எப்படியாவது தாய் வளர்மதியை திருமணத்திற்கு அழைத்துவருவதாக கூறியிருந்தான். 

நளனோ கும்பகர்ணன், அடுத்த அறையில் குட்டை விடும் சத்தம் வெண்பாவின் காதை குடைந்தது. 

‘டெய்லி இவன் பக்கத்துல எப்படி தூங்குறது. இப்படி கொட்ட விடுறான்.’இனி தினசரி இரவு வெண்பா பாவமே!

அதிகாலையிலேயே அச்சுதம் எழுந்து வெண்பாவை எழுப்பி தயாராகுமாறு  கூறி, அதன் பிறகு ஒவ்வொருவராக எழுப்பி கிப்பிக்கொண்டிருந்தார். 

“டேய் தம்பி சீக்கிரம் வேஷ்டிய கட்டிட்டு வாடா.” அச்சுதம் குளியலறை வாசலில் இருந்து சத்தமிட, 

“அம்மோவ் இப்பத்தான் குளிக்கிறேன்.” 

“சீக்கிரம் தம்பே, வெரசா போகணும்.” 

“அம்மோவ் அம்மோவ், கொஞ்சம் இரு முதுகு தேய்க்கணும்.” 

“இன்னைக்குத்தான் கடைசியும் முதலுமா உனக்கு நான் எல்லா செய்வேன். நாளைல இருந்து உம்பொண்டாட்டிக்கிட்ட கேட்டுக்கோ.” நளன் கதவை திறந்து ஒரு பார்வை பார்த்தான். 

“என்ன அப்படி பார்க்குற ராசா, திரும்பு.” அரக்கபறக்க முதுகை தேய்த்துவிட்டு நகர்ந்தார். 

புடவை கட்ட தெரியாமல் பல்லவியின் உதவியுடன்  உடுத்திக்கொண்டாள். 

“தங்காச்சோ ரெடி ஆகியாச்சா?” 

“இல்ல அச்சுமா, இன்னும் அரை மணிநேரமாகும்.” 

“வெரசா கெளம்புங்க தங்காச்சோ” 

கோவிலில், நேர்த்தியாக கட்டப்பட்ட சிவப்பு வர்ண புடவைக்கு கோல்ட் நிற பாடருடன், அதற்கேத்த நகைகளும், தலைநிறைய மல்லிகை பூவுடன் அத்தனை அம்சமாய் இருந்தாள். 

மணப்பெண்ணுக்கேத்த கூச்சம் இருந்தாலும், தன் வீட்டிலிருந்து யாரையும் காணவில்லையென்று ஏக்கம் அதிகமாக இருந்தது. 

பட்டு வேஷ்டி சட்டை அணிந்து நெற்றியில் கீறிட்ட செந்தூரம் கழுத்தில் உருத்திராக்கம். வலது கையில் வெள்ளி காப்பு. அம்சமாக இருந்தான். கல்யாண கலை சுத்தமாக இல்லை. 

புல்லட் சத்தத்தை கேட்டவுடன்தான் நிம்மதி அடைந்தாள். தாய் வளர்மதியையும் சர்வேஷ் அழைத்து வந்திருந்தான். 

வளர்மதியை பார்த்தவுடன் வெண்பா மனதில் தவிப்பு குறைந்து சந்தோஷம் பெருக, கண்களில் கண்ணீரும் பெருகியது. 

நேரத்தை வீணடிக்காமல், நல்ல நேரத்தில் நளன் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு வெண்பாவின் கழுத்தில் தாலியை கட்டினான். 

புதுமண ஜோடியை ஆசிர்வதித்துவிட்டு வளர்மதி உடனே கிளம்பியாக வேண்டும். நல்லசிவத்திற்கு தெரிந்தும் சாதாரண கோவில் செல்வதாக கூறிவந்திருந்தார். ஆதலால்தான் உடனே கிளம்பிய வேண்டிய நிர்பந்தம். 

வளர்மதி, அச்சுதத்தை பார்த்து வாய்நிறைய, “அண்ணி, பசங்கள பார்த்துக்கோங்க. உங்களத்தான் மலை போல நம்பிக்ருக்கேன்.” 

“சாப்பிட்டு போக சொல்லு?” என அச்சுதத்திடம் சதானந்தம் கூற, 

“இல்ல அண்ணி இப்பவே நேரம் ஆச்சு, நான் கிளம்பறேன்.” லட்டை எடுத்து இருவரும் வாயிலும் ஊட்டிவிட்டு, சதானந்தத்தை பார்த்து கையெடுத்து கும்மிட்டு சர்வேஷுடன் கிளம்பினார். 

“அத்தம்மா, அம்மாவ சீக்கிரம் விட்டுட்டு வாரேன்.” 

“சரிப்பா, கவனமா போயிட்டு வா.”  

கோவிலில் நடக்கும் சடங்குகள் அனைத்து முடிய வீட்டுக்கு வந்தனர்.  சர்வேஷ் தங்கைக்கு கல்யாண பரிசாக, நளனின் வீட்டு வாசலில் புதிய மாடல் புல்லட்டை ஒன்றை நிறுத்திருந்தான். 

வெண்பாவை தவிர யாரும் எதிர்பாராத ஒன்று. தம்பதியர் வரும் நேரத்தில் வண்டியை யார் குறுக்கே வைத்தது என்று அச்சுதம் குழம்ப, “அத்தமா, புல்லட் நான்தான் வாங்கினேன். சீரா இல்ல, வெண்பாக்கும் நளனுக்கும் கிஃப்ட்டா.” 

பரிசென்று கூறும்போது சதானந்தத்தால் எதுவும் கூறமுடியவில்லை. 

அச்சுத்திற்கு சிரிப்புதான் வந்தது.  சிரித்தவண்ணம் நளனை நோக்க, ‘சிரிக்காத ம்மோவ்.’ ஜாடை காட்ட, 

“நளன் உனக்கு வண்டி மாடல் கலர் எல்லாம் புடிச்சிருக்கா?” என சர்வேஷ் வின

“என்ன மச்சான் மாடல், கலர் எல்லாம் கேக்குற? உன் பாசத்துக்கு முன்னாடி இதெல்லாம் தூசு.” அசட்டு புன்னகை நளனின் வாயில் இருந்து வழிந்தது. 

“தம்பி அதெல்லாம் ஒன்னுமில்ல. நீங்க மறந்துட்டீங்கன்னு நெனைக்கிறேன். பத்தாவது படிக்கும்போது பள்ளிக்கூடத்துல சைக்கிள் குடுத்தாங்க. அதையே நளன் தள்ளிக்கிட்டுத்தான் வந்தான். இதுல எங்கையா பைக் ஓட்ட போறான்.” என சர்வேஷிடம் அச்சுதம் கூறிவிட்டு,

“அப்படித்தானே ராசா!” என நளனிடம் கேட்க, 

‘மானத்தை வாங்கிட்டியே அம்மோவ்!’ என அப்பாவியாய் பார்த்தான் நளன். 

வெண்பாவும் சதானந்தமும் மௌனமாக சிரிக்க, அச்சுதமும் பல்லவியும் வாய்விட்டு சிரிக்க, சர்வேஷுக்கு சிரிப்பு வந்தாலும்  தனது மச்சானை விட்டுக்கொடுக்காமல், “யாரும் சிரிக்காதீங்க. என் மச்சான் எண்ணி மூனு நாள்ல புல்லட் ஓட்டுவான்.” 

“புல்லட் ஓட்டிருவல்ல மச்சான்!” பயத்தோடு கேட்க, 

கட்டை விரலை உயர்த்தி பூம்பூம் மாட்டை போல தலையை ஆட்டினான் நளன்.

‘என்ன பண்ண போறேன்னு தெரியலையே! ஆனா எப்படியாவது பைக்க ஓட்டிரணும் டா.’ வைராக்கியம் வைத்துக்கொண்டான். 

“மச மசனு நிக்காம ஆர்த்திச்சி எடுத்துட்டு வா அச்சுதோ.” என சதானந்தம் கூற,

அடுத்த நொடி வாசலில் ஆர்த்தி தட்டை கொண்டு வந்து சுற்ற ஆரம்பித்தார் அச்சுதம். 

எல்லாம் சுமூகமாக நடந்தது. அச்சுதத்திற்கு இரவு ஏற்பாட்டிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

“என்னங்க” மெதுவாக கொல்லை பக்கம் அழைத்து சென்றார். 

“ராத்திரி என்னங்க பண்றது?” 

“நம்ம தனியாதானே தூங்குறோம். நீ என்ன புதுசா கேக்குற? எப்போயாவதுதானே!” தனியாக அழைத்து வந்ததால் குழம்பிப்போனார் சதானந்தம். 

“யோவ் இதுக்கு மேல பேசுன, வீட்டுக்கு பெரிய மனுசேன்னுகூட பார்க்க மாட்டேன். சொல்லிட்டேன்!” 

“இப்போ எதுக்கு இவ்ளோ கோவப்படுற அச்சு...” என அச்சுதத்தின் கையை அவர் பற்றிக்கொள்ள, 

“உனக்கு மரியாதை அவ்வளவுதான். தள்ளி நின்னு பேசுயா. புள்ளைங்க பார்த்தா அசிங்கமா போயிரும்.” 

“அப்பறம் எதுக்குமா தனியா கூட்டிட்டு வந்த?” 

“நம்ம புள்ளைங்களுக்கு இன்னைக்கு சாந்திமூகூர்த்தம் ஏற்பாடு பண்ணனும். அதான் என்ன பண்ணுறதுன்னு தெரியலைனு உங்கிட்ட கேட்க வந்தேன். நீ என்னனா?” தனியே இருக்கு நேரங்களில் வா போ என்று பேசுவதுமுண்டு.

“இதுங்கல பார்த்தா குடும்பம் நடத்தும்ன்னு தோணல, இருந்தாலும் நம்ம கடமைய செஞ்சிருவோம்.” 

“பேசுனது போதும் பூ பழமெல்லாம் வாங்கிட்டு வாங்க.” அதன்பின் கொல்லையில் இருக்கும் ஓரிரண்டு ஜாதி மல்லியை பரித்துக்கொண்டிருந்தார் அச்சுதம். 

சர்வேஷ் உள்ளே வந்தான் பல்லவி மட்டும் முன்னே நிற்க, மீண்டும் வாசலுக்கே சென்றான். 

இவன் செயலை பார்த்தவண்ணம் பல்லவி, “வீட்ல யாருமில்லயா?” 

பல்லவி வாசல்வரை வந்து, “அண்ணாவும் அண்ணியும் ரூம்ல  இருக்காங்க. அம்மா கொல்லைல இருக்காங்க.”  என்றதும், பல்லவியை ஏறெடுத்தும் பார்க்காது கொல்லையை நோக்கி சென்றான். 

“அத்தமா!” 

“வா தம்பி.” 

“இந்த நகையெல்லாம் அம்மா உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க.” 

“எதுக்குயா? இந்த நகையெல்லாம் அண்ணிக்கிட்டவே குடுத்திரு. எங்களால முடியும்போது நாங்க வாங்கி குடுக்குறோம். இதெல்லாம் வாங்கினேன்னு வையு, நளன் அப்பா என்னைய உண்டு இல்லேன்னு பண்ணிருவாரு.” 

“நீங்க வாங்கிக்குடுக்கும் போது குடுங்க அத்தமா. இதையும் வச்சிக்கிங்க. வெண்பா வெளிய போறசுக்கு எடுத்துப்பா.” 

“சரி நீயே வெண்பாகிட்ட குடுத்திரு. மாமா கேட்டா நான் பொறுப்பு கெடையாது.” 

“சரி அத்தமா.” என்றவன், விரைந்து வெண்பாவிடம் சென்றான். 

வெண்பாவுக்கு எதிரில் நளன் கதிரையில் அமர்ந்து நெய் மணக்கும் லட்டை கொறித்த வண்ணம், வெண்பா சோகத்தில் இருப்பதை பார்த்தவனுக்கு இன்னும் சோகம். 

சர்வேஷ் நிற்பதை பார்த்து, “லட்டு வேணும்ன்னா கேளு மச்சான். அதைவிட்டுட்டு என்னைய மொறச்சி மொறச்சி பார்க்காத.” 

“நான் லட்டுக்காக உன்னை மொறச்சி பார்த்தேனா?” 

“அப்பறம் எதுக்கு மச்சான்?” 

“டேய் டேய் உன்னையெல்லாம்…” 

“இன்னைக்கித்தான் கல்யாணம் ஆகி இருக்கு, காரி கீரி துப்பிராத மச்சான்.” 

வாய்விட்டு சிரித்தான் சர்வேஷ், “ஆமா நளன், உனக்கும் வெண்பாக்கும் கல்யாணம் ஆகிருச்சுன்னு அடிக்கடி ஞாபகப்படுத்து.”

“வெண்பா இந்த நகையெல்லாம் உங்கிட்டயே குடுக்க சொன்னாங்க அச்சுமா” 

“அப்படி வை ணா, அப்பறமா எடுத்து வக்கிறேன்.” 

பழங்கள் வாங்க சென்ற சதானந்தமும் வீட்டுக்கு வந்துவிட்டார். நேராக வந்து மனைவியிடமே கொடுத்தார். 

நளனின் அறையில், ஏதோ அவர்களுக்கு தெரிந்த அலங்காரத்தை செய்து வைத்திருந்தனர். 

பல்லவியை சீக்கிரமா உறங்க சொல்லிவிட்டு, சர்வேஷையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 

நளன் அறைக்குள் சென்றிருந்தான். “குலசாமிய மனசார கும்பிட்டு உள்ள போ தங்காச்சோ.” பாசமாக பேசி உள்ள அனுப்பி வைத்தார். 

வெண்பாவுக்கு வரும் ஆத்திரத்துக்கு, பால் செம்பால் நளனின் தலையில் ஓங்கி அடிக்க வேண்டுமென்று ஆசை! 

அவனுக்கு என்ன, செக்க சிவந்த ஆப்பிளை லவக் லவக் என கடித்துக்கொண்டிருந்தான்.

“நீயெல்லாம் மனுசனா டா.” 

“அப்கோஸ், அதுல என்னடி சந்தேகம்.” 

“ஒரு பொண்ணோட ஃபீலிங்க்ஸ் புரிஞ்சிக்க மாட்டியா? உன் பாட்டுக்கு கூட்டிட்டு வருவ, திருப்பி கொண்டு போய் விட்டுருவியா?” 

“அதுக்குத்தான் அன்னைக்கே அடிச்சுட்டியே டீ, அப்பறம் ஏன் இப்பவேற திட்டுற.” 

முறைத்து பார்த்த வண்ணம், பால் செம்பை ஓரமாக வைத்துவிட்டு, அடிப்பதற்கு கையை ஓங்க, கையை உடனே பற்றிக்கொண்டான்.

“ஏய் இது என்னடீ சின்னப்புள்ளை தனமா இருக்கு. ஆனா ஊனானா அடிக்கிற.” 

“எனக்கு ஆத்திரம் அடங்கல.” 

“சரி இப்ப என்ன செய்யணும் செய்யும் சொல்லு?” 

“என் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும்.” கோபத்திலும், அசட்டு புன்னைகயை உதட்டின் ஓரத்தில் மறைத்துக்கொண்டாள். 

“ஓகே சின்னம்மா.”

“டேய்! சின்னம்மான்னு கூப்பிடாத சொல்லிட்டேன்.” 

பட்டென்று காலில் விழுந்தான். நட்பாய் பழகியதால் அவனுக்கு எந்தவித சங்கடமும் இருக்கவில்லை. 

“மன்னிச்சுட்டியா, நான் எழுந்திரிக்கட்டுமா?” 

“ம்…” மெதுவாக, வெண்பாவின் கண்கள் கலங்கி இருந்தன. 

“அதன்தான் நான் கால்ல விழுந்துட்டேன். இப்ப எதுக்குடீ அழுற?” பரிதாப குரலில் கேட்க, 

அவளிடம் பதில்கள் இல்லை. விம்மல்களும் கேவல்களும் மட்டுமே எஞ்சியது. 

ஒற்றை விரலால் அவள் முகத்தை உயர்த்தினான்.

“நான், உன்னைய நல்லா பார்த்துக்க மாட்டேன்னு நினைச்சித்தானே அழுற. ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும், அப்பறம் உனக்கே தெரியும் இவன் இப்படிதான்னு பழகி போயிரும்.” என கூறி முடிய, மெதுவாக இளநகை புரிந்தாள்

நீர் நிறைந்த கண்ணை கசக்கிவிட்டு, “இப்பவே சொல்லுறியா, என்னைய நல்லா பார்த்துக்கமாட்டேன்னு.”

“அதுக்குதானே மூக்க சிந்தி சிந்தி அழுற?” 

கெஞ்சுதலான பாசையில், “அதுகில்லடா!” 

“அப்பறம் எதுக்கு டீ அழுற?” 

உதட்டை பிதுக்கிக்கொண்டு, “அப்பா ஏன் என்னைய புரிஞ்சிக்கவே இல்ல. அதை நினைச்சாலே அழுகை அழுகயா வருது.” பெற்ற பிள்ளையை ஏன் நம்பவில்லை என்கிற வருத்தம். 

“முதல்ல இருந்து ஆரம்பிக்காத டீ. பேச ஆரம்பிச்ச வாய மூடவேமாட்ட நீ.” 

“இதுக்குத்தான் சொன்னேன். நீ என்னைய புரிஞ்சிக்கவே இல்லேன்னு.” 

“உங்க அப்பா எப்படி வழிக்கு கொண்டு வரணும்ன்னு எனக்கு தெரியும். நீ இப்ப தூங்கு.” இப்போதைக்கு அவளுடைய வாயை அடைத்தால் போதுமென்றானது நளனுக்கு. 

“சிங்கிள் பெட்ல எப்படி டா ரெண்டு பேர் தூங்குறது.” அவளுடைய கேள்விக்கு முகத்தை தொங்க வைத்தான். இவளுக்கு சொன்னா புரியாது. அதனால் செய்தே காட்டினான். 

அப்படியே வெண்பாவை அலேக்காக தூக்கி கட்டிலில் வைத்தான். அவன் செயலில் சற்று பயந்துதான் போனாள் அவள். 

“நீ பெட்ல படுத்துக்கோ, நான் கீழ படுத்துக்குறேன்.” அதன் பிறகு அவளை பேசவிடவில்லை. 

“மணி பத்தாச்சு, எனக்கும் என் மைண்டுக்கும் ரெஸ்ட்டு வேணும்.  நீயும் ஒழுங்க தூங்கல, மைண்ட்ட ரிலாக்ஸா விட்டு தூங்கு. எதா இருந்தாலும் காலைல பார்த்துக்கிலாம்.” 

முதலிரவு எண்ணமின்றி அவளை தோழியாய் பார்க்கும் பார்வை மட்டும் மாறவில்லை. 

இப்போது விடியற்காலை மணி நான்கு ஐம்பது. அச்சுதத்தை தவிர அனைவரும் உறக்கம்.

இங்கு, நளன், “வெண்பா, ஏய் வெண்பா எழுந்திரி.” 

“குண்டா! இப்பவே எழணுமா? இன்னும் கொஞ்சநேரம் தூங்குறேன். ப்ளீஸ்!” அவள் கொஞ்சி பேசும் அழகையெல்லாம் இரசிக்கவில்லை.

மெதுவாக கண் விழித்தவள் நளனை பார்த்து, “எத்தன மணிக்கு எழும்பிடா ப்ரெஷ் ஆனா?” 

“அம்மா நாலு மணிக்கு கதவ தட்டுனாங்க. அதோட எழும்பிட்டேன்.” அவன் இயல்பாக நடப்பதை கூற, 

படெக்கென்று எழுந்து அமர்ந்தாள். “நீ ஏன் டா கதவ தெறந்த, நான்தானே தெறக்கணும்.” பதற்ற கோலம் அவள் முகம் முழுவதும் பரவியது.

“இத்தனநாள் நான்தானே கதவ தெறந்தேன். அப்பறம் என்னடீ?” 

“உனக்கு ஒன்னுமே தெரியாது டா. நேத்தி நமக்கு சாந்திமுகூர்த்தம்தானே! அப்போ நான்தானே கதவு தெறக்கணும்!” 

“நீ எந்த காலத்துல டீ இருக்க, அந்த காலமெல்லாம் நம்ம தாத்தா பரம்பரையோட போச்சு.” 

“அச்சுமா எதும் கேக்கமாட்டாங்களா குண்டா!” அப்பாவிமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, 

“மாட்டாங்க. நீ வெளிய போனதும் உன் கைல காஃபி இருக்கும். ப்ரெஷ் ஆனதும் டிஃபென் இருக்கும். உன் துணி துவைக்க நான் இருக்கேன். தலை துவட்டிவிட அம்மா இருக்காங்க. போரடிக்காம இருக்க பல்லவி இருக்கா, தோல் தட்டிக்கொடுக்க அப்பா இருக்காரு. சின்ன சின்ன வீட்டு வேலை இருக்கும் அதை நானும் பல்லவியும் பார்த்துப்போம்.

அவன் கூறுவதை நினைக்கும்போதே கண்கள் அன்புக்காக ஏங்கியது, “அப்போ எனக்கு எந்த வேலையும் இல்லயா?” 

“இருக்கே, சாப்புட்டு சாணி போடணும்.” உடனே வெண்பா ஏக்கத்தை விட்டு புன்னகைத்தாள்

“காஃபி குடிச்சுட்டு சீக்கிரம் குளிச்சிட்டு வா.” என்று நளன் கூற,  குளம்பி குடிக்க நடந்தவாறே வெண்பா  தான் இப்படி ஒரு குடும்பத்தில் வாழ்வதை நினைத்து பெருமிதமடைந்தாள். 

மீண்டும் அவன் அருகில் வந்தாள். “ஏன்டீ திரும்பி வந்த?” 

“எனக்கு ஒரு டவுட் குண்டா” 

“என்ன டவுட்?” 

“தாலி கட்டுனதுல இருந்து என்னைய நீ வைஃபா நெனைக்கிறியா குண்டா?” 

கேட்டாளே ஒரு கேள்வி! 

நளன் வாயை பிளந்து வெண்பாவை பார்த்வண்ணம். 

****