நழுவும் இதயங்கள் 20

நழுவும் இதயங்கள் 20

பகுதி 20

அவளின் நிச்சயத்தை இவன்… இல்லை இவன் அல்ல தான். ஆனால் இவனால் நின்று போய், பின் இவனே திருமணம் செய்து கொண்டான் தான். ஆயினும் அவனுக்கு வேறு ஒரு சந்தேகம் எழுந்தது.

அவளின் கூர்விழி பார்வையில் “இல்ல… உனக்கு கல்யாணம் ஆச்சு தான்” எனக் கூறியவனைப் புரியாமல் அவள் பார்க்க, மேலும், “இல்ல ப்ரியா… உனக்கு கல்யாணம் வரை வந்து…” எனத் தடுமாறி தத்தளித்தவன், “அதெல்லாம் விடு. உன் சிநேகிதிங்க எல்லோருக்குமே சீக்கிரம் கல்யாணம் ஆகிடுச்சே. நீ ஏன் இவ்ளோ நாளா கல்யாணம் பண்ணாம இருந்த?” எனச் சரியாக புள்ளியைத் தொட்டான்.

“அதுவா… நா… நான் ஒருத்தர விரும்பினேன்” என அவன் இரவு உடையின் பொத்தனை வெறித்தப்படி, சுய உணர்வே இல்லாமல், என்ன சொல்கிறோம் என தெரியாமலே சட்டென விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டாள் ப்ரியா.

“ஓ… அப்படியா…” எனச் சாதரணமாய் எடுத்து கொண்டானே என நாம் நினைக்கலாம். ஆனால் இந்தக் காரணத்தை ஏற்கனவே ஹர்ஷா யூகித்து தான் வைத்திருந்தான். அதனால் அவனுக்கு அதிர்ச்சியோ இல்லை உணர்சிக் குவியலோ தலைக் தூக்கவில்லை.

“ஓ… அவன் தான் அந்த மாப்பிள்ளையா?” என அதற்கு சந்தர்ப்பமே இல்லை, எனத் தெரிந்தே தான் கேட்டான். அவள் வாயை கிளறுவதற்காக அவனும் விடாமல் வேண்டுமென்றே தான் கேள்விக்கனைகளைத் தொடுத்தான்.

அதில் சிக்கியவள், “ஹா… எந்த மாப்பிள்ளை? என்ன கேக்குறீங்க? எனக்கு ஒன்னும் புரியல” எனச் சட்டென சுதாரிப்புக்கு வந்தாள்.

“இல்ல நீ காதலிச்சேன் சொன்னியே… அது அந்த மாப்பிள்ள தானான்னு கேட்டேன்?” என விளக்கவுரைக் கொடுத்தான் அவன்.

‘அய்யயோ இவர்ட்ட உண்மைய உளறிட்டோமா? இப்ப எப்படி சாமாளிக்கிறது’ எனப் புரியாமல் விழித்தாள். அதைப் பார்த்தவன், “நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன் ப்ரியா. நீ சொல்லு. இப்போ நாம நம்ம காலேஜ்ல இருந்தது போல, பிரிண்ட்ஸாவே பேசுவோம்”

‘டீல் ஓகே தான். பட் மேட்டர் தான் நாட் ஓகேவா இருக்கே’ என எண்ணியவள், ‘சரி சொல்றதுக்கான டைம் வந்திருச்சு போல’ என “இல்ல… அது அவர் இல்ல” என்று கூறினாள்.

“அப்போ வேற யாரு? ஏன் ப்ரியா என்னாச்சு?” எனத் தீவரமாய் அவன் கதையை அவனே கேட்க ஆயத்தமானான்.

“இல்ல… நான் சொல்ல நினைக்கும் போது, அவர் வேற ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருந்தாரு” என நிதானமாய் என்பதை விட கவனமாய் வார்த்தைகளைப் பார்த்து பிரயோகப்படுத்தினாள் எனலாம்.

“ஓ! ஒன் சைட் லவ்வா?” என முடிவுக்கு வந்தான்.

“ஆமா, உங்க எல்லாருக்கும் அப்படி தான் தெரியும்” எனத் தன் காதலைக் குறை சொல்லவும், பொங்கினாள்.

“சரி, சரி… லவ் பண்ண. அவன் தான் வேற பொண்ண லவ் பண்றான்னு தெரிஞ்சு போச்சுல. அப்புறம் ஏன் அவனையே நினச்சுட்டு கல்யாணம் பண்ணாம இருந்த” எனக் கூறவும், அவள் முறைக்கவும், “சரி ஏன் தள்ளிப்போட்ட?” எனத் திருத்திக் கொண்டான்.

“ஆமா அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? இல்ல கல்யாணம் ஆகலையா? அதனால தான் நீயும் வெயிட் பண்ணிட்டு இருந்தியா? சான்ஸ் கிடைக்கலாம்னு” என அவன் முடிக்க கூட இல்லை, “இங்க பாருங்கங்க… வேணாங்க… அப்புறம் என்ட்ட அடி வாங்கிருவீங்க?” என எச்சரித்தாள்.

“ம்ம்… தெரியுதுல எனக்கு சரியா கேள்வி கூட கேட்க தெரியலன்னு. அப்ப என்ன பண்ணனும் நீ? நான் கேள்விக் கேட்காத அளவுக்கு, நீயா அழகா சொல்லு ப்ரியா” எனக் கல்லூரியில் பார்த்த ஹர்ஷா போல், மிகவும் மலர்ச்சியோடு சாதாரணமாய் சரளமாய் பேசினான்.

“ம்ம்…ஹும்… என் நேரம். அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு.” என முற்று புள்ளி வைத்தாள்.

ஆனால் அவனோ “அப்புறம் ஏன் ப்ரியா அவன நினச்சு உன் வாழ்க்கைய வேஸ்ட் பண்ணிட்ட. அதான் அவன் வேற பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான்ல. நீயும் உன் வாழ்க்கைல அடுத்தக் கட்டத்துக்கு போக வேண்டியது தான” என இலவசமாக அறிவுரைக் கூறினான்.

மீண்டும் கடுப்பான ப்ரியா “ஏன் ஹர்ஷா கல்யாணம் தான் வாழ்க்கையேவா? அத தாண்டி எதுவும் இல்லையா?” எனப் படு சீரியசாய் கேட்டாள்.

“ஹும்… அப்படி சொல்லி தான் உங்கத்த எனக்கு, உன்ன கல்யாணம் பண்ணி வச்சாங்க” எனக் கூலாய் கூறினான்.

“ஹும்… அதே மாதிரி தான், எனக்கும்… சொல்லி, உங்கள கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆனா எனக்கு எங்கம்மா சொல்லல என்னோட அக்கா, உதயா அவ சொன்னா” எனப் பட்டாசாய் பொரிந்தாள்.

‘என்ன எப்படி போட்டாலும், பால்ல சிக்ஸர் அடிக்குறா. பயப்புள்ள யாரும் இல்லன்னு, காலியான வீட்டுல உக்கார்ந்து  என்ட்ட காளியாட்டம் ஆடுறது எப்படின்னு யோசிச்சிருக்கு போல’ என அவனே பிரமித்தான்.

“சரி சரி விடு ப்ரியா… எப்படியோ வீ ஆர் சையிலிங் இன் தி சேம் போட். நீயும் காதலிச்சு என்ன மாதிரி ஏமாந்து தான் போயிருக்க, அதான் கடவுள் நம்மள திரும்ப ஜோடி சேர்த்து வச்சுட்டார் போல” எனத் தத்துவம் பேசினான்.

“ஹெலோ… நீங்க தான் அப்படி, ஏமாந்ததும் இல்லாம ஒரு பொண்ணக் கல்யாணம் வேற பண்ணிட்டீங்க. நான் அப்படி இல்ல, நான் காதல்ல சொல்லக் கூட இல்ல” எனப் பதிலுக்கு பதில் பேசியப்படியே வரவும், இப்போதும் பட்டென பதில் கூறி விட்டாள். சொன்னப் பின் தான், அவன் வருந்துவானே என எண்ணி, தலைக் குனிந்து, நாக்கைக் கடித்து அவனை ஒரு ஓரப்பார்வை பார்த்தாள்.

அவன் முகத்தையும், உடலையும் இறுக்கமாய் வைத்திருப்பதிலேயே அவன் கடந்தக் காலத்தை எண்ணி கழிவிரக்கம் கொள்வது புரிய, “சாரி ஹர்ஷா” என மனமுவந்து கூறினாள்.

“ம்ஹு…” என வெறுமையாய் சிரித்தப்படி, “நீ சரியா தான சொல்லிருக்க ப்ரியா. இதுல நீ வருத்தப்பட எதுவும் இல்ல” எனக் கூறியவன், “சரி ப்ரியா… தூங்கலாம் டைம் ஆச்சு” எனக் கூற,

‘ஐயோ தூங்கும் போது நல்ல சிந்தனையோடு தூங்க வேண்டும் என்று சொல்வார்களே. பாவம், அவர் மறந்ததை, நான் கிளறி விட்டு விட்டேனே. இன்று தான் சகஜமாய் பேசினார். அதையும் நானே கெடுத்து கொண்டேனோ’ என எண்ணியவள், ‘இப்போது என்ன செய்வது? ஏதாவது செய்ய வேண்டுமே’ என யோசிக்கத் தொடங்கினாள்.

‘ஆங்… ஐடியா… பேசாமல் உண்மையைக் கூறி விட்டால்?’ என நினைத்து, “ஹர்ஷா… நான் சொல்ல வந்தத முழுசா கேளுங்க” என மீண்டும் அவனைத் தொடக்கத்திற்கு அழைத்து சென்றாள்.

அவனோ, அவள் பக்கம் திரும்பாமல் “சொல்லு…” எனக் கூறினான்.

“நான் ஒருத்தர லவ் பண்னேன்ல, அவர்… லவ் பண்ணது ஒரு பொண்ண… ஆனா அதே பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கல, வேற பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டார்.” என மறைமுகமாய் கூறினாள்.

ஆனால் கீறல் விழுந்த இதயத்தோடு கேட்டவனால், அதை முழுமையாய் கிரகிக்க முடியாமல், மேலும், “ஓ… என்ன மாதிரி கேஸா” என அதற்கும் தன்னைத் தாழ்த்திக் கொண்டான்.

“போதும் ப்ரியா… எனக்கு எதுவும் கேக்குற மூட் இல்ல. படு” எனப் பேச்சை முடித்து கொண்டான்.

இவளுக்கோ கைக்கெட்டிய தூரம் வரை வந்து, கண்ணுக்கு புலப்படாமல் போயிற்றே என்ற நிலையில் இருந்தாள். ஆனால் அவள் மனசாட்சியோ ‘ஏதோ இந்த மட்டுக்கு, நீ வந்திருக்கிறாயே, அதுவே போதும். நீ சீக்கிரம் அவனிடம் காதலை சொல்லி விடுவாய்’ எனப் பாராட்டியது. ஏனெனில் எப்படியோ தான் காதலித்ததை, காதல் வயப்பட்டதை அவனிடம் மறைக்காமல் கூற முற்பட்டிருக்கிறாளே என எண்ணியது அவள் மனது.

ஏதேதோ எண்ணங்கள் இருவரின் மனதிலும் எழ, இருவரும் அவரவர் எண்ணங்களில் சுழன்று எப்படியோ உறக்கம் எனும் கரையை அடைந்தார்கள்.

மறுநாள் விடியலில், சூரியன் சாளரம் வழியே வரவேற்பறைக்கு வரவும் தான், இருவரும் மெல்ல உறக்கம் கலைந்தார்கள். ஹர்ஷா உறக்கம் கலைந்தாலும், மீண்டும் உறக்கத்தைச் சுகமாய் தொடர்ந்தான்.

ஆனால் ப்ரியாவோ மெல்ல எழுந்து மணியைப் பார்க்க, அது ஒன்பதை நெருங்கிக் கொண்டிருப்பதைக் காட்டியது. அதில் முற்றிலும் உறக்கம் தொலைந்து எழுந்தவள், சுறுசுறுப்பாய் காலைக் கடன்களை எல்லாம் முடித்து, குளித்து தேநீர் தயாரித்து, சிற்றுண்டியையும் முடித்திருந்தாள்.

அவள் சட்னிக்கு மின் அரைவையில் அரைக்கவும், அந்தச் சத்தத்தில் எழுந்தான் ஹர்ஷா. அவன் எழுந்ததை உணர்ந்து, ப்ரியா அவனுக்கு தேநீர் வழங்கினாள். பின் சாப்பிட அழைத்தாள்.

மௌனமாய் எல்லாவற்றையும் செய்தான் ஹர்ஷா. நேற்று நடந்த சம்பாஷணையை மறந்து, வழக்கம் போல் மீண்டும் இருவரும் அவரவர் கூண்டுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டனர். அதில் ப்ரியா கூட தாழ் தான் போட்டிருக்கிறாள் எனலாம், ஆனால் ஹர்ஷாவோ பெரிய திண்டுக்கல் பூட்டே போட்டுக் கொண்டான்.

இன்று ஞாயிறு என்பதால் கார்த்தி வீட்டிற்கு செல்லலாம் என எண்ணினான். ஏனெனில் இங்கு இருந்தால், அதுவும் தனித்து ப்ரியாவோடு இருந்தால், நேற்றைய சம்பாஷணையும், அதன் காரணமாய் எழும் நிகழ்வுகள் தன் மனதை அலைப்புற செய்து விடும் என எண்ணி, கார்த்தி வீட்டிற்கு செல்ல முடிவு செய்தான்.

எதற்கொன்றும் அவன் வீட்டில் தான் இருக்கிறானா எனக் கேட்டு விட்டு செல்வோம் என அலைப்பேசியில் அவன் எண்ணை அழுத்தினான். ஆனால் அவனின் நேரம் கார்த்தியின் அன்னை எடுக்க, ஹர்ஷா கார்த்தியைக் கேட்க, அவன் குளித்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்து விட்டு, “என்னப்பா எதுவும் முக்கியமான விஷயமா?” எனக் கேட்டார்.

“இல்லமா, அவன் வீட்டுல தான் இருக்கானான்னு கேட்க தான் கூப்பிட்டேன். அவனப் பார்க்க தான் வந்துட்டு இருக்கேன்மா” என அவன் விஷயத்தைக் கூற, அவரோ “வந்துட்டு இருக்கியா? இல்ல இனி தான் கிளம்ப போறியா பா” எனக் கேட்டார்.

“ஏன்மா… வீட்டுல தான் இருக்கேன். இனி தான் கிளம்புவேன். ஏன்மா எதுவும் வாங்கிட்டு வரணுமா?” என அக்கறையாய் கேட்டான்.

“அதெல்லாம் இல்ல பா. நீ இன்னும் கிளம்பலேல… அப்போ ஒழுங்கா உன் பொண்டாட்டிய கூப்பிட்டுக்கிட்டு வா. நானும் எத்தனவாட்டி சொல்றது. ஒழுங்கா அந்தப் பொண்ணோட வா, இல்ல வராத” எனக் கோபமாய் வார்த்தையைச் சேர்த்தாலும், அதைச் சிரிப்பெனும் நூலினால் கோர்த்து வைத்தார்.

இவ்வளவு தூரம் கார்த்தியின் அன்னை லலிதா வலியுறுத்தி கூறிய பின், அவளோடு செல்லவில்லையெனில் நிச்சயமாய் தன்னை வீட்டின் உள்ளே சேர்க்க மாட்டார் என எண்ணியவன், ப்ரியாவைத் தேடி சென்றான். அவளோ மதியம் சமைப்பதற்கு காய்களை எடுத்து கழுவி, சமைப்பதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தாள்.

“ப்ரியா… என்ன செய்யுற?” என வினவினான்.

“மத்தியானத்துக்கு சமைக்கப் போறேன்ங்க.” என பதில் அளித்தாள்.

அவனோ “எதுவும் பண்ணிட்டியா?” என ஐயமாய் வினவ, “இன்னும் இல்லங்க… ஏங்க… கேட்குறீங்க? எதுவும் நான்வெஜ் வாங்கிட்டு வர போறீங்களா? ஆனா, அத்த சாமி கும்பிட…” என்றவளை முடிக்க விடாமல், “அதெல்லாம் இல்ல. நாம வெளிய போவோம். நீ சமைக்க வேணாம்.” எனக் கூறினான்.

“ஓ! சரி… எங்கங்க போறோம்?” எனக் கேட்டாள்.

“ஏன் சொன்னா தான் வருவியா?” என மீண்டும் பழைய ஹர்ஷாவாய் எரிந்து விழுந்தான்.

“இல்லங்க… எங்கப் போறோம்னு தெரிஞ்சா… எடத்துக்கு தகுந்த மாதிரி… ட்ரெஸ் பண்ணலாம்னு…” எனத் திக்கினாலும், தைரியமாய் கூறினாள். நேற்றைய பேச்சின் தாக்கத்தினால், சரளமாய் அவனிடம் பேசினாள்.

“ம்ம்ம்…” எனச் சம்மதமாய் பதிலளித்தவன், “கார்த்தி வீட்டுக்கு தான் போறோம். அவங்கம்மா உன்னக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. அதான் கூட்டிட்டு வரேன் சொன்னேன்” என நயமாய் கூறினான்.

‘எப்படி கூசாம பொய் பேசுகிறார் பார். நான் கேட்டுட்டு தான இருந்தேன். இவர் கிளம்புறேன் கிளம்புறேன்… தான சொன்னார். கார்த்தி அம்மா தான் கட்டாயப்படுத்தி இருப்பாங்க. எப்படியோ இன்னிக்கு இந்த குத்த வச்ச பிள்ளையார்கிட்ட இருந்து தப்பிச்சா போதும். அங்க போயாவது, கலகலன்னு பேசிட்டு இருக்கலாம். இல்ல பேச்சு சத்தத்தையாவது கேட்டுட்டு இருக்கலாம்’ என இரண்டு நாட்களாய் வீட்டில் யாரும் இல்லாத தனிமையை வெறுத்து, இப்போது மன உவகையோடு கிளம்பி சென்றாள்.

“சரிங்க… இரண்டு நிமிஷம்  வந்துடுறேன்” எனச் சென்றவள், இரண்டு நிமிடம் கழித்து ஒரு அழகான அடர் நீல வர்ண பருத்தி சேலையில் தேவதையாய் தயாராகி வந்தாள்.

ஹர்ஷாவே ஒரு நிமிடம் அவளின் தேவதை அம்சத்தில் அமிழ்ந்து தான் போனான். “ஹும்…” என ப்ரியா தான், செருமி அவனை நடப்புலகிற்கு அழைத்து வந்தாள். ஹர்ஷாவின் இந்த ஒரு நிமிட மயக்கமே அவளை மகிழ்வுற செய்தது.

அவனின் சற்று நேர அசைவற்ற தன்மையே, அவன் மனதை அவள் அசைத்து வருகிறாள் என்பது உறுதிபட தெரிந்தது. இவ்வாறு இருவரும் தங்களுக்குள்ளே தாங்களே தொலைந்து கொண்டிருந்தனர்.

இப்படிப்பட்டவர்களை மீட்கவென ஒருவரை வீதி தூது அனுப்பியது தெரியாமல் இருவரும் ஜோடியாய் பலர் கண்பட, இருசக்கர வாகனத்தில் மிக கவனமாய் ஒருவர் மீது ஒருவர் உராய்ந்து கொள்ளாமல் சேதாரமில்லாமல் போய் கொண்டிருந்தனர்.

இன்னும் சற்று நேரத்தில் சேதாரமாகப் போவது தெரியாமல் சுகமாய் போய் கொண்டிருந்தனர். இவர்களின் வருகையை முன்னிட்டு, அங்கு கார்த்தியின் வீட்டில், லலிதாவோ வீடெல்லாம் பெருக்கி துடைத்து, மதிய உணவிற்கு பிரியாணி, எலும்பு குழம்பு, முட்டை வறுவல், கோலா உருண்டை, பச்சடி என தடபுடல் விருந்தொன்றை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

இதையெல்லாம் ஒரு ஓரமாய் நின்று வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த கார்த்தியோ, “என் பொண்டாட்டிக்கு இப்படி தடபுடல் பண்ண வேண்டியத, எவனோ ஒருத்தன் பொண்டாட்டிக்கு இப்படி செய்யுறியே மா” என நொந்தவன், “ஏம்மா இப்பவே உன் வருங்கால மருமகளுக்காக முன்னோட்டம் பார்க்குறியா மா” என அன்பொழுக தன் தாயிடம் கேட்டான்.

“ம்ம்ம்… உன் பொண்டாட்டிக்கு நான் ஏன் டா செய்யணும், அவ தான் எனக்கு பொங்கி போடனும் நியாபகம் வச்சுக்கோ. சரி சரி சும்மா வாய் பேசிட்டு இருக்காம, இந்தா… இந்த சாப்பாட்டு மேசைய சுத்தம் பண்ணி துடைச்சு வை. எனக்கு அடுப்புல வேல இருக்கு” என ஒரு பழைய துணியை அவன் மீது வீசி விட்டு சென்றார்.

“எல்லாம் என் நேரம்… டேய் ஹர்ஷா… ரெண்டுல ஒன்னு பார்க்காம விட மாட்டேன்டா… இன்னிக்கு என் கல்யாணத்த பத்தி முடிவேடுக்குறீங்க” எனத் தன் அன்னை இன்னும் பெண் தேட ஆரம்பிக்காத கடுப்பிலும், அதை எடுத்து சொல்ல நண்பனான ஹர்ஷாவும் சொல்லாத கடுப்பிலும் வார்த்தையை சபதமாய் சப்தமாய் விட்டு விட்டான்.

அதன் விளைவாய், “ஆமா, இப்போ பொண்ணுக்கு எல்லாம் உன்ன கட்டிக்குறதுக்கு க்யூல நிக்குதுங்க, இன்னிக்கு முடிவெடுக்க…” என பதில் கூறினார்.

“அப்போ என்னிக்கு தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைப்ப? ஸ்ட்ரைட்டா அறுபதாம் கல்யாணம் தான் பண்ணி வைப்பியா? அதுக்குள்ள நீ மண்டைய போட்டிருவமா” எனக் கடுப்பிலும் கடுப்பானான்.

“டேய்… டேய்… ஏண்டா இப்படி பேசுற, அததுக்கு நேரம் காலம் கூடி வரவேணாமா டா. லூசுப்பயலே!”

“நேரங்காலம் கூடுறதுக்குள்ள எனக்கு தாடியெல்லாம் நரைச்சு புளிச்சு போயிடும்… போ மா… நீயும் உன் நேரங்காலமும்” என அவன் பொரிந்து முடிக்கவும், “நீ தான் என் பிள்ளைங்க வாழ்க்கைய கெடுக்க வந்த பாவியா டி…” என வெளியே ஒரு எரிமலை வெடிக்கவும் சரியாக இருந்தது.

 

இதயம் நழுவும்…

error: Content is protected !!