நான் அவன் இல்லை 10

Copy of Thriller book cover hand in the smoke - Made with PosterMyWall (1)-95d60f5c

நான் அவன் இல்லை 10

இங்கே  இவள் அவன் விட்டு சென்ற அலைபேசியை எடுத்த மறுநொடி ….’டுமீல் டுமீல் ‘ என தொடர் துப்பாக்கி சுடும் சத்தம்  மதுவின் காதில்  இடி முழக்கம் போல கேட்க … பயத்தில் தன் இரெண்டு காதையும்  மூடியவளின் இதயம் தாறுமாறாய் துடித்தது . அப்படியே மடிந்து தரையில் அமர்ந்தவள் தான் இருக்கும் நிலையை எண்ணி அழுதாள் .

அவள் உடல் வேகமாக நடுங்கியது …

“அவன் வேற அங்க போயிருக்கானே  ஏதாவது ஆகிருக்குமோ ?? “கண்களில் கண்ணீர் திரண்டது.

அவன் மறைவான இடத்தில இருந்து வெளியே சென்ற   மறுநொடி அடுத்தடுத்து  நடந்த சம்பவங்கள்  அனைத்தையுமே  யார் பார்த்தாலும்  வேகமாக   ஃபார்வர்ட்  செய்யப்பட்ட காணொளி  காட்சி  என்று தான் நினைப்பர்  .. யார் யாரை சுடுகிறார்கள் என்று யாரும் கணிப்பதற்குள் காட்சிகள் எல்லாம் கணப்பொழுதில்  மாறியிருந்தன.

துப்பாக்கியின் சத்தம் படி படியாக குறைந்திருக்க … திடிரென்று அங்கே மயான அமைதி …

“என்னாச்சு ?? திடீர்ன்னு எந்த சத்தமும் கேட்கலை  …ஒருவேளை அவனுக்கு ஏதாவது ஆகிருக்குமோ ” என்று எண்ணியவளுக்கு இதயம் இன்னும் வேகமாக துடித்தது  … இந்த அமைதி கூட அவளை வெகுவாக அச்சுறுத்தியது .

உயிரை கையில் பிடித்து கொண்டு மறைவில் இருந்து வெளியே வந்தவள் அவனை தேடினாள் … கண் தெரியும் தூரம் வரை ஒரே இருள் ….ஆதித்யா எங்க ?? அவள் உள்ளம் துடித்தது .ஏனோ கண்ணீர் விடாமல் வழிந்தது .

அப்பொழுது  யாரோ  அவள் தோளை தொட்ட அதிர்ச்சியில் பதறி திரும்பியவள்  ஆதித்யாவை கண்டதும்   அவன் மேல் தனக்கு எழுந்த சந்தேகம் உட்பட அனைத்தையும்  மறந்து அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள் .

இருவரின் இதயமும் வேகமாக துடித்தது …  சில நொடிகள் கழித்து  மெல்ல அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன் தன் தோளில் குருதி  வழிய அவளை பார்த்தான் .

” ஆதித்யா …” பதறியபடி  அவனிடம் நெருங்கிய மது காயப்பட்ட அவன் தோளில் தன் கைவைத்து ” உங்களை சுட்டுட்டாங்களா !”  மிரட்சியுடன்  வினவினாள் .

அவன் அப்படியே கீழே அமர்ந்தான் … ரத்தம் தாறுமாறாய் வழிந்தது

” ஹெல்ப் யாரவது வாங்க ” கத்தினாள் .

”  நீங்க ஏன் அங்க போனீங்க  ?? “தவிப்புடன்  கேட்டவளின் விரிந்த  கண்களில் தான் அவ்வளவு நீர் .

” ஆ ஆ … ஷட் அப் ” அவளது புலம்பலை கண்டு எரிச்சலடைந்த ஆதித்யா  தன் சுட்டு விரலை நீட்டிய எச்சரித்தான் …

மறுநொடியே அடங்கியவள் மீண்டும்  ” ரொம்ப ப்ளட் வருது ” பயத்துடன் கூறினாள்… அவள் விழிகள் மட்டும் அல்ல அவள் இதயமும் அழுதது .அது அவனது செவிக்கும் கேட்டது .

அப்பொழுது “ அவன் அங்க தான் இருக்கனும் சீக்கிரம் டா “என்று யாரோ பேசும் சத்தம் கேட்க  …மீண்டும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதில் மதி அலறி தன் கண்களை மூடினாள் .

” மதி அவங்களுக்கு நான் தான் வேண்டும் ….ஸோ நான் கிடைக்கிற வரைக்கு அவங்க விடமாட்டாங்க … நீங்க இந்த வழியா அப்படியே ஓடுங்க … நான்  உங்க கூட இருந்தா உங்களுக்கு தான் ஆபத்து…. நீ என்கூட வராம இருப்பது தான் நல்லது  ” என்றவன் அவள் கையில் கார் சாவியை கொடுத்து ,

 ” எவ்வளவு முடியுமா அவ்வளவு வேகமா ஓடு…. கொஞ்ச தூரத்துல  என் கார் இருக்கும் … நீ தப்பிச்சு போயிரலாம்  ” தனக்கு இருக்கும் எதிர் திசையை காட்டி அவளை துரிதப்படுத்தினான் .

” ஆதித்யா நீங்க ” பதறியபடி கேட்டாள் .

” ம…தி ப்ளீஸ் ரன் ” எரிச்சலுடன் கூறினான் .

ஆனால் அதை தன் கருத்தில் கொள்ளாதவள் ,”  ஆதித்யா நீங்களும் வாங்க உங்களுக்கு ரொம்ப  ப்ளாட் வருது   ” விழிகள் கலங்கியபடி அவனை ஏறிட்டாள் .அழுகிறாளா அதுவும் எனக்காக அவனுக்குள்  ஒருவித பரவசம் பரவியது .

” என்னை நம்புறியா மதி  “

” இப்போ எதுக்கு இதை கேட்குறீங்க “

” பதில் சொல்லுங்க “

“———–“ஆம் என  தலையசைத்தாள்

”  அப்போ போ …” தன்மையோடு  கூறினான் .

” முடியாது ” பிடிவாதமாக கூறினாள் . சற்றென்று எழுந்தவன் அவளது கரத்தை வேகமாக பிடித்து ” போ  ….ரன்”   என அடிக்குரலில் இருந்து கத்தவும் …. அவர்களுக்கு எதிரே சிவா குரு துப்பாக்கியை ஆதித்யாவை நோக்கி பிடித்து கொண்டு சுட போக … அதைக்கண்டவள் ,

” நோ … ஆதித்யா ” என கத்திக்கொண்டு ஆதியை  மறைத்தபடி குறுக்கே விழுந்தாள். இதை கண்ட சிவா குரு ,” ச்ச ” என தன் குறி தவறியதை எண்ணி கோபம் கொள்ள … தன் முகத்தில் தெறித்த ரத்தத்தில் மதியின் நிலையை பார்த்தவன் , கண்கள் இரண்டும் நின்று போயின …. அவனது இதயமும் தான் .

ஆதித்யாவின் உடம்பில் பாய வேண்டிய தோட்டா மதியின் மார்பில் பாய்ந்தது … அவளது மானத்தை காத்த அவனது கவசம் அவளது உயிரை காக்க தவறியது… வெள்ளை நிற சட்டை சிவப்பு நிற மாக மாற வலியில் துடிதுடித்து அவன் மார்பின்  மீதே விழுந்தாள்.

வலியில் துடித்தவளை தன் கண்கள் வெறிக்க பார்த்தவன் முகமும் விழிகளும் அக்னி குண்டம் போல தகித்தது … அவளது ரத்தம் அவன் கையில்  பிசுபிசுக்க … அவனுக்குள் ஏதோ செய்தது . தன் வாழ்நாளில் எவ்வளவோ ரத்தத்தை பார்த்து உணர்ச்சியற்று இருந்தவனால் இப்பொழுது  முடியவில்லை இதயமும் கண்களுக்கும் கனத்தது  … ஒருவித வலி அவன் நெஞ்சை பிடித்து அழுத்தியது.

அது அவனையே அறியாமல்  அவனது இதயத்திற்குள்  நுழைந்து  அதன் துடிப்பாகவே  மாறி போன …அவனது மின்னல் ஒளி நிலவழகி  மதுமதியால்  வந்த வலி .

பற்களை கடித்தபடி “ ஷிவா  ” என கர்ஜித்த ஆதித்யா தன் துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டினான்.

” வேண்….டாம் ப்ளீ ….ஸ் ” என தடுத்த மதியை அள்ளி தன் மார்போடு இறுக்கமாக  அவள் பார்க்காத வண்ணம் அணைத்துக்கொண்ட ஆதித்யா   … சிவ குருவின்   நெத்தி பொட்டில் சுட்டு அவனை மண்ணில் வீழ்த்தினான் .

” உனக்கு என்ன தியாகின்னு நினைப்பா  ” மதியின் கன்னங்களை தட்டியபடி அழைத்தான் .

” அவன் சுட வந்ததும் … உங்களுக்கு எதுவும் ஆகிற கூடாதுன்னு அப்படி பண்ணிட்டேன் … ஆனா இப்போ ரொம்ப வலிக்குது ஆதி  ” என்றவள் கண்கள் சொருக ஆரம்பித்தது .

சற்றென்று அவள் அணிந்திருந்த  சட்டையை வேகமாக  விலக்கிய ஆதித்யா …. குண்டடி எங்கே பட்டிருக்கின்றது  என்பதை ஆராய்ந்தான் .நல்ல வேலை கழுத்தில் இல்லை … கழுத்துக்கு கீழே மார்புக்கும் கைக்கும்  நடுவே பட்டிருந்தது . ஆனாலும் பட்ட இடம் ஆபத்தானது  … புல்லட்டை  எடுக்கா விட்டால்  மூச்சு விட சிரமம் ஏற்படும் ….  உயிருக்கு ஆபத்தாக முடியலாம்? போர்க்கலையின் நிபுணனுக்கு எல்லாம் புரிந்தது … உடனே  அவளை தூக்கிக்கொண்டு  காரை நோக்கி வேகமாக ஓடினான் .

அவளோ வலியில் முனங்கி கொண்டு அவன் கழுத்தை வளைத்தபடி கிடந்தாள்.

” மதி கண்ணை மூடாத ” சொல்லியபடி வேகமாக நடந்தான் … எதற்கும்  அஞ்சாத ஆதித்யா இப்பொழுது  அஞ்சினான் …. என்றும்  அசராதவனின் கைகள் இப்பொழுது நடுங்கியது … யாருக்காகவும் ஆடாதவனின்  தசை இப்பொழுது ஆடியது ..

” ம…தி ஓபன் … கண்ணை திற “

” வலிக்குது ஆதி … “

” இதோ இன்னும் கொஞ்ச நேரம் தான் ” என்றவன் சிறிது நேரத்தில் காரை நெருங்கி …. முன் இருக்கையில்  அவளை உட்காரவைத்து அவனும் காரில் ஏறினான்.

” நான் செத்துருவேனா ” பயத்தில் உளறினாள் .

” ப்ச் உன்னை யாரு அப்படி செய்ய சொன்னா ?? ” கோபத்தில் கத்தினான் .

” ……….” அவளது கண்கள் சொருகியது ….” நோ பாரு ”  அவளது  கன்னத்தில் ஓங்கி  அடிக்க ஆரம்பித்தான் ,” ஏய் கண்ண மூடாத ….பேபி ப்ளீஸ் “- அவளது கண்களை பார்த்தபடியே  கூறினான் …அவளுக்கு திடிரென்று  மூச்சு விடுவதே  சிரமமானது….. அவள் மூச்சு மேலும் கீழும் இழுக்க   ஆரம்பிக்க  மூச்சுக்கு ஏங்கியவளை பரிதாபத்துடன்  பார்த்தான் .

” பயமா இருக்கு ஆதி …. நான் … சாகப்போறேன்னு  நினைக்கிறன் ” என முணுமுணுத்த  உதடுகள் ….  திடிரென்று மெளனமாக …  சற்றென்று அவள் உதட்டுடன் தன் உதட்டை பொருத்தியவன் … தன் மூச்சை அவள்  உயிர் கூட்டிற்குள்  செலுத்தினான் …. உடனே அவள் நெஞ்சாங்கூடு அவனது சுவாச காற்றால்  ஏறி இறங்கியது .

சிறிது நொடியில் மீண்டும் கண்கள் சொருகியது …. ” பேபி ப்ளீஸ் கண்ணை மூடாத… “

” அன்னைக்கு நைட் அந்த பில்டிங்ள  நான் பார்த்தது உன்னை தானே?? ” வார்த்தைகளை சிரமத்துடன்  கோர்த்து கேட்டாள் .

”  கண்ணை மட்டும் மூடாத பேபி … பேசிட்டே இரு “

” ப்ளீஸ் பதில் சொல்லு … அன்னைக்கு நைட் ஏன் என்னை காப்பாத்தின … ஆ ஆ ஆ ஆ ஆ  ?? ” மூச்சு விட முடியாமல் வலியில் கத்தியபடி கேட்டாள் .

உடனே அவளது  இதழை தன் வசப்படுத்தினான் … சொல்ல வேண்டிய பதிலை தனக்கு தெரிந்த மொழியில் கூறினான் அந்த முரடன்   . அவளை  மெல்ல தன் மேல் சாய்த்து கொண்டவன்  …. தன்னிடம் இருக்கும் சிறு கத்தியை  எடுத்து அவளது உடலில் பாய்ந்த தோட்டாவை எடுக்க முயற்சிதான் ….ஆனால்  வலியில் அவனுக்கு ஒத்துழைக்காமல்  அவள் தேகம் உதறி துடித்த பொழுதும்  கூட  தன்  இதழ் அணைப்பை  விடாது தொடர்ந்தவன் , மிகவும் சிரமப்பட்டு  அவள் உடம்பில் இருந்த தோட்டாவை நீக்கினான் …. தோட்டா இருக்கும் வரை அவளால் சீரான மூச்சை வெளியிட முடியாது என்பதற்காகவே இப்படி செய்தான்  …. ஒருவழியாக வலியில் துடித்து துடித்து தன் மீதே வலுவின்றி  பாதி மயக்கத்தில் சாய்ந்திருந்த மதிக்கு  தன்னால் முடிந்த முதலுதவி செய்தான் .

” ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ வலிக்குது ” வலியில் துடித்தவளின் கண்கள் மெல்ல சொருகி தலை தொங்கிவிட .. அவள் முகத்தை தன் கையில் ஏந்தி ” சீக்கிரமா  போயிரலாம் பேபி ” என்றவன் கண்களில் இருந்து சொட்டாக சில கண்ணீர் துளிகள் உடைப்பெடுத்து அவள் மீது பட்டன . இப்பொழுது  மதி  முழுவதுமாக மயக்க  நிலையை  அடைந்திருந்தாலும்  அவளால்  எந்த வித சிரமமும் இன்றி மூச்சு விட முடிந்தது .

” ஏய் மதுவை காணும்ன்னு எல்லாரும் பதறி போய் இருக்காங்க உனக்கு  இப்போ பாட்டு ரொம்ப அவசியமா ??”  என அருள்நிதி ஆத்திரத்துடன்  மனைவியை திட்டினார் .

” ஆங் …. அவ செத்தாலும்  நான் கவலை பட மாட்டேன் . கவலை பட வேண்டியவங்களே அவளை கண்டுக்கிறதில்லை  நான் ஏன் கவலை படனும் … எப்படியோ  தரித்திரம்  ஒழிஞ்சா சரி   ” என மிருதுளா  விஷத்தை கக்கினாள் .

” அப்படி பேசாத டி ஆயிரம் இருந்தாலும் அவ இந்த வீட்டு பொண்ணு தான் … என் அண்ணிக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன்  அவளை நல்லா பார்த்துக்குவேன்னு பாவம் அவ எங்க இருக்காளோ … அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது  ” என்ற தன் கணவனை ஏளனத்துடன் பார்த்த மிருதுளா  விட்ட பணியை மீண்டும் தொடர்ந்தாள் . அப்பொழுது ,

”  அத்தை … மாமா … அப்பா …  எல்லாரும் வாங்க அண்ணனும் அர்ஜுன் அத்தானும்    மதுவை கூட்டிட்டு வந்துட்டாங்க  ….” என  தன் கண்ணீரை துடைத்தபடி  ஜுவாலா வாசலுக்கு செல்ல … அவளது குரலை கேட்டு அனைவரும்  காலுக்கு வந்தனர் .

அனைவரும் எதிர்பார்ப்புடன்  அர்ஜுனையும் இளமாறனையும் பார்க்க … அவர்களின் வதனமோ கலை இழந்து காணப்பட்டது .

” மது எங்க? …. உங்க கூட வரலையா ?” என ப்ரீத்தா கேட்ட மறுநொடி … இல்லை என தலையசைத்த அர்ஜுன் ” ஐ லாஸ்ட் ஹெர் மா … அவளை தவறவிட்டுடேன்  மா  ‘ ” என்று அழ.. இதை கேட்ட ப்ரீத்தாவின் கண்கள்   குளமானது .

” எப்படி?? அவ இருக்கிற இடம் தெரிஞ்சிருச்சுன்னு  போன்ல சொன்னீங்களே ” அருள்நிதி இளமாறனை கேட்டார் .

”  லோகேஷன் ட்ராக் பண்ணி தான் அங்க எல்லாரும் சென்றோம் ,  ஆனா அங்க அவ இல்லை … மதுவோட  ஹண்ட் பக் மட்டும் தான் கிடைச்சுது . அநேகமா அங்க அங்க வர்ற நியூஸ் தெரிஞ்சு மதுவை அந்த கடத்தல் காரங்க கூட்டிட்டு போயிருக்கணும் “

” அர்ஜுன்  அட்லீஸ்ட் அவங்க யாருன்னாவது  தெரிஞ்சிதா …. அவங்க மோட்டிவ்ஸ் என்ன ?? அவங்க கிட்ட இருந்து கால் எதுவும் வந்துச்சா ?? அவங்களுக்கு என்ன தான் வேணுமா … ??உனக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கா … ” என ஆதவன் கேட்கவும்  அர்ஜுனின் உதடுகள்  ஆதித்யாவின் பெயரை உச்சரித்து .

” ஆதித்யாவா ? … யார் அவன் ” ஆதவன் கேட்டார்.

” ஆதித்யா சக்கரவர்த்தி  …  துரியன்  ஜித்தேரியோட ரைட் ஹண்ட் … ஜித்தேரி கேங்கோட முக்கியமான ஒரு ஆள் ” என்று அர்ஜுன் சொல்ல சொல்ல பெரியவர்களின் முகத்தில் ஒருவித பயம் உருவானது .

” ஜித்தேரி … அவங்க ரொம்ப மோசமானவங்க பா …. தே ஆர் மாபியாஸ் … அவங்க கூட உனக்கு என்ன பிரச்சனை ?? ”  ப்ரீத்தா அர்ஜுனை பார்த்து கேட்டாள்.

” மா பயப்படாதீங்க … அது ஒரு பழைய கேஸ் … ஜஸ்ட் மிஸ் இல்லைன்னா இந்நேரத்துக்கு மொத்த கேங்கும் இப்போ லாக் அப்ல இருந்திருப்பாங்க … பழைய பகையை மனசுல வச்சிக்கிட்டு அந்த ஆதித்யா தான் என்னை பழி வாங்குறதுக்காக இப்படி பண்ணிருக்கணும் … அவனை நான் சும்மா விட மாட்டேன் … அவனை கொலை செஞ்சா தான் என் ஆத்திரம் தீரும் ” என அர்ஜுன் ஆக்ரோஷமாக முழங்கினான்.

” என்ன கொலை பண்ண போறியா ?? ஆர் யு மட் … உன் வேலைய மட்டும் பாரு … இந்த வீட்ல நீ மட்டும் இல்லை … மத்தவங்களை பத்தியும் யோசி …  கொஞ்சம் தப்பானாலும் எல்லாரும் பாதிக்க படுவாங்க ..  ” ஆதவனின் குரல் ஓங்கி ஒலித்தது.

” அப்போ மது ஏன் அவளை பத்தி யாரும் கவலை பட மாட்டிக்கிறீங்க ??” அதே கோபத்துடன் தந்தையை எதிர் கேள்வி கேட்டான்.

” மதுவை பத்தின கவலை எல்லாருக்கும் இருக்கு …. மது ப்ராபளமை நான் பார்த்துகிறேன் . நீ இந்த  கேஸ்ல  எந்த டீலிங்கும் பண்ண வேண்டாம் … இப்பவும் சொல்றேன் அர்ஜுன் ஒரு உயிருக்காக எல்லார் உயிரையும் என்னால பணயம்  வைக்க முடியாது … ஸ்டே அவே  ஃப்ரம் மது (மதுவை விட்டு தள்ளியே இரு )” என்ற ஆதவனை குறுக்கிட்ட இளமாறன் ,

” ஆனா மாமா மதுவை அவங்க யாரும் ஏதும் பண்ணிட்டாங்கன்னா  என்ன பண்றது … ??அர்ஜுன் சொல்ற மாதிரி ஆதித்யா கிட்ட ஏன் நாம இதை பத்தி பேச  கூடாது  …. ஆதித்யா சிஸ்டர் ஆர்த்தியை  எனக்கு நல்லா தெரியும்  கண்டிப்பா அவ எனக்கு ஹெல்ப் பண்ணுவா ” என்று சொல்ல ,

” அவன் தங்கச்சி கூட உனக்கு என்ன வேலை ??” ஆதவனின் பார்வை  கூர்மையாக இளமாறனை ஊடுருவியது .

” நான் என்ன பண்ணனும் பண்ண கூடாதுன்னு நீங்க எனக்கு சொல்லாதீங்க புரிஞ்சிதா … இந்த விஷயத்துல யாரும் தலையிட கூடாது … உன் கரீயர்ல  மட்டும் போக்கஸ் பண்ணு … அப்புறம் இனிமே அந்த பொண்ணு கூட உனக்கு எந்த தொடர்பும் இருக்க கூடாது ” என்றவர் …’ ஜித்தேரி ‘ என்னும் பெயரை கேட்டதில் இருந்து உறைந்து போய் அமர்ந்திருந்த தன் மனைவியை பார்த்து ,” ப்ரீத்தா கொஞ்சம் உள்ள வா ” என மனைவியை தனியாக அழைத்து ,” நீ பயப்படுற அளவுக்கு இங்க  ஏதும் நடக்கலை ” என்றார் .

” ஆனா ஆதவ் …  எனக்கு பயமா இருக்கு பழையபடி  இழப்புகளை தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்லை “

” ப்ச் பழசை ஏன் பேசுற … அதை மறக்கவே மாட்டியா … போனது போனது தான் இப்போ உன் கூட இருக்கிறவங்களை மட்டும் பாரு ….  பசங்களுக்கு புரிய வை … முக்கியமா அர்ஜுனுக்கு … அவன் அவங்களை சாதாரணமா  நினைச்சிட்டு இருக்கான் … நீ சொன்னா மட்டும் தான் அவன் கேட்பான் “

” சரிங்க ” என தளர்ந்த கொடி போல  தரையில் அமர்ந்த ப்ரீத்தாவின் கண்களில் தான் அத்தனை தவிப்பு .

” அர்ஜுன் நான் நாங்க வெளியில  போயிட்டு வர்ற வரைக்கும் யாரும் வீட்டை விட்டு வெளியே போக கூடாது ” என்று கட்டளையிட்ட ஆதவன் மிருதுளா மற்றும் அருள்நிதியுடன்  வெளியே  சென்றார் .

தந்தையின்  பேச்சும் நடத்தையும்  அர்ஜுனுக்கு கோபத்தை தந்தது  ,” ஏண்டா இவரு இப்படி பேசிட்டு போறாரு ” என சீற்றத்துடன் கேட்டான் .

” எனக்கும் புரியலை டா ” என்று இளமாறனும் புரியாமல் திணறினான் .  ” நான் அம்மா கிட்ட பேசுகிறேன் ” என்ற அர்ஜுன் வேகமாக தாயின் அறைக்கு  சென்று,”  என்ன மா இது அப்பா இப்படி பேசிட்டு போறாரு …. அவங்கள பார்த்து ஏன் எல்லாரும் பயப்படுறீங்க ??”  என அர்ஜுன் கோபத்துடன்  தாயிடம் விவாதிக்க … ஏற்கனவே பயத்தில் உறைந்திருந்த ப்ரீத்தா அர்ஜுன் ஆக்ரோஷத்துடன் வந்து பேசியதில்  தன் கண்கள் சொருக அப்படியே கீழே சரிந்தார் .

– தொடரும்