நான் சூடும் இலம்பகமே

நான் சூடும் இலம்பகமே!

நீண்ட விசும்பிடையே நிலவுமகள் நீந்திக் கொண்டிருக்க, மஞ்சள் மதிக்கு போட்டியாக மண்ணில் உதித்த மாதுவொருத்தி வானையும் அதன் வர்ண ஜலத்தையும் வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

மண்வாசத்தை தன்னுள் புதைத்துக் கொண்ட பூங்காற்று அவளின் காதில் தொங்கிய குடை ஜிமிக்கியை நர்தனமாடவிட, அவளின் விழிகள் அழுத்த மூடிக்கொண்டன.

 

எழில் கோலமாய் அவளும், திருமணக்கோலமுமாய் அவள் நின்றிருந்த மொட்டை மாடியினை உரித்துடைய வீடும் ஜெலிக்க, எழுபது வயதுக்குறிய குரலொன்று அக் காரிகையைக் கடிந்து பேசியது.

 

“வஞ்சலா! ஏய் வஞ்சலா! என்னடா இவ அசையாம நின்னுட்டு இருக்கா. ஏய் வஞ்சலா போ போய் படுடீ. காலையில வெல்லன முகூர்த்தம் இருக்கு. அம்புட்டு நேரமும் கிடையாது. போடீ குட்டிக்கழுதை” முந்தானையை இடுப்பில் இழுத்து செருகிய வண்ணம், நாளைய திருணத்தின் நாயகி வஞ்சலா ஆருணியை நித்திரைக்குச் செல்லுமாறு நிந்தித்தது வேறு யாருமல்ல அவளின் பாட்டி காமாட்சியே.

 

“ஐயோ பாட்டி கத்தாத. அவ கருத்துல நீ வையுறது விழுந்திச்சு அப்புறம், நாளைக்கு பிரியாணில பீஸ்க்கு பதிலா உன்னைய வெட்டிப் போட்டு விடுவா” வஞ்சலாவின் தம்பி வருவஷிஸ்டன், தனது பாட்டியின் காதில் கிசுகிசுத்தான்.

 

“ஆமா ராசா. உன் அக்காக்காரி செய்தாலும் செய்யுவா. நீ என்ற பட்டுக்குட்டில?” காமாட்சி வஷிஸ்டனின் கன்னத்தில் கொஞ்சவும், “நான் பட்டுக்குட்டியுமில்ல பன்னிக்குட்டியுமில்ல உம்ம பேத்திக் கிட்ட கோர்த்துவிடப் பாக்குறியா கிழவி? எனக்கு வாழனும்னு கனவு லட்சியம் எல்லாம் இருக்கு. ஆளை விடு” கைகளைத் தலைக்குமேலே தூக்கி கும்பிட்டவன் அவன் வந்தவழியே ஓடியேவிட்டான்.

 

‘ம்கூம், இந்த சிறுக்கிக்கிட்ட போராட நமக்கு உடம்பு தாங்காதுப்பா. காமாட்சி கம் ஆன் எஸ் ஆகிடு’ முணுமுணுத்த பாட்டியும் சத்தமின்றி நழுவிவிட்டார். 

 

தான் நின்றிருக்கும் இடத்திலிருந்து பத்தடி தூரத்தில் பாட்டியும் பேரனுமாய் சம்பாசனை செய்தது கூட காதில் ஏறாமல் தனக்குள் கேட்ட ஏளனக்குரலில் கலந்து கரைந்து கொண்டருந்தாள் வஞ்சலா.

 

“உன்னை மாதிரி பொண்னை யாருடீ கல்யாணம் பண்ணிப்பான். வாழ்கையில உனக்கு கல்யாணம், குடும்பம் குட்டி எதுவுமே நடக்காது. உன் திமிருக்கு இப்படியே கிடந்து சாகத்தான் போறாய்” அவளின் தாயின் வாக்கியம் இது.

 

“ஒத்த பொண்ணு என செல்லம் கொடுத்து வளர்த்தா, நீயெல்லாம் குட்டிச்சுவரு கணக்கா வளந்து நிக்குற.” அவளின் தந்தையின் ஏச்சுக்களில் இதுவுமென்று.

 

“மனசுல ஜான்சி ராணி எனும் நினைப்பு. இவளுங்க மாதிரி பொண்ணுங்க ரோட்ல கொடி தூக்கிட்டு திரியத்தான் லாயக்கு” உறவினரின் வசைப்பாடலின் சாரம்சங்கள்.

 

“உன்னை எல்லாம் என் ஃபிரண்டுனு செல்லிக்கவே முடியலடீ. வெளியில யார்கிட்டையும் எங்க ஃபிரண்டு அப்படினு சொல்லிடாத அப்புறம் எங்க லைஃயிப்பும் ஸ்பாஃயில் ஆகிடும்” பச்சோந்திகளாக வண்ணம் மாறிய நண்பர்களின் குத்தல்கள்.

 

“டேய் மச்சி! சூப்பர் பிக்கர்டா. அனுஸ்காவும் ஹன்சிகவும் கலந்து சரிக்கட்டின சேஃப்டா. இது மாதிரி பொண்ணுங்க ம்ம்..” தினமும் சந்திக்கும் நூற்றில் பத்து சதவீத ஆண்களின் களவிரசம்.

 

“உன் அகம்பாவத்துக்கும், திமிருக்கும் உனக்கு எவன்டீ புருஷனா வரப்போறான். உன் காலுக்கு கீழே நாயா வாலை ஆட்டி அலையுறதுக்கு வேற யாரையும் பாரு. நான் அதுக்கு சரிவரமாட்டேன். முதல்ல உனக்கு எல்லாம் எவன் கிடைப்பான்? ஏதும் குருடன் கூட உன் கிட்ட வரமாட்டான்” வாழ்வின் கடைசித்துணையாக கைப்பிடிப்பான் என்று நம்பிக்கையைக் கொட்டிவைத்த காதலனின் கடைசி வார்தைகள்.

 

“ஐயோ! என்னை விடுங்கடா!” சத்தமாகவே கத்திவிட்டாள் வஞ்சலா. வாழ்க்கையில் கடந்துவந்த சில முற்களும் கற்களும் நிறைந்த பாதையின் தாக்கத்திலிருந்து இன்னுமே வெளிவர மறுக்கும் இதயத்தை என்தான் செய்வாள் அவளும். 

 

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது போல உளியாக தன்னை செதுக்கியவள் அவ் உளியாலேயே தன்னை உடைத்தும் எறிந்துவிட்டாள். சென்ற இருவருடப் போராட்ட வாழ்வில் அவளை பேயாட்டம் அழுத்திப் பிடிக்கும் நினைவுகளை அவள் மறந்த துறந்த பாடில்லை.

 

மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக பத்தடிகளை நடந்தாள். “எங்காவது ஓடி போயிரு ஆருணி. உனக்கு இது வேணாம். இல்லைனா செத்து போயிடு. இங்க இருந்து குதிச்சிடலாம்” தன் நகத்தினைக் கடித்தவாறு தனியே பேசியவள் அடுத்த வினாடியே,

 

மாடியின் தடுப்புச் சுவரின் அருகில் சென்று கீழே எட்டிப்பார்த்தாள். இரண்டு கீழ்த்தளங்களுக்கு மேலேயிருக்கும் மொட்டைமாடி. உயிர்போகும் என்பதை விட பலத்த அடிகள் எஞ்சுவது நிச்சயம். கண்டிப்பாக திருமணத்தை நிருத்திவிடலாம். 

 

குதுகலத்துடன் தன் கால்  உயரத்துக்கிருந்த குட்டையான பக்கச்சுவரருகில் சென்றாள். கண்களை மூடி மூச்சை இழுத்துவிட்டவளின் மனது, ‘குதிச்சிடுடா கைப்புள்ள’ என்று வடிவேலுவின் வசனத்தை சொல்லிப்பார்த்தது. 

 

பெருவிரல், மாடியின் நுனியில் படுமாறு முழு உயரத்துக்கு நிமிர்ந்து நின்றவள் வலது காலை உயர்தி குதிக்கச் செல்லும் போது, 

 

“ஓய் வஞ்சரமீன்குழம்பே!” என்று ஆடவனின் அழைப்பொன்று குறுக்கிட ஆத்திரத்தில் வஞ்சலா திரும்பினாள். மாடியின் தண்ணீர் தொட்டியின் பின்னாலிருந்து வேஷ்டியை மடித்துக் கட்டி, வெள்ளை நிற பணியனுடன் அவளை நோக்கி நடந்து வந்தது அவளுடைய மணவாளனே.

 

“இந்த அறிவுகெட்டவன் எதுக்கு வந்தான்” அவனை அவள் முறைக்கவும், “மைண்ட் வாயிஸ்னு சத்தமா பேசிட்ட வஞ்சரம்” என்றான் அவன்.

 

“ஆசைதான். கேட்கனும்னு தான் சத்தமா சொன்னேன்” வாதாடும் திறமையை மெல்ல வெளியில் எடுத்தாள். “லாயருக்கு வாய் அதிகமாச்சே. இது சரிவராது” அவளின் செவ்விதழை ரசனைப் பார்வை பார்த்தவன் அவளை நெருக்கி ஒரு அடி இடைவெளியில் சென்று நின்றான்.

 

“என்ன” வஞ்சலா அதட்டவும், “சும்மா ஒரு உம்மா” மேலும் அடி வைக்கப்போகவும், வஞ்சலா நகரவும் அவளின் முதுகுத்தண்டு வளைந்து மாடியிலிருந்து தரைநோக்கி விழ வழிவகை செய்தது.

 

உடனே அவன் அவளின் புஜத்தை தன் பக்கமாக பிடித்து இழுக்கவும் அவள் அவனின் மார்பில் மோத, அவனோ அழுத்த விசை தாளாமல் மாடியின்தளத்தில் வஞ்சலாவினை அணைத்தவாரே விழுந்தான்.

 

பூவுடைலைத் தழுவிய வேட்கையால் அவன் இமைமூடி புன்னகைக்க, “டேய் விடுடா” அவனின் மீதிருந்து எம்பிக் குதித்து எழுந்து நின்ற வஞ்சலா, இடுப்பில் கையைக் குற்றிக்கொண்டு அவனை முறைத்தாள்.

 

“அட என் வஞ்சரமீன்குழம்பு. என்ன வாசம்டீ நீனு. உம்மைய பார்க்க மாமன் சுவரு ஏறிக்குதிச்சு இங்க வந்தா. நீ ஏதோ நிலவுல நியூற்றோன் இருக்கானு ஆராய்ச்சி பண்ணுற.” தரையில் படுத்தவன் இரண்டு கரங்களையும் இணைத்தவாறு தலைக்கு கொடுத்து வாகாக படுத்துக் கொண்டு வசனம் பேசினான்.

 

“மாமன் வீமன்னு டயலாக் விட்டினா, வகுந்துபுடுவேன். நிம்மதியா குதிக்கக் கூட விடமாட்டியா அறிவுகெட்டவனே!” ஆர்ப்பாட்டமாய் கேட்டாள்.

 

“ஓஓ… ஷூசைட் பண்ணவா போன. இங்கயிருந்து குதிச்சா ஆறுமாசம் கட்டில படுத்துத்தான் கிடப்ப தவிர செத்து பேயிருக்க மாட்ட” படுத்தவாக்கில் கால்மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டு சிரிக்கவும் அவளுள் எரிச்சல் கூடியது.

 

“அப்படியாச்சும் இந்தக் கல்யாணத்தை நிருத்தியிருப்போன்” என்க, “அடடே ஆட்சரியக்குறி. ஏம்மா வஞ்சரம்! நீயும் இந்த கல்யாணம் நிச்சயமானதுல இருந்து எத்த முறைதான் முயற்சிப்ப. வாய்பில்லடீ செல்லாக் குட்டி. மாமேன் இந்த மயிலுக்குத்தேன்” இதழ் குவித்து பறக்கும் முத்தத்தை காற்றில் மிதக்கவிட்டான்.

 

“ம்கூம்” வஞ்சலா தலையை சிலுப்பவும் மேலும் தொடர்ந்தவனாக, “இப்போ என்ன நீ சாகனும் அவ்வளவுதானே. நானே உன்னைய மலைக்கேவிலுக்கு இழுத்துட்டுப்போயி கீழே தள்ளிவிட்டுறேன். இல்லைனா நல்ல பிராண்ட் விசப்போத்தல் வாங்கித்தறேன். ஆனா பாரு கட்டையில போக போற உடம்பு தானே உன்னாடது. அதனால..” 

 

“அதனால?” அவள் புருவத்தை உயர்த்தவும், “கட்டையில போகும் முன்னே மாமேன் கட்டிலுக்கு வாரது. அதுவும் தேவையில்ல தங்கமயிலு. காவியத்துல வாரதுமாதிரி இந்த ஓவியத்தை, இந்த தரையிலேயே தாரது” மந்தகாசமாக புன்னகைத்தான்.

 

“நீ..நீயெல்லாம் ஒரு ஜட்ஜா? என்ன பேசுப்பேசுற. கட்டில் தொட்டில்னு. உன்னையே பொலிபோடுறேன்டா” காட்டுக்கத்து கத்தியவளாக, அலங்காரத்துக்கு பயன்படுத்திவிட்டு மீதியாகக் கிடந்த வாழை மட்டையை எடுத்து, நிலத்தில் கிடந்தவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள்.

 

“அடியேய் வலிக்கலடீ” என்று அவன் சிரிக்கவும், அவள் நெருங்கி அடிக்கவரவும், அவன் வந்தவழியே மாடியின் தடுப்புச்சுவரை எம்பிக்குதித்து பக்கத்து வீட்டை அடைந்தவன்,

 

“ஓய் வஞ்சரமீன்குழப்பே! மாமேன் உன்னை வத்தவைச்சு சாப்பிடத்தாேன் போறேன்” மீண்டும் முத்தத்தை பறக்கவிட்டு, திரும்பியவன் “உயிரே உயிரே தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு” என்று முனங்கியவண்ணம் ஓடியே விட்டான்.

 

“அறிவுகெட்டவன்” அவளும் சன்னமாக முணுமுணுத்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்தாள். 

 

இரவும் விடிந்தது, காலையும் புலந்தது. மங்கல வாத்தியங்கள் இசைக்க, மணமேடையில் வஞ்சலாவும் அவளுடைய அறிவில்லாதவனான அறிகிலனும் அமர்ந்திருந்தனர். 

 

பண்டிதர் தாலியை எடுத்துக் கொடுக்கவும், அறிகிலனோ “நான் கட்டவா இல்லை நீ கட்டிக்க போறியா வஞ்சரம்!” அவள் காதுகளில் கவிபாடவும் அவள் முறைத்த முறைப்பில், “அடிவாங்கியும் வாய் குறையலனு பார்க்கியா மயிலு, நாங்கொல்லாம் துப்பினா துடைக்கும் சங்கம்டா. நீ சிரிப்பியாம் நான் கட்டுவேனாம். அப்புறம் நீ அடிப்பியாம் நான் கட்டிக்குவேனாம்” என்றான்.

 

அவன் பேசிய தொணியில் வஞ்சலாவுக்கு இளநகை எட்டிப்பார்க்கவும், ‘நீ ஜெயிச்சிட்ட அறிகிலா’ மனதில் தன்னை மெச்சியவன் மூன்று முடிச்சையும் அவனே இட்டு, வஞ்சலா ஆருணியை திருமதி அறிகிலனாக மாற்றினான்.

 

அடுத்து அடுத்து என சம்பிரதாயங்கள் வரிசைகட்ட, கிடைத்த சந்தர்பத்தில் எல்லாம் எதையாவது பேசிச்பேசி அவளின் கோபப்பார்வையை பரிசாக பெற்றுக்கொண்ட அறிகிலன், வஞ்சலாவினைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லவேண்டிய நேரமும் நெருங்கியது.

 

வருவஷிஸ்டன் ஒரு தூணின் அருகில் சாய்ந்து நின்று கண்களில் சுரந்த நீரைத் துடைத்துக் கொண்டிருக்கவும், அவனின் அருகில் சென்ற அறிகிலன், “டேய் வஷி! என்னடா பச்சப்புல்ல பலூணுக்கு அழுவுற மாதிரி ஒப்பாரி வைக்க. உன் அக்காகாரிய நான் என்னடா பண்ணப்பேறேன். கல்யாணம் தானே கட்டிக்கிட்டேன். ஏதோ கேவிலுக்கு வெட்டப்பேற பலியாடாவ அவளை தள்ளிக்கிட்டு போகபேறேன்” மைத்துனனின் கையைப்பிடித்து அவன் சமதானப்படுத்தினான்.

 

“யோவ் மாமா. நான் எப்போ எங்க அக்காவை நினைச்சு அழுதேன். ஒரு ஆணோட வலி இன்னொரு ஆணுக்குத் தெறிய வேணாம். இந்த அழுகை உனக்குத்தான்யா. இனி நீ செத்தடீ மாம்சு. வஞ்சலா உன்னை கும்மி எடுக்கப் போறா. நேத்துக் கூட சாம்பிள் காட்டினாளே” மூக்கினை உரிஞ்சவும், “பாத்துடியா?” என்றான் அறிகிலன்.

 

“ஆமா ஆமா” அவன் தலையை ஆட்டவும், “நானும் வலிக்காத மாதிரி நடிச்சேனடா. வெழுத்து வாங்கிட்டா. அவ்…” என்றான்.

 

“அது டீசர் தான் மாம்ஸ். இனித்தானே மெயின் பிக்சர் இருக்கு” வருவஷிஸ்டன் கண்ணைத் துடைக்கவும், “அப்போ உம்ம ஆச்சி ஏன் அழுவுது” தலையை சொரிந்தான் அறிகிலன்.

 

“உனக்கு யாருயா மாம்ஸ் ஜட்ஜ் வேலை கொடுத்தது. மண்டபமே உனக்காக தான் அழுவுது” அவன் கூற அறிகிலன் திரும்ப, வஞ்சலாவினைத் தவிர்த்து அனைவர் கண்ணிலும் நீர் நின்றது. அதில் இவனது குடும்பத்தினரும் உள்டங்கியிருந்தனர். 

 

“அவ்வளவு டெமேஜா என் நிலைமை” என்று மச்சானிடம் கேட்டான். “ரொம்ப” வஷி மீண்டும் பொழிந்தான்.

 

ஒருவாராக சகல சடங்குகளும் முடிந்து, அறிகிலனுடன் அன்று இரவே சென்னைக்கு புறப்பட்டாள் வஞ்சலா. சென்னை நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரியும் அறிகிலன் தனக்கு விடுமுறை கிடையாது எனக்காரணம்காட்டி அதே சென்னையில் குடும்பநல வக்கிலாக பணிபுரியும் வஞ்சலாவினைத் தனது வீட்டிற்கும் அழைத்து வந்துவிட்டான்.

 

அரசினால் அவனுக்காக வழங்கப்பட்ட வீடு அது. பூர்வீகம் இருவருக்கும் கிரமமாகவிருப்பினும் இருவரும் சில வருடங்களாக சென்னைவாசிகளே.

 

அவனின் வீட்டிற்கு வந்து, ஒய்வெடுத்து பொருட்களை அடுக்கியென மூன்று நாட்கள் கடக்க, அறிகிலனும் தன் வாயையும் வாலையும் சற்று அடக்கிக்கொண்டேயிருந்தான்.

 

நான்காவது நாள் மீண்டும் பூகம்பத்தைக் கிளப்பிவிட்டான் அவன். காலையிலேயே சமையற்கட்டில் சமைத்துக் கொண்டிருந்தவளிடம், “வஞ்சமீன்குழப்பே! மாமாக்கு இரண்டு பூரி சுட்டுக் கொடுக்குறது” என்றவாறு அறைக்குள்ளே நுழையவும்,

 

‘நல்லா பூரி மாதிரி உப்பிப் போன உன் மூஞ்சிக்கு நானே ரொம்ப அதிகம்’ முன்னாற்காதலன் கௌசிக்கின் சுடுசொல் அவளின் மனதில் தூபமிட்டது.

 

“உனக்கு வேணும்னா நீயே பண்ணிக்கே. செக்சன் நல்லாத்தெரியும் தானே? டொமஸ்டிக் வயலன்ஸ்னு கேஸ் போட்டுறுவேன்” ஒற்றை விரலை நீட்டி மிரட்டினாள்.

 

“மூனு நாள் சிங்கம் படக் காவியா மாதிரி இருந்தா இன்னைக்கு அருந்ததியா மாறிட்டா” அவன் முணுமுணுத்தும், அவள் நீ்ட்டியிருந்த அவ் ஒற்றை விரலை இழுத்து இதழ் ஒற்றிவிட்டே பூரிக்கு மாவினைப் பிசைய ஆரம்பித்தான்.

 

உண்டு முடிக்கவும், “ஆருக்குட்டி. வரியா” கண்ணடித்து சிரித்துவிட்டு, “சும்மா வாக்கிங் போகலாம்” என்றவன் கலகலவென சிரிக்க,

 

“இதோ பாரு. ஆறு, குளம், குட்டைனு சொன்னனு வை அருவாமனையில வகுந்துபுடுவேன்” சத்தமிட்டு கத்தவும், “நான் சொல்லுவேன். நீ தான் என் ஆறு என்னைக் கொஞ்சம் உத்துப்பாரு. நீ தான் என் குட்டை நான் அடிவாங்கினது வாழமட்டை” அவளின் கன்னத்தில் அவசர முத்தத்தை இட்டுவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டான். 

 

“டேய் அறிவுகெட்டவனே” காலைத் தரையில் உதைத்துவிட்டு பாத்திரங்களை தடதடவென சத்தமெழுப்பி கழுவினாள்.

 

நாட்கள் அதனோட்டத்தில் நகரந்து சென்றாலும் கணவன், மனைவிக்கு இடையில் எந்தவித ஒட்டுதலுமேயில்லை. அவள் திட்டுவதும் அவன் ஒட்டுவதுமென வாழ்க்கை செல்ல, இரண்டு மாதங்கள் கடந்திருந்தன. 

 

வீட்டின் முன் அறிகிலன் நட்டு வைத்திருந்த பவளமல்லி மரத்தின் அடியிலிருந்த சீமெந்துக்கட்டில் காலை ஆட்டிக்கொண்டு வழக்கு பற்றி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் வஞ்சலா.

 

அவளின் பின்னால் அரவமின்றி வந்துநின்ற அறிகிலன் நெடிப்பொழுதில் அவளின் காதில், “வஞ்சரமீன்குழம்பே” என்று சத்தமிட்டதுதான் தாமதம் வஞ்சலா அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.

 

“என்னடா உன் பிரட்சினை. காதுல கத்துர” என்று கடியவும். “இதுவும் எனக்கு வலிக்ல” என்றவனின் ஆழ்மனது ‘நீ நடிகன்டா அறிகிலா. வலிக்காத மாதிரி எத்தன வாட்டி நடிக்கிறது’ என்றது.

 

“ஆமா உனக்கு எப்படி வலிக்கும். நீ எல்லாம் மனுசனே கிடையாது. நல்லா வளத்து வைச்சிருக்காங்க அத்தை” என்றவளிடம்,

 

“ஐ ஜாலி ஜாலி என் அம்மா உனக்கு அத்தைனா நான் உனக்கு மாமா. ஜில்லுனு இருக்கே” என்றான்.

 

“ச்சீ. எத்தனை வாட்டி சொல்றது மாமா, உப்புமானு சொல்லாதனு. எங்க அப்பா அம்மாவைச் சொல்லனும். கல்யாணமே வேணாம்னு இருந்த என்னை உன் தலையில கட்டி வைச்சாங்கல” தலையில் தட்டிக் கொண்டாள்.

 

“என் தலையில கட்டல வஞ்சரம். நான் தான் உன் கழுத்துல கட்டினேன் தாலியை” வெண்பற்களைக் காட்டி சிரிக்கவும், 

 

“அது தான் நான் முடிவெடுத்துட்டேன்” என்றவளை அணைப்பதற்கு வந்தவனின் மார்பில் கைவைத்து தடுத்தவள், “டைவர்ஸ் பண்ணிடலாம். நானே கேஸ்ஸ பார்த்துக்க பேறேன்” அழுத்தம் திருத்தமாக பேசவும், 

 

“நீ லாயர்னா நான் ஜட்ஜ் மயிலு. எப்படி டைவர்ஸ் வாங்குவ?” எகத்தாளமாய் அவன் கேட்டான்.

 

“எஸ் ஐ எம் எக்ஸப்டிங், தீ கிரேட் ஜட்ஜ் அறிகிலன். அதாவது முப்பது வயசுக்கு முன்னே நீதிபதியாக மாறிய சாதனை மனிதரோட எனக்கு வாழப் பிடிக்கலைனு சொல்லுவேன்” கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவள் பேசினாள்.

 

“காரணம் என்னவாம்?” அவனும் கைகளைக் கட்டிக்ககொண்டே கேட்க, “பிகாஸ் நான்…நான்..” அவள் இழுக்கவும். 

 

“சொல்லுங்க வஞ்சலா ஆருணி. இதுவரை எடுத்த எந்த கேஸையும் தோற்றுப்போகம, குடும்பத்தை பிரிச்சி கும்மியடிச்ச நீங்க என்ன சொல்லி உங்க கல்யாணத்தை பிரிக்க போறிங்க” நக்கலாக கேட்டான்.

 

“உனக்கு இது தேவையில்லாதது. என் ஜாப் பற்றி எப்படி நீ பேசுவ. என்ன காரணம் சொல்லுவனு கேட்டீல? நான் பொண்ணே இல்லை, குடும்பம் நடத்த தகுதியில்லாதவனு சர்டிபிகட் கொடுத்து டைவார்ஸ் வாங்கிப்பேன்” அவளும் நக்கலாக பேசினாள்.

 

“வாவ்! வட் எ மிராக்கல். நீ பொண்ணு இல்லைனா நானும் ஆம்பளை கிடையாதுனு சர்டிபிக்கட் கொடுப்பேன். இப்போ நான் பொண்ணு நீ ஆம்பளைனு சொல்லி மாமன் உன்னைக் கட்டிப்பேன் மயிலு” என்றான்.

 

“ஐயோ! இங்க பாரு அறிகிலன். என்னால யாரு கூடவும் வாழ முடியாது. என்ன சொன்ன குடும்பத்துல கும்மியடிக்கேன்னு சொன்னயில்ல. நான் பிரிச்சிவிட்ட எல்லாப் பொண்ணுங்களும் தன்னோட சுயத்தை இழக்க விரும்பாதவங்க. மெரிட்டல் வயிலனஸ்ல இருந்து காப்பாற்றித்தான் விட்டிருக்கேன்.

 

தெரியாமல் தான் கேட்கிறேன், பொண்ணுனா உங்க காலு கீழே அடிமையா வாழவேணுமா? எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம். எங்களுக்கும் விருப்பு, வெறுப்பு, ஆசை, தேவை, தேடல் எல்லாமே இருக்கும். உங்க ஆண் ஆதிக்கதனதுக்கு நாங்க வாலாட்டவும் தேவையில்ல. நீங்க அடக்கியாள நாங்க உங்க வீட்டு வளர்ப்பு நாயுமில்லை” கழுத்து நரம்புகள் புடைக்க கண்ணில் ரௌத்திரத்துடன் கூறினாள்.

 

“வாட் எ ஸ்பீச். இதை மேடையில போய் கூவிக் கத்த வேண்டியதுதானே. ஏன் உனக்குள்ள அடக்கி வைச்சிருக்க. சுயமாம் சுயம், நீ ஒரு பயங்கொள்ளி பொண்ணு வஞ்சலா. உன்னால நாளு பேரு முன்னாடி இப்படி பேசமுடியாதுடீ” உதடு கோணலாக விரிய அவன் சிரிக்கும் போது வானமும் தூரல் போட ஆரம்பித்தது.

 

‘நீ ஒரு பொண்ணு கிடையாது, வீ்ட்டுக்கு அடங்காதவ, ஜான்சி ராணினு மிடுக்கிட்டு ஆடுகிறாள், நாழு கைத்தட்டுக்கு மயங்கி மேடையில எப்படியெல்லாமோ பேச்சு வேண்டிக்கிடக்கு, இனி போராடம்னு கிளம்பின காலை உடைச்சிடுவோம்’ எத்தனை பேச்சுக்களை கடந்துவந்தவள் இன்று அறிகிலனின் பேச்சில் சுக்கு நூறாக உடைந்தவளாக, பாதணியின்றிக் கொட்டும் மழையில் விடுவிடுவென நடந்தாள்.

 

வீட்டை விட்டு கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கும் மேல் நடந்தவள், மனதும் உடலும் சோர்ந்துபோக வீதியின் நடைபாதைக் கட்டில் அமர்ந்துவிட்டாள்.

 

“நான்…நானும் பொண்ணு தான்டா. எனக்கும் ஆசா பாசம் இருக்குமே. அறிகிலா நீயும் கடைசியில பேசிட்டயில்ல. ஆமா நான் இந்த இரண்டு வருஷமும் பயந்து ஒதுங்கிப் பேனேன் தான். பெண்ணால எதையும் சாதிக்க முடியும். முதல் டிவோஸ் பண்ணுறேன். அடுத்து வஞ்சலா ஆருணியா வலம்வறேன்” முடிவெடுத்தவளாக அவள் நிமிர, 

 

அவளை வெறித்துக்கொண்டே மழையில் கரைந்து நின்றிருந்தான் அறிகிலன். வீட்டில் அணிந்திருந்த ஷாட்ஸ் மற்றும் கையில்லாத டீஷட்டுடன், மெய்க்காப்பாளரைக் கூட உடன் அழைத்துவரவில்லை அவன்.

 

 அவள் அவனை ஏறிடவும் “போகலாமா?” என்றான். “எங்கே” என்றவளிடம், “வீட்டுக்கு நம்ம வீட்டுக்கு” நம்ம என்ற வார்தையில் அழுத்தம் கூடியிருந்தது.

 

“முடியாது” அவள் முகத்தைத் திருப்பவும், தான் ஒரு மதிப்புக்குறிய நீதிபதி என்பதை துளியும் சிந்திக்காமல் அவளின் அருகில் அமர்ந்தவன், ஈர இடையோடு கையைப் படரவிட்டு அவளைத் தன் அருகில் இழுத்தவனாக,

 

“கடந்த காலத்தை மறந்துவிடு வஞ்சரம்” என்றான். வெடுக்கென அவள் அவனை நோக்க, “எனக்கு எல்லாமே தெரியும்” என்று சிரித்தான்.

 

வஞ்சலா ஆருணி கல்லூரி காலங்களில் சிறந்த சமூக பேச்சாளினி. ஆயிரம் பத்தாயிரம் என்று மக்கள் எண்ணிகையைக் கணக்கிடாமல் சொற்பொழிவு ஆற்றுபவள். அது மாத்திரமின்றி, பல போராட்டங்களில் கலந்து கொண்டு மக்களுக்காக குரல்கொடுக்கக்கூடியவள்.

 

கல்லூரியை முடித்துவிட்டு, ஒரு வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் போதுதான் பத்திரிகையாளனான கௌசிக்கின் அறிமுகம் கிடைத்தது. அவனும் காதல் பரிபாசைகளை அவளிடம் பேசி ஒருவகையாக அவளின் சம்மதத்தினையும் பெற்றிருந்தான்.

 

கௌசிக்கின் காதல் அத்தனை உண்மைத் தன்மைவாய்ந்ததும் கிடையாது. வஞ்சலாவின் குணத்தைவிட அவளின் அழகின் மீதே அதீக ஆர்வங்கொண்டிருந்தான். சற்றுப்பூசியது போன்ற தேகத்துடன் உயரமாகவும் வளர்ந்தவள் வெண்ணையில் கடைந்தெடுத்த சிலைதான்.

 

அவன் அத்துமீறி அணைக்கக்கூட தடையிட்டிருந்த பெண்ணின் மீது நாளாக நாளாக வெறுப்பைக் கக்க ஆரம்பித்தான். அவள் உடல்வாகு சரியில்லை, அவளை யாரும் காதலிக்க முன்வர மாட்டார்கள் எனச்சாடினான்.

 

இப்படிச் சென்று கொண்டிருந்த போதுதான் அவளின் வாழ்க்கையில் புயலொன்று வீசியது. பத்துவயது பாலகி மீது வர்புணர்வுக்கு உட்படுத்திய கும்பலுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த போது, வஞ்சலாவே அதற்குத் தலைமை தாங்கினாள்.

 

வெள்ளைச் சுடிதாரினை அணிந்து, கருப்புத் துப்பட்டாவைத் தலையில் கட்டிக்கொண்டு கோசமிட்டுக் கொண்டிருக்கும் போது, அரசியல் செல்வாக்குடைய அக் கும்பலின் தலைவன் அடியாட்களை ஏவிவிட்டு கலவரத்தை மூட்டிவிட்டான்.

 

அடியாட்களின் ஒருவன் வஞ்சலாவின் துப்பட்டாவை பறித்து எறிந்துவிட்டு, அவளின் சுடிதாரின் தோள்பட்டை இழுத்துக் கிழித்துவிட்டான். அவளின் பால்வர்ண முதுகினை கௌசிக்கே படம்பிடித்துக் கொண்டான். கௌசிக்கை பொறுத்தவரை, அவனின் தொழிலுக்காக எதையும் செய்யக்கூடியவன்.

 

காவல் அதிகாரிகளால் கலவரம் மட்டுப்படுத்தப்பட்டு, அவளும் காப்பாற்றப்பட்டாள். ஆனால் அடுத்தநாளே கௌசிக்கின் பத்திகையில் அவளின் புகைப்படம் அச்சிடப்பட்டு மிகக் கொச்சையாக அவளினை வர்ணிக்கவும்பட்டது.

 

சினத்தில் கொதித்தொழுந்து அவனுடன் சண்டையிடும் போது மேலும் அவளை அவமானப்படுத்துகிறேன் பேர்வழி என ‘நீ பொண்னே கிடையாது’ என்று நாக்கினால் விசத்தைக் கக்கியிருந்தான். அன்றுடன் கொளசிக்குடனான அவள் அத்தியாயமும் முற்றுப் பெற்றது.

 

அதன் பின்னாக செய்தி காட்டுத்தீ போல பரவவும், நண்பர்கள், உறவினர்கள், இவள் கடந்து வந்த மனிதர்கள் அனைவரும் கடுஞ்சொல்லில் தூற்றவும், போராட்டம் மேடைப்பேச்சு என அனைத்தையும் கைவிட்டு குடும்ப நலவக்கீலாக துன்புரும் பெண்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறாள்.

 

“வஞ்சரம்! உன்னை முதத்தடவை அந்த போராட்டத்துல தான் பார்தேன். போலீஸ் கூட இருந்ததால என்னால வண்டியை விட்டு வெளியவே வரமுடாயல. ஆனா கூட்டத்தையே கோசத்தையே நான் பார்க்கலே. ஒரு சண்டிராணி வெள்ளைச் சுடிதாருல குரல் கொடுத்துட்டு நின்னா. டொட்டலி ஐ எம் டன்” புன்னகைத்தவன்,

 

“அப்போ முடிவு பண்ணினேன், உன்னை விடவே கூடாதுனு. ஆனா நீ அந்த ப்ராப்ளத்தில இருந்து வெளிவரேயில்லை. கௌசிக்க கூட வேணாம்னு தூக்கி எறிஞ்சிட்ட, ஆனா அதுல தப்புக்கிடையாது. ஏன் உன்னோட திறமையை விட்டுட்டு ஓடி ஒழிஞ்சிக்குற. உன்னை உனக்குள்ளயிருந்து வெளிய கொண்டுவரவேண்டும்னு தான் எல்லாமே. ப்ச் விடுடா!

 

மத்தவங்க பேச்சுக்காக இனிமேலும் ஒதுங்கிக் கொள்ளாம முதல்ல வெளியே வா. இப்போ வீட்டுக்குப் போகலாம்” என்று கூறவும் அவளும் எதுவும் பேசாமலே எழுந்தாள். எழுந்த பின்னே பாதணியில்லாததை உணர்ந்தாள். “இதைப் போட்டுக்கோ” அவன் தனது பாதணியைக் கழற்றிக் கொடுக்கவும் வேண்டாம் என்று தலையசைத்தாள்.

 

“நீ போட்டுக்கிறியா இல்லை நான் போட்டு விடவா” தாமதிக்காமல் குணிந்து அவளின் பாதத்தை எடுத்து பதணியில் வைத்துவிடவும், அவள் மழையில் உரைந்து நின்றாள்.

 

“தங்கமயிலு! நடக்க மாட்டியா? வேணும்னா மாமேன் உப்புமூட்டை தூக்கிக்கவா? வெயிட்டை தூக்கிப் பார்த்தா…” அவன் சொல்லவந்த வார்தையின் அர்த்தம் புரிந்தவளாக வஞ்சலா அவனை அடிக்க துரத்த, அவன் “உசேன்போல்டை போல் நில்லாமல் ஓடு குடும்பத்தில் மோட்சம் வரும்” என்று பாடிக்கொண்டே ஓடினான்.

 

இரண்டு மாதத்தின் பின்; “வஞ்சரம் வஞ்சரம் தான் என் அழகு மயிலுதான்” என்று பாடிக்கொண்டே வீட்டில் நுழைய,சமையலறையிலிருந்து கரண்டி ஒன்று பறந்து வந்து அவன் காலடியில் விழுந்தது.

 

“ஆத்தி! இது ரொம்ப ஆபத்தான வளையம் போல. அறிகிலா எதுக்கும் வாய்க்கு ஜிப்பைப் போடு” என்றவாறு உள்ளே சென்று அவளின் இடையோடு கட்டிக்கொண்டு அவளை அசையவிடாமல் செய்தவன்,

 

“சப்பாத்தியா? எனக்கு பூரிதான் வேணும்” என்றவன், “மாமேன் பூரி வஞ்சரம் கன்னத்துல” என்று அவள் கன்னத்தைக் கடித்து இழுக்க, “அறிகிலா அருகில்வா” வஞ்சலா அவனை திருப்பிக் கட்டிக் கொண்டாள்.

 

“பூரி மட்டும் போதுமா?” வலது புருவத்தை அவள் உயர்த்த, “உன் தும்பி வஷி, அந்த ஆயா காமாட்சிக்கு ஐஸ் வைச்சி. இரண்டு வருஷமா உனக்கே தெரியாம பின்னால சுத்தின மாமனுக்கு கன்னம் மட்டும் பத்துமா?” அவளின் உதடுகளையும் சுவைக்க ஆரம்பித்தான்.

 

இருவரின் இணைப்பில் கடுப்பான குக்கர் ஒரு விசிலை அடிக்கவும், அவனைத் தள்ளிவிட்டு விலகினாள். அவனோ “கேட்காமல் கிடைக்குது என்னவாம்” இன்னும் இதழ்களில் பார்வையை நிலைக்கவிடவும்,

 

“மிஸஸ் அறிகிலனுக்கு அவார்ட் கொடுக்கவாம். கடந்த மாதம் நடந்த பேராட்டத்தில தலைமை தாங்கினதுக்கு கொடுக்குறாங்களாம். இது எல்லாமே இந்த அறிகிலன் அனுக்கிரகம் தானே. பேசிப்பேசியே என் சுயத்தை எனக்கு உணர்த்தி, என்னை மீண்டும் போராட்டங்கள்ல கலந்துக்க வைச்சது நீ தானேடா. என் கழுத்துல விழப்போற மாலைக்கு காரணம், நீ சூட்டிய முதல் மாலைதான் மச்சான்” என்றவள் சிரிக்கவும், 

 

“அது அனுக்கிரகம் இல்லை வஞ்சரம். என் கெரகம் ஒரு வத்திப்போன வஞ்சரமீன் குழம்புக்கு ஜொல்லுவிட்டது” அடுத்த அடியை வாங்கிக் கொள்வதற்கு வரம்புகட்டிக் கொடுத்தான்.

 

“அறிவில்லாதவனே!” கறிவேப்பிலைக் கொத்துடன் அவனைத் துரத்த ஆரம்பித்தாள். வீடு முழுக்க கிங்கினியாக அவள் சிரிப்பதை நிறைவாக ரசித்தவன் ஓடிக்கொண்டே “கட்டிக்கிறாயா இல்லை கட்டிக்கவா?” என்றவாறு படுக்கையறைக்குள் மறைந்துவிட்டான். அவளும் அவனுடனே மறைந்து, இணைந்துவிட்டாள். 

இலைக்குள் தனை மறைத்த கனியவளை, உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியவன் அவளையே இலம்பமாக சூடிக்கொண்டான்.

 

“சூடிய சுடர் கொடியை,

சூரியனாக்கிய மாயவன்

சூடிக்கொண்ட மல்லிகை அவளானாள்…!”