நான் நிகழ்வதுவா? கடந்ததுவா?

WhatsApp Image 2021-11-01 at 5.19.10 PM-e9c3267b

நான் நிகழ்வதுவா? கடந்ததுவா?

-அபிராமி

ஏனோ சில பாடல் வரிகளைக் கேட்கும்போது, சில இடங்களுக்குச் செல்லும்போது, சில காட்சிகளைப் பார்க்கும்போது, நம்மை அறியாமல் சில நபர்களை, அந்த இடத்தோடு பொருத்தி, அந்த நபர் நமது வாழ்க்கையில் விட்டுச் சென்ற நினைவுகளிடம் நம் மனம் நம்மை அறியாமலேயே சென்று விடுகின்றது.

அவளும் அந்த நிலையில்தான் இருந்து கொண்டிருக்கிறாள். அவள் ஜீவிதா. பெயரில் இருக்கும் ஜீவனை எழுத்துமூலம் பலரின் வாழ்க்கையில் துடிப்பைக் கொண்டு வர முயற்சி செய்யும் ஒரு பெண் எழுத்தாளர்.

பல கல்யாண ஜோடிகளின் தற்காலிக பிரிவுகளை, பல காதல் ஜோடிகளின் நிரந்தர பிரிவுகளை, இளைஞர்கள் படிப்பிற்காக மேல்நாட்டிற்கு செல்லும் பயணங்களால் ஏற்படும் பிரிவுகளென்று, எத்தனையோ நிகழ்வுகளைத் தன்னுள் அடக்கி, இன்னுமின்னும் தன்னுள் அடக்கிக் கொண்டு, அழகாய் கம்பீரமாய் நிற்கும் அந்த ஏர்போர்ட், அவளுள் ஒரு உந்துசக்தியைக் கொடுக்கும்.

“எத்தனையோ பிரிவைப் பார்த்துக் கவலையில் நொந்து போய் விழாமல், எத்தனையோ கனவுகளை நினைவாக்கும் வேட்கையோடு நான் கம்பீரமாக இருக்கும்போது உன்னால மட்டும் கவலையில் துவளாமல் வாழ முடியாத என்ன?”

அந்த ஏர்போர்ட் அவளுக்குக் கூறும் செய்தியாகவே நினைத்துக் கொள்வாள். எழுத்தாயினி அல்லவா? கற்பனை வளத்தில் தேர்ந்துதானே இருப்பாள்?  பிரிவு… அந்தச் சொல் தரும் வலிபோல வேறெந்த சொல்லும் தருவதில்லை, அவளைப் பொறுத்தவரை. அதிலிலும் காதலின் பிரிவு! சொல்லத்தான் வேண்டுமோ?

அவன் ஜீவிதாவின் ப்ராணனாக இருந்தவன்.  இப்பொழுதும் அவளது மனதில் ஏதோவொரு மூலையில் ஒளிந்து கொண்டிருப்பவன், பிரணவ்! காதல் கடலில் இருவரும் நீந்தியபடி இருக்க, நடுக்கடலில் நடந்த சூறாவளியில், இவளைத் திசை மாற்றிச் செல்லத் தூண்டிவிட்டது.  திசை மாறிச் சென்றபோதிலும், அவளது மனம், விட்டு வந்த இடத்தைச் சுற்றியே சென்றதுதான் பரிதாபமாகி விட்டது.

அவளது பிராணனாக அவனும், அவனது ஜீவனாக அவளும், வாழ்ந்த நாட்களில்தான் எத்தனை ஆனந்தம் கலந்திருந்தது. அவர்கள் காதலர்களாகச் சுற்றி திரிந்த காலங்கள் சொற்பமானதுதான்.

ஆறு மதங்கள்கூட நிரம்பி இருக்காது. ஆனால், அந்த ஆறு மாதங்களில் அவர்கள் உருவாக்கிய நினைவுகள் ஆயிரம் ஆயிரம். தூங்காத இரவுகளில் அவளது யோசனைகள் எங்கெங்கோ செல்லும்.

“நான் அவனுக்குத் தாயாகத்தான இருந்தேன். அதுனாலதான் என்னைத் தனியா விட்டுட்டு போய்ட்டானா?”

“நான் அவனுக்கு நல்ல தோழியாகத்தான அவன் கஷ்டப்படும் போதுலாம் கூடவே இருந்தேன். ஆறுதல் படுத்தினேன். அதுனாலதான் என் லைப் என் பிரைவசினு சொல்லிட்டு என்னைத் தவிக்க விட்டுட்டு போய்ட்டானா?”

“நான் அவனுக்கு ஒரு தந்தையாக இருந்துதானே, அவன் தப்பு பண்ணுற போதுலாம் கண்டிச்சேன். அதுனாலதான் என்கூட சண்டைபோட்டுட்டு போய்ட்டானா?”

“நான் ஒரு காதலியாகதான அவனுடைய ஒவ்வொரு ஆசையையும் ஒவ்வொரு கனவையும் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். எங்க எப்போ எங்களோட காதல் தப்பாகி போச்சு?”

“நான் அவன்கூட சின்னக் குழந்தை மாதிரி விளையாடிட்டு அடம்பிடிச்சுட்டு இருந்ததாலதான், அவன் என்னோட வாழ்க்கையோட விளையாடிட்டு போய்ட்டானா?”

விடை தெரியாத கேள்விகள் அவளுள் இப்படி பல இருக்க, கேள்வியின் நாயகனோ அவளை விட்டுச் சென்று, வேறொருத்தியைத் திருமணம் செய்தது தான் இவளது கவலையை இன்னும் கூட்டியதோ? அவளே அறியாதது.

அவளது மனம் இரண்டாகப் பிரிந்து, அவளையே எதிர்த்துப் போராட தொடங்கியது அந்தத் தருணத்தில் இருந்துதான். அவளது விளையாட்டு தனமும் துடுக்கு தனமும் அடங்கிப் போனதும் அப்போதுதான்.

“காலையில எழுந்ததும் அவனைப் பாக்கணும். தூங்க போகுற முன்னாடி நான் கேக்குற கடைசி குரல் அவனுடையதாக இருக்கணும்னு நான் கண்ட கனவு எல்லாமே பொய்யா போச்சே!” அவளுள் எழும் ஏக்கங்கள் இப்படி ஏராளம் ஏராளம்.

“ஆயுள் முழுக்க வாழணும்னு நினச்சேன். இப்படி ஆறே மாசத்துல முடிஞ்சுபோச்சே!” இப்படி அவள் அவளது தலையணையோடு பேசிய பொழுதுகள் பல.

“நாமதான் அவனை விட்டுட்டு வந்தாச்சு. அப்புறம் நம்மளையேவா நினைச்சுட்டு இருப்பான்? அவனுக்குனு ஒரு லைப், ஒரு மனைவி வேணாமா?” அவளது நியாமான மனம் வாதாட, “இன்னும் அவனோட நினைவுகள்ல இருந்தே நான் வெளில வரல. அவன் மட்டும் எப்படி வேறொரு லைப் அமைச்சுக்குறான். அப்போ என்னோட இருந்தது எல்லாம் நாடகமா?”

அவளது கேள்வி அவளுக்கே அபத்தமாக இருந்தது. காரணம் அவளிற்கு தெரியும், இருவருமே காதலித்த காலத்தில் நடிக்கவில்லையென்று. நிகழ்ந்த உச்சகட்ட சூழ்நிலைகளைச் சமாளிக்க தெரியாத வயதுதான், அவளது காதலிற்கான பிரிவை ஏற்படுத்தியது என்று அவளும் புரிந்துகொண்டிருந்தாள்.

காலம் அவளுக்கு அந்தப் பக்குவத்தை ஏற்படுத்தியும் இருந்தது. இருந்தாலும் அவள் தனக்கென ஓர் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள யோசித்தாள். பெண் மனம் அல்லவே? பிறரது குழப்பத்திற்கு ஆறுதலாக, பக்குவமாக யோசிக்கும் அதே மூளை, தனக்கென வரும்போது மட்டும் எதிர்மறையான எண்ணங்களை மட்டுமே யோசிக்கிறது. இயற்கையின் விதியோ என்னவோ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

எப்பொழுதுமே அவள் தனது காதலைப் பழி சொன்னது கிடையாது. பிரிவின் வலியில் கஷ்டப்பட்ட காலத்திலும் சரி, அந்தக் காதலிலிருந்து மீண்டு வர முயற்சி செய்த காலத்திலும் சரி! “நானே என்னோட உணர்வுகளை மதிக்காம, நானே என்னோட முடிவுகளைத் தவறென்று யோசிக்க ஆரம்பிச்சா, யாரு என்னோட முடிவுகளை, என்னோட உணர்வுகளை மதிப்பா?” என்ற எண்ணம் அவளுக்கு!

“அதோடு, என்ன பண்ணுறதுனே தெரியாம சுத்திட்டு இருந்த என்னை, இந்தக் காதல்தான் என்னோட எண்ணங்களை எழுத்துக்களாக உருமாற்ற உறுதுணையா இருக்குது!”

ஆம்! அவள் எழுத்தாளராக அவளது காதல்தான் அவளுக்குத் துணை நின்றது. முதலில் சிறுசிறு கவிதைகளை எழுத்துக்களாகப் எழுத ஆரம்பித்தவள், பின் மெதுமெதுவாகச் சிறுகதைகளை எழுத ஆரம்பித்து, இப்பொழுது தனது இருபத்தைந்தாவது நாவலைப் புத்தகமாக வெளியிடும் நிகழ்ச்சிக்குச் செல்கிறாள்.

அவளைப் பொறுத்தவரை, “நாம காதலை மதிச்சா, காதல் நமக்குக் கண்டிப்பா ஏதாவது ஒன்றை கண்டிப்பா தரும். ஒன்னு, வாழ்க்கை துணையை தரும். இல்லனா, வாழ்க்கையோட பாதையைக் காண்பிக்கும்” என்ற எண்ணம்.

“என்ன எழுத்தாளரே, இந்த மக்களிடமிருந்து ஏதாச்சும் கதை எழுதக் கரு கிடைக்காதுனு பாத்துட்டு இருக்கீங்களா? ஒரே யோசனையா இருக்கு முகம்!”

ஜீவிதாவின் முகத்தைப் பார்த்து, அவளது மனம் மீண்டும் அவளது காதல் நினைவுகளுக்குள் சென்றுவிட்டது என்று அறிந்தே, அவளது எண்ணப்போக்கை மாற்றவே, இவ்வாறு பேசியபடி அவளது அருகில் அமர்ந்தான், ஷிவாஸ்.

“அப்படிலாம் எதுவும் இல்லை ஷிவு. ஏதோ யோசனை அவ்ளோதான். அங்க ஏற்பாடு எல்லாம் சரியா இருக்கும்ல? போன வாட்டி மாதிரி இன்டெர்வியூலாம் இருக்காதுல?”

ஜீவிதாவின் மனம் தற்போது ஆறுதல் அடையும் ஒரே ஜீவன் இந்த ஷிவு மட்டும்தான். “எதையுமே எதிர்பார்க்காத, ஒரு நெருங்கிய தோழமை தரும் பலம் அலாதியானது. எனக்கு அப்படியொரு நட்பு உங்கிட்ட இருந்து கிடைச்சிருக்கு ஷிவு. தாங்க்ஸ்ட்டா” ஜீவிதா ஷிவாஸிடம் அடிக்கடி கூறும் வார்த்தைகள்.

“என்னோட நட்பை மட்டுமே நீ உயர்வா நினைச்சிட்டுருக்க ஜித்துமா. ஆனா என்னோட மனசு அதையும் தாண்டி உங்கிட்ட இருந்து எதிர்பாக்குதே. காதலைச் சொல்ல நான் வந்தா, இருக்குற நட்பும் இல்லாம போய்ட்டா, நான் என்ன பண்ணுவேன்? உனக்கும் ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை வரணும்டி. அதுவரை நான் உனக்காகக் காத்துட்டு இருப்பேன்” ஷிவு மனதோடு கூறும் வார்த்தைகள் அவை.

ஜீவிதாவின் எழுத்துக்களில் கவரப்பட்டு ரசிகனாக மாறிய ஷிவாஸ், அவளது அறிமுகம் கிடைத்தபின் நல்ல நண்பனாக மாறி இருந்தான். நட்பென்றும் விதை காதலாக அவனுள் வேரூண்டி இருக்க, ஜீவிதாவின் முன்னாள் காதல் தந்த ரணத்திற்கு மருந்தாக மாறி இருந்தான்.

“அதுலாம் கரெக்டாதான் நடக்கும். அதுலாம் பாத்துக்க நான் இருக்கேன். நீ விடு. இப்போ இங்க பாரேன். அந்தக் குடும்பம் எவ்வளவு அழகா இருக்குல்ல. எல்லாரும் மறுபடியும் வெளியூர் போகப் போறாங்கபோல. அவங்க வழி அனுப்ப மொத்த குடும்பமும் வந்துருக்கு. கூட்டு குடும்பம்போல”

அந்த ஏர்போர்ட்டில் இருக்கும் அனைவருமே அந்த அழகான குடும்பத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். தனிக்குடும்பம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தக் காலத்தில், அந்த இருவது பேர் கொண்ட கூட்டு குடும்பம் ஆச்சரியத்தைதான் கொடுக்குமோ?

“ஆமா ஷிவு. அழகா இருக்குல்ல. சித்தப்பா, பெரியப்பா, மாமா, சித்தி, தாத்தா, அம்மா, அப்பா என்று வாழுறதே இப்போதெல்லாம் அபூர்வமா இருக்கு. யார் கண்ணும் அவங்க மேல படாம இருக்கனும். அதிலும், அந்தச் சின்னக் குழந்தை ரொம்ப க்யூட்”

அவளுள் இப்பொழுதெல்லாம் புதியதாய் ஒரு ஏக்கம் எட்டிப்பார்க்கிறது. ‘தனக்கும் இப்படியொரு குடும்பம் அமையாதாயென்று!  தன்னையும் அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை வராதாயென்று!’  ஷிவுவின் ஆசையையும் அவள் அறிந்துதான் இருந்தாள். தனது மனமும் இப்பொழுதெல்லாம் அவனிடம் மெல்ல மெல்ல சாய்வதும் அவள் அறிந்துதான் இருந்தாள். இருந்தும் ஒரு தயக்கம் அவளுள் எழுந்த வண்ணமே இருந்தது.

“இந்தக் காதல், கல்யாணம்வரை சென்று நின்னு போய்ட்டா? அந்தக் காதல் மாதிரி இப்போவும் நாங்க பிரிஞ்சுட்டா?” எதிர்மறை எண்ணங்கள் அவளுள் விஸ்வரூபம் எடுத்து அவளைப் பயப்புறுத்த, அவள் நடுங்கியபடி இருந்தாள்.

“நமக்கும் இப்படியொரு குடும்பம் வரும் ஜீவி. நீ சம்மதிச்சா!” எப்போதும் ஏதேதோ சமாளிப்பில் தனது மனதைக் கூறும் ஷிவாஸ், இப்போது அவளது கவலை பாய்ந்த முகத்தைப் பார்த்துக் கூறியிருந்தான்.

“ஷிவு நானா? உனக்கே தெரியும் என் வாழ்க்கைல நடந்தது? என்னால? நான்? எப்படி?” மனதில் சந்தோஷம்தான். அவனது மனதை இப்பொழுதாவது கூறினான் என்று.  ஆனாலும் ஒரு தயக்கம்.  தன்னால் அவனது வாழ்க்கையில் ஏதாவது குழப்பம் வந்து விடுமோ என்று!

“நாம நண்பர்களாக நல்லா தானடா இருக்கோம். அப்புறம் வாழ்க்கையில் மட்டும் எப்படி வேற மாறி ஆகும்னு நினைக்கற. உனக்கு அவ்வளவு பயமாவாடா நான் தெரியுறேன்?” அவனுள் ஒரு கலக்கம். இத்தனை நாள் பழகியும் தன்னை இவள் புரிந்து கொண்டது இவ்வளவுதானா என்று!

“ச… ச… அப்படியெல்லாம் இல்ல ஷிவு. எனக்கு என் மேலதான் பயமா இருக்கு. நான் எங்கயாச்சும் உன்னை எனக்கே தெரியாம கஷ்டப்படுத்திடுவேனோ, எங்க அதுனால நீ என்னை விட்டுப் போய்டுவியோன்னு! எங்க, உனக்கே தெரியாம, ஏதோ ஒரு சண்டையில, ‘இதுனாலதான் உன்னை அவன் விட்டுட்டு போய்ட்டானு’ சொல்லிடுவியோன்னு பயமா இருக்கு! இன்னொரு பிரிவைத் தாங்குற சக்தி, நாள் பூரா பிரிவைச் சந்திக்கற இந்த ஏர்போர்ட்டுக்கு வேணா இருக்கலாம். ஆனா எனக்கு அது சுத்தமா இல்லடா” பேசும்போதே அவள் உடைந்து விட்டாள்.

வருடக்கணக்கில் அவள் மனதில் தேங்கிய கவலை அது. இன்னொரு காதலை அவள் மனம் ஏற்க தயாராகத்தான் இருந்தது. ஆனால் எங்கே மறுபடியும் பிரிவைச் சந்திக்க நேர்ந்து விடுமோ என்ற கவலையே, காதல், கல்யாணம், தனக்கென ஒரு குடும்பம் என்று அவள் இத்தனை நாளாக யோசிக்காமல் தள்ளிப் போடச் செய்தது.

ஷிவுவின் வார்த்தைகள் அவளை உடைய செய்தது. உடைந்துவிட்டுருந்தாள். தாங்க அவனது தோள்கள் வருமென்ற நம்பிக்கையில்! அவளது நம்பிக்கை வீண் போகவில்லைதான்! தோள் சாய்த்து ஆறுதல் படுத்தினான்.

“உனக்குப் பிரிவுபற்றித் தான ஜித்துமா கவலை. விடு. நீ என்னை லவ் கூடப் பண்ண வேணாம். நம்மளோட வாழ்க்கைக்கு என் ஒருத்தனோட காதல் மட்டுமே போது மானதா இருக்கட்டும்” பேசிய ஷிவுவை ஆறுதலாகப் பார்த்தாள் அவள். இந்த ஒரு வார்த்தைக்குதான் தான் இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்தோமென்று அறிந்து!

“முதல் காதல்… ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமானதுதான். மாற்றுக்கருத்து இருப்பதில்லை. ஆனால் அந்தக் காதல் பெரும்பாலும் தோல்வியைத் தழுவதுதான் துரதிஷ்டமாகிவிடுகிறது! அதை எண்ணி சோகத்தில் வாழாமல் பிற்காலத்தில் தனக்காக வாழ்க்கை துணையாக வருபவரோடு பேசி மகிழ ஒரு அருமையான வாழ்க்கை அனுபவமாக மாற்றிச் செல்வதே வாழ்க்கையில் தேவையான பாடமாக நான் எண்ணுகிறேன்”

ஜீவிதா அவளது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பேஜில் ஸ்டேட்டஸாக வைக்க, “ஜித்துமா இன்னும் என்னடா பண்ணுற? வா! குழந்தை நீ இல்லாம தூங்க மாட்டேங்குறான் பாரு…” ஷிவுதான்!

ஆம்! ஜீவிதாவின் உண்மையான ஜீவநாடியாக ஷிவு மாறி இருந்தான். ஜீவன் இல்லாமல் இந்தச் சிவம் சவம்தான் என்ற காதலோடு ஷிவு வாழ்ந்திருந்தான்! காதல்… அருமையான அனுபவம்தான்! அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது ஒவ்வொருத்தரின் எண்ணத்திலேயே அமைந்திருக்கிறது!

*-*முற்றும்*-*