நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

10

பதினைந்து நாட்கள் தேனிலவை முடித்து தம்பதியர் சுகமாய் மாளிகைக்கு வந்து சேர்ந்தனர். அன்றாட அலுவல்களை மீண்டும் கவனிக்கும் பொருட்டு ஆதி அன்றைய காலைநேரமே கீழிறங்கி வந்து தம்பியிடம் பேச ஆரம்பித்திருக்க, தேஜஸ்வினியும் அனைவருக்கும் வாங்கிய பரிசுப் பொருட்களுடன் இறங்கி வந்து விட்டாள்.

இனிப்புகள், சாக்லேட்டுகள் மற்றும் சிறுசிறு பரிசுப் பொருட்களை பணியாட்களுக்கு கொடுத்த தேஜு, அருணாசலத்திற்கு நவரத்தின மாலையையும் சிப்பியில் அலங்கரித்த விளக்கினையும் தனது அன்பளிப்பாக கொடுக்க,

“பார்த்தீங்களா பெரியவரே! என்ற பேத்தி எனக்கும் பரிசு வாங்கிட்டு வந்திருக்காங்க.” ஆதியிடம் பெருமை பேசியே அன்போடு வாங்கிக் கொண்டார் பெரியவர்.

“இந்த பேத்திக்கு பொறுப்பு இல்ல… சரியா முகம் கொடுத்து பேசுறதில்லன்னு ஆயிரம் குறை சொன்னவரு எங்கே போனாருன்னு தெரியுமாங்கய்யா!” நமுட்டுச் சிரிப்பில் ஆதி, பெரியவரை கேலிபேச,

“அது… இங்கே வந்த புதுசுல பெரியவரே! பாவம் சின்னப் பொண்ணு என்ன செய்யும்? எல்லாரும் என்ற சின்ன பேத்தி மாதிரி இருப்பாங்களா!” மருமகள்கள் இருவரையும் விட்டுக் கொடுக்காமல் தாங்கிப் பேசியதில், இருவருக்கும் மனம் நிறைந்து போனது. மனஷ்வினியை வெளிப்படையாக கொண்டாடிக் கொண்டதிலும் பூரித்துப் போனாள் தேஜு.

ஆனந்தனிடம் இரண்டு கீ செயின்களை தேஜு கொடுக்க, முதலில் மறுத்து, ஆதியின் வற்புறுத்தலில் வேண்டா வெறுப்பாக வாங்கி டேபிளின் மேல் வைத்து விட, தேஜுவின் முகம் சுணங்கிப் போனது.

“இவன் இப்படிதான்னு சொல்லி இருக்கேனே தேஜு! வொரி பண்ணிக்காதே!” ஆதியின் கிசுகிசுப்பில் அவளும் அரைகுறையாக தலையசைக்க,

“அதான், உன் தங்கச்சிக்காக ஒரு டிராலி நிறைய அள்ளிட்டு வந்திருக்கியே… அவளுக்கு போய் குடுமா!” துரிதப்பேச்சில் மனைவியின் முகத்தை மலர வைத்தான் ஆதி.

சரியென்று அவளும் தங்கையைக் காண இரண்டாம் தளம் செல்ல எத்தனிக்க, “சின்ன பேத்தி இங்கே இல்லடா கண்ணு!” தகவலாக வந்த அருணாசலத்தின் வார்த்தையில் சட்டென்று நின்றாள்.

“ஏன், எங்கே போனா?” அடுத்தடுத்த கேள்வியில் தனது விசாரணையைத் துவங்கி விட்டான் ஆதி.

“எங்கேயும் போகப்போறதா என்கிட்டேயும் சொல்லலையே?” தேஜுவின் அதிகப்படியான கேள்வியில் பெரியவரையும் ஆனந்தனையும் பார்வையால் குற்றம் சாட்டினான் ஆதி.

“எனக்கு எந்த விவரமும் சரியா தெரியாது கண்ணு! கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி-ல இந்த வருசத்துக்கு பீஸ் கட்டியாச்சு. இந்த தேதிக்கு மகளை ஹாஸ்டலுக்கு அனுப்பணும்னு சொல்லி போனவாரம் உங்கம்மா வந்து சின்ன மருமகளை கூட்டிட்டு போயிட்டாங்க.” செய்தியாக சொன்ன பெரியவரின் பேச்சில் இடையிட்டாள் தேஜு.

“தாத்தா, அவ பொள்ளாச்சி மெடிக்கல் காலேஜ்ல படிக்கிறப்ப, பி.எஸ்.ஜில எதுக்கு பீஸ் கட்டணும்? காலேஜ் மாத்துற விவரம் கூட எனக்கு தெரியாதே! எப்படி மாத்துனாங்க?” அவள் கேட்ட சந்தேகங்களுக்கு தெரியாது என கையை விரித்தார் அருணாசலம்.

“என்கிட்ட சொல்லாம இவ எங்கேயும் போனதில்லையே? ஏன் இப்படி?” யோசனையுடன் நின்ற தேஜூவின் பார்வை ஆனந்தனை கேள்வியுடன் பார்த்தது.

அந்தச் சூழ்நிலையை சற்றும் விரும்பாத ஆனந்தன், அங்கிருந்து புறப்பட எத்தனிக்க, அவனது கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான் ஆதி.

“உன் பொண்டாட்டி பத்தி தானே பேசிட்டு இருக்கோம். பதில் சொல்றதுக்கு என்னடா?” ஆதி கடிந்து கொள்ள, முகம் திருப்பிக் கொண்டான் தம்பி.

சகோதரர்கள் பார்வை ஒருவரையொருவர் எதிர்ப்பு காட்டியவண்ணமே இருக்க, நிலைமைய சகஜமாக்க தானாகவே முன்வந்து தேஜுவிடம் பேசினார் பெரியவர்.

“நீ சொல்ற விவரம் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி நான் கேட்டு வைச்சுகிட்டது. ஆனா வயசாகிடுச்சு இல்லையா… அதான் மனசுல நிக்கலமா!” என்றவர் ஆதியையும் ஒரு பார்வை பார்த்து,

“ஏதாவது அவசர காரியம் இருந்தா மட்டுமே ஃபோன் பண்ணுங்கன்னு, பெரியவர் அங்கே இருந்தே சட்டமா சொன்னதுல, நானும் இந்த விசயத்தை உங்ககிட்ட சொல்லாம விட்டுட்டேன்.

அதுவுமில்லாம புருஷன் சரின்னு சொல்லி பொஞ்சாதி போகும்போது மத்தவங்க அபிப்பிராயம் எல்லாம் தேவையில்லாத ஒன்னு கண்ணு! ஏன் உன்ற தங்கச்சி வாட்ஸ்-அப், மெசேஜ்ல கூட உன்றகிட்ட விவரம் சொல்லலையா?” நீளமாக பேசி முடித்து அவளிடமே எதிர்கேள்வி கேட்டார் அருணாசலம்.

தேஜஸ்வினிக்கு இந்த விவரங்கள் எல்லாம் முற்றிலும் புதுமையே! ஊரில் இருந்தபோது இரண்டு முறை மனஷ்வினி, அக்காவிடம் பேசுவதற்கென அழைத்திருந்தாள். ஆனால் இவளால் தான் அழைப்பினை ஏற்றுப் பேச முடியவில்லை.

கடந்தகால நினைவுகளால் சோர்வுற்று இருந்த கணவனது வாட்டத்தை போக்குவதே தனது தலையாய கடமையாகக் கொண்டு அவனை சீராட்டி தாலாட்டி, காதலித்து மகிழ்ந்தவள் எந்த அழைப்பையும் ஏற்காதுதான் போனாள். தங்கையும் அதற்கு பிறகு குறுஞ்செய்தியாக கூட விவரங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருந்தது அவளை மேலும் துணுக்குற வைத்தது.

அன்று அசட்டையாக இருந்துவிட்டு இன்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாள் தேஜஸ்வினி. தனது நிலையை விளக்கிச் சொல்லவும் முடியாமல் இவள் தலைகுனிந்து நிற்க, ஆதியே மேற்கொண்டு விசாரணையை மேற்கொண்டான். 

“அவ ஹாஸ்டலுக்கு போகப்போறான்னு உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்குமே ஆனந்தா! நீயாவது எதுக்கு காலேஜ் மாத்துறீங்கன்னு கேட்டிருக்கலாம்.” தம்பியிடமே நேரடியாகக் கேட்டான் ஆதி.

“ம்ப்ச்… எனக்கு இதெல்லாம் தேவையில்லாத பஞ்சாயத்து. விட்டுப்போன படிப்பை கண்டினியூ பண்ணப் போறதா அவங்கம்மாவை கூட்டிகிட்டு வந்து சொன்னா… எப்படியோ போகட்டும்னு விட்டுட்டேன்.” அசிரத்தையுடன் கூற, தேஜு சட்டென்று கோபம் கொண்டாள்.

“அவ உங்க வொய்ஃப்! இப்படி தட்டிக் கழிச்சு பேசலாமா ஆனந்த்?” கடுப்புடன் இவள் கேட்க, அவன் முகம் சுழித்துக் கொண்டான்.

“இதென்ன அசட்டுத்தனம்? யார்கிட்டயும் பிராப்பரா இன்ஃபார்ம் பண்ணாம அவ இஷ்டத்துக்கு போயிருக்கா! இதெல்லாம் என்னன்னு கேக்குறதில்லைங்களா ஐயா?” அருணாசலத்திடம் கேட்டவன் மனைவியையும் முறைத்து,

“மிஸ்டு கால் இருந்ததை பார்த்தாவது, நீ கால் பண்ணி பேசியிருக்கக் கூடாதா?” எனக் கடிந்தும் கொண்டான்.

“இந்த ஊருல படிச்சிட்டு இருந்தவ, எதுக்காக கோயம்புத்தூர் போறான்னு அதையாவது கேட்டிருக்கலாமே ஆனந்தா?” மீண்டும் தம்பியை கேட்க, வெகுவாக அவன் அலுத்துக் கொண்டான்.

“என்ன, ஏதுன்னு கேட்டு, அவ நல்லது கெட்டதை பார்த்துக்கிற அளவுக்கு அவ, எனக்கு முக்கியமில்லை. அப்படியொரு அக்கறை அவளுக்கு இருந்திருந்தா இங்கே எல்லார்கிட்டயும் பெர்மிசன் வாங்கினதுக்கு அப்புறம் அட்மிசன் போட்டிருக்கலாமே?” கேள்வியை வகையாகத் திருப்பியவன்,

“இல்லன்னு சொல்லாம அள்ளிக் கொடுக்கிற தர்மபிரபு இவர் இருக்கும்போது ஊரு விட்டு இல்ல, கண்டம் தாண்டிக் கூட அவ படிக்க போவா!” அருணாசலத்தை கை காட்டிப் பேசி, எள்ளலாய் முடித்தான் ஆனந்தன்.

“என்ன சொல்றீங்க சின்னவரே? நான் எங்கே இருந்து அள்ளிக் கொடுத்தேன்? ஏன் இப்படி பேசுறீங்க?” ஆதங்கத்துடன் அருணாசலம் கேட்க, ஆதிக்கோ பொறுமை பறிபோனது.

“ஏனோதானோன்னு எதையும் யோசிக்காம பேசி வைக்காதே ஆனந்தா! பொண்டாட்டி பத்தின விவரங்களை கேட்டுத் தெரிஞ்சுக்காம இருந்தது உன்னோட தப்பு. அதை விட்டுட்டு நீ மத்தவங்களை குறை சொல்லாதே!” என்றவன் தேஜுவையும் முறைத்துப் பார்த்தான்.

‘உன் வீட்டினரின் லட்சணத்தைப் பார், சின்னப் பெண்ணிற்கு தான் அறிவில்லை என்றால் உன் அம்மாவிற்குமா புத்தியில்லை.’ என்ற கண்டக் கேள்வியை பார்வையால் கேட்க, தவறாமல் படித்து விட்டாள் தேஜு.

“புது வாழ்க்கை, புது பொண்டாட்டி, என்னையே குறை சொல்ற அளவுக்கு உன்னை மாத்தி வச்சுடுச்சுல்ல… வேணாம் ஆதி… இவங்களை, இவங்க குடும்பத்தை நம்பாதே! பின்னாடி ரொம்ப வருத்தபடுவ!” குத்தூசியான வார்த்தைகளை தேஜுவை சுட்டிக்காட்டியே ஆனந்தன் பேச,  அங்கே நிலைமை தீவிரமானது. 

“ரொம்ப பேசுறீங்க ஆனந்த்! அண்ணனா இருந்தாலும் அவங்க பெர்சனல் பத்தி பேசற ரைட்ஸ் உங்களுக்கு கிடையாது. அப்படி என்ன மோசம் பண்ணிட்டோம்ன்னு எங்க குடும்பத்தை பத்தி தப்பா பேசுறீங்க?” கோபத்துடன் தேஜு கேட்க, வார்த்தைகள் வீரியம் மிகுந்து வெளிப்பட்டது.

“தேஜு, நான் பேசிட்டு இருக்கும் போது, உன்னை யாரு இடையில வரச் சொல்றது?” ஆதி பதிலுக்கு எகிற,

“உங்க தம்பி, நம்மை பத்தி, என் பிறந்த வீட்டை பத்தி தப்பா பேசுறார். அதை கேட்டுட்டு நான் சும்மா நிக்கணுமா?” பதிலுக்கு பதில் வார்த்தை வளர்த்தாள் தேஜஸ்வினி.

“அம்மாடி கோபப்படாதே! என்ன ஏதுன்னு நான் விசாரிக்கிறேன். இனி சின்னவர் இப்படி பேச மாட்டாரு. நீ உள்ளாற போ!” பெரியவர் படபடப்புடன் சமாதானப்படுத்த சட்டென்று குரலை உயர்த்தினான் ஆனந்தன்.  

“என் அண்ணன்கிட்ட நான் பேசும்போது உங்களை யாரு இடையில வரச் சொன்னது? சத்தம் போட்டு கேள்வி கேட்டா உங்க குடும்பம் ரொம்ப யோக்கியமாகிடுமா? நீங்கதான் தியாகி ஆகிடுவீங்களா?” ஆனந்தன் இகழ்ச்சியுடன் கேட்டு நிறுத்த, ஆதிக்கும் அந்த நேரம் ஆங்காரம் கூடிப் போனது.

“அப்படி என்னதான் நடந்ததுன்னு சொல்லித் தொலையேன்டா! ஒன்னும் புரியாம பேசிப் பேசியே பிரச்சனையை பெரிசாக்காதே ஆனந்த்!” உஷ்ணப்பேச்சில் குரலை உயர்த்தியே ஆதி கேட்டு விட, ஆனந்தனுக்கும் ஆவேசம் கூடிப்போனது.  

இத்தனை நாட்களில் இது போன்ற தர்க்கங்கள் உடன் பிறந்தவர்களிடையே நடைபெற்றதில்லை. சகோதரர்களும் அதை விரும்பியதில்லை. தம்பியின் மனதில் எந்தவித மனச்சுணக்கமும் ஏற்பட்டு விடக் கூடாதென்று அவன் கூறும் எந்த விசயத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வான் ஆதி.

அப்படி முடியாத பட்சத்தில் மிகவும் தன்மையாக பொறுமையுடன் காத்திருந்து பதில் அளிப்பான். அப்பேற்பட்டவனும் இன்றைய தம்பியின் தோரணையை கண்டு முகம் சுளித்தான்.

வெளிப்படையாக கடிந்து கொள்ளவும் முடியாத நிலைமையில், யாரிடம் எப்படி எடுத்துக் கூறுவதென்று புரிபடாத சூழ்நிலையில் மனைவியை அடக்கிவிட்டு தம்பியிடமும் எகிறி விட்டான் ஆதி.

மனைவிக்காக, தன்னையே எதிர்த்துக் கேள்வி கேட்கும் அண்ணனின் பாவனையில் முற்றிலும் தன்னிலை மறந்து போனான் ஆனந்தன்.

“நீ சரியான எமோசனல் இடியட் டா ஆதி! உன்னை நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க!” தேஜூவை பார்த்து நக்கலுடன் சிரித்தான்.

“தப்பு சின்னவரே, அவங்க உங்க அண்ணி.” பெரியவரும் எச்சரிக்க அதை தூசியாகத் தட்டி விட, பதில் பேச வந்த தேஜுவை கண்களால் அமைதிபடுத்தினார் பெரியவர்.

“ஏன் ஆதி? நம்ம கல்யாண சம்மந்தம் எப்படி, எந்த அடிப்படையில நடந்ததுன்னு உனக்கு தெரியுமா?”

ஆனந்தன் உள்ளர்த்தத்தோடு கேட்ட கேள்விக்கு தெரியாது என்று தலையாட்டியவன், புதிராக மனைவியை நோக்கினான். அவளுமே தனக்கும் இந்த கேள்விக்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்பது போல அமைதியாகவே நின்றாள்.

“சரி அதை விடு! கல்யாணத்துல இஷ்டமில்லன்னு மணமேடையிலேயே மயங்கி விழுந்த பொண்ணு, எப்படி உன்கூட அன்னியோன்யமா இருக்காங்க… இதையாவது நீ யோசிச்சு பார்த்தியா?” விஷமக் கேள்விகளால் ஆதியின் மனதை ஊடுருவியவன், அப்பொழுதும் தேஜூவை எள்ளலாய் பார்த்து முகம் சுழிக்க, அவளுக்கு தேகமெங்கும் கூசிப் போனது.

தேவையில்லாமல் தங்களது அன்னியோன்யங்கள் சபை ஏற்றப்படுவதை தேஜு சிறிதும் விரும்பவில்லை. பொறுமை இழந்தவள் அடக்கி வைத்த கணவனிடமே தனது எதிர்ப்பினை காட்டிவிட்டாள்.

“உங்க தம்பி அளவுக்கு மீறி பேசுறார் அத்தான்! இதுக்கு மேல ஒரு வார்த்தை நம்மை பத்தி அவர் விமர்சனம் பண்ணினாலும், நான் இங்கே இருக்கிறதை பத்தி யோசிக்க வேண்டி வரும்.” கூர்முனை அம்பாக இவள் வார்த்தையை விட, அதையும் சர்வ சாதரணமாய் தூக்கி எறிந்தான் ஆனந்தன். 

“என்ன அம்மா வீட்டுக்கு பொட்டிய தூக்கிட்டு போயிடுவீங்களா? அங்க உங்களை வரவேற்க யார் காத்துகிட்டு இருக்கா?“ ஆனந்தனின் அதிகப்படியான பேச்சில்,

“பேசாதே ஆனந்தா!” ஆதி கோபத்தில் குரலை உயர்த்தி விட்டான்,

“நீ மொத இவங்களை நம்புறது நிறுத்து ஆதி! இந்த ரெண்டு பொண்ணுகளும் நம்மகிட்ட இருக்குற சொத்து சுகத்தை பார்த்து தான், இந்தவீட்டுக்கு மருமகளா வந்திருக்காங்க!

உன் பொண்டாட்டிக்கு ஃபேஷன் டிசைன்ல சாதிக்க பணம் வேணும். இவங்க தங்கச்சிக்கு டாக்டர் படிப்பு முடிக்க பணம் வேணும். இவங்க தம்பிய வெளிநாட்டுக்கு அனுப்பி பெரிய படிப்பு படிக்க வைக்க பணம் வேணும். எல்லாத்துக்கும் மேல நஷ்டத்துல ஓடுற இவங்கப்பா டெக்ஸ்டைல் பிசினஸை தூக்கி  நிறுத்த பணம் வேணும்.

தனக்கே தனக்காக மட்டும் வீடு, சொத்து சேர்த்து பகட்டா வாழ இவங்கம்மாவுக்கு பணம் வேணும். இவ்வளவு தேவையும் தீர்த்துக்க இவங்க குடும்பத்துக்கு கிடைச்சா புதையல்தான் நம்ம வீட்டு சொத்து.

அதை ஸ்வாஹா பண்றதுக்கு போட்ட ஒப்பந்தத்துலதான் நம்ம ரெண்டு பேரோட கல்யாணமும் நடந்ததிருக்கு. எங்கே இல்லன்னு சொல்லச் சொல்லு பார்ப்போம்?” ஆனந்தனின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டில் யாராலும் பதில் பேச முடியவில்லை.

அருணாசலமும் தேஜுவும் வாயடைத்துப் போய் நிற்க, ஆதியும் தம்பியின் பேச்சில் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒருநிமிடம் அமைதியாக நின்றவனின் பார்வை இப்பொழுது இருவரிடத்திலும் நிலைத்தது.

“இவன் சொல்றதெல்லாம் உண்மையா?” வெறுமையான குரலில் அருணாசலத்தை கேட்க,

அவரும், “தொழிலுக்கு, புள்ளைங்க படிப்புக்கு பணம் தரணும்னு சொல்லித் தான் சம்மந்தம் பேசினது பெரியவரே!” என உடைத்துப் பேசி விட, அவரை கண்களால் எரித்தே விட்டான் ஆதி.

“ஓஹ்… அப்ப நான்தான் ஏமாளியா! ஏன் இதை என்கிட்ட முன்னாடியே சொல்லல?” விடாமல் ஆதி கேட்க, பெரியவரின் முகம் கருத்துப் போனது.

“சொன்னா நீங்க ரெண்டுபேரும் ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும். அதுவுமில்லமா நமக்கு சமதையான இடத்தில எப்படி தம்பி சம்மந்தம் பேச முடியும்.?” பெரியவர் கேள்வியாக நிறுத்த,

“ஏன் அவ்வளவுக்கு மோசமான ஆம்பளைங்களா நாங்க?” வெகுண்டு கேட்டான் ஆதி.

“எப்படி சொல்றது? வாழ்நாள் முழுக்க முகத்தை சிதைச்ச தழும்போடயும், ஒருகால் ஊனத்தோடயும் இருக்குற ஆம்பளைய எந்த பொண்ணுதான் மனபூர்வமா கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பா? அதான் பணத்தை வச்சு சம்மந்தம் பேசி முடிச்சேன்.” என்றவர் மேலும் தொடரப் போக,

“போதும்… இதைவிட எங்களை யாரும் இறக்கிப் பேசி அவமானப்படுத்த முடியாது.” எனக் கனன்றவன் அந்த உஷ்ணம் மாறாமல் மனைவியிடம் திரும்பினான்.

அவளிடம் பல கேள்விகள் கேட்டுத் தெளிவு பெற வேண்டி இருந்தது. ஆனால் உறவாக இருந்தாலும மற்றவர் முன்னிலையில் மனைவியை நிற்க வைத்து கேள்வி கேட்க அவன் விரும்பவில்லை.

அவளது கையை இறுகப் பற்றி, இழுத்துக் கொண்டு தனது அறையை நோக்கி நடக்க, இனம்புரியாத கலக்கத்தோடு ஊமையாகப் பின்தொடர்ந்தாள் தேஜு.

பிறந்த வீட்டில் அத்தியாவசியப் தேவையாக இருந்த பணப் பிரச்சனை தான், இந்த திருமணத்தின் அடிப்படை என்பதை இவள் நன்றாக அறிந்திருந்தாலும் அதை வாய்மொழியாகக் கூட கணவனிடம் சொல்லிக் கொண்டதில்லையே! இதுநாள் வரையில் காணாத அவனது கோபமும் ஆங்காரமும் வரப்போகும் புயல் சின்னமாகவே அவளை எச்சரித்தது.   

“ஆனந்த் சொல்றதெல்லம் உண்மையா தேஜூ? உனக்கு இஷ்டமில்லாம தான் நம்ம கல்யாணம் நடந்ததா?” அறைக்குள் நுழைந்த மறுநிமிடமே கேள்வியை கேட்டு விட்டான் ஆதி.

‘எனது மனப்பூர்வமான சம்மதத்துடன் தான் நம் திருமணம் நடந்தது.’ என்ற பதிலை மனைவியிடம் இவன் எதிர்பார்த்திருக்க, அதற்கு நேர்மாறாகவே அவள் பதில் அளித்தாள்.

“எங்க குடும்பத்துக்கு பணத் தேவை இருந்தது.” தனது நிலையை தேஜூ விளக்க முற்பட, பொறுமை இழந்தான் ஆதி.

“நான் கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் வரணும்டி! உனக்கு பிடிக்காமதான் நீ மணமேடை ஏறுனியா?” அவள் முகத்தை உறுத்துப் பார்த்துக் கேட்டவனின் தோரணையில், ஆமென்று  தன்னால் தலையசைத்தாள் தேஜஸ்வினி.

வலித்தது தான், ஆனாலும் கணவன் பேசட்டும் என்று அனுமதித்தாள். அது அவளுக்கே வினையாகிப் போனது.

 

“அப்போ இது உனக்கு பிடிக்காத கல்யாணம். அப்புறம் எப்படி? எப்படிடி என்கிட்ட அப்படி உருகிக் குழைஞ்சு இருந்த? எல்லாம்… எல்லாம் அந்த பணம், சொத்து, சுகம்ங்கிற கருமத்துக்காகவா? அப்படின்னா உனக்கும் பணத்துக்காக வர்றவங்களுக்கும் என்ன வித்தியாசம்?” ஜீரணிக்க முடியாத கொடுமையான வார்த்தையில் குத்திக் கிழித்தே மனைவியின் உணர்வுகளை கொன்று புதைத்தான் ஆதி.

உயிராய் நேசித்த மனைவியிடம் சொல்லகூடாத வார்த்தைகள் தான். அவனது அன்பையும் மீறிய ஆத்திரமும் கோபமும் வெளிப்பட, அவளது தாடையை இறுக்கி தனது முகத்திற்கு வெகு அருகில் வைத்து கூர்மையாகப் பார்த்தான்.

ரௌத்திரத்தில் சிவந்த கண்களின் ஊடுருவும் பார்வையும், தழும்பின் விகாரமும் அவனது முகத்தின் கடுமையை மிகவும் அதிகரித்து காண்பித்ததில், தேஜுவின் மனதில் ஆதியை முதன்முதலாக பார்த்தபொழுது வந்த பய உணர்வு தன்னால் வந்தமர்ந்து கொண்டது.

கணவனது உறுத்து விழித்த கோபப்பார்வையில் தன்னையும் மீறி மிரண்டவள், முகம் திருப்பிக் கொள்ள, மனைவியின் மேல் இருந்த நம்பிக்கையில்லாத தன்மையை ஸ்திரமாக்கியே விட்டான் ஆதித்யன்.

‘இன்னமும் தன்னைப் பார்த்து பயந்து அருவெறுக்கத்தான் செய்கிறாளா? அப்படியென்றால் இத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் பொய் வேஷம் தானோ!’ என தனக்குள்ளாகவே தீர்மானித்துக் கொண்டவன், அவளை இமைக்காது பார்க்க, தேகமெங்கும் நடுங்கியபடி நின்றிருந்தாள் தேஜஸ்வினி.

“அடக்க முடியாத கோபம் உன் மேல வருது. ஆனா, என் கோபத்தை வெளிப்படுத்துற அளவுக்கு நீ தகுதியானவ இல்லைங்கிறதால உன்னை உயிரோட விடுறேன். இனி ஒரு நிமிஷம் கூட என் முன்னாடி நிக்காதே, இங்கே இருந்து போயிடு!” கர்ஜித்தவனாக வெளிவாசலைக் காண்பிக்க, முடியாது என்று கத்த வேண்டும்போல் இருந்தது அவளுக்கு.

தனக்கும் பேச சந்தர்ப்பம் கொடுப்பான் என்று அமைதி காத்தாள் போல… அதுதான் நடக்கவில்லை. ‘இவன் சொன்னதும் சென்று விடவேண்டுமா? மாட்டேன் என்று மறுத்தால் என்ன செய்வானாம்?’ வீம்பான பிடிவாதம் காரணமின்றியே மனம் பற்றிக்கொள்ள திடமாய் நின்றாள் தேஜஸ்வினி.

இந்த களேபரத்தில் மனஷ்வினியைப் பற்றிய விசாரிப்பினை அனைவரும் மறந்து போயிருந்தனர். பெரியவரின், ‘நான் பணம் கொடுக்கவில்லை.’ என்ற பேச்சினை சகோதரர்களும் கருத்தில் கொள்ளவில்லை. உடன் அவளை அழைத்துப் பேசவும் யாரும் முன்வரவில்லை.  

ஆக மொத்தம் மனைவிகளை தட்டிக் கழித்த மடையர்கள் பிழையாக நிற்க, என்ன செய்வதென்று தெரியாத மழலைகளாய் பெண்கள் பேதலித்து நிற்கின்றனர்.

டைட்டில் ஜஸ்டிபை ஆகிடுச்சா மக்களே… ‘நான் பிழை… நீ மழலை..!’

 

பிழை நேராகுமா?

மழலை சிரிக்குமா?

பொறுத்திருந்து பார்ப்போம் நண்பர்களே!!