நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…12

அப்பா ராஜசேகரிடம் உண்மை நிலவரத்தை கூறாமல் ரூபம் குரூப்ஸின் பொள்ளாச்சி அலுவலகத்திற்கு வரும்படி தகவல் கூறிய தேஜஸ்வினி, தம்பியுடன் அங்கே சென்றடைந்தாள்.

அங்கே அவர்கள் சென்று சேரும் பொழுது மாலை நேரத்தை தொட்டிருந்தது. அந்த நேரம் ஆடிட்டிங் விசயமாக ஆதித்யன் அக்கவுண்ட் செக்ஷனிற்கு சென்றிருக்க, ஆனந்தன் வியாபர கூட்டம் ஒன்றில் கலந்துரையாடிக் கொண்டிருந்தான்.

அலுவலகத்தின் வரவேற்பு பெண்ணிடம், தான் இன்னார் என தேஜு கூறும் பொழுதே அங்கிருந்த ஊழியர்கள் அவளை அடையாளம் கண்டு கொண்டனர்.

இருவரையும் அமர வைத்து, மரியாதை கொடுத்த பணியாளர்கள், இவர்கள் வந்த விசயத்தை முதலில் ஆதித்யனுக்கு தெரிவித்தனர்.

“அக்கவுண்ட்ஸ் பாக்கிறதை இடையில விட்டுட்டு வரமுடியாது. அவங்க அங்கேயே கொஞ்சநேரம் வெயிட் பண்ணட்டும்!” அசிரத்தையுடன் கூறிவிட்டு வேலையில் கவனமானான் ஆதித்யன்.

அலுவலகத்திற்கே வந்து பேசும் அளவிற்கு அப்படி என்ன அவசரமோ அவசியமோ என்று ஆதி சற்றும் சிந்தித்துப் பார்க்கவே இல்லை.

அலுவலகத்தில் மனைவிக்கு தர வேண்டிய மரியாதையை தட்டிக் கழித்தான் ஆதி. கணவனது பதிலில் பெரிதும் மனமுடைந்து போனவள், அடுத்த முயற்சியாக ஆனந்தனை சந்திக்க வேண்டுமென்று கூறினாள்.

அண்ணனுக்கு தப்பாமல் தம்பியும் இவர்களை வந்து பார்க்க மறுத்தான். “பிஸினஸ் மீட்டிங்கை பாதியில விட்டுட்டு வர முடியாது. நான் வர்ற வரை காத்திருக்கட்டும்.” என்று கூறிவிட, வெறுத்துப் போனாள் தேஜு.

“உயிரில்லாத தொழிலுக்கும், பணத்துக்கும் கொடுக்கற மதிப்பை, மனுசங்களுக்கு கொடுக்க மாட்டானுங்க இந்த பணக்காராங்க!” வெளிப்படையாகவே முணுமுணுத்தவள், அவசரமாக முதலாளிகளை சந்தித்தே ஆக வேண்டுமென்று அங்கேயே நின்று தர்க்கம் செய்ய ஆரம்பித்தாள்.

வெகு அவசரம் என்று பலமுறை அழுத்திச் சொன்ன பிறகே வெளியில் வந்தான் ஆனந்தன். அப்படி வெளியில் வந்தவனின் பார்வையில் அத்தனை இளக்காரம் தொக்கி நின்றது.

தேஜுவையும் நகுலேஷையும் வெறுப்புடன் பார்த்தபடியே தனது அலுவலக அறைக்கு வருமாறு சைகையில் காட்டி விட்டு ஆனந்தன் முன்னே நடக்க, இருவரும் அவன் பின்னோடு சென்றனர்.

அவனது அறையின் உள்ளே இருவரும் சென்று நின்றதும் தான் தாமதம், தேளாய் கொட்டத் தொடங்கி விட்டான் ஆனந்தன்.

“என்ன… நேத்தைய பிரச்சனைக்கு நியாயம் கேட்க உங்க தம்பிய கூட்டிட்டு வந்திருக்கீங்களா? அதைப் பத்தி பேசவோ, கேள்வி கேக்கவோ இது இடமும் இல்ல… எனக்கு நேரமும் இல்ல, நீங்க இப்ப போகலாம்!” காட்டத்துடன் பொரிந்து விட்டு மீண்டும் கிளம்பி நிற்க,

நகுலேஷ், “அடச்சே!” என்றே வெளிப்படையாகவே கடுகடுத்துக் கொண்டான்.

“அதென்ன பிரச்சனைக்கா? புதுசா இவர் வேற ஏதோ ஒன்னு சொல்றாரு!” தம்பி கேட்கவும்,

“அதெல்லாம் அவங்க அண்ணன் தம்பிக்குள்ளடா. நமக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை.” அவனை சமாதானப்படுத்தி விட்டு, ஆனந்தனை நேர்பார்வை பார்த்தாள் தேஜு.

‘எங்களை உதாசீனப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு உன்னை, நீயே கீழிறக்கி காட்டிக் கொண்டாயே!’ என்ற பாவனையில் ஊடுருவிப் பார்க்க, ஆனந்தனுக்கு வெறுப்பு மேலிட்டது.

“இப்ப என்ன விசயமா வந்து நிக்கிறீங்க?” அலட்சியத்துடன் அவன் பேசத் தொடங்க,

“மனு எங்கே இருக்கா ஆனந்த்?” அழுத்தமாக கேட்டாள் தேஜு.

தங்கை இருக்கும் இடம் ஆனந்தனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரியும் என்பதில் அவளின் உள்மனம் அசராத நம்பிக்கை கொண்டிருந்தது.

அதனாலேயே இங்கு வந்ததும் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவனையும் பதிலுக்கு பதில் முறைக்கத் தொடங்கினாள்.

“அதான் நேத்தே சொல்லிட்டேனே… இன்னும் என்ன கிராஸ் குவஸ்டீன்?” வேண்டா வெறுப்பாய் ஆனந்தன் பதில் சொல்ல, ரௌத்திரமாகிப் போனாள் தேஜு.

“எப்படியோ போகட்டும், அனுப்பி வைச்சுட்டேன்னு சொன்னது நீங்கதானே! அப்படி எங்கே அனுப்பி வச்சீங்க? என் தங்கச்சி எங்கே இருக்கா? என்ன பண்ணீங்க அவளை?” அடுக்கடுக்காக அவன் மேல் குற்றம்சாட்டிக் கொண்டே போக, புரியாமல் விழித்தான் ஆனந்தன். 

ஏதோ ஒரு ஆவேசம், எல்லோர் மீதும் கனன்று கொண்டிருந்த கோபம், என எல்லாம் சேர்ந்து அழுத்தியதில் ஆனந்தனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்துக் கேட்டு விட்டாள் தேஜஸ்வினி.

“அக்கா, கோபப்படமா பேசு… நீ பேசுறதை யாராவது கேட்டா, சின்ன மாமாதான் ஏதோ தப்பு பண்ணி இருக்காருன்னு சொல்லிடுவாங்க!” நகுல் நிதர்சனத்தை கூறி புரிய வைத்த பிறகே, அவளுக்கும் தனது செயல் சற்று அதிகப்படியோ என்று தோன்றியது..

“நீங்க ரெண்டுபேரும் பேசிக்க என் ஆபீஸ் ரூம்தான் கிடைச்சதா? வாய்க்கு வந்ததை உளறாம என்ன விசயமா வந்தீங்கன்னு சொன்னா, அதுக்கு பதில் சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்!” தனது நிலையில் இருந்து சற்றும் இறங்காமல் முறைப்புடன் கேட்டான் ஆனந்தன்.

“அக்கா பேசுனதை மனசுல வைச்சுக்காதீங்க மாமா! மனு அக்காவை காணோம். ஹாஸ்டல், காலேஜ்னு தேடிப் பார்த்துட்டுதான் இங்கே வந்தோம்!” என்ற நகுலேஷ், அங்கே நடந்தவற்றை பொறுமையாக விளக்கிக் கூற, ஆனந்தன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

“ஹாஸ்டல்ல இருந்துமா இப்படி நடந்திருக்கு?” அனைத்தையும் கேட்டு முடித்தவனுக்குள் ஏதோ ஒரு இயலாமை மேலோங்கியது.

பெண்களின் பாதுகாப்பு விசயத்தில் தான் அசட்டுத்தனமாக இருந்ததை நினைத்து வெட்கிக் கொண்டான்.

‘பிடித்தமில்லை என்றாலும் அவளைப் பற்றியும் தான் யோசித்திருக்க வேண்டுமோ!’ என மனைவியின் நலனுக்காக முதன்முறையாக சிந்திக்கத் தொடங்கினான்.

“போலீஸ் கம்பிளையின்ட் கொடுக்கணும் மாமா… நீங்களும் வந்தாத்தான் கரெக்டா இருக்கும்!” நகுலேஷ் பேசிய நேரத்தில் ஆதித்யனும் அங்கு வந்து, அதிர்ச்சியுடன் விவரங்களை உள்வாங்கிக் கொள்ளும் நேரத்தில், ராஜசேகரும் அங்கு வந்து சேர்ந்தார்.

மகளைக் காணவில்லை என்று சொன்னதும் ராஜசேகர் புலம்பித் தீர்த்து விட்டார். ‘அவளுக்கு விருப்பம் இல்லாமல் தான் விடுதிக்கு சென்றாள்.’ என அவர் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ, தேஜுவிற்கு அவரை எவ்வாறு சமாதானம் என்றே புரியவில்லை.

‘பேசுவதற்கு நேரமில்லை காவல்துறையில் புகார் அளித்து விடுவோம்.’ என்று நகுலேஷும் தேஜூவும் அவசரப்படுத்த, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

சமுதாயத்தில் முக்கிய புள்ளியாக இருப்பதால் காவல்துறை உயர் அதிகாரியை உடனடியாக நேரில் சென்று சந்தித்து மனஷ்வினியின் புகைப்படம் மற்றும் விவரங்களைக் கூறி புகாரும் அளித்தனர்.

கார்டியன் என்ற பெயரில், சின்ன மாமானார் உறவு முறையைக் கூறி வந்து சென்றது கதிரேசன்தான் என சகோதரர்கள் வெகு எளிதாக கணித்து விட்டனர்.

“கதிரேசன் இன்னும் ரிலீஸ் ஆகலையே ஆனந்த்… அப்புறம் எப்படி அங்க இங்கேன்னு வந்திருப்பான்?” உயரதிகாரி கேட்க, ஆனந்தனுமே தீவிரமாக யோசித்தான்.

கதிரேசன் வந்து சென்ற விவாகரத்தில் பெரிய சதியே நடந்திருப்பதாக கணித்த காவல்துறை, அவனை சந்தித்துப் பேசிய சாட்சியான சுலோச்சனாவை கைது செய்து விசாரிக்க வேண்டுமென்ற நடைமுறையை முன்வைத்தது.

ஒரு பெண்மணியின் கைது அவரோடு முடிந்து விடுவதல்ல… அவருடன் நில்லாமல் மகன், மகள் குடும்பங்களையும் சேர்த்தே பாதிக்கும் வாய்ப்பிருப்பதால் வேண்டாமென்று மறுத்தான் ஆதித்யன்.

“அவரை விசாரிச்சு உங்களுக்கு வேண்டிய தகவலை கொடுக்க வேண்டியது எங்களோட பொறுப்பு!” என்று ஆதி பொறுப்பேற்றுக் கொள்ள காவல்துறையும் சம்மதித்தது.

பெரிய இடத்து விவகாரம் வெளியில் கசிய விடவேண்டாம் என்ற வேண்டுகோளும் காவல்துறையிடம் வைக்கப்பட்டது.

ஒருமனதாக அங்கிருந்து கிளம்பியவர்களின் உள்ளத்தில் மனஷ்வினி இப்பொழுது எந்த நிலைமையில் இருக்கிறாளோ என்ற படபடப்பு மட்டுமே உழன்று கொண்டிருந்தது. அருணாச்சலமும் அலைபேசி மூலம் நடப்பதை உடனுக்குடன் கேட்டறிந்து கொண்டே இருந்தார்.

நேரம் பின்னிரவைக் தொட்டுக் கொண்டிருக்க, “நகுல், நீ உங்கம்மாவை கூட்டிட்டு நம்ம பங்களாவுக்கே வந்திடு! அக்கா வர்ற வரைக்கும் நீங்க எல்லாரும் அங்கேயே தங்கிக்கலாம்!” என்று கூறியது ஆனந்தனே!

“உங்களுக்கு சிரமம் வேண்டாம் மாப்ளே… நாங்க பத்திரமா இருந்துக்கறோம்!” ராஜசேகரின் மறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்தான் ஆதித்யன்.

“அது சரி வராது மாமா… நம்ம வீட்டுல செக்யூரிட்டீஸ் இருக்காங்க… எல்லாரும் ஒரே இடத்துல இருக்கிறதுதான் இப்போதைக்கு நமக்கும் சேஃப்!” என்றபடி தேஜுவை பார்க்க, அவளும் அதையே வலியுறுத்தி, தந்தையை அங்கேயே தங்குவதற்கு ஒப்புக் கொள்ள வைத்தாள்.

காரில் இவர்களின் பங்களாவிற்கு வந்தடையும் நேரம் முழுவதும் ராஜசேகரின் புலம்பல்களே அனைவரின் மனதையும் கலங்கச் செய்தது.

“எல்லாத்துக்கும் காரணம் உங்கம்மா தான்மா! அவளைக் கொன்னு போடணும்!” தேஜுவிடம் கோபத்துடன் பேசிய ராஜசேகர், ஆனந்தனை பார்த்து கை கூப்பி விட்டார்.

“என் பொண்ணை கண்டுபிடிச்சு என்கிட்டே கொடுத்துடுங்க தம்பி… என் புள்ளய என் வீட்டுக்கே நான் கூட்டிட்டு போயிடுறேன்! நீங்க, அவகூட ராசியா இல்ல… அதனாலதான் காலேஜ் மாத்தி படிக்க அனுப்பி வைக்கிறேன்னு என் வீட்டுக்காரி சொன்னதை நம்பி நானும் சரின்னு தலையாட்டிட்டேன்!

தப்பு பண்ணிட்டேன் தம்பி! உங்க ரெண்டு பேருக்கும் இடையில என்ன பிரச்சனைன்னு நான் வந்து கேட்டிருக்கணும். வீட்டுப் பொம்பளை எல்லாத்தையும் நல்லபடியா பார்த்து, பிரச்சனை இல்லாம முடிச்சு வைப்பான்னு அசமஞ்சமா இருந்துட்டேன்… என் பிள்ளையை காப்பாத்தி குடுத்திடுங்கய்யா!” தழுதழுத்துக் கூறும்போது ஆனந்தனுக்குமே நெஞ்சை உலுக்கிப் போட்டது.

அந்த நேரத்தில் தேவையில்லாமல் அவனது அம்மா ரூபாவதியின் நினைவு கண் முன்வந்து நின்று, ‘நானும் உன் நலனுக்காக இப்படித்தான் கலங்கி நின்றேன்!’ எனக் கூறுவதைப் போலத் தோன்ற, அப்பொழுதே நொறுங்கிப் போய் விட்டான்.

ஆறுதல்படுத்தவென ராஜசேகரின் முகத்தை நேருக்குநேராக பார்த்தான். “எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல மாமா… சின்னபிள்ளைதனமா கொஞ்சம் சீண்டி விளையாடினோம், அவ்வளவுதான்!” முதன்முறையாக மனைவிக்கென இறங்கி வந்து பேசினான் ஆனந்தன்.

“அவ எங்க வீட்டு பொண்ணு மாமா! கவலைப்படாதீங்க சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம். வெளியே போயி எங்கேயாவது வழி தவறியும் போயிருக்கலாம் இல்லையா?” ஆறுதலையும் சமாதானத்தையும் சேர்த்தே கூறினான் ஆதி.

மாளிகைக்கு வந்ததும் அவசரமாக தனது பயணப் பொதியுடன் ஆனந்தன் கிளம்பி விட்டான். “ஆதி… நம்ம ஊருக்கும் போயி விசாரிச்சிட்டு, அப்படியே மனு விஷயமா இன்னும் சில ஏற்பாடுகளை பண்ணிட்டு வர்றேன்!” முகம் இறுகக் கூறிவிட்டு கிளம்ப, நகுலேஷும் ஆதியும் அவனுடன் வருவதாக உடன் நின்றனர்.

“வேணாம் ஆதி! இங்கே எந்த பதட்டமும் இல்லாம எப்பவும் போல இருக்கணும். சோ, நீ ஆஃபீசுக்கு போகாம இருக்காதே! நகுல், நீதான் பொறுப்பா வீட்டுல இருந்து பார்த்துக்கணும், சரியா!” எனக் கேட்க,

“சரிங்க மாமா!” என ஒத்துக் கொண்டான்.

“நீங்கதான் ரொம்ப பத்திரமா இருந்துக்கணும். எங்களை ஒன்னும் பண்ண முடியாத கோபத்துல, வீட்டுக்கு வந்த பொண்ணு மேல கையை வச்சுருக்கான் அந்த ராஸ்கல்! ஆதி… இவங்களை ஜாக்கிரதையா பார்த்துக்கோ!” தேஜுவைப் பார்த்துக் கூறியவன், அருணாசலத்திடமும் பல பாதுகாப்பு நடைமுறைகளைக் கூறிவிட்டு, துணைக்கு டிரைவரை உடனழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

***