நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…13

நடந்து முடிந்தவற்றை எல்லாம் விளக்கமாக கூறி சுலோச்சனாவை ரூபம் மாளிகைக்கு அழைத்து வந்து விட்டான் நகுலேஷ்.

தேஜஸ்வினியின் கோபப் பார்வையும் ராஜசேகரின் வசைமொழிகளும் அவரை ஊசியாகக் குத்த ஆரம்பிக்க, யாரும் கேள்வி கேட்காமலேயே அனைத்தையும் கொட்டத் தொடங்கினார் சுலோச்சனா.

“ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, தான் இன்னாருன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்தான் அந்த கதிரேசன். நம்ம மாப்பிள்ளைங்க கூட ஏற்பட்ட மனஸ்தாபத்துல அவங்க, இவனை ஜெயிலுக்கு அனுப்பிட்டதாவும், இப்ப அவன் விடுதலை ஆகி வெளியே வந்துட்டதாவும் சொன்னான்.” என்றவர் அனைவரின் காட்டமான முகங்களைப் பார்த்து தலைகுனிந்து கொண்டார்.

“அவங்க என்னை எதிரியா பார்த்தாலும் நான், அவங்களை என் சொந்த பசங்களாதான் பாக்கறேன். அது போலவே உங்க பொண்ணுங்களையும் என் மருமகளுகளா தான் நினைக்குறேன்னு உருகி உருகிப் பேசியே என் மனசை மாத்திட்டான்.

மனு படிப்பை பாதியில நிப்பாட்டின விஷயம் தெரிஞ்சிட்டு அவளை படிக்க வைக்கிற பொறுப்பை எடுத்துக்கிறேன்னு சொன்னதோட நிக்காம, உடனே அந்த பெரிய காலேஜுல சீட் வாங்கி, பணமும் கட்டிட்டான் அந்த கதிரேசன்.

இவ்வளவும் அவன் உடனே உடனே செய்யப் போயிதான் நானும் நம்பிக்கையா அந்த பாவி கூட சின்னவளை அனுப்பினேன்!” மூக்கை சிந்தியபடி கூற, இடையிட்டார் அருணாச்சலம்.

“பொண்ணு படிப்பு விஷயம் நான் பாத்துக்கறேன்னு முன்னாடியே சொல்லி இருந்தேனேம்மா! என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? இந்த மாதிரி ஒருத்தன் சொல்லிட்டு உங்க வீட்டுக்கு வந்தாலும் எங்ககிட்ட ஒரு வார்த்தை தகவலா கேட்டிருந்தா கூட எல்லாரும் சுதாரிச்சு இருக்கலாமே? எல்லா கஷ்டத்தையும் தேவையில்லாம இழுத்து வைச்சு, ஒரு பொம்பளை புள்ள எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கிட்டியே!” மனம் தாளாமல் வெறுப்புடன் கேட்டு முடித்தார்.

“நீங்க சொல்ல மட்டும்தான் செய்வீங்க… ஆனா, செய்ய மாட்டீங்கன்னு உங்க மேலயே வீணா பழி போட்டு அந்த படுபாவி என்னை நம்ப வச்சுட்டானுங்கய்யா… அதனாலதான் அவன் வந்துட்டு போனதையும் யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு என்னைத் தடுத்துட்டான். நான் என்ன செய்வேன்?” மேற்கொண்டு சுலோச்சனா அழுகையுடன் கூற, ஆதிக்கு அத்தனை ஆத்திரம் வந்தது.

“முன்பின் தெரியாத ஒருத்தரை, எப்படி இந்தளவுக்கு நம்புனீங்க?” தாங்கமுடியாமல் கேட்டே விட்டான் ஆதி.

“சொன்னதெல்லாம் கண்ணு முன்னாடி செஞ்சு முடிக்கும்போது எப்படி அவரை நம்பாம இருக்க முடியும்? அந்த ஆளு மனுக்கு ஃபீஸ் கட்டினதோட நிக்கல… தேஜு அப்பா கடை மேல வாங்கின கடனை எல்லாம் அடைச்சு, கடையோட பத்திரத்தை என் கையில கொண்டு வந்து கொடுத்தானே!” சுலோச்சனா மேற்கொண்டு கூறியதும் ராஜசேகருக்கு புதிய செய்தி. 

“அடிப்பாவி… நான் கேட்டதுக்கு அருணாச்சலம் ஐயாதான் பணம் குடுத்ததுன்னு நீ சொன்னியே… அதுவும் கடனா குடுத்திருக்காருன்னு வேற அளந்து விட்டியே!” கடுப்போடு கேட்ட ராஜசேகர், மனைவியை அடிப்பதற்காக கையை ஓங்கிய நேரத்தில், அருணாச்சலம் சத்தம் போட்டு தடுத்து விட்டார்.

“எங்கே வந்து, என்ன காரியம் பண்றீங்க ராஜசேகர்?” கடிந்து கொண்டவருக்கும் சுலோச்சனாவை பார்க்க அறவே பிடிக்கவில்லை.

‘என்ன செய்வது? இவரைப் பாதுகாப்பதும் நமது கடமைகளில் ஒன்றாகி விட்டது.’ மனதிற்குள் சலித்துக் கொண்டார் பெரியவர்.

“நம்ம நகுல் வெளிநாடு போயி படிக்கவும் பணம் கொடுக்குறேன்னு சொல்லிட்டு போனான் அந்த கதிரேசன்.” சுலோச்சனா மேலும் சொல்லவும் அனைவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.

ஒருவரின் சுயநலத்தை வக்கணையாக உபயோகப்படுத்திக் கொண்ட எதிராளியின் புத்திசாலித் தனத்தை என்னவென்று மெச்சிக் கொள்வது! தவறும் அசட்டுத்தனமும் இங்கிருந்து அல்லவா தொடங்கி இருக்கின்றது.

சுலோச்சனா மட்டுமே அனைத்தையும் உடைத்து சொல்லிக் கொண்டிருந்தார். விவரங்கள் அனைத்தையும் கேட்டுக் கொண்டவர்கள் மறுவார்த்தை ஒன்றும் கேட்காமல் வெறுப்பாய் ஒதுங்கிக் கொண்டனர். வீட்டுப் பணியாட்களை விட்டே சுலோச்சனாவின் தேவையை பார்த்து செய்யச் சொல்லி விட்டாள் தேஜு.

அரைகுறை மனதுடன் இரவு உணவை முடித்துக் கொண்டவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று விட, தேஜுவும் வழக்கம் போல தனது அறைக்கு கணவனோடு வந்தாள்.

அதுவரையில் இருவரும் நேருக்குநேராக பேசிக் கொள்ளவில்லை. அருகில் நின்றபடி மற்றவர்களிடம் பேசினார்களே தவிர இருவரும் முகம் பார்த்துக் கொள்ளவில்லை. இவர்களுக்குள் உண்டான ஊடல் வெற்றிக்கொடியை நாட்டிக் கொண்டு கனகம்பீரமாக நிற்கின்றது.

அசதியும் அழுகையும் மேலிட, தேஜூ கட்டிலின் ஓரத்தில் தன்னை சுருக்கி கொண்டு படுத்து விட்டாள். மனைவிக்கு ஆறுதல் அளிக்க பரபரத்த கைகளை கடினப்பட்டு அடக்கிக் கொண்டான் ஆதி.

‘தனியாக வந்தும், அவளாகப் பேசவில்லையே!’ என்ற கோபம் அவனுக்குள் தணிந்த பாடில்லை.

‘வெளியில் பெரியவர்களுக்கு கொடுத்த ஆறுதலை தனிமையில் தனக்கு அளிக்க முன்வரவில்லையே!’ என்ற ஆற்றாமையில் அவளும் தளர்ந்து சோர்ந்தாள்.

தங்கைக்காக காலையில் இருந்து இவள் பட்ட அலைகழிப்பும் வேதனையையும் என்ன செய்தும் சமன் படுத்தி விடமுடியாது. என்ன முன்னேற்பாடுகள் மேற்கொண்டிருந்தாலும் அவளது வருத்தம் குறைவேனா என்று ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.

அனைவரின் மனமும் மனஷ்வினியின் நலனையே நினைத்துக் கொண்டிருக்க, அவள் பெயரை சிறு பிள்ளையை போல் மனனம் செய்து கொண்டிருந்தான் ஆனந்தன்.

அவளுக்காகவென முதன்முறையாக மேற்கொண்ட பயணம் இது. இன்று மனைவிக்காக இவன் செய்யும் செயல்கள் அனைத்தும் இவனது வரலாற்றில் முதன்முறை என்ற சிறப்பு அந்தஸ்தினை பெற்று விட்டது.

யாருக்காகவும் மருகி நிற்காதவன், யாரிடமும் பதில் சொல்லாதவன், எவரிடமும் தனது அகங்காரத்தை விட்டொழித்து பேசாதவன், இன்று அவளுக்காக அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறான்.

காலமும் விதியும் முற்றிலும் அவனை தலைகீழாக புரட்டிப் போட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டதா? தனது நிலையை அலசி ஆராய்ந்தபடி காரில் சென்று கொண்டிருந்தவனின் எண்ணத்தில் முழுவதும் மனஷ்வினியே வாசம் செய்து கொண்டிருந்தாள்.

பத்து நாட்களுக்கு முன், இவள் வீட்டை விட்டுச் சென்ற தினத்தில், மதிய உணவிற்காக ஆனந்தன் வர, அந்த நேரம் சுலோச்சனா வந்து அமர்ந்திருந்தார்.

‘வருடம் போய் விடும், படிப்பு பாழாகிவிடும்.’ என்று நயமாகப் பேசியவர், மறந்தும் பணத்தை யார் கொடுத்தது என்பதைக் கூறாமல் சாதுரியமாக மறைத்து விட்டார்.

பொதுவாக யார் பேச்சையும் காது கொடுத்து கேட்டுப் பழக்கமில்லாத ஆனந்தனுக்கு, மாமியாரின் வெண்ணெய் தடவி பேச்சு முகம் சுழிக்க வைக்க, வெளிப்படையாகவே அதிருப்தியை காண்பித்தான்.

“பொண்ணு படிப்பு விசயம், அதான் இவ்வளவு தூரம் சொல்றேன்!” என்று மீண்டும் தனது பேச்சிலேயே சுலோச்சனா நின்றதும் கூட, ஆனந்தனுக்கு அதிக கோபத்தை உண்டு பண்ணி விட்டது.

“அவ படிப்பு, அவ இஷ்டம். நடுவுல வந்து தடுக்க நான் யாரு? உங்க பொண்ணு படிக்கிறேன்னு சொன்னா, கூட்டிட்டுப் போயி படிக்க வைங்க!” வெட்டிவிட்ட பேச்சில் உணவை முடித்துக் கொண்டு அவனது அறைக்கு வந்து விட்டான் 

அடுத்த அரைமணி நேரத்தில் மனஷ்வினியும் அறைக்குள் வந்து தனது உடைமைகளை எடுத்து வைத்துக் கொள்ள ஆரம்பித்தாள். அமைதியாக வேலை பார்ப்பவளை சீண்டிப் பார்க்கும் ஆவல் ஏனோ ஆனந்தனுக்கு தலை தூக்க, மெதுவாக தனது பணியை செவ்வென ஆரம்பித்தான்.

“ரொம்ப மும்மூரமா ரெடி ஆகுற போலிருக்கு?” நக்கலுடன் கேட்க, அவளிடமிருந்து பதில் வரவில்லை.

“உன்னைத்தான் கேக்குறேன் செல்லாயி… காது என்ன செவிடா போச்சா?” கிண்டலைத் தொடரவும் விருட்டென்று நிமிர்ந்தாள் மனஷ்வினி.

“இங்கே இருந்து போறதா முடிவு பண்ணினதும் பார்வை கூட ரொம்ப பலமா மாறிடுச்சே! பேஷ்… பேஷ்!” மாறாத சீண்டலில் தொடர, ‘அடப்போடா!’ என்ற அலட்சிய பாவனையில் பார்த்தாள் மனஷ்வினி.

“ஆக, புருஷன் பேச்சை கேட்டு, எனக்கு அடங்கி இருக்க மாட்ட நீ… அப்படித்தானே!” விடாமல் ஆனந்தன் கேட்டதில் கொதித்து போனாள்.

“அது அப்படியில்லை… எனக்கு மரியாதை கொடுக்காத இடத்துல நான் இருக்க விரும்பல! பிடிக்கலன்னா போகச் சொன்னது நீங்கதானே… இப்ப என்ன கேள்வி?” 

“அவ்வளவு பெரிய ரோசக்காரியா நீ?”

“நீங்க சொல்ற எல்லாத்தையும் அப்படியே வாங்கிட்டு நிக்க, நான் என்ன தூணா, துரும்பா? நானும் மனுஷிதான். அது உங்களுக்குதான் புரியல!” வெறுமையுடன் அவள் பேசியதில், ஆனந்தனின் மனம் சட்டென்று சஞ்சலம் கொண்டது.

“அப்ப நான் யாரு? நீ, என்னை அந்த தூணா மட்டுமே  பாக்கற போலிருக்கு!” விடாமல் வம்பு பேசியவனை புரியாமல் பார்த்தாள் மனைவி.

“நீ, என்னை ஜடமாவே முடிவு பண்ணிட்டியா?” கோபத்தோடு கேட்டதும், க்ளுக்கென்று சிரித்தாள்.

“பரவாயில்ல… உங்களைப் பத்தி நீங்களே சரியா கணிச்சு வைச்சுருக்கீங்க!” இவள் பதில் கூற ஆத்திரம் வந்தது அவனுக்கு.

“நானும் மனுசந்தான்டி… எனக்கும் ஊரும் பேரும் இருக்கு. ஒரு முறை வச்சோ, பேர் சொல்லியோ கூப்பிடத் தெரியாதா உனக்கு?” வெடுக்கென்று கேட்க, இவள் திருதிருவென முழித்தாள்.

“மச்சான்னு சொன்ன… அடுத்து ஆனந்த்னு கூப்பிட்ட. இப்ப ரெண்டு நாளா கல்லு மண்ணு கூட பேசுற மாதிரி என் முகம் பார்க்காம கூட பேசிட்டு போற…” ஆகப்பெரும் குற்றத்தை கண்டுபிடித்தவனாக குறை கூறினான் ஆனந்தன். 

அவனது முக சுருக்கத்தில் சற்றே மலர்ந்தவளின் முகமும் சட்டென்று இறுகிப் போனது.

“நானாவது அப்படி கூப்பிட்டு பேசினேன்! ஆனா நீங்க… இதுவரைக்கும் என்னை பேர் சொல்லி கூப்பிட்டு இருக்கீங்களா? என் பேர் தெரியாதுன்னு கேன கிறுக்குத்தனமா பேச்சை மாத்தினா. நான் மனுஷியாக இருக்க மாட்டேன்!” மனைவி கொதித்து கூறவும், இவனது உள்மனம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.

‘எப்போதும் போல தாட்பூட் என வெடுக்கென்று பேச ஆரம்பித்து விட்டாள். இதைத் தானே எதிர்பார்த்தேன். இது போதும் எனக்கு… இது போதுமே!” என்று பிஜிஎம் பாடியது ஆனந்தனின் உள்மனது.

“உன்னை செல்லாயின்னு கூப்பிடுறதே பெரிசு! இதுல மனஷ்வினின்னு நீட்டி முழக்கி சிங்காரமா கூப்பிடணுமோ? இந்த திமிர் பேச்சை எல்லாம் முட்டை கட்டி வச்சுட்டு ஒழுங்கா படிப்பை முடிக்கிற வழியப் பாரு!” என்றவனிடம் உதட்டை பழித்துக் காட்டினாள் மனு.

“படிப்பை முடிச்சிட்டு வருவியா? இல்ல… அப்படியே போயிடுவியா?” சீண்டலின் உச்சம் தொட, அவளும் அதை சரியாகப் பற்றிக் கொண்டாள்.

“என்ன வேலை எனக்காக காத்துட்டு இருக்குன்னு நான் இங்கே வரணும்? ரெஸ்பெக்ட் இல்லாத இடத்தில ஒரு நிமிசம் நிக்கறதையே தலைகுனிவா நினைக்கிறவ நான். என் ஆசை மச்சானுக்கு நான் வேணும்னு தோணினா, என்னை வந்து கூப்பிடட்டும் நான் வர்றேன்! இல்லன்னா… தூர தேசத்திலே எங்கேயாவது போஸ்டிங் வாங்கிட்டு சோஷியல் சர்வீஸ பாக்க போயிடுவேன்!” 

“ஒஹ்… ரொம்ப தெளிவாதான் பிளான் போடுற செல்லாயி!”

“கிளம்புற நேரத்துல இந்த வம்பு பேச்சை விட்டாதான் என்னவாம் மச்சான்?”

“நீயும் கிளம்புற நேரத்துல பதிலுக்குபதில் பேசாமா இருந்தா என்னவாம்? சரியான ரோசக்காரி தான் போடி!” முணுக்கென்ற கோபத்தில் கடிந்து கொண்டு, வழக்கம் போல் முகம் திருப்பி கொண்டான்.

“ஹூம்… திட்டும் போது கூட என் பேர் சொல்லி திட்ட மாட்டீங்களா?”

“நீயும் தான் என் பேர் சொல்லிக் கூப்பிடல… அதை நான் சொல்லிக் காட்டுறேனா?” அவள் பேச்சினை அவளுக்கே திருப்பி விட, மனம் முழுவதும் வெறுப்பினை சுமந்து கொண்டுதான் வீட்டை விட்டு புறப்பட்டாள் மனஷ்வினி.

மனதிற்குள் மனைவியின் சுணங்கிப் போன முகம் நினைவிற்கு வர, “பேர் சொல்லிக் கூப்பிடலன்னு சரிக்கு சரியா சண்டை பிடிக்க தெரிஞ்சவளுக்கு, வந்து நிக்கிறவன் நல்லவனா கெட்டவனான்னு கணிக்கத் தெரியலையா? யார் வந்து கூப்பிட்டாலும் பின்னாடியே போயிடுவாளா இவ? சரியான அரைவேக்காடுடி நீ!” காரில் பயணித்துக் கொண்டே மனைவியை அர்ச்சித்துக் கொண்டிருந்தான் ஆனந்தன்.

‘உனக்கு இப்படி ஒரு எதிரி இருக்கிறான், அவன் யாரென்ற அடையாளம் காட்டி, அவளிடம் நீ சொல்லி வைத்தாயா? அல்லது அவள் எப்படி யாருடன் செல்கிறாள் என்பதைத்தான் அவளிடம் நீ கேட்டுக் கொண்டாயா?’ மனசாட்சி முதன்முறையாக அவனுக்கு எதிராக நின்று கேள்வி கேட்க, அதிர்ந்து போனான் ஆனந்தன்.

“தவறு என்னிடத்தில் இருந்துதான் ஆரம்பமோ… சுமூகமான உறவு இருவருக்கும் இல்லையென்றாலும் என் குடும்பம், என்னைச் சார்ந்த அனைத்து விவரங்களையும் அவளிடம் நான் சொல்லியிருக்க வேண்டுமோ!” இவன் வெளிப்படையாக ஆராய முற்பட, மனசாட்சியும் ஆமென்று கூவியது.

“அப்படி அனைத்தையும் சொல்லவில்லை என்றுதானே ஆதிக்கும், அவன் மனைவிக்கும் பிரச்சனை முளைத்தது.” மனம் சாட்சியோடு மேற்கோள் காட்டி கூறியதும் உள்ளுக்குள் நொந்து போனான் ஆனந்தன். 

‘அப்படி அவர்கள் முட்டிக் கொண்டு நிற்பதற்கும் காரணம் நான்தானே!’ என்று எண்ணிய நேரத்தில் தன்னைத்தானே வெறுத்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தான்.

***