நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

14

வீட்டை விட்டு கிளம்பிய ஆனந்தன் முதலில் சென்ற இடம் மதுரை மத்திய சிறைச்சாலை. சிறப்பு அனுமதியை வாங்கிக் கொண்டு கதிரேசனைக் காண வந்து விட்டான்.

“வாடா மகனே!” என ஆர்பாட்டத்துடன் அவனை வரவேற்றபடி வந்து நின்றான் கதிரேசன். மத்திம வயதிற்கே உரிய தோற்றம். ஆனால் முகத்தில் வஞ்சகமும் குரோதமும் அளவின்றி கொட்டிக் கிடந்தது.

“அப்பன் மேல அம்புட்டு பாசமா கண்ணு! ராவோட ராவா ஸ்பெசல் பெர்மிஷன் கேட்டு என்னை பார்க்க வந்துட்ட!” எனக் கேட்டு வக்கிரமாக சிரிக்க, சிறைக் கம்பியியின் வழியாக அவனது கழுத்தை இறுக்கிப் பிடித்தான் ஆனந்தன்.

கதிரேசனின் உடல்மொழியும் பேச்சும் ஆனந்தனின் பொறுமையை காவு வாங்கிவிட, தன்னையும் மீறி வெளிப்பட்ட ஆத்திரத்தில் கழுத்தைப் பிடித்து விட்டான். 

“முட்டாப்பயலே… கையை கீழே இறக்குடா! இங்கே சுத்திலும் கேமரா இருக்கு. யாரவது எங்கேயாவது உக்காந்து பார்த்துட்டா ரெண்டு பேருக்குமே தலைவேதனை ஆகிப் போகும். அப்புறம் எனக்கு துணையா நீயும் இங்கே வந்து தங்க வேண்டியாதாகிடும். ” கதிரேசன் எகத்தாளத்துடன் கூறவும் தான் கழுத்துப் பிடியை விட்டான் ஆனந்தன்.

“உன்னை, நான் நாலு நாளுக்கு முன்னாடியே எதிர்பார்த்தேன். ஆனா நீ ரொம்ப லேட்டுடா மகனே! ஏன்டா மருமவ கூட சரியா பேச்சு வார்த்தை இல்லையா?” கணிப்பினை கூறி பேச்சினை ஆரம்பித்தான் கதிரேசன்.

“ஒழுங்கு மரியாதையா எதுக்காக நீ, என்னை எதிர்பார்த்துட்டு இருந்தேங்கிற விஷயத்தை சொல்லு. வீணா மகன், மருமகன்னு உறவு கொண்டாடினா இங்கேயே உன்னை கொன்னு புதைச்சிடுவேன்!” ஆனந்தன் கர்ஜிக்க, அடக்க முடியாமல் சிரித்தான் கதிரேசன்.

“அழகா கொன்னு போடு ராசா… அப்படியே உன் வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் காரியம் பண்ணவும் தயாராகிக்கோ! எனக்கு ஒரு அடி விழுந்தாலும் அங்கே ஒரு உயிர் போகும்.” என எச்சரித்த கதிரேசனின் முகம் வன்மத்தை தத்தெடுத்துக் கொண்டது.

“உன் வீடு, உன் குடும்பம், உன் தொழில், நீ, இப்படி எல்லாமே இப்ப என் கண்ட்ரோல்ல தான் இருக்கு. நான் ஒரு வார்த்தை சொன்ன போதும் எல்லாம்… எல்லாமே முடிஞ்சிடும்.”

“என்ன பயமுறுத்திப் பாக்கறியா?”

“உண்மையை சொல்றேன் ஆனந்தா… எனக்கு அதிரடி காட்டி பழக்கம் இல்லைன்னு உனக்கு நல்லாவே தெரியும். அமைதியா என் வில்லத்தனத்தை செய்ய விடு! இல்லன்னா சேதாரம் உனக்குதான்.” அசராமல் பேசியவனை நம்பாமல் பார்த்தான்.

“நீ நம்பறதுக்கு சின்ன சாம்பிள் காமிக்கவா?” என்றவன் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அலைபேசியை வெளியில் எடுக்க அதிர்ந்து நின்றான் ஆனந்தன். 

பணம், சிறைச்சாலையின் பாதளம் வரையில் பாய்ந்து கதிரேசனுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. சிறைக்கு வந்த புதிதில் சில மாதங்கள் இவனை இறுக்கிப் பிடிக்கவென ஆனந்தன் ஆட்களை நியமித்திருந்தான்.

இவனது அமைதியையும் பொறுமையையும் பார்த்திருந்த ஆனந்தனின் ஆட்களே இவனது சார்பாக பேசி இவனை நல்லவனாக்கி விட்டனர்.

“வயசானவனா இருக்கான் அந்த கதிரேசன். நாங்க குடுக்குற டார்ச்சர் தாங்காம சூசைட் இல்ல வேற ஏதாவது அசம்பாவிதம் உண்டு பண்ணி ஸ்ட்ரெஸ்ல விழுந்தா நமக்கே ஆப்பு சொருகிடுவாங்க. அமைதியா தானே இருக்கான். அப்படியே விட்ருவோம். இருந்துட்டு போகட்டும்.” என்று நம்பிக்கையானவர்கள் கூறி விட்டனர்.

அதன் பிறகே கதிரேசன் மீதான கவனத்தில் சற்றே தளர்ந்து, இவனது தொழில் மற்றும் கல்யாண களேபரத்தில் முற்றிலும் மறந்தும் போயிருந்தான் ஆனந்தன்.

இவனது அஜாக்கிரதை இவனுக்கே எதிர் வினையாற்றி விட, இப்பொழுது கூண்டுக்குள் அடைபட்ட சிறுத்தையாக கதிரேசன் முன் உறுமிக் கொண்டு நிற்கிறான்.

அலைபேசியில் யாருக்கோ அழைத்த கதிரேசன், காணொளி அழைப்பில் அலைபேசியை இயக்கச் செய்து ஆனந்தனையும் பார்க்கச் செய்தான்.

அந்தக் காணொளியில் ரூபம் மாளிகையின் வெளி நுழைவு வாயில் தெளிவாகத் தெரிய, அந்த நொடியே ஆனந்தனின் மனம் ஆட்டம் கண்டு விட்டது.

“அந்த காம்பவுன்ட் வால்ல இருக்கிற வொயிட் லாம்ப் சரியில்லன்னு நினைக்கிறேன். அதை உடைச்சு போடு!” என கதிரேசன் உத்தரவிட, அடுத்த நொடியே அந்த விளக்கு உடைபட்டு நொறுங்கியது. ஆனால் ஆள் மட்டும் திரையில் தெரியவில்லை.

இதையெல்லாம் பார்த்த ஆனந்தன் அந்த நிமிடமே ஆதிக்கு அழைத்து, “வீட்டுல எல்லாரும் ஷேஃப் தானே? யாருக்கும் எதுவும் இல்லையே?” பதட்டத்துடன் கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை ஆனந்தா!” என்றதும் இப்பக்கம் இவன் பெருமூச்சு விட்ட அடுத்த நொடியே, ”ஆனா இப்பதான் திடீர்னு காம்பவுண்ட் வால் லாம்ப் உடைஞ்சு போயிருக்கு, எப்படின்னு தெரியல? என்னனு பார்த்துட்டு, அப்புறமா உன்னை கூப்பிடுறேன்டா!” என்றபடி அழைப்பை முடித்துக் கொண்டான் ஆதி.

ஆனந்தன் கண்களில் ஒருநொடி வந்து மறைந்த பயத்தையும் தவிப்பையும் கண்டு கொண்ட கதிரேசன் வெற்றிக் களிப்பில் தோள்களை குலுக்கிக் கொண்டு சிரிக்க, இவனுக்குள் ஆவேசம் பொங்கியது.

“வேணாம் கதிரேசா… என்னை வெறி பிடிச்ச மிருகமா மாத்தாதே!”

“நீ தில்லுமுல்லு பண்ணி என்னை உள்ளே தள்ளிட்டா, நான் உடனே திருந்திடுவேன்னு நினைச்சியா ஆனந்தா? இன்னும் ஆறு மாசம் கழிச்சு வெளியே வந்து உன்னை பழி வாங்க துடிச்சிட்டு இருந்தேன். அதுக்கு முன்னாடியே ஒரு விசுவாசி எனக்கு அடிமையா மாட்டிகிட்டான்.”

“உன் அலப்பரைய அளக்காம விசயத்துக்கு வர்றியா? என் பொண்டாட்டிய எதுக்கு கடத்தின? அவளை எங்கே வச்சிருக்க?” ஆனந்தன் ஆத்திரத்துடன் கேட்க,

“உன்கூட விளையாடிப் பாக்கலாம்ன்னு கடத்தினேன். என் புள்ளை குடும்பஸ்தனா பொருந்தி இருக்கனா, இல்ல வெறி பிடிச்ச ஆனந்தனாவே இருக்கானான்னு நான் தெரிஞ்சுக்க வேணாமா?” என கெக்கலித்து சிரித்தவன் தீர்க்கமாக பேசத் தொடங்கினான். 

“எனக்கு எப்பவும் உன் குடும்பத்து கௌரவம், சொத்து மேலதான் அளவில்லாத ஆசை. எத்தனை வயசு வாழ்ந்தாலும், வசதி வாய்ப்பு, கௌரவத்தை எல்லாம் இந்த பணம் சம்பாதிச்சு கொடுத்திடும். எனக்கு அந்தஸ்து கௌரவம், பணம், செல்வாக்கு, புகழ், இப்படி எல்லாமும் வேணும். அதுக்காக நான் ஆரம்ப காலத்துல போட்ட நாடகம் தான் உன்னை தத்தெடுத்து வளர்த்தது.

எப்படியோ நீ அதுல இருந்து நைசா வெளியே வந்து, என்னை இங்கே கொண்டு வந்து நிக்க வைச்சிட்ட… அதுக்காக என் ஆசையை நான் அப்படியே விட முடியுமா? அதான் உன் அடி மடியில கையை வச்சுட்டேன்!” வக்கிரம் தெறிக்கும் குரலில் கூறி சிரித்தான்.  

“நீ கடத்தினா, என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சியா கதிரேசா?” ஆனந்தனும் மாறாத வன்மத்தில் பேச,  

“ஏன் முடியாம? கண்டுபிடிச்சு அதுக்கும் தனியா எனக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறவன் தான் நீ! இப்பவும் உன் மொபைல்ல நாம பேசுறது ரெக்கார்ட் ஆகுதுன்னு தெரியும் மகனே! ஆனாலும் பாரு… நீ எனக்கு எதிரா ஒரு துரும்பை கிள்ளி போட்டாலும் உனக்குத்தான் சேதாரம் ஆகும்.”

“வாய் வார்த்தையில அளக்காதே டா!”

“நான் பொய் சொல்லல… வேணும்னா இன்னொரு சாம்பிள் பாக்குறியா?” எனக் கூறிய கதிரேசன் இம்முறை தனது அலைபேசியில் மற்றொரு காணொளிப் பதிவினை காண்பித்தான்.

அவன் காட்டிய காணொளியில் மனஷ்வினி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்காணிக்க என இரண்டு பெண்கள் முகமுடி போட்டு நின்றிருந்தனர்.

“சிசிடிவி கனெக்சன்ல லைவ் டெலிகாஸ்ட் டிலே ஆகாம வருதுல்ல… ஜிபிஆர்எஸ் வதியும் நல்லாத் தான்யா இருக்கு.” என்று கர்வச் சிரிப்பு சிரித்தவன்,

“எப்படி என் மருமவ அவளை மறந்து அமைதியா தூங்குறாளா? நாங்க கொடுக்கிற டோஸ் அப்படி… இப்போதைக்கு இந்த சின்ன டிரீட்மென்ட் தான். எனக்கு பிடிக்காத காரியம் எதையாவது நீ செய்ய நினைச்சா பொண்ணுங்க நிக்கிற இடத்துல வயசுப் பசங்களை நிப்பாட்டி வச்சுடுவேன். மருமகளும் தக்காளி பழம் மாதிரி இருக்கா! அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பெடுத்துக்க மாட்டேன்.” வெகு அலட்சியமாகக் கூற,  

“என் சாவு உன் கையில தான்டா!” எனக் கத்தி தலையில் அடித்துக் கொண்டான் ஆனந்தன்.

“எனக்கு தெரியாம இவளைத் தேட நினைச்சாலும், உனக்கு தான் பாதகமா முடியும். இண்டு இடுக்குல கூட கேமரா வைச்சு உன்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க… எல்லா இடத்துலயும் எனக்கு ஆட்கள் இருக்கு.

ஏழு வருஷம் அமைதியா உக்காந்து போட்ட திட்டம்டா இது. என் வீட்டு மருமகளை கௌரவமா உன்கிட்ட அனுப்பி வைக்கிற வரைக்கும் நீ, நான் சொல்றபடி கேட்டே ஆகணும்.” என்று நிறுத்தினான் கதிரேசன்

“என்னதான்டா உனக்கு வேண்டி இருக்கு?”

“ரொம்ப சிம்பிள் ஆனந்தா… இப்ப உள்ள உங்க சொத்துல சரி பாதி, அதாவது பிஃப்டி பெர்சன்ட் ஷேர் எனக்கு வேணும். தொழில், அசையும் அசையா சொத்துக்கள் இப்படி சகலத்துலயும் பாதிக்குபாதி என் பேருல நீயும் உன் அண்ணனும் சேர்ந்த எழுதி வைக்கணும்.

அதுக்கு உன் குடும்பத்துல இருக்கிற எல்லாரும் மனமுவந்து சாட்சி கையெழுத்து போட்டு கொடுக்கணும். ஏன்னா… பின்னாடி ஏமாத்தி வாங்கிட்டேன்னு பிரச்சனை வந்துடக் கூடாது பாரு! அதை செஞ்சு முடிக்கிற வரைக்கும் உன் பொண்டாட்டியோட உசுரும் மானமும் என் கையில… டீல் ஓகே வா?” எனக் கூறி கடுப்படிக்க, பல்லைக் கடித்தான் ஆனந்தன்

“ஏண்டா இதுவரைக்கும் சுருட்டி அனுபவிச்சது பத்தலையா?”

“யானைபசிக்கு சோளப்பொறி எப்படி காணும் தம்பி? இப்பப் பாரு… என் மருமகளை கடத்தி இத்தனை ஏற்பாட்டை பண்ணவே நான் ஒருகோடி வரைக்கும் செலவு பண்ணிட்டேன். இருநூறு கோடிக்கு மேல வரப்போற சொத்துக்கு இது எல்லாம் அல்பகாசு தான். ஆனாலும் செலவு செலவுதானே!” இலகுவாகக் கூற, கண்களை அகல விரித்தான் ஆனந்தன்.

“உன் மாமியார் முன்னாடி என்னைப் போலவே நிக்க ஒரு ஆளை செட் பண்ணி டிரைனிங் குடுக்கவே நாக்கு தள்ளி போச்சு. அதுக்கும் என் மொகம் மாதிரி ஸ்கின் மாஸ்க் போட்டுட்டு தான் அவன் பேசப் போயிருக்கான். அப்புறம் மருமவ படிப்புக்கு, உன் மாமனார் கடனுக்குன்னு ஏகப்பட்ட பணம் உன் மாமியார் நம்புற மாதிரி கொடுத்துதான் இவளை கடத்தி எங்க கைக்குள்ள கொண்டு வர முடிஞ்சது.” அடுக்கடுக்காக அவன் கூறிக்கொண்டே வர மனம் வெறுத்துப் போனான் ஆனந்தன்.

“வாழப்போற கொஞ்சநாள் வாழ்க்கையில இந்த வில்லத்தனம் தேவையா கதிரேசா?” மனம் தாளாமல் கேட்க,

“கௌரவம் வேணும்டா! நான் செத்தா நீ கொள்ளி போடலைன்னா கூட, உன் வீட்டு சொத்தை அனுபவிக்கிறதால வர்ற கவுரதை எனக்கு வேணும். சந்தனக்கட்டையில என்னை எரிக்கணும்டா!

என் காலத்துக்கு பிறகு நான் அனுபவிச்ச மிச்சசொச்ச சொத்தெல்லாம் உனக்குதான் வந்து சேரும். அதை நான் பக்காவா எழுதி வச்சுடுவேன். அப்போதானே ஊரும் சட்டமும் நீதான் எனக்கு கொள்ளி வைக்கணும்னு தீர்ப்பு சொல்லி உன்னை கட்டாயப்படுத்தும்.

உனக்கு பத்துநாள் டைம் தர்றேன். பதறாம போய் என் பேருல சொத்தெல்லாம் எழுதிட்டு வா! அதுவரைக்கும் என் மருமக பொண்ணை தூசி துரும்பு படாமா பத்திரமா பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு.

அதை விட்டு வேற ஏதாவது பொல்லாத்தனம் பண்ண முயற்சி பண்ணினா… நான், என் வேலையை காட்டிடுவேன். போ… வெரசா போயி இன்னையில இருந்தே வேலையை ஆரம்பி தம்பி!

பத்திரப்பதிவு அதுஇதுன்னு ஏகப்பட்ட வேலை இருக்கும். இந்த ஆடிட்டர் பசங்க வேற எந்தெந்த சொத்து எங்கெங்கே இருக்குன்னு சரியா கணிச்சு சொல்லித் தொலைக்க மாட்டானுங்க. சரிபாதி சொத்துக்கான பத்திரம் என் கையில வந்த அடுத்த ஒரு மணிநேரத்துல உன் பொண்டாட்டி உன் பக்கத்துல இருப்பா!

அதுவரைக்கும் அவளுக்கு ஆழ்ந்த உறக்கம் மட்டுமே… சாப்பாடு எல்லாம் தூக்கத்துல போகும். அதை பத்தி நீ கவலைப்படாதே, இப்ப போயிட்டு வா!” என்று வீரத் திலகம் வைத்து விடாத குறையாக அவனை விரட்டியடித்தான் கதிரேசன்.

“உன்னை அன்னைக்கே உள்ளே தள்ளுறதுக்கு பதிலா ஒரேடியா மேலே அனுப்பி இருக்கணும். தப்பு பண்ணிட்டேன் டா!” கடந்த கால நினைவில் ஆனந்தன் பேச, அதற்கும் சிரித்தான் கதிரேசன்.

“நீ சறுக்கி போன இடத்துல நான் பலமா நின்னுட்டேன் ஆனந்தா! இந்த வளர்ப்பு தகப்பனுக்கே பாடம் சொல்லிக் கொடுத்த தகப்பன் சாமிடா நீ! எந்த வழியில நீ களையெடுத்தியோ அதே வழியில தான் நான் ஆரம்பிச்சுருக்கேன். எனக்கு வாழ்த்து சொல்லிட்டு நான் கேட்டதை வேகமா செஞ்சு முடி. அதுவரைக்கும் என் மருமவ தூக்கத்துல தான் இருப்பா! ஒரு கட்டத்துக்கு மேல தூக்கம் கூட கோமாக்கு மாறிடும்னு நான் சொல்லித்தான் உனக்கு தெரிய வேண்டியதில்லை.” வார்த்தைக்கு வார்த்தை பயமுறுத்தி தன் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்க ஆரம்பித்தான் கதிரேசன்.

பரம்பரை சொத்து, கௌரவம், செல்வாக்கு இவைகளால் வாழ்வில் இவன் அனுபவித்த இன்னல்கள், வஞ்சகங்கள் எல்லாம் முடிவில்லா தொடரியாகவே பயணிக்குமா? குடும்பம், மனைவி, நிறைவான வாழ்க்கை என்பதே தனக்கு எட்டாக்கனியா போன்ற விடையறியா கேள்விகளோடு அங்கிருந்து கிளம்பினான் ஆனந்தன்.