நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

16

சிறைக் காவலதிகாரியின் முன்பு கதிரேசன் நின்றிருக்க, அருணாசலம் அவரின் எதிர்புறம் அமர்ந்திருந்தார்.

“உனக்கு பரோல் கிடைச்சிருக்கு கதிரேசன். ரூபம் குருப்ஸ் ஓனர்ஸ் தங்களோட சொந்த ஜாமீன்ல உன்னை ஒரு வாரம் வெளியே கூட்டிட்டு போறாங்க. இதுல சைன் பண்ணிட்டு கிளம்பு!” என்றவராக லெட்ஜர் ஒன்றினை கை  காட்ட, அதில் கையெழுத்திட்ட கதிரேசனின் முகத்தில் வெற்றிக் களிப்பு தாண்டவமாடியது.

இரண்டு நாட்களுக்குமுன் இவனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்ட ஆதித்யன், “உன் சம்மந்தமான வேலையை முடிச்சிட்டு வர்றேன். எங்களை மீட் பண்ண ரெடியா இரு… வேற ஏதாவது ஆகாத வேலைகளை பார்த்து வைக்க முயற்சி பண்ணாதே!” தேவைக்கு பேசிவிட்டு இவனது சரி என்ற பதிலில் பேச்சினை முடித்திருந்தான்.

இன்றைய தினம் ஆதி கூறியது போலவே, அருணாசலம் வந்து நிற்க, கையெழுத்து போட்டு நிமிர்ந்தவன், “அப்புறம், எப்படி இருக்க அருணாசலம்?” மிதப்பாக அவரின் தோளில் கை போட்டபடி கேட்க, முகத்தை சுளித்தார் பெரியவர்.

அவனிடம் இருந்து சற்று விலகியவராக, “எல்லாம் வெளியே போய் பேசிக்கலாங்கய்யா!” என பேச்சினை முடித்துக் கொண்டார்.

சட்ட நடவடிக்கைகள் முடிந்து வெளியே வந்து இருவரும் அமைதியாகவே காரில் பயணித்தனர். “எங்கே போறோம் அருணாசலம்? எதையாவது பேசுய்யா!” எரிச்சலுடன் கதிரேசன் கேட்கவும் அதை விட எரிச்சல் மூண்ட பார்வையில் அவனை சுட்டெரித்தார்.

“உன் விசுவாசத்தை என்கிட்ட காட்டதேயா… பதிலை சொல்லு!” கதிரேசன் விடாமல் கேட்டாலும் அவரிடமிருந்து பதில் இல்லை.

பெரியவரின் அமைதி அவனது நிம்மதிக்கு உலை வைப்பதைப் போலத் தோன்ற, டிரைவரிடம் அதட்டல் போடத் தொடங்கினான் கதிரேசன்.

“வண்டி எங்கே போகுதுன்னு சொல்லு டிரைவர்…  இல்லன்னா எனக்கு சேதாரம் ஆனாலும் பரவாயில்லைன்னு கீழே குதிச்சுடுவேன். அப்புறம் பரோல்ல கூட்டிட்டு போய் என்னை கொல்லப்  பார்த்தாங்கன்னு உங்க முதலாளிங்க பேருல கம்பிளைன்ட் குடுக்க வேண்டி வரும்.” மிரட்டலுடன் கூற தலையிலடித்துக் கொண்டார் அருணாசலம்.

“இந்த விவரம் எல்லாம் எங்களுக்கும் தெரியுமுங்க… கொஞ்சநேரம் அமைதியா வாங்க… உங்க நல்லதுக்குதான் போறோம்.” சற்றே காட்டத்துடன் குரலை ஏற்றி அருணாசலம் பேச, அரைகுறை மனதோடு வாயை மூடிக் கொண்டான் கதிரேசன்.

மதுரையைத் தாண்டி தாமரைபட்டியில் உள்ள ஒரு பெரிய வீட்டின் முன்பு வண்டி நின்றது. ஆள் அரவமில்லாத கிராமத்து பகுதி. நகரத்தோடு தொடர்பு கொண்டுள்ளதை உற்றுப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

அந்த வீட்டின் வெளிவாசலில் இருந்த இரண்டு புதிய நபர்கள் இவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கிருந்த வரவேற்பறையை தாண்டிய பெரிய அறையில் அமர்ந்திருந்தவர்களின் தோரணையை பார்த்தே கதிரேசனின் மனதில் பயத்தோடு குழப்பத்தையும் உண்டு பண்ணியது. 

தன்னை அழைக்க வந்த நபர்களை உற்று நோக்கினான். அவர்களின் முகவெட்டுத் தோற்றமும் நடைஉடை பாவனையும் அவர்கள் காவல்துறையை சேர்ந்தவர்களே என்று சொல்லாமல் சொல்லியது.

‘அவசரப்பட்டு வந்துவிட்டோமோ? ஆனந்தன் வராமல் வெளியே வரமாட்டேன் என்று தர்க்கம் செய்திருக்க வேண்டுமோ!’ காலம் கடந்து யோசிக்க ஆரம்பித்தான் கதிரேசன்.

கடந்த இரண்டு நாட்களாக ஜிபிஆர்எஸ் மூலம் வெளியில் நடப்பவைகளை எல்லாம் கண்டுகொண்டு வந்தாலும் ஏதோ ஒரு குறை இருப்பதாக அவனது மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருந்தது. இதன் காரணமாய் வெளியில் சுற்றும் தனது ஆட்களின் மீதே சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்திருந்தான் கதிரேசன்.

இதற்காகவென புதிய நபர்களை நியமித்து, ஏற்கனவே தனக்கு உதவி செய்பவர்களின் நடமாட்டங்களை உளவு பார்த்து தகவல் சொல்லும் வேலையை இன்று காலையில்தான் அவர்களிடம் ஒப்படைத்தான்.

இவனது மனமெங்கும் அந்த குழப்பத்தில் நிறைந்திருக்க, சிறையில் இவனுக்கு பரோல்… அதிலும் ரூபம் குரூப்ஸ் என்ற பெயரினைக் கேட்டதும் யோசிக்காமல் வந்த தனது மடத்தனத்தை எண்ணி தன்னைத்தானே கடிந்து கொண்டான் கதிரேசன்.

‘வந்தாயிற்று… வருவதை எதிர்கொண்டு விடுவோம்.’ என்ற தைரியத்தில் நிமிர்வுடன் எதிரில் அமர்ந்திருப்பவர்களை ஆராய்ச்சியுடன் பார்த்தான்.  

பெரிய வட்ட மேஜை ஒன்று அங்கே போடப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து பேர் வட்டமாக அமர்ந்திருந்தனர்.  இன்னும் நான்கைந்து இருக்கைகள் காலியாக இருந்தது. ‘அப்படியென்றால் இன்னும் ஆட்கள் வர வேண்டி இருக்கிறதா?’ என தனக்குள் கேட்டுக் கொண்டவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்.

“என்னை ரூபம் குருப்ஸ் முதலாளிங்க பரோல்ல எடுத்ததா சொன்னாங்க… ஆனா, அவங்களை நான் இன்னும் பாக்கலை. அவங்க எங்கே? இங்கே என்ன நடக்க போகுது? என்னை என்ன செய்யப் போறீங்க?” அடுத்தடுத்து பொறுமையின்றி கேள்விகளை கேட்டுக்கொண்டே வந்தான் கதிரேசன். 

“பதட்டம் வேண்டாம் கதிரேசன். உன்னை பேசச் சொல்லும் போது நீ பேசலாம்.” கணீரென்ற குரலில் அங்கிருந்தவர்களில் ஒருவர் பேச, அந்தத் தோரணையில் அவனது வாய் தன்னால் பூட்டு போட்டுக் கொண்டது.

அங்கிருந்த வயதில் முதிர்ந்த மற்றொருவர் பேச ஆரம்பித்தார். “கதிரேசன்… மனுஷன் திருந்தி நல்லவனா மாறுறதுக்கு ஒரு சந்தப்பம் கொடுக்கத்தான் தண்டனை கொடுத்து சிறையில வைக்கிறோம். நீ அங்கே போயும் திருந்தாம பெரிய பெரிய குற்றங்களை பயமில்லாம தயக்கமே இல்லாம பண்ணி முடிச்சிருக்க…

உள்ளே இருக்கிற சில மோசமான அதிகாரிகள் துணையில்லாம நீ நினைச்ச காரியத்தை செஞ்சிருக்க முடியாது. சில அதிகாரிகளோட பச்சோந்தி குணத்தால  தான் உன்னை மாதிரி குற்றவாளிகள் வளர்ந்துட்டே இருக்காங்க.” என பெருமூச்சு விட்டு நிறுத்தியவர், அருகில் இருப்பவரைப் பார்த்து, ‘மேற்கொண்டு சொல்லி விடலாம்.’ சைகையில் காட்ட, அவரும் சம்மதமாக தலையசைத்து பேசத் தொடங்கினார்.

“ரூபம் குரூப்ஸ் பிரதர்ஸ், உன்மேல கொடுத்த கேஸை வாபஸ் வாங்கற முடிவுல இருக்காங்க… அதோட நீ அவங்ககிட்ட கேட்ட சொத்துக்களையும் உன் பேருல எழுதிக் கொடுக்கிற முடிவுக்கும் வந்திருக்காங்க…” என நிறுத்தி ஒரு நிமிடம் அவனைப் பார்க்க, கதிரேசன் முகத்தில் கர்வச்சிரிப்பு தோன்றியது.

“ஆனா, அதுக்கு பதிலா அவங்க சொல்ற கண்டீசனுக்கு எல்லாம் நீ ஒத்துக்கணும். அதுக்கு சரின்னு நீ ஒப்புதல் கொடுத்தா மட்டுமே மேற்கொண்டு பேசலாம்.” என நிறுத்த, சட்டென்று கதிரேசனின் சிரிப்பு மறைந்தது.

என்ன நடக்கிறது என்பதை அவனால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. தன்னிடம் பேசுபவர்கள் பெரிய அதிகாரிகள் என்று உணர முடிகிறது. ஆனால் எதற்காக தன்னிடம் ஒப்பந்தம் பேசுவதற்காக கேட்கிறார்கள் என அவனுக்கு புரியவில்லை.

அவனது மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு மேலும் பேச்சு தொடரப்பட்டது.

“அவங்க சொல்ற எந்த கண்டீசனுக்கும் நீ ஒத்து வராம வீம்பு பிடிச்சா, இப்படியே நீ திரும்ப ஜெயிலுக்கு போக வேண்டி வரும். அதோட இன்னும் பல கிரிமினல் கேஸ் அன்ட் கொலைகேஸ்ல உன்னை கைது பண்ணி அதுக்கான தண்டனையும் நீ அங்கே இருந்தே அனுபவிக்க வேண்டியிருக்கும். அதற்கான தகுந்த பலமான ஆதாரங்கள் கைவசம் இருக்கு.” எச்சரிக்கையாக கூற, கதிரேசன் அதிர்ந்து நின்றான்.

‘ச்சே… நல்லா மாட்டி இருக்கேன் போல… அதெப்படி ஒரு ஆளு உயிரை பணயம் வைச்சு நான் மிரட்டினதையும் வெளியே சொல்லாம, என்னை எப்படி மிரட்டி பேச முடியுது?’ என்ற யோசனையுடன் அனைவரையும் பார்த்தான்.

“நீ சுதந்திரமா வாழ நினைச்சா, அவங்க சொல்றதுக்கு சரின்னு சொல்லி ஒத்துக்கோ கதிரேசா! இல்லன்னா, உன் காலம் முடியுற வரைக்கும் உனக்கு ஜெயில் கஞ்சிதான் கிடைக்கும்.” என்றவாறு அங்கே இருந்த மூன்றாம் நபர் பேச, தனது நிலைமை தன் கையை மீறிப் போய் விட்டதாகவே உணர்ந்தான் கதிரேசன்.

எங்கே தவறிப் போனது என்றே அவனுக்கு தெரியவில்லை ஆனால் வகையாக மாட்டிக்கொண்டது மட்டும் அவனால் நன்றாக உணர முடிந்தது.

‘இன்று காலையில் அலைபேசியில் தனது ஆட்களை தொடர்பு கொண்டு கடத்தி வைத்திருக்கும் பெண்ணைப் பற்றி விசாரிக்கும் போதும் பத்திரமாக இருப்பதாகத்தானே தகவல் வந்தது. பின்னும் எப்படி? ஒரு உயிரை துச்சமாக எண்ணி விட்டார்களா!’ மறந்தும் கூட தன் வாயால் ஒரு பெண்ணை கடத்தி வைத்துள்ளதாக சொல்லக்கூட தயங்கி நின்றான் கதிரேசன்.

‘எங்கே தான் சொல்வதை சுய வாக்குமூலமாக ஏற்றுக் கொண்டு குற்றத்தை பதிவு செய்து விட்டால் என்ன செய்வது?’ என்ற யோசனையும் சேர்ந்து அவனை அமைதியாக இருக்க வைத்தது. பல்வேறு குழப்பங்களில் தனக்குள் உழன்றவனை தோளில் தட்டி நிகழ்விற்கு அழைத்து வந்தார் அருணாசலம்.

“நீங்க சொல்ற பதிலை பொறுத்துதான் அடுத்தடுத்த வேலை எல்லாம் நடக்க வேண்டி இருக்குய்யா!” என அவனை சிந்திக்கவும் விடாமல் துரிதப்படுத்தினார் அருணாசலம்

வேறு வழியில்லை என்ற நிலையில் வெகுவாக தயங்கியே, “நீங்க சொல்றதுக்கு கட்டுப்படுறேன்.” என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்த பின்பு மேஜையில் இருந்து சற்று தூரமாக அவன் அமர வைக்கப்பட்டான்.

பின்னர் ஒருவர் அழைப்பு மணியை அழுத்திவிட, அடுத்த நிமிடம் ஆதித்யன் மற்றும் ஆனந்தன், அவர்களது வக்கீல்களுடன் வந்து அமர்ந்தனர்.

எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆனந்தன், கதிரேசனை முறைத்துப் பார்க்க, தீர்க்கப் பார்வையில் அவனை ஊடுருவிப் பார்த்தான் ஆதித்யன்.

இவர்களுடன் வந்த வக்கீல் இரண்டு பத்திரங்களின் நகல்களை கதிரேசனின் முன்பு வைத்தார். பின்னர் அவற்றை படித்துப் பார்க்க பத்து நிமிட அவகாசமும் கதிரேசனுக்கு அளிக்கப்பட்டது. அமைதியாக கழிந்த அந்த நேரத்தில் யாரும் எதைப் பற்றியும் பேசிக் கொள்ளவில்லை.

பத்திரங்களை படித்து விட்டு நிமிர்ந்த கதிரேசன், “இதுக்கு நான் சம்மதிக்கலன்னா என்ன பண்ணுவீங்க?” என கடினகுரலில் கேட்க,

“மறுபடியும் உள்ளே போக வேண்டியது தான்.” உறுதியான குரலில் அங்கிருந்த ஒருவர் பதிலளித்தார்.

“அப்படி நான் உள்ளே போனா, நட்டம் இவங்களுக்கு தானே தவிர எனக்கில்ல…” மீண்டும் கதிரேசன் மிரட்டலில் இறங்க, இம்முறை வக்கீல் பேசினார்

“அந்தக் கவலை உங்களுக்கு தேவையில்லாதது மிஸ்டர்… உங்களுக்கு சகாயம் பண்ண ஆள் இருக்கிற மாதிரி எங்களுக்கும் ஆட்கள் இருக்காங்க.” என பூடகமாகப் பேச, மொத்தமாக நம்பிக்கை இழந்தான் கதிரேசன்

“என்னை குழப்ப பாக்குறீங்க… நான் அசர மாட்டேன்.” என்றவன் தனது அலைபேசியை ஆராய, ஜாமரில் அதன் அலைவரிசை தடுக்கப்பட்டிருந்தது.

“உன் மொபைல்ல மட்டுமில்ல எங்க எல்லாருடைய மொபைலும் இப்ப இப்படிதான் இருக்கு.” என்ற வக்கீல், தனது அலைபேசியையும் அவனிடம் காட்டியபடி மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்.  

“நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு சுலபமா சொத்துகளை பாதிக்குபாதி பிரிக்க முடியாது கதிரேசன். அதிலும் பரம்பரை சொத்துகளை எப்பவுமே பிரிக்கவே முடியாதபடிக்கு ரூபம் குரூப்ஸ் குடும்பத்து பெரியவங்க உயில் சாசனம் பண்ணி வைச்சிருக்காங்க.

ஒரு பரம்பரை சொத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ அந்த குடும்பத்தைச் சேர்ந்த தனி நபருக்கு உரிமை இல்லை. மூன்று தலைமுறை ஆட்கள் அதுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து போடணும். அதுக்கு சாட்சிக் கையெழுத்தா அவர்களோட பங்காளி மக்களும் கையெழுத்து போட்டாதான் அது செல்லுபடியாகும்.

உதாரணமா, இந்த இரட்டைச் சகோதர்களோட முந்தைய தலைமுறை, அதாவது இவர்களுடைய அப்பாவின் கையெழுத்தும், இவர்களுக்கு அடுத்த தலைமுறையான இவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளின் கையெழுத்தும் ஒப்புதலும் இருந்தால் மட்டுமே, ஆதித்யன் மற்றும் ஆனந்தன், உங்களுக்கு அவர்களோட பரம்பரை சொத்தை தானமா எழுதிக் கொடுக்க முடியும். 

பெருமதிப்புக்களைக் கொண்ட சொத்துகள் இருக்கிற பெரும்பாலான குடும்பங்களில் இந்த நடைமுறை இருக்கு. அந்த முறையிலதான் ஆதி மற்றும் ஆனந்தன் பேருல அவர்களுடைய பரம்பரை சொத்துகள் உயிலாக எழுதப்பட்டு இருக்கு.

பரம்பரை சொத்துகளை வாரிசுதாரர்கள் ஆண்டு அனுபவிக்கலாம், ஆனா, தானம் கொடுக்கவோ அடமானம் வைக்கவோ அவங்களுக்கு உரிமை இல்லை.” என விளக்கம் கூறி நிறுத்த, அனைவரும் அதை ஆமோதிக்கும் விதமாக ஆமென்று தலையசைத்து மேற்கொண்டு பேச அனுமதி வழங்கினர்.

“அந்த சொத்துகளை விடுத்து, அதுக்கு பதிலா இவர்களோட சுய சம்பாத்தியமான ரூபம் குரூப்ஸின் ஒட்டு மொத்த தொழில் நிர்வாகப் பங்கையும் உன் பேருக்கு மாத்தி எழுதி கொடுத்திருக்காங்க. பரம்பரை சொத்துக்களை பார்க்கும் போது இதன் மதிப்பு சற்று கூடுதலாதான் இருக்கும்.

தொழில்ல இருக்கும் லாப நட்டம், வர்த்தகம், போக்குவரத்து இதையெல்லாம் கணக்கு பார்த்து பிரிச்சுக் கொடுக்கப் பிடிக்காம எல்லா தொழில் பங்குகளையும் உனக்கு தானமா கொடுக்க முன்வந்திருக்காங்க!” என்ற வக்கீல், சகோதரர்களின் முகத்தைப் பார்க்க, இருவரும் ஆமென்று தலையசைத்தனர்.

மேலும் தொடரப் போன வக்கீலின் பேச்சினை தடுத்து நிறுத்திய ஆதித்யன், தானே முன்வந்து விளக்கத் தொடங்கினான்.

“நாங்க உன் பேருல கொடுக்குற சொத்துக்களை நீ, உன் விருப்பம் போல ஆண்டு அனுபவிக்கலாம். உன்னோட சுய விருப்பத்துல விற்கவும், அடமானமோ அல்லது தானமோ கொடுக்கவும் செய்யலாம் கதிரேசா! ஆனா, எங்க பரம்பரை சொத்துல அதை எல்லாம் செய்ய முடியாது.” சமாதானமான குரலில் பேசினான் ஆதித்யன்.

அவனது வார்த்தைகள் சமாதானப் பூச்சில் வெளி வந்தாலும், அவனது பார்வையும் பாவனையும்  கதிரேசனை குத்திக் கிழித்துக் கொண்டிருந்தது.

“நான், உன்கிட்ட ஒரேயொரு கண்டிசனை மட்டுமே வைக்கிறேன். இந்த சொத்தை வாங்கின பிறகு எங்க மேல எந்தவித துவேசத்தையோ அல்லது கொடுமையான கொலை அல்லது கடத்தல் போன்ற கெடுதலையோ நீ பண்ணக்கூடாது.

எங்க ரெண்டுபேரோட குடும்பம், மனைவி, மக்கள் எங்களுடைய உற்றார் உறவினர், மாமனார், மாமியார் இப்படி யாரோடவும் தவறாவோ தப்பிதமாவோ, நல்ல விதமாகக் கூட காரியமோ பேச்சோ நீ வைச்சுக்க கூடாது. அதையும் மீறி நீ ஏதாவது அசம்பாவிதம் பண்ணி வைச்சா, அடுத்த நிமிடமே உன்னை கைது பண்ணிடுவாங்க…

அப்படியும் திருகுதாளம் பண்ணி நீ தலைமறைவு நாடகம் நடத்தினா, உனக்கு கொடுத்த சொத்துகள் எல்லாமே எங்க கைவசம் வந்து சேர்ந்திடும். நீ நல்லவனாக வாழுற வரைக்கும் மட்டுமே, உனக்கு தானமா கொடுக்கிற தொழில் நிர்வாகத்துல நாங்க தலையிட மாட்டோம்.

மீறி ஏதாவது நடந்தா உனக்கான சேதாரத்துக்கு நாங்க பொறுப்பாக மாட்டோம். இதுக்கும் மேல உனக்கு கொட்டி கொடுக்க எங்ககிட்ட ஒன்னும் இல்லை… நீ இதையும் ஏத்துக்க முடியாம விதாண்டாவாதம் பேசினா, பழையபடி ஜெயிலுக்கு நீ தாராளமா போகலாம்.” தீர்க்கமாக ஆதி விளக்கம் கொடுக்க, கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த கதிரேசன் கோபத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.

“என்னை உள்ளே அனுப்புறதுலயே கவனமா இருக்கியே ஆதி! உனக்கு உங்க வீட்டு பொண்ணு வேணாமா?” என கெக்கலித்து சிரித்தவன்,

ஆனந்தனின் முகத்தைப் பார்த்து, “என்னடா மகனே… உனக்கு கூட உன் பொண்டாட்டி மேல கொஞ்சமும் அக்கறை இல்லையா?” பழையபடி தனது நரித்தனத்தை அவிழ்த்து விட்டான் கதிரேசன்.

அவனது பேச்சில் வெகுண்ட ஆனந்தன் கோபத்தை அடக்க முடியாமல் நாற்காலியை இறுக்கமாக பற்றிக் கொண்டு, பல்லைக் கடிக்க, அவனது தோளினை ஆதரவாகப் பிடித்து சாந்தப்படுத்தினார் அருணாசலம்

“நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும் அது புத்தியை காட்டாம போகாதுன்றதை நிரூபிக்கிற கதிரேசா… இன்னுமும் நாங்க உன்னோட ஆட்டத்துக்கு தலையாட்டிட்டு இருக்கோம்னு நீ நம்பிட்டு இருக்கியா?

சாக்கடையில உருளுற கிழட்டு பன்னி, உனக்கு இத்தனை திமிர்த்தனம் ஆகாது. ஏதோ நாங்க அசந்தநேரத்துல நீ காரியம் சாதிச்சதாலே, நீ பலசாலி, புத்திசாலி ஆகிட முடியாது. உனக்கு கை கொடுத்த புண்ணாக்கு ஜிபிஆர்எஸ், ரவுடிப் பசங்களை வச்சே உனக்கு, நாங்க சங்கு ஊதிட்டோம்.” அலட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக ஆதி கூற, வேகமாக தலையாட்டி மறுத்தான் கதிரேசன்.

“இல்ல… நீ பொய் சொல்லி என்னை குழப்ப பாக்குற!”

“இந்த பக்கம் சொத்தை பிரிக்கிற நேரத்துல, ஆனந்தன், அவன் பொண்டாட்டியை காபாந்து பண்ணிட்டான். உன் இடத்துல நீ ரகசியமா அடைச்சு வச்சவங்க இன்னமும் அங்கே தான் பத்திரமா இருக்காங்க… ஆனா அந்த இடமும் உன்னோட ஆட்களும் எங்களோட கண்ட்ரோல்ல எப்பவோ வந்தாச்சு!” ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாகக் கூற கதிரேசனின் மனம் பல கணக்குளை போட்டுப் பார்த்து சோர்ந்து போனது.

ஏதோ ஒரு நெருடலில் குழம்பிய மனதிற்கு விடை கிடைத்தாலும் எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்விப் பார்வையுடன் ஆதியை பார்த்தான் கதிரேசன்.

“நான் சொத்துக்களை பிரிக்க ஆரம்பிச்ச அன்னைக்கே ஆனந்தனும் தன்னோட தேடுதல் வேலையை ஆரம்பிச்சுட்டான். வெளிப்பார்வைக்கு அவனுக்கு பிடிக்காம சொத்துக்களை பிரிக்கிற மாதிரி நான்தான் எல்லார்கிட்டயும் சொல்லி வைச்சேன்.

உன்னோட கவனமும் என்மேல முழுசா திரும்பின நேரத்துல, உன் இடத்தை சுலபமா சுத்தி வளைச்சுட்டோம். போலீஸ் மிரட்டலும் எங்களோட பணமும் சேர்ந்து ரொம்ப ஈசியா உன் ஆட்களை உனக்கு எதிரா வேலை பார்க்க வச்சிடுச்சு!” மேலோட்டமாக விளக்கினான் ஆதித்யன்.

கண்களில் பூச்சி பறக்க அசையாமல் ஸ்தம்பித்து நின்றான் கதிரேசன்.

“உன் சதியை முறியடிச்ச பிறகும் உனக்கு தண்டனை வாங்கித் தராம, உனக்கு ஏன் சொத்து கொடுக்க முடிவு பண்ணினோம்னு தெரியுமா?” கேட்டவனின் பார்வையில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது.

“எங்களுக்கு நிம்மதியான குடும்பம் வேணும் கதிரேசா! எங்களை நம்பி வந்த மனைவியும், வரப்போற குழந்தைகளும் எந்தவிதமான பயமோ வேதனையோ இல்லாம, யாருடைய பழிச்சொல்லுக்கோ பாவத்துக்கோ அஞ்சாம சந்தோசமான நிம்மதியான வாழ்க்கையை வாழணும். எதிர்காலத்துல உன்னோட வருகையோ எந்தவொரு கெடுதலான செயலோ எங்களை பாதிக்ககூடாது.

இந்த சொத்தும் சுகமும்தான் எங்களை பெத்தவங்க இல்லாத அனாதையா நிக்க வைச்சிடுச்சு! வலியும் வேதனையும் மட்டுமே தாங்கி வளர்ந்துட்டோம். அந்த சாபம் எங்களுக்கு பிறகு வர்ற சந்ததிக்களுக்கும், புதுசா வந்த உறவுகளுக்கும் தொடர வேண்டாம்னு தான் இந்த சமாதானத்துக்கு இறங்கி வந்திருக்கோம்.

இனியும் இந்த சொத்து சுகத்துக்காக எந்த உயிர் இழப்பும் ஆகாம இருக்க நாங்க எடுத்திருக்கிற முன்னேற்பாடு இது.  இந்த காரணங்களுக்காக மட்டுமே மனப்பூர்வமா உன் பேருல தொழிலை எழுதிக் கொடுக்க முன்வந்திருக்கோம்.

உன் காலத்துக்கு பிறகு நீ ஆண்டு அனுபவிச்சு, மிச்சம் இருக்கிற சொத்து எங்களுக்கு வந்து சேர்ந்தாலும் சரி இல்ல உன் விருப்பமா நீ வேற யாருக்காவது தானமா கொடுத்தாலும் சரி… அதை பத்தின கவலையோ கேள்வியோ எங்ககிட்ட இருந்து ஒருநாளும் வராது.  

ஆனா, அதே சமயத்துல எங்க குடும்பத்துக்கு எந்தவித பாதிப்பும் உன்னால வரக்கூடாது. அந்த ஒரே ஒரு உறுதிமொழியை மட்டும்தான் நீ எங்களுக்கு கொடுக்கணும். எங்களோட எதிர்பார்ப்பு இதுதான். இப்ப பதில் உன்கிட்ட தான் இருக்கு.” என முழுதாக பேசி முடித்து அமர்ந்தான் ஆதித்யன்.

கதிரேசனின் மனம் முழுக்க கொதித்து கொந்தளித்து அடங்க மறுத்தது. தன் விரலை கொண்டே கண்ணைக் குத்திக் கொண்ட கதையாகிப் போனது அவனுக்கு. இப்பொழுது என்ன செய்வது என்கிற குழப்பநிலை மட்டுமே மிஞ்சியது.

இவனிடமும் பணம் இருக்கிறது. ஆனால் இவன் கேட்டது செல்வாக்கோடு சேர்ந்த கௌரவத்தை தான். அதனால் சொத்து எந்தவிதமாக இருந்தாலும் பரவாயில்லை மனநிலையில் தான் இருந்தான்.

ஆனால் இவர்கள் குடும்பத்தினன் என்ற கௌரவத்தை மட்டும் எதிர்பார்க்காதே என்று இவர்கள் கூறும்போது அதை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.

இத்தனை வருடங்களாக கனவில் கண்ட ஆடபர வாழ்க்கை கண்முன்னே நின்றுகொண்டு வா வா என இரு கரம் கூப்பி அழைப்பது போலத் தோன்ற, ‘கொடுப்பதை வேண்டாமென்று சொல்லாமல் வாங்கிக் கொள்வோம். அதன் பிறகு நல்லவனாகப் பேசி இவர்களின் குடும்பத்தோடு சேர்ந்து உறவாடிக் கொள்ளலாம்.” என்ற கேவலமான நப்பாசையில் யோசித்தபடியே கதிரேசன் சிறிதுநேரம் நின்று விட்டான்.

‘ரொம்ப யோசிச்சு எங்ககிட்ட மன்னிப்பு கேட்டுடலாம்னு மட்டும் ஈசியா நினைச்சிடாதே கதிரேசா… எங்களுக்கு அந்த அளவுக்கு பெரிய மனசு இல்ல.” ஆனந்தன் பல்லக் கடித்துக் கொண்டு பேச, அவனைப் பார்வையால் அடக்கினான் ஆதித்யன்.  

“அமைதியா இரு ஆனந்த்… உன் கோபத்தை காட்ட வேண்டிய இடம் இது இல்ல.” என சுற்றுபுறம் மற்றும் சூழ்நிலையை உணர்த்தவும் அடங்கிப் போனான் தம்பி.

“உன்னோட தலையீடு எங்க குடும்பத்துக்கு எந்த காலத்திலயும் இருக்காது, இதுக்கு மேல எந்த சொத்தொ பணமோ கேக்க மாட்டேன்னு நீ உறுதி கொடுக்கிற மாதிரி இந்த பத்திரத்துல எழுதியிருக்கு. படிச்சு பார்த்து கையெழுத்து போடு கதிரேசா!

இது முடிஞ்ச பிறகு, உனக்கு தொழில் பங்குகளை பத்தி விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு. ஒரு வாரத்துல நீ எல்லாம் பார்த்துட்டு திரும்பவும் ஜெயிலுக்கு போகணும் இல்லையா? நீ திரும்பி வர்ற ஆறு மாசம் வரைக்கும் மேற்பார்வை பார்க்க நீ ஆளுங்களை உக்கார வைக்கணும். உனக்கு நேரம் இல்ல கதிரேசா…” அமைதியாக அதே சமயம் பெரும் குத்தலோடு அவனை மட்டம் தட்டி பேசினான் ஆதித்யன்.

“ஏன் நான் வர்ற வரைக்கும் நீங்க தொழிலை எடுத்து நடத்த மாட்டீங்களா?” கதிரேசன் சமய சந்தர்ப்பம் பார்க்காமல் வார்த்தையை விட,

“உன் சகவாசமே வேணாம்னு தானே ஒதுங்கி போகப் போறோம். இனி அந்த தொழிலாச்சு நீ ஆச்சு. சீக்கிரம் சைன் போட்டு முடி! மத்த வேலைகளை ஆரம்பிக்கணும்.” என்று ஆதி பேசவும், அனைவரும் அடுத்தடுத்து எடுத்துக் கூறத் தொடங்கினர்.

கதிரேசனை எந்த யோசனையும் செய்யவிடாமல் பேசிப்பேசி இறுக்கிப் பிடித்தே கையெழுத்து போட வைத்தனர்.

அதற்கு சாட்சியாக வந்திருந்த அனைவருமே தங்களது கையெழுத்துக்களை போட்டு முடிக்க, அவர்களை யாரென்று கேள்வியாகப் பார்த்தான் கதிரேசன்.

“இவங்க நாலுபேரும் எங்க ரூபம் குரூப்ஸ் நிர்வாகத்தை  மேற்பார்வை பார்த்திட்டு இருக்கிற லீகல் லாயர்ஸ் அன்ட் சீனியர் ஆடிட்டர்ஸ்.” என்று நான்கு பேரை கைகட்டிப் அறிமுகப்படுத்தி பேசிய ஆதி,

ஏனைய மூவரையும் காண்பித்து, ”இவங்க ரிட்டையர்ட் போலீஸ் ஆபீசர்ஸ், அன்ட் ரிட்டையர்ட் ஜட்ஜ்… இவங்க அப்ரூவல் வாங்கிக் கொடுக்கலைன்னா, இந்த மீட்டிங்கை இங்கே நடத்தி இருக்க முடியாது.

இவங்க எல்லாருடைய சாட்சிக் கையெழுத்தும், இந்த டாக்குமெண்டுஸும் தான் எங்கேயும் எந்த காலத்திலேயும் நின்னு பேசும்.” என ஆனந்தன் கூற கதிரேசனுக்கு உள்ளுக்குள் பெரும் கலவரமாகிப் போனது.

ஒய்வு பெற்ற அரசாங்கக் உயர் அதிகாரிகளை வைத்தே நீதிமன்றம் வரைக்கும் போகாமல், வழக்கு தொடுக்காமல், குற்றங்களைப் பதியாமல் கட்டப்பஞ்சாயத்து நடந்து முடிந்ததை அப்போது தான் தெளிவாக உணர்ந்து கொண்டான் கதிரேசன்.

(இன்றளவும் பல இடங்களில் இது போன்ற பஞ்சாயத்துகள் ரகசியமான முறையில்  நடந்து வருகின்றன. குடும்ப கௌரவம் மற்றும் தொழில் தர்மத்திற்காக வெளியே கசிய விடுவதில்லை. இந்த காட்சியை ஏற்றிக் கொள்ள முடியாதவர்கள் கற்பனைக்காக மட்டுமே என்று நினைத்துக் கொள்ளவும்.)