நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…17

பொள்ளாச்சி *** உயர்தர பல்நோக்கு மருத்துவமனையின் தனியறையில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மனஷ்வினி.

இயல்பிலேயே மெல்லிய உடல்வாகுடன் பளிச்சென்று இருப்பவள், இப்பொழுது எலும்புகூட்டிற்கு போர்வை போர்த்தியதைப் போன்று மெலிந்திருந்தாள்.

உடலும் முகமும் ஏகத்திற்கும் வாடி வதங்கிய நிலையில் யாரும் இவளை மனஷ்வினி என அடையாளப்படுத்த மாட்டார்கள். பற்றாக்குறைக்கு இரண்டு உள்ளங்கைகளிலும் காயத்திற்கு கட்டுபோடப்பட்டு இருக்க, பாதங்களில் தீப்புண்ணிற்கு மருந்து தடவி விடப் பட்டிருந்தது.

ஆனந்தரூபனின் மனைவி என்பது மட்டுமே இவளின் இன்றைய நிலைக்கு முழுமுதற் காரணமாக இருக்க, அந்த காரணகர்த்தா சுமார் ஒருமணி நேரமாக அவளின் முன்னே வேதனையுடன் அமர்ந்திருந்தான்.

‘உன்னை விட்டு இவள் போனதுதான் தப்பாகிப் போனதா அல்லது உன்னை கைபிடித்தது தான் இவளின் தவறாகிப் போனதா? யாருடைய வற்புறுத்தலுக்கும் செவி சாய்க்காமல் கட்டாயத் திருமணத்தை ஏற்றிருக்கக் கூடாது. அப்படி திருமணம் முடிந்த பிறகு மணந்து கொண்ட பெண்ணை உனது சொல்லால் செயலால் நிராகரித்து கை விட்டிருக்கக் கூடாது!’ நூறாவது முறையாக மனசாட்சி அறிவுறுத்த, ‘கொடுமையே!’ என பல்லைக் கடித்து சகித்துக் கொண்டான் ஆனந்தன்.

குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் மனைவி மேல் அக்கறை கொள்ளாமல் இருந்ததுதான் இவனது மிகப்பெரிய தவறாக கருதப்பட, நிமிடத்திற்கு நிமிடம் மனையாளைப் பார்த்தே தன் தலைவிதியை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறான்.

அனைவரின் முன்னிலையிலும் குற்றவாளியாக, இன்றைய இக்கட்டான சூழ்நிலைக்கு காரணியாக அல்லவா இவனை சித்தரித்து விட்டார்கள். அதிலும் தேஜஸ்வினி பார்க்கும் கோபப்பார்வைக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லக்கூட இவனால் முடிவதில்லை.

அனைத்தையும் ஆதித்யன் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டாலும் அவனிடம் கூட நேருக்குநேர் நின்று பார்த்து பேசும் சகஜநிலையும் ஆனந்தனை விட்டுப் போயிருந்தது.

‘இத்தனை இன்னல்களுக்கும் காரணம் உனது பொறுப்பின்மையே!’ என அவனது உள்மனம் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்க, ‘அடக் கன்றாவியே!’ என தலையில் கைவைத்து நொந்து கொண்டான்.

மதுரையில் பஞ்சாயத்தை முடித்த அடுத்த நிமிடம் தனது டொயோட்டாவை விரட்டிக் கொண்டு மூன்று மணிநேரத்தில் மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு ஓடோடி வந்து விட்டான்.

கதிரேசனை சிறைச்சாலையில் இருந்து வெளியில் அழைத்து வந்ததும், மனஷ்வினியை, அவள் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாற்றி மருத்துவனையில் சேர்க்கச் சொல்லி, சிகிச்சைக்கான ஏற்பாட்டினையும் நகுலேஷை விட்டு முன்னரே செய்தும் விட்டிருந்தான்.

ஆதியும், ‘தேஜுவை மருத்துவமனைக்கு அழைத்து வரும்வரை அங்கேயே காத்திரு!’ எனக் கூறிச் சென்றிருக்க, இங்கே இவன் பலதரப்பட்ட மனநிலையில் இடிந்து போய் அமர்ந்திருக்கிறான்.

“என்ன மாமா? இப்படி தலையில கை வைச்சு உக்காந்திருக்கீங்க! அதான் அக்கா கிடைச்சிட்டால்ல… கவலைபடாதீங்க! எல்லாம் சரியாகிடும்!” பெரிய மனிதனாக அவனுக்கு ஆறுதல் கூறினான் நகுலேஷ்.

இத்தனை நாட்களில் ஆனந்தனின் வலது கையாகவே செயல்பட்டு, அவனுக்கு உதவியாக இருந்ததில் வெகு இயல்பாகவே அவனுடன் பேச ஆரம்பித்திருந்தான் நகுல்.

ஆனந்தனும் அவனிடத்தில் மிக நெருக்கமாக அனைத்தையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கி இருந்தான். இருவருக்குள்ளும் இருந்த கருத்துகளும் காரியமாற்றும் விதமும் ஒன்றாக அமைந்து, மிக அழகிய நட்பில் அவர்களை இணைத்திருந்தது.

“இவ சரியாகறதுக்குள்ள நான் ஒரு வழியாகிடுவேன்டா நகுல்!” வருத்தமாக ஆனந்தன் கூற, விளங்காது பார்த்தான் சிறியவன்.

“ஏன் இப்படி சொல்றீங்க?”

“வேற என்னன்னு சொல்லச் சொல்ற? இன்னும் கொஞ்ச நேரத்துல உன் நாட்டாமை அக்கா வந்து என்ன மாதிரி கேள்விய எப்படி கேக்கப் போறாளோ… அதை நினைச்சாலே எனக்கு கடுப்பா இருக்கு!

எடுத்தெறிஞ்சு பேசவும் முடியல… பத்தாகுறைக்கு இவ ரெண்டு காலும் கையும் அடிபட்டு கிடக்கா… அதுக்கு என்னென்ன கிராஸ் குவஸ்டீன்ஸ் வரப்போகுதோ?” என்றபடி ஆனந்தன் பெருமூச்சு விட, அதைக் கேட்டவனுக்கும் ஐயோ என்றானது.

சமீப நாட்களில் தேஜஸ்வினி மறந்தும் கூட யாரிடத்திலும் சகஜமாகப் பேசுவதில்லை. அலுவல் நிமித்தமாக ஆதி, அவளைத் தனது அருகில் நிறுத்தி வைத்துக் கொள்ள, எந்நேரமும் கடுகடுத்த முகத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறாள்.

அவளுக்கு வேண்டியதெல்லாம், ‘தங்கை பத்திரமாக திரும்பி வரவேண்டும் அதற்காக மட்டுமே இவர்கள் சொல்வதை கேட்டு கொண்டு நிற்கிறேன்!’ என்கிற ரீதியில் தான் வேலைகளை கவனித்துக் கொண்டு வருகிறாள்.

நடப்பவைகளை கவனமாக உற்று நோக்கி இருந்தாலே இவர்கள் செய்யும் காரியெல்லாம் மிகத் தெளிவாக விளங்கி இருக்கும். அத்தனை பொறுமையும் தெளிவும் அவளிடத்தில் தற்போது இல்லை. முடிந்தவரை அனைவரையும் கோபத்தோடு பார்த்தும், பதிலளித்தும் தனது எதிர்ப்பினை கட்டிக்கொண்டு வருகிறாள். அவள் வேதனை அவளுக்கு!

இவற்றை எல்லாம் மனதில் வைத்து பேசிய ஆனந்தன், மனஷ்வினியை பார்த்துக் கொண்டே, “ஆனாலும் இந்த கைப்புள்ளைக்கு இத்தனை வீரம் ஆகாதுடா! நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேக்காம ரெண்டு கையையும் குத்தி கிழிச்சுகிட்டா… மரமண்டு!

ரெண்டு கால்லயும் இவளுக்கு சூடு வச்சு விட்டிருக்கிறதை பார்த்தாலே மனசு கலங்கிப் போகுதுடா. அந்த பரதேசி நாயிங்களுக்கு இந்த ஆனந்தனோட சிறப்பான கவனிப்பு இருக்கு!” கோபத்துடன் பல்லைக் கடித்தவன், அவளின் உள்பாத தீக்காயத்திற்கு மயிலிறகால் மருந்து தடவியும் விட்டான்.

“மாமா… ஒருமணி நேரத்துக்கு ஒரு தடவை தடவினா போதும். நீங்க அரைமணி நேரத்துக்கு ஒருக்கா பூசி விடுறீங்க!” நகுலேஷ் சலித்துக் கொள்ள,

“இப்படியாவது இவ சீக்கிரமா எழுந்து நடக்க மாட்டாளான்னு ஒரு நப்பாசைதான் நகுல்!”

“எழுந்து நடக்கிறதுக்கு முன்னாடி, என் குட்டி அக்கா கண்ணை தொறந்து தெளிவா எல்லாரையும் பார்த்து பேசணும். அதுதான் இப்ப முக்கியம்!” சோர்வுடன் நகுலேஷ் சொல்ல, ஆனந்தனும் ஆமாம் என தலையசைத்தான்.

மருத்துவமனையின் தனியறையில் இவளைக் கொண்டு வந்து சேர்த்த நேரத்தில் அரைகுறையாக கண்ணைத் திறந்து பார்த்த மனஷ்வினி, “ஏ மச்சா… என்ன இங்கே கொண்டு வந்து அடைச்சு வச்ச? நா தா உங்கள விட்டு போறேன்னு சொல்லிட்டேனே!” குழறலாய் அரைகுறையாக வார்த்தைகளை உளறிக் கொட்ட, பதில் பேச முடியாதவனாய் அதிர்ந்து நின்றான் ஆனந்தன்.

அவளுக்கு அப்போதுதான் டிரிப்ஸ் ஏற்றி மருந்துகளை கொடுத்திட்டு சென்றிருக்க, திடீரென்று கண் விழித்தவள் உளறிக் கொட்டத் தொடங்கி இருந்தாள்.

அருகில் நின்றிருந்த தம்பியின் கையை பிடித்து கொண்டு, “ஏன்டா தடியா… என்னைப் பார்த்தா உனக்கு பாவமா இல்லையா? இவன் பேச்சை கேக்காதே!” மேலும் உளறலாக வார்த்தைகளை கொட்டிவிட, அரண்டு போனான் நகுலேஷ்.

“அக்கா நான் உன் தம்பி நகுல்!” என விளக்கம் கொடுக்க

“பொய் பேசாதே நாயே! என் தம்பி எப்டி இருப்பான்னு எனக்கு தெரியாதா! அக்கா, மாமா வந்ததும் உங்களை எல்லாம் செமத்தியா கவனிக்க சொல்றேன்!” சிறுபிள்ளையாக பிதற்றத் தொடங்கியதில் இருவருக்கும் தலைவேதனையாகிப் போனது.

“அக்கா, எதுவும் பேசாதே… வாயை மூடு!”

“அப்டி கூப்பிடாதே பரதேசி… இந்த ரோபோ கூட சேராதேடா… உன்னையும் பொண்டாட்டி கூட வாழ விடமாட்டான்!” வார்த்தைகள் குழறலாக வெளிவரும் போதே ஆனந்தனை கழுவி ஊற்றிக் கொண்டிருந்தாள் மனஷ்வினி.

இவளின் பேச்சினை கேட்டு சிரிக்கவா, அழவா என இருவரும் தலையை சொறிந்து கொண்டு நின்றனர்.

“உங்களை நல்லா தெரியுது… என்னை தெரியல! இதென்ன நியாயம் மாமா? ரெண்டு மாசத்துல அவ்வளவு நல்லாவா இவளை வச்சுத் தாங்கி இருக்கீங்க?” நக்கலுடன் நகுலேஷ் கேலிபேச, ஆனந்தனுக்கு கொதித்துப் போனது.

“என்னங்கடா… குடும்பமே எங்களை வச்சு செய்ய கிளம்பி இருக்கீங்களா? எதுவும் யோசிக்காம எல்லாரையும் சுட்டுத் தள்ளிடுவேன்!” கர்ஜித்தவனாக கோபத்தை வெளிப்படுத்தினான் ஆனந்தன்.

அடுத்தடுத்து வெளிப்பட்ட மனஷ்வினியின் உளறல் வார்த்தைகளில் அவள் பட்ட அவஸ்தகைகள் வேதனைகள் எல்லாம் அரைகுறையாக வெளிப்பட்டன. அதுவே இருவரையும் மேலும் வேதனை கொள்ள வைக்க, பதில் பேச முடியாமல் திண்டாடிப் போனார்கள்.

இவளின் பேச்சினை கேட்டுக் கொண்டு நின்றிருந்த இருவருக்கும் என்ன செய்வது, இவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்ற புரிபடாத நிலைதான் மிஞ்சி நின்றது.

இறங்கிப் பேசினால் மேலும் பேச்சினை வளர்த்து உளறிக் கொட்டும் நிலையில் இவள் இருக்க, என்றும் பேசும் சிடுசிடுப்புடன் மனைவியை அடக்கி வைத்தான் ஆனந்தன்.

“அடியே உளறாம தூங்கமாட்டா! பட்டதெல்லாம் போதாதா? இன்னும் வாங்கிக் கட்டிக்கணுமா நீ!” ஆனந்தன் அதட்டல் போடவும் சற்றே அமைதியானாள்.

“அக்கா… இப்படி எல்லாம் உளறி கொட்டி எங்க ரெண்டு பேரையும் உள்ளே அனுப்பிடாதே!” பாவமாக தம்பியும் அழுகுரலில் கூற,

பாதி மூடிய கண்ணை சிரமப்பட்டு திறந்து, “ம்ம்… ஹாங்.. ஹூம்…” எனப் பலவிதமான ஹூங்காரங்களைக் கொட்டி மீண்டும் அயர்ந்து போனாள் மனஷ்வினி.

“ரொம்ப ஹெவி டோஸ் ட்ரக்ஸ் உள்ளே போயிருக்கு சர்! கொஞ்ச அப்படியிப்படி உளறலாதான் பேசுவாங்க… கண்டுக்காதீங்க!” மருத்துவர் அறிவுறுத்தி சென்றது மனதில் நிறுத்திக் கொண்டாலும், இவள் பேச்சினை கேட்கும் போது உள்ளம் பேதலித்துப் போவதை தடுக்க முடியவில்லை.

‘இவளது உளறல் இப்படி இருக்குமென்று யார் எதிர்பார்த்தார்கள்? இதே ரீதியில் தன் அக்காவிடம் உளறி வைத்தால் அந்த நிமிடமே அவள் பத்ரகாளியாக மாறி நிற்பாளே!’ என்கிற நினைவுதான் ஆனந்தனுக்கு அதீத சலிப்பை வரவழைத்தது.

“நல்லா வளர்த்திருக்கீங்கடா பொண்ணுகளை… ஒருத்தி தூக்கத்துல உளறிக் கொட்டுறா… இன்னொருத்தி நிதானம் இல்லாம எல்லாரையும் கரிச்சு கொட்டுறா! கடைசியில இத்தனை பாடுபட்டு இவளை காப்பாத்தி கூட்டிட்டு வந்ததுக்கு சிறப்பா வச்சு செய்வீங்க போல!” என ஆதங்கப்பட்டவனின் எண்ணமெல்லாம் இவளை கண்டுபிடித்து அழைத்து வந்தவிதத்தை எண்ணிப் பார்த்தது.

அன்றைய தினம் ஆதித்யனின் முடிவுக்கு சம்மதித்து நகுலேஷை அழைத்துக் கொண்டு தனது அறைக்கு வந்த ஆனந்தன், மிக வேகமாக பல காரியங்களை செய்யத் தொடங்கினான்.

“ஒரு வழியா கேமரா எல்லாம் எடுத்தாச்சு… இனி நாம வேலையை ஆரம்பிச்சுட வேண்டியது தான். உன் மொபைல் குடு நகுல்!” எனக் கேட்டு வாங்கியவன் முதற்காரியமாக ஒரு புதிய செயலியை நகுலேஷின் அலைபேசியில் பதிவேற்றம் செய்தான்.

“இது என்ன ஆப் மாமா?”

“இது எங்க ரூபம் குருப்ஸ் மேனேஜ்மெண்ட் ஆட்கள் மட்டுமே யூஸ் பண்ற ரூ–ஆப்… வாட்ஸ்-ஆப், டெலிகிராம் மாதிரியான ஆப் இது. எங்க குருப் ஒட்டுமொத்த அட்மின் ஆஃபீசர்ஸ் சாட்டிங் அன்ட் மீட்டிங் பெரும்பாலும் இதுல தான் நடக்கும்.

யார் டவுன்லோட் பண்ணினாலும் நானோ அல்லது ஆதியோ சர்வர்ல நம்பர் டீடெயில்ஸ் பார்த்து அப்ரூவல் கொடுத்தா மட்டுமே இந்த ஆப்-க்குள்ள நுழைய முடியும்.” என்றவன் நகுலின் அலைபேசிக்கு ஒப்புதல் கொடுத்து இயக்கிப் பார்த்தான்.

பின்னர், “உன் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் பத்து பேரை மட்டும் கூப்பிடு! நமக்கு வேலை பார்க்க காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் தான் வேணும்!” நகுலிடம் சொன்ன ஆனந்தன் அந்த நேரமே நண்பர்களிடம் பேசச் சொன்னான்.

“ஃபிரண்ட்ஸ் கிட்ட விஷயத்தை வெளிப்படையா சொல்லாம ஒரு ஹெல்ப் வேணும்ன்னு சொல்லி பேசு… இன்வால்வ் ஆகி சின்சியரா வேலை பாக்கிறவங்களுக்கு, அவங்களோட ஆக்டிவிடீஸ் பார்த்து அவங்க படிப்புக்கான செலவை ரூபம் குரூப்ஸ் ஸ்பான்சர் பண்ணிடும்னு சொல்லிடுடா!” ஆனந்தன் சொன்னவற்றை எல்லாம் தப்பாமல் நகுலும் தனது நண்பர்கள் குழுவில் பகிரவும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் பதினைந்து பேர் முன்வந்தனர்.

இவர்களுக்கென தனியாக ஒரு குழுவினை ரூ செயலியில் உருவாக்கியவன், அனைவரின் அலைபேசி எண்களையும் அந்தக் குழுவில் இணைத்து அவர்களையும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்யச் சொன்னான்.

“இந்த குருப்ல நான் வேலையை ஒப்படைச்சுருக்கிற டிடெக்டிவ் டீம் நம்பரும், எங்களுக்கு ஹெல்ப் பண்ணப் போற டிபார்ட்மெண்ட் ஆபீசர்ஸ் நம்பர்ஸும் சேர்த்து விட்டுட்டேன். இனி எல்லா டீடெயில்சும் இந்த குரூப்ல வாய்ஸ் மெசேஜ் மூலமா தான் கன்வே பண்ணப் போறோம். நீயும் ஆக்டிவா இருக்கணும் டா… இருப்ப தானே?” எனக் கேட்டவன் அப்போதில் இருந்தே மச்சானை தன்னுடன் சேர்த்துக் கொண்டான் ஆனந்தன். 

“டிடெக்டிவ் ஃபிரண்ட்ஸ்… இந்த குரூப்ல பத்து காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் நம்பர் ஆட் பண்ணி விட்ருக்கேன். இவங்களை நீங்க தனியா காண்டக்ட் பண்ணி உங்க இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஃபாலோ பண்ணச் சொல்லுங்க!” என முதல் வாய்மொழிச் செய்தியை தட்டி விட்டான் ஆனந்தன்.

அடுத்த செய்தியாக, “டியர் பாய்ஸ்… உங்க ஹெல்ப் எங்களுக்கு இப்ப தேவைப்படுது. உங்களை பத்திரமா பாதுகாத்து திருப்பி கூட்டிட்டு வந்துடுவாங்க… **** இந்த டிடெக்டிவ் ஏஜென்சியில இருந்து உங்களை கான்டாக்ட் பண்ணுவாங்க… அவங்களை ஃபாலோ அப் பண்ணிக்கோங்க.

வேற ஏதாவது முக்கியமான விசயம்னா நான் இதே குரூப்ல வாய்ஸ் மெசேஜ் பண்றேன். ஒன் மோர் இன்ஃபார்மேசன் பாய்ஸ்… இந்த ஆப்-ல இருக்கிறதை காபி பேஸ்ட் ஆர் ஃபார்வேர்ட் பண்ணவோ அல்லது ஸ்க்ரீன்சாட் எடுக்கவோ முடியாது.

எங்களுக்கு உண்மையா இருக்க நினைக்கிறவங்க மட்டுமே இந்த குரூப்ல கண்டினியூ பண்ணுங்க… அதர்வைஸ் மத்தவங்க வெளியே போயிடலாம்.

பெரிய ஆபீசர்ஸ் டீம் கூட நீங்க வொர்க் பண்ணப் போறீங்க. பின்னாடி தப்பானவன்னு கண்டுபிடிச்சு தண்டனை கொடுத்தா, அது உங்களுக்கு தான் அசிங்கமா போயிடும். பீ சியர்புல் அன்ட் கங்கிராட்ஸ் பாய்ஸ்!” என இளைஞர்களுக்காக செய்திகளைக் கடத்தியவன், தனது பேச்சினை முடித்துக் கொண்டான்.

பின்னர் தனியாக தங்களுக்கு உதவப் போகும் காவல்துறை அதிகாரிகளை அழைத்து அனைத்து விவரங்களையும் கூறி, அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்கும்படி கேட்டுக் கொண்டான் ஆனந்தன்.

இவனது பேச்சினைக் கேட்டு அதிர்ந்து நின்ற நகுலேஷின் வாயில் ஈயும் கொசும் சென்று குடித்தனம் நடத்தத் தொடங்கி இருந்தது. 

மாமனின் பேச்சையும் தோரணையையும் பார்த்து பிரமிப்பில் இருந்து வெளிவர முடியாமல் அதிசயித்துப் பார்த்தான்.

“என்ன மாமா? எப்படி மாமா?” என்ற கேள்விக்கு அடுத்த வார்த்தை பேச வாய் வரவில்லை அவனுக்கு. நகுலேஷின் நிலைமையை கண்டுகொண்டவனாக அனைத்தையும் விளக்க ஆரம்பித்தான் ஆனந்தன்.

“டிபார்ட்மெண்ட்ல ஒரு டீம் போட்டுட்டாங்க நகுல். நேத்து நைட்டே இந்த ஆப் மூலமா மீட்டிங் போட்டு பேசியாச்சு! டைரக்டா நானோ, டிபார்ட்மெண்ட் ஆட்களோ இன்வால்வ் ஆக முடியாத சிட்சுவேசன்ல இருக்கோம். அதான் இறங்கி வேலை பாக்க உன் ஃபிரன்ட்சை கூப்பிட்டுகிட்டது!” 

“அப்படின்னா அக்கா இருக்கிற இடம் தெரிஞ்சுடுச்சா மாமா?”

“நாளைக்கு இந்த நேரம் தெரிய வாய்ப்பிருக்கு!” என்றவனை நகுல் இமை தட்டாமல் பார்த்தான்.

“கதிரேசன் ஒன்னும் அவ்ளோ பெரிய பருப்பு இல்ல. இவன் எங்கெங்கே போவான், என்னென்ன காரியம் பண்ணுவான்னு எனக்கு நல்லாத் தெரியும். ஏன்னா… அவன், என்னை வளர்த்த நேரத்துல அவனோட பல ஃபோர்ஜரி வேலைகளுக்கு என்னைத்தான் பகடைக்காயா யூஸ் பண்ணிக்கிட்டான். அதை வச்சுத்தான் இப்ப ஸ்கெட்ச் போட்டு இருக்கோம்.

இவனோட சேர்ந்த கூட்டாளிகள் மொத்தம் ஆறுபேர். அதுல ஒருத்தன் உயிரோட இல்ல. இன்னொருத்தன் ஆயுள் தண்டனையில ஜெயில்ல இருக்கான். ரெண்டுபேர் வெளிநாட்டுல செட்டில் ஆகிட்டாங்க. இப்ப அங்கே இருக்கிற ரெண்டு பாமிலியையும் வாட்ச் பண்ணிட்டு இருக்கோம். மீதம் இருக்கிற ரெண்டுபேர் கேரளா பார்டர்ல குடும்பத்தோட தங்கி இருக்காங்க. 

நம்ம பசங்களை வச்சு இந்த ஆறுபேரோட சொந்த ஊருல தேடப் போறோம். போலீஸ் மஃப்டியில போனா ஈசியா கண்டுபிடிச்சிடுவாங்க… அதான், போலீஸ் சப்போர்ட்டோட டிடெக்டிவ் ஆட்களுக்கு உதவியா நம்ம பசங்க போனாலே போதும். அவங்ககிட்ட ஈசி கான்டாக்ட் டிவைஸ் குடுக்கவும், ஹெல்புக்கு பக்கத்து போலீஸ் ஸ்டேசன்லயும் சொல்லி வைச்சாச்சு.

கதிரேசனோட ஆறு கூட்டாளிகளுக்கும் திருப்பூரை சுத்தி இருக்கிற பக்கத்து பக்கத்து கிராமம்தான் சொந்தஊர். அதுவும் நாம அடுத்தடுத்து தேட ஈசியா இருக்கு. ஒட்டுமொத்த சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்திட்டு புதுசா ஊருக்குள்ள நடமாட்டிட்டு இருக்குறவங்களை ஃபாலோ பண்ணனும். 

அடுத்து அந்த ஊருக்குள்ள போய், புதுசா வந்துட்டு போற ஆள் எங்கே இருந்து, எப்படி வந்தான்னு கேட்டு தெரிஞ்சுக்கணும். ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் ஏதாவது சொல்லி உள்ளே நுழைஞ்சு பாக்கணும்.

உன்னோட ஃப்ரண்ட்ஸ் இந்த வேலைகளைத்தான் பார்க்கப் போறாங்க… சீக்கிரம் கண்டுபிடிச்சுடலாம்!” என நம்பிக்கையாகக் கூறியவனை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

“அந்த கதிரேசன் ரொம்ப முன்னேற்பாடா எல்லா இடத்துலேயும் ஆளுங்களை போட்டு வைச்சுருப்பானே! அவங்க கண்ணுல மண்ணை தூவிட்டு நாம வேலையை முடிக்க முடியுமா மாமா?” 

“கொஞ்சம் சிக்கலை கொடுக்கத்தான் செய்யும். வெளிநாட்டுக்கு கடத்திட்டு போகல. ஏன்னா என்கிட்டயே அவன் காரியம் முடிஞ்சதும் ஒருமணி நேரத்துல ஆளைக் கொண்டு வந்து சேர்க்கிறேன்னு சொல்லி இருக்கானே! அதை வச்சுதான் நாங்க மூவ் பண்றோம்.

சிட்டியிலயோ அல்லது வெளியூர்லயோ நம்பிக்கையான ஆட்கள் இந்த கதிரேசனுக்கு இல்லை. எல்லாம் நல்லபடியா முடியும்னு நம்பிக்கை வைப்போம் நகுல்!” என பெருமூச்சுடன் அன்றைய இரவினைக் கழித்தான் ஆனந்தன்.

***