நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…18

அனைத்து முன்னேற்பாடுகளுடன் பல்முனை குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையை ஆரம்பிக்க, நிமிடத்திற்கு நிமிடம் ஆனந்தனுக்கு செய்திகள் வந்தடைந்து கொண்டே இருந்தன.

கதிரேசனின் கூட்டாளிகள் என்று அறியப்பட்ட ஆறுபேரின் சொந்த ஊர்களில் தீவிரமாகத் தேடியதில் எங்கும் புதிய நபர்களோ புதிய குடியிருப்புகளோ அகப்படவில்லை.

“நேத்து நைட் ஆரம்பிச்சு இன்னக்கு மதியமும் தாண்டிடுச்சு மாமா… இன்னும் எந்த க்ளுவும் கிடைக்கலையே?” வருத்தத்துடன் கூறிய நகுலேஷ்,

“அக்காவுக்கு ஒன்னும் ஆகி இருக்காது தானே! பத்திரமா கிடைச்சிடுவால்ல…” பயந்த குரலில் அழுகையில் கரைய ஆரம்பித்து விட்டான்.

“தைரியமா இருக்கப் பழகிக்கோ நகுல்! உனக்குள்ள இருக்கிற பயம் எனக்கும் இருக்கு. ஆனா எந்த நேரமும் நம்பிக்கையை கை விட்டுடக் கூடாது. அதுதான் நம்மை அடுத்த கட்டத்துக்கு மூவ் பண்ண வைக்கும்!” என்றவன் மீண்டும் தீவிர யோசனையில் இறங்கினான்.

“நாம ரெண்டு பேரும் இந்த பொள்ளாச்சியை சுத்தி தேடிப் பார்ப்போமே மாமா?” விடாமல் நகுல் கேட்க,

“இந்த வீட்டுல இருந்து யார் வெளியே போனாலும் ஃபாலோ பண்ண, எங்கே இருந்தாவது ஒரு ஆள் பின்னாடியே வந்திட்டு இருப்பாங்கடா! அதனால தானே நான் இங்கே உக்காந்துட்டு எல்லாத்தையும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கேன். உங்கக்காவை தேடக்கூடாதுன்னு எனக்கென்ன வேண்டுதலா!” தனது இயல்பில் ஆனந்தன் சிடுசிடுக்கத் தொடங்கிவிட,

“சாரி மாமா! நிலைமை தெரியாம பேசிட்டேன்!” என அமைதியானான் நகுலேஷ்.

அன்றைய இரவும் தூங்கா இரவாக கழிய இவர்கள் இருவரும் உள்ளுக்குள் தவித்தபடி அறைக்குள் உழன்று கொண்டிருந்தனர்.

அந்தந்த நேரத்திற்கு உணவை அறைக்குள் வரவழைத்துக் கொண்ட ஆனந்தன் மறந்தும் கூட ஆதித்யன் என்ன செய்கிறான் ஏது செய்கிறான் என்பதை எட்டியும் கூட பார்க்கவில்லை.

இதற்குமே தேஜு காயத் தொடங்கினாள். “பிடிக்குதோ இல்லையோ ஒரு உயிருக்காக இதெல்லாம் பண்றோம்ங்கிற மனிதாபிமானம் கூடவா இவருக்கு இல்லாம போகும்?” வெளிப்படையாக முணுமுணுத்து, ஆதித்யனின் கோபத்திற்கு நெய் வார்த்தாள்.

“திருந்தவே மாட்டியா நீ? கேள்வி கேக்கவோ, கோபத்தை காட்டவோ இது நேரமில்லைன்னு சொன்ன புரிஞ்சுக்கோ தேஜு!” ஆதி எரிந்து விழ, அதற்குமே அவளிடம் இருந்து காரப்பார்வை மட்டுமே பதிலாக வந்தது.

அடுத்தநாள் விடியலில் எட்டு மணிக்கு பிறகு கேரளா பக்கம் விசாரிக்க சென்றவர்களிடம் இருந்து வந்த தகவல் ஆனந்தனை சற்றே ஆசுவாசப்படுத்தியது.

“சர்… பாலக்காடு பக்கத்துல நீங்க சொன்ன கூட்டாளி ஊருல ஒரு மெடிக்கல் டீம் தினமும் வந்துட்டு போறதா தகவல் வந்திருக்கு. விசாரிச்சு பார்த்ததுல அது நீங்க சொன்ன கூட்டாளியோட ரிலேஷன் வீடுன்னு தெரிஞ்சது. இப்ப அங்கேதான் நம்ம டீம் போயிட்டு இருக்கு. அங்கே போனதும் லைவ்-க்கு வாங்க சர்!” என டிடெக்டிவ் நபர் தகவலைச் சொல்ல, அப்பொழுதில் இருந்தே ஆனந்தனுக்கும் நகுலனுக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மலையாளம் பேசிக்கொண்டு அந்த வீட்டின் படி ஏறிய துப்பறியும் நிறுவனத்தினர், முனிசிபல் கார்ப்பரேசனில் இருந்து வருவதாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அந்த வீட்டை நன்றாக நோட்டம் விட்டுப் பார்த்ததில் மூன்று ஆண்களைத் தவிர வேறு யாரும் அங்கு இருப்பதாக தெரியவில்லை.

‘டெங்கு, கொரோனா விழிப்புணர்வுக்காக வீட்டுக்குவீடு மருந்து தெளித்து வருகிறோம்.’ என உள்ளே நுழைய முயற்சித்தவர்களை அந்த வீட்டில் உள்ள மூன்று ஆண்களும் ஒன்றாகச் சேர்ந்து தடுத்து நிறுத்தினர்.

‘தங்களின் பணியினை செய்யத் தடுத்தால் மேலதிகாரி வீட்டிற்கே வந்து சோதனை செய்வார். ஊரில் அதுவே தலைப்பு செய்தியாகிப் போகும். அத்தனை தூரம் போகாமல் இப்போதே எங்கள் வேலையை பார்க்க விடுங்கள்.’ எனக் கூறவும் அந்த வீட்டில் உள்ளோர் சற்றே விழித்து கொண்டனர்.

“டேய் முத்து… பேச்சை வளக்காம வேலையை பார்த்துட்டு போகச் சொல்லு. ஆபீசர் அது இதுன்னு பிரச்னையை வளர விட்டா, நமக்கு நல்லதில்ல!” அந்த வீட்டில் இருந்த ஒருவன் தமிழில் பேசி அனுமதி அளித்ததும், அங்கே தேடுதல் வேட்டை சூடு பிடித்துக் கொண்டது.

அதற்குள் அந்த மூவரில் ஒருவனுக்கு வந்த அலைபேசி அழைப்பில், யார் வந்தது என்ன நடக்கிறது என்று கேள்விகள் விசாரிக்கப்பட, நடப்பதை இப்பக்கம் கூறவும் சராமரியாக எதிர்பக்கம் வசைபாடி ஒய்ந்தது. ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்கிறோம் என இறங்கிப் பேசியே அழைப்பினை முடித்தனர் அந்த வீட்டில் உள்ளவர்கள்.

 மாணவன் ஒருவனின் சட்டைப் பையில் இருந்த பிரத்யேக ஸ்பை கேமிரா வழியாக, ஆனந்தன் நேரடியாக நடப்பதை பார்க்க ஆரம்பித்திருந்தான்.

வீட்டைச் சுற்றிலும் மருந்து தெளித்து விட்டவர்கள், பின்கட்டு மற்றும் அதனை ஒட்டியிருந்த அறைக்குள்ளும் செல்ல முயற்சி செய்ய அங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

“இது காலியான ரூம்தான். பின்கட்டுல எதுவும் இல்ல.” என முத்து என்பவன் சொன்னதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கடமை என்று கூறி, பின்கட்டு பகுதியை நன்றாகக் அலசி ஆராய முற்பட்டனர்.

அங்கே பலநாள் குப்பையாக மருந்துக் குப்பிகள், ஊசி மற்றும் குளுக்கோஸ் ஏற்றி முடித்த சலைன் பாட்டில்கள் ஏகத்திற்கும் குப்பையாக கிடக்க, சந்தேகமும் வலுப்பெற்றது.

‘இங்கு யாருக்கும் உடல்நலக்குறைவா?’ என்று வந்தவர்கள் கேட்டும், இல்லை என்ற பதில் அந்த வீட்டில் இருந்தவர்களிடம் இருந்து கோரசாக வந்தது.

அந்த நேரத்தில் டாக்டர், நர்ஸ் என கூறிக்கொண்டு வந்த ஒரு ஆணும் பெண்ணும் சிகிச்சை அளிக்கும் முறையில் மருந்துகளுடன் வந்து நிற்க, அவர்களின் பின்னே தினப்படி வீட்டினை சுத்தம் செய்யும் வேலைக்காரியும் வந்து சேர்ந்தாள்.

ஒரே நேரத்தில் மூவரும் ஒன்றாக வந்து நின்றதில், புதியவர்களின் சந்தேகப் பார்வையில் வீட்டில் இருந்த மூன்று ஆண்களும் சற்றே தடுமாறிப் போயினர்.

‘நாங்கள் வந்த வேலையை பார்க்கிறோம்!’ என தேட வந்தவர்கள், அங்கேயே கண்ணுக்கு அகப்படாமல் மைக்கை பொருத்திவிட்டு பின்கட்டிற்கு சென்றுவிட, இங்கே இவர்களின் பேச்சு தொடங்கியது.

“மதியம் வாங்க டாக்டர்… இப்ப எனக்கு உடம்பு சரி ஆகிடுச்சு!” மூவரில் ஒருவன் பூசி மொழுக,

வீட்டு வேலைக்காரி, “உனக்கு என்னடா ஆச்சு? இவங்க அந்த பொண்ணுக்கு ஊசி மருந்து ஏத்தத்தானே தெனமும் வர்றாங்க!” என உளறி விட, மூவரும் தலையிலடித்துக் கொண்டனர்.

“யக்கா… கொஞ்ச நேரம் பேசமா இரு!” வேலைக்காரியை ஒருவன் அடக்க, அப்போதும் அந்தப் பெண்மணி புரிந்து கொள்ளவில்லை.

வீட்டின் பின்கட்டில் சுகாதார ஆய்வு நடப்பதும் இவளுக்கு தெரியாமல் போய்விட்டது. வேலைக்காரி மிகுந்த அக்கறையாக திறமைசாலியைப் போல பேச ஆரம்பித்தாள் 

“என்னைய ஏன்யா பேச வேணாம்னு தடுக்குற…” எனப் பேச ஆரம்பித்தவள், டாக்டரிடம் திரும்பி, 

“இந்தா டாக்டரே! நீ என்னன்னு தான் மருந்து ஏத்திட்டு போறியோ… சுத்தமா ஒன்னும் விளங்கல! அந்த பொண்ணு நேத்து சாயங்காலமே மயக்கம் தெளிஞ்சு கத்தி ஆர்பாட்டம் பண்ணி புடுச்சு… கைக்கு அடங்காம அந்த பொண்ணு ஓட பார்த்ததுல எனக்குதான் ரொம்ப சிரமம் ஆகிப்போச்சு!”

“இதெல்லாம் அவங்ககிட்ட ஏன் சொல்ற? வாயை மூடு!” என முத்து அதட்டினாலும், வேலைக்காரியின் வாய் ஓயவில்லை.

“நீ சொகுசா பீடி ஊத வெளியே போயிட்டே… அவஸ்தை பட்டது நான்தானே? “

“நீ திரும்பி வந்தும் அடக்க முடியாமத் தானே அந்த புள்ளை காலுக்கு சூடு வச்சோம்!” என்று நடந்ததை சொல்லி முடிக்க, பின்கட்டில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கும் பேரதிர்ச்சி!

சுகாதார பணியாட்கள் பின்கட்டில் வேலை பார்ப்பதாக நினைத்துக் கொண்டு முன்னறையில் இவர்கள் பேசிக் கொண்டிருக்க, கேமிராவில் அனைத்தும் படமாகிக் கொண்டிருந்தது.

“அர மயக்கத்துல பொசுக்கு பொசுக்குன்னு எந்திரிச்சு ஓடப் பாக்குது அந்த குட்டி. அதான், ரெண்டு இழு… கரண்டிய பழுக்க காய்ச்சிய இழுத்து விட்டேன். அதுக்கப்புறம் தான் அது முழுசா மயக்கதுக்கு போச்சு. இப்ப காலம்பற முனகல் சத்தம் கேட்டதும் ஒரு கிளாஸ் பால் குடுத்து பின்ன படுக்க வச்சேன். எப்பவுமே முழிப்பு வராத மாதிரி நிறைய மருந்து ஏத்தி விடுங்க டாக்டரே!” மடைதிறந்த வெள்ளமாய் இவள் உளறிக் கொட்டினாள்.

இவளின் பேச்சினை அடக்க முடியாத ஆண்களும் டாக்டராக வந்தவனை விரைந்து சிக்கிச்சையை தொடங்குமாறு சைகை காண்பித்து, அந்த அறையின் சாவியைக் கொடுக்க, அந்த மருத்துவனும் நொடியில் அந்த அறையைத் திறந்து மீண்டும் கதவைப் பூட்டிக் கொண்டான்.

நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த துப்பறியும் நபர்களும் இந்த இடம்தான் என தங்களுக்குள் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டனர்.

வேலையை முடித்துக் கொண்டு அமைதியாக அந்த வீட்டை விட்டுக் கிளம்பியவர்கள் அடுத்த அரைமணி நேரத்தில் காவல்துறையுடன் வந்திறங்கினர். 

அந்த வீட்டில் உள்ள கேமிரா மற்றும் அலைபேசிகள் ஜாமரில் அரைமணி நேரம் தடை செய்யபட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. போலீஸ் துறையால் நன்கு விசாரிக்கப்பட வேலைக்காரப் பெண்மணி உண்மையை உளறிவிட்டாள். 

பணத்திற்காக இந்த வேலையை செய்ய வந்ததாகக் கூற, அதைவிட அதிக பணம் கொடுப்பதாக கூறி அங்கு இருந்த வேலை ஆட்களை காவல்துறை மிக எளிதாக திசை திருப்பியது. 

இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் வருடக்கணக்கில் சிறைத் தண்டனையும் அவரவர் குடும்பத்தில் உள்ளர்வகளும் குற்றவாளியாக அடையாளபடுத்தப் படுவார்கள் என பயமுறுத்தி, அந்த வீட்டை காவல்துறை தங்களின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வந்தனர்.

காவல்துறை அனுமதி கொடுக்கும் வரை கதிரேசனுக்கு தகவல் கொடுக்காமல் இருக்க வேண்டுமென்று மிரட்டியும் வைக்கப்பட்டனர்.

“மீறி அவனுக்கு இங்கே நடக்கிறதை சொன்னா, அப்புறம் எல்லாரும் காலத்துக்கும் களி திங்க வேண்டியிருக்கும்!” என்ற எச்சரிப்பில் அனைவரும் வாயை பசை போட்டு ஒட்டிக் கொண்டனர்.

நாளைய தினம் கதிரேசனை பரோலில் வெளியே அழைத்து வந்து அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவு எடுக்கப்படுவதாக இருக்க, ஆனந்தன் எங்கும் அசையமுடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொண்டான்.

நாளை மதியத்திற்குள் மதுரைக்கு போக வேண்டும். அதைவிட இன்று இரவே மனஷ்வினியை நேரில் பார்த்தே ஆக வேண்டுமென்ற உந்துதல், நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகி முடிவில் தவிப்பாக மாறிப்போனது.

“டேய் நகுல்… தோட்டத்து வழியா நைசா வெளியே போயி உங்க அக்காவை பார்த்துட்டு அப்படியே மதுரைக்கு கிளம்பிடுறேன். நீ இங்கேயே இரு!” ஆனந்தன் கிளம்பி நிற்க, தானும் வந்தே தீருவேன் என ஒட்டிக்கொண்டான் நகுல்.

ஆதிக்கு மட்டும், “சக்சஸ்… நாளை மதுரையில் சந்திக்கிறேன்!” என ரூ-ஆப்பில் செய்தியை தட்டி விட்ட பிறகு, இருவரும் தோட்டத்தின் பின்வாசல் வழியாக யாரும் அறியாமல் வெளியே சென்றனர்.

காவல்துறையின் வசம் அந்த வீடு வந்ததும் முறையாக அந்த அறையினை திறந்து பார்த்து, அங்கு இருப்பது மனஷ்வினிதான் என உறுதிசெய்த பிறகே அவளுக்கான முறையான சிகிச்சைகள் தொடங்கப்பட்டன.

அவளுக்கென ஒரு மருத்துவரும், செவிலிப்பெண்ணும் அந்த சிறிய அறையிலேயே தங்க வைக்கப்பட்டனர். ஏற்கனவே வந்து கொண்டிருந்தவர்களுக்கு காய்ச்சல் தொற்று பாதிப்பால் புதியவர்களை நியமித்தோம் என கதிரேசனிடம் காரணம் கூறப்பட்டது. 

காவல்துறையின் ஜாமர் உதவியுடன் ஒருமணி நேரம் அந்த வீட்டில் அனைத்து இணைய இயக்கிகளும் முடக்கப்பட்ட பிறகு, நள்ளிரவில் ஆனந்தனும் நகுலேஷும் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

இவர்கள் உள்ளே சென்ற நேரத்தில், அரைகுறை மயக்கத்தில் உள்பாத தீப்புண்ணின் எரிச்சலில் எதிரொலித்த மனஷ்வினியின் அனத்தல் பேச்சு, அந்த வீட்டினையே சுறுசுறுப்பாக இயங்க வைத்துக் கொண்டிருந்தது.

இரண்டு கால்களும் கைகளும் கட்டிப் போடப்பட்டிருக்க சுயநினைவின்றி கத்திக் கொண்டிருந்தாள் மனஷ்வினி.

“கால் எரியுது!”

“என்னை கட்டிப் போடாதே!”

“அக்கா… தம்பி வாடா!” என கூச்சல் போடுவதைப் பார்க்க இயலாமல் நகுலேஷ் விரைந்து அவளது கை கட்டுக்களை அவிழ்த்து விட்டான்.

“அக்கா… நகுல் வந்துட்டேன்!” என பலமுறை உலுக்கிச் சொல்லியும் கண்களை திறந்து அவள் பார்க்கவில்லை.

“எதுக்கு இவ்வளவு ஹார்சா பிஹேவ் பண்றா?” ஆனந்தன் கேட்க,

“தொடர்ச்சியா டிரக்ஸ் ரிலேடட் மெடிசன்ஸ் சலைன்ல ஏத்தி இருக்காங்க… அதோட எஃபெக்ட் இப்படி கடுமையாதான் நடந்துக்க வைக்கும். இப்ப இவங்க அமைதியா இருக்கணும்ன்னா திரும்பவும் அதே மருந்தை இவங்களுக்கு ஏத்தணும்.

இந்த தீக்காயமும் சேர்ந்து இவங்களுக்கு வலியும் எரிச்சலும் கொடுக்கும். அது தாங்க முடியாம கூட இவங்க கடுமையா நடந்துக்க வாய்ப்பிருக்கு!” என மருத்துவர் விளக்கம் அளித்தார்.

நகுலேஷ் தன் முயற்சியாக அக்காவின் கைகளில் தன் கைகளில் அடக்கிக் கொண்டு, “நான், உன் தம்பி க்கா… கொஞ்சம் அமைதியா இரு! சீக்கிரம் உன்னை கூட்டிட்டு போயிடுவோம்.” என சமாதானப்படுத்த, விருட்டென்று அவனைத் தள்ளி விட்டவள், சட்டென்று எழுந்து நிற்க தீக்காயத்தின் வலியால் நிற்க முடியாமல் ஆனந்தனின் மீதே சரிந்து விழுந்தாள்.

அவனது தொடுகையில் “என்னைத் தொடாதே… வெட்டிப் போட்ருவேன்!” என அதீத கூச்சலிட்டுக் கொண்டே கண்ககளை நன்றாக திறந்து பார்க்கும் பொழுது, ஆனந்தனின் கை வளைவில் இவள் இருக்க, ‘இவன் தானா தன்னை அடைத்து வைத்தது?’ என தப்பர்த்தம் பண்ணிக் கொண்டாள்.

எங்கிருந்து அத்தனை பலம் வந்ததோ? பலம் கொண்டு அவனை விட்டு ஓரடி நகர்ந்தவள், மருத்துவ உபகரணங்களுடன் கத்தியும் கத்திரிக்கோலும் வைக்கப்பட்ட மேஜையில் முட்டி பலவீனமாக விழுந்தாள்.

உள்மனதின் அனத்தல், தன்னைத்தானே காத்துக் கொள்ளும் சுயமுயற்சியில் தலைகீழாக கத்தியை பிடித்துக் கொண்டு மிரட்ட, வலது உள்ளங்கை கீறப்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது.

“கத்தியை கீழே போடு மனு… ரத்தம் வருது!” என்றபடி வேகமாக ஆனந்தனும் நகுலும் இருபுறமும் நெருங்கி வர, அப்போதுமே பின்னடையத் தொடங்கியவள், தன் கையில் ரத்தம் சொட்டுவதைப் பார்த்து, மீண்டும் தலைகீழான முறையில் இடது கையில் மாற்றிப் பிடித்தாள்.

இப்பொழுது அந்த கையிலும் லேசான கீறலுடன் ரத்தம் வெளிப்பட, அதற்குள் விரைந்து வந்த இருவரும் பலவந்தமாக அவளிடமிருந்து கத்தியை பிடுங்கி தூர எறிந்தனர்.

அவளை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்து கட்டிப் போடும் வரையிலும் சுயநினைவு இல்லாமல் திமிறிக் கொண்டிருந்தாள். தூக்க மருந்தினை நரம்பினில் ஏற்றிய பிறகே அவளது ஆர்ப்பாட்டம் அடங்கியது.

“போகப்போக சரியாகிடும் சர்… வொர்ரி பண்ணிக்காதீங்க!” ஆறுதலாக மருத்துவர் கூறினாலும், இரு ஆண்களின் மனமும் சமாதானம் அடைய மறுத்தது.

“என்ன மாமா… அக்கா இப்படி ஆகிட்டா? எங்களை எல்லாம் மறந்துட்டாளா!” நகுலேஷ் பெருங்குரலெடுத்தே அரற்றத் தொடங்கி விட, ஆறுதலாய் அணைத்து கொண்ட ஆனந்தனின் கண்களும் அந்த நேரத்தில் வெகுவாக கலங்கிப் போனது.

“தைரியமா இரு டா! இது அவ இல்ல… அவளுக்கு கொடுத்த மருந்துதான் இப்படி பேச வைக்குது!” என வருத்தத்துடன் கூறியவன், அதற்கடுத்து செய்ய வேண்டியதை அந்த வீட்டிற்கு வெளியே வந்து வீதியில் அமர்ந்தபடியே திட்டமிடத் தொடங்கினான்.

வெளியே நிமிர்வுடன் இருந்தாலும் அவனாலும் மனைவியின் நிலையை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

‘என் பொருட்டு, என் பெயரைச் சொல்லி வந்தவனை நம்பியவளுக்கு பரிசு இந்த உயிர்வலியா? இவளின் இந்த நிலைக்கு காரணம் நான்தான்… நான் மட்டும்தான்!’ என்று அப்போது ஆரம்பித்த அவனது மனக்குமுறல், தன்னைத்தானே குற்றவாளியாக்கி, நிந்தித்துக் கொண்டது.

‘உறவில்லை, பற்றில்லை, பாசமில்லை.’ என எகத்தாளம் பேசியவனின் மனம் மனைவியின் வேதனையை கண்டு நெஞ்சை அடைத்துக் கொள்ளும் துக்கத்தை அனுபவித்தது.

அதே வேதனையுடன் நகுலேஷை அங்கேயே விட்டுவிட்டு இவன் மட்டுமே மதுரைக்கு வந்து, கதிரேசன் பிரச்னையை முடித்துவிட்டு மீண்டும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு வந்தடைந்தான்.

மறுநாள் காலை கேரளாவில் இருந்து மனஷ்வினியை பொள்ளாச்சி மருத்துவமனையில் வந்து சேர்க்கும் நேரம், ஆனந்தனும் மதுரையில் இருந்து அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது.

அந்த நேரத்தில் இருந்து மனைவியை விட்டு சற்றும் அகலாமல் அவளைப் பார்த்த வண்ணமே நடந்து முடிந்ததை எல்லாம் நினைத்து கொண்டிருந்தான் ஆனந்தன்.

அவனது மோனநிலையை கலைப்பதைப் போல தேஜஸ்வினி சற்றும் குறையாத கோபத்துடன் தங்கையைக் காண வந்து விட்டாள்.

ஆனந்தனுடன் தம்பியும் இருப்பதைப் பார்த்தவள், எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அவனை பட்டென்று ஒரு அடியை கன்னத்தில் கொடுத்து விட்டுத்தான் பேசவே ஆரம்பித்தாள்.

“நீயும் இவங்களை மாதிரி கல்நெஞ்சக்காரனா மாறிட்டியாடா… மனு கிடைச்சுட்டாங்கிற விசயத்தை ஏன்டா என்கிட்டே சொல்லாம மறைச்ச? பொண்ணுங்களை மதிச்சு எதையும் சொல்லாதே… மனுசியா கூட பார்க்காதேன்னு இந்த பெரிய மனுஷன் உனக்கு சொல்லிக் கொடுத்தானா!” என ஆனந்தனை சுட்டிக்காட்டி பேச, குடும்பத்திற்குள் அடுத்த கலவரம் வெடிக்கத் தயாராய் இருந்தது.

***