நான் பிழை… நீ மழலை..!
நான் பிழை… நீ மழலை..!
நான்… நீ…22
இனி அவரவர் வாழ்க்கை அவரவர் துணைகளின் புரிதலில் என்ற நிலையில் அனைவரும் அமைதியாக இருக்க, ஆனந்தனுக்கு இருப்பு கொள்ளவில்லை.
தன்னை நிற்க வைத்து ஒட்டு மொத்தமாக எல்லோரும் சேர்ந்து குற்றம் சாட்டியது, அவனை தணலில் நிற்க வைத்தது.
இத்தனை நாள் வரை தான் எது சொன்னாலும் சரியென்று தலையாட்டிய சகோதரனே, தற்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்து குளறுபடிகளுக்கும் தன்னையே காரணகர்த்தா ஆக்கியதை நினைத்து உள்ளுக்குள் குமைந்து போனான்.
அந்த இடத்தில் வேண்டப்படாதவனாக தன்னைத்தானே உருவகப்படுத்தி கொண்டதில் முற்றிலும் தளர்ந்து போனான் ஆனந்தன்.
ஆனால் அவனது இறுமாப்பு குறைவில்லை. தன் மீதான பச்சாதாபத்திலும் மாறாத கர்வத்துடன் நிமிர்ந்து அனைவருக்கும் பொதுவாய் பதில் கொடுக்க ஆரம்பித்தான்.
“நான் இப்படித்தான்னு யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எதுக்காக இப்படி இருக்கேங்கிற விளக்கத்தையும் நான் யாருக்கும் கொடுக்கமாட்டேன். என்னை பத்தி சரியா தெரிஞ்சுக்காம என்னோட வாழ வந்தது இவளோட தப்பு…
இதை கல்யாணம் முடிஞ்ச மறுநாளே இவளுக்கு சொல்லிட்டேன். நான் சொன்னதை சரியா புரிஞ்சுக்காம இந்த வீட்டை விட்டுப் போறேன்னு வீம்பா நிக்கிறதும் இவளோட இன்னொரு பெரிய தப்பு!” மொத்தக் குற்றத்தையும் மனைவியின் மீதே ஏற்றி வைத்துப் பேச, கேட்ட அனைவருக்கும் மூச்சடைத்துப் போனது.
‘அடப்பாவி… இவனுக்கு அடிமையா இருக்கச் சொன்னதை எவ்வளவு நாசூக்கா சொல்றான்!’ தனக்குள் நொந்தவாறே நெஞ்சில் கை வைத்தபடி பொத்தென சோபாவில் அமர்ந்தாள் மனஷ்வினி.
‘உன்னையெல்லாம் நாயை விட்டு விரட்டி அடிக்கணும்டா!’ அவளின் மனம் வஞ்சனை இல்லாமல் கணவனை கருவிக் கொண்டாடியது.
‘இப்ப நீ பதில் கொடுக்கலன்னா உன்னை ரோசம் கெட்டவனு இந்த பரதேசி ஐஎஸ்ஓ முத்திரை குத்திடுவான்!’ மனசாட்சி சூடேற்ற, கனலாக வந்து விழுந்தன மனஷ்வினியின் வார்த்தைகள்.
“இதுக்கும் மேல என்னை பழி சொன்னா, உங்களை நானே கொலை பண்ணிடுவேன்!” மனு கோபமாய் வார்த்தையை விட, அதைக் கேட்டு அருகிலிருந்த தேஜு கண்டிக்க ஆரம்பிக்கும் முன்பே,
“யாரும் இடையில வராதீங்க… என்னை பேச விடுங்க!” சீற்றத்துடன் கூறியபடி, மீண்டும் ஆனந்தனைப் பார்த்து,
“ரொம்ப நல்லவனா பேசுறதா நினைப்பா உங்களுக்கு? அப்புறம் எதுக்கு அன்னைக்கு நான் ஹாஸ்பிடல்ல அம்மா வீட்டுக்கு போறேன்னு சொன்னதும் சரின்னு சொன்னீங்க?”
“அப்போ அது பெட்டரா தோணுச்சு! ஆனா, ஆதியோட வருத்தம் அதைவிட நியாயமா என் மனசுக்கு பட்டதால உன்னை இங்கே இருந்து அனுப்புற முடிவை நான் மாத்திக்கிட்டேன்!” இலகுவாகக் கூறி தோள்களை குலுக்கிக் கொண்டான்.
“உங்க இஷ்டத்துக்கு என்னை வளைச்சு நெளிச்சு கட்டம் கட்டி விளையாட, நான் என்ன உங்க வீட்டு கட்டுக் கம்பியா?” இவள் குரலை உயர்த்த இவர்களின் பேச்சினை எப்படி தடுத்து நிறுத்துவது என எவருக்கும் புரியவில்லை.
“கோபப்படாதே மனு! எங்க நிலைமையில இருந்து ரெண்டு பேரும் யோசிச்சு பாருங்க!” இடையிட்ட ஆதி, சகோதரிகளைப் பார்த்து கூற,
“எதையும் வெளிப்படையா சொல்லாம உங்க இடத்துல இருந்து யோசிக்கச் சொன்னா எப்படி?” கறாராய் கேட்டாள் தேஜஸ்வினி.
“நமக்கு வர்ற எல்லா பிரச்சனைக்கும் தீர்வு பிரிவுலதான் கிடைக்கும்னா உறவுகள், குடும்பம், கல்யாணத்துக்கு எல்லாம் மதிப்பில்லாம போயிடும் தேஜு!” மனைவிக்கான பதிலைக் கூற முன்வந்தான் ஆதி.
“நான் வாழ நினைச்சு வாழ்க்கை இது இல்ல… எனக்கான குடும்பம் எப்படி இருக்கணும்னு உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேன். அது சிதைஞ்சு போக நான் விடமாட்டேன்!” கண்டிப்பான குரலில் பேசியவனை புரிந்து கொண்டவளாக அமைதியாக நின்றாள் தேஜஸ்வினி.
“ஏற்கனவே தொழிலை கைமாத்தி விட்டதுக்கு வெளியே பல ரூமர்ஸ் கிளம்பி இருக்கு. இதோட நம்ம குடும்ப உறவுகளுக்குள்ளும் குழப்பம் இருக்குன்னு வெளியே தெரிஞ்சா மொத்தமா முடங்கிப் போயிடுவோம் மனு!
இந்தளவுக்கு நிலைமை எங்க கை மீறிப் போகும்னு எதிர்பார்க்கல… அதுல வந்த குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. அடியோட அழிஞ்சு போக இருந்த தொழிலை எட்டு வருசமா கஷ்டப்பட்டு நிமிர வைச்சு, அதையும் தாரை வார்த்துட்டு இன்னைக்கு ஒன்னுமில்லாம நிக்கிறோம்.
இதுக்கு மேலயும் இந்த குடும்பத்துக்கு பெரிய இழப்பா உங்க ரெண்டு பேரோட பிரிவும் மாறிடக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன். இதைத்தான் ஆனந்தனுக்கு சொல்லி புரியவச்சேன்.” ஆதி விளக்கமாக கூறி முடிக்க, பெண்களுக்கு பதில் சொல்ல வாய் வரவில்லை.
ஆதியின் பேச்சினைக் கேட்ட ஆனந்தன், “இப்படியெல்லாம் வாழணும்னு கனவுல கோட்டை கட்டினா மட்டும் பத்தாது ஆதி… அதை உன் வாழ்க்கை துணையா வந்தவங்களுக்கு புரிய வைச்சிருக்கணும். நீயும் அவங்களை பத்தி முழுசா தெரிஞ்சு வச்சிருக்கணும்!” குறையாகக் கூறியவனை புரியாமல் பார்த்தான் ஆதி.
அண்ணனின் எண்ணத்தை படித்தவனாக ராஜசேகரை கை காட்டிய ஆனந்தன், “இவங்க குடும்பத்தை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம இருந்தது உன்னோட தப்பு. அதை அன்னைக்கு நான் எடுத்துச் சொன்னதும், அதையே காரணம் காட்டி பொண்டாட்டி கூட சண்டை போட்டதும் உன்னோட மிகப்பெரிய தப்பு!
அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ற நீ, இன்னைக்கு வரைக்கும் உன் கோபத்தையும் ஈகோவையும் பொண்டாட்டிகிட்ட இறக்கி வைக்கிற வேலையை மட்டுந்தானே ஒழுங்கா செஞ்சுட்டு வர்ற…” முகத்திற்கு நேராக ஆனந்தன் குறைகூற, ஆதி முகம் சுருக்கினான்.
“இந்த தேவையில்லாத பேச்சு, இப்ப எதுக்கு ஆனந்த்!” தங்களைப் பற்றி பிறர் பேசுவதை எப்போதும் விரும்பாதவளாக தேஜு இடையிட்டாள். அதற்கும் அசராதவனாக தனது கருத்தை முன்வைத்தான் ஆனந்தன்.
“குடும்ப வாழ்க்கையில காதலும் அன்பையும் விட அனுசரணையும் நம்பிக்கையும் வேணும் ஆதி! அது இல்லாத இடத்தில குடும்பம் சிதைஞ்சு போகுது. உன்கிட்ட என்ன குறையிருக்குன்னு பாரு! உன் அவசரபுத்திக்கும், குழப்பத்துக்கும் வீணா என்னை காரணமாக்காதே!” அழுத்தமாக கூறிவிட்டு, அவன் மீதும் குற்றத்தினை ஏற்றி வைத்தான் ஆனந்தன்.
“இத்தனை அழகா விளக்கம் சொல்ற நீங்க, எதுக்காக பொஞ்சாதியை விட்டு பிரிஞ்சு இருக்கணும்னு நினைக்கிறீங்க சின்னவரே?” அருணாச்சலம் தன்மையாக கேட்க,
“நான் சொன்ன மென்டாலிட்டி எல்லாம் எந்த காலத்திலயும் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராதுங்க ஐயா… அதுக்குதான் முன்னாடி இருந்தே கல்யாணம் வேணாம்னு சொன்னேன். ஆனா எதை எதையோ சொல்லி என்னை சிக்க வைச்சுட்டீங்க! எனக்கும் பொய்யா வேஷம் போட்டு இவளோட சிரிச்சு வாழப் பிடிக்கல…
ஒரு பக்கம் இவளுக்கு விடுதலை கொடுத்து விலகி நிக்க நினைக்கிறேன். இன்னொரு பக்கம் என் குடும்ப கௌரவம்தான் பெருசுன்னு சுயநலமா குழம்பிட்டு இருக்கேன். நான் என்ன செய்யணும்னு எனக்கே தெரியல…
இதுக்கு மேல நான் எதையும் சொல்லத் தயாரா இல்ல. அவங்கவங்க மனசுக்கு எது சரின்னு படுதோ அப்படியே இருக்கட்டும். இதுக்கு மேல பேச்சை வளர்க்காதீங்க ய்யா!” பேச்சினை முடித்துக் கொண்டவனாக அங்கிருந்து சென்று விட, நிலைகொள்ளாமல் நின்றது ஆதி மட்டுமே!
“இவன் ஒருத்தன்… உள்ளுக்குள்ள பொதைஞ்சு கெடக்கிறதை வெளியே கொட்டவும் மாட்டான் மத்தங்களையும் நிம்மதியா வாழவும் விடமாட்டான். பெரிய இவனாட்டம் குத்தம் சொல்லிட்டு திரியுறான்!” கடுப்பில் முணுமுணுத்தவன், ‘இன்னும் என்ன?’ என்று அங்கிருப்பவர்களை ஏறிட்டுப் பார்க்க,
“நாங்க கெளம்புறோம்!” முந்திக் கொண்டு சொன்னது தேஜஸ்வினியே!
பிறந்த வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று ஆடித்தீர்த்த மனஸ்வினியே அமைதியாக இருக்க, தேஜு அங்கிருந்து செல்வதில் தீவிரம் காட்டினாள்.
தர்க்கம் செய்து ஒய்ந்து போனதில் மேற்கொண்டு பேச்சினை வளர்க்க விரும்பாமல், “சீக்கிரம் திரும்பி வரணும்ங்கிற முடிவோட போயிட்டு வாங்க!” ஆதி சம்மதிக்க, மருமகள்களின் விருப்பம் போலவே இருவரும் பிறந்த வீட்டிற்கு தந்தை மற்றும் தம்பியுடன் கிளம்பிச் சென்றனர்.
***
அதற்கு பிறகு வந்த நாட்களில் சகோதரர்கள் இருவரும் தொழிலில் தங்களின் அடுத்தடுத்த இலக்குகளை முன்வைத்து செயல்பட ஆரம்பித்தனர்.
முதலில் தொழில்துறை ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அழைத்து தாங்கள் ஆரம்பித்திருக்கும் புதிய தொழிற்குழுமத்தின் பெயரை வணிகச்சந்தையில் அறிமுகப்படுத்தினர். அதன் பிறகு ரூபம் குரூப்ஸ் கை மாற்றப்பட்ட விசயத்தையும் அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர்.
“சிலபல அவசியங்களுக்காக ரூபம் குரூப்ஸ் தொழிற்குழுமம் கதிரேசன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனி அதன் வளர்ச்சியும் மாற்றங்களும் முழுக்க அவரது பொறுப்பில் மட்டுமே நடைபெறும்.
தொழில்கள் அவருக்கு வழங்கப்பட்டதே தவிர, ரூபம் குரூப்ஸ் பெயரில் தொழிலை நடத்திச் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்படவில்லை. எங்கள் குழுமத்தின் பெயரையோ அதன் அடையாளைத்தையோ யாரேனும் எங்களின் அனுமதியின்றி முறைதவறிப் பயன்படுத்தினால் அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஊடகங்களின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்றிலிருந்து ரூபம் குரூப்ஸ் திவாலாகிப் போனதாக அறிவித்துக் கொள்கிறோம். சற்று கடினமான காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இடர்பாடுகளை சந்தித்ததினால் மேற்கொண்ட முடிவு இது.
ரூபம் குரூப்ஸ் மீண்டும் எழுச்சியுடன் தனது பயணத்தை தொடர சிலபல காலங்கள் எடுக்கலாம். ஆனால் நிச்சயம் ஒருநாள் மீண்டு வந்து தனது இடத்தை ரூபம் குரூப்ஸ் தக்க வைத்துக் கொள்ளும்!” தீர்க்கமான குரலில் ஆதி கூறி முடிக்க, அவனது பேச்சு நேரடியாக தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளுக்கு ஒளி(லி)பரப்பாகிக் கொண்டிருந்தது.
“ஏற்கனவே அந்த நிறுவனத்துல முதலீடு செய்திருக்கிறவங்களுக்கு உங்க பதில் என்ன? அங்கே வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை என்ன?” செய்தியாளர் ஒருவர் கேட்க, ஆனந்தன் பதிலளிக்க தொடங்கினான்.
“தொழிலாளர்கள் அங்கேயே தொடர்ந்து பணியாற்றுவதை அவர்களின் விருப்பத்தின் பேரில் விட்டு விடுகிறோம். நிரந்தரப் பணியாளர்கள் அங்கிருந்து விலக விரும்பினால் அவர்களுக்கான வைப்பு நிதியை புதிய நிர்வாகம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்.
ரூபம் குழுமத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், நாங்கள் புதிதாக ஆரம்பித்திருக்கும் தொழிற்குழுமத்தில் மீண்டும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வந்தால் அவர்களின் நஷ்டம் உடனடியாக நேர் செய்யப்படும். அப்படி அவர்கள் எங்களோடு இணைந்து கொள்ளாத பட்சத்தில் சற்று கால அவகாசம் எடுத்துக் கொண்டு அவர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக எந்த திவாலான கம்பெனியும் நஷ்டத்தொகையை முதலீட்டாளர்களுக்கு வழங்க முன்வருவதில்லை. ஆனால் ரூபம் குரூப்ஸ் மனிதநேயத்தையும் கருணையையும் உயிர் மூச்சாக கொண்டு செயல்படுவதால் இந்த உறுதியை நாங்கள் அளிக்கிறோம்.
மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பத்தில் வெற்றிச் செய்தியுடன் உங்களை சந்திக்கிறோம்.” ஆனந்தன் விளக்கி முடிக்க, அனைவருக்கும் நன்றி கூறி சகோதர்கள் அன்றைய சந்திப்பை முடித்துக் கொண்டனர்.
வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் மறைமுகமாக கருத்தில் கொண்டே சகோதரர்களின் அறிவிப்புகள் செய்தியாக்கப்பட்டன.
வியாபரத் தந்திரங்களை கரைத்துக் குடித்த தொழிலதிபர்கள் இதை விட பல சூத்திரங்களை கையாண்டு வர்த்த உலகத்தில் நிலையாக நின்று விடுவர் என்பதில் ஐயமில்லை.
இவர்களின் அதிரடி அறிவிப்பில் கதிரேசனின் வசமிருந்த ரூபம் குரூப்ஸ் நிறுவனத்தின் தொழிற்பங்குகள் தலைகீழ் மாற்றம் கண்டது. பங்குச் சந்தையில் இவர்கள் குழுமத்தின் பங்கு அதிரடியாக வீழ்ச்சி அடையத் தொடங்கியது.
இதன் காரணமாக அங்கு முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை திரும்ப பெறுவதற்கான முயற்சியில் தங்களின் பங்குகளை குறைந்த மதிப்புகளில் கைமாற்றத் தொடங்கினர்.
இதனால் உட்பூசல்களுடன் நிர்வாகம் சலசக்கத் தொடங்கி, பெரும் நஷ்டத்தை கொடுக்க ஆரம்பித்தது. உற்பத்தி பிரிவிலும் கடனாக வந்து கொண்டிருந்த மூலப் பொருட்களும் நிறுத்தப்பட்டு விட, குறித்த நேரத்தில் சந்தையில் விற்பனைப் பொருட்களை அனுப்ப முடியவில்லை.
இதனால் விற்பனையாளர்கள் தங்களின் கவனத்தை வேறு நிறுவனத்தின் மீது திருப்பி அவர்களின் வியாபாரத்தை தக்க வைத்துக் கொண்டனர்.
இன்னும் ஐந்து மாதத்தில் சிறைவாசம் முடித்துக் கொண்டு வரும் கதிரேசனுக்கு தானமாக வந்து சேர்ந்த சொத்துகள் ஆலகால விசமாக உருமாறத் தொடங்கியது. இது ஆரம்பம் மட்டுமே!
இனி அவன் வெளியில் வந்து சொத்துக்களை திறம்பட நிர்வாகித்து அனைவருக்கும் நியாயமான முறையில் தொழில்களை நடத்திச் சென்றால் மட்டுமே அவனும் கரை சேர்ந்து, சொத்துக்களையும் முழுமையாக தனதாக்கி கொள்ள முடியும். இவை அனைத்தும் இனி அவனது சமார்த்தியத்தில் மட்டுமே அடங்கியுள்ளது.
பத்து நிமிட சந்திப்பில் இரட்டை சகோதரர்கள் வைத்த வெடிகுண்டு மிகப்பெரிய தொழிற் சாம்ராஜ்ஜியத்தை துண்டு துண்டாக சிதறடிக்கத் தொடங்கியது.
***
தொழிலின் அடுத்ததடுத்த அதிரடிகளில் வெற்றி கண்டு, தனது பழைய சுறுசுறுப்பினை மீட்டுக் கொண்ட ஆதி மனதளவில் பெரிதும் சோர்ந்து போகத் தொடங்கினான்.
ரூபம் மாளிகையில் அவனது தளத்திற்கு செல்லவே மனம் வெறுப்பாகிப் போனது அவனுக்கு. முகம் கொடுத்து பேசாவிட்டாலும் மனைவி தன்னோடு இருக்கும் வரை அவளது எழில் முகத்தை பார்த்தே உற்சாகமாக நடமாடிக் கொண்டிருந்தான்.
அவள் பிறந்த வீட்டிற்கு சென்ற இந்த ஒரு வாரமாக அவள் இல்லாத வீட்டில் ஓய்வெடுக்க கூட ஆதியின் மனம் விரும்பவில்லை.
‘பாலும் கசந்ததடி சகியே!
படுக்கையும் நொந்ததடி!’ என வாய் விட்டு அரற்றுவது மட்டுமே குறையாகக் கொண்டு சோர்வுடன் வலம் வர ஆரம்பித்தான்.
அன்றொரு நாள் பிரிந்து செல்வதாக கூறி அவனோடு தர்க்கம் செய்த தேஜஸ்வினி. அதன் பிறகு எதற்கும் வாயை திறக்கவில்லை.
“புதிய தொழிலில் உங்கள் இருவரையும் பங்குதாரர்களாக சேர்த்துள்ளேன்!” ஆதி தகவலாகக் கூற, அலட்டிக் கொள்ளாமல் அதிராமல் குதர்க்கமாய் பதிலளித்தாள் தேஜு.
“உங்க கோபத்தை காட்டவும் தகுதியில்லாதவங்க மேல ஒரு வழியா நம்பிக்கை வந்துடுச்சு போல…” முகம் பாராமல் குத்திக் காண்பிக்க தலையில் அடித்துக் கொண்டான் ஆதி.
“ஒரு வேகத்துல வாய் தவறி சொல்லிட்டேன் தேஜுமா… இன்னும் இதையே பிடிச்சு தொங்கிட்டு இருப்பியா?” புலம்பத் தொடங்கியவனை அலட்சியமாகப் பார்த்தாள்.
“இப்படி கம்பெனி டைரக்டர் போஸ்டிங் கொடுக்கிறதெல்லாம் நான், இந்த வீட்டை விட்டுப் போகமா இருக்க நீங்க பண்ற ஏற்பாடா… இல்ல, வரப்போற புது வரவுக்கு கௌரவம் கொடுக்க உங்க குடும்பத்துல செய்யுற வழக்கமா?” கேள்விகளை வகையாக அடுக்க மனைவியை அத்தனை வெறுப்புடன் பார்த்தான்.
“மனுசன் பேசுவானாடி உன்கிட்ட! உனக்கு என்ன இஷ்டமோ எப்படி விருப்பமோ அப்படியே இருந்து தொலை! அதுக்காக என் பேச்சை தட்டி கழிச்சு, ரூட் மாறி போக நினைச்சா நான் பொல்லாதவன் ஆகிடுவேன்.
ஒழுங்கு மரியாதையா மீட்டிங்க்கு வந்து அமைதியா உக்காரப் பாரு! அதை விட்டு திரும்ப ரூல்ஸ் பேசிட்டு இருந்தே அவ்வளவு தான்!” எச்சரிக்கையாக கூறியவன் தனது கோபத்தை முயன்று அடக்கிக் கொண்டான். அதற்கு பிறகு நேருக்குநேராக கூட மனைவியின் முகத்தை பார்க்கவில்லை.
புதிய தொழிலில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி மூளையை குடைந்து கொண்டே இருக்க, மனைவியின் மீதான பார்வையை சற்றே தள்ளி வைத்தான்.
பிறந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற அவளது உறுதியான முடிவினை தனிமையில் கூறி இருந்தால் எதையாவது பேசி அதை மாற்ற வைத்திருக்கலாம். ஆனால் உறவுகளும் சூழ்நிலையும் அவர்களுக்கு ஏற்ற தனிமையை அமைத்து தரவில்லை.
‘பிறந்த வீடே சொர்க்கம்!’ என அடம் பிடிக்காத குறையாக மனைவி முகம் சுணங்கிச் சென்றதை கனவாகக் கூட ஆதித்யனால் ஏற்க முடிவில்லை.
‘அவளாகத் தானே சென்றாள்… அவளாகவே வரட்டும். அதுவரை திரும்பி பார்க்கக்கூடாது.’ வீராப்புடன் முடிவெடுத்து இருந்தவனின் சபதம் எல்லாம் மூன்றாம் நாள் ஆட்டம் கண்டுவிட்டது.
காதல் கொண்ட மனம், காதலியை நாடிச்செல்லத் தூண்டியது. புதிதாக முளைத்த பிள்ளைப்பாசம் அதை தாங்கி நிற்கும் தாய்மைக்கு கனிவையும் கரிசனத்தையும் அள்ளிக் கொடுக்க நச்சரித்தது.
கண்கள் முடினாலும் மனையாளின் முகமே உலா வர தனது ரோசத்தை கடலில் கரைத்து விட்டு, அவளை நலம் விசாரிக்க மாமனார் வீட்டிற்கு கிளம்பி விட்டான் ஆதி.
ஆசையோடு ராஜசேகர் வீட்டு வாசலில் வந்து நின்றவனை பூட்டு போட்ட கதவு வரவேற்க, நரகத்தின் வாசலின் நிற்கும் கொடுமையை அனுபவித்தான்.
கடுப்பினை புதைத்துக் கொண்டு மாமனாருக்கு அலைபேசியில் அழைக்க, நகுலேஷ் அழைப்பினை ஏற்றான்.
“ஹலோ மாமா!” எடுத்த எடுப்பிலேயே அவன் பேசிவிட,
ஆதியும், “எங்கே இருக்கீங்க நகுல்? வீடு பூட்டியிருக்கு… தேஜு எப்படி இருக்கா? எல்லாரும் சௌக்கியம் தானே?” சடசட வேகத் தூறலில் கேள்விகளை அடுக்கினான் ஆதி.
அவனுக்குள் அத்தனை பதட்டம்… அலைகழிப்பு! முழு ஓய்வில் இருக்க வேண்டிய காலகட்டத்தில் வீட்டில் இல்லையென்றால் எப்படி எடுத்துக் கொள்வதென்ற சராசரி ஆணின் பதட்டத்தில் கேட்டு விட்டான் ஆதி.
இவனது தவிப்பை உணர்ந்து கொண்டவனாக, கண்டேன் சீதையை பாணியில் பதில் அளித்தான் நகுலேஷ்.
“அக்கா ஃபைன் மாமா… நாங்க கோவில்ல இருக்கோம். வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்க ஒரு மாதிரி இருக்குன்னு அக்காவும் எங்களோட கோவிலுக்கு வந்துட்டா!” நகுல் எதார்த்தமாக சொல்லவும் சிடுசிடுக்கத் தொடங்கி விட்டான் ஆதி.
“உங்க வீட்டுல ஒருத்தருக்கும் அறிவில்லையாடா? அவ நிலைமை அனுசரிச்சு உங்களால கோவிலுக்கு போறதை ஒத்திப் போட முடியாதா! போயே ஆகணும்னு அப்படியென்னடா அவசியம் வந்தது?” ஏககடுப்பில் கேட்க, பதில் கூற திணறிப் போனான் நகுல்.
அவனது உஷ்ணப் பேச்சு அலைபேசியைத் தாண்டி மற்றவர்களுக்கும் கேட்கத் தொடங்கியதில் தேஜு அலுத்துக் கொண்டாள்.
“எல்லாரையும் கடிச்சு குதறிப் பேசலைன்னா இவருக்கு பொழுது நகராது!” முணுமுணுத்த தேஜு, அப்போதே தாங்கள் வந்த ஆட்டோவை அழைத்தும் விட, அந்த நேரத்தில் தடாலடியாக அலைபேசியை வாங்கிக் கொண்டாள் மனு.
“ஹலோ மாமா… இன்னைக்கு அம்மாவோட திதி! அதான் கோவிலுக்கு போறதை தள்ளிப் போட முடியல. ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. நாங்க பக்கத்துல வந்துட்டோம்!” சமாதானமாகக கூறி அழைப்பை துண்டிக்க ஆதி குழம்பிப் போனான்.
‘மாமா, அத்தையை ஊருல விட்டு வந்ததா தானே சொன்னாரு! ஆனா, அம்மாக்கு திதின்னு மனு சொல்றா… ஒன்னும் புரியலையே?’ தனக்குள் குழம்பியவனாக தலையை சொறிந்து கொண்டான் ஆதி.
ஆனந்தன் கூறியதைப் போல, ‘மனைவியின் குடும்பத்தை பற்றி அவர்களிடம் முழுமையாக கேட்டு அறிந்திருக்க வேண்டுமோ!’ என முதன்முறையாக மாமனார் வீட்டில் உள்ளவர்களைப் பற்றி அலசி ஆராய ஆரம்பித்தான்.
இவன் யோசித்துக் கொண்டிருந்த நிமிடத்தில் ஆட்டோவில் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். முதல் ஆளாக ஆட்டோவில் இருந்து இறங்கிய மனைவியின் ஓய்ந்த தோற்றம் கண்டு உள்ளுக்குள் கொதித்துப் போனான் ஆதி.
“நம்ம வீட்டுல காருக்கு பஞ்சமா… டிரைவருக்கு பஞ்சமா? இப்படி சின்னாபின்னமா ஆட்டோல போய்த் தொலைக்கணுமா?” பொத்தம் பொதுவாகவே கேட்டு அனைவரையும் கடிந்து கொண்டான் ஆதித்யரூபன்.
பாசம் பாய்சனாகிப் போக, கோபத்தை பாயாசமாக அனைவருக்கும் பரிமாறித் தொடங்கி விட, மசக்கையில் ஒய்ந்து போனவள், மயக்கம் வந்து அவன் மீதே சாயத் தொடங்கினாள்.
***