நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…26

ஒரு வாரம் அதன் போக்கில் கழிந்திருந்தது. யாரிடமும் மாற்றங்கள் எதுவும் இல்லை. அருணாச்சலமும் ராஜசேகரும் மட்டுமே மாறிமாறி இரண்டு ஜோடிகளை பற்றிய தங்களது மனத்தாங்கலை பகிர்ந்து கொள்ளத் தொடங்கி இருந்தனர்.

நகுலேஷ் தனது கல்லூரி சேர்க்கைக்கு அலைந்து கொண்டிருந்தான். காலக்கெடு முடிந்து போனதால் சேர்க்கையில் பல கெடுபிடிகள். அதில் முத்தாய்ப்பாக நன்கொடை என்ற பெயரில் கணிசமான தொகையினை கேட்டது கல்லூரி நிர்வாகம்.

நிலையான வருமானமே இழுபறியாக இருக்கும் நிலையில், பெண்களின் பிடிவாதத்தால் அவர்களின் நகைகளை அடமானம் வைத்து படிப்புச் செலவினை சமாளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார் ராஜசேகர்.

மனஷ்வினியும் அருகில் இருக்கும் நர்சிங் ஹோமில் வேலைக்கு சேர்வதாகக் கூறி பிடிவாதமாக கிளம்பி நின்றாள். தேஜஸ்வினியால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையிலும் வீட்டின் நிதி நெருக்கடியை கணவனிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஆனந்தனின், ‘பணத்திற்காக மட்டுமே வந்தவர்கள்.’ என்ற வார்த்தையை முடிந்தவரை பொய்யாக்க வேண்டுமென்றே இரு பெண்களும் நினைத்தனர்.

ஆனால் நகுலேஷின் மனதில் இருந்த மாமாக்களின் மீதான மரியாதையில், நடப்பதை எல்லாம் ஆனந்தனிடம் ஒப்புவித்து கொண்டிருந்தான். அப்படிச் செய்ய வலியுறுத்தியது ஆனந்தனே!

“உன்னை மட்டுமே நம்பி, உங்க வீட்டுக்கு உங்களை எல்லாம் அனுப்புறேன் நகுல்… உங்க பாதுகாப்புக்கு பவுன்சர்ஸ், செக்யூரிட்டின்னு வச்சா, உன் ரெண்டு அக்காக்களும் ரூல்ஸ் பேசி, தேவையில்லாததை குடைஞ்சு பிரச்சனை பண்ணி வைப்பாங்க. புரிஞ்சுக்க… எக்காரணம் கொண்டும் அவங்களை தனியா எங்கேயும் அனுப்பாதே!” நகுலிடம் தனியாக எச்சரித்திருந்தான்.

இதன் காரணமே நகுலேஷ் மூலமே மனுவின் வேலை விசயம் ஆனந்தனுக்கு தெரியவர, மறுநாளே காலையில் சட்டமாக மாமனார் வீட்டில் வந்து அமர்ந்து விட்டான்.

ராஜசேகர், தேஜு, நகுல் என அனைவரும் இருக்க, நேரடியாக மனஷ்வினியிடம் பேச ஆரம்பித்தான் ஆனந்தன்.

“பழையபடி பி.எஸ்.ஜி-ல கிளாஸ் கன்டினியூ பண்ண பேசியாச்சு. நகுலுக்கும் அங்கேயே பி.டெக் சீட் கன்ஃபார்ம் பண்ணியாச்சு. அடுத்த வாரம் நீயும் அவனும் உங்க திங்க்ஸ், ஸ்டடி மெட்டீரியல்ஸ் பேக் பண்ணி ரெடியா இருங்க. வண்டி வரும்.” உத்தரவாக மனுவிடம் கூற, அவனைக் கோபமாக பார்த்தாள்.

“நாங்க என்ன உங்க வீட்டு நாய்குட்டியா? நீங்க சொல்ற எதையும் கேக்க முடியாது.” மனு தர்க்கத்தை ஆரம்பிக்க, அலுப்பாய் முறைத்தான் ஆனந்தன்.

“என்ன பெர்ஃபசுக்காக என்னைக் கல்யாணம் பண்ணினியோ அது ஒழுங்கா நடக்கட்டுமே! கேள்வி கேக்காம கிளம்புற வழியைப் பாரு!”

இப்படி பொறுமையாகப் பேசியதில் அவனாலேயே அவனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இவனது பேச்சில் இம்முறை ராஜசேகரும் வெகுண்டு போனார்.

“என் பொண்ணை இவ்வளவுக்கு இறக்கி பார்க்க வேணாம் தம்பி… ஏதோ ஒரு அவசரத்துல தங்களோட தேவைக்கு தீர்வா உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்புதான்… அதுக்காக திரும்பத் திரும்ப கொட்டிகிட்டே இருந்தா எப்படி?

உங்ககிட்ட இருந்து எதுவுமே வேண்டாம்னு தானே ஒதுங்கி நிக்கிறாங்க… இப்படியே விட்டுடுங்களேன்! உங்க பலம், பலவீனமா அவ வாழ்றதை விட, என் மகளா எனக்கு முக்கியமானவளா எங்களோட வாழ்ந்துட்டு போகட்டுமே!” அதிராமல் சொல்லி முடிக்க, ஆனந்தனும் அதே பாவனையில் பதிலளித்தான்.

“எந்த பலவீனமும் எனக்கு இருக்க கூடாதுன்னு தான், நான் எல்லாருக்கும் எதிரியா நின்னுட்டு இருக்கேன். இவளோட படிப்பு மட்டுமே இவளுக்கு எதிர்காலம்! அது எந்தக் காரணம் கொண்டும் தடைபட்டு நிக்க வேணாம். நான், இவளை சராசரி மனுஷியா பாக்க நினைக்கறேன்… அதுக்காக செய்யுற சின்ன உதவியா பாருங்க!” எனக்கூறி வாயடைத்தான்.

ராஜசேகர் மகளை இனியும் படிக்க வைக்க இயலாதென்ற முடிவினை எப்போதோ எடுத்து விட்டிருந்தார். இவளும் ‘டாக்டர் கனவு கனவாக இருந்து அழியட்டும். இனி படிப்பும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்.’ என்ற முடிவிற்கு வந்து தன்னை திடப்படுத்திக் கொண்டிருக்க, இவனோ இப்படி வந்து நிற்கிறான்!

“மறுபடியும் படிப்பு, ஹாஸ்டல் எல்லாம் வேண்டாம்னு முடிவுக்கு வந்துட்டேன். என் தம்பியை படிக்க வைக்க எங்களுக்கு தெம்பிருக்கு… வசதியிருக்கு. உங்க உதவி வேணாம்.” மனு வீம்பாக கூற,

“நகையை அடமானம் வச்சு வர்ற பணத்துல எத்தனை நாள் வண்டி ஓட்ட முடியும்? நீ வேலைக்கு போயி நின்னதும் உனக்கு கை நிறைய அள்ளிக் கொடுத்திடப் போறாங்களா!” எள்ளலாக கேட்டான் ஆனந்தன்.

“எங்களுக்கு விருப்பம் இல்லன்னு சொல்றோம்… ஏன் கம்பெல் பண்றீங்க?” தேஜுவும் கேட்க, முகம் திருப்பிக் கொண்டான்.

“நான் யார்கிட்ட பேசுறேனோ, அவங்க மட்டும் பதில் சொன்னாப் போதும்.” வெட்டிவிட்டுப் பேசியவன்,

“நீ ஹாஸ்டல்ல தங்க வேணாம்… வீடு பார்த்தாச்சு!” ஒற்றை வரியில் பதிலளித்தான்.

“வீடெல்லாம் எதுக்கு?”

“ம்ம்… உன்னை உருட்டி விட்டு விளையாடத் தான்.” நக்கலாக தொடர்ந்தவன், ராஜசேகர் அருகில் இருப்பதை பார்த்து பேச்சை மாற்றினான்.

“அங்கேயே இருந்து காலேஜ் போயிட்டு வரலாம். ஓயாம சொல்ல வைக்காதே… நாளைக்கு ரெண்டு பேரும் கிளம்பி ரெடியா இருங்க!” கறாராக பேச்சினை முடித்துக் கொண்டான்.

“நீங்க சொல்றது எல்லாம் சரி தம்பி… அந்த வீட்டுல பொறுப்பா இருந்து யார் பார்த்துக்கப் போறா? இவங்க பாதுகாப்புக்கு யாரு இருக்கப் போறா?” தகப்பனாக கேள்வியை முன்வைக்க, ‘பதில் சொல்.’ என மிதப்பாக நின்றாள் மனஷ்வினி.

“ஆக்சுவலா, நான்தான் அங்கே ஷிஃப்ட் ஆகப்போறேன். புதுசா ஆரம்பிச்ச தொழிலுக்காக கொஞ்சநாள் நான் அங்கே தங்கவேண்டிய சூழல்… எனக்கு துணையா, இவங்க ரெண்டு பேரையும் தங்க வைச்சுக்க போறேன்!” இலகுவாக கூறியவன்,

தேஜஸ்வினியையும் பார்த்தபடி, “இந்த வீட்டை ஆல்டிரேசன் பண்ண முடிவு பண்ணி இருக்கோம் அங்கிள். அதனால நீங்களும் உங்க பெரிய பொண்ணும் நம்ம வீட்டுல வந்து தங்கிக்கோங்க… உங்க கடைக்கு வேற மாற்று ஏற்பாடு பண்ற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க!” என அனைத்திற்கும் முடிவெடுத்தவனாக கூறிவிட்டு சென்று விட்டான்.

மறுத்துப் பேசினால் கேட்கும் நிலையில் அவனில்லை எனும்போது, ஆதியிடம், அருணாசலத்திடம் தனது மறுப்பினை ராஜசேகர் தெரிவிக்க, இருவருமே கோபம் கொள்ளத் தொடங்கினர்.

“நீங்க ஏன் உங்களுக்கு உதவி பண்றதா நினைக்கறீங்க ராஜசேகர்? பொண்டாட்டி கூட வாழறதுக்கு பசங்க எடுக்குற முயற்சியா பாருங்களேன்! பொண்ணுகளுக்காக கொஞ்சம் தளர்ந்து போகலாம்.” பெரியவர் சொல்லிய வகையில், யோசித்துப் பார்த்து அமைதியானார் ராஜசேகர்.

ஆனந்தனின் முடிவைக் குறித்து தேஜுவும் ஆதியிடம் கேட்கவில்லை. அவனாவது சொல்வானா என எதிர்பார்த்திருக்க, ஆதியும் மௌனச் சாமியாராகவே இருந்தான்.

அன்றைய இவர்களின் முகத் திருப்பலின் உஷ்ணமே குறையாமல் இருக்க, மீண்டுமொரு பிரச்சனையா என்ற ஆயாசமே இருவரின் மனதிலும் மேலிட்டது.

மனுவிற்கு இப்போதைய சூழ்நிலையில் படிப்பென்பதே வேப்பங்காயாக கசந்தது. ‘இவனிடம் மறுத்தால் தானே காதில் வாங்கிக் கொள்ள மாட்டான்.’ என நினைத்து, ஆதியிடம் தனது மறுப்பினை கூற முடிவு செய்தாள்.

மனு, தனது யோசனையை தேஜுவிடம் சொல்ல, “நீயே பேசு…. நான் அவர்கூட பேசி ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு!”

“நீங்களும் ஏன் க்கா இப்படி இருக்கீங்க?”

“அன்னைக்கு ஃபேஸ் சர்ஜரியை பத்தி சொன்னேன் இல்ல… அது பிடிக்காம என் மகாராஜா போர்கொடி தூக்கிட்டாரு! நானும் எது வரைக்கும் போகுதோ போகட்டும்னு விட்டுட்டேன்!” என்றவள், தனது அலைபேசியில் இருந்தே கணவனுக்கு அழைத்து மனுவிடம் கொடுத்தாள்.

ஆசையாக மனைவியின் அழைப்பை ஏற்றவன் பேச ஆரம்பிக்கவும், எதிர்பக்கம் மனு பேச சப்பென்று ஆகிப்போனது ஆதிக்கு.

“மாமா… எனக்கு இப்ப படிப்பு வேண்டாம். அவர்கிட்ட எடுத்து சொல்றீங்களா? இப்ப என் கான்சென்ட்ரேட் ஸ்டடீஸ்ல போகாது மாமா!” எடுத்த எடுப்பிலேயே மனு படபடக்க ஆரம்பித்தாள்.

“இது ஆனந்தன் எடுத்த முடிவு, என்னால ஒன்னும் பண்ண முடியாது மனு!”

“நான் சொன்னா அவர் கேட்டுக்க மாட்டார்!”

“இங்கேயும் அதே நிலைமை தான்!” ஆதி பேசும்போது, அவனை பார்ப்பதற்கென ஆனந்தன் வர,

“அவனே வந்துட்டான்… நீயே அவன்கிட்ட சொல்லு!” என்றவனாக லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட்டு, “மனு கூட பேசுடா!” என பேச்சிலிருந்து ஒதுங்கிக் கொண்டான்.

“என்ன பேசணும்?” மொட்டையாக ஆனந்தன் கேட்க,

“இல்ல… எனக்கு படிப்பு வேணாம். இப்போதைக்கு என்னால முடியாது. வீண் செலவு அது.”

“ஒஹ்… அப்போ, உன்னை பத்திரமா மீட்டுடுட்டு வர கதிரேசன் கிட்ட எங்க தொழிலை தானமா கொடுத்தோம். அதுவும் தண்டம் தானே… அதை எப்படி நீ நேர் பண்ணப் போற?” வெகு சாதூரியமாக இவன் கிடுக்கிப்பிடி போட,

“இதென்ன இம்சை?” சட்டென்று அருவெறுத்தாள் மனு.

“இதப்பார்… நீ ஒழுங்கா சுதாரிப்பா இருந்திருந்தா, இன்னைக்கு எங்க தொழில் எங்க கை விட்டுப் போயிருக்காது. அந்த நஷ்டத்தை எனக்கு நேர் பண்ணிட்டு நீ உன் வழியா பார்த்து போ…”

“சுத்த அறிவுகெட்டத்தனமான பேச்சு இது. எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க?”

“நான் சொல்ற பேச்சை கேக்கலன்னா, நீ செய்ய வேண்டியதை சொன்னேன். இல்லன்னா… ஒழுங்கா நல்ல பிள்ளையா என் பேச்சை கேட்டு படிக்கப் போ!”

“அப்படி படிக்க போயும் ஒழுங்கா படிச்சு முடிக்கலன்னா என்ன பண்ணுவீங்க?”

“இது வேலிட் பாயிண்ட்… நீ படிப்பு முடிச்சு சம்பாதிக்க ஆரம்பிக்கிற வரைக்கும் உனக்கு என்கிட்ட இருந்து ரிலீஃப் கிடைக்காது!”

“ஒஹ்… இப்படி ஒரு பிளாக்மெயிலா? படிச்சு முடிச்சதும் சம்பாதிக்காம இருந்தா…”

“வாழ்நாளுக்கும் எனக்கு வேலைக்காரியா இருந்துட்டு போ!” பட்டென்று பேச, மொத்தமாய் அதிர்ந்து போனாள் மனஷ்வினி!

“ஏன் டா இவ்வளவு குரூரமா பிஹேவ் பண்ற… மொத்தமா கிறுக்கு பிடிச்சு தொலைஞ்சுருச்சா உனக்கு!” முணுமுணுத்த ஆதியின் பேச்சு காற்றோடு போனது.

“என்கூட வாய் பேசுற உன் ரோசத்தை, படிப்பை முடிச்சு, என்னை விட்டுப் விலகிப் போறறதுல காமி! நீ படிப்பை முடிச்சு செட்டில் ஆகுற வரைக்கும் மட்டுமே உன்னை, நான் கேர் பண்ணுவேன். பதிலுக்கு பதில் பேசமா ஒழுங்கா என்கூட வரப் பாரு!” பட்டென்று முகத்தில் அடித்தாற்போல் பேசி, அழைப்பினைத் துண்டித்தான் ஆனந்தன்.

‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!’ என்ற ரீதியில் மட்டுமே அவனது செயல்கள் இருந்தது. அவனைத் தடுத்து நிறுத்தவோ கேள்வி கேட்கவோ யாரும் முன்வரவில்லை.

அப்படி வந்தாலும் அவர்களுக்கு தோல்வியே கிட்டும் என்பதே ஊரறிந்த ரகசியமாக இருக்க, தன்போக்கில் காரியங்களை நடத்திக் கொண்டான் ஆனந்தன்.

அவன் சொன்னபடியே வேண்டா வெறுப்பாக வேறு வழியின்றி மனஷ்வினி படிப்பினை கையில் எடுக்க, நகுலேஷ் வெளிகாட்டிக் கொள்ளாத மகிழ்வுடன் கல்லூரிக்கு கிளம்பி விட்டான்.

வீட்டுச் சீரமைப்பை முன்னிலைப்படுத்தியே தேஜஸ்வினி ராஜசேகருடன் ரூபம் மாளிகையில் வந்து சேர, இரண்டு ஜோடிகளின் வாழ்க்கைப் பயணமும் இரண்டாம் முறையாக வெகுஜோராகத் தொடங்கியது. இனி..?

***