நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ… 28

வஞ்சனை இல்லாமல் வாய் பேசியவர்கள் இரவு உணவை முடித்துக் கொண்டு தங்களது தனித்தனி அறைக்குள் அடைந்து கொண்டார்கள். நகுலேஷ், மனஷ்வினியின் அறைக்களுக்கு எதிர்புறம் ஆனந்தனின் அறை.

தலைவலியின் வீரியம் பின்னிரவில் காய்ச்சலாக மாறியிருந்தது. அவசரத்திற்கு பாவமில்லை என்று மருந்து, மாத்திரைக்கென மனஷ்வினியின் அறைக்கதவை தட்டி விட்டான் ஆனந்தன்.

இரவு மணி பனிரெண்டைத் தாண்டிய நேரம், அறைக்கதவை திறந்த மனு, எதிரில் நின்றிருந்தவனை சற்றே மிரட்சியுடன் பார்த்து முகம் திருப்பிக் கொண்டாள். அவள் இன்னும் உறங்காமல் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.

“என்ன இந்த நேரத்துல?” முகம் பார்க்காமல் கேட்டதில் இவனுக்குள் சுருக்கென்றது.

‘இவள் அறையை நான் தட்டக்கூடாதா!’ ஆணாக, கணவனாக மனம் முரண்டு பிடிக்க, தனது அவதியை மறந்து வம்பில் இறங்கி விட்டான்.

“நீ தண்ணி குடிச்சியா… படிச்சியா… கிழிச்சியான்னு கேக்க வந்தேன்!” எகத்தாளமாக கேட்டுவிட்டு அறைக்குள் எட்டிப் பார்த்தான்.

இவனது செயலில் பிடித்தமில்லாதவளாக சோர்வான பார்வையில் சுவர்க் கடிகாரத்தை ஏறிட்டாள் மனஷ்வினி. ‘வம்பு வளர்க்க வேறு நேரம் கிடைக்கவில்லையா?’ அவளின் பார்வை குற்றம் சாட்டியது.

“படிப்பு முடிச்சு உன்னை, உங்கப்பா கிட்ட ஒப்படைக்கும் போது நீ வறண்ட பாலைவனமா காய்ஞ்சு போயிருக்கக் கூடாது பாரு… அதுக்குதான் விசாரிக்கிறேன்!” நக்கலடித்தபடியே அவளை விலக்கிவிட்டு அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்து விட்டான்.

மனஷ்வினிக்கு அவன் வந்து கதவை தட்டிப் பேசியதே ஒருவித எரிச்சலை கொடுத்திருக்க, இப்பொழுது கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டதில் மனதிற்குள் ஏக கொதிப்பு!

“இப்ப இந்த வம்பு பேச்ச, உங்க அக்கறையா வேற நான் எடுத்துக்கணுமா?” எரிச்சலோடு மனு பதிலடி கொடுக்க, அவனது பார்வையோ அறையை சுற்றி வந்தது.

“உன் ரூம்ல ஒன்னு தேடி பாக்கிற மாதிரி இருக்கா?” எரிச்சலில் அங்கிருந்த அலமாரிகளை துழாவத் தொடங்கினான்.

அறை முழுவதும் புத்தகம், நோட்டு என பரப்பி கிடக்க, அங்கிருந்த டேபிளிலும் பாடப்புத்தகங்கள் இறைந்து கிடந்தது. இவன் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடப்பதற்கே அது பெரும் தடையாக இருக்க, அதற்கும் சேர்த்து கொட்டு வைத்தான்.

“என்னடி இது? ஒழுங்கா புக்ஸ் எல்லாம் அடுக்கி வச்சுக்க மாட்டியா!” இவன் கடுகடுத்து கேட்க, இவளுக்கும் அதே கடுப்பு அவன் மேல் வந்தது.

“இந்த நேரத்துல இத கேட்டு சண்டை போடணும்னு வேண்டுதலா! இங்கே வந்து என்ன உருட்டிட்டு இருக்கீங்க… நான் ரெகார்ட் கம்ப்ளீட் பண்ணனும். வெளியே போங்க!” மனு குரலை உயர்த்திய நேரத்தில் நகுல், அவளின் அறை வாசலில் வந்து நின்றான்.

“என்ன க்கா… யார் கூட பேசிட்டு இருக்கே… அதுவும் இந்த நேரத்துல!” என்றவனாக அறைக்குள் நுழைய, அங்கே ஆனந்தனை பார்த்து சட்டென்று தேங்கி நின்று விட்டான்.

அந்த இரவு நேரம், இருவருக்கும் இடையேயான உறவுமுறை என இரண்டும் சேர்ந்து இங்கிதம் தெரிந்த இளைஞனான தன்னை சிவபூஜை கரடியாகவே பாவித்து கொண்டான் நகுலேஷ்.

அறையில் இருந்த ஆனந்தனைப் பார்த்து, “சாரி… சாரி மாமா!” அவசரகதியில் சொன்னவன்,

“பேச்சு சத்தம் கேட்டுச்சு… நீ தூங்கலையோன்னு எட்டி பார்த்தேன். சாரி க்கா!” எனக்கூறி அதே வேகத்தில் கிளம்பியும் விட,

“டேய்… டேய்! சும்மா பேசிட்டு இருந்தோம். நில்லுடா!” இவள் தடுத்தும் நிற்காமல் தம்பி சென்று விட்டான்.

ஆனந்தன் இதை எல்லாம் உணரும் அளவிற்கு இல்லை. அலமாரிகளை குடைந்து விட்டு, மிதமிஞ்சிய சோர்வுடன் தளர்ந்து போய் கட்டிலில் மீண்டும் வந்து அமர்ந்து கொண்டான்.

“ம்ப்ச்… என்னென்ன நினைச்சானோ! எல்லாம் உங்களாலதான்!” இவள் கடிந்து கொள்ள,

“நான் என்ன பண்ணேன்?” புரியாமல் கேட்க,

“உங்க வம்புக்கும் அக்கறைக்கும் நேரம், காலம் பார்க்க பழகுங்க… சந்நியாசம் வாங்கினவனும் தப்பா நினைக்கிற அளவுக்கு நடந்துக்கறீங்க!” இவள் சொன்னதும் எரிச்சலில் கத்தத் தொடங்கினான்.

“உன் அனுமானத்துக்கு என்னால பதில் சொல்ல முடியாது. மனுசன் பேசுவானாடி உன்கூட?” என்றவன் சட்டென்று எழுந்து நிற்க,

“சத்தியமா நீங்க பேயே தான்… அதான், இந்நேரத்துக்கு வந்து சண்டைக்கு நிக்கிறீங்க!”

“யாரு நானா?”

“பின்ன நானா, உங்க ரூமுக்கு வந்து சண்டைக்கு நிக்கிறேன்?” இவள் எகிறி நிற்க,

“காய்ச்சலுக்கு மாத்திரை தேடி வந்தது தப்பா போச்சு!” இவன் கடுப்பில் கூறும் போதுதான் ஆனந்தனை நேருக்கு நேராக பார்த்தாள் மனஷ்வினி.

கண்கள் சிவந்து, உடம்பு அனலாய் கொதித்துக் கொண்டிருந்தது. தனக்குள் பதட்டம் கூடியவளாக,

“என்ன தேவைன்னு வாயை திறந்து சொல்றதுக்கென்ன?” என்றவளின் கைகள் தன்போக்கில் கழுத்து, நெற்றி என அவனது உடலின் வெப்பத்தை ஆராயத் தொடங்கியது.

“எப்படி இந்த டெம்ப்ரேச்சர்ல இவ்வளவு கேசுவலா இருக்கீங்க?” என்றவளாக விரைந்து ஏசியை அணைத்து விட்டு, ஜன்னல் கதவுகளை திறந்து வைத்தாள்.

அத்தியாவசிய மருந்துகளை எப்போதும் கைவசம் வைத்திருப்பது இவளது வழக்கம். அதிலும் மருத்துவம் படிப்பவள்… மாத்திரையோடு நோயாளிகளின் அவசரத் தேவைக்கென ஊசி மருந்துகளையும் தனது காலேஜ் பேக்- பேகில் எந்நேரமும் வைத்திருப்பாள்.

முதலில் காய்ச்சலோடு தூக்கத்திற்கான ஊசியை போட்டு முடித்தவள், சுடுதண்ணீர் கொண்டு வந்து மாத்திரையை முழுங்கச் செய்தாள்.

“உடம்பெல்லாம் ரெட்டீஸா இருக்கு… எங்கே போனீங்க? என்ன சாப்பிடீங்க?” அவனை ஆராய்ந்தபடி கேட்க,

“நீ போட்டு குடுத்த டீ குடிச்சேன்… உன் ரூமுக்கு வந்திருக்கேன். அதான் ஒத்துக்கல!” எனக் கூறும்போதே கண்கள் சொருக ஆரம்பிக்க, மருந்தின் வீரியத்தில் அங்கேயே தலையை சாய்த்துக் கொண்டான்.

“நக்கலைப் பாரு… என்னை வம்புக்கு இழுக்கலன்னா மூச்சு விடமுடியாது போல!” அவனுக்கு கேட்கும்படியாகக் கூறியே பல்லைக் கடிக்க,

“தானா வந்தா… நானா பொறுப்பு!” என்று இவன் வாய் குழறியது,

“இந்த ரைமிங்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!” என்றவளாக ஏதோ ஒரு அனுமானத்தில் பீபீ பார்க்க, இரத்த அழுத்தத்தின் அளவு சராசரியை விட அதிகமாகக் காண்பித்தது.

“எதுவும் டென்சனா? இல்ல… இவருக்கு எப்பவும் இப்படிதானா?” தனக்குள் முணுமுணுத்தவள் பல யோசனையுடன் ஹாலில் வந்து படுத்துக் கொண்டாள்.

‘அசதி வந்தா தன்னை மறந்து தூங்கறவருக்கு, இது யாரோட பெட்-ன்னு பாக்கிறதுக்கும் கஷ்டமாகிருச்சு போல… ஃபீவர்னு சொல்லியிருந்தா இவர் ரூமுக்கே போயி ஊசி போட்டுட்டு வந்துருக்கலாம். என் ரூமுக்கு வந்து, என் வேலையை கெடுத்து, தூக்கத்துக்கும் உலை வச்சிட்டாரு!” அடுக்கடுக்கான புலம்பலோடு மனஷ்வினி உறங்கிப் போனாள்.

மறுநாள் அவளுக்கு சோதனையாகவே விடிந்தது. வீட்டு வேலைக்காக வரும் இருவரும் தங்களின் அவசர காரணங்களுக்காக விடுப்பு சொல்லிவிட, காய்ச்சலில் இருப்பவனுக்கு இப்போது சமைத்து கொடுத்தே ஆகவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

‘என்ன சமைக்க… எப்படி சமைக்க?’ என யோசித்தபடியே மனு, தேஜஸ்வினிக்கு அழைக்க, ஆதித்யன் பேசினான்.

‘ஐயோ இவரா! நான் அக்கா கூட பேசின மாதிரிதான்.’ உள்ளுக்குள் நினைத்தபடி, “அக்காகிட்ட பேசணும் மாமா!” என்று கூற,

“அவ நல்லா தூங்குறா மனு… நேத்து ஃபுல்லா வாமிட் தலைசுத்தல்னு ரொம்ப கஷ்டபட்டுட்டா… நீ அப்புறமா பேசுறியா?”

“ஒஹ்… இட்ஸ் ஓகே மாமா… டேக் கேர். ஆனா நீங்க, அவளை ரொம்பவே புரடெக்ட் பண்றீங்க! அக்காவை ஃப்ரீயா விடுங்க… தானா ரிலாக்ஸ் ஆயிடுவா!” தனது மருத்துவ அறிவுரையை கூறி அழைப்பினை முடித்தாள்.

“வச்சா குடுமியா அங்கே ஒரு ஆளு… செரச்சா மொட்டையா இங்க ஒருஆளு!” மனுவின் துடுக்கான பேச்சினை கேட்டபடி அங்கே வந்து நின்றான் ஆனந்தன்.

“என்ன முணுமுணுப்பு?

“ஒன்னுமில்ல… இன்னைக்கு செர்வென்ட்ஸ் வரமாட்டாங்களாம்!”

“அதுக்கென்ன…. ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ண முடியாதா உன்னால?”

“அதெல்லாம் பண்ணிடலாம். ஆனா, உங்களுக்கு ஃபீவர்! வீட்டுச் சமையலா தரணும். இட்லி, கஞ்சி போட்டு கொடுக்கணும்.”

“தெரியுதுல்ல… போயி வேலைய ஆரம்பி!”

“என் பிரிபரேசன் எல்லாம் சுடுதண்ணி, நூடுல்ஸ், காபி மட்டும்தான்!”

“ரொம்ப விசேஷம்…. இதுக்கு விழா எடுப்போமா?” ஆனந்தன் நக்கலடித்த நேரத்தில் அங்கே வந்த நகுல்,

“மாமா… அக்காவுக்கு சமைக்க வராது!” திவ்யமாக அவளை வாரிவிட்டான்.

“டேய், உன்னை யாரும் இங்கே கூப்பிடல… வந்துட்டான் நரி வேலை பார்க்க…” மனு கடுகடுக்க, ஆண்கள் இருவரும் அர்த்தமாய் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“வாய் பேசுற அளவுக்கு கை பேசுதான்னு பாக்கணுமே நகுல்… இன்னைக்கு உன் அழகு அக்காவோட கைப்பக்குவத்தை டெஸ்ட் பண்ணுவோமா? சீக்கிரம் இட்லி கொண்டு வரச் சொல்லு, பசிக்குது!” ஆனந்தன் பொய்யாக பரபரக்க,

“பாவமேன்னு நைட் ட்ரீட்மெண்ட் கொடுத்தது தப்பா போச்சு! எல்லாம் என்னைச் சொல்லணும்.” என முகம் சுளித்தவள்,

“உங்க தலைவிதி, இன்னைக்கு என் கையில சாப்பிடணும்னு எழுதி வச்சிருக்கு. எனக்கு என்ன வருதோ அதை செஞ்சு வைக்கிறேன்… உள்ளே தள்ள வேண்டியது உங்க பொறுப்பு, எனக்கென்ன!” தோள்களை குலுக்கிக் கொண்டு சமைலயறைக்குள் புகுந்து கொண்டாள்.

தனக்குள் இருக்கும் கடுப்பில், எப்படி என்றெல்லாம் யோசிக்காமல் இட்லியும் தேங்காய் சட்னியும் அரைத்து மிளகாய்பொடி, நெய் என உணவு மேஜையில் பரப்பி வைத்தாள்.

இவள் அடுப்படியில் இருந்த இடைப்பட்ட நேரத்தில், “டேய் நரி… உன் மாமாக்கு டெம்பரேச்சர் பார்த்து, பீபீ செக் பண்ணு!” என கட்டளையும் பறக்க விட, அதை செய்து முடித்தான் நகுல்.

“அக்கா டெம்பரேச்சர் நார்மல். பட், பீபி 16௦ காட்டுது.” நகுல் கூற,

“சுகர் பாரு!” என்ற அடுத்த கட்டளையில் அதுவும் பார்க்கப்பட்டு நார்மல் என்ற திருப்தி கொண்டனர்.

“என்ன டென்சன்? எப்பவும் இப்படிதானா? பீபீ ரைய்ஸ் ஆகியிருக்கு.” அக்கறையோடு கேட்க,

“யாருக்கு தெரியும்?” விட்டேற்றியாக ஆனந்தன் பதில் கூறியதில் முறைத்தாள் மனு.

“ஒருநாள் கூத்துக்கு எவ்ளோ ஃபிலிம் காட்டுற நீ!”

“ஒரு வாரத்துக்கு உப்பும் கொழுப்பும் கம்மியா எடுத்துக்கோங்க… இல்லன்னா அவாய்ட் பண்ணுங்க!”

“எனக்கு அட்வைஸ் பண்றதை விட்டுட்டு இட்லி வைக்கிறியா!” கிண்டல் பேசியவனின் தட்டில் இட்லி பரிமாறப்பட்டது.

அதைப் பார்த்து நகுலேஷ் விழுந்து விழுந்து சிரிக்க, ஆனந்தன் இட்லித் தட்டை சுற்ற விட்டு வேடிக்கை பார்த்தான்.

“உலகத்துல இட்லியை இப்படி பிச்சு போட்டு, உப்புமாவா வேக வைச்சது உங்கக்காவா தான் டா இருக்கும்.” ஆனந்தன் கேலியில் இறங்க, நகுல் ஆமென்று ஹைஃபை கொடுத்தான்.

“விசுவாசம் இல்லாத பக்கீகளா… ஏதோ இந்த அளவுக்கு வந்துருக்குனு பாராட்டாம கேலியா பண்றீங்க? போங்க… இனி நான் கிட்சன் பக்கம் போகமாட்டேன்!” கோபத்துடன் சோபாவில் வந்து அமர்ந்து விட்டாள் மனு.

“ரோசம் வந்துருச்சாம் டா… சந்தடி சாக்குல தப்பிக்க பாக்கறா உன் டுபாக்கூர் அக்கா!”

“அஃப்கோர்ஸுங்க மாமா!” நகுல் பின்பாட்டு படிக்க,

“பயபுள்ளைங்க ரெண்டும் கண்டுபிடிச்சுடுச்சே!” அசட்டுத்தனமாய் முணுமுணுத்தாள் மனு.

“அக்கா குக்கர்ல இட்லி வச்சா ஆயில் தடவணும். அதை செஞ்சியா நீ?”

“அட ஆமா ல்ல… பாரேன், மறந்தே போயிட்டேன்!”

“ம்க்கும்… இருபத்திநாலு மணிநேரமும் இந்த குடும்பத்துக்கு வாக்கப்பட்ட நைட்டிங்கேலா மருந்தும் மாத்திரையுமா யோசிச்சா எது மனசுல நிக்கும்?” கேலியோடு ஆனந்தன் சிரித்து பேச, அவனைக் கூர்ந்து பார்த்தாள் மனஷ்வினி.

இவனது சிரித்த முகத்தை பார்ப்பதே மிகமிக அபூர்வம்! அப்படியிருக்க நேற்றிலிருந்து தானாகவே இவனது முகத்தில் அடிக்கடி எட்டிப் பார்க்கும் புன்னகையின் பின்னால் எதுவும் வில்லங்கம் இருக்குமோ என யோசித்து பார்த்த அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை.

‘ம்ப்ச்… இந்தாளு எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டு செய்ற மாதிரி, நானும் பைத்தியகாரியா யோசிக்க வேற செய்றேன்!’ மனதிற்குள் இவள் பேசிக் கொண்டு, வீட்டை சுத்தம் செய்த நேரத்தில், டிஃபன் ஆர்டர் செய்து அது வந்தும் சேர்ந்திருந்தது.

காலை உணவோடு மாத்திரையும் முழுங்கி விட்டு களைப்பில் ஆனந்தன் உறங்கச் சென்று விட, மனுவும் நகுலும் கல்லூரி செல்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவென தங்கள் அறைக்கு வந்தனர்.

அவளது அறையில் முன்தினம் ஆனந்தன் கொண்டுவந்த அவனது அலைபேசி இருக்க, அதை கொண்டுபோய் கொடுக்கும் எண்ணமிருந்தும் தவிர்த்தாள்.

‘தூங்கும்போது டிஸ்டர்ப் பண்ண வேணாம். அப்புறமா வந்து எடுத்துக்கட்டும்.’ தனக்குள் முடிவெடுத்துக் கொண்டவளாக அலைபேசியை அவளது அறையில் வைத்திருந்த நேரத்தில், ‘மிரு’ என்ற பெயர் தாங்கிய அழைப்பு ஒன்று ஆனந்தனின் அலைபேசிக்கு வந்து ஒய்ந்தது.

கல்லூரிக்கு செல்லும் அவசரமும், தொழில்ரீதியான பேச்சாக இருந்தால் என்ன பதில் சொல்வதென்று தெரியாத சூழ்நிலையை நினைத்தே அழைப்பினை ஏற்காமல் இருந்தாள் மனஷ்வினி.

அடுத்தடுத்து நிற்காமல் அழைப்பு வந்து கொண்டே இருக்க, ‘என்ன அவசரமோ!’ என நினைத்து அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தாள்.

இவள், “ஹலோ!” என்று சொல்லி முடிக்கும் முன்பே எதிர்புறம் அழைத்த குரல் பேசத் தொடங்கி இருந்தது.

“என்ன யோசனை பண்ணியிருக்க மாமா… எனக்கு எதிரா முடிவெடுத்துடாதே! என்னையும் என் பிள்ளையையும் நடுவீதியில நிக்க வைச்சுடாதே! அப்படி நடந்தா என் பிள்ளையை கொன்னுட்டு நானும் சூசைட் பண்ணிப்பேன்… இது சத்தியம்!” ஆக்ரோஷமும் அழுகையும் கலந்த குரலில் படபடப்புடன் பெண் ஒருத்தி பேசி முடிக்க, இன்னதென்று விளங்காத மனநிலையோடு கேட்டுக் கொண்டிருந்தாள் மனஷ்வினி.

“என்ன பதில் பேசாம இருக்க?” எதிர்ப்புறம் கேட்க, அப்போதுதான் நிகழ்விற்கு வந்து, ”யாரு நீங்க… என்ன விசயம்?” தயங்கியே கேட்டாள் மனு.

“நீ யாரு?” கேட்ட எதிர்தரப்பு பெண்ணும், அழுகையை நிறுத்திவிட்டு பேச்சினை தொடர்ந்தாள்.

“நான்… நான் மனு!”

“ஒஹ்… அவன் வொய்ஃபா! அவன்கிட்ட நான் சொன்னதை சொல்லி வை! நான் விளையாட்டுக்கு சொல்லலங்கிறதையும் அவனுக்கு எடுத்து சொல்லு! எப்பவும் இவன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க முடியாது.” அதட்டலுடன் கூற, இவளுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை.

“என்ன… என்ன சொன்னீங்க?” அந்த நேரத்தில் இவள் தடுமாற,

“சுத்தம்… உன்கிட்ட என் விசயத்தை, மாமா சொல்லவே இல்லையா… இவனை என்னதான் பண்றது?” என பல்லைக் கடித்து,

“அவன் வந்தா என்னை பேசச் சொல்லு… மறந்திடாதே!” என்ற கட்டளையோடு அழைப்பினை துண்டித்தாள் அந்த மிரு! சகட்டுமேனிக்கு இருவரையும் ஒருமையில் பேசி தாக்கியிருந்தாள்.

‘யாரிவள்? மாமா என்கிறாள்… நல்ல முடிவினை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வாளாம்… அதுவும் குழந்தையோடு! யாராக இருக்கும்? என்ன காரணம்?’ மனஷ்வினி பலமுறை தனக்குள் கேட்டுக் கொண்டதில் அவளுக்கு குழப்பமே மிஞ்சியது.

அந்த நேரத்தில் நகுலேஷ் வந்து அழைக்க, தீராத குழப்பத்தோடு அவனோடு கல்லூரிக்கு புறப்பட்டாள் மனஷ்வினி.

“என்னக்கா… அமைதியா வர்ற?” காருக்குள் செல்லும்போது அக்காவின் அமைதியைப் பார்த்து தம்பி கேட்க, ‘ஒன்றுமில்லை.’ என தட்டிக் கழித்தாள்.

‘ஆனந்தனின் மேல் மரியாதை வைத்திருப்பவன். விசயத்தை எடுத்து சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வானோ? சட்டென்று தவறான கண்ணோட்டத்தில் நிறுத்திப் பார்க்கவும் வாய்ப்புகள் இருக்கிறதே!’ என மெளனம் காத்தாள்.

‘மாலையில் வந்ததும் பேசிக் கொள்வோம். அப்படியொன்றும் பெரிய பிரச்சனையாக இருக்காது.’ தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டவளின் மனதில், தன் கைப்பொருளை எப்படியாகினும் காத்துக் கொள்ளும் வேகம் வந்திருந்தது.

‘மீண்டும் ஒரு பிரச்சனையா? எதையாவது பிடித்து நொண்டிக் கொண்டிருக்கும் பெருச்சாளியோ இவன்!’ என்ற அதீத சலிப்பும் தன்னால் பெண்ணின் மனதில் ஏற்பட்டது.

இவளது கேள்விகளுக்கு விடையளித்து குழப்பத்தை தீர்ப்பானா ஆனந்தன்!!!

***