நான் பிழை… நீ மழலை… 29

நான்… நீ…29

உள்ளத்தின் குழப்பச் சலனத்தை ஒதுக்கி வைத்து கல்லூரிக்கு சென்ற மனஷ்வினி, திரும்பி வரும் பொழுதே மிருவைப் பற்றி ஆனந்தனிடம் கேட்டுவிட வேண்டுமென்று முடிவெடுத்தே வீட்டிற்கு வந்தாள்.

‘இவள் நினைத்தால் போதுமா? கேள்விக்கு பதில் சொல்லி விடுவானா அவன்!’ சந்தேகத்துடன் வீட்டை அடைந்தவளின் கால்கள் நேராக ஆனந்தனின் அலுவலக அறையில் சென்று நின்றது.

ஆர்வக்கோளாறில் அனுமதி கேட்காமல் அலுவலக அறைக்குள் நுழைய, சட்டென்று அவனது சீற்றப் பார்வையை எதிர்கொண்டாள்.

‘போச்சு… போச்சு! பெர்மிஷன் கேட்காம வந்துட்டேன்னு குத்தி கொதறி எடுக்கப் போறான். வரவர இவனை நினைச்சாலே என் அறிவு மழுங்கிப் போயிடுது. இது என்ன மாதிரியான வியாதியோ?’ தனக்குள் புலம்பிக் கொண்டு அமைதியாக நின்றவளை, ஆனந்தனின் எதிர்புறம் அமர்ந்திருந்தவன் திரும்பி பார்த்தான்.

கதவைத் திறந்த சத்தத்தில் அந்த புதியவன் திரும்பி பார்க்க, அவளோ எந்தவிதப் பேச்சுமின்றி ஆனந்தனை பார்த்து நிற்க, புதியவனின் பார்வை அவளை சுவாரசியமாக எடைபோட ஆரம்பித்தது.

ஆறடியில் கம்பீரமான தோற்றம், வசீகரிக்கும் முகம் என சர்வ லட்சணத்தோடு அமர்ந்திருந்தான் அந்த புதியவன். ஆனால் இவனது அலசல் பார்வையை கண்டுகொள்ளாமல் கணவனை மட்டுமே பார்த்து நின்றாள் மனு.

கருப்பு குர்தியும் க்ரே ஜீன்சும் கச்சிதமாக தழுவி இருக்க, கையில் டாக்டர் கோட், பேக்-பாக் சகிதம் அப்பாவியாக நின்றவளை ஆற அமரவே அந்த புதியவன் ரசிக்கத் தொடங்க, ஆனந்தனின் பார்வை தீயை உமிழ்ந்தது.

இவனது பார்வையை தடை செய்ய வேண்டும், அதோடு அவளுக்கும் இவன் யாரென்று உணர்த்திடவும் வேண்டுமென்று நினைத்தவன்,

“வா மனு… மீட் மிஸ்டர்.மிரு!” தெளிவான எளிய வார்த்தையில் கூறி புதியவனைக் கைகாட்ட, அவனின் பார்வையோ பலத்த அடி வாங்கியது.

அவளுக்குமே, ‘மிஸ்டர் மிரு.’ என்று அழுத்திக் கூறியதில் கண்ணுக்கு தெரியாத அவஸ்தை தீர்ந்து போன உணர்வு!

மனைவியின் பெயரோடு ஒருவன், வயதுப் பெண்ணிடம் அறிமுகம் செய்யப்பட்டால், அவனது முகம் இஞ்சி தின்ற குரங்கின் முகத்தை விட அஷ்டகோணலாகிப் போகும்.

அந்த அழகிய கோண மூஞ்சியைப் பார்த்து, ‘கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்!’ என உரிமை கொண்டாடிக் கொள்ள மனைவியும் அருகில் இல்லாமல் போனால் அவன் நிலைமை அந்தோ பரிதாபம் தான்!

அந்தப் புதியவனின் முகமும் அவ்வண்ணமே கோணிக் குறுகிப் போய்விட, “மீட் மை வொய்ஃப் மனஷ்வினி!” ஆனந்தனும் அவனிடத்தில் அறிமுகப்படுத்த,

“வெல்கம் அண்ணா!” மனுவின் புன்னைகத்த வரவேற்பில் புதியவனுக்கு தண்ணீர் குடிக்காமல் புரையேறிப் போனது.

இப்பொழுது அந்த மிரு யாரென்று அறிந்து கொள்ளும் ஆர்வம் மனுவிற்கு பாதிக்கு பாதியாக குறைந்தே போயிற்று! தனது குழப்பத்தை கட்டுக்குள் வைத்து விட்டு,

“மார்னிங் மிரு ஃபோன் பண்ணாங்க…” தான் வந்த காரணத்தை கூறி, மேற்கொண்டு பேச முயன்றவளை இடைவெட்டினான் ஆனந்தன்.

“ஐ க்நோ மனு… அது விசயமாதான் ஶ்ரீராம்கிட்ட பேசிட்டு இருக்கேன்!” எதிரில் அமர்ந்திருந்த புதியவனை கைகாட்டி விட்டு,

“நீ மேலே போ!” உத்தரவாகக் கூற, நொடியில் இவளுக்குள் சினமேறிப் போனது.

‘இவன் எதிரில் பேசவும் கூடாதா… இது என்ன மாதிரியான அரஜாகம்!’ உள்ளுக்குள் கொதித்துப் போனவளாக அங்கேயே நிற்க, தனது கண்டிப்பான பார்வையால், ‘மேலே செல்.’ என மீண்டும் உத்தரவிட்டு அவளை அவ்விடத்தில் இருந்தே அனுப்பி வைத்தான் ஆனந்தன். அதுவரையிலும் வந்திருந்தவன் பெண்ணின் மீதான தனது ஆராய்ச்சியை விட்ட பாடில்லை!

“வெல் மிஸ்டர்.ஸ்ரீராம்!” டேபிளைத் தட்டி புதியவனை திசைதிருப்ப, இறுகிய முகத்துடன் ஆனந்தனைப் பார்த்தான் ஸ்ரீராம்.

“கோர்ட்டு கேஸுன்னு பிரச்சனையை தூக்கி சுமக்கிறது எனக்கு புதுசு இல்ல… பத்தோட பதினொன்னா இதையும் பேஸ் பண்ண ரெடியா இருக்கேன். உங்களுக்கு எப்படின்னு நீங்கதான் முடிவு பண்ணிக்கணும். எனக்கு ஃபேவர் பண்ற உங்க முடிவுலதான் உங்களுக்கு புராஃபிட் கிடைக்கும். அதர்வைஸ் உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்னு பல சிக்கலை உண்டு பண்ணிடுவேன். யோசனை பண்ணிட்டு வாங்க!” என்றவன், ஸ்ரீராமை, ‘இடத்தை காலி பண்ணு!’ என சொல்லாமல் விரட்டி அடித்தான்.

அவனது பேச்சினை உள்வாங்கிக் கொண்டிருந்த ஸ்ரீராமிற்கும் உள்ளுக்குள் ஏதோதோ யோசனைகள் வரிசைகட்டி நிற்க, “பாய் ஆனந்த்! வீ வில் மீட் அகெய்ன்!” பெருமூச்சுடன் கைகுலுக்கி விட்டு விடைபெற்றான்.

அவன் சென்ற அரைமணி நேரத்தில் மாடிக்கு சென்ற ஆனந்தன், முன்தினம் போலவே மனுவின் அறைக்கதவினை தட்ட, அவள் அழகான சல்வாரில் புத்துணர்ச்சியாக இருந்தாள்.

“ஊர் சுத்த கிளம்பிட்ட போல… இன்னிக்கு கிறுக்கற வேலை இல்லையா உனக்கு?” நக்கலாக கேட்க,

“ஆமா… என்னை கூட்டிட்டு போக டிரைவரை தேடிட்டு இருக்கேன்… டுயூட்டி இன்சார்ஜ் எடுக்கறீங்களா!” வழக்கம்போல நக்கல், நையாண்டி பேச்சுக்களே அவர்களுக்குள் களைகட்டியது.

“அதுக்குத்தான் ஒட்டு மொத்தமா பட்டா எடுத்திருக்கானே, உன் தம்பி… அவன் எங்கே?”

“வெளியே போயிட்டான். நான் ஃப்ரண்ட வரச் சொல்லியிருக்கேன். அவகூட போக பிளான்.”

“எங்கே போற?”

“ஃப்ரண்டுக்கு பர்த்டே செலிபிரேசன். ஃபன் ரிபப்ளிக் மாலுக்கு போறோம். போகாதேன்னு தடுக்ககூடாது!” அவன் தடைபோடுவதற்கே இவள் தடை விதிக்க,

“விவரம்தான்!” இவன் மெச்சிக் கொண்டான்.

“எப்படி… அங்கே போயும் என்னை பார், என் அழகைப் பாருன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நின்னியே… அப்படி நிக்கப் போறியா?” இளப்பமாக கேட்க, சட்டென்று முறைத்தாள்.

“ஒவ்வொருத்தன் பார்வைக்கும் தயங்கி நின்னுட்டு இருந்தா மூச்சுகூட விட முடியாது.”

“அடிங்க… ஒருத்தன் பார்வையை பார்த்து சுதாரிக்க மாட்டியா?”

“நான் நின்னது உங்களுக்கு கால் வலிக்குதோ!”

“மொத்தமும் எரியுதுடி!”

“காவலுக்கு கடுவன்பூனை இருக்கும்போது நான் எதுக்கு சுதாரிக்கணும்.” துடுக்காய் பேசி நாக்கை கடித்துக் கொள்ள, கோபமுற்ற ஆனந்தன்,

“நான் கடுவன்பூனையா?” பொய்க் கடுப்பில் கேட்டு சன்னமாக புன்னகைத்தான்.

“வாவ்… மச்சான்! இப்ப எல்லாம் அடிக்கடி சாக் அடிக்கிற மாதிரி சிரிச்சு வைக்கிறீங்க… எனிதிங் ஸ்பெஷல்?”

“என் சம்மந்தப்பட்ட எல்லாமே ஸ்பெஷல் தான்… இன்க்ளுடிங் யூ!” விளையாட்டுப் பேச்சில் அவள் நெற்றியில் விரலை வைத்தவன் கோடிழுத்து உதட்டில் வந்து நிறுத்த,

“பேட் பாய்!” என்று பழிப்புகாட்டி கையைத் தட்டிவிட்டாள்.

“ஆஹான்… இப்ப நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தத்தெடுத்தியே உன் திடீர் அண்ணா… அவன்தான்டி பேட்.. பேட் பாய்!”

“ஒஹ்… அதான், அந்த மிரு காலையில அப்படி பேசினாங்களா?” இறங்கிய குரலில் கேட்டு அவன் முகம் பார்க்க, இறுக்கம் கொண்டான் ஆனந்தன்.

“என்ன? பொண்டாட்டியா கிராஸ் இன்வெஸ்டிகேசன் ஸ்டார்ட் பண்றியா!” வழக்கமான குத்தல்மொழி அவனிடத்தில்!

“அப்படி கேக்கணும்னா இவர் யாருன்னு ஸ்ரீராம் இருக்கறப்பவே நான் கேட்டு இருக்கணும். ஆனா, உங்க நல்லதுக்கு மட்டுமே யோசிச்சு பேசுறதால இப்ப கேட்டேன். அவங்க என்ன டிமாண்ட் பண்றாங்களோ அதுக்கு ஒத்துக்கோங்க ஆனந்த்… வீணா பிரச்சனை வேணாம்.” அமைதியாகக் கூற, அவளிடமே வெடித்தான்.

“திமிர்பிடிச்ச கழுதை… பேர் சொல்லியா கூப்பிடுற!” அவன் பேச்சினை திசைதிருப்பி விட,

“அதானே… என் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நீங்க பதில் சொல்லிட்டா, இந்த உலகம் அழிஞ்சிடாது!” சலித்துக் கொண்டவளாக முகம் சுருக்க, அந்த நேரம் அவளது தோழியும் கீழே வரச் சொல்லி அழைத்து விட்டாள்.

“பத்திரமா போயிட்டு வா… விளையாட்டுக்கு கூட தனியா இருக்கக் கூடாது செல்லாயி!” எச்சரித்தே அனுப்பி வைத்தான்.

“ஆமா, இவர் மட்டும் எப்பவும் என்னை கிண்டலடிப்பாராம்… நாங்க செய்யக் கூடாதாம்!” முணுமுணுப்போடு கிளம்பி விட்டாள் மனு.

ஸ்ரீராம் கிளம்பும்போது அவனது பார்வையை வெகு கவனமாய் படித்திருந்தான் ஆனந்தன். ஏதோ சரியில்லை என்பது போலத் தோன்ற, நகுலிற்கு அழைத்தான்.

“உங்க அக்கா மாலுக்கு போயிருக்கா டா… அப்படியே கூட்டிட்டு வர்றியா?”

“இல்ல மாமா… எனக்கு லேட் ஆகும்.” ஏதோதோ காரணம் கூறி அவன் தவிர்த்து விட, மனம் கேளாமல் இவனே மனைவியின் பின்னோடு புறப்பட்டுச் சென்றான்.

இவன் அங்கே சென்றடைந்த நேரத்தில் தோழிகளோடு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தன்னை மறந்து லயித்திருந்தாள் மனஷ்வினி. எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் நேரம் கடந்து கொண்டிருந்தது.

சற்று இடைவெளி விட்டு தனியாக ஒரு டேபிள் பிடித்து ஆனந்தனும் அலைபேசியை பார்ப்பதைப் போல அவளை கண்காணிப்பதற்கு அமர்ந்து விட்டான்.

கொண்டாட்டங்கள் முடிந்து கேக், கிரீமை துடைத்து சுத்தபடுத்திக் கொள்ள, இவள் ரெஸ்ட்ரூம் செல்லும் பாதையில் வழி மறித்து நின்றான் ஸ்ரீராம்.

“ஹாய் மனு!” என்றபடி அவன் திடீரென்று வந்து நிற்க, கண்கள் தெறித்து விழும் அளவிற்கு அதிர்ச்சியில் உறைந்து விட்டாள் மனு.

“ஆக்சுவலி உன்னை நாளைக்கு காலேஜுல வந்து எப்படி மீட் பண்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன். காட் கிரேஸ்… நீ வெளியே புறப்பட்டதும் உன் பின்னாடியே வந்துட்டேன்!” இலகுவாகக் கூறி தோள்களை குலுக்க, இவளின் மனமெங்கும் பயம் பிடித்துக் கொண்டது.

“என்னை எதுக்காக பார்க்கணும் ண்ணா!” சுதாரித்துக் கொண்டு மனு பேச,

“டோன்ட் கால் மீ அண்ணா… நான் உனக்கு என்ன ரிலேஷன்னு தெரியுமா? ஆனந்த் சொன்னானா?” கேள்விகளை அடுக்க இவளின் விழித்தெறிப்பு குறையவில்லை.

“எனக்கு தேவையில்லாத விஷயத்தை எப்பவும் கேட்டுத் தெரிஞ்சுக்க மாட்டேன்!” கடுப்பாக கூற, ‘விட்டுவிடுவேனா!’ என நந்தியாக நின்றான் ஸ்ரீராம்.

“ஆனந்தனை விட பெட்டரா நீ என்னை கன்சிடர் பண்ணலாம். அந்த நொண்டிப் பயலுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா!” அவனது பார்வை மேலிருந்து கீழாக அவளை எடைபோட,

“ராஸ்கல்… செருப்பு பிஞ்சிடும், வார்த்தையை அளந்து பேசு!” என வெகுண்டவளின் மனம், ‘நிலைமை சரியில்லை.’ என்று எச்சரிக்க, விருட்டென்று அங்கிருந்து செல்லத் திரும்பியவள் பின்னோடு நின்றிருந்த ஆனந்தனின் மீது இடித்துக் கொண்டாள்.

‘யாரை இடித்தோம்?’ என்று அதிர்ந்து பார்க்க, அங்கே ஆனந்தன் நின்றதில் உள்ளுக்குள் ஏக நிம்மதி!

‘இப்ப புரியுதா எதுக்கு உன்னை வெளியே அனுப்புறதில்லன்னு…’ என அவனது பார்வை அவளைக் கண்டிக்க, அவன் தோளினைப் பற்றிக் கொண்டு, முதுகோடு ஒட்டி நின்று கொண்டாள் மனு.

“சீக்கிரம் இங்கே இருந்து போயிடலாம், ப்ளீஸ்… பிரச்சனை பண்ணாதீங்க!” மெதுவான குரலில் கெஞ்ச, பெருமூச்சு விட்டான் ஆனந்தன்.

“இவளை டார்கெட் பண்ணுன்னு ஏதோ ஒரு மடையன் சொன்னா… உனக்கு எங்கே போச்சு புத்தி? படிச்சவன் மாதிரியா நடந்துக்கற… உன் பொண்டாட்டி கிட்ட சொன்னா உன் நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சியா!

அப்பவும் இப்பவும் இந்த நொண்டிப் பய மனசு வைக்காம உன் வாழ்க்கை விடியாதுடா! இவளை டிஸ்டர்ப் பண்றது இதுவே கடைசியா இருக்கட்டும்!” அடக்கப்பட்ட கோபத்தில் ஆனந்தன் வன்மமாகக் கூறி முடிக்க, பதில் பேச்சின்றி சென்று விட்டான் ஸ்ரீராம்.

உடலும் மனமும் நடுங்கியபடி நின்றவளை சகஜபடுத்தவென அங்கிருந்த டேபிளில் அமர வைக்க, அவளோ கிளிப்பிள்ளையாக அவனோடு வந்து ஒட்டிக் கொண்டாள்.

நிமிடங்கள் அமைதியாக கழிந்தது. மனு அழுகையில் கரையவில்லை… மாறாக கைகளும் குரலும் நடுங்கி அவளின் பதட்டத்தை அப்பட்டமாகக் காட்டியது. ஆறுதலாக அரவணைப்பாக அவளின் முதுகினைத் தட்டி ஆசுவாசப்படுத்தினான்.

“ரிலாக்ஸ் செல்லாயி!” சீண்டலுடன் அழைத்தவனின் கையை முடிந்த அளவிற்கு கிள்ளி தனது கோபத்தை தணித்துக் கொண்டாள்.

“ஷ்ஷ்… டாக்டர் ஸ்டுடென்ட், இப்படியா நகம் வளர்த்து வச்சுருப்ப!”

“பேசாதே டா பாவி… எப்ப பாரு டைம் பாமோட சுத்துற வில்லனாட்டம் ஆக்சன் குடுக்குற!” சிடுசிடுத்தவளை எழுப்பிவிட்டு,

“மிச்சத்தை போற வழியில பேசிக்கலாம், கிளம்பு!” என்றவன் காரில் அவளோடு வீட்டிற்கு புறப்பட்டான். அப்போதும் இவளின் பதட்டம் குறையவில்லை.

“இந்தளவுக்கு பயந்து போனியா என்ன? விட்டா அவனை சைட் அடிக்க நீயும் போட்டி போட்டுட்டு நின்ன மாதிரியில்ல அசையாம நின்னுட்டு இருந்த…” எப்போதும் போல சீண்டிப் பேச, மனுவின் தன்மானம் விழித்துக் கொண்டது.

“ம்க்கும்… நினைப்பு தான்! கடப்பாறை முழுங்கிய கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படி மச்சான் அடுத்தவனை சைட் அடிக்க முடியும்?”

“பரவால்ல அடிச்சிக்கோ… எப்படியும் என்னை விட்டு விலகிப் போனதுக்கப்புறம் நீ பொறுக்கி எடுக்க பிரயோசனப்படும்!” அவன் விளையாட்டாய் சொன்னதும் தலையில் பலமாக கொட்டினாள் மனு

“வாயை வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டியாடா…. எப்ப பாரு ஓட்டை வாயில உளறி கொட்டிட்டு இருக்க!”

“பயம் விட்டு போச்சு டி…. கருப்புப்பூனையாட்டம் உன் பின்னாடியே வந்து அடியும் திட்டும் வாங்கிட்டு இருக்கேன்னு கொஞ்சமாவது பாவம் பாக்கறியா? ஃபியூச்சர்ல நடக்கப்போறதை சொன்னா கை நீளுதா உனக்கு!” கோபத்துடன் கையை முறுக்கினான் ஆனந்தன்.

“கையை விடுங்க… நான் நிஜத்தை தான் சொல்றேன். என்னை பொறுத்த வரைக்கும் மேரேஜ் ஒன் வே டிராக்தான். போற பாதை எப்படி இருந்தாலும் நடந்தோ, உருண்டோ, ஓடியோ ஒரு இடத்துல ஸ்டடியா நின்னுடுவேன்… டிராக் மாத்திக்க மாட்டேன்! வாய் இருக்குன்னு ஓயாம இதையே பேசிட்டு இருக்காதீங்க!” கண்டிப்பு பாதி, கோபம் மீதியாக சொல்லி முடிக்க இவனது மனம் உள்ளுக்குள் ஆச்சரியப்பட்டு போனது.

“எந்த காலத்துல இருக்க? உன்னோட இந்த புண்ணாக்கு முடிவை மாத்திக்கோ… இல்லன்னா மாத்திக்க வைப்பேன்!”

“ஏன் இந்த பிடிவாதம்?”

“நீ எல்லாம் எனக்கு வொர்த் இல்லடி!”

“பார்ரா… உங்களுக்கு யுனிவெர்சல் க்வின் க்யூல நிக்கிறாங்களோ!”

“அடச்சீ… நான் அப்படி சொல்லல… உண்மையை சொல்லப்போனா, நீ நினைக்கிற அளவுக்கு குடும்பமா வாழுற தகுதி இல்லாதவன் நானு!” என்றவனின் குரல் என்றும் இல்லாத வகையில் உள்ளடங்கி ஒலித்தது.

அவனது பேச்சைக் கேட்டவளுக்கோ அவன் மீது சொல்லத் தெரியாத கரிசனம் வந்து ஒட்டிக் கொள்ள, ஆதுரமாக அவனது தோளை தட்டிக் கொடுத்தாள்.

“ம்ப்ச்… உங்களை நீங்களே ஜட்ஜ் பண்ணிக்க கூடாது மிஸ்டர்…” என இழுக்க, பார்வையால் கண்டித்தான்.

“யப்பா… ரோசம்தான்… பேர் சொல்லல, சரண்டர்!” கையை உயர்த்த, முகத்தை இயல்பாக்கினான்.

“ம்ப்ச்… விடு, நான் இப்படித்தான்!” விரக்தியாக கூறிய நேரத்தில் வீடும் வந்துவிட, அமைதியாக இறங்கி தனதறைக்குள் முடங்கிக் கொண்டான்.

உணவருந்தும் நேரம் நெருங்கியும் ஆனந்தன் வெளியில் வராமல் இருக்க, ‘இவனை இப்போது அழைத்தால் கோபத்தில் கத்துவானா அல்லது சாந்தமாக பதில் சொல்வானா?’ குழப்பத்திலேயே அவனது அறை வாசலில் வந்து நின்றாள் மனு.

“சாப்பிட வரலையா?” இவள் அழைத்தாலும் பதில் சொல்லாமல் கண்மூடி அமர்ந்திருந்தான்.

“ஆனந்த்… உங்களைதான்!”

வீம்புக்கென்றே பேர் சொல்லி அழைத்தாள். இதற்கு சண்டை போடும் சாக்கிட்டு பேசி விடமாட்டானா என்ற நப்பாசை அவளுக்குள்! ஏனோ இவன் அமைதியாக இருப்பதை பார்க்க அவளுக்கு சற்றும் பிடிக்கவில்லை.

“கடுகடுன்னு எதையாவது திட்டித் தொலைச்சா கூட எனக்கு நிம்மதியா பொழுது போகும்.” வெளிப்படையாகவே முணுமுணுத்து விட, அவளைப் பார்த்து மெல்லச் சிரித்தான் ஆனந்தன்.

“ஆக என்னை பொழுதுபோக்கு அம்சமாவே பாக்கறியே, தவிர என் மேல பயமில்லயா உனக்கு!”

“புதுசு புதுசா ரூட் போட்டு கோபப்படுற ஃபிகர் கிட்ட கிரஷ் இருக்கே ஒழிய, பயமெல்லாம் சேச்சே…” பாவனையோடு இவள் வம்பிழுத்ததில், தன்னை மறந்து சிரித்தான் ஆனந்தன்.

“இன்னைக்கு வேகமா படி ஏறி இறங்கினது ரொம்ப கால் வலிக்குது. அந்த ஆயில் அப்ளை பண்ணி விடுறியா?” வலியில் முகம் சுருக்கி கேட்க,

“அப்படியே மசாஜ் பண்ணி விடவா?”

“உனக்கு சிரமமா இருக்கும் மனு!”

“அரைமணி நேர வேலையில என்ன சிரமம் வந்துடப் போகுது!” என்றவள் அவனது இடது காலில் எண்ணெயை தடவி, மசாஜ் செய்ய ஆரம்பித்தாள்.

“உனக்கு இந்த புரோசீஜர் தெரியுமா?”

“ம்ம்… என் ஃபிரண்ட் பி.ஏ.எம்.எஸ் பண்றா… அவகிட்ட கொஞ்சநாள் முன்னாடி கேட்டு வைச்சேன்!” என்றவள் தனது வேலையில் கருத்தாக இருந்தாள்.

“எப்போ கேட்டே?”

“நம்ம மேரேஜ் முடிஞ்ச மறுநாள்… ஃபிஸியோக்கு ஆள் வந்துட்டு போனாருல்ல… அன்னைக்கு கேட்டேன்!”

“ஒஹ்… ஏதோ டாக்டரா இருந்து உருப்படியா ஒரு வேலை பாக்கற!” நமட்டுச் சிரிப்பில் சொல்ல, பொய்யாக முறைத்தாள்.

“வீட்டுல இருந்து ஒத்தடம் கொடுக்க திங்க்ஸ் எல்லாம் வரவச்சுருக்கலாமே!”

“இடம் சரிபட்டு வராதும்மா… அதுவுமில்லாம இந்த வேலைக்குன்னு ஒரு ஆள் தேடணும்!”

“எங்கேயும் தேடி ஓட வேணாம். டெய்லி நைட் நான் செய்றேன், நீங்க அரேன்ஜ் பண்ணுங்க!” என்றபடி மசாஜை முடிக்க அவனுக்கும் வலியில் அலட்டுவது குறைந்து போனது.

“கொஞ்சநேரம் கழிச்சு சாப்பாடு கொண்டு வர்றேன். இப்ப ரெஸ்ட் எடுங்க!” மனு கூற அமைதியாக சரியென்றான்.

“ம்ப்ச்… மிஸ்ஸிங் யுவர் செல்லாயி… வொய் மச்சான்? என்கிட்ட வம்பு பேசவாவது கொஞ்சம் வாயை திறங்களேன்!” இவள் கண்ணை சுருக்கி கூறிய விதத்தில், தனக்குள் மலர்ந்து போனான் ஆனந்தன்.

“நான் ஏன் இப்படி இருக்கேன்னு ஒரு தடவை கூட கேக்க மாட்டியா செல்லாயி?” அவள் மனம் போலவே சீண்டலை ஆரம்பித்தான் ஆனந்தன்.

“கேட்டா, பதில் வருமா?”

“நிச்சயமா வராது.”

“அதான், நானும் கேக்கல… தானா வெளியே வரும்போது தெரிஞ்சுக்கலாம்னு இருந்துட்டேன்!” வெகு எளிதாக முடித்தாள்.

“உங்க அக்கா ஒன்னும் சொல்லலையா?”

“ம்ம்… ஏதோ கதிரேசனுக்கு தத்துப் பிள்ளையா போனதால நீங்க இப்படி மாறிட்டீங்கன்னு சொன்னா… அதை மீறி அவளுக்கும் வேற எதுவும் தெரியல.”

“ஆதிக்கு கூட தெரியாது.” பட்டென்று கூற, அதிர்ந்து பார்த்தாள்

‘அந்தளவுக்கு மறைக்க அப்படியென்ன ரகசியம் இவனிடத்தில்!’ வாய்விட்டு கேட்கத் தோன்றியது. ஆனாலும் அடக்கிக் கொண்டாள்.

அவனது அமைதியான மோனநிலையே தனக்குள் எதையோ போட்டு உழட்டிக் கொண்டிருக்கிறான் என்பதும் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.

சிந்தையின் பிடியில் இருந்தவனின் முன்னுச்சியில் விளையாடிய கேசத்தை ஒதுக்கி வைத்து, இவள் தலையை வருடிக் கொடுக்க, அவனும் சுகமாக அனுமதித்தான்.

புதிதாக உள்ளத்தில் தோன்றிய உற்சாகமும், ஆசையாய் கிளர்ந்து விட்ட ஆர்வமும் சேர்ந்து மனுவின் தயக்கத்தை விட்டொழிக்க, தன்போக்கில் கேட்டே விட்டாள்.

“எனக்கு, இன்னைக்கு நடந்ததுக்கு மட்டும் பதில் சொல்லுங்க… அந்த ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? ஏன் என்னென்னமோ பேசிட்டு போறான்? நீங்களும் எதை எதையோ சொல்லி அவனை மிரட்டுறீங்க! எதுக்கு உங்களுக்கு இத்தனை எனிமிஸ் இருக்காங்க?” வரிசையாக கேள்விகளை அடுக்க, கோபத்தில் பல்லை கடித்தான்.

“சுயநலம் பிடிச்ச ஓநாய் அவன்… மத்த கேள்விகளுக்கு பதில் சொல்லனும்னா நான் மூர்க்கனா வளர்ந்த முறையை சொல்லணும். இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத கருப்பு பக்கம் அது!” உணர்ச்சியில் வெடித்தவனின் உடலெங்கும் வியர்க்கத் தொடங்கியது.

“இவ்ளோ கஷ்டப்பட வேண்டாம். மனசுல இருக்கிறதை இறக்கி வைச்சா, தானா ஆறுதல் கிடைக்கும்.” கனிவாக கூறியவளை வெறுமையாகப் பார்த்தான்.

“ஆறுதல் கிடைக்கறதுக்கு பதிலா, நீ என்னை வெறுத்துட்டா என்ன செய்ய?”

“அந்தளவுக்கு கொடூரமானவரா நீங்க? நம்ப முடியல… உண்மையான உறவும் நட்பும் இருக்கிற இடத்துல உங்க பாரத்தை இறக்கி வைக்கலாம். நமக்குள்ள ஒத்து வராத பல விஷயங்கள் இருக்கு. ஆனா, பொய் பித்தலாட்டம் இல்ல. நமக்கான நிஜங்கள் மட்டுமே நம்மை இப்ப வரைக்கும் கட்டி வைச்சிருக்கிறது உண்மையா இருந்தா நீங்க தயக்கமில்லாம சொல்வீங்க!” ஆழ்மனதினை ஊடுருவிச் செல்லும் அம்பாய் வார்த்தைகளை எய்து விட, அதன் தாக்கத்தில் முழுதாய் உடைந்து போனான் ஆனந்தன்.

மனதின் ஓலம் அழுகையாக மாற, அவளின் கரத்தில் தன் முகத்தை புதைத்து அரற்றத் தொடங்கினான்.

“வேணாம்… நான் எதுவும் கேக்கல, நார்மலா இருங்க ஆனந்த்!” என்றவள் அவசரமாய் தண்ணீரை அருந்த வைக்க, சற்றே அமைதியானான்.

“நான் எல்லாரையும் போல சாதாரணமான, எதார்த்தமான மனுஷன் இல்ல மனு… உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அடிமையான பாவப்பட்ட ஜென்மம் நான். என்னை நானே கட்டுப்படுத்திக்க தான் இந்த கோபம், அகங்காரம், திமிரான வேஷம் எல்லாம்…” என்றவன் தான் வளர்ந்த கதையை கூற ஆரம்பித்தான்.

****

திருப்பூர் அவினாசி வட்டத்தின் பரம்பரை பெருநிலக்கிழார் தணிகைவேல்… ஊரின் மிகப்பெரிய நிலச்சுவான்தாரர்களுள் ஒருவர். அவினாசி ரயிலடியில் தொடங்கி மேற்கு தொட்டு, கிழக்கில் பரவி, வடக்கில் குடை விரித்து தெற்கில் என்று எல்லையில்லாமல் விரிந்து கிடக்கும் சில ஆயிரம் ஏக்கர் நிலபுலன்களுக்கு சொந்தக்காரர் இந்த தணிகைவேல்!

திருப்பூர் நகரை ஒட்டியுள்ள கிராமங்களின் பெரும்பான்மையான நிலங்கள் இவரின் கைகளுக்குள் அடக்கம்.

“குத்துமதிப்பா எங்கே இருந்து எங்கே வரைக்கும்னு தெரியாதுங்க… எங்க முப்பாட்டன் எழுதி வச்சுட்டு போன கணக்கு நோட்டை வச்சுதான் பண்ணையம் பண்ணிட்டு வர்றோம்.” என்றவரின் பெருமைக்கு தப்பாமல் நிலமகள், அவருக்கு அள்ளிக்கொடுத்தாள்… வரமாய் வாரிக்கொடுத்தாள்… இன்று வரையிலும் கொடுத்துக் கொண்டே இருக்கிறாள்!

நோட்டுக் கணக்கில் உள்ளதை விட இரட்டிப்பாக தனது காலத்தில் வருவாயை பெருக்கி, அந்தஸ்தில், சொத்தில், கௌரவத்தில் எவருக்கும் கைக்கு எட்டாத உயரத்தில் வளர்ந்து நின்றார் தணிகைவேல்.

அந்த காலத்திலேயே நில உச்சவரம்பு சட்டத்தின் சாதக பாதங்களை அறிந்து வைத்து, நிலபுலன்களை தங்கள் வசம் தக்க வைத்துக் கொள்ள பல சாமர்த்தியமான காரியங்களை செய்வதில் மிகவும் கைதேர்ந்தவர். இவரைப் போல் அனேகம்பேர் சாமர்த்தியமாக செயல்பட, இந்த சட்டம் இந்தியாவில் தோல்வியடைந்தது.

நிலத்தை குத்தகைக்கு விடுபவர்களிடமே குறிப்பிட்ட காலம் வரையில் நிலத்தின் போக்கியத்தை ஆண்டு அனுபவித்து கொள் என தான பத்திரமாக ஊரறிய எழுதிக் கொடுத்து விடுவார் தணிகைவேல்.

இது அரசாங்கத்தின் பார்வைக்கு செல்லும்போது இவரின் கணக்கில் கணிசனமான அளவில் நில அளவைகளின் மதிப்பும் குறைந்து போயிருக்கும். இப்படி தானமாக கொடுத்ததில் பல நூறு ஏக்கர் நன்செய் புன்செய் பூமிகள் தணிகையின் தணிக்கைப் பிரிவில் செழிப்புற்றன.

காலக்கெடு முடியும் தருவாயில் ஆள் போக்கியத்தை கைமாற்றி விடுவார். இதன் மூலம் ஊருக்கெல்லாம் கொடை வள்ளலாக திகழ்ந்த தணிகையின் இலாபக்கணக்கு கருப்பு பக்கங்களால் நிரப்பட்டது.

தான நிலத்தின் போக்கியத்தில் பாதிக்கு பாதியாக இலாபத்தை வகையாகக் கறந்து விடுவார். அதிலும் முதலீடு தவிர்த்த இலாபக்கணக்கை பெற்றுக் கொள்வார். படிக்காத பாமர விவசாயிடம் இப்படி கேட்டு பெறுவதும் மிக எளிதாக இருந்தது.

அந்த வருமானம் தனது கஜானாவை நிரப்பாத பட்சத்தில் ஏதாவது புரளியை கிளப்பி விட்டு அந்த விவசாயியின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விடுவார் தணிகைவேல்.

இப்படி இவரின் அனைத்து பொல்லாப்புகளையும் நாடகத்தையும் மீறி நிலத்தை திருப்பி கொடுக்காமல் எய்தனர் சிலர். இலாபத்தை நேர்மையாக கொடுத்து லட்சாதிபதியாக உயர்ந்தனர் பலர்.

‘உன் தான சொத்தால் வருமானவரி, நிலவரி என்று பலதும் அரசாங்கத்திற்கு அழ வேண்டியிருக்கிறது. நீயும் வேண்டாம்… உன் நிலமும் வேண்டாம்.’ என முகத்தில் விட்டு எறிந்தவர்களும் உண்டு!

இவர் அசந்த நேரத்தில் சில நூறு ஏக்கர்கள் அரசாங்கத்தின் வசம் சென்று இவரை மோசடிப் பேர்வழியாக்கியது. அதிலிருந்து சற்றே சுதாரித்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் மட்டுமே நிலத்தை எழுதி வைக்க ஆரம்பித்தார்.

முதுமைக் காலத்தில் தன் வம்சத்தில் பிறக்கப் போகும் பேரன், கொள்ளுப் பேரனுக்கும் கூட சொத்தினை எழுதி வைத்தார் தணிகைவேல். தனது சொத்து தனது குடும்பத்தை விட்டு எங்கும் சென்று விடக்கூடாது என்று பேராசைப்பட்டவரின் எண்ணம் பல அவலங்களை அரங்கேற்றக் காத்திருந்தது.

***