நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ …3

 “வீட்டுக்கு பெரிய பொண்ணா, குடும்பத்துக்கு மூத்த மருமகளா பொறுப்பா நடந்துக்கோ! மனசுல இருக்குற ஆசைய சொல்றேன், அதிரசம் தட்டுறேன் பேர்வழின்னு எதையாவது உளறிக் கொட்டி வாங்கிக் கட்டிக்காதே!

அசட்டுத்தனமா நீ நடந்துகிட்டா, அந்த அசிங்கம் ரெண்டு குடும்பத்துக்கும் தான் வந்து சேரும். மனுவோட வாழ்க்கை நல்லா இருக்கிறதும் இப்ப உன் கையிலதான் இருக்கு!”

அம்மா சுலோச்சனாவின் அறிவுரைகள் அசரீரியாக உள்ளுக்குள் ஒலிக்க, உணர்வுகளைத் தொலைத்த பேதையாய் ஆதித்யனின் அறைக்குள் நுழைந்தாள் தேஜஸ்வினி.

அந்தப் பெரிய மாளிகையின் முதல்தளம் முழுவதும் ஆதியின் வசிப்பிடமாக இருந்தது. வரவேற்பறை, அலுவல் அறையைத் தாண்டி, அவசர உபயோகத்திற்கு ஏற்றவாறு சிறிய சமையலறையும் அங்கே அமைக்கப்பட்டிருந்தது.

அடிமேல் அடியெடுத்து வைப்பதற்கும் வலுவில்லாமல் அனைத்தையும் பார்த்தபடியே அன்னநடை நடந்து படுக்கையறைக்கு வந்தடைந்தாள் தேஜஸ்வினி.

இமாலய தயக்கம், இனம் புரியாத பதட்டத்தில் துணைக்கு யாருமின்றி அந்தப் பெரிய சயன அறைக்குள் நுழைந்து சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே யாரும் இல்லை.

எதிர்பார்த்து வந்தவன் இல்லாமல் போயிருக்க, தன்னையும் மீறிய ஆசுவாசப் பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது.

அந்தத் தளம் முழுவதும் மனதை மயக்கும் ரசனையுடன் மிக இயல்பான அழகோடு இருந்தது. திருமண இரவிற்கான பிரத்யேக அலங்காரங்கள் எதுவும் இல்லாமலேயே விஸ்தாரமான கட்டிலின் அழகு தேஜுவின் மனதைக் கொள்ளை கொண்டது.

அழகிய லாந்தர் விளக்குகள், அழகியல் ஓவியங்கள், வண்ணக் கலவைகளாக தொங்க விடப்பட்ட திரைச்சீலைகள் என அனைத்தின் நேர்த்தியிலும் பாவையின் மனது மயங்கத் தொடங்கியது. மொத்தத்தில் அழகியலை ரசிப்பவளின் ரசனைக்கேற்றவாறு இருந்தது அந்த வசிப்பறை.

கட்டிலின் வலதுபக்கச் சுவரில் ரதி மன்மதனின் ஓவியம் காமன்கலையுடன் மாட்டப்படிருக்க, அதைப் பார்த்தே வெட்கிப் போனாள் தேஜு.

‘ம்ம்… எல்லா விசயத்திலும் ரசனைக்கரார் போல… முகம் சுழிச்சு பாக்கற படத்தையும் அழகா செலக்ட் பண்ணி மாட்டியிருக்கார்!’ மனதிற்குள் மெச்சிக் கொண்டதும் கணவனின் முகம் கண் முன்வந்து கலக்கம் கொள்ள வைத்தது.

‘இத்தனை பெரியகுறை இருப்பது கூடத் தெரியாமல் திருமணத்திற்கு எப்படி சம்மதித்தேன்?’ சிந்தனைக் கேள்வி ஓட,

‘பார்த்து, யோசித்து சம்மதம் தெரிவிக்கும் அளவிற்கு உனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதா?’ அவளின் உள்மனம் கேட்ட கேள்வியில் தன்போக்கில் இல்லையென்று தலையசைத்து மறுத்தாள்.

இந்தத் திருமணமே அம்மாவின் தூண்டுதலில் நடந்த கட்டாயத் திருமணம். அதற்காக சொல்லப்பட்ட காரணங்களை நினைக்கும்போதே மனம் கசந்து கடினப்படத் தொடங்கியது.

தன்னிரக்கத்தில் உழன்று கொண்டு நின்ற நேரத்தில் மெல்லிய நிகோடின் வாசம் நாசியைத் தாக்க, வாசம் வந்த திசை நோக்கி நடந்தாள்.

படுக்கையறையை ஒட்டிய பால்கனியில் நிலா வெளிச்சத்தில் மெதுவாய் புகையை உள்ளிழுத்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.

மாடித் தோட்டத்தின் குளுமையில், மல்லிகை, முல்லைக் கொடிகளின் வாசத்தில் தன்னை மறந்து லயித்திருக்கிறான் என்பதை அவனது மோனநிலையே எடுத்துக் கூறியது.

மெல்லிய கொலுசொலியுடன் மெதுவாக அவனது பின்புறம் வந்து நின்ற சத்தத்தில் மனைவியின் புறம் திரும்பினான் ஆதி.

“வந்ததும் என்னை காணோம்னு தேடுனியா?” மென்னகையில் கனிவாகக் கேட்க, முதலில் ஆமென்றும், அடுத்த நொடியே இல்லையென்றும் தலையசைத்து பதில் கூறினாள்.

“இங்கே நாம ரெண்டு பேரு மட்டுந்தான் இருக்கோம். நீ என்கிட்டே பேசியே ஆகணும். இன்னும் என்ன தயக்கம் தேஜு?” வாஞ்சையும் கொஞ்சலுமாய் கூறியவன், இயல்பாய் அவளைத் தன்புறம் இழுத்து தோள் வளைவில் நிறுத்திக் கொள்ள, அவஸ்தையுடன் நெளியத் தொடங்கினாள் தேஜு.

“ரிலாக்ஸ் பண்ண நினைச்சேன்… நீ சீக்கிரமா வருவேன்னு தெரிஞ்சிருந்தா எடுத்திருக்க மாட்டேன்!” என கையில் உள்ள சிகரெட்டை காட்டிக் கூறியவன், தூர எறிந்துவிட்டு, ‘உஃப்… உஃப்!’ என வாயின் மூலம் காற்றை வெளியே விட்டான். 

“அவ்வளவா ஸ்மெல் வராது!” அவளைப் பார்த்தபடி ஆதி கூற,

“பேட் ஹாபிட் இது!” பிசிறடித்த குரலில் தலைகுனிந்து பேசினாள் தேஜு.

“என்னை நிமிர்ந்து பார்த்து பேசு தேஜுமா! அப்பதான் என்னாலயும் உன்கூட சகஜமா பேச முடியும்.” என்றவன் ஆள்காட்டி விரலால் அவளின் தாடையை உயர்த்த, மறுப்புடன் தலைகுனிந்தாள்.

“என் முகம் பார்த்து பேசாதவங்களை என் எதிரியா பார்ப்பேன். எப்படி வசதி?” கண்டிப்பான குரலில் அவன் தயங்காமல் கூறவும் சரலென்று நேருக்குநேராய் பார்த்தாள்.

ஆதியின் இடதுபக்க முகத்தை, தீயின் கரங்கள் தனது கோர நகங்களால் தீண்டியிருக்க, சாம்பல் படிமத்தின் எச்சங்களாய் அவற்றின் ஆழ்ந்த தழும்புகள் பதிந்து போயிருந்தது.

பார்த்ததும் மனதை வலிக்கச் செய்த கணவனின் முகம், அடுத்த நொடியே தனது ஆளுமைப் பார்வையால் கம்பீரமாக அவளை ஆட்கொண்டது.

ஆறடி ஆண்சிங்கம் தன்னருகே நின்று சிரிப்பதைப் போன்ற மாயை தோன்ற, இமை தட்டி விழித்தாள். ‘முகத் தழும்புகளை தவிர வேறன்ன குறை இவருக்கு?’ மனம் கணவனுக்கு வக்காலத்து வாங்கியதில், மனைவியின் மனத்தாங்கல் கானல் நீராகிப் போயிற்று.

“தட்ஸ் குட் கேர்ள்! இந்த பார்வைக்கு எவ்வளவு தவிப்பு, காத்திருப்பு தெரியுமா?” வெகுவாய் ஆதங்கப்பட்டவன், ஒற்றைப் பார்வையில் மனைவியின் உச்சி முதல் பாதம் வரை உரசிச் பார்த்து, தன்னுள் நிறைத்துக் கொண்டான்.

கூர்பார்வையும் காதல் மொழி பேச ஆசைப்பட்டு பல பாவனைகள் புரிய, அதற்கே தவித்து, பயந்து போனாள் தேஜு. மனைவியினிடத்தில் மறுபடியும் அதே திகில் பார்வையைக் கண்டவனின் மனம் மீண்டும் ஆயாசம் கொண்டது.

“புருசனை பயத்தோட பாக்குற உன் புத்திசாலித்தனத்தை நான் என்னனு சொல்றது?”

டீரீம் செய்யப்படட்ட தாடியை நீவி விட்டபடி, மீசையை முறுக்கிக்கொண்ட ஆதியின் அணைப்பு, மேலும் இறுக்கம் கொள்வதை தெளிவாக உணர்ந்தாள் தேஜு.

அவன் அதரங்கள் அவளிடம் தன் உரிமையை நிலைநாட்ட முயல்வதை உணர்ந்து அவள் விலக முயற்சிக்க, கருநாகம் போல தன்னுள் பிணைத்துக் கொண்டான் ஆதி. தனக்குள் ஏற்பட்ட புதுவகையான அழுத்தத்தில் தேஜுவிற்கு மூச்சு திணறியது.

“கொஞ்சநேரம் அசையாம என் தோள்லயே இரு தேஜுமா!”

“எதுக்கு?”

“இந்த அழகு தேவதை உனக்கே உனக்கான்னு நக்கல் பண்ற என் மனசாட்சி கிட்ட, பாருடா என் தேவதை பொண்ணை… என் மனசுல பதியம் போட்டு வச்சுருக்கேன்னு திமிரா மார்தட்டிச் சொல்லணும். சோ, டோன்ட் மூவ் அண்ட், ஸ்டே ஹியர் டார்லிங்!” என்றவன் அவளை மார்பில் சாய்த்துக் கொண்டு கண்களை மூடி ஏகாந்தமாய் அமைதி காத்தான்.

கணவனின் அணைப்பும் கதகதப்பும், தாபத்துடன் ஒலித்த அவனது ஆசைக்குரலும் மனைவிக்குள்ளும் பற்றிக் கொள்ள அவளுள் வெப்பச்சலனத்தின் துவக்கம்.

முக லட்சணத்தை கருத்தில் கொள்ளாமல், ‘இந்த ஆறடி உயர தங்கச்சிற்பம் தனக்கு மட்டுமே சொந்தம்!’ என்ற நினைவே அவளுக்கு பெருமிதத்தை கொடுக்க, வாகாய் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

இதுதான் வாய்ப்பென்று மனைவியின் இடையினில் அவன் சில்மிஷங்களைத் தொடர, அடிக்குரலில் கணவனை அடக்கப் பார்த்தாள்.

“ஷ்ஷு… சும்மா இருங்க ஆதி!”

“ஆஹான்… அப்புறம்!” என்றவன் முன்னிலும் அதிகமாய் சீண்டலைத் தொடர, முகம் சிவந்தாள், வெட்கத்தில் நெளிந்தாள் தேஜு!

கணவனின் மீதான பிடித்தமின்மை எங்கோ தூரப் போயிருந்தது. மனைவியின் விருப்பம் கேட்க வேண்டுமென்று சபதமிட்டவனின் உள்ளமும் உல்லாசப் பேச்சில் மறந்து போயிருந்தது.

“விடுங்க ஆதி… உங்க கூட நிறைய பேசணும்.”

“அத்தான்னு கூப்பிடு… விடுறேன்!”

“அய்ய… இதென்ன ஓல்டு ஸ்டைல்?” சிணுங்கலுடன் அவள் முகம் சுழிக்க, அந்த பாவனையில் உள்ளம் கனிந்தான்

“எங்கம்மா, எங்கப்பாவை அப்படித்தான் கூப்பிடுவாங்க தேஜுமா! சோ லவ்லி கப்பிள்ஸ்… இந்த வீடு முழுக்க அவங்களோட பேச்சும், அவங்களோட வாசமும் நடமாடணும்ன்னு ஆசைப்படுறேன். மை ரிக்குவஸ்ட், ஆர்டர் எப்படினாலும் எடுத்துக்கோ… பட், கால் மீ அத்தான்!” அன்பும் ஆசையும் கலந்து கூறியவனின் கண்கள் ஆர்வத்துடன் அவளைப் பார்த்தது.

“ப்ளீஸ்… ஒன்லி ஒன் டைம், மை டியர்!” அவன் கெஞ்சலில் இறங்க, அன்பின் மிகுதியில் பதறியே போனாள் தேஜு.

“இந்த சின்ன விசயத்துக்கு, இப்படி கெஞ்சுவீங்களா அத்தான்!” உரிமைக் கோபம் கொள்ள, அடுத்தநொடி மனைவியைக் கைகளில் ஏந்தியிருந்தான் ஆதித்யன். 

நொடிக்குநொடி அன்பில் அதிரடி காட்டும் கணவனின் செய்கையில் வாயடைத்து போனவள், அவனது கிளிப்பிள்ளையாகவே மாறிப்போனாள்.

கல்லோ புல்லோ அவன் கணவன். மஞ்சள் கயிறு மகிமையோ உறவின் உன்னதமோ, அனைத்து உரிமையையும் அவனுக்கு அள்ளிக் கொடுக்க, பேதையின் மனமும் பெண்மையும் தயாராகி இருந்தது.

கணவனின் கைகளில் சவாரி செய்தவள், அவன் கண்ஜாடையில் கதவை அடைத்து தாழிடுமாறு கூற, தயங்காது செய்தாள். அவ்வண்ணமே விளக்குகளும் அணைக்கப்பட, மின்மினி வெளிச்சத்தில் கட்டிலில் தனது கவிதையை கிடத்தினான் ஆதி.

“கொஞ்ச நேரம் பேசலாமே அத்தான்!” தயக்கமான கோரிக்கையும் பெண்ணவளுக்கு தயங்கியே வந்தது.

“காலம் முழுக்க நீ எனக்கு கீதோபதேசம் பண்ண நேரம் இருக்குடா! ஆனா, இப்ப மனுஷன் என்ன மூட்ல இருக்கான்னு புரிஞ்சுக்கோ தேஜுமா!” இருட்டில் அவளது பஞ்சு கன்னங்களில் அழுத்தமாய் முத்தமிட, கணவனது மீசையின் உறுத்தலில் ஆனந்தமாய் கிளர்ந்தாள் தேஜு.

“ரெண்டு நாளா என் மொகம் பார்க்காம, டென்சன் பண்ணிட்டியேடி!” என்றவனின் அடாவடியில் இனிய பரவசத்தில் மூழ்கத் தொடங்கினாள்.

தான் கட்டுப்படுத்திக் கொண்ட சீற்றத்துக்கெல்லாம் பதில் வாங்குபவனைப் போல், மனைவியை ஆக்கிரமிக்க, ஆனந்த வலியோடு அனுபவிக்கத் தொடங்கினாள் தேஜு. இருளோடு இரவும் சேர்ந்து கவி பாடிட, இனிய இல்லறம் தன் பொற்கரங்களால் தம்பதிகளை அணைத்துக் கொண்டது.

***

இரண்டாம் தளத்தில் சற்றே மிரட்சியுடன் வந்து சேர்ந்தாள் மனஷ்வினி. ‘உடற்குறையை பெரிதாக எண்ணாமல் நடமாடிக் கொள்ளவே இந்த ஏற்பாடு போல.’ என்று மாடிப்படி ஏறி வரும்போதே முடிவு செய்திருந்தாள்.

‘லிஃப்டில் செல்!’ என அருணாச்சலம் அறிவுறுத்தியதையும் மருத்துவ மாணவியாக தவிர்த்து மாடிப்படியேறி வந்தாள். முதல் தளத்தின் அமைப்பை போன்றே அங்கும் சகல வசதிகள் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருந்தன.

விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தில் சுவற்றின் எந்த பக்கம் திரும்பினாலும் விளையாட்டு வீரர்களின் படங்களும் அவர்களின் கையெழுத்திட்ட வாசகங்களும் புகைப்படங்களாக அந்த தளத்தையே நிறைத்துக் கொண்டிருந்தன.

கழிவிரக்கத்தில் அமிழ்ந்து விடாமல், உத்வேகத்துடன் நடமாட வேண்டுமென்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறான் என்பதை பார்த்து தெரிந்து கொண்ட நேரத்தில் கணவனை நினைந்து பெருமிதம் கொண்டாள் மனஷ்வினி.

“ம்ம்… நம்ம அல்ட்ரா டெக் மச்சான் இந்த நேரத்துக்கு சிடுசிடுப்பாரா இல்ல சிரிச்சு பேசுவாரா?’ மனக்கணக்கை போட்ட வண்ணமே படுக்கையறைக்குள் நுழைய, அயர்ந்து உறங்கி போயிருந்தான் ஆனந்தன்.

இரவு உடை இடதுகால் முட்டிக்கும் மேல் ஏற்றப்பட்டு தைலம் தடவி உருவி விடப்பட்டதின் தடம் பதிந்திருக்க, வலியின் வேதனையில் முகம் சுருக்கி அயர்ந்திருந்தான்.

அறையைச் சுற்றிலும் நோட்டமிட்டாள் மனஷ்வினி. ஒரு ஓரத்தில் ஆயுர்வேத மூலிகைப் பொடிகள் அடங்கிய முடிச்சு பை ஒன்று, ஒத்தடங்கள் கொடுத்ததன் பிசுபிசுப்புடன் காணப்பட்டது.

அங்கேயே கேஸ் ஸ்டவ் மற்றும் இரும்பாலான வாணலி ஒன்று, அதில் ஊற்றி சூடு செய்யும் மூலிகை எண்ணெய் என எல்லாமும் இருக்க மனம் மருத்துவராக கணக்கு போட்டுக் கொண்டது.

கணவனின் கால்களை ஆழ்ந்து நோக்கினாள். வலதுகால் ஆரோக்கியத்துடன் இருக்க, இடதுகால் பலமின்றி சற்றே மெலிந்து வளைந்து காணப்பட்டது. இதுவும் காலத்தோடு வந்த மாற்றம் என்றே அவளது மனம் கணித்துக் கொண்டது.

மெதுமெதுவாக கால்களின் பலமும் பொலிவும் முன்னேற்றம் காண எத்தனையோ வலிகளையும் வேதனைகளையும் அனுபவிக்க வேண்டுமென்று படித்து, பார்த்து அறிந்திருக்கிறாள்.

‘இவன் படும் அத்தனை இன்னல்களுக்கும் வடிகாலாகத் தான் அனைவரிடத்திலும் பொது இடமென்றும் பாராமல் எரிந்து விழுந்து, தன்னை சமன் செய்து கொள்கிறானோ!’ என்றும் கணவனின் செயலை நியாயப்படுத்திப் பார்த்தது.

‘எது எப்படியோ வாழ்வென்பது இவனோடு என்று முடிவெடுத்து வந்தாகி விட்டது. இன்னல்களை மட்டுமே இந்த வாழ்வு பரிசாக கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும்.

என் பொருட்டு அக்காவின் வாழ்வும் கேள்விக்குறியாகி விடக்கூடாது. எக்காரணத்தை முன்னிட்டும் பிறந்த வீட்டிற்கோ, அம்மாவின் முன்போ சென்று நிற்காமல் வாழ்ந்து காட்ட வேண்டும்.’ என்ற வைராக்கியத்துடன் கண்ணயர்ந்தாள் மனஷ்வினி.

அவள் விழிமொழியை படிக்கும் மாணவன் ஆனேன்

அவள் நடைமுறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன்

அவன் அருகினிலே கனல் மேல் பனித்துளி ஆனேன்

அவன் அணுகையிலே நீர் தொடும் தாமரை ஆனேன்

அவளோடிருக்கும் ஒருவித சிநேகிதன் ஆனேன்

அவளுக்கு பிடித்த ஒருவகை சேவகன் ஆனேன்.

ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே

அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே…

***