நான் பிழை… நீ மழலை… 31

நான்… நீ…31

சென்னையில் உள்ள பள்ளி மற்றும் விடுதியில் மகன்களை சேர்ப்பதற்கு பயணப்பட்ட செல்வராஜின் குடும்பம் சாலை விபத்தில் முழுதாய் நிலைகுலைந்து போனது. செல்வராஜும் ரூபாவதியும் விபத்து நடந்த இடத்திலேயே மரணத்தை தழுவினர்.

ஆதித்யனுக்கு கடுமையான முறையில் முகத்தில் தீப்புண் ஏற்பட்டு கண்பார்வையும் பறிபோனது. ஆனந்தனுக்கும் உடன் சென்ற அருணாச்சலத்திற்கும் கால்களில் பலமான எலும்பு முறிவு ஏற்பட்டு மிகுந்த சேதாரத்திற்கு உள்ளாகினர்.

தணிகைவேலின் மேற்பார்வையில் மூவருக்கும் மருத்துவமனையில் உயர்தர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நடந்த கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாத செல்வராஜின் வயதான பெற்றோர் துக்கம் தாளாமல் அடுத்தடுத்த வாரங்களில் அன்ன ஆகாரமின்றி மரணத்தை தழுவினர்.

அடி மேல் அடியாக துக்க சம்பவங்கள் நடந்தேறிட, தணிகைவேல் அந்த நேரத்தில் வெகுவாய் தளர்ந்து போனார். இந்த சந்தர்ப்பத்தில் கதிரேசன் மிகச் சாதுரியமாக நடந்து, செல்வராஜின் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டான்.

முழுதாய் இரண்டு மாதங்கள் கழித்தும் ஆதிக்கு தீவிர சிகிச்சை பலன் தராத காரணத்தால், அவனது கண்பார்வை மற்றும் தீப்புண் உயர் சிகிச்சைக்காக கேரளா ஆயூர்வேத சிகிச்சைக்கு அருணாச்சலத்துடன் அனுப்பி வைக்கப்பட்டான். அவருக்கும் காலில் ஏற்பட்ட பலமான எலும்புமுறிவு முற்றிலும் சரிவராத கால கட்டம் அது.

இதன் காரணமே தணிகைவேல் எந்த ஒரு விஷயத்தையும் ஆதியிடமும் அருணாச்சலத்திடமும் பகிர்ந்து கொள்வதை தவிர்த்தார். இந்த நிலையில் நிர்வாகத்தில் கதிரேசனின் கை ஓங்கிப் போனது.

மேற்சிகிச்சைக்கு அந்த நேரமே முயற்சி எடுத்திருந்தால் ஆனந்தனின் கால் எலும்புகள் பலப்பட்டு இரண்டு கால்களிலும் உண்டான ஏற்ற இறக்கங்களை சரி செய்து இருக்கலாம்.

வளரவேண்டிய சிறுவன், அவன் வளர வளர கால்களில் எலும்பும் வளர்ச்சியடைந்து அவனது நடையும் சரியாகி விடுமென கதிரேசனின் கவனிப்பில் இருந்த மருத்துவர் தணிகைவேலிடம் கதை கட்டிவிட, அதை முழுதாய் நம்பிக் கொண்டு ஆனந்தன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான்.

வலிகளும் வேதனைகளுமே அனுபவித்த சிறுவனுக்கு ஆதரவாக அருகில் இருக்க யாரும் முன்வரவில்லை. கட்டையை பிடித்துக் கொண்டு நடப்பதற்கு சொல்லிக் கொடுக்கவும் சரியான வழிகாட்டி இல்லாமல் ஏனோதானோவென்று நடக்கத் தொடங்கினான்.

விளைவு… கீழே விழுந்து பலமான அடிகள் காயங்கள் ஏற்பட்டன. அவனுக்கு ஆறுதல் கொடுக்கும் தாய்மடி தேவைப்பட்டது. அரவணைக்கும் வார்த்தைகள் தேடி ஏங்கிப் போனான். இயல்பிலேயே மூர்க்கமானவன் வலியும் வேதனையும் தந்த ரணத்தில் இன்னமும் ரௌத்திரமாகிப் போனான்.

இவனை கவனித்துக் கொள்ள தனியாக மருத்துவ செவிலியரை அமர்த்தியும் அவர்களுக்கும் கட்டுப்படாமல் விரட்டி அடித்தான். இதற்கு தீர்வு காண முடியாமல் ஆனந்தனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு வீட்டில் இருப்பவர்களின் மேல் பெரும் சுமையாக வந்து விழுந்தது.

இந்த நேரத்தில் வயோதிகத்தின் காரணமாக உறக்கத்திலேயே செல்லாயி பாட்டி இறப்பினை தழுவி இருந்தார். தன் நலம் நாடும் ஒரே ஜீவனும் இல்லாமல் போனதில் சிறுவனின் மனநிலை முற்றிலும் உடைந்து போனது.

நான்கு மாதத்தில் அடுத்தடுத்த மரணங்கள் பேரன்களின் உடல்நிலை பின்னடைவுகள் என அனைத்தும் புரட்டிப் போட்ட நேரத்தில், நிர்வாகத்தில் கதிரேசனின் கையாடலும் வெளிச்சத்திற்கு வந்து தணிகைவேலினை அழுத்திப் போட்டது.

ஆனந்தன், தனது மகன் எனவும் அவனது மேற்சிகிச்சைக்கு என காரணம் கூறியே, அவன் பெயரில் உள்ள சில சொத்துக்களை அடமானம் வைத்து பணத்தை கையாடல் செய்திருந்தான் கதிரேசன்.

ஆதாரத்துடன் தட்டிக் கேட்டு அவனை குடும்பத்தை விட்டே ஒதுக்கி வைக்க, கதிரேசன் அத்தனை சீக்கிரத்தில் அடங்கி விடவில்லை. வன்மம் வைத்தே மீண்டும் வேஷம் கட்டத் தொடங்கினான்.

தவறை உணர்ந்த நல்லவனாக மீண்டும் மாமனார் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தான். ‘ஆனந்தனை பார்த்துக் கொள்ளும் வேலையை மட்டுமே செய்கிறேன்!’ என நயவஞ்சகமாகப் பேசியே, அவனை தன் கண்பார்வையில் வைத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

வலியின் வேதனையில் யாரையும் பக்கத்தில் அண்ட விடாமல் இருக்கும் சிறுவனுக்கு யாரும் அறியாவண்ணம் போதை மருந்து கலந்த மாத்திரையை, வலி நிவாரணி என்று சொல்லி முழுங்க வைத்தே அவனை அமைதிப்படுத்தி விட, தணிகைவேல் கதிரேசனை முழுதாக நம்பத் தொடங்கினார்.

‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ நிலையில் குடும்பத்தினர் அனைவரும் பேதலித்து இருக்க, ஆனந்தன் அமைதியாக இருந்தாலே போதுமென்று கதிரேசனை சுதந்திரமாக உலாவ விட்டனர்.

“இப்படி மாத்திரை கொடுத்து படுக்க வச்சுட்டா அந்த பையன் வாழ்க்கை வீணா போயிடாது?” சிந்தாமணி விசயம் தெரிந்து கொண்டு ரகசியமாக கேட்க,

“மருமகன் வாழ்க்கை நாசமா போகப்போகுதேன்னு கவலபடுறியா? இந்த நொண்டியை கட்டிக்கிட்டு காலம் முழுக்க அழணும்ன்னு உன் பொண்ணுக்கு என்ன தலையெழுத்தா?” கதிரேசன், சிந்தாமணியின் வாயைக் கிண்ட ஆரம்பித்தான்.

“பின்ன என்ன செய்ய? இந்த மாமனார் பெரிசு அப்படிதானே உயில் எழுதி வச்சுருக்கு!”

“எழுதினா என்ன? வெளி உலகத்துக்கு இந்த நொண்டிய கல்யாணம் பண்ணி வைச்சுட்டு, உன் பொண்ணு யாரை ஆசைபடுறாளோ அவ கூட சுகமா வாழ வழி செஞ்சு கொடுப்பியா.. அதை விட்டுட்டு பெருசுக்கு பயந்துட்டு இருக்கியே!” கதிரேசன் பேசிய பாவனையே அத்தனை அருவெறுப்பை கொடுத்து சிந்தமாணிக்கு.

“கேக்கவே நாராசமா இருக்கு!” அவள் ஏகத்திற்கும் முகத்தை சுழிக்க,

“அப்ப சொத்து மட்டும் போதும்னு உன் பொண்ணு கடைசி வரைக்கும் இந்த மொரடனோட சுகப்படாம வாழ்ந்துடுவாளா… அது உனக்கு சந்தோசத்தை கொடுக்குமா?” வன்மம் வைத்தே கேட்க, சிந்தாமணியும் மகளின் வாழ்க்கையை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

“சொத்து கைவைசம் இருந்தா சுகத்தை எப்படின்னாலும் அனுபவிச்சுக்கலாம். தர்மம், நியாயம்ன்னு சொல்லி தேவையில்லாம மனசுக்குள்ள பொருமிட்டு இருக்காதே!” கதிரேசனின் அடுத்தடுத்த துர்போதனைகள் சிந்தாமணியை முற்றிலும் தடம் புரளச் செய்தன.

இவளது புத்தி மாற்றத்திற்கும் காரணம் இருக்கத்தான் செய்தது. சிந்தாமணியின் பங்காக வந்த தாய் வீட்டு சொத்துக்களையும் மகள் மிருதுளாவின் பேருக்கு செல்வராஜன் மாற்றித் தந்திருந்தார். தணிகைவேல் அந்த பாகத்தையும் சேர்த்தே ஒரே உயிலாக எழுதி வைத்து விட்டார்.

ஆக சிந்தாமணிக்கு எல்லாம் இருந்தும் இல்லாத நிலையில், ‘கதிரேசன் சொல்வதைப் போல வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டால் என்ன? என்னைப் போல அவளும் சுகம் கெட்ட கட்டையாக வாழத்தான் வேண்டுமா!” பொல்லாத எண்ணமும் தலை தூக்கி இருந்தது.

ஆனந்தனின் அடாவடியில் அவன் மீது மலையளவு வெறுப்பை ஏற்றி வைத்துக் கொண்டிருந்த கலாவதிக்கும் சிந்தமாணியின் மனப்போக்கு முதலில் பிடிக்காமல் இருந்தது.

ஆனாலும், ‘இந்தக் கிழவனையும் பேரனையும் பழிக்குபழி வாங்க இதுதான் சரியான வழி!’ என்று தங்களுக்குள் மனக்கணக்கு போட்டவர்களாக கதிரேசன் சொல்லும் அனைத்திற்கும் தலையாட்டத் தொடங்கினர்.

அதன் பிறகு போதை வஸ்து கலந்த மாத்திரையினை ஒருவர் மாற்றி ஒருவர் கொடுத்தே ஆனந்தனை உறக்கத்தில் மட்டுமே வைத்திருக்க, பாட்டி வடிவாம்பாளுக்கு சந்தேகம் கூடிப் போனது.

யாருக்கும் தெரியாமல் அவனை தோப்பு வீட்டிற்கு மாற்றி இரவு நேரத்தில் மருத்துவரை வீட்டிற்கு வரவழைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தார். அப்பொழுது பேரனுக்கு நடந்திருக்கும் அக்கிரமங்களை கண்கூடாக அறிந்து கொண்டார்.

தணிகைவேலுக்கு சொத்து பராமரிப்பு, நிர்வாக கணக்கு வழக்குகளை சரி பார்ப்பதே பெரும் சவலாக இருக்க, வீட்டில் நடப்பதை கவனிக்க மறந்து போனார். ‘காசு விசயத்தில் கடவுளே வந்து கணக்கு சொன்னாலும் நம்ப மாட்டேன்!’ என்று பொறுப்பேற்று செய்பவரை என்ன சொல்லியும் மாற்றிவிட முடியவில்லை.

சற்றே தெளிந்த பேரனிடம் நேரடியாக மாத்திரையின் வீரியத்தை கூறி, ‘கதிரேசன் கொடுக்கும் எதையும் எடுத்துக் கொள்ளாதே!’ என அறிவுறுத்தியும் விட, முன்னைவிட ஆனந்தனின் மூர்க்கத்தனமும் அடாவடிகளும் அதிகமாகியது.

வடிவாம்பாளும், மகள் மருகளின் கேவலமான எண்ணத்தையும், கதிரேசனின் துரோகத்தையும் பற்றியும் கணவரிடம் உடைத்துக் கூறி விட, அடங்காத ஆத்திரத்தில் அவசரகதியில் தணிகைவேலின் செயல்பாடுகள் இருந்தன.

கதிரேசனை காவல்துறையில் பிடித்துக் கொடுக்க சரியான ஆதாரம் இல்லாதது மட்டுமல்லாமல், தனது குடும்பத்திற்கு கௌரவக் குறைச்சல் என நினைத்தே நச்சுப் பாம்பினை வீட்டில் வைத்தே பால் வார்த்தார் தணிகைவேல்.

‘என்னை மீறி எதையும் நடக்க விடமாட்டேன்!’ மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டு முன்னெச்செரிக்கையாக அந்த நேரமே பால்ய விவாகத்தை அதிரடியாக நடத்தி முடித்தார்.

பனிரெண்டு வயது ஆனந்தனுக்கும் எட்டு வயது மிருதுளாவிற்கும் வீட்டோடு மிக எளிமையான முறையில் திருமணத்தை முடித்து அதை பதிவும் செய்து வைத்து விட்டார்.

மைனர் திருமணம் செல்லுபடியாகாமல் போனாலும் இவர்கள் வளர்ந்து சொத்துகளின் நிர்வாகத்தை மேற்கொள்ளும் போது, இருவரின் சுய விருப்பம் மற்றும் இருவரின் கையொப்பம் இன்றி எதுவும் செய்ய முடியாதபடிக்கு ஏற்பாடுகளை செய்து முடித்தார் தணிகைவேல்.

மாமனாரின் இந்த ஏற்பாட்டில் வெகுண்டெழுந்த சிந்தாமணியின் மனம் முழுவதும் ஆனந்தன் மீது முன்னை விட அதிகமாக வெறுப்பினை உமிழத் தொடங்கியது. வார்த்தைக்கு வார்த்தை ஆனந்தனை, ‘நொண்டி’ என்று பேசியே மட்டம் தட்ட ஆரம்பித்தாள்.

“இந்த குறை காலை வைச்சுட்டு உன்னால ஆம்பளையா லட்சணமா வாழ முடியாது. பேருக்கு தான் நீ எனக்கு மாப்பிள்ளையா இருக்கப் போறே… என் பொண்ணு வளர்ந்த பிறகு அவளுக்கு யார் இஷ்டமோ அவன் கூட அனுப்பி வைச்சுடுவேன்!” வக்கிரப் பேச்சில் ஆனந்தனை தலைகுனிய வைத்தாள்.

“இவன் உயிரோடு இருக்கும் வரை உனக்கு விமோசனம் இல்லை.” என்ற கதிரேசனின் மேலான போதனையில் ஆத்திரத்தில் மதியிழந்த சிந்தாமணி, நேரடியாகவே தலையில் உரலைப் போட்டு ஆனந்தனைக் கொல்ல வர, வடிவாம்பாளின் உதவியுடன் தப்பித்தான் சிறுவன்.

வாழ்க்கையே போர்க்களம்… வாழ்ந்து பார்ப்பதற்கும் அவகாசம் கொடுக்கப்படாமல் கழுத்தை நெரித்த காலகட்டம் அது. வன்மம், வெறியாகி பழி வாங்கும் உணர்ச்சியும் நாளுக்குநாள் சிறுவனின் மனதில் அதிகரித்துக் கொண்டே சென்றது.

கலாவதியின் வெறுப்பும் உதாசீனமும் இதே நேரத்தில் கூடிப்போக, இரு பெண்களின் மீதும் பொல்லாத ஆத்திரம் கொண்டான் ஆனந்தன். வசவு மொழிகளையும் பழிச் சொற்களையும் கேட்க சகிக்க முடியாமல் தத்தளித்தவனை, பாட்டியின் புலம்பல் தலைகீழாய் யோசிக்க வைத்தது.

“உனக்கு கொடுத்த மாத்திரையை இவளுக ரெண்டு பேருக்கும் கொடுத்து கொஞ்சநாளுக்கு வாயை அடைச்சு வைக்கணும் டா ஆனந்தா… அப்பதான் நாமளும் கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியும்!” கோபத்தில் தெரியாமல் வடிவாம்பாள் வாயை விட்டுவிட, அதை பற்றி யோசிக்கத் தொடங்கினான் சிறுவன்.

கதிரேசனிடம் வலி அதிகமாக உள்ளது என்று நல்ல பிள்ளையாக அழுது மாத்திரையை அளவுக்கு அதிகமாகவே வாங்கி வைத்துக் கொண்டான்.

“ஒவ்வொரு நேரத்துக்கும் உன்னை எதிர்பார்த்துட்டு இருக்க முடியாது கதிரேசா… மொத்தமா என்கிட்டே குடுத்து வை… நான் பத்திரமா வைச்சுருக்கேன்!” எகத்தாளம் பேசியே மாத்திரைகளை பிடுங்கிக் கொண்டான் ஆனந்தன்.

“அட, நொண்டிப் பயலே… இவ்வளவு சூதானமா இருக்கப் பழகிட்டியா! ரொம்ப தாராளமா பேசவும் கத்துகிட்ட போல?” கதிரேசன் கேட்க,

“எப்பவும் ஒரே மாதிரி இருந்தா உனக்கு எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும் கதிரேசா!” பதிமூன்று வயதுச் சிறுவன் குத்தலாக பேசிய பேச்சினை யோசிக்க மறந்தான் கதிரேசன்.

தொலைக்காட்சி, திரைப்படங்களில் பார்த்த பழி வாங்கும் நிகழ்வுகளை பார்த்து மனதில் உருப்போட்டுக் கொண்டவன், தனது திட்டத்தை மிகச் சரியாக செயல்படுத்தினான்.

சிந்தாமணி மாடிப்படி ஏறி வரும் பொழுது, எண்ணெய்யை கொட்டிவிட்டு, அவள் தன்னை கொல்வதற்காக தூக்கிய அதே உரலை படிகளில் உருட்டிவிட, தடம்புரண்டு படிகளில் உருண்டு விழுந்தாள் சிந்தாமணி.

‘கோபத்தின் மிகுதியில் அறியாமல் செய்து விட்டான் சிறுவன். இது வழமை தானே!’ என்று அனைவரும் சர்வ சாதாரணமாக கடந்து விட்டனர்.

நெற்றியும் மூக்கும் புடைத்து, கால்களும் கைகளும் இன்னதென்று விளங்க முடியாத வகையில் வலியை கொடுத்து விட, அரற்றியபடியே ஆனந்தனை வசைபாடி ஒய்ந்தாள் சிந்தாமணி.

அவனும் அந்த நேரத்தில் தன் தவறை புரிந்து கொண்டவனாக சிந்தாமணியிடம் மன்னிப்பினை கேட்டு, மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளோடு, தான் கதிரேசனிடம் கேட்டு வைத்திருந்த போதை மாத்திரைகளை சேர்த்து முழுங்க வைத்து விட்டான்.

சிந்தாமணியின் கை கால் மூட்டுகளில் ரத்தம் கட்டி, ஏகமாய் வலியை உண்டு பண்ணியிருக்க, எதையும் ஆராயாமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

“உனக்காக டாக்டர்கிட்ட கேட்டு மாத்திரை வாங்கிட்டு வந்துருக்கேன் சிந்தாமணி! ஒரு வேளைக்கு ரெண்டு மாத்திரை கணக்கா மூனு வேளையும் இதை போட்டுகிட்டா, முழுசா வலி கொறைஞ்சிடும்!” என்றவன் அந்த போதை மாத்திரைகளை அக்கறையாகக் கொடுத்தான்.

அவன் சொன்னபடியே மகள் மிருதுளாவின் உதவியோடு தொடர்ந்து மூன்று நாட்கள் மருந்துகளை சாப்பிட்டு வர, நான்காம் நாள் உறக்கத்தில் சிந்தாமணியின் உயிர் பிரிந்திருந்தது.

சத்தமில்லாமல் ஒரு உயிரைப் பழி வாங்கியதின் வீரியத்தை அறிந்து கொள்ளாமல் போனான் ஆனந்தன். பின்னர் அவன் கொடுத்த போதை மாத்திரையை மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொண்டான்.

அதற்கு பிறகான நாட்கள் ஏனோதானோ என்று கழியத் தொடங்கியது. வீட்டில் இருந்தே ஆனந்தன் பள்ளிப் பாடத்தை படிக்க ஆரம்பித்தான். அவனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை பேத்தி மிருதுளாவின் கையில் ஒப்படைத்தார் பாட்டி.

பத்து வயதான மிருதுளாவிற்கு ஆனந்தனை பார்த்தாலே பயம். அவனது கோபமும் மூர்க்கமும் பார்த்து மனதிற்குள் வெறுப்பினை ஏற்றி வைத்திருந்தாள் சின்னப்பெண். கலாவதியும் தன் பங்கிற்கு சிறுமியின் மனதில் வெறுப்பினை வளர்த்து விட்டிருந்தாள்.

“இத பாருடி மருமகளே… இந்த நொண்டிய நம்பி காலம் முழுசும் இருக்கணும்னு நினைச்சா உன்னை புதைச்ச இடத்துல புல்லுதான் முளைக்கும். உன் தாத்தன் சொல்றதுக்கு எல்லாம் சரின்னு தலையாட்டிட்டு உள்ளுக்குள்ள உனக்கு எப்படி பிரியமோ அப்படி இருக்க பழகிக்கோ! எக்காரணத்தை கொண்டும் சொத்து உன் கையை விட்டுப் போயிடக் கூடாது… பணம் காசுதான் முக்கியம்!” என பத்து வயதில் மனதில் பதியமிடப்பட்ட விஷவிதை சிறுமியின் மனதில் ஆலமர விருட்சமாகவே வளர்ந்தது.

வேண்டா வெறுப்பாக ஆனந்தனின் தேவைகளை கவனித்து செய்வாள். முகம் கொடுத்து பேசமாட்டாள். இந்த நிலையில் ஆனந்தனுக்கு பாடத்தில் வரும் சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்காக, நன்றாக படிக்கும் ஸ்ரீராம் வீட்டிற்கு வந்து செல்ல ஆரம்பித்தான்.

அவனது பழக்க வழக்கமும் தோரணையும் மிருதுளாவிற்கு பிடித்துப் போக இருவருக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டது. ஆனந்தனுக்கு பாட சந்தேகங்களை விளக்கி விட்டு பெரும்பாலான நேரம் மிருவிற்கு பாடங்களை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான் ஸ்ரீராம்.

வளரும் பிள்ளைகளின் இந்த பழக்கத்தை பெரியவர்கள் பெரிதுபடுத்தாமல் இருக்க, இதன் பின்விளைவோ வேறு விதமாக உருமாறத் தொடங்கியது.

அனைத்து விசயத்திலும் ஆனந்தனையும் ஸ்ரீராமையும் ஒப்பிட்டு பார்த்தே ஸ்ரீராமின் மீது ஆசையை வளர்த்துக் கொண்டாள் மிருதுளா.

பதிமூன்று வயதில் சடங்கு சுற்றும் நேரத்தில் ஆனந்தனின் கையால் மாலை வாங்காமல் வீசி எறிந்து, அவளின் வெறுப்பினை வெளிப்படுத்தினாள்.

அதட்டி கேட்ட தாத்தா பாட்டியிடம், “எனக்கு இவன் வேணாம்… இந்த ஸ்ரீராம்தான் வேணும். நான் இனிமேலும் இங்கே இருக்க மாட்டேன்!” என பிடிவாதம் பிடித்து, ‘விடுதியில் சேர்ந்து படித்துக் கொள்கிறேன்!’ என்று அடமாய் கூற, பதினேழு வயது ஆனந்தனுக்கு பெரும் தலைகுனிவாகிப் போனது.

“மாலையை கழட்டிப் போட்ட மாதிரி கழுத்துல இருக்கிற தாலியையும் கழட்டி போட நினைச்சே… உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லன்னு தெருவில நிறுத்திடுவேன்!” தணிகைவேல் கண்டிப்பாகச் சொல்லிவிட, கலாவதியின் அறிவுறுத்தலில் மிருதுளா அமைதியானாள்.

எந்தவொரு இடையூறும் இல்லாமல் படித்து வளர வேண்டிய வயதில் திருமணத்தை செய்து வைத்து, அதில் கட்டுண்டு கிடக்க வேண்டுமென்ற நிர்பந்தம் ஆனந்தனுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.

பெண்ணை பிடித்தால் தானே அவளை, தன்னோடு இணைத்து வைக்கும் திருமணம் பந்தமும் பிடித்துப் போகும். எல்லாமே மனதின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்க வெறுப்பின் உச்சநிலையில் நடமாட ஆரம்பித்தான்.

மனிதர்களிடத்தில் காட்டும் ஈவு இரக்கத்தை எப்போதோ துடைத்து போட்டு விட்ட பிறகு கரிசனம் மட்டும் மிஞ்சிப் போகுமா என்ன? அதுவும் தன்னை நொண்டி என்றும் அரக்கன் என்றும் எதிர்த்து நிற்கும் பெண்ணிடத்தில்…

ஆனந்தன் அன்றைக்கே முடிவெடுத்தான். இந்த அவமானத்திற்கு இவளைப் பழி வாங்கியே தீருவதென்று… அதன்படி மிருதுளா விரும்பியவாறு விடுதியில் சேர்த்து விடச் சொன்னவன், அங்கு தனக்கும் அவளுக்கும் சிறுபிராயத்திலேயே திருமணம் முடிந்து விட்டதையும் இன்றும் ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருவதாகவும் கூறி அவளை எல்லோர் முன்னிலையிலும் அடையாளப்படுத்தினான்.

சின்னப்பெண்ணின் மனதில் குழப்பத்தை உண்டு பண்ணுவதையே தொழிலாகக் கொண்டிருந்த கலாவதி, கதிரேசனை வீட்டை விட்டு துரத்தினான். அதற்கும் மசியாமல் ஆட்டம் காட்டியவர்களை அடக்கி வைக்கும் ஆத்திரம் எழுந்தது ஆனந்தனுக்கு…

பழி பாவம், நியாய அநியாயங்களை தரம் பிரித்து பார்க்கத் தெரியாத வயதும் மனதும் கொண்டவனுக்கு ஒருவனை கூண்டோடு கைலாசம் அனுப்புவதும் பாவ காரியமாகத் தோன்றவில்லை.

மிருதுளாவை விடுதியில் சேர்த்ததற்கு வசைப்பாட்டு பாடி ஒய்ந்த கலாவதிக்கு அந்த சமயத்தில் உயர் இரத்த அழுத்தமும் தீராத தலைவலியும் சேர்த்தே முடக்கிப் போட்டுவிட, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் ஆனந்தன்.

“நீ தான் டிசைன் டிசைனா வலி மாத்திரை வச்சுருப்பியே கதிரேசா… அதை உன் பொண்டாட்டிக்கு கொடுக்க வேண்டியது தானே!” என அவனை கேட்டு விட்டு,

“என்ன கலாவதி, உன்னை பொறுப்பா கவனிக்கிற அக்கறை உன் புருசனுக்கு இல்ல போல!” என்றும் ஏற்றி வைத்து கணவன் மனைவிக்குள் சீண்டு முடித்தான்

‘தன்னிடம் இருப்பது வலி நிவாரணி மாத்திரையல்ல, போதை வஸ்து.’ என்று கதிரேசனால் உடைத்துச் சொல்ல முடியவில்லை.

இறுதியில் கதிரேசன் இல்லாத நேரத்தில் அவன் கொடுத்ததாகவே கூறி போதை மாத்திரையை தொடர்ந்து ஒரு வாரம் கொடுத்து வந்தான்.

சதா தூக்கத்தில் உளறிக்கொண்டே இருந்த மகளைப் பார்த்த தணிகைவேலும் மருத்துவரை அழைத்துக் காண்பிக்க, கலாவதி எடுத்துக் கொண்டது போதைமருந்து என தெளிவாகத் தெரிய வந்தது.

கதிரேசன் கொடுத்துதான் இந்த மாத்திரையை தான் கொடுத்தது என்ற ஆனந்தனின் வாக்குமூலம் பலமான சாட்சியாக இருக்க, இனியும் பாவம் பார்க்க முடியாது என நினைத்து கதிரேசனை, தணிகைவேல் காவல்துறையிடம் ஒப்படைத்து விட்டார்.

‘தனக்கும், சிந்தாமணி அத்தைக்கும் கூட இதே மாத்திரையை கதிரேசன் கொடுத்தான்!’ என்ற கூடுதல் தகவலை ஆனந்தன் கூறிவிட, பலமான சாட்சியோடு கதிரேசன் கொலை குற்றவாளியாக சிறைக்குள் அடைக்கப்பட்டான்.

கணவனது குற்றத்தை ஏசிப்பேசியே மகளை சதா சர்வகாலமும் பெற்றோர் நிந்தித்துக் கொண்டிருக்க, மனமுடைந்த கலாவதி தற்கொலை செய்து கொண்டாள். இரண்டு உயிர்கள் பறி போவதற்கு அடித்தளமிட்டு காரியமற்றிய பாவத்தை அறியாதுதான் போனான் ஆனந்தன்.

இந்த நிலையில் மீண்டும் அருணாச்சலம் தணிகைவேலுக்கு உதவியாக அங்கே வந்து சேர்ந்தார், ஆதிக்கும் கண் பார்வை கிடைத்து, விடுதியில் தங்கி தனியார் கல்வி நிறுவனம் மூலம் பள்ளிப் படிப்போடு கல்லூரி படிப்பையும் தொடர ஆரம்பித்திருந்தான்.

பெரியவனைப் பற்றிய கவலை ஒரு வழியாக தீர்ந்து போக, சிறியவனை பார்த்துக்கொள்ள வந்து சேர்ந்தார்  அருணாச்சலம்

வீட்டில் நடக்கும் இத்தனை அவலங்களை பார்த்தும் தன் போக்கில் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்த ஆனந்தனின் மீது, அருணாச்சலத்தின் சந்தேகப் பார்வை பலமாக படர்ந்தது. அவனை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்.

மனிதத் தன்மையை மறந்து போன அரக்கனாக மனதளவில் சிதைந்து வளர்பவனை எப்பாடு பட்டாவது நல்வழிபடுத்திட வேண்டும் என்கிற வேகமும், எஜமான விசுவாசமும் சேர்ந்து அக்கறையுடன் அவனிடம் கெஞ்சிப் பேசியே மனிதனாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டார்  அருணாச்சலம்.

***