நான் பிழை… நீ மழலை… 35

நான்… நீ…35

“என் பட்டு அக்கா… லட்டு அக்கா, அழகு அக்கா!” வாய் ஓயாமல் மனஷ்வினி தமக்கையை கொஞ்சித் தள்ள,

“போதும் டி குட்டி… ரொம்ப பண்ற நீ!” கன்னத்தில் தட்டி நெற்றியில் முத்தம் பதித்தாள் தேஜஸ்வினி.

“உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? கூடவே நம்ம பப்ளி குட்டியையும்…” மூக்கில் முகாரி பாடியபடி, குனிந்து தேஜுவின் வயிற்று பிள்ளைக்கு கணக்கில்லா முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

“என் பப்பு… சித்தியை தேடுனீங்களா செல்லம்?” நிறைவாக கொஞ்சி மகிழ்ந்தாள்.

சின்னவளின் மகிழ்ச்சிக்கு அணைகட்ட முடியவில்லை. இவை அனைத்தும் பங்களாவின் போர்டிகோவில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

“வாங்க!” ஒற்றை வார்த்தையில் வரவேற்று விட்டு அமைதியான ஆனந்தன், ஆதித்யனின் அருகில் சென்று விட்டான்.

சகோதரிகளின் பாச மழையை அலுப்பாய் பார்த்த இரட்டையர்களுக்கு, தங்களின் பாச அளவீடு என்ன, எப்படி இருக்கும் என்கிற சிந்தனையே எக்கு தப்பாய் ஒடியது.

இதுவரையில் ஆறுதலாய் ஒருமுறை கூட அணைத்துக் கொண்டதில்லை. இருவரும் சிரித்துப் பேசிய நாட்களை வரலாற்று நிகழ்வுகளாக பதிவு செய்து விடலாம்.

அந்த நேரத்தில் வீடு வந்து சேர்ந்த நகுலேஷும் தன் பங்கிற்கு துள்ளிக் குதித்து ஆர்பாட்டம் செய்ய, இப்பொழுது வெளிப்படையாகவே முகம் சுருக்கிக் கொண்டனர் இரட்டைச் சகோதரர்கள்.

“உள்ளே போயி பேசலாம் நகுல்!” ஆனந்தன் கூற,

“இத்தனை ஆசை இருக்கறவன் வீக்லி ஒன்ஸ் வந்து பார்க்க வேண்டியது தானே டா!” வெடுக்கென்று கடித்தான் ஆதி.

ஒரு வழியாக வீட்டிற்குள் வந்து உணவை முடித்துக் கொண்ட பிறகு உடன்பிறப்புகளின் உலகம் தனித்தனியாகிப் போனது.

ஹாலில் அமர்ந்து இரட்டையர்கள் தொழில், கணக்கு வழக்குகள் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்க, மனுவின் அறையில் அமர்ந்து மூவரும் கொட்டமடித்துக் கொண்டிருந்தனர்

அதிலும் தேஜூவின் மடியில் மனு தலை வைத்துக் கொண்டு வயிற்றுப் பிள்ளையுடன் பேசுபவளாய் வாயாடிக் கொண்டிருக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு பொறாமை பற்றிக் கொண்டது.

‘பாவி… நான் படுத்தா மட்டும் நேரமென்ன, காலமென்ன வேலையில்லையான்னு ஆயிரம் நொட்டை சொல்லி தள்ளி விடுவா!’ உள்ளுக்குள் புலம்பியவனைக் கண்டு கொண்டவனாக சிரித்தான் ஆனந்தன்.

“சிரிச்சு தொலைக்காதே டா!” ஆதி பல்லைக் கடிக்க,

“உன்னோட ஃபீலிங் புரியுது ப்ரோ… முகத்துல எக்ஸ்பிரசன் அப்படியே ஃபிளாஷ் அடிக்குது. உன்னதுல பாதி நானும் அனுபவிக்கிறேன்!” நொந்துபோன குரலில் சொன்னவனை ஆச்சரியமாகப் பார்த்தான் ஆதி.

“என்னடா சொல்ற? நான் கேக்கறப்ப எல்லாம் இன்னமும் நீங்க சண்டை போட்டுட்டு இருக்கிறதா தானே நகுல் சொன்னான்!”

“ம்ம்… சண்டைதான், இது வேற மாதிரி… கொஞ்சநாள் சிரிப்பை மறந்து போயிருந்தா… இப்ப நீங்க வரவும் என் அம்மணிக்கு மறந்துபோன சிரிப்பு வெளியே வருது!” என்றவனின் பார்வையும் மனுவின் அறையில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மூவரை நோக்கியே முகாமிட்டிருந்தது.

“எல்லாத்தையும் தூக்கி கடாசிட்டு, பழையபடி நம்ம வீட்டுல நாம மூனுபேரு மட்டுமே இருந்தா எப்படி இருக்கும்?” கண்கள் பளபளக்க, ஆசையுடன் கேட்ட மனுவின் கேள்விக்கு,

“சூப்பரா இருக்கும் குட்டிக்கா!” பதில் கொடுத்தான் நகுல்.

ஆனால் தேஜுவால் சட்டென்று அந்த பதிலைக் கூற முடியவில்லை. பிடித்தமில்லாத உறவென்று கைப்பிடித்தவனை, உயிருக்குள் பதிவு செய்து, சாட்சியை சுமந்து கொண்டு நிற்கின்றாளே!

உடன்பிறப்புகளின் ஆசைக்கு தலையசைக்க கூட முடியாத நிலையில் பதிலின்றி அமர்ந்திருக்கும் அக்காவை சரியாகக் கண்டு கொண்டாள் மனஷ்வினி.

“ஆனா வேண்டாம்னு தோணுதுக்கா… ஏன்னு சொல்லு?” மனு, தேஜுவிடம் கேட்க, தெரியவில்லை என்று உதடு பிதுக்கினாள்.

நகுலோ, “புரியாத பிரிப்கிரிப்சன் எழுதுற மாதிரி, டாக்டரம்மா ஏதோ ஒரு புரியாத ரீசன் வச்சிருப்பீங்க… சொல்லுங்க கேட்டுத் தொலைக்கிறேன்!” கேலி பேசியவனுக்கு செல்ல அடிகளை பரிசாக கொடுத்தவள்,

“வரப்போற நம்ம பப்பு குட்டிக்காகவும், என் அக்கா, அத்தான்னு சொல்ற அழகுக்காகவும் எல்லாத்தையும் விட்டுட்டு இங்கேயே அடைஞ்சு கிடக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்!” வேடிக்கையாகக் கூறி கண்ணடிக்க,

“எவ்வளவு சீரியஸா கிண்டலடிக்கிற!” தேஜு அவளின் காதினைத் திருக,

“நான் சொல்லல மொக்கை ரீசன்னு…” நகுல் வாரி விட்டதில் மீண்டும் அடித்தாள் மனு.

“ஏன், நீங்க மட்டும் என்னவாம்… மச்சான்னு உருகி குடை பிடிக்கிறதில்லையோ!” நகுலின் கேலியில் முகம் திருப்பிக் கொண்டாள் மனு.

“அட பரவாயில்லையே… இது எப்போ இருந்து?” ஆச்சரியத்துடன் கேட்டாள் தேஜு.

“அது அப்பப்போ நடக்கும் தேஜுக்கா… சண்டை போடுறப்போ குட்டி அக்கா பேசுறத பாக்கணுமே… அந்த நேரத்துல நம்ம ஆனந்தம் மௌனராகம் மட்டுமே வாசிப்பார்!” கைகளால் வாயடைத்துக் காண்பிக்க,

“இனி உன்ன விட்டு வைக்கக் கூடாதுடா நரிப்பயலே!” என எழுந்த மனு, துரத்தி பிடிக்கும் முன்பே அங்கிருந்து தப்பியோடி இருந்தான் நகுல்.

“அடிக்கடி கை நீளுது மனு உனக்கு… என்னாச்சு?” தேஜுவின் கேள்விக்கு,

பின்னால் ஒளிந்து நின்ற நகுல், “நல்லா கேளுக்கா… வீட்டுல இவ அராஜகம் தாங்க முடியல! யார் மேலே கோபம் வந்தாலும் இவ பழி வாங்கறதெல்லாம் என்னை மட்டுந்தான்!” புகார் பட்டியல் வாசிக்கும் முன்னரே ஆதி அங்கே வந்து நின்று விட்டான்.

“போதும் தேஜு… ரூம்ல போயி ரெஸ்ட் எடு!” இயல்பாய் கூறினாலும் குரலில் கண்டிப்பு தெரிய, விதியே என தலையசைத்து உள்ளே சென்று விட்டாள்.

“இந்த நிலைமையில உங்க அக்காவை நடுவுல வச்சுட்டு ஓடி பிடிச்சு விளையாடுவியா நகுல்?” கடிந்துகொண்டு கேட்க,

“அப்படியென்ன நிலைமை மாமா… ஜஸ்ட் ரிலாக்ஸ், அக்கா பக்கா சேஃப்!” மனு தயக்கமின்றி கூற,

“எஸ் மாமா… ஃபாமிலி டாக்டரே சொல்லியாச்சு, டோன்ட் வொரி!” இலகுவான பாவனையில் இருவரும் நம்பிக்கையளித்தாலும் கேட்டுக் கொள்ளும் ரகமா இவன்!

“நீங்க சொல்றது எனக்கும் தெரியும். பட்… அவளை கேர் பண்ண வேண்டியது நம்மோட பொறுப்பு. சோ, புரிஞ்சுக்கோங்க!” வெடுக்கென கூறிவிட்டுச் செல்ல,

“குட்டியக்கா… எனக்கு, உன்னோட முசுட்டு மச்சானே போதும். இந்த மிலிட்டரி அத்தான் வேண்டாம். பாவம் என் தேஜுக்கா!” பாவனையுடன் கூற, அதற்குமே வகையாக முதுகில் அடுக்கினாள் மனு.

“அடங்காத மலக்கொரங்கே… ரெண்டு பேருகிட்டயும் சொல்லி உனக்கு வேட்டு வைக்கிறேன், இரு!” மனுவின் மிரட்டலுக்கு பிறகு, இருவருக்கும் இடையே நீண்ட தர்க்கங்கள் முடிவைக் காணமுடியாமல் தவித்தன.

அறைக்குள் வந்து மனைவியிடமும் கண்டிப்பு பேச்சில் காய ஆரம்பித்தான் ஆதித்யன். தேஜுவின் நிலை திரிசங்கு சொர்க்கமாகத் தள்ளாடியது.

கணவனுக்கு எதிராகப் பேச முடியாமல், உடன்பிறப்புகளின் கொட்டத்தை அடக்கவும் வழி தெரியாமல் முழித்தாள். இரண்டு நாட்களில் இங்கே இருந்தது போதுமென்ற சலிப்பு தட்டிய நிலையினை உணர வைத்து விட்டான் ஆதி.

மூன்றாம் நாள் இவர்கள் கிளம்பத் தயாரான பொழுது, தன்னை விட்டுச் செல்ல வேண்டாமென அழுது ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தாள் மனு.

“எதுக்கு இத்தனை பிடிவாதம் பிடிக்கிற மனு?” தேஜுவும் கேட்டாள்.

“இந்த ரெண்டுநாள் எந்த ஸ்ட்ரெஸும் இல்லாம இருந்தேன். திரும்பவும் அந்த புதைகுழியில போயி விழ என்னால முடியாது. என் துணைக்கு நீ இங்கேயே இரு… இல்லன்னா, உன் தங்கச்சியை நீ பத்திரமா பாக்க முடியாது.” பிடிவாதமாகக் கூற,

‘இவளுக்கு ஏன் இத்தனை வீம்பு?’ பெரியவளும் புரியாமல் முழித்தாள். இங்கு வந்ததில் இருந்து, கவனித்த வரையில் அனைத்தும் நல்லவிதமாகச் செல்வதாகவே பட்டது.

ஆனந்தன் இல்லாமல் மனஷ்வினி வாசற்படியைக் கூடத் தாண்டுவதே இல்லை. அவனுமே தனது வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு இவளுக்கு துணையாக கல்லூரிக்கும் இவளின் தேவைக்கும் சென்று வருவதையே முக்கிய வேலையாக செய்து வருகிறான்.

ஆனந்தனின் இந்த புதிய மாற்றத்தை கண்ணுற்றாலும் எப்படியாவது இருவரும் ராசியானால் சரியென்ற நிலையில் எதையும் கேட்காமல் விட்டிருந்தாள் தேஜஸ்வினி.

ஆனால் தங்கையின் இப்போதைய பிடிவாதமும் அழுகையும் பெரியவளின் எண்ணத்தை மாற்றி இருந்தது.

“என்ன ஆச்சுடா மனு? என்ன நடந்தது?” கேட்டதுதான் தாமதம் மடை திறந்த வெள்ளமாய் அனைத்தையும் கொட்டிவிட்டாள் தங்கை.

இவள் தமக்கையிடம் கூறிய அதே நேரத்தில் ஆதியும் மனுவின் அழுகைக்கு, ஆனந்தனைக் கடிந்து கொண்டு காரணம் கேட்க, அவனுமே பிரச்சனைகள் அனைத்தையும் மறைக்காமல் கூறி விட்டான்.

“முட்டாள்… முட்டாள்! இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோர்ட்டு, கேஸுன்னு போயிட்டு இருந்தா வாழ்க்கை முழுசும் கோர்ட் வாசப்படியிலே முடிஞ்சு போயிடும் டா அறிவுகெட்டவனே!” ஆத்திரம் அடங்கவில்லை ஆதிக்கு.

“உன்னை யாருடா, தியாகியா மாறி எல்லாத்தையும் மனசுல போட்டு அடைச்சுக்க சொன்னது! உன் அறிவை எதைக் கொண்டு சாத்துறதுன்னு தெரியல…

பிரச்சனைக்குள்ள இருக்கிறவனை விட, வெளியே இருந்து பாக்கறவனுக்கு அதோட தீர்வு ஈசியா தெரியும். அப்படி யோசிச்சு என்கிட்டே ஷேர் பண்ணியிருக்கலாமே ஆனந்த்!

மிரு விஷயத்தை இவ்வளவு வளர விட வேண்டிய அவசியமே இல்ல… உன்னோட சேர்ந்து அருணாச்சலம் ஐயாவும் என்கிட்டே சொல்லாம மறைச்சு, பிரச்சனையை வளர விட்டுருக்காரு!”

அவன் கோபம் கொண்டு பேசியதில் நிதர்சனமும் தெரியவர, ஆனந்தனுக்கு முதன் முறையாக தன்னிடத்திலும் தவறு உள்ளதா என அலசிப் பார்க்கத் தோன்றியது.

‘நிதானமாக சிந்தித்து, இவனிடம் ஆலோசனை கேட்டு செயல்பட்டிருக்கலாமோ!’ என மூளை அறிவுறுத்த, ‘இனி என்ன செய்வது’ என்ற பாவனையில் ஆதியின் முகம் பார்த்து நின்றான்.

மனுவின் தவிப்புகளை கேட்ட தேஜுவும் பிரச்சனைகள் முடியும் வரை அவளுடனேயே தங்கிக் கொள்வதாகக் கூறி, தங்கையை அமைதிப்படுத்தினாள்.

பொள்ளாச்சிக்கு ஆதி புறப்பட்டு நின்ற சமயத்தில், தான் இங்கேயே இருக்கப் போவதாக தேஜு கூறி விட, இப்பொழுது முட்டிக் கொள்வது இவர்களின் முறையானது.

“மனுவுக்கு எதுவும் ஆகாது தேஜு… நீ நினைக்கிற அளவுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்ல!” ஆதி விளக்கமாக கூறினாலும் தேஜு ஏற்றுக் கொள்ளவில்லை.

“நீங்க வெளியே இருந்து அவளோட பாதுகாப்பை மட்டும் பாக்கறீங்க… நான், அவளோட மனசு அழுத்திப் போகாம இருக்க என்ன செய்யணுமோ அதை யோசிச்சுட்டு இருக்கேன். கொஞ்சநாள் நான் அவளுக்கு துணையா இங்கேயே இருக்கேன்!”

“இங்கே உனக்கு சௌகரியப்படாது, உனக்கான பொறுப்புகளை எடுத்து பாக்கறதுக்கு அங்கே யாரும் இல்ல, புரிஞ்சுக்கோ!”

“அப்போ இவளையும் அங்கயே கூப்பிட்டுக்கலாம் அத்தான்! இவ ஆனந்த் கூட இருக்கவே மாட்டேன்னு அழறா! அவ்வளவு குழப்பம் இருக்கு மனு மனசுல…” தேஜுவின் விளக்கத்தில் ஆதி, தம்பியை முறைக்க,

“பொண்டாட்டிய நல்லாவே வளத்து வச்சுருக்க!” நக்கல் பேசிய ஆனந்தனின் முணுமுணுப்பில்,

“உன்னை விடவா டா!” பதிலடி கொடுத்து பல்லைக் கடித்தான் ஆதி.

மனைவியிடம் இப்படி முறைத்து தள்ள முடியாதே! உடன்பிறப்புக்களுக்காக எந்த நிலையிலும் யாரையும் எதிர்த்து நிற்பாள் என்பதை இத்தனை நாள் அனுபவத்தில் நன்றாகவே கண்டு கொண்டு வருகிறானே ஆதி!

‘என் மனைவி எனக்காக மட்டுமே பார்ப்பாள் என்ற பரவச உணர்வு தனக்கு இந்த ஜென்மத்தில் கிடைக்காது.’ மனத்தாங்கல் ஆதியின் மனதில் ஸ்திரமாய் பதியப்பட்டுக் கொண்டே வந்தது.

இதற்காக தம்பியின் பிரச்சனையை தட்டிக் கழிக்கும் எண்ணம் இவனுக்குள் இல்லவே இல்லை! ‘நீ, உன் தங்கைக்கு பார்ப்பது போல், நானும் என் தம்பிக்கு பார்ப்பேன்!’ இயல்பான பற்றும் பரிவும் மேலோங்க ஆனந்தனின் பக்கமே நின்றான்.

“வாழ்க்கைன்னு வந்துட்டா எல்லாத்தையும் பேஸ் பண்ணத் தெரியணும் தேஜு… இதென்ன பேச்சு? குழப்பம், பயம்னு சொல்லிட்டு சுலபமா எதுல இருந்தோ தப்பிக்க வழி தேடுற மாதிரி இருக்கு. அவளுக்கு எடுத்துச் சொல்றதை விட்டுட்டு நீயும் ஏன் பிடிவாதம் பிடிக்கிற?”

“எதுவா இருந்தாலும் அனுபவிச்சு பார்த்தா மட்டுமே அந்த கஷ்டம் தெரியும் அத்தான். எக்ஸ் லவ்வர் இருக்குன்னு தெரிஞ்சும் ஒரு பொண்ணால ஏதோ ஒரு குருட்டு தைரியத்துல புருஷன் கூட குடும்பம் நடத்திட முடியும்.

ஆனா, முதல் மனைவின்னு ஒருத்தி உரிமையா இருக்கான்னு தெரிஞ்சும் குடும்பம் நடத்துறது கஷ்டம். இது மனைவிக்கு மட்டுமே இருக்கற சுயநலம். உங்களை மாதிரி ஆம்பளைங்க இது புரியாம, நாங்க பொட்டிய தூக்குறத ஃபேஷன்னு சொல்லி, எங்க மூக்கை உடைக்க ட்ரை பண்றீங்க!” காட்டமாகக் கூறியவளின் காரப்பார்வை ஆனந்தனை தொங்க விட்டுத் தோரணம் கட்டியது.

‘அடிப்பாவி நான் பெருமூச்சு விட்டதக் கூட அக்காகிட்ட சொல்லி வைப்பா போல!’ மனைவியை கரித்துக் கொண்டே மானசீகமாய் தலையில் கை வைத்துக் கொண்டான் ஆனந்தன்.

“நம்ம வாழ்க்கைத் துணை இப்படித்தான்னு தெரிஞ்ச பிறகு, எந்த மாதிரியான சூழ்நிலையா இருந்தாலும் சேர்ந்து வாழத் தெரியணும். வாழ முடியணும். அதுதான் நல்ல புரிதலுக்கு அழகு!” ஆதியின் பேச்சு ஓயவே இல்லை.

“அந்த புடலங்காயோட தொங்கிட்டு வாழணும்ன்னா ஆரம்பத்துலயே பிரச்சனை இதுதான்னு எங்களுக்கு புரிய வைச்சுருக்கணும். அதை யாரு செஞ்சீங்க?

நார்மல் லைஃப்ல எப்படியும் சமாளிச்சு வெளியே வந்துடலாம். ஆனா திரும்பின பக்கமெல்லாம் பிரச்சனை கொடி பிடிச்சு நின்னா எதை புரிஞ்சு, எப்படி இருக்க முடியும்?

படிப்பைக் காரணம் காட்டியே அவளை கார்னர் பண்ணி இங்கே இருக்கச் சொல்றது எனக்கும் பிடிக்கல. எப்போன்னாலும் படிக்கலாம். ஆனா, இந்த ஸ்ட்ரெஸ் அவளுக்கு எதையும் மனசுல பதிய வைக்காது. நான் இங்கேதான் இருப்பேன், இல்லன்னா, மனு எங்கூட இருப்பா! இதுல மாற்றம் இல்லை.” தேஜு கண்டிப்பாக கூறிவிட, ஆதித்யன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறதோ இல்லையோ தங்களை நம்பி வாழ வந்த பெண்களின் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்கிற எண்ணம் ஆதியை நிற்க விடாமல் யோசிக்க வைத்தது.

வழக்கறிஞர்களின் ஆலோசனைகள், மன உளவியல் நிபுணர்களின் கருத்துகள் இறுதியாக காவல்துறையினரின் விளக்கங்கள் என அனைத்தையும் ஒன்று திரட்டி இப்படித்தான் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டப் படவேண்டும் என்ற உறுதி எடுத்து நிமிர்ந்த நேரத்தில் ஒரு மாதம் சுலபமாகக் கழிந்திருந்தது.

தேஜஸ்வினி சொன்னபடியே தங்கையுடன் தங்கிவிட்டாள். வாரத்தில் நான்கு நாட்கள் பொள்ளாச்சியிலும் மீதி நாட்கள் கோவையிலும் என ஆதி அலைந்து கொண்டிருந்தான். சண்டை பிடித்து வார்த்தை வளர்த்தாலும் மனைவியை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் அவனுக்கு…. தேஜுவிற்கும் அப்படியே!

“பெருசா பொண்டாட்டிய கேர் பண்றேன்னு பேரு… ரெண்டு நாளா பார்க்கலையேன்னு ஓடி வரத் தெரியுதா?” குற்றமாகக் கூறி தனது ஏக்கத்தை கூறி விடுவாள் தேஜு.

“உன்னை பாக்காமலா டெய்லி வீடியோகால்ல பேசுறேன்?”

“பார்த்தா மட்டும் போதுமா?” இந்த ஒரு கேள்வி போதும் கணவனின் வீராப்பு தளர்ந்து போவதற்கு…

“வேற என்னடி வேணும்?” கேட்டவனின் பாவனை எல்லாம் ஒட்டுமொத்த கிறக்கத்தையும் குழைத்துக் கொண்டு ஒலிக்கும்.

“வேற என்ன… குழந்தைக்கு முத்தம் குடுக்கிறேன் பேர்வழின்னு, நீங்க என்னை படுத்தி வைச்ச பாட்டுக்கு, அது இப்பவே வயித்துக்குள்ள கபடி விளையாடி அப்பா வேணும்னு கேக்குது. ம்ப்ச்… இப்படி எல்லாமா ஒரு புள்ளத்தாச்சி பொண்ண பேச வைப்பீங்க? உங்களுக்கு என்னை கேர் பண்ணவே தெரியல த்தான்!” ஏக்கமாய் கூறும் ஒரு வார்த்தை போதும், செய்யும் வேலையை கிடப்பில் போட்டுவிட்டு மனைவியைக் காண ஓடி வந்து விடுவான்.

அப்படி வந்தாலும் இவனால் உடனே அவளை கொஞ்சிக் கொண்டாடிட முடியாது. மனு புரிந்து கொண்டு விலகிப் போனாலும் நகுலின் செல்லப்பிடியில் இருந்து ஆதியால் தப்பிக்க முடியாது. சின்னவனுக்குமே இல்லாத பொல்லாத சந்தேகங்கள் எல்லாம் வந்து அப்போதுதான் ஞானக்கண் திறந்து கொள்ளும்.

“டேய் கரடி… கொஞ்சமாவது வளரப் பாருடா!” மனு அவனை விரட்டி அடித்தாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில், “தேஜுக்கா!” எனத் தேடிச் செல்பவனை என்ன சொல்லி தடுத்து நிறுத்துவது?

காவலுக்கு பூனையாக தம்பியின் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே காரியங்கள் பார்ப்பாள் மனு. அவனைச் சொல்லிக் குற்றமில்லை.

‘அக்கா… அக்கா!’ என்றே வளர்ந்து விட்டவனை அத்தனை எளிதில் மாற்ற விட முடியாது.

அதிலும் எதிரில் இருக்கும் போதே தள்ளி நின்று வேடிக்கை பார்க்கச் சொன்னால் அவனும் என்ன செய்வான்? வயது புரிந்து கொள்ளச் சொன்னாலும் தம்பியின் மனம் இடம் கொடுக்கவில்லை.

“ஆமா… பெரிய மாமாவாம் மாமா! இத்தனை வருசமா எங்கே போயிருந்தாராம்… சும்மா என்னையே பிரேக் பண்ணி நிக்க வைக்கிற!” மனுவிடம் எரிந்து விழுவான் நகுல்.

“உனக்குன்னு ஒருத்தி வருவாள்ல… அப்ப வைக்கிறேன் உனக்கு ஆப்பு. வளந்த பையனா புரிஞ்சுக்கோ சோட்டாபீம்!” செல்ல அழைப்பில் பாசமாகக் கூறவுமே,

“இதுதான், இதுக்குதான் நான் தேஜுக்கா கிட்ட போறேன். நீ எப்பவும் என்னை இப்படி பாசமா பார்த்தா நானும் நல்ல பிள்ளையா நீ சொல்றதை கேக்கறேன்!” என சொல்லி விட்டு சென்றான் பத்தொன்பது வயது நகுல்.

“ஒன்னு நாட்டாமை, இன்னொன்னு கோக்குமாக்கு, அடுத்தது புள்ளபூச்சி… அது ஏன் செல்லாயி, உங்க வீட்டுல யாரையும் ஒழுங்கா வளக்கல?” ஆனந்தன் தன் பங்கிற்கு வம்பு வளர்த்து, மனைவியை கொதிப்படையச் செய்வான்.

“எப்படி… உங்கள மாதிரி வளந்து நாங்களும் நாலு பேரை போட்டுத் தள்ளியிருக்கணுமா… இல்ல, ரெண்டு பேரை மூனு தடவ கல்யாணம் பண்ணியிருக்கனுமா?” குத்தல் பேச்சினை சகஜமாகக் கொட்ட ஆரம்பித்தாள் மனு,

அக்காவின் அருகாமை அவளின் பயத்தை போக்கி இருந்தது. கணவனே என்றாலும், ‘ஒரு எல்லைக்குள் மட்டுமே பழகிக் கொள்!’ என்று துணிந்து தடைவிதிக்க வைத்தது. இவளின் புதிய அவதாரத்தில் நைந்து நொந்து போனது ஆனந்தன் மட்டுமே!

அவ்வப்போது மனைவியிடம் இருந்து கிடைக்கும் ஆறுதலான பேச்சுகளையும் கரிசனத்தையும் எதிர்பார்த்து ஏமாற ஆரம்பித்தான். அவள் தனிமையில் சிக்கும் நேரத்திற்காக காத்திருக்கத் தொடங்கினான்.

“உன்னை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கணும், உன் கையைப் பிடிச்சு நடக்கணும், என் தோள்ல சாய்ச்சுட்டு உன்னை தட்டிக் கொடுக்கணும்னு தோணுது செல்லாயி! நீ என்னை என்னென்னமோ சிந்திக்க வைக்கிறடி!” பார்வையாலும் மனதிற்குள்ளும் பலமுறை கேட்டு சலித்து கொண்டான்.

அழுத்தங்களை அடக்கிக்கொண்டு வாழ்ந்தவனுக்கு இந்த புது அழுத்தம் நிலைகொள்ளாமல் தவிக்க வைத்து தடுமாறச் செய்தது. அது அடங்க மறுத்து கரையுடையும் போது மனுவின் நிலை..?!

***