நான் பிழை… நீ மழலை.. 36

நான்… நீ…36

ரூபம் மாளிகை, தேஜஸ்வினியின் வளைகாப்பினை முன்னிட்டு, வீட்டின் மூளை முடுக்கெல்லாம் அலங்கரிக்கப்பட்டு, அரண்மனையாக பளபளத்தது

திருமணப் பட்டில் தங்க, வைர நகைகள் மின்னிட ராணிக்கே உரிய அலங்காரத்தில் பேரழகியாக மிளிர்ந்தாள் தேஜஸ்வினி. திருமணத்தன்று இருந்ததை விட சூல் கொண்ட நிலையில் அவளது அழகு பன்மடங்கு கூடிப் போனதாக தங்கை சொல்லிச் சொல்லியே கிண்டலடித்தாள்.

பெரியவளைத் தொடர்ந்தே மனஷ்வினியும் அழகு நிலையத்தாரின் உபயத்தில் விழாவிற்கு தயாராகி நிற்க, இரு பெண்களின் அழகினைக் காண பெற்றவருக்கு பெருமை பிடிபடவில்லை.

இன்னல்கள் எத்தனை வந்தாலும் புகுந்த வீட்டில், மகள்கள் மகாராணியாக கொண்டாடப்படும் அழகை பார்த்து பூரிப்பதே அலாதியானது. அந்த உணர்வை தந்தையாக நொடிக்குநொடி அனுபவித்தார்.

அலங்காரம் முடிந்ததும் தனது வழக்கமாக, கண்மையை எடுத்து மகள்களின் காதின் ஓரத்தில் திருஷ்டிக்காக வைத்து விட்டவர், தேஜுவை வாஞ்சையுடன் தலைவருடி கனிவாகப் பார்த்தார்.

“அப்பா… இதுக்கு மேல டோன்ட் டச்! நோ முத்தா…” அன்பான மிரட்டலில் மனஷ்வினி எச்சரிக்க,

“ஸ்டார்ட் பண்ணிட்டாங்க ப்பா இவங்க அலப்பரைய…” நகுல் நக்கலடிக்க, இருவருக்குமான சண்டை ஆரம்பமாகும் வேளை,

“இன்னைக்கு ரெண்டு பேரும் அமைதியா இருக்கணும்!” மீற முடியாத குரலில் கட்டளையிட்டு விட்டான் ஆதித்யன்.

“என்னடா தங்கம்… மாமா சொல்ற அளவுக்கா சேட்டை பண்றது?” ராஜசேகரும் கடிந்து கொள்ள,

“அதெல்லாம் என்ற பேத்தி சமத்தா இருப்பா சேகர்… சொல்பேச்சு கேக்கறதுல அவ தங்கமாச்சே!” அருணாச்சலம் பெருமை பேச,

“ஒரிஜினலா டூப்ளிகேட்டான்னு உரசிப் பார்த்தா தானே தெரியும்!” கடுப்புடன் முணுமுணுத்த ஆனந்தன் மேற்கொண்டு அவர்களின் பேச்சினை கேட்கப் பிடிக்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.

அதன் பிறகு அனைவரும் விழா ஏற்பாட்டில் மூழ்கிப் போக, இரண்டு பெண்களும் அவரவர் அறைக்கு சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றனர்.

தங்களது தளத்திற்கு வந்ததும், “கார்ஜியஸ்… பேரழகிடி நீ!” மனைவியின் அழகில் மயங்கி அருகில் வந்து கன்னம் தொட முயன்ற ஆதியை தடுத்து நிறுத்தினாள் தேஜஸ்வினி.

“பேச்சோட கண்ட்ரோல் பண்ணுங்க அத்தான். ஃபங்சன் முடியுற வரைக்கும் டோன்ட் டச் மீ, ப்ளீஸ்! என் மேக்கப் போயிடும்!” கண்களால் கெஞ்ச, பெருமூச்சுடன் ஒதுங்கிக் கொண்டான்.

“சிங்காரி… மேக்கப் போட்டுட்டா, புருசனையும் எதிரியா பாக்கறா!” முணுமுணுப்போடு விலகிச் செல்ல,

“எங்கே போறீங்க? டச் பண்ணக் கூடாதுன்னுதான் சொன்னேன்… பக்கத்துல நிக்கக் கூடாதுன்னு சொல்லல!” என்றவள் அவனையும் அருகில் இழுத்துக் கொண்டு கண்ணாடியின் முன் நிற்க, ஆதியின் மனம் முழுதாய் அதிர்ந்து போனது.

உலகப் பேரழகியாய் மனைவி… பக்கத்தில் அவளின் ஜோடியாக, திருஷ்டி பூசணியைப் போல அசிங்கமாய் முகத் தழும்புகளுடன் அவன் நிற்க, அவனையே அவனால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

‘அவளுக்கு, தான் அதிகப்படி அல்ல… மேலே ஏறி வரமுடியாத புதைகுழி!’ என்ற தாழ்வு மனப்பான்மை முதன்முதலாய் மனம் முழுவதும் ஆக்கிரமித்தது.

திருமணத்தன்று தலைப்பாகை அணிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பொழுதுகளில் அத்தனை தத்ரூபமாய் இவனது விகாரம் தெரியவில்லை.

ஆனால் இப்போது சர்வ அலங்கார பூஜிதையாக மனைவி இருக்க, தான் அவளுக்கு அருகினில் நிற்கும் அருகதையற்றவன் என்ற நினைவில் சட்டென்று அவளை விட்டு விலகி நின்றான்.

கணவனின் விலகலை முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட தேஜுவும் அடுத்தநொடி அவனது இறுகிய பாவனையில் துணுக்குற்றாள்.

“என்னாச்சு த்தான்… ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

“ம்ப்ச்… ஒன்னுமில்லடா!” விரக்தியாய் வந்தது பதில்.

“உடம்புக்கு எதுவும் பண்ணுதா? டாக்டருக்கு கால் பண்ணவா, மனுவ வரச் சொல்லவா?” கேள்விகளுக்கு அமைதியாக ஆதி தலைகுனிய,

“என்னன்னு சொல்லுங்க த்தான்! கொஞ்ச நேரத்துல ஃபங்சனுக்கு எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்க!” என்றபடி அவனது தாடையை உயர்த்த அவனது கண்கள் சிவந்திருந்தது.

“சாரி தேஜுமா… உன்னை நான் கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது!” அவனது உளறலை கேட்டதும்,

“உங்கள…” பல்லைக் கடித்த தேஜு,

“என்ன ஒரு ஞானோதயம்? அதுவும் எப்படிப்பட்ட நேரத்துல உங்களுக்கு வந்திருக்கு பாருங்க!” விளையாட்டாகப் பேசி அவனது எண்ணப்போக்கை மாற்ற நினைத்தாலும் அசையாமல் நின்றிருந்தான் ஆதித்யன்.

“உன் அழகுக்கு, நானெல்லாம் ஈகுவலே இல்லடா! உன் லைஃப்-ஐ நான் ஸ்பாயில் பண்ணிட்டேன்!” தொடர்ந்த அவனது ஆற்றாமை பேச்சுகளில் சங்கடப்பட்டு போனாள் மனைவி.

“ஐயோ இப்ப எதுக்கு தேவையில்லாம இந்த சென்டிமென்ட் சீன்? எப்ப இருந்து இப்படி ஒரு கருமம் பிடிச்ச நினைப்பு வந்தது!” லேசாய் கோபம் எட்டிப் பார்த்தது அவளது குரலில்

“அது, இப்பத்தான்… கல்யாணத்தப்பவும் நான் இப்படி கவனிச்சதில்ல, ஆனா இப்ப கண்ணாடி முன்னாடி ஜோடியா நின்னு பாக்கவும்…”

“நின்னு பாக்கவும்… அப்படியே உங்களுக்கு மனசு சுட்டு பொசுக்கிருச்சா! ப்ளீஸ் அத்தான்… உங்க கன்றாவி எண்ணத்தை கை கழுவுங்க…. கமான், ரெஃப்ரெஷ் ஆகி, ஃபங்ஷன் மோடுக்கு வாங்க!” அதட்டலாகச் சொன்னாலும் கேட்பேனா என நின்றிருந்தான் ஆதி.

“எதையும் மனசுல போட்டு அழுத்திக்காதீங்க ப்பா… நாம இப்ப செல்ஃபி எடுத்துக்கலாம். நான் மேலே வந்ததே அதுக்குதான்!” என அவன் அருகில் நின்று கொண்டு அலைபேசியை உயர்த்திப் பிடிக்க, அவனோ முகம் கொடுத்து பார்க்கவில்லை.

கெஞ்சாத குறையாக கணவனை தன்னுடன் நிற்க வைக்க படாதபாடு பட்டுப் போனாள். பலமுறை அவனை சரியாக முகம் பார்க்க வைத்து சுயமி எடுத்து தள்ளினாலும் மசிவேனா என சிலையாக நிற்க, இவளுக்கும் பொறுமை பறந்து போனது.

“எதுக்கு இப்படி பீல் பண்றீங்க? என்னை பாருங்க…” என நேருக்குநேராக தன்னைப் பார்க்க வைத்தவள்,

“என் மனசுல எந்தவிதமான சங்கடமும் இல்ல, சொல்லப் போனா, ஆத்ம திருப்தியோட உங்ககூட வாழற ஃபீல் எனக்கிருக்கு… வீணா எமோசனலா ஃபீல் பண்ணி என்னையும் கஷ்டப்பட வைக்காதீங்க த்தான்… இப்ப என் பேச்சை கேக்கலன்னா, நம்ம ஜூனியர் வந்ததும் உங்கள உதை குடுக்க வச்சே கதற வைப்பேன்!” மிரட்டல், கெஞ்சல் அனைத்தும் கலந்து சொன்னாலும் சிரிப்பு பாதி வருத்தம் மீதியாக இறுகியே இருந்தான்.

“கமான், மை டியர் அத்தான்… இப்ப நாம வரிசையா செல்ஃபி எடுத்துக்கணும். பேஸ் ரியாக்ஷன் மாத்திக்கோங்க… இல்லன்னா இப்பவே என்னோட மேக்கப்பை நான் எடுத்துடுறேன்!” என்றபடி தலையில் வைக்கப் போக,

“ஐயோ, என்ன தேஜூ? இப்படி சட்டுன்னு முடிவு எடுத்து என்னை முழிக்க வைக்கிற… என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா?”

“நல்லா புரிஞ்சதாலதான் சொல்றேன், சீக்கிரம் வாங்க… உங்களைப் பத்தி உங்களுக்கே தெரியலத்தான்! உங்களோட அழகு அற்புதமானது. ஒளிவு மறைவு இல்லாம எல்லோரையும் கேர் பண்ணி, பொறுப்பை எடுத்துக்கறீங்க பாருங்க… அதெல்லாம் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

உங்க தொழில் பிரச்சனையை குடும்பத்துக்குள்ள கொண்டு வராம, எல்லாப் பக்கமும் சாமளிச்சு நடமாடுறது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? அதெல்லாம் இங்கே உள்ள யாருக்கும் இல்ல… எல்லாருக்கும் சவுண்டு விட்டு கெத்து காட்ட மட்டுமே தெரியும்! ஆனா, என் அத்தானுக்கு மட்டும்தான் காரியத்தை கச்சிதமா முடிக்க தெரியும்!” அவன் நெஞ்சில் கை வைத்து நிமிர்வாக கூறினாள்.

“என்னை சமாதானப்படுத்த இன்னும் என்னென்ன சொல்லுவ தேஜுமா?”

“அட போய்யா… உங்கிட்ட சொன்ன நேரத்துல வெளியே நாலுபேர் கிட்ட சொல்லியிருந்தா, இந்நேரம் எனக்கு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்திருப்பாங்க… உங்களுக்கு புரிய வைச்சே நான் டயர்ட் ஆகிட்டேன்!” என்றதும் ஆதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“ஜூஸ் சொல்றேன்டா!” இண்டர்காமை கையில் எடுக்க,

“வேண்டாத நினைப்பை எல்லாம் துடைச்சு போட்டுட்டு, ஒழுங்கா செல்ஃபிக்கு வந்து நில்லுங்க.. இல்லன்னா அவ்வளவு தான்!” விரலை உயர்த்தி எச்சரிக்க,

“இல்லன்னா என்னடி பண்ணுவ?” என்றவனின் குரல் இயல்பிற்கு திரும்பி இருந்தது.

“வர்ற ஆத்திரத்துக்கு உங்களை கடிச்சு வைக்கத் தோணுது. ஆனா, மேக்கப் போயிடும், லிப்ஸ்டிக் அழிஞ்சிடும்னு கோபத்தை அடக்கிட்டு இருக்கேன். ஃபங்ஷன் முடிஞ்சதும் இருக்கு உங்களுக்கு…” கோபப்பார்வையில் கணவனை தாளித்து விட்டே, தன் எண்ணம் போல் சுயமிகளை எடுத்து தள்ளினாள் தேஜூ.

மனைவியின் தோள் அணைத்து, ஒட்டி நின்றே கணக்கில்லா புகைப்படங்களை நிறைவாய் எடுத்துக் கொண்டான் ஆதித்யன்.

***

தங்களது தளத்தில் மனஷ்வினி நுழையும் பொழுது, மிக அமைதியாக அமர்ந்திருந்தான் ஆனந்தன். மனமெல்லாம் தன் மனைவி, தன்னை ஏறெடுத்து பார்ப்பதே இல்லை என்கிற கழிவிரக்கம் மட்டுமே முழுதாய் ஆக்கிரமித்து இருந்தது.

கடந்த சில நாட்களாக, ‘கணவனாக என் ஆளுமையை அவளுக்கு உணர்த்தி இருக்க வேண்டுமோ!’ என்ற தாறுமாறான எண்ணம் வேறு இவனது மனக் குழப்பத்திற்கு சாமரம் வீசத் தொடங்கி இருக்க, பலத்த யோசனையுடன் அமர்ந்திருந்தான்.

அவன் முன்பு சென்று நின்றவள், “மேக்கப் ஃபெர்பெக்டா இருக்கா மச்சான்… இந்த புடவையில நான் எப்படி இருக்கேன்?” இடம் வலமாக அரை வட்டமடித்துக் காட்டி ஆசையுடன் கேட்டாள் மனு.

நாவல்பழ நிறத்தில் மல்டிகலர் ஸ்டோன் வொர்க் திஸ்ஸு சில்க் அவளுக்கு மிக அழகாய் பொருந்தி இருந்தது.

“சூப்பர்… அதை விட இந்த லெஹங்கா செம்மையா இருக்கும்.” என்றபடி தனது அருகில் இருந்த கவரை அவள் கைகளில் திணித்தான்.

ஏதோ ஆசையில் மனைவிக்கென வாங்கியிருந்தான். ‘எப்படி, இப்படியெல்லாம்?’ யாராவது கேட்டாலும் ‘தெரியாது!’ என அசட்டையுடன் கடந்து விடுவான் ஆனந்தன்.

பேபி பிங்க் மற்றும் டார்க் பிங்க் நிறத்தில் நெட்வொர்க் செய்யப்பட்டிருந்த உடை மிகப் பகட்டாக இருந்தது. ‘நீயா வாங்கினாய்?’ நம்ப முடியாத பார்வையில் மனஷ்வினி கேட்க,

அதைப் புரிந்து கொண்டவனாக, தனது மொபைலில் இருந்த குறுஞ்செய்தியை காண்பித்தான். ‘ஆர்டர் ரிசீவ்டு.’ என்றிருந்த செய்தியைப் பார்த்த பிறகே உடையை ரசித்தாள் மனு.

“சோ நைஸ்… ரொம்ப காஸ்ட்லி போல?”

“நத்திங் மச்… கார்ட் அன்ட் ஆஃபர்ல போடும்போது நல்ல டிஸ்கவுன்ட் கிடைச்சது.” என்றவனின் கையில் இருந்த அலைபேசியை சட்டென்று பிடுங்கிக் கொண்டாள்

பணம் செலுத்தப்பட்ட செய்தியை திறந்து பார்த்தாள் எல்லாம் கழிந்து விலை ஐம்பத்தி மூன்றாயிரம் செலுத்தப்பட்டதிற்கான செய்தி இருந்தது. மீண்டும் நம்ப முடியாமல் விழி விரித்தாள்.

“ஏன் இப்படி தேவையில்லாம?”

“உனக்கு எடுத்து கொடுக்க எனக்கு காரணம் தேவையில்ல!” ஆனந்தன் உரிமையோடு கூறியதைக் கேட்டு க்ளுக்கென்று சிரித்த மனு,

“சோ போரிங்… உங்களுக்கு இந்த சென்டிமென்ட் செட் ஆகல மச்சான்!” உதடு சுழிக்க,

“இப்ப ஃபங்ஷனுக்கு இதை கட்டு!” அழுத்தத்துடன் கூறினான் ஆனந்தன்.

“டூ லேட்… முன்னாடியே நீங்க கொடுத்திருக்கணும். இப்ப சான்சே இல்ல… ரெண்டு மணி நேரம் ஸ்பென்ட் பண்ணி மேக்கப் போட்டு புடவை கட்டியிருக்கேன்! ஈசியா எதையும் ரிமூவ் பண்ண மாட்டேன்!” அவனிடமே உடையை திருப்பிக் கொடுக்க, கோபமாய் விசிறி எறிந்தான்.

“என்னைத்தான் அவாய்ட் பன்றேன்னா நான் வாங்கிக் கொடுத்ததையும் அவாய்ட் பண்ணுவியா?” குரல் ஓங்கி ஒலிக்க,

“அதானே பார்த்தேன்… என்னடா, ஃபுளோருக்கு வந்து இவ்வளவு நேரமாகியும் ஒழுங்கா இருக்கோமேன்னு நினைச்சு முடிக்கல…. இதோ ஆரம்பிச்சாச்சு!” என்று வீசி எறிந்த உடையை சுட்டிக் காட்டினாள்.

“நீங்க நினைச்ச நேரத்துக்கு, உங்க இஷ்டத்துக்கு ஆட என்னால முடியாது. ஈவ்னிங் போட்டு காட்டுறேன்!” சற்றே இவள் தளர்ந்து போக, அவன் வீம்பு பிடிக்க ஆரம்பித்தான்.

“என் ஆசையை மதிக்க மாட்ட… உன்னோட முடிவுல தான் நிப்பே… அப்படித்தானே?”

“புத்தியோட பேசினா, நான் சொல்றது புரியும். கீழே போறேன்… வந்து சேருங்க!” அலட்சியமாய் கூறி, அங்கிருந்து சென்று விட்டாள்.

ஆத்திரம் அடங்கவில்லை இவனுக்கு! ‘ச்சே… என்னை இவ மதிக்கவே மாட்டாளா!’ உள்ளுக்குள் கனன்று கொள்ள மட்டுமே அவனால் முடிந்தது.

***

வளைகாப்பு விழாவிற்கு மனைவியை அழைத்து வந்து விட்டார் ராஜசேகர். இடைப்பட்ட நாட்களில் சுலோச்சனாவின் அண்ணன் சமாதானம் பேசி தங்கையை கணவனுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தி சென்றிருக்க, சற்றே மனம் தெளிந்து பழையபடி ராஜசேகர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார் சுலோச்சனா.

வீடு மரமாத்து வேலைகள் முடித்து, அங்கேயே தங்கத் தொடங்கியிருந்த நேரத்தில், மனைவியும் வந்து சேர, அவரால் தவிர்க்க முடியவில்லை. வெறுத்தாலும் பிரிந்தாலும் மனைவி எனும் உறவு ராஜசேகரின் வெறுப்பினை தளர வைத்திருந்தது.

சுலோச்சனாவும் பெயரளவில் மட்டுமே நடமாடிக் கொண்டிருந்தார். பெண்கள் அவரை பாவம் பார்க்காமல் தள்ளி நிறுத்தியிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து நகுலும் பட்டும் படாமல் பேசி ஒதுங்கி விடுவான்.

பிள்ளைகளின் செயலில் வருந்திப் போனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நடமாடினார் சுலோச்சனா. எந்த பேச்சிற்கும் அலட்டிக் கொள்வதில்லை. விழா ஆரம்பிக்கும் நேரத்தில் பொறுப்பான தாயாக தேஜுவின் அருகில் வந்து நின்று கொண்டார்.

தணிகைவேல் வகையறாவில் இருந்து வயதில் முதிர்ந்த சுமங்கலி ஒருவர், தேஜஸ்வினிக்கு வளைபூட்டி நலங்கு வைத்து விழாவினை தொடங்கி வைக்க, மற்றவர்களும் வந்து வளைபூட்டி தம்பதிகளை ஆசீர்வதித்து சென்றனர்.

மனைவியின் அருகில், மனம் நிறைந்த மகிழ்ச்சியில் ஆதி அமர்ந்திருக்க, பூரிப்புடன் அவனையே நொடிக்கு ஒருமுறை பார்த்து மனம் கனிந்தாள் தேஜஸ்வினி.

விழா முடியும் சமயத்தில், முதலில் வளைபூட்டிய பெண்மணி, விடாமல் பேசி சிறிய ஜோடியை, பெரிய ஜோடிக்கு அருகில் அமர வைத்து விட்டார்.

“கூடிய சீக்கிரம் உனக்கும் வாரிசு வரணும்னு தான் இந்த சடங்கு செய்யுறது ராசா… குழப்பிக்காதே! கிராமத்துல வளந்தவனுக்கு தெரியும் தானே! உன் பொஞ்சாதிக்கு எடுத்து சொல்லி புரிய வை!” ஆனந்தனிடம் விளக்கம் கூறியவர்,

யாருக்கும் பேசும் வாய்ப்பினை அளிக்காமல் தன்போக்கில் மனுவிற்கு வளையல் போட்டு தம்பதிகளுக்கு நலங்கு வைத்து ஆசீர்வதிக்க, மனஷ்வினியால் எதையும் தடுக்க முடியவில்லை.

“எழுதாத பரீட்சைக்கு ரிசல்ட் கேட்கிறதெல்லாம் நியாயமே இல்ல மச்சான்!” மனு முணுமுணுக்க, அது அரைகுறையாக முதியவளின் காதிலும் விழுந்து தொலைத்தது.

“என்ன ராசாத்தி சொல்லுற… விளங்கல எனக்கு!”

“அது பாட்டி… நாளைக்கு பரீட்சை இருக்கு, சீக்கிரம் இந்த சடங்கு முடியுமான்னு கேக்கறா!” மனைவிக்கு வெண்சாமரம் வீசி, சால்ஜாப்பு பேசியது சாட்சாத் ஆனந்தனே!

“அவ்வளவுதான் முடிஞ்சிட்டு…” என விரைவாக முடித்து விட்டு நகன்றார் அந்தப் பெண்மணி.

“பாருடா… உள்ளதைச் சொல்ல மச்சானுக்கு பயந்து வருது போலேயே!” மனையை விட்டு எழுந்து ஆனந்தனோடு நடந்தவளின் வாயில் வாஸ்து சரியில்லை!

“யாருக்கு பயம்? பரீட்சை எழுத நான் ரெடி, நீ ரெடியா?” யோசிக்காமல் கேட்டவனை நேர்கொண்டு பார்த்தவள்,

“எனக்கு படிப்பு முடியணும்!”

“அதுவரைக்கும் பாடம் எடுக்கலாம் தானே… இன்னைக்கு ஸ்டார்ட் பண்ணிடுவோமா? பயம் உனக்கா எனக்கான்னு பார்த்துடலாம்!” பல அர்த்தங்களுடன் இவன் பேசிக் கொண்டே போக,

“எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல!” வேண்டா வெறுப்பாக கூறிவிட்டு அவள் விலகிச் செல்ல, ஆனந்தனுக்குள் கனன்ற நெருப்பு பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்தது.

அதற்கு பிறகான பொழுதுகளில் கணவனை நேருக்கு நேராகப் பார்ப்பதை கூட தவிர்த்தாள் மனஷ்வினி. இரண்டு முறை அவள் அருகே வந்து, “இன்னைக்கு பாடம் எடுத்தே ஆகணும். ரெடி ஆகிக்கோ!” ஆனந்தன் காதிற்குள் மிரட்டி சென்றிருக்க நடுங்கியே போனாள்.

இரவு தொடங்கியும் இவள் கீழே சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்த தேஜுவும், “போதும் மனு… உன் ப்ளோருக்கு போயி குளிச்சுட்டு தூங்குடா!” தன்போக்கில் கூறிவிட்டு கணவனுடன் மேலே சென்று விட்டாள்.

அவளுக்கும் அன்றைய நாளின் அலைகழிப்புகள் சோர்வினைக் கொடுத்திருக்க, தங்கையின் பூனை நடமாட்டத்தை கவனிக்கத் தவறி இருந்தாள்.

***