நான் பிழை… நீ மழலை… 38

நான்… நீ…38

தேஜஸ்வினியின் வளைகாப்பு முடிந்த மறுநாளே மிருதுளாவின் மீது தொடுத்த வழக்கினை ஆனந்தனை விட்டு வாபஸ் வாங்க வைத்து விட்டான் ஆதித்யன்.

“கேஸ் கோர்ட்டுக்கு வந்தா, நீதான் பதில் சொல்ற இடத்துல நிக்க வேண்டி வரும் ஆனந்த்! மிருவுக்கு ரெண்டாவது தடவையா நீ, பாட்டியோட தாலிய போட்டப்போ, நீ மேஜர்… அவ மைனர்! இந்த ஒரு ரீசனே போதும், கேஸ் உனக்கெதிரா திருப்பி விட்டுடும். எப்படியும் இந்த கல்யாணம் செல்லாதுன்னு தீர்ப்பு வந்திரும். ஆனா உன்னை குற்றவாளியா முத்திரை குத்திடுவாங்க…

சொத்து பிரிக்கிற சிக்கல்லதான் உங்களுக்கு நடந்த குழந்தை கல்யாணத்தை இணைச்சு பதிவு பண்ணியிருக்காங்க… கோர்ட்டுக்கு போனா தீர்வு கிடைக்க வருசக்கணக்கு ஆகலாம். அதோட இல்லாத பொல்லாத வார்த்தைகளும் வளரும்.

அதனால யாருக்கு என்ன லாபம் சொல்லு? நல்லவிதமா இதை பேச்சு வார்த்தையில சுமுகமா முடிக்கப் பார்ப்போம். வீணா பிரச்சனை இழுத்து விட்டு யார் என்ன சாதிக்கப் போறோம் சொல்லு!

குடும்பத்தை பார்க்க வேணாமாடா… நம்மை நம்பி வந்த பொண்ணுங்களுக்கு நிம்மதியை கொடுக்காத வாழ்க்கையை வாழுறதுல அர்த்தமே இல்லடா!” ஆதி உணர்வு பூர்வமாய் சொல்லச் சொல்ல அமைதியாகக் கேட்டுக் கொண்டான் ஆனந்தன்.

ஆதியின் பேச்சினை உள்வாங்கியவனுக்கு இறுதியாக மனு கோபத்துடன் பேசிவிட்டு சென்றது ஒரு நிமிடம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. அந்த நேரத்துக் குழப்பம் இவனது மனதை தடம்புரள வைப்பதாய் இருக்க, சட்டென்று இயல்பிற்கு திரும்பினான்.

அவனுக்குள் அடங்காமல் ஆடிக் கொண்டிருந்த உஷ்ணம் குளிர்ந்து பஸ்பமானதைப் போன்று அனைத்து விசயங்களையும் வெகு சாதரணமாகவே எடுத்துக் கொள்ளத் தொடங்கி இருந்தான் ஆனந்தன். அவனை நினைத்து அவனுக்கே ஆச்சரியம்!

‘நான்தானா இது! எப்படி எந்த விசயத்தையும் என்னால இவ்வளவு கூலா ஹாண்டில் பண்ண முடியுது?’ பிரமிப்பு அடங்காமல் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அவ்வளவே!

நன்றாக ஆராய்ந்திருந்தால் அதன் காரணத்தை அறிந்திருப்பான். தனது அழுத்தங்கள் தடம்மாறிப் போன இடத்தையும் உணர்ந்திருப்பான். இவன் அப்பேற்பட்ட தீர்க்கதரிசி அல்ல… மிகச் சாதாரணமான மனிதன்!

உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் பெருமதிப்பு கொடுத்து காரியமாற்றும் சந்தர்ப்பவாதி இவன். ஆனால் இயல்பில் நல்லவன். அது மற்றவர் இவனிடம் பழகும் முறையை பொறுத்தது.

ஆதியின் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக கேட்டுக் கொண்டு அதன்படியே நடந்து கொள்ள ஆரம்பித்தான் ஆனந்தன். இவன் பொருட்டு ஆதி அலைந்து கொண்டிருக்க, தேஜஸ்வினி கணவனின் அலுவல் வேலைகளை முயன்ற அளவிற்கு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டாள்.

தனது பிரச்சனைகளின் இறுதி நிலையை மனதில் கொண்டே ஆனந்தன் நாட்கணக்கில் பொள்ளாச்சியில் தங்கிக்கொள்ள, ராஜசேகரும் சுலோச்சனாவும் கோவைக்கு சென்று மனு, நகுலுடன் தங்கியிருக்க ஆரம்பித்தார்கள். படிப்பில் அதிகப்படியான கவனத்தை செலுத்தியதால் மனஷ்வினியின் அழுத்தமான மாற்றத்தினை யாரும் கண்டு கொள்ளவில்லை.

***

சரியாக இரண்டு வாரங்கள் கழித்து, தணிகைவேலின் பாரம்பரிய வீட்டில் அன்றைய தினம் பெரிய மனிதர்களின் கூட்டம் கூடி இருந்தது. ஒய்வு பெற்ற காவல் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் அந்த பகுதியைச் சேர்ந்த தாசில்தார், கிராம அதிகாரி என பத்து நபர்களுக்கும் மேற்பட்டோர் ஒன்றாக அமர்ந்து அனைத்து கோப்புகளையும் புரட்டி பார்த்து தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களுடன் ஆதித்யன், அருணாச்சலம் அமர்ந்திருக்க, ஆனந்தன் சற்று இடைவெளி விட்டு தனியாக அமர்ந்திருந்தான். சென்ற வாரமே கதிரேசன் சிறையில் இருந்து விடுதலை ஆகி வெளியில் வந்திருக்க, அவனுமே ஒரு ஓரமாக தனியாக அமர வைக்கப்பட்டு இருந்தான்.

ஆனந்தனை இறுக்கப் பிடித்திருக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் இன்றைக்கு தீர்வு காணும் விதமாக அன்றைய கூட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அனைவரின் முன்னிலையில் விசாரணைக்காக மிருதுளா வரவழைக்கப்பட்டு ஆனந்தனுக்கு எதிர்திசையில் அமர வைக்கப்பட்டாள்.

தன்னுடன் ஏழு வயது சிறுவனையும் அழைத்து வந்திருந்தாள் மிருதுளா. தன்னைப் பற்றியும் தனது குழந்தையைப் பற்றிய விவரங்களையும் அடங்கிய கோப்பினை அதிகாரிகளின் முன் வைத்து விட்டு அமர்ந்தாள்.

புதிய மனிதர்களைப் பார்த்ததும் சிறுவன் முகம் சிணுங்கி, தனியாக அமரமாட்டேன் என அழ ஆரம்பிக்க, அவனை வெளியே நிற்கும் ஸ்ரீராமிடம் விட்டுவிட்டு வந்தார்  அருணாச்சலம்.

மிருதுளாவின் தோற்றத்தை உற்று கவனித்தான் ஆதித்யன். இருபத்திநான்கு வயதுப் பெண் இவள். கையில் ஏழு வயது குழந்தை. தனது உறவையும் உரிமையையும் உறுதிப்படுத்திக் கொள்ள பதினெட்டு வயது முடியும் முன்பே பிள்ளை பெற்றுக் கொண்டவள்.

சிலரின் தலையெழுத்து வீட்டின் மூத்தக் குடிமக்களால் எவரும் கணிக்க முடியாத அளவிற்கு கேலிக்கூத்தாகி, பலரின் பார்வைக்கு வேடிக்கை பொருளாகிப் போய் விடுகின்றது. அதற்கு மிருதுளாவின் வாழ்க்கை ஒன்றே சாட்சி!

தனக்கு வலுக்கட்டாயமாக கட்டப்பட்ட தாலிக்கு எதிராகவே இன்னொருவனுடன் வாழ்ந்து பிள்ளையையும் பெற்றுக் கொண்டவள். வெளிப்பார்வைக்கு வரம்பு மீறிய உறவென்று பார்க்கப்படும் துரதிருஷ்ட வாழ்க்கை இவளுடையது.

எப்படியாவது வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறாள். அதற்கு இவள் எடுக்கும் முயற்சிகள் சொல்லி மாளாது.

“உங்க பிரச்சனை என்னன்னு சொல்லுங்க மிருதுளா… உங்க எதிர்பார்ப்பு, கோரிக்கை என்ன?” கூட்டத்தில் அமர்ந்திருந்த வழக்கறிஞர் ஒருவர் கேட்ட கேள்வியில் அனைவருக்கும் நிமிர்ந்து வணக்கம் வைத்தாள். ஆதி, ஆனந்தன் இருவரையும் ஒருநொடி தீர்க்கமாய் பார்த்தாள்.

தனது ஊர், பெற்றோர், தாத்தா மற்றும் குடும்ப பாரம்பரியத்தைக் கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சினைத் தொடர்ந்தாள்.

“ஆனந்தனும் நானும் கல்யாணம் பண்ணிட்டு வாழணும்ங்கிற ஒரே காரணத்துக்காகவே எங்க தாத்தா, எங்க ரெண்டு பேரையும் சம்மந்தப்படுத்தி உயிலை எழுத வைச்சார். அவர் எதிர்பார்த்தது நடக்கல… அந்த ஒரே காரணத்துக்காக என்னோட பூர்வீக சொத்தை அனுபவிக்க எனக்கு உரிமையில்லைன்னு சொல்றதுல என்ன நியாயம்? என்னை கல்யாணம் பண்ணிக்காத ஆனந்தன் மட்டுமே அந்த சொத்துக்களுக்கு முழு உரிமை கொண்டாடுறது எந்த வகையில சரியாகும்!” என்றவள் அழுத்தமாக ஆனந்தனைப் பார்த்தாள்.

‘இந்த நியாயத்தை முன்வைத்து தானே இவனிடம் கெஞ்சியது, மிரட்டியது எல்லாம்! ஏற்றுக் கொண்டானா இவன்? யாரென்றே தெரியாத பெண்ணிடம் வரைமுறையின்றி பேச வைத்து, என்னை அலைகழித்து விட்டானே பாடுபாவி!’ அவளது மனம் ஆனந்தனை வசைபாடியதை அவள் மட்டுமே அறிவாள்.

வழக்கறிஞர் மேற்கொண்டு அவளிடம் பல கேள்விகளை கேட்டறிந்த பிறகு, ஆனந்தனின் பக்கம் கேள்விகளைத் திருப்பினார்.

“இதுக்கு உங்க பதில் என்ன ஆனந்தன்? உயில் எழுதி வைத்தவர் உயிரோட இல்லாத சூழ்நிலையில, அவரோட ஆசையும் நடக்கவே நடக்காதுன்னு தெரிஞ்ச பிறகும் எப்படி நீங்க மட்டுமே சொத்துகளை அனுபவிக்கலாம்? எந்த காரணத்தை மனசுல வைச்சு இந்த பொண்ணுக்கு சரிபாதி சொத்துக்களை பிரிச்சு கொடுக்க முடியாதுன்னு சொல்றீங்க?” அடுக்கடுக்கான கேள்விகள் ஆனந்தனின் முன் வைக்கப்பட்டது.

“எங்க ரெண்டுபேரோட வாரிசுகளுக்கு மட்டுமே சொத்து மேல உரிமைன்னு அந்த உயில்லயே இருக்கு. அதையும் மீறி சரிபாதி சொத்துக்களை இவ பேருக்கு மாத்திக் கொடுத்தா, அதை பாரமரிச்சு காப்பத்துற சக்தி இவளுக்கு சுத்தமா கிடையாது.” ஆனந்தனின் வெளிப்படையான பதிலில் மிருதுளா வெகுண்டு போனாள்.

“இது அபாண்டம்… இத்தனை வருசமா என் பங்குக்குன்னு வர்ற லாபத்துலதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்! அதை யாருக்கோ தாரை வார்த்து கொடுத்து நான் என்ன சீரழிஞ்சா போயிட்டேன்?” கோபத்துடன் பேசினாள்.

“எதிர்தரப்பு பேசும்போது அமைதியா இருக்கணும்மா… உங்களுக்கும் பேச வைப்பு தருவோம்!” வழக்கறிஞர் கூற அமைதியானாள்

“இத்தனை வருசமா இந்த சொத்து மூலமா வர்ற வருமானத்துலதான் இவங்க மொத்தக் குடும்பமே வாழ்ந்திட்டு வருதுன்னு, மிருதுளாவே தெளிவா சொல்லிட்டாங்களே சார்…  

இந்தப் பொண்ணு வாழுற குடும்பத்துக்கான சுய சம்பாத்தியமோ, தனி நபருக்கான மாதாந்திர வருமானமோ எதுவும் நிலையா இல்லாத பட்சத்துல சொத்துக்களை இவ பேருக்கு மாத்தி கொடுத்தா, அதையும் இவளோட குடும்பம் உக்காந்து தின்னே அழிச்சுடுவாங்க!

அதுவுமில்லாம உயில்படி இவளுக்கு வாரிசு இருக்கும் போது, இவ பேருக்கு எப்படி சொத்துக்களை மாத்திக் கொடுக்க முடியும்? இதுநாள் வரைக்கும் சொத்துகளை அனுவிக்கிறேன்னு நான் எந்தவிதமான கூடுதல் சலுகையோ, பணத்தையோ சொத்து மூலமா வர்ற வருமானத்துல இருந்து நான் எடுத்துக்கிட்டது கிடையாது… இவளுக்கு லாபத்தோட பங்கு எவ்வளவு போகுதோ அதே அளவு பணம்தான் என் கணக்குலயும் வரவு வைக்கப்படுது!” மொத்தமாய் பதிலளித்து அமைதியானான் ஆனந்தன்.

“இப்படி காரணங்களை அடுக்கினா, இந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு? எதுவும் யோசனை பண்ணி வைச்சுருக்கீங்களா ஆனந்தன்?” மீண்டும் அவனிடமே கேள்வி கேட்கப்பட்டது.

“மிருதுளாவோட மகன் மேஜர் ஆகுற வரைக்கும் இப்படியே இலாபத்தை மட்டும் எடுத்துக்கட்டும்! அதுக்கு அப்பறம் சட்டப்படி பாதி சொத்தை அவன் பேருக்கு மாத்தி எழுதி வைக்க சம்மதிக்கிறேன். அதுவரைக்கும் ஃபாக்ட்ரி கட்டுறது, சொத்தை அடமானம் வைச்சு லோன் வாங்குறதுன்னு எந்த தவறான முயற்சியும் இவங்க செய்யாம இருக்கட்டும்!” ஆனந்தன் தீர்மானமாக கூற பெருத்த சலசலப்பு ஏற்பட்டது.

ஆனந்தனின் பேச்சிற்கு மிருதுளா ஒப்புக் கொள்ளவே இல்லை. சொத்து ஆசையில் இல்லாதவற்றை இட்டுகட்டிப் பேசுகிறான் என அவனையே குற்றம் சாட்டினாள். இறுதி முடிவாக அங்கிருந்தவர்களில் ஒருவர் தீர்வினை முன்வைத்து பேச ஆரம்பித்தார்.

“உயிலில் எழுதியுள்ள படியே இருவரின் வாரிசுகளின் பெயர்களுக்கே சொத்துகள் பிரிக்கப்பட வேண்டும். வாரிசுகள் மேஜரான பிறகே அவர்களின் சுய ஒப்புதலின் பேரில் சொத்துகளின் மீது மாற்றங்களை கொண்டு வரலாம். அதுவரை ஆனந்தன், மிருதுளா இருவரும் கார்டியன் ஸ்தானத்தில் இருந்து பாதுகாத்து வந்தால் போதுமானது. இப்பொழுது சொத்துக்களை பிரிப்பதற்கும் சாத்தியக்கூறுகள் இல்லை.” எனவும் முழுதாய் அதிர்ந்து போனாள் மிருதுளா.

“ஏனென்றால் இரு பக்கமும் சமமான வாரிசுகள் இல்லை. அதனால் இப்போதைய நடைமுறை எப்படி உள்ளதோ அப்படியே நடத்திக் கொள்ள வேண்டியது. இருபக்கமும் சமதையான வாரிசுகள் வரும் பட்சத்தில் பிரித்துக் கொள்ளலாம்.” என முடித்து விட யாருக்கும் திருப்தி இல்லை.

‘இதற்காகவா போராடியது!’ என்று மிருதுளாவும், ‘இந்த பிரச்சனைக்கு முடிவே கிடைக்காதா?’ என்ற அலுப்பு ஆதிக்கும் வந்தே விட்டது.

சொத்துக்கள் வேண்டாமென்று எழுதிக் கொடுத்து விடலாம் என்றாலும் அதற்கும் வழியில்லை. உயிலின் படி வாரிசுக்கு சேரப்போகும் சொத்துகளை ஆனந்தன் வேண்டாமென்று கூற முடியாது.

அதன் மூலம் வரும் வருமானத்தை உபயோகித்துக் கொள்ளாமல், பத்திரமாக பாதுகாத்து வருங்கால சந்ததிக்கு வேண்டுமானால் கொடுக்கலாம். அதுதான் விதி! தீர்வே காணப்படாத சிக்கலில் மதியம் வரை பேச்சுகளை வளர்த்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

சற்றுநேர இடைவெளிக்கு பிறகு அதிருப்தியுடனே கூட்டம் கூடியது. ஆதித்யனின் சார்பில் வழக்கறிஞர் கோரிக்கை ஒன்றை வைக்க அதை பற்றி விவாதித்து மிருதுளாவிடமும் விளக்கம் கூறி ஒப்புதலைக் கேட்டனர்.

“வாரிசுகளுக்கு மட்டுமே உரிமைன்னு இப்பவே சரிபாதியா சொத்துக்களை பிரித்துக் கொள்ள ஆனந்தன் தயாரா இருக்கார். ஆனால் உங்க மகன் மேஜர் ஆகுற வரைக்கும் நீங்க அந்த பத்திரங்களை உரிமையாக வைத்துக் கொள்ள முடியாது.

உண்மையான சொத்துப் பத்திரத்தை இருவருக்கும் பொதுவான வங்கிப் பெட்டகத்தில்(லாக்கர்) பத்திரப்படுத்தி, அதன் விவரங்களை வழக்கறிஞரிடமோ அல்லது இருவருக்கும் பொதுவான பெரிய மனிதரிடமோ சாட்சிகளை முன்வைத்து ஒப்படைக்க வேண்டும். இது மட்டுமே சாத்தியம்.

நிலத்தை காட்டி குத்தகை முறையில் பணம் பெற்றுக் கொள்ளலாமே தவிர அடமானம் வைக்க கூடாது. தொழிற்சாலை அமைப்பவர்களிடம் அப்படியான ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்டித் தொழிலைத் தொடங்கலாம். தீர்வு இதுதான்! இப்ப நீங்கதான் பதில் சொல்லணும்!” என்று மிருதுளாவிடம் சொல்லப்பட, அவளுமே சற்று யோசித்தாள்.

தனக்கு சேரப்போகும் சொத்துகளை எந்த நிலையிலும் தன் கையை விட்டுப் போய் விடக்கூடாது என யோசித்து செயலாற்றும் அத்தை மகன்கள் மீது லேசான கரிசனம் கூட ஏற்பட்டது அவளுக்கு! எந்த மறுப்பும் பேசாமல் சரியென்று ஒப்புதல் அளித்து விட்டாள். ஸ்ரீராமிடம் கூட கலந்து ஆலோசிக்கவில்லை அதுதான் அனைவருக்கும் ஆச்சரியம்!

அடுத்தபடியாக மிருதுளா செய்த காரியம், அனைவரையும் விழியுர்த்திப் பார்க்க வைத்து. இன்று வரையில் வேண்டா வெறுப்பாக, தொட்டுத் தொடர்ந்து வரும் மிருதுளாவின் கழுத்தினை இறுக்கியிருந்த அவளது பாட்டியின் தாலிக்கொடி… அதை தனது கைப்பையில் இருந்தே வெளியே எடுத்து வைத்தாள்.

“எனக்கும் மானம் ரோசம் இருக்கு… தாலிக்குரிய மரியாதை என்னன்னு எனக்கும் தெரியும். என் பிள்ளை மேல சத்தியமா இந்த தாலியோட நான் ஸ்ரீராம் கூட குடும்பம் நடத்தல… இந்த காலத்துல லீவ் இன் ரிலேசன்ல குடும்பம் நடத்துறதா நினைச்சுதான் இப்ப வரையிலும் நான் வாழ்ந்திட்டு வர்றேன். என் பூர்வீகச் சொத்துகளோட உரிமைக்கான துருப்பு சீட்டு இந்த தாலியா இருந்ததால மட்டுமே, இதை நான் ஆனந்தன் கிட்ட கொடுக்கல…” என்று தீர்க்கமாய் கூறியவள்,

ஆதியைப் பார்த்து, “இனிமே எனக்கும் உங்களுக்கும் இடையில எந்த உறவோ, உரிமையோ இல்ல… குறிப்பா ஆனந்தன் கூட எனக்கு நடந்த பால்ய விவாகம் செல்லாதுன்னு தனியா ஒரு பத்திரம் எழுதச் சொல்லு ஆதி! கையெழுத்து போட்டு அந்த பிரச்சனையையும் இன்னையோட தலை முழுகிடுறேன்!” முடிவாக கூறியவளை மெச்சுதலாகப் பார்த்தான் ஆதித்யன்.

தன் உரிமைக்கு, தானே பொறுப்பேற்றுக் கொண்டு வளர்ந்த மிருதுளாவின் நிமிர்வு அவளைப் பற்றி நல்லவிதமாவே யோசிக்க வைத்தது. வயது, உறவு என்ற எதையும் பொருட்படுத்தாமல் ஆதி, ஆனந்தன் என்றே இருவரையும் பெயர் கூறி அழைத்து பேசிய விதத்திலும் வெறுப்பினை காட்டிக் கொள்ளவில்லை. அனைத்துவித பேச்சு வார்த்தைகளும் திருப்தியாக முடிந்து, அதன்படியே பத்திரம் எழுதுவதற்கும் மாதிரி கொடுக்கப்பட்டது.

இருவரது குடும்பத்திற்கும் பொதுவான முந்தைய தலைமுறை என்ற வகையில் கதிரேசனிடம் ஒப்புதல் மற்றும் சாட்சிக் கையொப்பமும் பெறப்பட்டது. இதே போன்று குடும்ப நண்பர் என்ற முறையில் அருணாச்சலத்திடமும் அவ்வாறே கையொப்பம் பெறப்பட்டன.

அனைத்தும் சுமூகமாய் முடிந்து, அதிகாரிகள் கலைந்த நேரத்தில், “டேக் கேர் மிரு!” ஆதி அக்கறையுடன் மிருதுளாவைப் பார்த்துக் கூற, ஒப்புதலாக தலையசைத்து ஏற்றுக் கொண்டாள்.

“ஸ்ரீராம் கிட்ட ஜாக்கிரதையா இருக்கப் பாரு! சீக்கிரம் அவனைக் கல்யாணம் பண்ணிக்கோ!” ஆனந்தனும் தன் பங்காக கூற,

“எனக்கு தெரியும் ஆனந்த்… எனக்கு அவனோட அன்பு, அரவணைப்பு இருந்தா போதும். ஆனா, அவனுக்கு என் அன்போட என் சொத்தும் சுகமும் வேண்டியிருக்கு. அது கேள்விக்குறியான நேரத்துல அவனோட சுபாவம் கொஞ்சம் தடம் புரண்டு போயிருக்கலாம். ஆனா இனிமே அது தொடராது. அதுக்கு நான் விடமாட்டேன்.

காலத்துக்கும் என் மேற்பார்வையில நடக்கற மாதிரிதான் வாழ்க்கையையும் தொழிலையும் அமைச்சுக்க நான் பிளான் பண்ணியிருக்கேன். அதனால எனக்கு கவலை இல்லை. அப்படியே பிரச்சனை வந்தாலும் நிச்சயமா உங்களைத் தேடி வந்து, உங்க குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்த மாட்டேன்!” என்றவளின் பார்வை ஆனந்தனை ஊடுருவிச் செல்ல, சட்டென்று தலைகுனிந்தான்.

சொத்து சுகத்தை விட இவளுக்கு, தான் அணிவித்த தாலியை நினைத்து, மனைவி தன்னை விட்டு விலகி நின்றது, அதன் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனத்தாங்கல்கள்… அதனைச் சரி செய்ய நினைத்து விரிசலை உண்டாக்கிக் கொண்ட நிகழ்வுகள் என அனைத்தும் மனதில் படமாய் விரிந்து, ஆனந்தனை தவிப்பில் நிற்க வைத்தது.

அதற்குமேல் அவன் அங்கே நிற்கவில்லை. ‘அனைத்தையும் பார்த்துக் கொள்!’ என ஆதியிடம் கூறிவிட்டு கோவைக்கு வந்து விட்டான் ஆனந்தன். மனதில் மனைவியைப் பார்த்தே ஆக வேண்டுமென்ற தவிப்பு நொடிக்குநொடி அதிகமாகிப் போவதை தடுக்க முடியவில்லை.

நடுநிசியைத் தாண்டிய நேரத்தில் ஆனந்தனுக்கு கதவைத் திறந்து விட்ட ராஜசேகர், ‘டிபன், பால்’ என்று உபசரித்து நிற்க, அதையெல்லாம் வேண்டாமென மறுத்து விட்டு மனைவியின் அறைக்கு சென்ற ஆனந்தனை பார்த்து, நாசூக்காக சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார் மாமனார்.

மின்மினி வெளிச்சத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மனஷ்வினி. எப்போதும் போல நோட்டும் புத்தகங்களும் ஆங்காங்கே இரைந்து கிடந்தன.

‘இவளை… எல்லாத்தையும் பரப்பி வைச்சுட்டே தூங்குறா… என்ன பழக்கமோ!’ மனதிற்குள் செல்லமாய் திட்டிக்கொண்டவன் தனது வாக்கிங் ஸ்டிக்கை இருமுறை தட்டிச் சத்தம் எழுப்பியும் அவள் எழவில்லை.

‘அச்சோ பாவம்… ரொம்ப டயர்டா இருப்பா போல!’ என முடிவெடுத்து, தனதறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு மீண்டும் அவளின் அறைக்கே வந்தவன், மனுவின் அருகில் தொட்டும் தொடாமல் உறங்கிப் போனான்.

அவளை எழுப்பி பேச வேண்டும், ‘உன் பிரச்சனை தீர்ந்தது.’ என்று சொல்லி சிலபல லஞ்சங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் திட்டம் தீட்டிக் கொண்டு வந்தவனுக்கு மனைவியின் அருகாமை சொல்லாத அமைதியை கொடுத்து விட, தன்னை மறந்தே கண்கள் சொருகிப் போனான்.

மறுநாள் விடியல் நான்கு மணிக்கே படிப்பதற்காக எழுந்த மனஷ்வினிக்கு அருகில் கணவன் உறங்கி இருப்பதைப் பார்த்ததும் உடலெல்லாம் பற்றிக் கொண்டு வந்தது.

‘இவனை இப்படியே அடித்து துரத்தினால் என்ன? குளிர்ந்த நீரை எடுத்து தலையில் ஊற்றி விட்டால் என்ன?’ மிதமிஞ்சிய கடுப்புடன் உள்ளுக்குள் ஆத்திரம் கொண்டாள்.

ஆனால் எந்தச் செயலையும் செய்யவில்லை என்பதை விட, ‘என்ன செய்து என்ன பயன்!’ என்ற விரக்தியில் ஒரு நிமிடம் அவனை நின்று முறைத்து விட்டு வெளியேறி விட்டாள்.

வழக்கத்திற்கு மாறாக விரைவாக தன்னை தயார்படுத்திக் கொண்டு கல்லூரிக்கும் கிளம்பி நின்ற நேரத்தில் கண் விழித்தான் ஆனந்தன்.

வழக்கமான குர்தியும் ஜீன்சும்தான் அணிந்திருந்தாள் அதற்கே சொக்கி ஆனந்தமாகிப் போனான். கண்ணாடியின் முன் அமர்ந்திருந்தவளை அதே கண்ணாடியின் வழியே பார்த்து புன்சிரிப்புடன், “ஹாப்பி மார்னிங் செல்லாயி!” தனது வழக்கமான சீண்டலில் பேச ஆரம்பிக்க, அவளோ கண்டு கொள்ளவில்லை.

அதை கவனத்தில் கொள்ளாதவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வரும் நேரத்தில், காலை உணவை கொரித்துக் கொண்டிருந்தாள்.

“இன்னும் டயம் இருக்கே மனு! எதுக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்புற?” கேட்டாலும் பதில் பேசாமல் உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.

சுற்றும் முற்றும் யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவளை ஒட்டிக்கொண்டு மிக நெருக்கத்தில் வந்தவன், “இன்னைக்கு லீவ் போடுறியா… உன்கிட்ட ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லணும்.” காதில் கிசுகிசுப்பாக கூறவும்,

அந்த நேரத்தில் நகுலேஷ், “அக்கா டிபன் ரெடியா?” கேட்டவாறே வரவும் சரியாக இருந்தது

“அடேய் கரடி… நல்ல நேரம் பார்த்துதான்டா நீயும் வர்றே?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டவனை அதியசமாகப் பார்த்தான் நகுலேஷ்.

“அக்காதான் இப்படி கூப்பிடுறான்னா, நீங்களுமா கரடிக்கு தாவிட்டீங்க! இதென்ன புது மாற்றம்?” வேடிக்கையாக நகுல் கேட்கும் நேரத்தில், மனு தன் அறைக்குள் சென்று விட்டிருந்தாள்.

“ரொம்ப முக்கியமான கேள்வியாடா இது? இன்னைக்கு டெஸ்டுல இதைதான் கேக்கப் போறாங்களாம்… பதில் என்னனு கண்டுபிடி! ஏன்டா… ஏன்டா!” கடுகடுத்தவன் மனைவியின் பின்னே அறைக்குள் புகுந்து முதற்காரியமாக கதவைத் தாழிட்டான்.

“நீ சொல்ற மாதிரி பய கரடி வேலைதான் பாக்கறான் மனு!” என சிரித்தபடி வந்தவன் அவளை பின்னோடு அணைத்து கன்னத்தில் முத்தம் பதிக்க, விறைத்து நின்றாள் மனஷ்வினி.

நொடியில் அவள் மாற்றத்தை தெரிந்து கொண்டவன் சட்டென்று விலகி விட, அவனை திரும்பிப் பார்த்தவள், “அவ்வளவு தானா… முடிஞ்சதா, இது என்ன காரணத்துக்கான்னு தெரிஞ்சுக்கலாமா?” கறாராகக் கேட்க, இவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.

“என்ன செல்லாயி, பச்சமிளகா கடிச்சியா? இவ்வளவு காரமா பேசுற!” விளையாட்டாய் கேட்டாலும், முறைக்கும் பார்வையை மாற்றிக் கொள்ளாமல் அழுத்தமாய் பார்த்தாள்.

“என்னடி கோபம் உனக்கு? எவ்வளவு சந்தோசமான விஷயத்தை சொல்ல வந்திருக்கேன் தெரியுமா!” குதூகலக் குரலில் அவளை ரசனையாகப் பார்த்து கன்னம் தொட்டு கிள்ளினான்.

“ஒஹ்… உங்க சந்தோசத்தை கொண்டாட என்னைத் தேடி வந்திருக்கீங்களா?” குத்தலாக கேட்க,

“என்ன மனு? என்னென்னமோ சொல்ற…” சிரித்துப் பேசியவனின் பாவனையில் அத்தனை அசட்டுத்தனம் நிறைந்திருந்தது. இப்படியெல்லாம் வழிந்து நிற்பவனா இவன்!

“லவ் இல்ல… லஸ்ட் இல்ல… கோபம் வந்தா என்னை தொட்டு காயப்படுத்தணும், உங்களுக்கு சந்தோசம் வந்தாலும் அதை கொண்டாட என்னை பலியாக்கணும்! இதைத்தானே என்கிட்ட எதிர்பாக்கறீங்க! நானும் தடுக்கப் போறதில்ல… இந்த கன்றாவிக்கு தானே பணத்தை வச்சே தாலிகட்டி என்னை கார்னர் பண்ணி இருக்கீங்க. லீவ் எத்தன நாளுக்கு போடணும்? எங்கேயாவது போகணுமா… இல்ல ரூமுலயேவா…” படபடவென பேசியவள் நிறுத்தி மூச்செடுத்த வேளையில் கன்னத்தில் அடி பலமாக இறங்கியது.

அடிபட்ட இடத்தை அழுத்தி தேய்த்துக் கொண்டே, “அடிச்சிட்டா… நீங்க யோக்கியம் ஆகிடுவீங்களா? நீங்க சொன்னா வார்த்தைதானே… ஆற அமர யோசிச்சு பாருங்க… புரிஞ்சா நீங்க மனுசன் இல்லன்னா சராசரி புருசன்!” அதிரடிப் பேச்சில் தாக்கி விட்டு கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள் மனஷ்வினி.

ரணமாய் வெட்டுவதற்கும் உயிரோடு கொல்வதற்கும் வார்த்தைகள் பாரபட்சம் பார்ப்பதில்லை. நாம் பேசும் போது தவறாகத் தெரியாத விசயங்கள் அடுத்தவர் பேசுகையில் முள்ளாய் உறுத்தும். அப்படிதான் மனுவின் வார்த்தைகள் ஆனந்தனின் மனதை வாளாய் வெட்டத் தொடங்கியது.

***