நான் பிழை… நீ மழலை… 39

நான்… நீ…39

அன்று புலர்ந்தும் புலராத அதிகாலை வேளையில், அப்பொழுதே பிறந்த சின்ன மொட்டினை தன் கைகளில் ஏந்தியவாறு அழகு பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்தன்.

‘வாழவே தகுதியற்றவன்!’ எனப் புலம்பியவனின் கைகளில் முதன்முதலாய் தனது செப்பு வாய் திறந்து தேனின் ருசியை சுவைத்துக் கொண்டிருந்தது அன்றலர்ந்த மொட்டு.

தங்கக் கரண்டியில் இருந்த தேனைத் தொட்டு வாயில் வைத்தவுடன் சமத்தாய் சப்பிக் கொண்ட பிஞ்சுவைப் பார்த்து மெய்சிலிர்த்தான்.

‘நான் இத்தனை பாக்கியம் செய்தவனா? என் கையில் பிள்ளை பசியாறுகிறதா!’ சந்தேகம் தாளாமல் நொடிக்கொருமுறை தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

வெள்ளை பூத்துவாலையில் சுற்றப்பட்ட குழந்தையின் உதடும் லேசாக நடுங்கத் தொடங்க, ஆனந்தனின் உயிரே ஆடிப்போனது.

மார்பில் குழந்தையை புதைத்துக் கொண்டவன், “அப்பா நெஞ்சுல சாஞ்சுக்கோங்க செல்லம்… குளிரெடுக்காது!” சமாதானப்படுத்தியவனின் குரலும் லேசாக நடுங்கத் தொடங்கி இருந்ததோ!

“பேபிக்கு ஸ்வெட்டர், சாக்ஸ் வாங்கிட்டு வந்ததும் ரூமுக்கு கொண்டு வந்துடுங்க சர்!” செவிலிப் பெண் அவனிடம் சொல்லிவிட்டு, குழந்தையின் முகத்தை எட்டிப் பார்த்து விட்டுச் சென்றாள் .

அந்தப் பெண் பார்க்கிறாளே என்றெல்லாம் மழலையின் முகத்தை சற்றே இறக்கிக் காட்டவும் பிரியப்படவில்லை ஆனந்தன். அவனது இப்போதைய தவிப்பெல்லாம் குழந்தைக்கு கதகதப்பை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் மட்டுமே இருக்க, யார், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் கவனித்துப் பார்க்கவே இல்லை.

அவனது தீவிர சிந்தனையை தடை செய்யும்படியாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் அருகில் வந்து நின்றார்.

“பேஷண்ட் நேம் சொல்லுங்க சர்!”

“தேஜஸ்வினி!”

“என்ன பேபி?”

“பையன்!”

“பேபியோட பேரண்ட்ஸ் நேம் சொல்லுங்க சர்!”

“ஆதித்யன், தேஜஸ்வினி!”

“மதர் அன்ட் பேபி பேருல பில்லிங் கார்ட் போடணும். இன்னும் ஒருமணி நேரத்துல பேஷண்டை ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிடுவாங்க… உங்களுக்கு எந்த மாதிரியான ரூம் வேணும்னு சொன்னா, அரேன்ஞ் பண்ணி வைக்க சரியா இருக்கும்.” என்று சொன்ன ஊழியர் அறைகளின் வகை, வசதி, வாடகை என எல்லா விவரங்களையும் கூறி முடித்தார்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டவன், தங்களுக்கு ஏதுவான அறையை சொல்லி முடித்து, ஊழியரை அனுப்பி வைத்தான்.

அதுவரை மார்பில் பொதித்துக் கொண்ட குழந்தையை பூச்செண்டினைப் போல் அத்தனை மென்மையாகப் பிடித்தபடி அமர்ந்திருந்தான். குழந்தையை கையில் வைத்துக் கொண்டு எழுந்து நிற்க முடியாத துரதிஷ்ட நிலையை நினைத்து முதன்முறையாக தனது இயலாமையை நிந்தித்துக் கொண்டான்.

‘ச்சே… என்ன மாதிரியான ஜென்மம் நான்? குழந்தைய தூக்கி கொஞ்ச முடியல… ஆதிக்கு பதிலா என்னால வெளியே போயி அவசரத்துக்கு வேண்டியத வாங்க முடியல… இன்னும் எத்தனை நாள் மத்தவங்களுக்கு சுமையா இருக்கப் போறேன்? சுத்த அதிர்ஷ்டம் கெட்டவன்!’ உள்ளுக்குள் பொருமித் தள்ளியவன்,

‘நல்லவேளை, இது மட்டுக்கும் நான் செஞ்ச பைத்தியக்காரத்தனத்தால என் மனுக்கு பிள்ளை உண்டாகல… இல்லன்னா, இதை விட அதிகமா நான் வேதனைப்பட்டு துடிச்சிப் போயிருப்பேன்! இப்ப மட்டும் என்ன? அதே வருத்தம்தான் என்னை கொன்னு போடுது!’ மனதிற்குள் தன் நிலைக்கு மருகிக் கொண்டிருந்த நேரத்தில் ஆதித்யன் அவரசமாக வந்து சேர்ந்தான்.

“எல்லாம் வாங்கிட்டியா ஆதி?”

“வாங்கியாச்சுடா… எல்லாம் ஹாஸ்பிடல் மெடிக்கல்லயே கிடைக்குது. பில் போட்டு கொடுக்க லேட் பண்ணிட்டான்!”

“பேச நேரம் இல்ல… குழந்தைய உள்ளே போயி குடு ஆதி! நான் திங்க்ஸ் எடுத்துட்டு வரேன்!” என்றபடியே கை மாற்றிக் கொண்டனர் சகோதரர்கள்.

குழந்தையை அதற்கான தனிப் பிரிவில் விட்டுவிட்டு, மயக்கத்துடன் படுத்திருக்கும் தேஜுவின் சிகிச்சை பிரிவிலும் எட்டிப் பார்த்தனர்.

தன்னை மறந்து அயர்ந்திருந்தாள் தேஜஸ்வினி. ஆனந்தன் வெளியே நிற்க, கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற ஆதி, மனைவியின் தலையை பரிவுடன் வருடிக் கொடுக்க, கண்களைச் சுருக்கினாள்.

“தேஜுமா… நமக்கு பையன் பொறந்திருக்கான் டா!” பூரிப்புடன் கூறியவன் மென்முத்தம் ஒன்றை நெற்றியில் பதித்து தனது மகிழ்ச்சியை வெளிபடுத்திட,

“சந்தோசம் அத்தான்!” மெல்லிய முணுமுணுப்புடன் சோர்வாய் பேசினாள் தேஜு. அவளின் இதழ் கடையோர புன்னகை, இத்தனை நேர பிரசவ போராட்டத்தையும் மீறி அழகாய் மின்னியது.

“ரெஸ்ட் எடுத்துக்கோடா… அப்புறமா பேசுவோம்!” மென்மையாகச் சொன்னவனின் தலைவருடலில் மீண்டும் கண்ணயர்ந்தாள் தேஜு.

 அவளைப் பார்த்து விட்டு அமைதியாக மருத்துவமனை வளாக நாற்காலியில் வந்து அமர்ந்தார்கள் சகோதர்கள். அவர்களுக்குள்ளும் நிம்மதியான பெருமூச்சு வெளிப்பட்டது.

பிரசவத்திற்கு இன்னும் பதினைந்து நாட்கள் கெடு இருப்பதைக் கூறியே கோவையில் இருக்கும் ராஜசேகர், சுலோச்சனாவை பொள்ளாச்சிக்கு வர வேண்டாமென்று சொல்லியிருந்தான் ஆதி.

ஆனால் நேற்றைய நடுநிசி நேரத்தில் தாங்க முடியாத இடுப்பு வலியோடு வயிற்று வலியும் சேர்ந்து கொள்ள தேஜஸ்வினி துடிக்கத் தொடங்கி விட்டாள். கர்ப்பகாலம் தொடங்கியதில் இருந்தே இவளுக்காகவே வயது முதிர்ந்த பெண்மணி ஒருவரை சமையலுக்கென்று வீட்டோடு தங்க வைத்துக் கொண்டது நல்லதாகிப் போயிற்று!

அந்தப் பெண்மணியின் ஆலோசனையில் விரைந்து தேஜுவை மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டனர். வந்த பொழுதில் இருந்து வலியின் அனத்தல்கள், அடுத்தடுத்த சிகிச்சைகள் என அனைத்தும் விரைந்து மேற்கொள்ளப்பட, அதிகாலை நான்கு மணியளவில் ஆண் குழந்தையை சுகமாய் ஈன்றெடுத்தாள் தேஜஸ்வினி.

பிறந்த குழந்தைக்கு தேவையான தண்ணீர், கரண்டி, தேன் போன்றவற்றை எடுத்துக் கொண்டவர்கள், துண்டு, குல்லாய் இத்யாதி வகைகளை கொண்டுவர மறந்து போயிருந்தனர்.

இதன் காரணமே அந்த அதிகாலை நேரத்தில் அவசரமாக அனைத்தையும் வாங்குவதற்கு ஆதி மருந்து கடைக்குச் செல்ல நேரிட, அந்த நேரத்தில் குழந்தையை வெளியே கொண்டு வந்து ஆனந்தனின் கையில் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார் செவிலிப்பெண்.

பிறந்த குழந்தை முதன்முதலாக தன்னிடம் வந்து சேர்ந்த பரவச உணர்வில் தத்தளித்துப் போனான் ஆனந்தன். அந்த உணர்வோடு குழந்தையை அதற்கான அறையில் விட்டுவிட்டு வந்த இரட்டையர்கள் ஆசுவாசமாய் மூச்சு விட்டுக் கொண்டனர்.

“கொழந்த யார் மாதிரி இருக்கான் ஆனந்த்?” மிதமிஞ்சிய பூரிப்பில் ஆதி கேட்க, ஆனந்தனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

“எனக்கென்னமோ, அவன் தேஜு மாதிரி வருவான்னு தோணுது. அதே கண்ணு, அதே நிறம்…” அண்ணன் சிலாகித்துப் பேச ஆமென்று புன்னகையோடு தலையசைத்தான் தம்பி.

“ஆனா, கொஞ்சநாள் கழிச்சு முகஜாடை மாறுமாம்… அப்போ, யார் மாதிரி வருவானோ!” தகப்பனான பூரிப்பில் மனதிற்குள் நினைப்பதை எல்லாம் கொட்டினான் ஆதி.

“இதென்ன கேள்வி ஆதி… அப்பா இல்லன்னா அம்மா மாதிரி வருவாங்க! இதுக்கு ஏன் இத்தனை யோசனை?”

“என் முகம் எப்படி இருக்கும் ஆனந்த்? இந்த தழும்பு இல்லாத என் முகஜாடையே யாருக்கும் சரியா தெரியாதுல்ல…” கேட்டவனின் குரலில் ஆதங்கம், ஏக்கம் எல்லாம் கொட்டிக் கிடந்தது.

“நீ ஏன் அப்படி நினைக்கிற! நீயும் நானும் ஒன்னுபோல இல்லதான். ஆனா, முகஜாடை ரொம்ப ஒத்துப் போகுமே! சின்ன வயசுல நாம ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட ஃபோட்டோ என்கிட்டே இருக்கு ஆதி! வீட்டுக்கு போனதும் காட்டுறேன், உனக்கே தெரியும்!” முதன் முறையாக அண்ணனுக்கே சமாதானம் கூறும் பொறுப்பானவனாக மாறிப் போனான் ஆனந்தன்.

‘அட… இவ்வளவு அனுசரணையா கூட என்னால பேச முடியுமா! எப்படி சாத்தியம் இது?’ அடிக்கடி இவன் மனதில் உதிக்கும் சந்தேகம் இப்போதும் தோன்றி அவனைப் புல்லரிக்க வைத்தது.

இதெல்லாம் மனைவியின் நிராகரிப்பில் தன்னைத்தானே உணர்ந்து கொண்ட போது வந்த ஞானோதயமோ! மனம் குத்துமதிப்பாக கணிக்கத் துவங்க, அந்த நாளில் நடந்ததை நினைத்துப் பார்த்தான் ஆனந்தன்.

அன்று கோபத்தில் கொதித்து விட்டு மனஷ்வினி கல்லூரிக்கு சென்றுவிட, இவனது கோபத்தை இறக்கி வைக்க ஆள் இல்லாமல் போனது. ஒருவித கசப்பான உணர்வுடன் தன்னறைக்குள் உழன்று கொண்டிருந்தவனிடம், தானாகவே வந்து முன்தின விவகாரங்கள் நல்லவிதமாய் முடிந்த விவரத்தை விசாரிக்க ஆரம்பித்தார் ராஜசேகர்.

வேண்டா வெறுப்பாக பதில் கூற ஆரம்பித்த ஆனந்தனும் தன்போக்கில் அனைத்தையும் விளக்கமாக கூறி முடித்தான்.

“சந்தோசம் மாப்ளே… இனிமே உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அந்த ஆண்டவன் கொடுக்கட்டும்! என் வேண்டுதலும் அதுதான்!” வாழ்த்திய மாமனாரை ஆச்சரியமாகப் பார்த்தான் ஆனந்தன்.

இதுநாள் வரையில் உறவுக்கோ வயதிற்கோ மரியாதை கொடுத்து இவரிடம் நல்லவிதமாக இவன் நடந்து கொண்டதில்லை. ஆனாலும் கைம்மாறு இல்லாத இவரின் பேரன்பினைப் பார்த்து அதிசயித்துப் போனான்.

‘பெண்ணை கட்டிக் கொண்டவன் என்றாலும் இத்தனை கரிசனத்தை, அன்பை என் மீது இவர்கள் வைக்கத்தான் வேண்டுமா! இன்னும் இவர் பெண்ணுடன் பரிபூரணமான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கவே இல்லையே… இதற்கே இத்தனை பாசமழையா!’ கேள்விகளை தனக்குள் அடுக்கிக் கொண்டவன் சொந்த பந்தங்களின் உன்னதத்தை நினைத்து வியந்தான்.

மாமனாரின் பேச்சில் இளகிப் போனவனின் மனம் மெதுவாய் மனைவி கொட்டிச் சென்ற கனல் பேச்சுகளை அசை போட ஆரம்பித்தது.

தனது பிரச்சனைகள் கழுத்தை நெறித்த வேளையில் யார், எவரென்று பாராமல் உஷ்ணப் பேச்சால் அனைவரிடத்திலும் கொட்டித் தீர்த்ததை நினைத்துப் பார்த்தான்.

மிக அசிங்கமாக அத்தனை அருவருப்பாக தன்னை உணர்ந்தான். ‘சுற்றி இருப்பவர்களை வார்த்தையால் பந்தாடி விலக்கி நிறுத்தி விட்டு, கட்டிய மனைவியை சொல்லால், செயலால் உயிரோடு புதைந்து போகும்படியாக வதைத்தும் விட்டேனே! இந்த பாவத்திற்கு என்ன பிராயச்சித்தம் செய்தாலும் பழி விலகிப் போகாது!’ ஆயிரம் தேள்கள் ஒன்றாய் கொட்டிய ரணத்தை முதன்முறையாக அனுபவித்தான்.

மன்னிப்பை யாசிப்பதற்கும் அருகதையற்றவன் என மனசாட்சியே காறித் துப்பிவிட, மனம் பலவிதமாய் யோசிக்க வைத்தது. மாலையில் கல்லூரியை விட்டு வந்தவளின் முன்னே சென்று நேருக்குநேராய் அமர்ந்தான்.

மனஷ்வினிக்கும் உள்ளுக்குள் கிலி பரவினாலும் தயங்காமல் கணவனின் பார்வையை எதிர் கொண்டாள். கன்னத்தில் அவனது விரல் பதிந்த தடம் லேசாய் தெரிந்தது.

“ரொம்ப வலிக்குதா? மருந்து போட்டியா!” இறங்கிய குரலில் கேட்க,

“உடனே ஐஸ் க்யூப் வச்சதால சரியா போச்சு!” என்றபடி அவன் முகம் பார்க்காமல் நோட்டுப் பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள்.

“என் மேல கோபம் இருந்தா, நாலு அடி அடிச்சிறேன்! அன்னைக்கு மாதிரி…”

“உங்களை மாதிரி பழி வாங்குற கேவலமான புத்தி எனக்கு கிடையாது. எந்தவொரு செயலுக்கும் யாராவது ஒருத்தர் முற்றுப்புள்ளி வச்சே ஆகணும். அந்த வேலைய செய்யுறது நானா இருந்துட்டு போறேன்!

அதுவுமில்லாம நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற உறவுக்கு, இதெல்லாம் துடைச்சு போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான். சூடு, சொரணை, ரோசம்தான் பெரிசுன்னு நினைச்சிருந்தா, எப்பவோ நானெல்லாம் செத்துப் போயிருக்கணும்!” ஆற்றாமையில் பொங்கியவளின் குரல் கரகரப்பிற்கு மாற, பதறியபடி அவளின் வாயை அடைத்தான் ஆனந்தன்.

“உன் வலி இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு புரிய வருது மனு! உன்னை ரொம்ப டார்ச்சர் பண்ணி இருக்கேன். தன்னோட தலைக்கு மேல வெள்ளம் போற நேரத்துல, தன் கண்ணு முன்னாடி ஒருத்தன் செத்துப் போனாலும் அவனை ஏறெடுத்து பார்க்க மாட்டானாம் கேடுகெட்ட மனுசன். அப்பேற்பட்ட மோசமான சுயநலவாதி நான்!” உணர்வுபூர்வமாய் பேச ஆரம்பித்தவனை இமைக்காமல் பார்க்க ஆரம்பித்தாள்.

“என் பிரச்சனை தீர்ந்து, என் மனசு அமைதியான பிறகுதான், நான் செஞ்ச பாவமெல்லாம் என் கண்ணு முன்னாடி நின்னு தலைவிரிச்சு ஆடுது. உன் விஷயத்துல கொஞ்சம் அதிகப்படிதான். அதுக்கு பிராயச்சித்தம் தேட சத்தியமா நான் முயற்சிக்க மாட்டேன்! நீயும் தண்டனை கொடுக்கிற பேர்வழின்னு புதுசா பாவத்தை கட்டி சுமக்க வேணாம்.

உனக்கு எப்போ தோணுதோ, அப்ப என்னைத் தேடி வா… சேர்ந்து வாழ முயற்சிப்போம் அதுவரைக்கும் உன் வழியில நான் குறுக்க வரல… இனி உன் விருப்பத்துக்கு மட்டும்தான் முதலிடம். என் விருப்பு, வெறுப்பு எல்லாத்தையும் உனக்கே தாரை வார்த்துட்டேன் மனு. நீ என்ன சொல்றியோ அதுதான் என் முடிவும்… இந்த முடிவை என் வாழ்நாள் முழுமைக்கும் நான் மாத்திக்க மாட்டேன். இது என் அம்மா மேல சத்தியம்!” கழிவிரக்கத்தில் தனக்குள் ஆழ்ந்து பேசியவனை ஆச்சரியமாய் பார்த்தாள் மனஷ்வினி.

தன்னைத்தானே உணர்ந்து கொண்ட மனிதனின் உணர்ச்சி வசப்பட்ட நிலை அது. அவனது பேச்சிற்கு பதில் கொடுக்க அவளிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் அளவில்லாத கோபம் இருந்தது. ‘ஏனோ என்னைத் தள்ளி நிறுத்தி விட்டாய்!’ என அவன்மேல் ஆத்திரம் வந்தது.

“சோ… பண்ணினா தப்புக்கு சாரின்னு கூட கேக்க துப்பில்லாம ஈசியா தப்பிக்க நினைக்கிறீங்க அப்படித்தானே!” கூர்மையாக குத்தலாய் கேட்டாள்.

“மன்னிப்பு கேட்டு என் தவறுகளை நியாயமாக்க நான் விரும்பல!” மாறாத அழுத்தத்தில் ஆனந்தனின் வார்த்தைகள் வந்தன.

“இதுதான்… இந்த திமிருதான் நமக்கு இடையிலே நின்னு சதிராட்டம் ஆடுது!” மனு ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க,

“தப்ப உணர்ந்துட்டா தலைகுனிஞ்சு நின்னே ஆகணும்னு சட்டம் சொல்லுதா, இல்ல சாஸ்திரத்துல இருக்கா?” ஆனந்தன் நக்கலாகக் கேட்க,

“மனுசனோட இயல்பான சுபாவம் அது!” பதிலுக்கு வெடித்தாள்.

“அந்த அளவுக்கு பெரிய மனுஷன் நான் இல்ல!”

“திருத்த முடியாது உங்கள…” மனு தலையில் அடித்துக் கொள்ள,

“இதுக்கு மேல திருந்தினா என்னை, நானே காரித் துப்பிக்க வேண்டி வரும்.” என்றவன் மேற்கொண்டு பதிலளிக்க முயன்றவளை தடுத்தான்.

“உனக்கான இடைவெளி கொடுத்துட்டேன். இந்த அவகாசத்துல நீ எடுக்கற முடிவு எப்படி இருந்தாலும் நான் ஏத்துக்க தயாரா இருக்கேன்! இதுக்கு மேல இந்த அகம்பாவி இறங்கி வரமாட்டான்!” தீர்க்கமாக கூறிவிட்டு அன்றைய தினமே பொள்ளாச்சிக்கு வந்து விட்டான்.

மனஷ்வினியும் மேற்கொண்டு கணவனைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளாமல் தன் போக்கில் நாட்களை கடக்க ஆரம்பித்தாள். ஜம்பமாய் மனைவியிடம் பேசிவிட்டு வந்தாலும் ஆனந்தனின் பொழுதுகள் முட்காடுகளாய் குத்தத் தொடங்கின. நிராகரிப்பின் வலியை ஒவ்வொரு நொடியும் அனுபவித்தான்.

‘மன்னிப்பு… நான் கேட்கவும் வேண்டாம், நீ கொடுக்கவும் வேண்டாம். நிதானிப்போம்! மறக்க முயற்சி செய்… நானும் என் குற்ற உணர்வில் இருந்து மீள முயற்சிக்கிறேன்! வாழ்க்கை நீண்டு கிடக்கின்றது. மனத் தாங்கல்கள் இன்றி எதையும் கடந்து செல்வோம்!’ என சித்தனாக பேசி விட்டு வந்தவனின் உள்ளும் புறமும் மனைவியுடனான பேச்சுகளை அருகாமையை கேட்டு நச்சரிக்கத் தொடங்கியது.

அவற்றில் இருந்து மீள முடியாமல் தத்தளித்து அழுத்தமாய் தன் அறைக்குள் உலாவிக் கொண்டிருந்தவன், இதோ ஆதியின் அவசர அழைப்பில் மருத்துவமனையில் வந்து அமர்ந்து விட்டான். இவனது தவிப்புகள் அடங்கி நிதானித்து மனைவியுடன் கை கோர்க்கும் நன்னாள் எந்நாளோ!

***

சொத்துக்கு பதிலாக தொழிலை தன் பெயருக்கு மாற்றி கொண்ட கதிரேசனால் அதனை வைத்து சுகப்பட முடியவில்லை. நிறுவனத்தின் பெயரை முற்றிலும் மாற்றி வர்த்தகத்தில் இறங்கியபோது கண்டுகொள்வார் யாருமில்லை.

இதன் வேர் எது, எப்படி வந்ததென்று வெளியில் இருந்து ஆராய்ந்தவர்கள் பெரும் அதிருப்தியுடன் தட்டிக் கழித்தனர். அதோடு அங்கே தொழில் நிமித்தங்களை வைத்துக் கொண்டிருக்கும் நட்பு நிறுவனங்களுக்கும் எச்சரித்து அவர்களின் வியாபாரத்தை பின்வாங்கச் செய்தனர்.

இதன் காரணமே முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை கை மாற்றி விட்டோ அல்லது முற்றிலும் வியாபர ஒப்பந்தத்தை முறித்து, கணக்கு முடித்துக் கொண்டோ விலகத் தொடங்கினர்.

புதிய நிறுவனப் பெயரோடு உற்பத்தி பொருட்கள் சந்தையில் விலை போகவில்லை. தயாரிப்பு பொருட்களும் மொத்தமாகக் கிடங்குகளில் தேங்கி நிற்கத் துவங்கியது.

வர்த்தக முடக்கம், உற்பத்தித் தேக்கம், பங்குதாரர்களுக்கு முதலீட்டுத் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் என அனைத்தும் சேர்த்து நிர்வாகத்தில் பலமான கோஷ்டி பூசலை உருவாக்கியது.

நிர்வாகியே சிறையில் இருக்கும் போது நிர்வாகம் எந்த இலட்சணத்தில் நடக்குமென்று குதர்க்கம் கூறியே பலர் வெளிநடப்பு செய்தனர். ஆறு மாதம் கதிரேசன் உள்ளே இருந்த வேளையில் அவனது அரைகுறை விசுவாசிகளின் மேற்பார்வையில் நிர்வாகமும் தொழிலும் கடனில் தத்தளிக்க ஆரம்பித்தது.

ரூபம் குழுமத்தின் பெயரை மட்டுமல்ல அதன் மூலதன முதலீடுகளையும் கையாளக்கூடாது என்கிற மறைமுக ஒப்பந்தத்துடன் ரூபம் சகோதரர்கள் எழுதி வாங்கியும் இருக்க, முழி பிதுங்கிப் போனான் கதிரேசன்.

நிர்வாகத்தின் வரவு செலவு, கடன் நிலுவை, ஊழியர்களின் சம்பளம் பாக்கி போன்ற பல குளறுபடிகள் அனைத்தையும் தீர்த்து வைக்க, அவனது சொத்தை விற்றால் மட்டுமே முடியும் என்ற தர்மசங்கடமான நிலைமைக்கு வந்து நின்றான் கதிரேசன்.

ஊழியர்களின் போராட்டமும், தொழிலாளர் நலவாரியத்தின் மறைமுக எச்சரிக்கையும் சேர்ந்து அவனது சித்தத்தை சிதற வைத்த நிலையில் மீண்டும் புத்தி தலைகீழாக யோசிக்கத் தொடங்கியது.

***

ரூபம் மாளிகையில் பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா… ‘வருண் பிரனேஷ்’ என்ற பெயரை மூன்று முறை குழந்தையின் காதில் ஆதியும் தேஜுவும் கூறி முடிக்க, அத்தனை மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆர்ப்பரித்தான் ஆனந்தன்.

குழந்தை பிறந்த பொழுதில் இருந்தே, தனது கவனம் அனைத்தையும் குழந்தையின் மீது மட்டுமே வைக்க ஆரம்பித்திருந்தான். ஜாதகம், எண் கணிதம் இன்னும் என்னென்ன நல்லவைகள் இருக்கின்றதோ அத்தனையும் பார்த்து ஆனந்தன் சொன்ன பெயரை மறுபேச்சு இல்லாமல் ஏற்றுக் கொண்ட தேஜுவை பார்த்து புதிதாய் மரியாதை, கலந்த அன்பு அவனிடத்தில் தென்பட்டது.

ஒவ்வொரு விடியலிலும் ஒவ்வொரு விதமாய் அனைவரும் இவனை சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இவன் மனைவியை தவிர…

பிறந்தபொழுது குழந்தையை பார்த்து விட்டுப் போனவள்தான்! தினமும் வீடியோ காலில் பிள்ளையை கொஞ்சு மகிழ்ந்தாளே தவிர, பொள்ளாச்சிக்கு வரவே இல்லை. அருணாச்சலத்தை கோவை வீட்டில் துணைக்கு வைத்து விட்டு, ராஜசேகர், சுலோச்சனா பொள்ளாச்சிக்கு திரும்பியிருந்தனர்.

படிப்பைக் காட்டியே அனைவரிடமும் இயல்பாய் பேசுவதை தவிர்த்தாள் மனு. தேஜஸ்வினியும் குழந்தையின் கவனிப்பில் பிரசவ அலுப்பில் யாரை பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொள்ளவில்லை.

பெயர் சூட்டு விழாவிற்கு வருகை புரிந்த மனு, ஆனந்தனை கண்டும் காணாது நடந்து கொள்ள, இவனும், ‘கோபம் குறையல போல!’ அவளுக்காக பரிந்து கொண்டான். ஆனாலும் மனதின் ஓரத்தில் சுணக்கம் இருக்கத்தான் செய்தது.

விழா முடிந்து ஓய்வாக அனைவரும் அமர்ந்திருந்த வேளையில் அங்கே வந்து சேர்ந்தான் கதிரேசன். வீட்டுக் காவலாளி இவன் வருகையை வந்து கூறியதும், சினமுடன் எகிற ஆரம்பித்தான் ஆனந்தன்.

“அந்த நாய கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளு செக்யூரிட்டி!” அவன் உறும,

“இப்ப மட்டுமில்ல எப்பவும் பேச முடியாதுன்னு அனுப்பி வை!” ஆதியும் கோபமாய் கூறி அனுப்பியும், சந்தித்தே ஆக வேண்டுமென்று வீட்டின் நுழைவு வாசலில் அடமாய் வந்து நின்று விட்டான் கதிரேசன்.

இவனது அடாவடியில் பெரியவர் அருணாச்சலம், தான் சென்று பேசி அனுப்பி வைப்பதாக கூறிச் செல்ல, அவனோ, ‘சகோதரர்களிடம் மட்டுமே பேசுவேன்!’ என வீம்பாய் நின்றான்.

கதிரேசன் வந்திருக்கிறான் என்பதை அறிந்ததுமே மனு நிலைகொள்ளாமல் படபடத்தவள், அனைவரும் அமைதியாக இருப்பதைப் பார்த்தே வெடிக்கத் தொடங்கி விட்டாள்.

“அவனை அடிச்சு துரத்துறத விட்டுட்டு ஆள் விட்டுச் சொல்லி அனுப்பி, அவனை இன்னும் ஏத்தி விடுறீங்களா? உங்களை மாதிரி என்னால விட முடியாது. என் சார்புல அவனை நாலு அடி அடிச்சாதான் எனக்கு நிம்மதியாகும்!” படபடவென பேசிவிட்டு வாசலை நோக்கி நடக்க,

துணைக்கு நகுலும், “ஆமா அக்கா!” என ஜால்ரா அடித்து அவளுடன் சேர்ந்து நடந்தான்.

வாசலில் நின்ற கதிரேசனைப் பார்த்ததும் பின்னடைந்த மனு, நொடியில் சுதாரித்து, “இப்ப யாரை என்னன்னு சொல்லி கடத்திட்டு போகப் போற?” உஷ்ணத்துடன் கேள்வி கேட்க,

“இவன்கிட்ட என்னக்கா பேச்சு! நாலு அறை விட்டு வெளியே தள்ளுக்கா!” நகுலும் சட்டையைப் பிடிக்க விரைந்தான்.

“தம்பி அவன் மேல கை வச்சு நீங்க அசிங்கப்படாதீங்க! இவனுக்கு பதில் சொல்லி அனுப்புற வேலையை நான் பார்த்துக்கறேன். நீங்க உள்ளே போங்க!” அருணாச்சலம் தன்மையாக எடுத்துக் கூறினாலும் இருவரும் அசையாமல் நின்றனர்.

அந்த நேரத்தில் ஆனந்தனும் அங்கே வந்து சேர, கதிரேசனின் முகத்தில் வெற்றிப் புன்னகை! “வாடா மகனே!” என இவன் வரவேற்க, அந்த நொடியே வாயில் குத்து விட்டான் ஆனந்தன்.

“இப்ப என்ன அவனை அடிச்சு காயப்படுத்தணும். அவ்வளவுதானே… நீ இந்த பக்கம் வா!” ஆனந்தன் கோபத்துடன் மனைவியை இழுக்க, அதற்கும் மசியவில்லை அவள்.

அந்தக் கோபமும் இப்போது சேர்ந்து கொள்ள, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கதிரேசனின் முகத்தில் மீண்டும் ஓங்கி பலமாய் குத்தி அவனைக் கீழே விழ வைத்தான் ஆனந்தன்.

மேற்கொண்டு அவனை புரட்டிப் போட்டு கால்களால் அடுத்தடுத்து எட்டி உதைக்க, வலியால் கதறியவனை பாவம் பார்க்க யாரும் முன்வரவில்லை. நடப்பதை அனைவரும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

அனைவரின் மனதிலும் இருந்த கோபம் அமைதியாக கட்டிப் போட்டு வைத்திருந்தது.

சுலோச்சனாவும், “பாவிப்பய என்னென்ன சொல்லி என்னை ஏமாத்தினான்… இவனால எனக்கு எவ்வளவு பிரச்சனை!” கரித்துக் கொட்டினாள்.

இறுதியில் அடி வாங்குவதை பார்க்க சகிக்காமல் மனஷ்வினி தான் கணவனைத் தடுத்து நிறுத்தினாள்.

“போதும், நிறுத்துங்க மச்சான்!”

“நீதானேடி அடிச்சு தூக்கச் சொன்ன? இப்ப ஏன் வேண்டாம்னு சொல்ற!” கணவன் கருத்தாக கேட்கவும், தன்னால் சகித்துக்கொள்ள முடியாததை கூறி வாங்கிக் கட்டிக்கொள்ள மனைவி விரும்பவில்லை.

அனுசரணையாக, “அது… உங்க கால் வலிச்சு போகும். அதான்…” தடாலடியாக இவள் பல்டி அடிக்க, அந்த இடமே கேலிக் கூத்தாகிப் போனது.

“ப்பூ… இவ்வளவு தானா! இனி கையாள பேசிடுவோம்!” என்றவாறே சரமாரியான அடிகளை ஆனந்தன் கொடுத்துக் கொண்டே இருக்க, கதிரேசன் மனஷ்வினியின் கால்களை பிடித்து விட்டான்.

“அம்மாடி தங்கப்பொண்ணு… அடிக்கிறத நிறுத்தச் சொல்லும்மா… வயசானகட்டை தாங்காது!” கெஞ்சினாலும் இவள் அசையாமல் நிற்க, ஆனந்தன் புரட்டி எடுப்பதை தொடர்ந்து கொண்டிருந்தான்.

பின்னோடு வந்த ஆதி தடுத்தும் அடிப்பதை நிறுத்தவில்லை.

“என்னை மன்னிச்சுடு தாயீ! நான் உனக்கு ரொம்ப பெரிய பாவத்தை செஞ்சுருக்கேன். இந்த பேராசைக்காரனை மன்னிச்சிரு!” வலியின் வேதனையில் அழவே தொடங்கி விட்டான் கதிரேசன்.

“செத்துப் போனா கொலைகேஸ் விழுந்து தொலைக்கும், இந்த இம்சைபிடிச்சவனை விட்டுத் தொலைடா!” ஆதியின் உரத்த குரலும்,

“போதும் மச்சான்… உண்மையோ பொய்யோ இவன் மன்னிப்பு கேக்கிறதை பாக்க எனக்கு சகிக்கல. உங்களுக்கும் கை வலிதான் மிஞ்சிப் போகும். வாங்க உள்ளே போகலாம்.” மனு கிளம்பி நிற்க,

“நல்லவேளை, உங்க அக்கறைக்கு ஊறுகாயா நான் மாட்டல… நீ அனுபவி கதிரேசா!” நக்கலடித்த நகுலும்

“மச்சானை கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அடிக்க சொல்லுக்கா! இவனுக்கு இது பத்தாது!” என ஏற்றிவிட்டான்.

***