நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நான் மழலை!

4

‘அழகா… அழகா…

உள்ளம் உருகுதய்யா

உன்ன உத்து உத்து பாக்கயில

உள்ளம் உருகுதய்யா

நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…’

பாடல் வரிகள் ரிங்டோனாக மனஷ்வினியின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.

காலை ஏழு மணிக்கு அன்றலர்ந்த மலராக ஊதாநிற சல்வாரில்  புத்துணர்ச்சியுடன் இருந்தவள், இமைக்காமல் கணவன் உடற்பயிற்சி செய்யும் அழகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உடற்பயிற்சி கூடத்தில் ஒலித்த பதியப்பட்ட குரலொலியின் சத்தத்தில் இவள் கண் முழித்துப் பார்க்க, நேரம் ஆறு எனக் காட்டியது. ‘இவன் எப்போது முழித்தான்? என்னையும் சேர்த்து எழுப்பி இருக்கலாம் அல்லவா?’ விடிந்ததும் கணவன் மீது குற்றம் பாராட்டியவளுக்கு, அவளின் மனசாட்சி பலமான கொட்டு வைத்தது

‘ஒருநாள் குடும்பம் நடத்துன லட்சணத்துக்கு, உன்னை தட்டி எழுப்பி ரொமான்ஸ் பண்ணிட வேண்டியது தான். சின்னப் புள்ளைக்கு நெனப்பு போகுது பாரு!’ உள்மனம் கடிந்து கொள்ள,

“எந்த வயசா இருந்தா என்ன? மிங்கிள் ஆகிட்டா வொஃய்ப் புரஃபசன் தன்னால வந்து சேர்ந்திடும். என் நினைப்புக்கு என்ன குறைச்சல்?” பதிலுக்கு இவள் முணுமுணுக்க,

‘யூ கண்டினியூ கரோ ஆன்ட்டி!’ கிண்டலடித்து விட்டு மனசாட்சி மயமானது.

குளித்து முடித்து ஒலிச்சத்தம் வந்த அறையில் இவள் சென்று பார்க்க, அங்கே ஆனந்தனுக்கு தினப்படி பயிற்சியாக பிசியோவும் உடற்பயிற்சியும் நடந்து கொண்டிருந்தது.

பயிற்சியாளரின் துணையோடு தலைக்கு பின்னால் கைகளை கோர்த்துக் கொண்டு, படுத்தபடி இடம் வலம், மேல் கீழாக உடலிற்கு அசைவு கொடுத்து, கால்களையும் நீட்டி மடக்கி, உயர்த்திக் கொண்டிருந்தான் ஆனந்தரூபன்.

திடமான புஜங்களும் திரண்ட மார்பும், சிவந்த வதனத்தில் வியர்வையும் வழிந்தபடி இருந்தவன், மனஷ்வினியின் கண்களுக்கு அதிரூப சுந்தரனாகவே காட்சியளித்தான். வைரங்களில் மின்னிய ரூபன் எழுத்துகள் பொறித்த தங்கச் சங்கிலி அவனது மார்பில் புரள, அந்தக் கவர்ச்சியில் இவள் திக்குமுக்காடிப் போனாள்.

மனைவிக்கான உரிமைப் பார்வையில் குதூகலம் கூடிட, மனுவின் மனம் தன்னால், ‘அழகா… அழகா!’ என மெட்டமைத்துப் பாட ஆரம்பிக்க, அவனை வேடிக்கை பார்க்கவென இப்போது அறையின் வாசலில் நின்று விட்டாள்.

பயிற்சி முடிந்து பிசியோதெரபிஸ்ட் விடைபெறும் நேரத்தில், “குட்மார்னிங் மேம்! டூ டேய்ஸ் சார்-க்கு பெயின் இருக்கும். நார்மலா வர்ற இஷ்யூதான். நீங்க வொர்ரி பண்ணிக்க வேணாம்.” எனக் கூறிய பிறகுதான், ஆனந்தன் முன்தினம் வலியோடு உறங்கியது நினைவிற்கு வந்தது. 

‘ஏன்? எப்படி? என விசாரிக்காமல், இவனை ரசிக்க வேறு. செய்கிறேன். சரியான மட்டி மனு நீ!’ மானசீகமாய் தன்னைத்தானே கடிந்து கொண்டாள் மனஷ்வினி.

“இன்ஸ்ட்ரக்ஷன் சொல்லுங்க பிரதர்! நான் ஃபாலோ-அப்  பண்றேன்.” மனு அக்கறையாக கேட்க,

“எவ்ரிதிங் ஐ க்நோ! நீ தனியா கேட்டு அக்கறை குடை விரிக்க வேணாம்.” வெட்டிவிட்ட பேச்சில் கணவன், மனைவியை முறைக்க, பயிற்சியாளன் சத்தமில்லாமல் வெளியேறினான்.

“சந்தோசம்… இதே பதிலை எல்லார் முன்னாடியும் சொல்லி என்னை நல்ல பிள்ளையாக்கிடுங்க!” இவளும் முகம் சுளித்துப் பேச, அன்றைய தினம் கனஜோராய் ஆரம்பாகியது. 

“பதிலுக்கு பதில் பேசி, என்னை, உன் பக்கம் இழுக்கப் பாக்கறியா? கீப் டிஸ்டன்ஸ்.” கடுகடுத்தவாறு கைத்தடி இல்லாமல் சற்றே சாய்ந்து நடந்து வர, தடுமாறி விடுவானோ எனப் பயந்து அவனுக்கு தோள் கொடுக்க விரைந்தாள் மனு.

“சொன்னா கேக்க மாட்டே… இவ்ளோ நாள் நீ வந்துதான் என்னைத் தாங்குனியா? இடையில வராம போ, அந்தப் பக்கம்.” அதட்டி விட்டு குளியலறைக்குள் தஞ்சம் அடைந்தான்.

ஏதோ ஒரு கோபம், யாரையும் ஏற்றுக் கொள்ள முடியாத இறுகிய சுபாவத்தில், இன்னாரென்ற உறவுமுறையையும் ஆராயாமல் அனைவரையும் உதறித் தள்ளும் மனோபாவத்தை கொண்டிருக்கிறான் என்பதை அவனது ஒவ்வொரு செய்கையிலும் மனஷ்வினி கண்டு கொண்டாள்.

என்ன புரிந்தாலும் மனிதமனம் தன்னை நிந்திப்பவர்களை ஆராதனை செய்து பொறுமை காப்பதில்லை. இப்போது அவளிடத்திலும் அதே நிலையே!

‘அட முசுட்டு முண்டமே! இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி எரிஞ்சு விழறாரு… நேத்து கல்யாணம் ஆனவன் மாதிரியா பேசுற? அட்லீஸ்ட் நேத்து நைட் எந்த நேரத்துக்கு வந்தேன்னாவது கேக்கக் கூடாதா? உனக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு!” முணுமுணுத்தபடி இவள் படுக்கை விரிப்பை மாற்றும் வேலையை கையில் எடுத்த நேரத்தில்,

“அதை எல்லாம் செய்யுறதுக்கு வேலைக்காரங்க இருக்காங்க… நீ, உன்னை மட்டும் பார்த்துக்கிட்டா போதும்.” குளித்து வந்தவன் மீண்டும் அதட்டி அவளின் கையைக் கட்டிப் போட்டான்.

‘துப்பவும் முடியாம, முழுங்கவும் முடியாம விஷமா நிக்கிறானே! இப்பவே கண்ணக் கட்டுதே முருகா!’ வடிவேலு வசனங்களை மனதிற்குள் ஓட்டியபடி கீழே இறங்கி விட்டாள்.

‘இனி, நீ பேசாமல் நானும் பேசமாட்டேன்.’ என்ற முடிவையும் மாடிப்படிகளை விட்டு இறங்குகையில் எடுத்து விட்டிருந்தாள்.

‘மொதநாள் சீக்கிரமே எழுந்து வந்து பூஜையறையில விளக்கு ஏத்தணும்னு அம்மா சொன்னாங்களே!’ என்ற நினைவில் மருமகளாய் தன் கடமையாற்ற விரைந்து வந்தாள் மனஷ்வினி

“வாடா கண்ணு… வா… வா! நீ கடமையில கற்பூரம்ன்னு எனக்குத் தெரியும். சரியான நேரத்துக்கு டான்னு இறங்கி வந்துட்டே!” புன்னகையுடன் பூஜையறைக்கு அவளை அழைத்துச் சென்றார் அருணாச்சலம்.

முன்தினம் வணங்கி எழுந்த பூஜையறையில் பக்திப் பரவசத்துடன் மனு வந்து நிற்க, அருணாச்சலம் கோளறு பதிகம் பாடத் தொடங்கினார்.

‘வேயுறு தோளி பங்கன்விட முண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி…’ கம்பீரக் குரலில் பெரியவர் பாட, மனுவின் மெய் சிலிர்த்துப் போனது. அத்தர் ஜவ்வாது வாசமும், வாசனை மலர்களும், அங்கிருந்த சந்தனம், குங்குமம், விபூதிக் கிண்ணங்களும் சிறு கோவிலுக்குள் நுழைந்த பரவசத்தை தந்தன.

எங்கும் கொட்டிக் கிடக்கும் ஆடம்பரம் அந்த மாளிகையின் பூஜையறையை மிக நன்றாகவே அலங்கரித்து இருந்தது. கலையம்சத்துடன் மிளிரும் தெய்வத்தின் திருவுருவச் சிலைகளைக் காண, கண்கள் இரண்டு போதவில்லை.

‘அக்கா நேற்று இதை எல்லாம் கவனிக்கவில்லை போல? இல்லையென்றால் இந்த விக்கிரகங்களின் அழகினை சொல்லிச் சொல்லியே ஒய்ந்து போயிருப்பாள்.’ மனுவின் மனம் நினைத்த பொழுதில்,

‘எங்கே அவளைக் காணோம்? இன்னும் எழுந்து வரவில்லையா!’ தனக்குள் கேட்டு, அந்த பூஜையறையை முழுதாக ஆராய்ந்து முடித்த நேரத்தில் பெரியவரும் தனது வழிப்பாட்டினை முடித்திருந்தார்.

“நான் பால் சேர்ந்த ஆகாரம் எடுக்கிறதில்ல அம்மணி. காலையில அருகம்புல் சாறும், மதியத்துக்கு கடுங்காபியும் போதும் இந்த வயசான கட்டைக்கு.’ தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டே வரவேற்பறையின் சோபாவில் அமர, பெரியவருக்கு நீராகரமும் மனுவிற்கு காபியையும் வேலையாட்கள் கொண்டு வந்து கொடுத்தனர்.  

அந்த நேரத்தில் வீட்டுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெரியவரிடம் பேசிய சுலோச்சனா, மறுவீடு விருந்திற்கு புதுமணத் தம்பதிகளை முறைப்படி அழைத்துச் செல்ல வருவதாகக் கூற, “இந்த வாரம் முழுக்க நாள் நல்லா இல்ல… பெரிய மாப்பிள்ளைக்கு நாளைக்கு சந்திராஷ்டமம். நீங்க அடுத்த வாரம் வந்து அழைச்சுட்டு போகலாம்,” ஆணித்தரமாக கூறி முடித்தார்.

‘என்னை மீறி, என் பார்வையை தாண்டி இந்த வீட்டில் எதுவும் நடப்பதில்லை. நடக்கவும்கூடாது.’ என்ற ஆதிக்க தோரணை அவரின் ஒவ்வொரு பேச்சிலும் துல்லியமாக வெளிப்பட்டது. 

“உனக்கு எது வேணுமோ அதை வேலைக்காரங்க கிட்ட சொல்லி வச்சுடு கண்ணு! நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இன்னும் என்னென்ன மாற்றம் செய்யணுமோ, அதை தாரளமா இந்த வீட்டுல செய்யலாம். எங்கே பெரிய மருமவளை காணோம்?” கேட்டவர், அதிருப்தியுடன் முகம் சுளித்துக் கொண்டார். 

“கொஞ்ச நேரத்துல வந்துடுவா தாத்தா! புது இடம் அக்காவுக்கு ரெடியாக நேரம் எடுக்குது போல…” தமக்கைக்கு, இவள் வக்காலத்து வாங்கிப் பேச,

“இன்னுமா?” என உச்சுக் கொட்டியவர், “மூத்தவ பொறுப்பா வந்து எடுத்து செய்வான்னு எதிர்பார்த்தா, மொதநாளே ஆளக் காணல!” பெருங்குறையாக தனது மனத்தாங்கலைக் கொட்ட ஆரம்பித்து விட்டார்.

புது மணப்பெண்ணின் நெளிவு சுளிவுகளை அறிந்த பெண்மணி இருந்திருந்தால் பெரியவரின் பேச்சிற்கு கண்டனம் கூறியிருப்பாரோ என்னவோ? இதைப் பற்றி அறியாத மனுவிற்கும் பெரியவரின் பேச்சு எதார்த்தமாக தோன்றியது.

திருமணத்தின் போது தேஜுவின் முகத்திருப்பலை மனதில் கொண்டே, இனங்காண முடியாத பாரபட்சத்துடன் அவளின் மீது பெரும் அதிருப்தியை கொண்டு விட்டார் பெரியவர். இப்பொழுது பெரிய மருமகளாக பொறுப்பாக கீழிறங்கி வராமல் இருப்பதும் சேர்ந்து, முன்னிலும் விட அவரின் அதிருப்தியின் அளவு ஏற்றம் பெற்றது.

அருணாச்சலம் மிகப் பழமைவாதி. எந்தக் காரியமும் எங்கும் பிசகாமல் எல்லாம் ஒழுங்காக ஒரே நேர்கோட்டில் செல்ல வேண்டுமென்று நினைப்பவர். பெண்களை வீட்டில் முடக்கி வைக்கும் ஆதிகாலக் கொள்கையை, இம்மியளவும் பிசகாமல் இன்றளவும் கடைபிடித்து வரும் ஆண்வர்க்கத்தின் மூத்த தலைமுறை.

“வீட்டுல மகாலட்சுமி நடமாட்டம் எப்பவும் இருக்கணும்னு தான் சீக்கிரமே கல்யாணம் பண்ணினது. சண்டை சச்சரவு இல்லாம குடும்பம் பண்ணத்தான் ஒரே வீட்டுல பொண்ணெடுத்தும் கட்டி வச்சது. பொறுப்பா இருக்கணும்னு உன்ற பொறந்த வீட்டுல சொல்லலைன்னா கூட நீங்களா தெரிஞ்சு நடந்துக்கணும் ராசாத்தி!” பெரியவர், தனது எதிர்பார்ப்புக்களை மொத்தமாக கொட்டி முடிக்க, மனஷ்வினியால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

‘ஐயோ… இந்த அக்கா சீக்கிரம் கீழே இறங்கி வந்தால் என்ன? அப்படியென்ன தூக்கம் இவளுக்கு.. ஒருவேளை உடம்பு சரியில்லையோ?’ மனதிற்குள் பல கேள்விகள் முட்டி மோதிக் கொண்டு நிற்க, பெரியவரின் பேச்சு அவரது பாகுபலிகளை நோக்கித் திரும்பியது.

உடைமப்பட்டவள் அருகிலேயே இருக்க, ஆனந்தனைப் பற்றி மனுவிடம் கூற ஆரம்பித்தார். “சின்னவருக்கு காபி நல்லா திக்கா இருக்கணும். குளியல் முடிச்சிட்டு வந்ததும் கண்ணுக்கு முன்னாடி காபி இருந்தாகணும். இல்லன்னா தாட்பூட்னு சவுண்டு விடறதுல இந்த பங்களா ரெண்டாகும்.

ஆனா, இதெல்லாம் மத்தவங்க கிட்டதான். பெரியவன்கிட்ட பதில் பேசுறவன் கூட என் பேச்சுக்கு அமைதியாத் தான் இருப்பான். நானும் சின்னவர் மனசு கோணாம நடந்துப்பேன் கண்ணு!” பேரன்களைப் பற்றி எடுத்துச் சொல்லும் தோரணையில், அந்த வீட்டில் தன்னுடைய மதிப்பு மரியாதையை பறைசாற்றிக் கொண்டிருந்தார் அருணாச்சலம்.

அவர் சொல்வது அனைத்தையும் புன்னகை மாறாமல் மனதில் பதித்துக் கொண்டவள், “இப்ப அவருக்கு காபி கொண்டு போகணுமா தாத்தா?” கடமையாகக் கேட்டு, பெரியவர் முகம் பார்த்து நின்றாள்.

உண்மையில் அவளுக்கு மீண்டும் கணவனின் எதிரில் சென்று நிற்க சற்றும் விருப்பம் இல்லை. இதைச் சொன்னால் குடும்பம் கடமை என பிரசங்கம் ஆரம்பித்து விடுவார் என்றே கேட்டு வைத்தாள்.

“வேலைக்காரன் அப்பவே கொண்டு போயிட்டான் கண்ணு! நாளைக்கு அங்கே இருந்தே அவன் ரெடியான நேரம் இன்டர்கம்ல சொல்லி, நீயும் காபி சாப்பிட்ட பிறகே கீழே வரலாம்.” உத்தரவாகக் கூறி முடித்தார்.

“ரெட்டை பிறவிங்கன்னு பேரு… ரெண்டும் ரெண்டு துருவம். குணத்துல ஒன்னு வடக்குன்னா இன்னொன்னு தெற்கு. ஆதி தம்பி ரொம்பவே கண்டிப்பானவர், அதே சமயம் அன்பு காட்டுறதுல அவரை மிஞ்ச யாராலும் முடியாது. நம்ம ஆனந்தன் தம்பி ரொம்பவே முரண்டு பிடிப்பார். யாரையும் பாவம் பார்த்து பேசத் தெரியாது.”

பெரியவரின் வார்த்தைகள் அரவைப்பட்டு வெளியே வந்து விழ, அனைத்தையும் மௌனமாய் உள்வாங்கிக் கொண்டாள் மனு

“உன் வீட்டுக்காரன் எல்லா விசயத்துக்கும் எதிர்மறையா நடந்தே பழக்கப்பட்டவன். எப்பவாவது ஒருமுறை அத்திப் பூத்த மாதிரி அவர் முகத்தல சிரிப்பைப் பார்க்கலாம். மத்தபடி ஆல்வேஸ் கறார் கந்தசாமி.

ரெண்டு பேரும் வீக் என்ட் என்டர்டெயின்மெண்ட், பார்ட்டி இப்படியெல்லாம் ஆசைப்பட்டு போயி நான் பார்த்ததில்ல… ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வெளியூர் போவாங்க! எல்லாமே பிசினஸ் டிரிப்பா இருக்கும். பணம், பிசினஸ், லேப்டாப், மீட்டிங் இது எல்லாம் இல்லாம ரூபம் பிரதர்ஸ் கிடையாது.”

எல்லாவற்றையும் சொல்லி முடித்த அலுப்பில், சோபாவில் ஆயாசமாக சாய்ந்தார் அருணாச்சலம். மனுவின் மனம் வருங்காலத்தை பற்றி பலவிதமாக கோட்டை கட்டிக் கொண்டிருந்தது.

இத்தனை நாட்கள் ஆனந்தரூபன் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் இனிமேலும் அதே போன்று இருக்க முடியுமா என்ன? அதுவும் மனைவி என ஒருத்தி வந்த பிறகும் ஒருவனின் வாழ்வில் மாற்றம் வரவில்லை என்றால் அவனை எதில் சேர்ப்பது?

‘கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை நடைமுறைகளைக் கூறி, அவனைப் பண்படுத்த வேண்டும். எல்லோரையும் போல நாமும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து காட்ட வேண்டும். மெல்ல இதைப்பற்றி ஆனந்தனிடம் பேசவேண்டும்.’ மனஷ்வினி மனதிற்குள் நிறையவே திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள்.  

நீண்ட நேரம் வெறுமனே அங்கே இருக்க பிடிக்காமல், “நான் அக்காவை போய் பார்த்துட்டு வர்றேன் தாத்தா!” மெதுவாகக் கூறி நகரப் பார்க்க,

“ஆதியை கேக்காம அவரைப் பார்க்கப் போறது, அவருக்கு பிடிக்காது கண்ணு! கொஞ்சநேரம் இங்கேயே இரு! சின்னவர் இப்ப வந்துருவாரு!” தகவலாய் கூறியவர்,

“உன் புருசனைப் பத்தி சொன்னதும் உன் மனசுக்கு ஒப்பாம போயிடுச்சோ? இப்ப அப்படித்தான் இருக்கும். போகப்போக உனக்கே பழகிடும். உன்னால எதையும் சமாளிக்க முடியும்.” நம்பிக்கை வார்த்தைகளை கூற, பொறுமையாக அங்கேயே அமர்ந்திருந்தாள் மனு.

சிறிது நேரத்தில் பெரியவர் கூறியதைப் போலவே ஆனந்தரூபன் கீழே வர, எந்த மாதிரியும் இல்லாத புது மாதிரியாக அவனை ஏறிட்டாள் மனைவி. அலுவலகத்திற்குச் செல்லும் காரியச்சித்தனாக தயாராகி வந்தவனை விழியகலாது பார்த்தாள்.

அங்கே யார் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கூட பாராமல், ஆனந்தன் உணவு மேஜையில் அமர, அவனைத் தொடர்ந்து பெரியவரும் உணவு உண்ண வந்தமர்ந்தார். உணவைப் பரிமாறவென பணியாள் முன்வர, அவர்களைத் தடுத்து,

“நீ வந்து பரிமாறு கண்ணு!” மனுவிற்கு அருணாச்சலம் சொல்ல, தயங்கித் தயங்கியே பரிமாற்ற ஆரம்பித்தாள். முன்பின் அனுபவமில்லாத வேலை. எந்நேரமும் உறுத்து விழிக்கும் கணவனைக் காணும்போது, சாம்பார் எது? சட்னி எது? என்ற பாகுபாடும் தெரியாமல் போனது புது மனைவிக்கு.

“இன்னைக்கே ஆபீஸ் போகப் போறீங்களா சின்னவரே?” பெரியவரின் கேள்விக்கு,

“கல்யாணமாயிட்டா ஆபீசை மறந்துடணும்னு சட்டம் இருக்காங்களா ஐயா? வெடுக்கென்று வந்த ஆனந்தனின் பதிலைக் கேட்டு, சாம்பாரை அவன் கைகளின் மேலேயே மனைவி ஊற்றிவிட, பார்த்தானே ஒரு பார்வை!

‘தோடா… இந்த டெரர் லுக் எல்லாம் என்கிட்டே வச்சுகிட்டா அனாட்டமி நீடில் எடுத்து கண்ணை குத்திபுடுவேன்.’ மனுவின் வக்கணைப் பேச்சு உள்ளுக்குள் மட்டுமே ஓடியது.

இரண்டாவது தவணையாக முறைப்பு பார்வையை மனைவிக்கு பரிசளித்து விட்டு, கவனம் சிதையாமல் தட்டில் இருக்கும் இட்லியை பதம் பார்க்கத் தொடங்கினான் ஆனந்தரூபன்.

“அப்படி நான் சொல்லல தம்பி! ரெண்டுநாள் ரெஸ்ட் எடுக்கலாமேன்னு சொன்னேன். அப்புறம் ஹனிமூன் எங்கே போறதுன்னு முடிவு பண்ணீட்டீங்களா?” மெதுவாக அடிபோட்டார் பெரியவர்.

பேரனின் திருமண வாழ்வு எப்படியென்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது அவருக்கு.  

“இப்படியொரு சங்கதி இருக்கறதே நீங்க கேட்ட பிறகுதான் ஞாபகத்துக்கு வருது. இதுவும் மேரேஜ் பாக்கேஜ்ல வருதுன்னா, புக் பண்ணுங்க என் கடமையை முடிச்சிட்டு வந்துடுறேன்.” கத்தரித்து விட்ட அசுவாரசியமான பேச்சில் பெரியவரும் பேத்தியும் வாயடைத்துப் போனார்கள்.

‘இது என்ன மாதிரியான பதில்? ஹனிமூன் பற்றித் தெரியாத அளவுக்கு இவன் என்ன ஏலியனா?’ உள்ளுக்குள் பொங்கிய ஏமாற்றத்துடன் கணவனைப் பார்த்து, ‘ஞே’ என்று விழித்தாள்.

‘இவனிடம் கொஞ்சமல்ல ரொம்பவே சுதாரிப்பா பொறுமையா இருக்க வேண்டுமோ?’ மனம் அவனை தராசில் வைத்து ஏற்றி இறக்கிப் பார்த்து எடை போட்டது.  

கணவனின் ஒவ்வொரு பேச்சிலும் கோபம் உச்சந்தலைக்கு ஏற, தன்னை கட்டுபடுத்திக் கொள்ள மிகவும் பிரயத்தனப்பட்டாள் மனஷ்வினி. ‘சாதாரணமாகப் பேச நினைத்தாலும் தர்க்கத்தில் முடிவதைப் போல அல்லவா இவனது மூச்சும் பேச்சம் இருக்கிறது. தெரிந்து செய்கிறானா அல்லது இவன் டிசைனே இப்படித்தானா?’ நினைக்க நினைக்க மனைவிக்கு மூச்சிரைத்தது.

‘ச்சே… திருமணமான அடுத்தநாளே என்னவொரு இறுக்கமான சூழ்நிலை. இந்த கல்லுளிமங்கனை உலக அதிசயமாகப் பெற்றதற்கு இந்த குடும்பத்திற்கே கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யலாம்.’ மனுவின் மனம் பொருமிக் கொண்டிருந்த நேரத்தில், உணவை முடித்துவிட்டு இடத்தைக் காலி செய்திருந்தான் ஆனந்தன்.

“தம்பி கிளம்புறாரு… போயி வழியனுப்பிட்டு வா அம்மணி!” அருணாச்சலம் சொல்லவுமே சுயம் அடைந்து அவனைத் தேடிச் செல்ல, போர்டிக்கோவில் இருந்து புறப்பட்டுச் சென்ற கார் மட்டுமே இவளின் பார்வையில் பட்டது. ‘இத்தனை வேகமா இவனுக்கு?’ சுணங்கிக் கொண்டவளை ‘இதுக்கே இப்படியா?’ என விதி கை கொட்டிச் சிரித்தது.

“போகப்போக சரியாகிடும் கண்ணு…. நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு, உள்ளே போ!” அவளை அனுப்பி வைத்த பெரியவர், தனது காரியங்களை கவனிக்க வெளியே புறப்பட்டு விட்டார்.

***

சோம்பலாய் விழித்த தேஜஸ்வினியின் கண்கள், மணி பத்து என்பதை சுட்டிக் காட்டிட விலுக்கென்று எழுந்தாள். ‘எப்படி இத்தனை நேரத் தூக்கம்? அதுவும் புது இடத்தில்…’ பெருத்த யோசனையுடன் கட்டிலை விட்டு இறங்க நினைத்தவளின் கால் சண்டித்தனம் செய்தது. 

தேகமெங்கும் பெரும் அயற்சி. ‘இதற்கு மேல் என்னை அசைத்து கஷ்டப்படுத்தாதே!’ உடலின் கெஞ்சல் மொழியை, மனம் தட்டிக் கழித்து எழ முயன்றாலும் அவளால் முடியவில்லை.

‘எல்லாம் முன்தின காதல் சதிராட்டத்தின் பலன்.’ மனமும் உடலும் அவஸ்தையை உணர்த்தி விட, அதற்கு காரணமானவனைத் தேடினாள் தேஜு.

‘காரியம் முடிஞ்சதுன்னு விட்டுட்டு போயிட்டாரா? நைட்டு அப்படி உருகி உருகிப் பேசினாரே? இந்த ஆம்பளைங்களே இப்படி தானா?’ தனக்குள் குழப்பிக் கொண்ட நேரத்தில் குளியலறையில் இருந்து வெளிப்பட்டான் ஆதித்யன்.

மந்தகாசப் புன்னகையுடன் மனைவியைப் பார்த்தவன், “ஆர் யூ ஆல் ரைட்? ரொம்ப சிரமமா இருக்கா தேஜுமா?” வாஞ்சையுடன் கேட்டவனிடம் இல்லையென்று மறுத்தாள்.

கனிவான சிரிப்பில் அன்பான முத்தம் ஒன்றை மனைவியின் நெற்றியில் அவன் பதிக்க, கணவனது முகத் தழும்புகளை மிக நெருக்கத்தில் பார்த்து தேஜுவின் கண்கள் முன்னைப் போல் திகிலடைந்தது.

இரவில் இருளில் இல்லற பாடத்தை படிக்கும் போது வராத மிரட்சியும், மனச்சுணக்கமும், வெளிச்சத்தில் நேருக்கு நேராய் இவன் முகம் பார்க்கையில் வெளிப்பட்டு விட்டது. 

மனைவியின் குழப்ப பாவனையில் புருவம் சுருக்கியவன், “என்னாச்சுடா? ஏன் ஒரு மாதிரி இருக்கே?” கணவன் அக்கறையாகக் கேட்க, பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள்.

“ம்ப்ச்… பதில் சொல்லாம ஊமையா சாதிச்சா எனக்கு கோபம் வரும் தேஜு! டெல் மீ, வாட் ஹாப்பெண்ட்?” அதட்டலை கையில் எடுத்தாலும் பதில் சொல்ல மறுத்தாள் மனைவி.

“ரொம்ப பெயினா இருக்கா? என்கிட்டே என்னடி கூச்சம்? டாக்டரை வரச் சொல்லவா?” ஆதி இளகிப் போய் கேட்க, 

“இல்ல… நான் மேனேஜ் பண்ணிப்பேன்!” முன்னைப் போலவே தலை தாழ்த்திக் கூறி நகர முயல, அவளைக் கண்டு கொண்டவனாக தடுத்து நிறுத்தினான் ஆதி.

“என்னைப் பாரு டி! உன் கண்ணை பார்த்தாவது உனக்கு என்னன்னு தெரிஞ்சுக்கறேன்.” அவளின் முகத்தை வலுக்கட்டாயமாக உயர்த்தி, தன்னைப் பார்க்க வைத்தான் ஆதி.

திருமண நாளில் மேடையில் பார்த்த கிலிப்பார்வை, வரையறுக்க முடியாத தவிப்பு என மனைவியின் முகம் பல கலவையான மாற்றங்களை காட்டிட, வெறுத்துப் போனான்.

“நாம வாழ ஆரம்பிச்சாச்சு தேஜு! இன்னும் என்ன தயக்கம் உனக்கு? என்னை பிடிக்கலையா? பிடிக்காம தான் நேத்து என்கூட….” வார்த்தைகளை மேற்கொண்டு சொல்லவும் அவனுக்கு கூசிப் போக, விரைந்து கணவனின் வாயை அடைத்தாள் தேஜூ.

அவளது கைகளை தட்டி விட்டவன், “விடு டி! இந்த பேச்சுக்கு மட்டும் ரோசம் பொத்துக்கிட்டு வருதோ? எனக்கும் அப்படித் தானே கூசிப் போகும். என்னையும் மனுசனா பார்க்க முயற்சி பண்ணு. அப்படியென்ன அசிங்கமான, அருவெறுப்பான பிறவியா நானு?” தீக்கங்குகளை கொட்ட காதினை மூடிக் கொண்டாள் தேஜஸ்வினி.

தனக்குள் என்ன நடக்கிறதென்று தெரிந்தால் தானே, அதற்குரிய காரணத்தை விளக்கிக் கூறி, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். எதற்கும் வழி தெரியாது பேதலித்துப் போனாள் புது மனைவி. 

நிமிடக் கரைசல்கள் சடசடவென்று கடந்தாலும் கணவனின் உஷ்ணப் பார்வை, தன்னை இமைக்காமல் பார்த்ததில் பதில் சொல்லியே ஆகவேண்டுமென்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள்.

“தப்பு தான்… இனி இப்படி பார்க்கலை. அது… பழக்கமில்லாம… ரொம்ப நெருக்கத்துல… உங்களைப் பார்த்ததும் ஒரு மாதிரியாக போச்சு!” தயங்கித் தவித்து சிறுசிறு வார்த்தைகளாக சிரமப்பட்டு கோர்த்தாள். 

‘இரவும் விடியலும் தலைகீழான மாற்றங்களைக் கொண்டு வருமா? புதுவாழ்வு, பழக்கமில்லாத இடம் என்பதைப் பற்றிய சிந்தனைகளே இல்லாமல், குற்றவாளியாக என்னை பார்க்கின்றானே?’ தன்னிரக்கம் மனதை பின்னடையச் செய்ய, அவளது குழப்பக் காடுகளில் அடைமழை பெய்தது. 

“பார்வை மட்டுமல்ல பேச்சும் கூட உனக்கு மாறி இருக்கு.” கடிந்து கொண்டவனின் நினைவெல்லாம் முன்தின இரவில் இவனை கொஞ்சிக் கூத்தாடிய மனைவியின் பேச்சுகளை அசைபோட்டது.

‘எத்தனை ஆசை? எத்தனை அன்பு மனைவியின் குரலில் குழைந்து வந்தது? அவளது அத்தான் அழைப்பில் மயங்கியே அவளுக்கு அடிமை சாசனம் எழுதி வைத்தானே? இளமையும் வேட்கையும் மட்டுமே கூடலுக்கு அஸ்திவாரமாகிப் போனதா? அன்பிலும் காதலிலும் கசிந்துருகிய உணர்வெல்லாம் பொய் வேஷங்கள் தானோ?” மனம் ஆறாமல் தவியாய் தவித்துப் போனான் ஆதித்யன்.

உலகத்தாரின் இளக்காரமான பார்வையை எதிர்கொண்டு பதில் கூறியவனால் மனைவியின் அருவெறுப்பான பாவனையை ஜீரணிக்க முடியவில்லை.

‘ஒருநாள் விடியலே இத்தனை இடர்பாடுகளைத் தருமென்றால் இனி வாழ்நாள் முழுவதும் எப்படி இருக்கப் போகிறோம்?’ ஆண்மனம் எதிர்காலத்தை அசைபோட, நிகழ்கால சுணக்கத்தை நேர் செய்யும் வழிவகை தெரியாமல் பெண்மனம் திண்டாடித் தவித்தது.