நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…7

தேனிலவு செல்வதற்கான நாளினை முடிவு செய்து கூறுவதற்குள் ஒரு வாரம் விரைவாகக் கழிந்திருந்தது. சகோதரிகள் ஆலோசித்துக் கூறிய நாள், ஊரின் விபரத்தை ஆதித்யன், ஆனந்தனிடம் தெரிவிக்க அதற்கே ஒரு கரகாட்டம் ஆடினான்.

“எல்லா விசயத்துக்கும் என்னை பிடிச்சு இழுக்கிறதை விட்டுத் தள்ளு ஆதி! உன்னோட விருப்பத்தை என்கிட்டே திணிக்காதே!” காட்டமான எதிர்ப்பினை தம்பி தெரிவிக்க, அண்ணன் சோர்ந்து போனான்

“உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்திருக்கா ஆனந்த்… அதை யோசிக்க மாட்டியாடா நீ?” ஆதி விடாமல் கேட்க,

“என்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம, பந்திக்கு முந்துற மாதிரி வந்து சேர்ந்ததுக்கு நானா பொறுப்பாக முடியும்?” வார்த்தைகளை குத்தூசியாக இறக்கியதில் அனைவருக்கும் விரக்தி தட்டியது.

‘இத்தனை வெறுப்புடன் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?’ வீறுகொண்டு கேட்கத் துடித்த மனதை கடிவாளமிட்டு கட்டிப் போட்டாள் மனஷ்வினி.

‘மனிதநேயமின்றி பேசுகிறான் எனத் தெளிவான பிறகு அவனைக் குறை சொல்லி நோவதில் அர்த்தமில்லை.’ மனம் உணர்ந்ததை அக்காவிடமும் கூறி ஆறுதல் தேடிக் கொண்டாள்.

தங்கைக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நேரத்தில் கணவனின் கண்சிமிட்டும் கட்டளைகளுக்கும் பணிந்து நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் தேஜஸ்வினி.

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடியாக மூத்தவள் அவஸ்தையுடன் நடமாடிக் கொண்டிருக்க, ஆதி தேனிலவு சென்றே ஆக வேண்டுமென்ற பிடிவாதத்தில் நின்றான்.

வேண்டாமென மறுத்த மனைவிக்கு ஆதியின் ஈட்டி தாங்கிய பேச்சுகள் கூரான பதத்துடன் வந்து விழுந்தன. தம்பிக்கான பாசம் மனதோடு இருந்தாலும், மனைவிக்கான ஆசையை தன்னால் ஒதுக்கித் தள்ள முடியாது என்பதில் உறுதியாக நின்றான் ஆதி.

“அவங்களுக்காக நம்ம சந்தோசத்தை தள்ளிப் போட ஆரம்பிச்சா, வாழ்க்கை முழுசும் அதுவே தொடர்கதையா போயிடும் தேஜு!. நமக்குள்ள இருக்கிற தயக்கம் மறையுறதுக்கு ஹனிமூன் டிரிப் அவசியம்னு நினைக்கிறேன். என்னை சுயநலவாதிய நினைச்சாலும் பரவாயில்லை, மறுப்பு சொல்லாம புறப்பட தயாரா இரு!” அழுத்தமாக ஆணையிட தேஜூவால் எதையும் உடைத்துப் பேச முடியவில்லை.

ஆதித்யன் சொல்வது சரியென்று பட, பெரியவரும் மூத்தஜோடி தேனிலவு செல்ல சம்மதித்து விட்டார்.

“நாலு பேரும் கிளம்பிப் போயிட்டா வீடு வெறிச்சுன்னு போகும். நாங்களும் இப்படியே இருந்திடப் போறதில்ல… இப்ப நீங்க போயிட்டு வந்தா, அடுத்து நாங்க போறதுக்கு சரியா இருக்கும்.” தன்னால் இயன்ற பல சமாதானங்களைச் சொல்லி அக்காவை சம்மதிக்க வைத்தாள் மனஷ்வினி.

இளையவளின் பேச்சினை கேட்ட ஆனந்தன், “போகாத டிரிப்புக்கு ரூட் மேப் வேறயா!” முனகிக் கொண்டே நகர்ந்து விட, மனைவியும் ‘இவன் இப்படித்தானே!’ என அலட்சியமாக விலகிச் சென்று விட்டாள்.

இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு தான் உள்ளம் கனக்கத் தொடங்கியது. எத்தனை விதமாய் எடுத்துக் கூறினாலும் ஆனந்தன் சற்றும் இறங்கி வரவேயில்லை.

மாமனார் வீட்டின் மறுவீட்டு விருந்திற்கு சின்னவனை இழுத்துச் செல்வது அருணாச்சலத்தின் தலையாய கடமையாகிப் போக, தலைகீழாக நின்றே சாதித்தார் பெரியவர்.

“உற்றார் உறவினர் வேண்டாமென்று தானே ஒதுங்கி இருக்கிறேன். என்னைப் புரிந்து கொள்ளுங்கள்.” என கடுகடுத்தவனிடம்,

“இரண்டு மணி நேரம் மட்டும் அங்கே இருந்தா போதும் சின்னவரே!” எழுதாத ஒப்பந்தத்துடன், ஆனந்தனை கிளப்பி விட்டார் பெரியவர்.

மகள்கள் விருந்தாட வந்த இரண்டு மணி நேரத்தில் வீட்டையே அதகளம் பண்ணிய ராஜசேகரை கண்டு கொள்வார் எவருமில்லை.

ஒருவார பிரிவினை ஈடுகட்டும் விதமாக மகள்களை அருகருகே அமரவைத்து, வாஞ்சையும் கனிவும் பொங்க தலைகோதி, தழுதழுத்து பேசியவரை துரும்பாக பார்த்து முகம் சுழித்தான் ஆனந்தன்.

“ஏழுநாள் பாக்காம இருந்ததுக்கு எழுபது வருஷம் உக்கார வச்சு கதை பேசுவாரோ!’ கடுகடுப்பில் மாமனாரை வெறித்தான் ஆதித்யன்.

‘பிறந்த வீட்டிற்கு வந்ததும் தன்னை மறந்து விட்டாள்.’ என மனைவியையும் முறைத்து பார்க்க, அவனது மனம் அறிந்தவளாய் கணவனையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள் தேஜஸ்வினி.

“அடுத்த வீட்டு வம்சம் விளங்க வாழப்போன பொண்ணுகளை பார்த்து இப்படியா கண்ணை கசக்குவீங்க? அழுது விளக்கெண்ண வடியுற மூஞ்சியை அலம்பிட்டு வாங்க… விருந்து தயாரா இருக்கு.” சுலோச்சனாவின் அதட்டலில் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனார் ராஜசேகர்.

“ஹோம் மினிஸ்டர் வாய்ஸ் வெரி பவர்ஃபுல்னு இங்கே பார்த்த பிறகுதான் தெரியுது தேஜு! நாளைக்கு என் நிலைமையும் இப்படித்தான் இருக்குமோ?” கிசுகிசுப்புடன் கேட்ட ஆதியை பொய்யாக முறைத்தவள்,

“இவ்வளவு பெரிய வேலையெல்லாம் நீங்க எனக்கு கொடுக்க மாட்டீங்க அத்தான்!” கேலியுடன் பேசியவளை விளங்காமல் பார்க்க,

“நீங்க மூச்சு விட்டுப் பேசினாத் தானே, நானும் அதட்டணும். அந்த வேலையை எனக்கு கொடுப்பீங்களா என்ன?” சிரிக்காமல் கணவனை வாரிவிட்டு வேறுபக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

பேச்சுச் சுதந்திரம் பறி போனவனாய் தனக்குள் நொந்து போனான் ஆதி. ‘கேட்டது தப்பா போச்சே!’ கணவன் உள்ளுக்குள் புலம்பியதை அறிந்து கொண்டவளாய் கிளுக்கிச் சிரித்தாள் தேஜு.

மாமனாரிடம் விடைபெற்ற கையோடு மனைவியை தள்ளிக் கொண்டு தேனிலவிற்கு கிளம்பி விட்டான் ஆதித்யரூபன். இரவு புறப்படும் நேரத்திலும் தயங்கி நின்ற அக்காவை ஒருவழியாக சமாதானம் செய்து அனுப்பி வைத்த மனஷ்வினிக்கு அடுத்த கட்ட சோதனைகள் ஆரம்பமாகின. 

அறைக்குள் நுழைந்ததும், “வாங்க மிசஸ்.ஆனந்தன்!” ஆர்பாட்டமாக வரவேற்ற கணவனை புரியாமல் பார்த்தாலும் எதார்த்தமாக எடுத்துக் கொண்டாள் மனு.

“நம்ம ரூம்ல எதுக்கு இந்த ஃபார்மாலிட்டிஸ்?” அலட்டிக் கொள்ளாமல் கேட்க,

“எனக்காக பேர் மாத்திகிட்டவளுக்கு, இனிமே எப்படியெல்லாம் இருக்கணும்னு கிளாஸ் எடுக்கப் போறேன்! அதுக்கு தான் இந்த வரவேற்பு. வேறெந்த உள்ளர்த்தமும் இல்ல.” உச்சந்தலையில் அடித்ததைப் போல வார்த்தைகளால் கொட்டத் தொடங்கியவனை ஆயாசத்துடன் பார்த்தாள் மனஷ்வினி.

“தூக்கக் கலக்கத்துல பாடம் படிச்சு என்ற மூளைக்கு பழக்கமில்லையே மச்சான்! நாளைக்கு கிளாஸ் ஸ்டார்ட் பண்ணுவோமா?” கணவனின் இறுகிய மனநிலையை மாற்றவென வேடிக்கையாக மனு பேச, பார்வையால் எரித்தான் ஆனந்தன்.

“உன்ற மச்சான் எப்ப என்ன சொன்னாலும் தலையாட்ட ரெடியா இருக்கணும் செல்லாயி! அதை விட்டுட்டு உன்ற கதையை இங்கே பேசக்கூடாது!” அவளுக்கு தப்பாமல் பேசி வாயடைக்க மனுவிற்கு சுவாரசியம் கூடிப் போனது.

“ஒஹ்… இரண்டு மணிநேரம் என்ற கூட, மாமனார் வீட்டுல அமைதியா இருந்ததுக்கு, எனக்கு பனிஷ்மென்ட் குடுக்கப் போறீங்களா மச்சான்?” அசராமல் கேட்க,

“நீ எப்படினாலும் எடுத்துக்கோ! மெதுவா நீயா புரிஞ்சுக்கட்டும்னு பேசாம இருந்தேன். ஆனா எல்லார் முன்னாடியும் என்னை பொம்மையா ஆட்டி வைக்க நீ பிளான் பண்றே… எனக்கு இதெல்லாம் செட் ஆகாது!” தன் போக்கில் பேசிக்கொண்டே சென்றவனை மனுவும் தடுத்து நிறுத்தவில்லை.

கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியாக அவனைப் பார்த்தபடியே நிற்க, அவனோ, ‘இன்னும் வாங்கிக் கட்டிக் கொள்!’ என்ற ரீதியில் பேச ஆரம்பித்தான். 

“இனிமே என்கூட ஜோடி போட்டு சுத்தணும்ங்கிற ஆசையை ஆசிட் ஊத்தி அழிச்சிடு! யாரவது வலிய வந்து வீம்பா கேட்டாலும் நீயே, என் புருசனுக்கு டைம் கிடைக்காதுன்னு சொல்லி தட்டிக் கழிக்கப்பாரு!”

“ஒஹ்… நானே போயி சொல்லிடணுமா?” விழி விரித்துக் கேட்க, கனலைக் கக்கினான் ஆனந்தன்.

“விளையாட்டா நினைக்காதே! நீயும் மத்தவங்க கூட சேர்ந்து என்னை, உன் வழிக்கு இழுக்கப் பார்த்தா, சரிதான் போடின்னு உன்னை அம்மா வீட்டுக்கு விரட்டி விட்ருவேன்!” சட்டென்று கூறியதும் இறுக்கம் கொண்டாள் மனஷ்வினி.

“நிஜமாதான் சொல்றேன். கூட்டுக் குடும்பமா வாழணும்னு சொல்லிட்டு இருக்கற என் அண்ணனும் மனசொடிஞ்சு போயிடுவான். உன் அக்காவுக்கும் நிம்மதி போகும்!” அழுத்தமாக கூறி முடிக்க,

“என்ன எமோசனல் பிளாக் மெயிலா? இப்படி தட்டிக் கழிக்க பார்க்கிறவர், எதுக்கு என்னை கல்யாணம் பண்ணனும்?” பல்லிடுக்கில் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கேட்டாள்.

“எந்நேரமும் எனக்கு இம்சையா இருப்பேன்னு தெரியாம உன் கழுத்துல கயித்தை கட்டித் தொலைச்சுட்டேன்! முடியலடி… என்னை விட்டு ஒழிஞ்சு போயிடு!” ஆக்ரோசமாக கத்தினான் ஆனந்தன்.

“உன் வட்டத்துக்குள்ள என்னை சிக்க வைக்காதே! நான் நானா மட்டுமே இருக்கணும்னு நீயும் ஆசைப்படு! இல்லன்னா…. இல்லாத குரங்கு வேலை பார்த்து உன்னை மட்டுமில்ல உன் அக்காவுக்கும் வினை வச்சுடுவேன்!” தீர்க்கமாய் கூறி முடித்தவனின் குரலில் இளக்காரம் கொட்டிக் கிடந்தது.

“நீங்க சொல்றதை எல்லாம் அப்படியே கேக்குற அளவுக்கு மாமா ஒன்னும் தலையாட்டுற பொம்மை இல்ல மச்சான்!”

“சரிதான்… ஆனா வீட்டுக்கு வந்த பொண்ணுகளால குடும்பத்துக்கு கெட்டபேரு வருதுன்னு தெரிஞ்சா உங்களை தூக்கி எறியவும் தயங்க மாட்டான். சரியான சென்டிமென்டல் ஃபூல் அவன். அதையும் ஞாபகத்துல வச்சுக்கோ செல்லாயி!” என்றவன் தன் பேச்சினை முடித்துக் கொண்டவனாக உறங்க ஆயத்தமானான்.

மனமும் மூளையும் புயலில் சேதமடைந்ததைப் போல நசுங்கிக் கிடக்க, கணவனது வார்த்தைகளுக்கு பதிலளிக்க திராணியின்றி மூச்சடைத்து நின்றாள் மனஷ்வினி.

‘உன் அண்ணனுக்கு இருக்கும் பாசம் பக்குவம் உனக்கு ஏன் இல்லை? ஒன்றாகப் பிறந்த இரட்டைப் பிறவிகளுக்குள் ஏன் இத்தனை முரண்பாடுகள்?’ அவனது சட்டையை உலுக்கி கேட்க வேண்டும் போல் இருந்தது.

பொறுமையாக இருந்தால் காலுக்கடியில் நசுக்கும் ஆண் வர்க்கத்திடம் பலியாடாக நிற்க, தான் தயாராக இல்லை என்பதை கணவனுக்கு விளக்கி விட முயன்றாள்.

“உங்க அண்ணன் மாதிரி பெருந்தன்மையா நீங்க இல்லன்னு வெளிப்படையா சொன்ன வரைக்கும் ரொம்ப சந்தோசம் ஆனந்த். சின்ன வயசுல இருந்து என்னைக் கட்டிப் போடுறதையோ, கட்டுப்படுத்தற உரிமையையோ நான் யாருக்கும் கொடுத்ததில்ல.

ஒதுங்கிப் போகச் சொன்னா ஒதுங்கிப்பேன்! அதை விட்டு, ஒழிஞ்சு போகச் சொல்ல உங்களுக்கே உரிமையில்ல… கட்டித் தொலைச்ச கயித்துக்கு நியாயம் பண்றேன்னு கழுத்தை நெறிக்க நினைச்சா, நீங்கதான் மூச்சு முட்டி நிக்க வேண்டி இருக்கும்!” ஆவேசம் கொண்டவளாய் கர்ஜித்து நிற்க, வாயை மூடிக் கொண்டு சிரித்தான் ஆனந்தன்.

“கொஞ்சம் விட்டா, இந்த வீட்டை விட்டுப் போகமாட்டேன், உன்னால முடிஞ்சத பண்ணிக்கோன்னு நீலாம்பரியா ரூமுக்குள்ள போயி அடைஞ்சுப்ப போல… உன் வழிக்கு என்னை இழுக்காத வரைக்கும் நீ இங்கே சௌகரியமா இருக்கலாம். அதை விட்டு உன் பூனைகண்ணை உருட்டி மிரட்டி காமெடி பண்ணாதே செல்லாயி!” தன் முடிவை அவளுக்கு திணித்தவனாக நக்கலுடன் கூறி முடித்து படுத்துக் கொண்டான் ஆனந்தன். 

***

கடலுக்கு நடுவே இடைவெளி விட்டு முளைத்திருந்த சிறுசிறு குடில்களில் பார்வையை லயித்திருந்தாள் தேஜஸ்வினி.

கரையில் அணை கட்டியிருந்த மரப்பலகை, ஒருவர் மட்டுமே நடக்கும் அளவில் பாலமாக கடலுக்குள்ளும் ஊடுருவி சென்று ஒவ்வொரு குடிலையும் இணைத்திருந்தது.

மாலத்தீவுகளில் ஒன்றில் அமைந்திருந்த ரிசாட்டிற்கு இவர்கள் வந்து இறங்கிய நேரத்தில் இருந்து சுழன்றடித்த காற்றோடு மழையும் ஊற்றிக் கொண்டிருக்க, குடிலை விட்டு எங்கும் நகர முடியவில்லை. 

அறையின் ஜன்னலும் மரப்பலகையின் காரிடரும் மட்டுமே அவர்களின் வெளியுலகத் தொடர்பை நீட்டித்துக் கொண்டிருந்தன.

“இங்க எப்பவுமே இப்படித்தான் தேஜுமா! எப்ப மழை பெய்யும்? எப்ப வெயில் அடிக்கும்னு கணிச்சு சொல்ல முடியாது.” அவ்விடத்தின் வானிலையை அறிந்தவனாக ஆதி கூற,

‘ஓஹ்… உங்களுக்கு இங்கே ரொம்பநாள் இருந்து பழக்கமா அத்தான்? அதனாலதான் இந்த மரப்பலகை மேல வேகமாக நடந்து வந்தீங்களா?” கேட்டவளின் முகத்தில் வெட்கத்தின் சாயல் மின்னியது.

மரப்பலகையில் இவள் நடந்து வர தடுமாறிய நேரத்தில் சடுதியில் மனைவியை முதுகில் உப்பு மூட்டையாக சாய்த்துக்கொண்டு குடிலில் வந்த பிறகே இறக்கி விட்டான் ஆதி.

அதனைத் தொடர்ந்த நேரங்களும் அதன் இனிமைகளும் கணவனின் மனதிலும் படர, காதல்தேவன் வரையறையின்றி காமன் பண்டிகையை கொண்டாடத் தீர்மானித்து விட்டான் போலும்! மீண்டும் தேஜு, ஆதியின் கைகளில் சவாரி செய்தாள்.

மழை ஒய்ந்த நேரத்தில் தீவின் கடற்கரை வெளியில் கை கோர்த்தபடி இருவரும் நடந்து கொண்டிருந்தனர். இந்த சிறிது நாட்களில் கணவனின் உணர்வை, முக பாவனைகளை நன்றாக உள்வாங்கப் பழகியிருந்தாள் தேஜஸ்வினி. தன் வழமையாக முகத்தை மறைத்துக் கொண்டு நடந்தவனின் முக்காடினை சட்டென்று எடுத்து விட்டாள்.

“என்கூட இருக்கும் போதும் இந்த வேஷம் தேவையா அத்தான்?” உரிமையுடன் கேட்க,

“இது பப்ளிக் பிளேஸ் தேஜூமா! உன்னை மாதிரியே சட்டுன்னு மத்தவங்க பயந்திடக் கூடாதுல்ல… அப்புறம் உன்னை அம்போன்னு விட்டுட்டு அவங்களை சமாதானப்பபடுத்தப் போக வேண்டி இருக்கும். என்ன போகவா?” வேடிக்கையாகக் கேட்டவனை வெட்டவா குத்தவா என முறைத்தாள் மனைவி.

“பெரிய கத்தி இல்லன்னா வீச்சரிவாள் எனக்கு வாங்கிக் கொடுத்துட்டு, அடுத்தவங்களை சமாதானப்படுத்த போங்க த்தான்!” கடுப்புடன் கூறி முடிக்க, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் ஆதி.

“எனக்கு கருப்பு பூனையா வர ஏகே-47 போதும்டி… அருவா, கத்தி எதுக்கு?”

“உங்க பின்னாடி யார் வரப்போறா? யாரெல்லாம் உங்களை பார்த்து மிரண்டு நிக்கிறாங்களோ… அவங்களுக்கு எல்லாம் ஒரே குத்து. ஜோலி முடிஞ்சது! சமாதானப்படுத்துற பேர்வழின்னு நீங்க வீணா அவங்க முன்னாடி போயி நின்னு வழிய வேணாம்.” மிரட்டலாக கூறியவளை கணவனின் பார்வை ஆசையுடன் உரசிக் கொண்டது.

“ஏதேது நம்ம ஹனிமூனை, நீ சனிமூன் ஆக்காம விடமாட்ட போலிருக்கு!” சீண்டியவனை விழியகலாது பார்த்தாள் தேஜு.

நேற்றைய தினம் பெரியவரிடம் அலைபேசியில் பேசும்போது கோபத்தில் கொந்தளித்தவன், அந்த உஷ்ணத்தை அவளிடம் இறக்கி வைத்தே அடங்கிப் போனான். என்ன ஏதென்று காரணம் கேட்டாலும் சொல்வதில்லை.

தனக்கான கைப்பாவையாக மட்டுமே அவளை அவன் கையாள, மனைவிக்கும் கணவனைப் பற்றிய அனைத்தையும் அறிந்து கொண்டே ஆகவேண்டிய உரிமை, கடமை எல்லாம் உந்தித் தள்ளியது.

“என்ன ஒன்னுமே பேசாம அமைதியா இருக்கே?” கடற்கரையில் நுரைத்துப் பொங்கிய நீரைப் பார்த்தபடி அமர்திருந்தவளிடம் கேள்வியை வீசினான் ஆதித்யன்

“பல விசயங்களை யோசிச்சிட்டு இருக்கேன் த்தான்! முக்கியமா உங்களைப் பத்தி, உங்க தம்பியைப் பத்தி என்னால புரிஞ்சுக்கவே முடியல. ரெண்டு பேருக்குள்ளயும் பல ஸ்பிலிட் பெர்சனாலிட்டிஸ் ஒளிஞ்சு இருக்கோன்னு பயமா இருக்கு.

நீங்க எப்ப என்கிட்டே கண்டிப்பா இருப்பீங்க…. எப்ப அன்பா பேசுவீங்கன்னும் என்னால கணிக்க முடியல. சில சமயம் என்கிட்ட முரட்டுத்தனமா நடந்துக்கும் போது மண்டையை பிச்சிக்கலாம் போல இருக்கு!” பெருங்குறையாக கூறிக் கொண்டே சென்றவளை,

‘இவ்வளவு பெரிய குற்றசாட்டு ஏன்?’ என்பதைப் போல கேள்வியுடன் பார்த்தான் ஆதி.

“ஆர் யூ நாட் ஹேப்பி வித் மீ தேஜூ? நம்ம கல்யாண வாழ்க்கை கசக்குதுன்னு சொல்ல வர்றியா… என்னோட கைகோர்த்து ஒரே வேவ் லென்த்ல டிராவல் பண்றது அவ்வளவு கஷ்டமா இருக்கா!”

“நாட் லைக் தட்! அது வந்து…”

“சிடுமூஞ்சின்னு சொல்ல வர்றியா!”

“ஐயோ உங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்? நீங்க ஒருநேரம் போல ஒருநேரம் இருக்க மாட்டேங்கறீங்க!” தவிப்புடன் கூற,

“நீ மென்னு முழுங்கணும்னு அவசியமே இல்ல தேஜு! பலரும் என் காதுபட கிசுகிசுப்பா சொன்னதை, நீ முகத்துக்கு நேரே சொல்லிட்ட… அவ்வளவு தான்!” அழுத்தமாய் வந்து உதிர்ந்தன ஆதியின் வார்த்தைகள்.

“சாரி அத்தான்… நான், உங்களை காயப்படுத்த விரும்பல. உங்க மனசுல வேற ஏதாவது அழுத்துதா… அதனால தான் உங்களை நீங்களே சங்கிலியால கட்டி வெச்ச மாதிரி இருக்கிறீங்களா? அப்படி ஏதாவது இருந்தா, மனசுல இருக்கறதை யார்கிட்டயாவது சொல்லி ஆறுதல் தேடிக்கலாமே!” இறங்கிய குரலில் பயத்துடன் கூறி முடித்தாள் தேஜு.

“சொல்லி மட்டும் என்ன ஆகப் போகுது தேஜுமா! சில விஷயங்களை மனசுக்குள்ளயே புதைச்சு வைக்கிறது எல்லாருக்கும் நல்லது.” வருத்தத்துடன் கூறியவனின் பார்வைகள் எதையோ நினைத்து வெறித்தன.

“அப்ப நிச்சயமா ஏதோ ஒன்னு இருக்கு. சொல்லுங்க த்தான்… லவ் பெயிலியர், சம் ஈவ் டீசிங் ஆர் டீன் ஏஜ் கிரஷ் தான் உங்க மனபாரத்துக்கு காரணமா? அப்படி ஏதாவது இருந்தாலும் சொல்லுங்க. நான் எதுவுமே தப்பா எடுத்துக்க மாட்டேன்! ப்ளீஸ் சொல்லுங்க அத்தான்… எதுவும் தெரிஞ்சுக்கலன்னா எனக்கு மண்டையே வெடிச்சிடும்!” உலுக்கி எடுக்காத குறையாக இவள் நச்சரிக்கத் தொடங்க கலகலவென்று சிரித்தான் ஆதித்யன்.

“ஒ… மை காட். உன் யுகமே தப்புதப்பா இருக்கு. ரிலீசாகுற எல்லா படத்தையும் பார்த்து மூளையில நிரப்பிகிட்டா மண்டைக்குள்ள இப்படித்தான் தேவையில்லாத சாத்தான் வந்து உட்காரும். சினிமா பார்க்கறத குறைச்சுக்கோ தேஜுமா! குறிப்பா ஆன்டிஹீரோ கான்செப்ட் கதை அன்ட் மூவி பாக்குறதை அடியோட நிறுத்து!” கிண்டலடித்துப் பேசியவனை, ஆத்திரத்துடன் கழுத்தை நெறிக்க வந்தாள் தேஜஸ்வினி.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லப் பழகுய்யா… என் யூகம் தப்புன்னா அப்ப எதுதான் சரி? அதையாவது சொல்லு மேன்!”

“என்னடி மரியாதை கட்டெறும்பா தேயுது?”

“உங்க தம்பி கேரக்டரும் உங்க கேரக்டரும் டோட்டலி கான்ட்ராஸ்ட்! ஏன் இப்படி? ஒரே வீட்டுல பிறந்து வளர்ந்தவங்க இடையில எப்படி இத்தனை வேறுபாடு? ப்ளீஸ் சொல்லுங்க அத்தான்!” கெஞ்சலான பாவனையில் கண் சுருக்கி ஆணையிட மனம் திறந்தான் ஆதித்யரூபன்.

***